![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
தையல் மிஷின் இவான் கூம்ஸ் அங்கு மனிதனைத் தூங்காது விழிக்க வைத்திருக்க ஒருவித சந்தடியும் கிடையாது. இருந்தாலும், அந்தச் சிறிய கட்டிலில் சுருண்டு முடங்கிக்கொண்டு, நெடுநேரமாக நிசப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். வீட்டில் அவனைத் தவிர அவனது இரு பெண் பிள்ளைகள்தான். அவர்கள் படுக்கச்சென்று நெடுநேரமாகிவிட்டது. வெளியே ஒரு நாட்டியக் கச்சேரிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி மெதுவாக மெத்தைக்குப் போவது கேட்டது. வீட்டுக்குள் வந்ததும் என்றும் கேட்கக்கூடிய 'குசுகுசு'ப் பேச்சும் 'களுக்' என்ற சிரிப்பும் கேட்கவில்லை. ஒரு பேச்சும் இல்லாது வெளிக் கதவைத் தாளிட்டுச் சென்றனர். பனியுறை மாதிரி நிசப்தம் கவிந்தது. உடம்பு 'துருதுரு' வென்றதால் உருண்டு புரண்டு படுத்தான். ஆனால் மனது மட்டிலும் ஒரே விஷயத்தில் கவிந்தது. தனது மனைவியைப் பற்றி அன்று நினைத்துக் கொண்டிராவிட்டால் அதைப் பொறுக்க முடிந்திருக்காது. ஆனால் அவன் மனது லூயிஸாவைக் கண்டிப்பாக அகற்றியது. அவளது உருவத்தையும் நினைவிற்குக் கொண்டு வருவதைத் தடுத்தது. அவள் இறந்ததினால் ஏற்பட்ட வருத்தத்தை மறக்கவே, அவள் உபயோகித்து வந்த தையல் மிஷினை யாரிடம் கொடுப்பது என்று ஆலோசிக்க ஆரம்பித்தான். சின்ன விஷயந்தான். ஆனால் அவன் ஒரு திட்டமான முடிவிற்கு வந்தான். "என் சகோதரியின் தையில் மிஷின். அதை எனக்குத் தரவேண்டும்" என்று மின்னா கேட்டாள். அவன் கொடுக்க மறுத்து விட்டான். தனது முடிவை மாற்றுவதாக அவனுக்கு எண்ணமில்லை. ஆனால் அவன் மனக்கண் முன்பு மின்னா வந்து மிஷினைக் கேட்டுக் கொண்டிருப்பது போன்ற உருவெளித் தோற்றம் நிரந்தரமாக இருந்து வந்தது. அதை அவனால் அகற்ற முடியவில்லை. அன்று பிற்பகல் அவள் தன்னிடம் எதிர்ப்பட்ட மாதிரி தோன்றியது. அழுது அழுது சிவந்த கண்களும், நனைந்த கைக்குட்டையும், சகோதரியின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தைக் குறித்தன. இருந்தாலும் தையல் மிஷின் வேண்டும் என்று அவளால் கேட்க முடிந்தது. இந்த வேண்டுகோள் அவனைத் திடுக்கிட வைத்தது. வெறுப்பை ஊட்டியது. மரணத்திற்கு முன் சாமானைப் பங்கு போட வந்துவிட்டது மட்டுமல்ல, வேறு ஒரு காரணமும் உண்டு. அப்பொழுதுதான் ஹாலிற்குள் நுழைந்து சாவியைப் பைக்குள் போட்டான். ஏதோ சப்தம் கேட்டு அது வந்த திசையை நோக்கினான். எப்பொழுதும் மிஷின் சப்தம் கேட்டுப் பழக்கம். அன்றும் கேட்பதுபோல் பிரமை ஏற்பட்டது. கேட்க இயலாத நிசப்தத்தில் வெகு நேரம் ஆழ்ந்திருந்த பின் தான் மின்னா எதிரில் இருப்பதாக உணர்ந்தான். எப்பொழுதும்போல் அவனைக் கண்டதும் விலகிப் போகாமல், சுவரில் சாய்ந்த வண்ணம் ஒதுங்கி நின்றாள். அவள் ஏதோ சொல்லப் போகிறாள் என்று எதிர்பார்த்தான். அவள் உடையை விட அவள் மனத்திலிருப்பது அவ்வளவு கனமா? வார்த்தையும் அவள் தலையணியும் அவளை அழுத்தியது போலப் பேசினாள், அம்மாதிரி மிஷின் வேண்டும் என்று கேட்கும்போது. "அதை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்று நீ நினைப்பாயோ?" என்று அப்பொழுது கேட்டாள். வெடுக்கென்று "ஏன் அதை நாங்கள் கொடுத்துவிட வேண்டும்?" என்று கேட்டமாதிரி மறுபடியும் இப்பொழுது கேட்டுக் கொண்டான். (அச்சமயம் அவள் குறிப்பிட்ட 'அது' என்னவென்று கூட வினவவில்லை.) வெடுக்கென்ற பதிலைக் கேட்டவுடன் குழப்பமடைந்து பின்னடைந்தபொழுது சுவரின் பக்கம் நிற்காவிட்டால் நழுவி விழுந்திருப்பாள். அவள் உபசாரமாக மன்னிப்புக் கேட்பதுபோல். "இந்தக் காலத்துப் பெண்கள் தையல் மிஷினைத் தொட மாட்டார்கள் என்று நினைத்தேன்" என்று சொன்னாள். அந்த நிமிஷத்திலும் தன் மகள் பிளாரன்ஸ் பணமில்லாததால் தான் மிஷின் வாங்காது சும்மா இருக்கிறாள் என்று அவளுக்கே தெரியும். அவளை இடைமறித்து "லூயிஸா மிஷின் இருபது வருஷ காலமாக மேலேயே இருந்து வருகிறது. இனியும் அப்படித்தான்" என்று பதிலளித்து விட்டான். பெண்கள் உபயோகித்தார்களோ என்னவோ, அவர்களுடைய உடைகள் எல்லாம் அவர்கள் பிறந்தது முதல் அதில்தான் தைக்கப்பட்டன. அவள் மொட்ட மொழுக்கென்று சொன்னமாதிரி அதைத் தொலைத்து விடுவதற்கான நினைப்பே கிடையாது. அதைச் சுற்றி ஒரு பாசம் வளர்ந்திருக்கிறது. மின்னா, தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நழுவிவிட்டாள். "அந்த மாதிரி நினைக்கவில்லை" என்று ஏதோ புருபுருத்துக்கொண்டு வெளிக்கதவை வார்த்தைகளை முடிக்குமுன் அடைத்துக்கொண்டு போய்விட்டாள். அவள் போய் நெடுநேரமான பின்னும் வார்த்தைகள் ஆகாயத்தில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவன் அவற்றைக் கேட்டபடி நின்றிருந்தான். அவளுக்கு அந்த நினைப்பு இல்லை. அவள் உபசாரமாக மன்னிப்புக் கேட்டது அவ்வளவுதான்; அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்தத் தையல் மிஷினைப்பற்றி அவர்கள் பெரியதாக நினைப்பார்கள் என்று அவள் கருதவில்லை. அதுதான் அவள் வாக்கியத்தின் முடிவு. அதுவும் அங்கு கேட்பதுபோல் இருந்தது. அவளது பெட்டிக்குள் நெடுங்காலம் கிடந்து பின் உடுக்கப்பட்ட உடை போல் கமழ்ந்தது. அவன் அதை ஒரு பெரிய விஷயமாகக் கருதுவான் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை; ஆனால் படுக்கையில் புரண்டு புரண்டு, அந்த நினைவை மனத்தைவிட்டு அகற்ற முடியவில்லை. அன்று பிற்பகல் கேட்ட மாதிரி அப்பொழுதும் யந்திரத்தின் ரீங்காரத்தைக் கேட்டான். அது இயற்கையான சப்தம்போல் கேட்கவில்லை. சப்தத்தின் ஞாபகம் போல் நினைவில் ஒலித்துக்கொண்டிருந்தது. அதனுடன் லூயிஸாவின் குரல் போன்ற அவளது சகோதரி மின்னாவின் குரலும் படபடத்து, ஆனால் அதிக சப்தமில்லாது, கேட்டது. அவர்கள் இருவரும் கோழை உள்ளம் படைத்திருந்ததினாலும், சிறுமை நினைவு தெளிவாகப் படைத்திருந்ததினாலும், படபடவென்று துரிதமாகப் பேசினார்கள்; தாங்கள் சொல்வதெல்லாம் மற்றவர்கள் முக்கியம் என்று கருதிக் கேட்பார்கள் என்று அவர்கள் உணரவில்லை. இதனால் பாதியிலேயே தைரியத்தையிழந்து "அப்படி நினைக்கவில்லை பெண்கள் ஒரு நாளும்..." என்று விட்டு விடுவார்கள். ஆமாம். அவன் பெண்கள் ஒரு நாளும் தையல் வேலை செய்யமாட்டார்கள். அவர்கள் குடும்ப வேலையில் கவனமில்லாது, ஆசை இல்லாது இருப்பது அவனுக்குத் திருப்தியளித்தது. அவர்கள் ஒருநாளும் தையல் வேலை செய்ய மாட்டார்கள்; ஏழைப் புருஷர்களை மணந்து கொண்டு ஒரு மந்தை பிள்ளைகளைப் பெற மாட்டார்கள். லூயிஸாவும் அவர்களது இக்குணத்தைத் தட்டித் திருத்தாது வளருவதற்கு ஒத்தாசை செய்ததுதான் ஆச்சரியம். அவர்கள் காலேஜுக்கு போய் வருவதற்கான வசதிகள் எல்லாம் செய்து, வீட்டு வேலைகளை அவர்கள் மீது சுமத்தவில்லை. நல்ல மாணவிகளாக முன்னுக்கு வந்து அவளுக்குத் திருப்தியளித்தார்கள். அவர்கள் ஒரு பாடத்தை நன்றாகப் படித்து அதில் பாண்டித்யம் பெற்று வருகின்றனர். இனி அவர்கள் ஒருவருடைய கை பார்த்துப் பிழைக்க வேண்டாம். மேலும் அவர்கள் புத்தகங்களை மொண்ணை உருப்போடும் புத்தகப் புழுக்கள் அல்ல. வெளியில் ஓடியாடித் திரிந்து அனுபவிக்கின்றனர். என்ன நடந்தாலும் அவர்கள் ஒருவருடைய தயவை பார்க்காது சுகமாக ஜீவனம் செய்வார்கள் என்பது அவனுக்குத் திட்டம். தன்னைப்போல் இலட்சியத்தைக் கட்டிக் கொண்டு விலைபோகாத புத்தகங்களை எழுதிக் குவிக்க மாட்டார்கள். ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று உருவவளியான மின்னாவுடன் கோபமாகச் சொன்னான். அவனுக்கு மிஷினைக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைப்பே கிடையாது. வெளியிலே திறந்த ஜன்னல் புறத்தில் மரக்கிளைகள் சலசலத்தன. வெளியே ஒரு விளக்கின் மஞ்சள் ஒளி. அந்த ஆசையும் இலைக் குவியலுடன் மின்னாவைப் போல் தெரிந்தது. அவளது விசித்திரத் தலையணியுடன் குருவி மாதிரித் தெரிந்து, மெதுவாக அவளது கறுப்புத்தலையணி அவள் அறையின் இருள் கவிந்த முகடு ஆயிற்று. கண்களைத் துடைத்துக் கொண்டு இருளில் மறையும் பிரமையைத் தேடினான். அன்று மத்தியானம் அவள் ஓடியது போல் அதுவும் மறைந்துவிட்டது. அவனாக மறக்க முடியாத பல விஷயங்கள் மனதைக் கவ்வின. அவளது சூசனை வார்த்தைகள், அந்த மிஷினின் ரீங்காரத்துடன் ஒட்டிவரும் அந்த வார்த்தைகள், அவை அவன் காதில் ஒலித்தன. அவை கேட்கவில்லை என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். இந்த வித்தியாசத்தை அவன் உணர்ந்தான். ஆனால் சப்தத்தை ஒழிக்க இவ்வித்தியாசம் பயன்படவில்லை. அது அம்மாதிரிக் கேட்கவில்லை என்று அவனால் நிச்சயம் செய்யமுடியவில்லை. அடுத்த அறையில் யாரோ மிஷினை உபயோகிப்பதுபோல் நிச்சயமாகத் தெரிந்தது. அதில் சந்தேகமில்லை. நம்பிக்கையற்ற செவிகளுக்கு உண்மையை எடுத்துக் காண்பிப்பது போல் எழுந்து படுக்கை மீது உட்கார்ந்தான். கண்களை மூடியவன், தனது உணர்வு முழுவதையும் செவியின் செயலில் நிறுத்தினான். அவனது உணர்வுப் புலன் முழுவதும் பரிபூரணமாக சங்கின் உள்வளைவுகள் போன்ற காதின் சுழிப்பு முனையான கேந்திர ஸ்தானத்தில் நிலைத்தது. அப்போது உயிர் நீங்கினால் அது செவியின் வழியாகவே வெளிப்படவேண்டும் என்று அவன் நினைத்தான். இவ்வாறு கேட்பில் லயித்த அவனது செவிகள் இயற்கையாக உண்மையாகக் கேட்கும் சப்தத்தைப் பிரித்து உணர்ந்தது. ஜன்னலுக்கு வெளியே கேட்கும் மரக்கிளைகளின் சலசலப்பு, பின் உள் வீட்டில் கேட்கும் சிறுசிறு சப்தங்கள், நடுநிசிக்கு அப்புறம் வீட்டில் எல்லோரும் படுத்தபின்பும், வீடு நிசப்தமாக இருப்பதில்லை. வீட்டில் தட்டுமுட்டுகள், சுவர்கள் மெதுவாக அசைகின்றன; ஏதோ ஓர் பிரம்மாண்டமான பிராணி தனது தூக்கத்தில் ஏற்பட்ட கனவுகளில் உதறிக்கொள்வது மாதிரி. வீட்டினுள் அவனுக்கு ஒன்றும் கேட்கவில்லை. நிசப்தம் அவனது காதுகளில் பஞ்சுவைத்து அடைத்ததுபோல், அவனைச் செவிடாக்கியது. திடீரென்று காது செவிடாகிவிட்டதோ என்ற சந்தேகம். விரல்களைச் சுடக்கு விட்டுப் பார்த்துக்கொண்டான்; அமைதியான இரவில் படுக்கையில் உட்கார்ந்து சுடக்குவிட்டுக் கொண்டிருப்பதும் விசித்திர அனுபவந்தானே! அந்தச் செயலில் ஒரு சூட்சும அர்த்தம் இருக்கிறது. ஆனால் அச்சமயத்தில் அது என்னவென்று அவனுக்கு நினைவுக்கு வரவில்லை. ஒருவரைத் துச்சமாகக் கருதுவதற்கா? - அச் சமிக்ஞை எதற்கென்று தெரியவில்லை. ஆமாம். அறையில் ஒருவரும் இல்லை. தையல் மிஷினின் மேல்பாகத்தை மரப்பெட்டி மூடியிருந்தது. அதன் சக்கரமும் பாதமும் அசைவற்று நின்றன. அவ்விடத்தில் லூயிஸாவின் உருவத்தைச் சிருஷ்டித்து நிறுத்த அவனால் முடியவில்லை. பல வருஷங்களாக அவளைப் பற்றிச் சிந்தனை செய்யாது அவளது பணிவிடைகளை ஏற்றதின் பயனாக இருக்கலாம். தன் மனைவி வேறு குணம் படைத்தவளாக இருந்திருக்க வேண்டும் என்று அவன் சில சமயங்களில் ஆசை கொண்டதும் உண்டு. அதை அவனால் மறுக்க முடியவில்லை. எந்தக் கணவன் தான் அவ்விதமாக நினைக்காமல் இருக்கிறான்? அதனால் ஆசையில்லை என்று கூறிவிடலாகாது. லூயிஸா எவ்வளவு பாசத்தை வைத்திருந்தாலும் அவளது தனிமையை உணர்ந்திருப்பான். அவனுக்குத் தன் புத்தகங்களைப் பற்றி அவளுடன் விவாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவளது ஆசையில் பிறந்த மரியாதை அவற்றில் உள்ள குணா குணங்களை மறைத்துவிட்டது. மரியாதை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அறியாமையினால் பிறந்த மரியாதை. வீட்டின் முற்றத்தில் சாயங்காலங்களில் உட்கார்ந்து கொண்டு பூவேலைகள் சிறிது செய்வதில் தடை ஒன்றுமில்லை. அதில் என்ன தவறு இருக்கிறது. மிகவும் சங்கோஜப் பிராணிதான். தையல்காரியைக் கலியாணம் செய்துகொண்டதாக வருந்துவான். எப்பொழுதும் வீட்டில் வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது 'வீட்டின் முன்னால் போர்டு ஒன்றுதான் போடவில்லை' என்று அவளைக் கேலி செய்வது வழக்கம். அதெல்லாம் அசட்டுத்தனம். அவளுக்குத் துண்டுத் துணிகளை எல்லாம் சேர்த்துத் தைத்து உபயோகமாக்கும் திறமை இருந்தது. ஆனால் அவள் தனக்கென்று ஒன்றும் தைத்துக் கொள்வதில்லை. அவள் தனக்கென்று ஏதாவது தைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்காததால் கடைசியாக இவளுக்கு உடையணிவிக்கப் பெட்டிகளைக் கிளறிப் பார்த்தும் ஒன்றாவது அவளுக்கு ஏற்றதாக இல்லை. அதை நினைத்து எல்லாரும் அழுதார்கள். பெண்களும் தங்கள் குற்றமல்ல என்று சொல்லியழுதார்கள். அது யாருடைய குற்றம் அவளுடையதுதான் என்று அவர்களை அன்று சமாதானப் படுத்தினான். ஆனால் அவனை யாரோ தோளைப் பிடித்து அழுத்திப் பிரக்ஞையுலகில் இருத்துவதாகத் தோன்றியது. மெதுவாகச் சக்கரங்கள் சுழன்றன; மிஷினின் பாதக்குறடு மேலும் கீழுமாக அமுங்கியது. நூல் சுருணை மெதுவாக அவிழ்ந்து நீண்டது. மெதுவாகத் தையல் யந்திரம் ரீங்காரத்தை ஆரம்பித்தது. பிறகு வேகம் அதிகரித்தது. வேகம், வேகம், வேகம்! வண்டுக் கூட்டத்தின் ரீங்காரம் அறை முழுவதும் பம்மியது. யந்திரம் தீவிரமாக இதயத்தைத் தைக்க ஆரம்பித்தது. பயப்பிராந்தியால் படுக்கையினின்றும் துள்ளிக் குதித்தான். மிஷினை நிறுத்தவேண்டும். எப்படியாவது நிறுத்திவிட வேண்டும். இந்தச் சப்தத்தில் யார் உறங்கமுடியும்? தனது பெண்களைக் கூவியழைக்க நினைத்தான். எழுப்பினால் கனவு என்று தேற்றுவார்கள்; அதற்காக அவன் கூவவில்லை. இருண்ட ஹால் வழியாகப் பார்த்தான். அறையில் இருவர் நிற்பதுபோல் தெரிந்தது, மூடப்பட்ட கல்லறையில் நிற்கும் தேவதூதர்போல. அவர்கள் அவனைப் பார்த்தனர். அவர்கள் பேசவில்லை. அவனால் பேசமுடியவில்லை. பயப்பிராந்தியில் அவர்களையே நோக்கினான். பயம் அதிகரித்தது. தேவதூதரா? அல்லது தன் பெண் குழந்தைகளா? ஆனால் அசம்பாவிதம் என்ற எண்ணம் அவன் மனதை விட்டு அகலவில்லை. கனவில் நடப்பவன் போல் அத்திசையில் இழுக்கப்பட்டான். கதவின் அப்புறம் தெரிந்தது. ஆனால் கதவைத் திறக்க முடியவில்லை. அங்கு யார் தைத்துக்கொண்டிருந்தாலும், காலத்திற்கு எதிராக, விதிக்கு எதிராகத் தைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஓரங்கள் சேரவில்லை. ஊசி நுழைந்தாலும் இரண்டையும் சேர்த்துப் பிணிக்கவில்லை. சாத்தியமில்லாத காரியம் நடைபெறுகிறது. நூலற்ற தையல். என்றும் இந்த ஒலியைக் கேட்டுச் சகிக்க வேண்டுமா? இத்தனை காலம் பெண்ணின் உழைப்பின் ஒலியைக் கேட்டிருந்ததுபோல? கேட்பது அல்லது காதை அடைத்துக்கொள்வது, இதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாதா? கை முஷ்டிகளை மடக்கிக்கொண்டு கதவில் இடி இடியென்று தட்டினான். உள்ளிருந்து எழும் சப்தத்தை அமுக்கும் கதவின் படபடப்பு வீட்டை நிறைத்தது. கதவும் பூட்டும் அவனது முஷ்டி பலத்தால் ஓலமிட்டன. மிஷின் சப்தம் கேட்காதிருக்கும்வரை கதவைத் தட்டும் சப்தம் காதை நிறைத்து, உள்ளத்தை நிறைத்து உன்மத்த நிலையில் அவனைக் கொண்டு சேர்த்தது. தேக பலத்தின் குதூகலம் அவனைக் கவ்வியது. அப்பெண் உருவங்கள் அவனைக் கூக்குரலிட்டுக் கையைப் பிடித்துத் தடுக்க முயன்றான். அவனைப் பிடித்துத் தொங்கினர். கீழே இழுத்துத் தள்ளினர். அவன் தோல்வியுற்றான். மகத்தான சப்தமும் நின்றது. அப்பெண்கள் சும்மாவிருந்தனர். அவன் செவிசாய்க்க ஆரம்பித்தான். "தையல் வேலையை நிறுத்தினேன்" என்றான். காலையில் தன் குமாரத்திகளுடன் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது "மின்னாவிற்கு தையல் மிஷினைக் கொடுத்துவிடப் போகிறேன்; உங்கள் தாயாரின் ஆசையும் அப்படித்தான்" என்றான். அவர்களும் ஒத்துக் கொண்டனர். உடனே அவனுடன் மெத்தைக்கு வந்து அந்த அறையின் கதவுகளைத் திறந்தனர். "உள்ளிருந்த காற்று அப்படியே கும்மிப்போய்விட்டது" என்றனர். ஜன்னல்கள் திறக்கப்பட்டதும், அவ்வறை உயிர் பெற்றது. அங்கிருந்த சாமான்கள் காற்றில் புரண்டன. உழைத்துக் கிழமான யந்திரத்தைக் கடைசி முறையாகப் பார்த்தான். குமாரத்திகள் மோட்டாரில் அதைச் சிறிய தாயார் மின்னா வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். |