![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
தெய்வம் கொடுத்த வரம் பியோர்ண்ஸ்டர்ண் பியோர்ண்ஸன் - ஸ்வீடன் இந்தக் கதையில் வருகிறவன் தான் அவனுடைய ஊரிலேயே ரொம்பவும் பெரிய பணக்காரன். தவிரவும் அந்த வட்டாரத்திலே அவனுக்குத்தான் ரொம்பவும் சொல் சக்தி உண்டு. அவன் பெயர் தார்ட் ஓவராஸ். ஒரு நாள் அவன் உபதேசியார் வீட்டுக்குள் நுழைந்தான். அவர் படித்துக் கொண்டிருக்கும் அறையில் போய் நின்றான். அவன் முகம் வந்த ஜோலிக் கவலையைக் காட்டியது. 'எனக்கு மகன் பிறந்திருக்கிறான். அவனுக்கு ஞான ஸ்நானம் கொடுக்க வேண்டும்' என்றான். 'என்ன பெயர் வைக்கப் போகிறாய்?' 'பின் என்று - எங்கப்பா பெயர்.' 'ஓதியிட கூட யார் வரப்போகிறார்கள்?' பெயர்கள் அறிவிக்கப்பட்டன. தார்டின் உறவினரில் நல்ல பேர் எடுத்தவர்கள். 'வேறு என்ன வேண்டும்?' என்றார் உபதேசியார். அந்த மனிதன் கொஞ்சம் தயங்கினான். 'அவனுக்கு மட்டும் தனியாக ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது' என்றான். 'அதாவது ஞாயிற்றுக்கிழமை தவிர வேறு ஏதாவது ஒரு நாளில் உனக்கு எப்போ சவுகரியம்?' 'வருகிற சனிக்கிழமை பகல் பனிரெண்டு என்றால் தேவலை.' 'வேறு ஏதாவது உண்டா?' 'வேறு ஒன்றுமில்லை. அவ்வளவுதான்' என்று தொப்பியை எடுத்துச் சுழற்றிக் கொண்டு புறப்படயத்தனித்தான். உபதேசியார் எழுந்து நின்றார். 'இன்னும் வேறு ஒன்றும் இருக்கிறது' என்று கொண்டே அவனிடம் நெருங்கி வந்து அவனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு 'குழந்தை உனக்குக் கடவுள் அளித்த நல் ஆசியாக அமைவானாக. அவன் அருள்' என்றார். பதினாலு வருஷங்கள் கழிந்த பிறகு மறுபடியும் ஒரு நாள் உபதேசியார் முன்னிலையில் நின்றார். 'வயசுக்களை உடம்பிலே கொஞ்சம் கூடத் தட்டலியே' என்றார். அவனிடம் துளி மாறுதல் கூட உபதேசியாருக்குத் தெரியவில்லை. 'அதற்குக் காரணம் எனக்குத் தொல்லை எதுவும் இல்லை என்பதுதான்' என்றான் தார்ட். உபதேசியார் இதற்கு ஒரு பதிலும் அளிக்கவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு 'இப்பொழுது வந்திருப்பதற்கு என்ன விசேஷமோ?' என்று கேட்டார். 'நம்ம புத்திர பாக்கியத்தைப் பற்றித்தான். மதப்பிரவேசச் சடங்குக்காகத்தான்.' 'அவன் ரொம்பக் கெட்டிக்காரப்பயல்.' 'சர்ச்சில் அவன் எங்கே உட்காருவான் என்பது தெரிந்துகொண்ட பிற்பாடுதான் உபதேசியாருக்குக் காணிக்கை தரவேண்டும் என்று ஆசை' என்றான். 'அவன் ஒண்ணாவது இடத்தில் உட்காருவான்.' 'அப்படித்தான் சொல்லிக்கொண்டார்கள். இதோ காணிக்கை... வைத்திருக்கிறேன்.' 'என்னால் வேறு ஏதாவது தேவையா?' 'ஒண்ணுமில்லை.' தார்ட் வெளியேறினான். எட்டு வருஷங்கள் கழித்து ஒருநாள். உபதேசியார் உட்கார்ந்து படிக்கும் அறைக்கு வெளியே சந்தடி கேட்டது. கும்பலாகப் பலர் வந்து கொண்டிருந்தார்கள். தார்ட் முதலாவதாக உள்ளே நுழைந்தான். பாதிரியார் ஏறிட்டுப் பார்த்தார். உடனே அவனை அடையாளம் கண்டு கொண்டார். 'இன்னிக்குச் சாயங்காலம் ஏது பரிவாரத்தோட வந்திருக்கிறாய்? என்ன விசேஷம்?' என்றார். 'என் மகனுக்குக் கலியாண கட்டியம் அறிவிக்கணும்னு உங்களிடம் தெரிவிச்சுக்கிட வந்திருக்கேன். இதோ என் பக்கத்தில் நிற்கிறாரே குட்மன்ட், இவருடைய மகள் க்ரென் ஸ்டார்லிடனை... என் மகன் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான்' என்றான். 'ஊரிலேயே பணக்காரப் பெண் அல்லவா அவள்' என்றார் உபதேசியார். 'அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள்' என்று சொல்லிக்கொண்டு தலையைத் தடவிக் கொண்டான் குடியானவன். ரொம்பவும் ஆழ்ந்த யோசனையிலிருப்பவர்போல உபதேசியார் சிறிதுநேரம் மௌனமாக இருந்தார். பிறகு வாய் பேசாமல் சர்ச்சு ஜாபிதாவில் பெயர்களைப் பதிந்து கொண்டார். வந்தவர்கள் அதன் கீழ் கையெழுத்திட்டார்கள். தார்ட் மூன்று நோட்டுகளை எடுத்து வைத்தான். 'இதில் ஒன்றுதான் பெற்றுக்கொள்ள எனக்கு அதிகாரம் உண்டு' என்றார். 'அது எனக்குத் தெரியும். இவன் எனக்கு ஒத்தைக்கொரு மகன். கொஞ்சம் செழிப்பா நடத்த வேண்டும் என்று ஆசை.' உபதேசியார் பணத்தை எடுத்துக்கொண்டார். 'தார்ட், உன் மகனுக்காக என்னிடம் இப்படி வந்தது இது மூணாம் தடவை' என்றார். 'ஆமாம், இன்றோடு பொறுப்பு விட்டது' என்று சொல்லிவிட்டுப் பையை மடித்துக் கட்டிக்கொண்டு தார்ட் வெளியேறினான். கூட வந்தவர்களும் மெதுவாக வெளியேறினார்கள். பதினைந்து நாள் கழித்து தகப்பனும் மகனும் ஏரி மார்க்கமாக ஸ்டார்லிடனுக்குப் படகோட்டிச் சென்றார்கள். ஏரியும் அமைதியாகச் சலனமற்று இருந்தது. காற்றும் துளிக்கூடக் கிடையாது. கலியாணத்துக்கு ஏற்பாடுகள் செய்வதற்காக இவர்களிருவரும் போய்க் கொண்டிருந்தார்கள். 'இந்தக் குறுக்குப் பலகை உறமாக இல்லை' என்று கொண்டு மகன் தான் உட்கார்ந்திருந்த பலகையைச் சரிப்படுத்திச் சொருக, நேர்படுத்திச் சொருக எழுந்து நின்றான். அதே நிமிஷத்தில் அவன் நின்றிருந்த பலகை கழன்று விழுந்தது. காற்றைப் பிடிப்பதுபோலக் கைகளை உதறி விரித்து ஒரே ஓலத்துடன் ஜலத்துக்குள் விழுந்தான். 'இந்தத் துடுப்பை எட்டிப் பிடித்துக்கொள்' என்று கூச்சலிட்டபடி தகப்பன் துள்ளி எழுந்து துடுப்பை நீட்டினான். ஆனால் இரண்டொரு முயற்சிக்குள் மகன் விரைத்து விட்டான். புரண்டு சரிந்து தண்ணீருக்குள் மூழ்கினான். போகுமுன் தகப்பனைத் தைக்கும் பார்வை நெடிதாக ஏறிட்டுவிட்டு மறைந்தான். தார்ட் பிரமித்து விட்டான். தனக்கே நம்ப முடியாத சம்பவமாக இருந்தது. படகை ஆடாமல் அசையாமல் நிறுத்தி மகன் மூழ்கிய இடத்தில் ஆழத்தைத் துழாவுவது போல நோக்கினான். அவன் மறுபடியும் மேலே வராமலா போகப் போகிறான் என்ற நம்பிக்கை. அந்த இடத்தில் சில குமிழிகள் மேலே வந்தன. இன்னும் சில வந்தன. கடைசியில் பெரிதாக ஒன்று வெளிவந்து உடைந்தது. ஏரி மீண்டும் அமைதி பெற்று பளிங்கு போலாயிற்று. மூன்று பகல், மூன்று இரவுகள் தகப்பன் அன்ன ஆகாரமில்லாமல் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுப் படகோட்டுவதை ஜனங்கள் பார்த்தார்கள். மகனுடைய உடலத்தை எடுக்க ஏரியில் துழாவி அரித்துக் கொண்டிருந்தான். மூன்றாவது நாள் காலை அதைக் கண்டெடுத்துத் தன் கைகளில் ஏந்தி மலைவழியாகத் தன்னுடைய பண்ணைக்கு எடுத்துச் சென்றான். அந்த நாள் கழிந்து சுமார் ஒரு வருஷ காலம் ஆகிவிட்டிருக்கும். இலையுதிர் காலத்தில் பொழுது சாய்ந்து வெகு நேரமாகிய பின் யாரோ ஒருவன் உபதேசியார் அறையில் வெளி வாசலில் நின்று கதவைத் திறப்பதற்காகத் தாழ்ப்பாளைத் தடவுவது போலக் கேட்டது. அவர் எழுந்து போய்க் கதவைத் திறந்துவிட்டார். அப்பொழுது மெலிந்து போய் கூனும் நரையும் பட்ட ஒரு மனிதன் உள்ளே வந்தான். அடையாளம் கண்டு கொள்ளுமுன் அவனை நெடிது நேரம் உற்று நோக்க வேண்டியிருந்தது உபதேசியாருக்கு. வந்தவன் தார்ட்தான். 'ஏன் இத்தினி நேரங்கழித்து இரவில் நடமாடுகிறாய்?' என்று கேட்டார் உபதேசியார். அவர் அவன் முன்பு நின்று கொண்டிருந்தார். 'ஆமாம், நேரமாயிட்டுதுதான்' என்று சொல்லிக்கொண்டே தார்ட் ஓரிடத்தில் அமர்ந்தான். உபதேசியாரும் உட்கார்ந்தார். எதற்காகவோ காத்திருப்பதுபோல உட்கார்ந்திருந்தார். நெடிய, நெடியதொரு மௌனம் இடை நின்றது. பிறகு தார்ட் பேசினான். 'என்னிடம் இருப்பதை ஏழைகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறேன். என் மகன் பேரில் அந்தத் தருமம் தொலங்கும்படி போட்டு வைக்க வேணும்' என்றான் தார்ட். அவன் எழுந்து போய் பணத்தை மேஜை மேல் வைத்துவிட்டுத் திரும்பி வந்து உட்கார்ந்தான். உபதேசியார் அதை எண்ணினார். 'ரொம்பத் தொகையாச்சுதே' என்றார். 'இது என் பண்ணையின் பாதி விலை. அதை இன்றுதான் விற்றேன்.' உபதேசியார் வெகு நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தார். கடைசியாக ஆதரவோடு, 'இனி என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய் தார்ட்?' என்றார். 'இதைவிட ஏதாவது நல்லதிருந்தால் செய்ய' என்றான். அவர்களிருவரும் நெடுநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார்கள். தார்ட் குனிந்த தலை நிமிராமல் இருந்தான். உபதேசியார் அவன் மீது வைத்த கண் மாறாமல் அமர்ந்திருந்தார். பிறகு உபதேசியார் ஆதரவும் பரிவும் கலந்த குரலில் கனிவோடு, 'தார்ட், உம்முடைய மகன் கடைசியாக உமக்கு வாஸ்தவமான ஆசியைப் பெற்றுத் தந்திருக்கிறான் என்றுதான் நினைக்கிறேன்' என்றார். 'நானும் அப்படித்தான் நினைக்கிறேன்' என்றார் தார்ட். இரண்டு பெரிய நீர்த்துளிகள் அவன் கண்களில் பிறந்து கன்னங்கள் வழியாக மெதுவாக உருண்டோ டின. |