ராஜ்ய உபாதை

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)

     ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியவர் ஹென்ரிக் இப்ஸன். புதுப் பாணியிலே எழும் நாடக சூத்ரத்துக்குப் பிதாமகன் இப்ஸன்.

     இவர் 1828ஆம் வருஷம் நார்வே தேசத்தில் உள்ள ஸ்கிப்ஸ் என்ற இடத்தில் பிறந்தார். இந்த மேதைக்குப் பிறந்த நாடு முதலில் இடம் அளிக்கவில்லை. இவரது ஆயுளில் பெரும்பாகம் ஜெர்மனியிலும் இத்தாலியிலும் கழிந்தது. தாய்நாடு திரும்புகையில் பேரும் புகழும் பெற்று உலகில் சிறந்த நாடக ஆசிரியராகத் திரும்பினார். புகழும் பேரும் கிடைத்த பின் தாய்நாட்டின் பரிவு என்ற நிழலில் கிரிஸ்டினாவில் வாழ்ந்தார். 1906 மே 28 ஆம் தேதி மரணம். பிராண்ட், பீட்டர்ஜிஸ்ட், கோஸ்ட்ஸ் என்பவை இவரது நாடகங்களில் பிரமாதமானவை.

*****

     நார்வே ராஜ்யத்தை நிர்வகிக்க மணிமுடி தரித்துச் செங்கோல் ஏந்த, பலர் பாத்யதை கொண்டாடினார்கள். மன்னன் ஹாக்கானைப் பல சிற்றரசர்கள் ஆதரித்தார்கள். அவனே தமக்கு மன்னன் என்று ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ஸ்கூல் ஒரு சிற்றரசன். ஹாக்கானுடைய சிற்றப்பா. அவனும் நாடு தனக்குத்தான்; தானே பட்டத்துக்கு உரிமையுள்ளவன் என்று போட்டியிட்டான். பல வருஷங்களாகவே ஸ்கூல் மனதில் தனக்கே ராஜ்யத்துக்கு நியாயமான உரிமையுண்டு என்ற நினைப்பு. முதல் முதல் எர்லிங் ஸ்டீயன்வீக்கை, ஸ்லிட்டங் வம்சத்தினர் தேர்ந்தெடுத்த போதே, அந்த ஆசை வேர்விட்டது. ஸ்டீயன்வீக் ஆட்சிக்குப் பிறகு ரிப்பங் வம்சத்தினர் பட்டத்துக்கு வந்தார்கள். குத்தார்ம் அரசனானான். அவன் சாகும்வரை ஸ்கூல் காத்திருந்தான். குத்தார்முக்குச் சாக்காடு வந்தது. ஆனால் பட்டம் ஸ்கூலுடைய அண்ணனுக்கு வந்தது; அண்ணன் இன்ஜி பார்ட்ஸன் நோயாளி. வியாதி முற்ற முற்ற ஸ்கூலுக்கு நம்பிக்கையும் முற்றியது. இன்ஜி சாகும்பொழுது அவன் மனைவி கருவுற்றிருந்தாள். ஸ்கூலுடைய ஆசைக்கும் அரசுக்குமிடையே அந்தக் குழந்தை சுவராய் நின்றது. அந்தக் குழந்தையையே அரசனாக ஒரு சிற்றரசுக் கோஷ்டி ஏற்றது. அந்தக் குழந்தைதான் ஹாக்கான். ஹாக்கான் சார்பாக ஸ்கூல் சிறிது காலம் ஆட்சி புரிந்தான். ஹாக்கான் பருவம் எய்தி ஆட்சியை வகிக்கும் காலம் வந்தது. நார்வேயில் ஒரு சம்பிரதாயம். சிற்றரசர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து யாரை மகாராஜாவாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கே பட்டம் கிடைக்கும். உரிமைப் பலமும் சிற்றரசர் சம்மதமும் வேண்டும். ஸ்கூலும் அவனுடைய சகாக்களும் ஹாக்கான் பட்டத்துக்கு வருவதை எதிர்த்தனர். பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில், நார்வே நாடு, கத்தி முனையால் உரிமையை உறுதிப்படுத்தும் சிற்றரசுக் கும்பல் குமைந்த கொலைக்களமாகிக் கிடந்தது. கிருஸ்துவப் பாதிரிமார் மடாலயங்கள் இந்தக் குளறுபடிக்கு ஆதரவு கொடுத்து வளர்த்தன. பரலோகச் சாவியைத் தம் கையில் வைத்திருக்கின்றன எனப் பாவிக்கப்பட்ட மடாலயங்கள், இகலோக மன்னர்களின் சிண்டுகளையும் தம் கைவசம் கொண்டு, முடிசூடா மன்னர்களாக ஆட்சி புரிய முயன்றன. அந்தத் தேசத்திலே கிருஸ்துவ தர்மத்தின் பிரதான மடாலயம் ஆஸ்லோ நகரிலிருப்பதாகும். அதன் தலைவராகவும் மன்னர்களின் பிரதான குருவாகவும் இருந்தவர் பிஷப் நிக்கோலாஸ். சிற்றரசர்களை ஒன்றுசேர விடாமல் அவர்களது மனதில் ஆசைத் தீயைக் கிளப்பி, ஆதரவு என்ற ஆகுதி வார்த்து, முட்டி மோதிக்கொண்டு தம் காலடியில் கிடக்கும்படி செய்தார்.

     "ஹாக்கான் கட்சியா, அவன் வேண்டுமானால் அக்கினிப் பரிட்சையால், தன் பாத்தியத்தை நிரூபிக்கட்டுமே" என்றார்.

     "சரி. ஹாக்கான் தொலைந்தான், நெருப்பாவது தப்புவதாவது" என்று மனப்பால் குடிக்கிறான் ஸ்கூல்.

     பழுக்கக் காய்ச்சிய இரும்பை ஹாக்கானுடைய தாயார் கையில் ஏந்த வேண்டும். நெருப்பின் நாக்குத் தாயின் கையைத் தீண்டாது ஒதுங்கினால், அரசுரிமை அவனுக்கு உண்டு. தாய் இங்கா அக்கினிப் பரிட்சைக்கு உடன்படுகிறாள். அக்கினியும் அவளைச் சுடவில்லை. ஹாக்கான் இறந்த மன்னனுடைய புத்திரன் என்பதில் சந்தேகமில்லை. அது அவனுக்கு இராஜ்யத்தின் மீது பாத்யதை கொண்டாட மட்டும் உரிமை கொடுக்கிறதாம்; ராஜ்யத்தைக் கொடுக்கவில்லையாம். அவனைப் போல் சம பாத்யதை உடைய வம்சங்கள் பலவுண்டாம்.

     சிற்றரசுச் சபை கூட்டி முடிவாக யாரை ராஜாவாக்குவது என்பதைத் தீர்மானிப்பது என்று முடிவு கட்டப்படுகிறது. ஹாக்கான் வாலிபன், தீரன், அழகன்; சீர்குலைந்து கிடக்கும் தேசத்தை ஒரு ஆட்சிக்குட்படுத்தி, ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதுதான் அவனது ஒரே ஆசை. தேர்தலுக்கும் சம்மதிக்கிறான். ஸ்கூலுக்கும் மற்ற வம்சங்களுக்கும் எதிராக இவனுக்கே ஆட்சி கிடைக்கின்றது.

     ஹாக்கான் தாராள புத்தியுடையவன். தேசம் ஒன்றுபட்டுச் சமாதானமாவதே அவன் ஆசை. எதிரியாக நிற்கும் ஸ்கூலை உறவினனாக்கி, பகைமையை அழிக்க விரும்பினான். ஸ்கூலுக்கு ஒரு மகள் உண்டு. அவள் பெயர் மார்கரெட், ஏற்கனவே தான் ஒருத்தி மீது ஆசை வைத்திருந்தும், தேசத்துக்காக அந்தக் காதலை ஒதுக்கி, மார்கரெட்டை மணந்து கொள்ளுகிறான். பாசம் மிகுந்தவர் பக்கத்திலிருந்தால் உறுதி பிறழும் என்று தாயையும் தனி இடத்துக்கு அனுப்புகிறான். கலியாணப் பந்தல் பிரிக்குமுன்பே கலகத் தீயும் கனிய ஆரம்பிக்கிறது. ஹாக்கானுக்கு எதிராகக் கலகம் செய்துவந்த ஒரு சிற்றரசனுக்கு ஸ்கூல் ஒரு கடிதம் அனுப்புகிறான். முத்திரையிட மன்னவனுடைய முத்திரை மோதிரத்தையும் உபயோகிக்கிறான். இந்தச் செய்தி காதில் எட்டியதும் கோபத்துடன் புகுந்து ஹாக்கான் விவகாரத்தை விசாரிக்கிறான். ஸ்கூலும் படபடப்பாக எதிர்க்க முத்திரை மோதிரம் அவன் வசமிருந்து வாங்கப் படுகிறது.

     இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார் பூஜ்யர் நிக்கோலாஸ். ஹாக்கான் ஜனனம் அவன் பிறந்து ஒரு வருஷம் வரை இரகசியமாகக் காப்பாற்றப்பட்டு வந்தது. போட்டி வம்சம் சிசுவைக் கொன்றுவிடுமோ என்று இங்கா, இரகசியமாக ஒரு பாதிரியார் வீட்டில் சென்று பெற்றெடுத்து அதை அவர் வசமே விட்டு வந்தாள். பாதிரியாருக்கு ரகசியச் சுமை தாளவில்லை. மடத்தின் அதிபதியான குருவிடம் ஆத்மார்த்தமாக யோசனை கேட்டார். குரு குழந்தைகளை மாற்றி ராஜ குழந்தைக்குப் பதிலாக, வேற்றுக் குழந்தையைக் கொடுத்துவிடும்படி யோசனை சொன்னார். இப்படியாக ஸ்கூல் காதில் பிஷப் நிக்கோலஸ் சந்தேக வித்தை விதைத்தார்.

     "அப்பொழுது ஹாக்கான் ராஜ பரம்பரையைச் சேர்ந்தவன் அல்லவா?" என்று ஆவலுடன் கேட்டான் ஸ்கூல்.

     "பாதிரி சொன்ன யோசனைப்படி நடந்தானோ என்னவோ, சம்பவம் நடந்த பிறகு பயந்து நாட்டை விட்டு ஓடிவிட்டான். ஆனால் சாகும்போது நடந்த விவரம் முழுவதையும் எனக்கு எழுதி அனுப்பினான்" என்றார் பிஷப்.

     "அந்தக் கடிதம்..." என்று கேட்டான் ஸ்கூல்.

     அதைத் தேடிக்கண்டுபிடித்தாக வேண்டும் என்று துடிக்கிறான் ஸ்கூல்.

     "அந்தக் கடிதம் ஹாக்கான் தான் உண்மையான வாரிசு என்பதை ஊர்ஜிதப்படுத்தினால்?"

     "ஆசையை அவித்து அடங்கி வாழ்வேன்" என்றான் ஸ்கூல்.

     "அவனுக்கு பாத்தியதை இல்லாவிட்டாலோ?"

     "அப்படியானால் அவன் எனக்கு ராஜ்யத்தைக் கொடுக்க வேண்டும். அவன் எங்கு ஓடினாலும், எந்த மாதா கோவிலில் தஞ்சம் புகுந்தாலும் துரத்திப் பிடிப்பேன்" என்றான் ஸ்கூல்.

     "என்ன செய்தால் என்ன? அவன் தலையில் அல்லவா கிரீடம் இருக்கும்?" என்று கேட்கிறார் பிஷப்.

     "என் வாளைக் கொண்டு கிரீடத்தைப் பெயர்த்துத் தள்ளுவேன்."

     "தலையில் உறுதியாக இருந்தாலோ?"

     "கடவுளோ சாத்தானோ - யார் துணையேனும் கிடைக்கட்டும்! கிரீடத்துடன் தலையைக் கொய்து விடுவேன்" என்று சொல்லிவிட்டுப் போகிறான்.

2

     பிஷப் நிக்கோலஸுக்கு காலன் வந்துவிட்டான். உயிர் அங்கோ இங்கோ என்று ஊசலாடுகிறது. வாழ்விலே செய்த வேலை பூர்த்தியாகவில்லை. விஷவித்தைப் பூரணமாக உழுது பயிரிடவில்லை. அதற்குமுன் காலன் வந்துவிட்டான். வைத்தியன் கைவிட்டுவிட்டான். உடம்பு நைந்துவிட்டது. நிற்கவும் ஜீவனில்லை. அவருடைய ஆத்மா நல்ல கதியடைவதற்காக, பாபங்கள் மன்னிக்கப் பெறுவதற்காக கோவிலில் ஓயாத பிரார்த்தனை நடக்கிறது. தூங்கி விழாமல், மந்திரத்தை விழுங்காமல் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். பிஷப்புக்கு அந்திமதசை அணுகிவிட்டது என்று மன்னனுக்கும் ஸ்கூலுக்கும் ஆள் அனுப்பியாகிவிட்டது. மன்னனும் சீக்கிரத்தில் வந்து சேருவார் என்ற செய்தி வந்து விட்டது.

     பிஷப்புக்கு அவகாசம் குறுகுகிறது; செய்ய வேண்டிய வேலைகளைச் சீக்கிரம் செய்து முடித்துவிட விரும்புகிறார். இந்த உடல் அழிந்துவிட்டால் என்ன? குழப்பத்தையும் கலக்கத்தையும் சந்தேகத்தையும் செழித்து வளரும்படி செய்ய விஷ வித்துக்களைப் பயிரிட்டு விட்டுச் சென்றால் யார் தலை தூக்கி நிற்க முடியும்? நான் செத்தாலும், யாவரும் என் அடிமைகளாக, என் கைப்பாவைகளாக நான் விரித்த வலையில் சிக்கி உழலுவார்கள். உடம்பில் பலம் இருந்தால் போதுமா? ரத்தத்தில் பாத்தியதை இருந்தால் போதுமா? சிற்றரசர்கள் சம்மதம் பெற்றுவிட்டால் போதுமா? உண்மையில் நார்வே என் காலடியில் கிடக்க வேண்டும். நான் செத்த பின்பும் என் காலடியிலேயே எழுந்திருக்க முடியாமல் கிடக்க வேண்டும்.

     இப்படியாக எண்ணமிட்டுக் காலன் வரவை எதிர்பார்த்துத் தமது சூழ்ச்சி வலையில் புதுப் பின்னல்களைப் போட்டுக் கொண்டிருந்தார்.

     அந்தச் சமயத்தில் இங்கா வருகிறாள். நாட்டை விட்டு ஓடிப்போன பாதிரி கொடுத்துவிட்ட கடிதம், ஹாக்கான் உண்மையான வாரிசா என்பதைத் தீர்மானிக்கும் கடிதம், அதை எடுத்துக்கொண்டு வருகிறாள். அவளுக்கு அந்தக் கடிதத்தில் என்னவிருக்கிறது என்று தெரியாது. பிஷப் வசம் கொடுக்கிறாள். மகனைத் தூரத்திலிருந்து பார்த்துவிட்டுப் போக ஒரு தூண் மறைவில் நின்றாள். மகன் பேரில் அவ்வளவு ஆசை. மகனானாலும் மன்னன் உத்தரவு அல்லவா, மறைந்து நின்றே பார்க்க வேண்டியிருக்கிறது.

     அவள் சென்றதும் ஸ்கூல் வந்து சேருகிறான். பிஷப் சாகுமுன் கடிதத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றுதான் அவனுக்கு ஆவல்.

     அவன் ஆசையை வளர்க்கிறார் பிஷப் நிக்கோலாஸ். அதை எங்கே கண்டுபிடிக்க முடியும் என்று அவருக்குத் தெரிந்து விட்டதாம்.

     "எங்கே, எங்கே?" என்று துடிக்கிறான் ஸ்கூல்.

     "அதிருக்கட்டும். நீ எனக்கு ஒரு காரியம் செய்வாயோ? என் மணம் ஆற வேண்டும். அதோ அந்த மேஜையில் இருக்கிறதே, அந்தக் கடிதத்தை எடுத்துக்கொள்; எனது வேண்டுகோளை நிறைவேற்றுவாயா; - நிச்சயமாக. அப்படியானால் அந்தக் கடிதத்தில் என்னுடைய எதிரிகளின் பெயர் விவகாரம் இருக்கிறது; நீ அவர்களைக் கருவறுத்து வஞ்சம் தீர்க்க வேண்டும்; அப்போதுதான் எனது ஆத்மா சாந்தியடையும்" என்றார்.

     "ஆகட்டும், ஆகட்டும்" என்று அந்தக் கடிதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சத்தியம் செய்துவிட்டு, "அந்த ரகசியக் கடிதம், அது எங்கே?" என்று பதைக்கிறான்.

     "மன்னன் அதோ வருகிறான்; முதலில் ஜாப்தாவை மறைத்து வைத்துக்கொள்; அரசே, எனது அந்திமக்கிரியைக்கு உம்மை மனமார வரவேற்கிறேன்" என்று உள் நுழைந்த ஹாக்கானை வரவேற்கிறார்.

     மன்னனும் வந்துவிட்டான்; நிக்கோலாஸ் இப்பவோ இன்னும் சில வினாடியிலோ; நெருப்பில் கால் வைத்து நிற்பவன் போல் பதைக்கிறான் ஸ்கூல்.

     "உயிருள்ளவரை எனக்குப் பலத்த எதிரியாக நின்றீர்; நான் அதையெல்லாம் மன்னிக்கிறேன்; மறந்துவிட்டேன். மரணம் பழைய குரோதங்களைப் போக்குகிறது" என்கிறான் ஹாக்கான்.

     "மன்னன் கருணையால் என் ஆத்மா குளிர்ந்தது" என்று பாராட்டுகிறார் பிஷப்.

     "மன்னிப்பைக் கோரி அழைப்பதுபோல், ஏன் இதை ஏற்பாடு செய்தீர்கள்?" என்கிறான் ஹாக்கான்.

     "ஏற்பாடா? என்ன அது?" என்கிறார் பிஷப்.

     "மன்னர் என்னைக் குறிப்பிடுகிறார். நான் இங்கு ஆஸ்லோவுக்குள் காலடி வைத்த இந்த நிமிஷம்வரை தங்கள் வரவு எனக்குத் தெரியாது" என்கிறான் ஸ்கூல்.

     "நாங்கள் இருவரும் தூரத்தில் இருந்தால்தான் எங்கள் நட்புத் தழைக்கும்; ஆகையால், கடவுள் பாதத்தை அடைவீராக" என்று பிஷப்பை வாழ்த்திவிட்டுப் புறப்படுகிறான் ஹாக்கான்.

     "மன்னா போகாதே நில்; பிஷப் நிக்கோலஸ் தனது கடைசி வார்த்தையை உச்சரித்து முடிக்குமுன் நீ இந்த அறையை விட்டு வெளியே போகக்கூடாது" என்றார் பிஷப்.

     ஹாக்கானுக்கு இது ஏதோ பெரிய சூழ்ச்சி என்ற சந்தேகம். "தகுந்த பரிவாரத்துடன் ஏற்பாடாக வந்திருப்பது போல் தெரிகிறதே" என்று உடைவாளில் கை வைக்கிறான்.

     "கடவுள் சாட்சியாகச் சொல்லுகிறேன்; எனக்கு ஒன்றுமே தெரியாது" என்று பதில் கொடுக்கிறான் ஸ்கூல்.

     "என் வாக்கின் சக்தி உங்களை இங்கிருந்து நகர விடாது; நான் சாகப் போகிறேன். ஆமாம், சாகத்தான் போகிறேன். நானே சவச் சடங்கில் என்னைப் பற்றிச் சொல்லவேண்டிய வார்த்தைகளைச் சொல்லிவிடுகிறேன். ஆமாம். கண் மங்குகிறது. நீங்கள் இருவரும் நிற்பது கூடத் தெரியவில்லை. என் வாழ்வில் நடந்தவைகள் யாவும் என் கண்முன் மறுபடியும் நடக்கிறது. அரசே கேள். நான் வாலிபத்தில் அதிகாரத்துக்கு ஆசைப்பட்டேன். உலகத்தைக் கட்டியாள விரும்பினேன். ஆனால் போர்க்களத்துக்குத் துணிந்து செல்ல எனக்குத் தெம்பு வரவில்லை. இரத்தத்தைக் கண்டதும் குலை நடுக்கம் எடுத்தது. நான் அரச பதவி வகித்திருந்தால் தெய்வ சாம்ராஜயத்தைப் பெருக்கி இருப்பேன். ஆனால் என் ஆசைக்குக் குறுக்கே தெய்வமே தடுத்து நின்றது. உலகத்தில் எனக்கு மேல் பெரியவன் இருப்பதைக் காண எனக்குப் பொறுக்கவில்லை. மனதிலே அதிகார வேட்கையும் காமக் கனலும் வாட்டியது. வாள் முனையில் வெற்றிப்பாதை வகுக்க விரும்பினேன். எனக்கு இப்பொழுது வயது எண்பதுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் மனதில் கொதிப்பு அடங்கவில்லை. பிறப்பிலிருந்தே எனக்குச் சக்தி இல்லாது போய்விட்டது. நான் உலகை வெறுத்து மடாலயத்துக்குள் புகுந்ததற்கு அதுதான் காரணம். பாதிரியானேன். நான் துறவி, நான் பாதிரி - என்ன வேடிக்கை. நான் வலுவற்றவன், பாதி மனிதன். இருந்தாலும் வாழ்வில் தெம்புடன் பிறந்தவர்கள் செய்ய வேண்டியதை, மேலுறை சக்திகள் என்னிடமும் எதிர்பார்த்தன, கேட்டன. தெய்வத்தின் இப்படிப்பட்ட கோரிக்கைகள் நியாயம் என்று நினைத்த நேரங்களும் உண்டு. தெய்வ ஆக்ஞைக்குப் பயந்து நடுநடுங்கிக் கொண்டு நான் எனது மரணப் படுக்கையில் கிடந்ததும் உண்டு. ஆனால் இப்போது என் மனம் உறுதிப்பட்டு விட்டது. நான் குற்றவாளியல்ல. எனக்குத் தெம்பைக் கொடுக்காதது யாருடைய குற்றம்? அந்தத் தெய்வத்தைக் குற்றம் சாட்டி நிற்கிறேன் நான்..." என்று ஆவேசத்துடன் பேசுகிறார் பிஷப் நிக்கோலாஸ்.

     "அந்தக் கடிதம். அந்தக் கடிதம்" என்று அங்கலாய்க்கிறான் ஸ்கூல்.

     "தெய்வத்தைத் தூற்ற வேண்டாம். பணிந்து பேசும்" என்கிறான் மன்னன்.

     "ஆத்ம பண்பாடு ஒவ்வொருவனுடைய தனி விவகாரம். மன்னா ஜாக்கிரதை. தெய்வமே என்னை எதிர்த்து நின்றதுபோல, சகல சக்திகளையும் ஏந்தி உமக்கு வைரியாக ஒருவன் நிற்கிறான். தலை கழுத்தோடு நிற்கும்வரை அவன் உம்மை எதிர்த்தே போராடுவான்; என்னுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்; நார்வேக்கு இரண்டு அரசர்கள் இருக்கட்டும். இல்லாவிட்டால் கல்லறையில் எனக்கு நிம்மதி இராது. அலகையாக வந்து உங்களை வாட்டுவேன். மன்னா சம்மதிப்பாயா?"

     "அதிகாரத்தில் நான் இம்மிகூட விடமாட்டேன்" என்கிறான் மன்னன். பணியாளனைக் கூப்பிடுகிறார் பிஷப்.

     "எனது ஜீவிய பாப மன்னிப்புப் பிரார்த்தனை நடந்து விட்டதா? இன்றைய இரவு நான் இழைக்கக்கூடிய பாபத்துக்கு இன்னும் ஏழு முறை பிரார்த்தனை செய்யச் சொல்" என்று உத்தரவிடுகிறார் பிஷப்.

     மறுபடியும் கடிதத்தை ஞாபகப்படுத்துகிறான் ஸ்கூல்.

     "அந்தக் கடிதப்படி அவனே நியாயமான வாரிசானால்..." என்று கேட்கிறார் பிஷப்.

     "பணிந்து அவருக்கு ஆட்பட்டு நடப்பேன்" என்கிறான் ஸ்கூல்.

     "ஸ்கூல், உன்னைப்போல எனக்கும் மனம் இளகுகிறது..."

     "அந்தக் கடிதம்..."

     "இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே. நீ அதிகாரத்தை விடத் தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்டுவிடு" என்கிறார் பிஷப்.

     ஸ்கூல் அந்தப் பட்டியலை நெருப்பில் போட்டு விடுகிறான். "இதோ எரிகிறது பாரும் அந்தக் கடிதம். ஆயிரக்கணக்கானோர் வாழ்வு அதிலே சிக்கிக் கிடக்கிறது" என்று துடிக்கிறான் ஸ்கூல்.

     "ஆயிரக்கணக்கானோர் வாழ்வு, ஐயோ கண் மங்குகிறதே, மூச்சடைக்கிறதே" என்று ஓலமிடுகிறார் பிஷப்.

     "பிஷப்புக்கு அந்திமதசை நெருங்கிவிட்டது" என்று கூவுகிறான் மன்னன். பாதிரியாரின் பணியாட்கள் ஓடி வருகின்றனர்.

     "அந்தக் கடிதம்" என்று பிஷப்பை உலுக்குகிறான் ஸ்கூல்.

     "இன்னும் ஏழு பிரார்த்தனை, வில்லியம்" என்று கூவுகிறார் பிஷப்.

     "அந்தக் கடிதம், கடிதம்!"

     பிஷப் நிக்கோலஸ் முகத்தில் சாக்காடு தொட்டுவிட்டது. முகம் பொலிவிழக்கிறது. சாக்காட்டுடன் போராடுவதுடன் புன்சிரிப்பு மாறாமல், "ஸ்கூல், நீ எரித்தது தான் அந்தக் கடிதம்" என்று சொல்லிவிட்டு விழுந்து மடிகிறார்.

     "ஐயோ தெய்வமே" என்று கூப்பாட்டுடன் ஸ்கூல் முகத்தைப் பொத்திக் கொள்கிறான்.

     பிஷப் மாண்டுவிட்டார். அவர் வைத்த நெருப்பு மடியவில்லை.

     மடாலயச் சீடர்கள், பணியாட்கள் சாத்தான் வந்து பிஷப் நிக்கோலாஸை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டதாகச் சொல்லுகிறார்கள்.

     மன்னன் ஹாக்கானுக்கு ஆண்குழந்தை பிறக்கிறது. தொட்ட தொட்ட காரியத்தில் எல்லாம் வெற்றி. வம்சம் மங்காதிருக்க ஆண்குழந்தை. ஸ்கூலுக்குப் பொறுக்க முடியவில்லை. கடைசி முறையாக மன்னனிடம் பங்கு கேட்டுச் சமாதானம் பண்ணிக்கொள்ள முயலுகிறான். சந்திப்பில் இருவருக்கும் பேச்சுவார்த்தை தடிக்கிறது. மன்னன் நாடு இரண்டுபடுவதை விரும்பவில்லை. ஸ்கூலுக்கோ தனக்கு மேல் அதிகாரம் வகித்து எவரும் இருக்கக்கூடாது என்ற உறுதி.

     இரண்டு பேரும் துவந்த யுத்தம் நடத்தி, மிஞ்சுகிறவர்களுக்கு அதிகாரம் மிஞ்சட்டும் என்று கோருகிறான் ஸ்கூல்.

     "மனப்பூர்வமான வார்த்தையா?" என்கிறான் மன்னன்.

     "எனது வாழ்வின் வேலைக்காக, எனது ஆத்மா கடைத்தேறுவதற்காகத்தான் இதைக் கேட்கிறேன்."

     "அப்படியானால் உனது ஆத்மா கடைத்தேறாது" என்கிறான் மன்னன்.

     "அப்படியானால் சண்டைக்குத் தீர்மானமா?" என்று கேட்கிறான் ஸ்கூல்.

     "நார்வே மக்களை ஒன்றுபடுத்தி நாட்டை வாழ்வுத் துறைப்படுத்துவது என் ஆசை" என்கிறான் மன்னன்.

     "நாட்டு மக்களை ஒன்றுபடுத்துவது; யாவருடைய மனத்திலும் தாம் யாவரும் ஒன்று என்ற நினைப்பை உண்டு பண்ணுவது! உனக்கு ஏன் இந்த விபரீத புத்தி? அது என் ரத்தத்தைச் சாகடிக்கிறது; மன்னா, சாத்தான் தான் இந்த நினைப்பை உனக்கு அனுப்பி இருக்கவேண்டும். மார்பில் கவசம் பூண எனக்குப் பலம் இருக்கும் வரை அந்த நினைப்பை உண்மையாக்க விடமாட்டேன்."

     "இந்த ஆசையை, நினைப்பைத் தெய்வம் எனக்குத் தந்தது. பக்தன் ஓலாப் பணித்த கிரீடம் என் தலையிலிருக்கும்வரை அதை நடத்தியே தீருவேன்."

     "அப்பொழுது அந்தக் கிரீடம் அங்கிருந்து தரையில் புரளவேண்டியதுதான்."

     "யாருக்கு அந்தத் தெம்பு?"

     "வேறு எவருமில்லாவிட்டால் நான் நடத்துவேன்."

     "நாளைக்குச் சபையைக் கூட்டுவித்து, உன் வலுவை வாங்க வேண்டியதுதான்."

     "ஹாக்கான், தெய்வத்தைக் காட்டாதே. என்னைப் படுகுழிப் பக்கத்தில் நெருக்காதே."

     மன்னம் கோபத்தை அடக்கிக்கொண்டு, "போய்விட்டு வாருங்கள். வார்த்தை தடித்தது என்பதை இருவரும் மறந்துவிடுவோம்" என்கிறான்.

     "மறுமுறை சந்திக்கும்போது, வார்த்தைகள் இதற்குமேல் கொதிக்கும்" என்று சொல்லிக்கொண்டே வெளியேறுகிறான் ஸ்கூல்.

     ஸ்கூல் சென்ற சற்று நேரம் கழித்து, ஸ்கூல் கோஷ்டியைச் சேர்ந்த சிற்றரசன் ஒருவன் வருகிறான். ஸ்கூல் கட்சியை வெறுத்து மன்னனுடன் சேர்ந்து கொள்ள விரும்புகிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் ஹாக்கானைத் திடுக்கிட வைக்கிறது.

     அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த மனைவி மார்கரெட்டைத் தட்டி எழுப்புகிறான்.

     "என்ன?" என்று கேட்டுக்கொண்டு வெளியே வருகிறாள்.

     "இப்பொழுது நார்வேயில் இரண்டு அரசர்கள்?" என்கிறான் ஹாக்கான்.

     "இரண்டு அரசர்கள் - அப்பா எங்கே?" என்று கேட்கிறாள் மார்கரெட்.

     "கப்பலேறித் தன்னை அரசன் என்று பிரகடன் செய்துகொண்டு முடிசூட்டிக்கொள்ள நிடராஸ் நகரை நோக்கிப் பிரயாணப்பட்டு விட்டார்" என்கிறான் மன்னன்.

     "தெய்வமே" என்று ஏங்கிக்கொண்டு அவன் காலடியில் விழுகிறாள்.

     "தேசத்தில் இரண்டு மன்னர்கள்!"

     "ஒன்று என் கணவர், மற்றொன்று என் தகப்பன்" என்று எதிரொலிக்கிறாள் மார்கரெட்.

     "நான் என்ன செய்யவேண்டும்? நினைத்துப் பார்த்து விவேகத்துடன் யோசனை சொல். நான் மலைப்பாதை வழியாகச் சென்று அவர் முடிசூட்டிக் கொள்ளுவதைத் தடுக்கட்டுமா? உன் தகப்பனார் நிடராஸுக்குப் போகுமுன் அவரை எப்படிக் கொல்லுவது?"

     "ஹாக்கான், ஹாக்கான்."

     "அவரைக் கொல்லுவதற்கு லேசான தந்திரம் எதுவும் சொல்லேன்?"

     "அவர் என் தகப்பனார் என்பதை அடியோடு மறந்து விட்டீர்களா?"

     "உன் தகப்பனார், ஆம். ஆம். அதை மறந்து விட்டேன். அதற்கு நீ என்ன செய்வாய்? ஸ்கூல் தான் எனக்குப் படுவைரியாகி விட்டார். தெய்வமே, தெய்வமே, என்னை ஏன் இப்படி அடிக்கிறாய்? என்னை, பாவம் செய்யாத என்னை! யார் அங்கே இந்த நடு இராத்திரியில் கதவைத் தட்டுகிறது?"

     "குளிரில் கிடந்து செத்து மடியும் ஒருத்தி" என்று வெளியிலிருந்து ஒரு குரல் கேட்கிறது.

     "அம்மா" என்று அலறிக்கொண்டு கதவைத் திறக்கிறான் ஹாக்கான்.

     "என் தாய்! மகன் வீட்டு வாசலிலா நாய் போல் காத்துக் கிடப்பது? கடவுள் என்னைத் தண்டிக்கிறார் என்ற சந்தேகம் வேறு எனக்கு."

     "ஹாக்கான், குழந்தாய், தெய்வம் உன்னை ரக்ஷிக்குமாக!"

     "கடமையில் வழுவாதிருக்கப் பாசத்தைத் துறந்தேன். பாசம் தரும் உங்களிருவரையும் என் இதயத்திற்கு வெளியே தாளிட்டேன்!"

     "ஹாக்கான்! கடைசியாக உன் இதயத்தில் எனக்கும் இடம் உண்டா?" என்று மகிழ்ச்சியுடன் கேட்கிறாள் மார்கரெட்.

     அதற்குள் மன்னன் பரிவாரத்திலுள்ள சிற்றரசன் ஸ்கூலின் புரட்சி பற்றிய செய்தியுடன் ஓடிவருகிறான்.

     "பதறாதே. நார்வேயில் அரசர் இரண்டு இருந்தாலும் உயர இருப்பவன் ஒருவன் தான். அவன் சிக்கலைத் தீர்த்து வைப்பான்" என்று ஆற்றுகிறான் மன்னன்.

4

     பிஷப் நிக்கோலாஸ் இட்ட தீ நார்வேயில் நன்றாகப் பற்றிக்கொண்டது. பாதிரியார் விரும்பியபடி அவர் உருட்டி விட்ட விஷச் சக்கரத்தின் வேகம் கைக்கடங்காதது போல் சுழல்கிறது. ஸ்கூல் தலையில் கிரீடம் ஏறிவிட்டது. ஆஸ்லோ அரண்மனை அத்தாணி மண்டபத்தில் கோலாகலம். ஆனால் ஸ்கூல் மனதில் மட்டும் வலுவு குடியேறவில்லை. அடிக்கடி மனதில் சந்தேகம். தன் பலத்தைப் பற்றி நம்பிக்கைக் குறைவு.

     "நம்பமுடியாதது நடந்துவிட்டது. ஹாக்கான் தோற்றான்; நான் வென்று விட்டேன்; வெற்றியின் சாயையில் அந்தரங்க பீதி ஒளிந்து கிடக்கிறது. உரிமை பெற்றிருந்தால் வெல்லும் சக்தி அதனுடன் வராது? மனதிலே நோய், நோய். தெய்வமே, நியாயம் ஏன் என் கட்சியில் இருக்கக்கூடாது? தெய்வம் எனக்கு வெற்றியைக் கொடுத்தபோது நியாயமும் என் கட்சியில்தான் இருக்கிறது என்பதை உறுதி கூறுவது போலில்லையா? 'நார்வே இதுவரை வெற்றரசாக இருந்தது. இனிமேல், ஜனசக்தியின் சம்மதமும் பலமும் பெற்ற ராஜாங்கமாகி விடும்' என்று ஹாக்கான் கர்ஜித்த போது அரச பதவி அவனுக்கே உரிமைப்பட்டது போல் என் கண்களுக்குப் பட்டது. ஒரு வேளை அவனுடைய விபரீத வார்த்தைகளில் தெய்வ அபீஷ்டம் தொனித்ததோ, தெய்வத்தின் வாக்கைப் பரப்ப வந்தவனோ அவன்" இப்படி அல்லாடுகிறது ஸ்கூல் மனம். பக்தன் ஓலாப் விக்கிரகத்தின் முன்பு முடிசூட்டல் நடக்காதது கெட்ட சகுனம் என்று ஜனங்கள் பேசிக் கொள்கிறார்கள் என்ற வார்த்தை வேறு அவனுக்குப் பயத்தைக் கொடுக்கிறது.

     யுத்தம் நாலா திசையிலும் மூண்டுவிட்டது என்ற செய்தி அடிக்கடி வந்து குவிகிறது. தன் பலம் படிப்படையாகக் குன்றிவிடுமோ என்று பயப்படுகிறான்.

     மனம் அல்லாடிக் கொண்டிருக்கையில் தனது ஆஸ்தான கவியைக் கூப்பிட்டழைக்கின்றான். ஜட்டாகீர் பிறப்பிலே கவி. அவன் வாக்கில் இசை தானே வந்து தவழ்ந்து விளையாடும்.

     "ஜட்டாகீர், நீ எப்படிக் கவியானாய்? யாரிடம் பாடக் கற்றுக் கொண்டாய்?" என்று கேட்கிறான் ஸ்கூல்.

     "அரசே, கற்றுக் கவியாக முடியாது" என்கிறான் ஜட்டாகீர்.

     "அந்தப் பரிசு உனக்கு எப்படிக் கிடைத்தது?"

     "எனக்குத் துன்பம் என்ற பரிசு கிடைத்தது. என்னைக் கவியாக்கியது."

     "பாடுவோருக்குத் துன்பப் பரிசுதான் தேவையோ?"

     "அரசே எனக்கு அது தேவையாக இருந்தது. சிலருக்குப் பக்தி, வேறு சிலருக்குப் போகம், மற்றும் சிலருக்கு சந்தேகப் புத்தி..."

     "சந்தேகப் புத்தியுமா?" என்று ஆச்சரியப்படுகிறான் ஸ்கூல்.

     "ஆனால் சந்தேகப் புத்தியுள்ளவனுக்கு நெஞ்சிலும் புத்தியிலும் திடம் இருக்கவேண்டும்."

     "அதாவது -"

     "அதாவது தனக்குள்ள சந்தேகத்தையே சந்தேகிக்கும் சக்தி வேண்டும்."

     "அப்படியென்றால் மரணம்தான்."

     "அல்ல. மரணத்தைவிடப் படுமோசம். இருளும் ஒளியும் அற்ற கருக்கல்."

     "ஜட்டாகீர், இன்னும், உன் மனத்தில் நீ பாடாத பாட்டுக்கள் பல இருக்குமோ?"

     "அரசே, பிறக்காத பாட்டுக்கள் பல உண்டு. அவை ஒவ்வொன்றாய்ப் பிறக்கின்றன."

     "இருக்கட்டும். நான் உன்னைக் கொன்றுவிட்டால் பிறக்காத உன் எண்ணங்கள் உன்னுடன் மடிந்துவிடுமா?" என்று கேட்கிறான் ஸ்கூல்.

     "அழகான நினைப்பைக் கொல்லுவது மகாபாபம்."

     "பாபத்தைப் பற்றிக் கேட்கவில்லை. முடியுமா?"

     "அரசே, நானறியேன்."

     "வேறு கவி ஒருவன் அழகான கருத்து ஒன்றை உனக்குச் சொல்கிறான் என்று வைத்துக்கொள்; அவனைக் கொன்று அதைத் திருட நீ ஆசைப்படுவாயா?"

     "அரசே நான் மலடு அல்ல. எனக்கும் நினைவுக் குழந்தைகள் பலவுண்டு. வேறொருவர் குழந்தைக்கு ஆசைப்படும் அவசியம் எனக்கில்லை."

     இம்மாதிரியான கவியின் வார்த்தைகள் எல்லாம் ஸ்கூலுக்கு அவனது திறமையின்மையை இடித்துக் காட்டுவது போலிருக்கின்றன. சோர்வு வலுக்கிறது; இந்த நிலையில் தனக்கு ஆண் மகவு இல்லாதது பெருங் குறையாக, பலக்குறைவாக மனத்தை வாட்டுகிறது. முன்பு எப்போதோ தன் ஆசையின் விளைவால் பிறந்த பையன் ஒருவன் எதிர் வருகிறான். நீரில் உயிருக்கு அல்லாடுகிறவன் கை, சருகையும் எட்டிப் பிடிக்குமல்லவா? அவனைத் தன் மகனாக, பட்டத்து இளவரசாக ஏற்று அவனை ஊன்றுகோலாக நம்புகிறான் ஸ்கூல். அவன் பெயர் பீட்டர். தகப்பன் பேரில் மாறாத பக்தி, தகப்பன் சொல்லுவதே வேதவாக்கு. அவன் ஆசையை நிறைவேற்றச் செய்யும் எந்தப் பாபமும் புண்ணியமாகத் தோன்றுகிறது. அவனுக்க்குத் தகப்பனாருடைய ஆசையைப் பூர்த்திசெய்ய, பாதிரிகள், மதகுரு முதலியோருடைய சாபங்களையும் பொருட்படுத்தாமல், பக்தன் ஓலாப் விக்கிரகத்தை முதுகில் தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறான். இந்த அடாத செயலைக் கண்டு ஸ்கூலின் மனம் பிரமிக்கிறது. மகனுடைய பக்தி ஆவேசத்தைக் கண்டு பயப்படுகிறான்.

     போரின் கொழுந்து நாலா திசையிலும் படர்கிறது. தன்னைச் சுற்றிலும் எரியும் தீயைக் கண்டு பயந்து விடுகிறான். தன்னால் கொழுந்து விட்டு எரியும் தீயைக் கண்டு நடுநடுங்குகிறான். போரின் போக்கு இவனுடைய நலத்துக்கு மாறாகத் திரும்புகிறது. ஹாக்கான் வெற்றி வீரனாக மோதிப் புடைத்துக் கொண்டு வருகிறான். ஸ்கூல் தேவாலயத்தில் புகுந்து உயிர் தப்ப ஓடுகிறான்.

5

     எக்ஸஸிட்டர் கன்னியா ஸ்திரீகள் மாடத்தில் ஹாக்கான் தன்னுடைய குழந்தையையும் மனைவியையும் அனுப்பிவிட்டு, வெற்றிப் படையுடன் வெகுண்டு வருகிறான்.

     மிரண்டு ஓடிவரும் ஸ்கூலும் அதற்குள் தஞ்சம் புக ஓடி வருகிறான். உள்ளே அவன் மனைவி, மகன் யாவரும் இருக்கின்றனர். வெளியே வந்து நின்று கதவைத் தட்டுகிறான்.

     "யார் கதவைத் தட்டுகிறது?" என்று கேட்கிறான் மார்கரெட்டுடன் துணையாக வந்த மெய்க்காவலன்.

     "ஒரு அரசன்" என்று குரல் கொடுக்கிறான் ஸ்கூல்.

     "ஸ்கூலா?"

     "மன்னன் ஸ்கூலா?" என்று கேட்கிறாள் மனைவி.

     "அப்பா" என்று கூப்பிடுகிறாள் மார்கரெட்.

     "கதவைத் திற, கதவைத் திற."

     "துரோகிகளுக்கு உள்ளே இடமில்லை" என்கிறான் ராணியின் மெய்க்காவலன்.

     "அது என் அப்பா" என்று அலறுகிறாள் ராணி.

     "தேவாலயத்தில் இடம் கொடுக்க மறுத்தால் தெய்வசாபம் சேரும்" என்கிறாள் ஸ்கூலினுடைய மனைவி.

     "தெய்வத்தின் பெயரால்" என்று கதவு திறக்கப்படுகிறது.

     உள்ளே சோர்ந்து வந்த ஸ்கூல், உள்ளம் நொடிந்து விடுகிறான். ஹாக்கான் வந்ததும் மன்னிப்புக் கேட்கவும் தயாராகி விடுகிறான்.

     ஸ்கூலுக்கு மனதிலே சோர்வு, காலிலே தளர்ச்சி.

     ஸ்கூலின் வாரிசு, அரசன் ஹாக்கானுடைய குழந்தையைக் கொன்றுவிட்டால், அவன் வலு ஒடிந்துவிடும் என்ற நம்பிக்கையில், அசுரன்போல் ஓடி வருகிறான். மதிலேறி உள்ளே நுழைய முயலுகிறான். ஜனக்கும்பல் அவனைப் பார்த்து விடுகிறது. ஓலாப் சிலையைப் பங்கப் படுத்தியவனல்லவா? ஜனங்கள் கொந்தளித்துக்கொண்டு கொல்லத் தயாராகிறார்கள்.

     ஆனால் அவன் வெறியனாகக் குழந்தையைக் கொல்லும் ஏகநோக்கத்துடன் உள்ளே குதித்து விடுகிறான்.

     வெளியே ஜனக்கூட்டம், கதவை உடைக்க முயலுகிறது.

     வெளியே இவர்களை விரட்டுவதுதான் நல்லது. தஞ்சம் என்று வந்தவனையும், அவனுக்காக உழலும் வெறியனையும் எப்படித் தெய்வ மண்ணிலிருந்து போ என்று சொல்லுவது என்று சிந்திக்கின்றனர் மடாலயத்தினர்.

     ஸ்கூல் திடீரென்று தீர்மானிக்கிறான்.

     "கதவைத் திறவுங்கள்; நாங்கள் வெளியே போகிறோம். சிலர் வாழப் பிறந்தவர்கள், சிலர் சாகப் பிறந்தவர்கள். தெய்வம் வழிகாட்டிச் செல்லாத பாதையிலேயே என் மனம் செல்லுகிறது. அதனால்தான் இன்று வரை எனக்குத் துலங்கவில்லை. மன்னன் ஹாக்கானுக்காக நான் காத்திருக்க மாட்டேன்" என்று சொல்லிக்கொண்டு வெளியே தனது பட்டத்து இளவரசுடன் செல்லுகிறான்.

     வெளியே ஒரு நொடி கத்திகளின் சலசலப்பு; அவ்வளவுதான். இருவரும் பிணமாகிவிட்டனர்.

     மன்னன் ஹாக்கானும் பிரவேசிக்கிறான்.

     "அரசே இனி உனக்குப் பகைவர்களில்லை" என்கின்றன பல குரல்கள்.

     "இவர் உடம்பு என்னை வழி மறிக்கிறது" என்கிறான் மன்னன்.

     "தாண்டிச் செல்ல வேண்டும்."

     "தெய்வத்தின் கட்டளை அதுவானால், அப்படியே ஆகட்டும்" என்று தாண்டுகிறான்.

     "இனி நார்வேயில் அமைதி. தேசத்தின் படுதுரோகி அதோ உம் காலடியில் கிடக்கிறான்" என்கிறான் ஒரு சிற்றரசன்.

     "அப்படியல்ல. அவன் வாழ்வே ஒரு அதிசயம். தெய்வம் அவனைத் தன் சக்களத்தி பிள்ளையாகப் பாவித்து நடத்தியது" என்றான் ஹாக்கான்.