தேசிய கீதம்

எல்.ஏ.ஜி. ஸ்டராங் - இங்கிலாந்து

     லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில்லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது. ஒரு வினாடி நடைபாதை அதிர்ந்தது. வீட்டுக் கூரைகள் அமுங்கி நிமிர்ந்தன. தெரு முழுவதும் நாசமாகிவிடும்போல் இருந்தது. அடுத்த நிமிஷம் யாவும் முன்போல் உறைந்துவிட்டன. பரீலியின் முழங்கால்கள்தான் வளைந்தன; அவனுடைய சுவாசம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது மாதிரி இருந்தது.

     அவன் கீழே விழுமுன், அல்லது அவன் கீழே விழாது சமாளித்துக் கொள்ளுமுன், எங்கிருந்தோ, மின் வெட்டு மாதிரி ஒரு கை பாய்ந்து அவனது கரத்தைப் பிடித்து அவனைப் பக்கவாட்டில் இழுத்தது. முன்பு அத்தெருவில் ஈஸ்டர் புரட்சியின் போது ஏற்பட்ட சேதம் இன்னும் பழுது பார்க்கப்படவில்லை. அத்தெருவில் வானத்தைத் தொடும் கூரை வளையம் 'தெத்துக் கொத்தாக' முளைத்த பல் மாதிரி இருந்தது. பல கூறைகளில் உள்ள ஓட்டைகள் மரப் பலகை வைத்து மூடப்பட்டிருந்தன. நல்லகாலம் வரும், நிரந்தரமாகப் பழுது பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை போலும்!

     அதிர்ச்சியால் ஏற்பட்ட அரை மயக்கம் இன்னும் தெளியவில்லை. ஏதோ லோகமே பிளான் போட்டுத் தன்னை எதிர்ப்பதாக நினைத்துத் தட்டுத் தடுமாறிக் குளறினான். அவனைத் தாக்கியவன், கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினான்.

     "மேலே காயம் கீயம் பட்டதா?" என்று கொச்சை ஆங்கிலத்தில் திரும்பத் திரும்பக் கூறி கொண்டு, அவன் உடலைத் தடவி ஆராய்ந்தான். "நல்ல காலம்! உனக்கொன்றுமில்லை."

     கையிலிருப்பதைக் களவாட இதுவும் நூதன விதமான முறையோ என்று பரீலி தன்னை விடுவித்துக் கொள்ளத் திமிறி, பின்பக்கம் கிடக்கும் காரைக் கட்டிகளில் கால் வைத்தான்.

     "கொஞ்சம் மெதுவாக ஸார், உங்களுக்கு ஒன்றுமில்லை; இங்கே உட்காருங்கள். தெருவைப் போல இங்கே ஆபத்தில்லை. இங்கே இரண்டு பேருக்கு இடம் இருக்கிறது."

     அந்த அந்நியன் தன் மீது நம்பிக்கை ஏற்படும்படியாகப் பல்லைக் காட்டினான். பரீலிக்கு சுய உணர்வு வந்தது. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கண்டு கொண்டான். உடனிருந்தவன் க்ஷவரம் செய்துகொண்டு எத்தனையோ காலம் கழிந்திருக்க வேண்டும். அவன் மேல் படிந்திருந்த அழுக்கின் எல்லையைத் தெய்வந்தான் வரையிட வேண்டும். ஆனால் அவனுடைய முகத்தில் ஜொலித்தது சிநேகபாவம் என்பதில் சந்தேகமில்லை என்பதை பரீலி கண்டு கொண்டான்.

     பரீலி தன் உலர்ந்த உதடுகளைச் சிறிது உள் மடித்து நனைத்துக் கொண்டான். ஆனால் வாயிலிருந்து சப்தம் 'எழமாட்டேன்' என்றது. சிறிது கனைத்துக் கொண்டான்.

     "வந்தனம் நீ உதவியதற்கு. திடீரென்று ஏற்பட்டது. நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை" என்றான் மேல் நாட்டு மோஸ்தரில்.

     "அது உங்க குத்தமா? இந்தக் காலத்துலே யாருக்குத் தான் நாம் எங்கே இருக்கோம் என்று தெரியுது?" என்றான் அந்த அழுக்குடை அந்நியன்.

     இயற்கை நிலையடையவே, பரீலிக்குக் கோபம் பொங்கிப் பொங்கி எழுந்தது.

     "நான் இங்கே முப்பது வருஷத்துக்கப்புறம் வருகிறேன். நான் இந்த மாதிரி எதிர்பார்க்க - "

     எங்கோ 'பிஸ்' 'பிஸ்' என்று இருமுறை வெடிச் சப்தம் கேட்டது. மறுபடியும் அந்தத் துப்பாக்கிச் சப்தம். சாட்டையைச் சொடக்குவது போல் இச்சப்தம் சந்தில் எதிரொலிப்பதைப் பரீலி கேட்டான்.

     அந்த ஏழை அந்நியன் தோள்களைக் குலுக்கிக் குவித்துக் கொண்டான்.

     "அதோ போகிறார்கள் பாரும். எப்பொழுதும் லேட்தான்; எப்பொழுதும் வேட்டை முடிந்த பின் தான்..." என்றான் அவன்.

     அவனும் பரீலியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவனுக்கு நாடோடியின் முகக்களை; பற்களும் கண்களும் விரியத் திறந்து, ஏதோ தப்பிதம் செய்துவிட்டு மன்னிப்பைப் பெற முயற்சிக்கும் ஒரு சிரிப்பை உண்டாக்கும்... பரிதாபகரமான முகக்களை. பரீலிக்கும் தன்னை அறியாமல் சிரிப்பு வந்தது; ஆனால் அவன் மனம் எதைப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்று கோபித்துக் கொண்டது.

     அந்த நாடோடி, ஒரு நிமிஷம் மௌனமாக இருந்து இருவரையும் மறைத்திருக்கும் வரிசையிலிருந்து ஒரு பலகையை எடுத்துவிட்டு சர்வஜாக்கிரதையுடன் தலையை நீட்டினான்.

     "ஜாக்கிரதையாகப் பார்!" என்றான் பரீலி.

     "ஹு!" என்றான் அந்த நாடோடி. அவன் குரலில் கேவல உணர்ச்சி தொனித்தது. "சுடுகிறது; ஓடுகிறது! எப்பொழுதும் இதுதான்! சுடு, ஓடு! இதுதான் அவர்கள் வேதவாக்கு!"

     சில விநாடிகள், அப்புறமும் இப்புறமும் தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் மெதுவாக எழுந்து பலகையை அப்புறப்படுத்திவிட்டு வெளியேறி நின்றான். மறுபடியும் தெருவை ஆராய்ந்துவிட்டு, பரீலியைப் பார்த்துக் கூப்பிட்டான்.

     "இப்போ ஒன்றுமில்லை. நீங்கள் போகலாம்." பரீலி சிறிது ஏக்கத்துடன் வெளியில் வரும்பொழுது, "அவுங்க தாராளமாகத்தான் வெடிகுண்டெ உபயோகிச்சிருக்கானுங்க; கொஞ்சம் ரொம்பத் தாராளந்தான்!" என்றான் அந்த நாடோடி.

     பரீலி சிறிது அசட்டுத்தனமாகப் பையில் கைவிட்டுத் துழாவிக் கொண்டு நின்றான்.

     "ரொம்ப வந்தனம் - இந்த..."

     "அதுக்கென்ன பரவயில்லைங்க" என்றான் அந்த நாடோடி. அவனுடைய பல் பளிச்சென்று பிரகாசித்தது. எதிர்த் திசை திரும்பி வேகமாக ஆடி ஆடி நடந்து சென்றான். பரீலி நின்று தயங்கினான். ஒரு அரைக் கிரவுனைக் (கிரவுன்: ஐந்து ஷில்லிங் மதிப்புள்ள ஒரு நாணயம்) கையில் எடுத்துக்கொண்டு அவனைக் கூப்பிட முயற்சித்தான். என்ன நினைத்தானோ, வாயைச் சூழ் கொட்டிக்கொண்டு, தியேட்டர் இருக்கும் திசையை நோக்கி நடந்தான்.

     தெரு ஒரே காலி. அடுத்த தெருவும் அப்படித்தான். தனியாக நடந்து செல்லுவது ஏதோ ஒரு கோபுரம் விளக்கைத் தூக்கிக்கொண்டு நடப்பது போலிருந்தது. ஒவ்வொரு ஜன்னலிலும் என்ன அபாயம் ஒளிந்து கிடக்கிறதோ! எந்த வாசற்படியிலிருந்து வெடிகுண்டு விழும் என்று யார் கண்டது! ஓடாமல், மெதுவாக, சாதாரணமாக நடப்பதற்குத்தான் அவனது மனவுறுதி முழுவதையும் உபயோகித்தான்.

     பிறகு, திடீரென்று, ஜன நெருக்கமும் சந்தடியும் அதிகமுள்ள தெரு வந்தது. தானாக மெதுவாக நடக்க முடிந்தது. மூச்சும் தட்டுத் தடுமாறாமல் எப்பொழுதும் போல வந்தது. ஜனங்கள் எப்பொழுதும் போலத் தங்கள் காரியமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்களைச் சிறிது கூர்ந்து கவனித்தால், எதையோ அமுக்கி மறைத்து வைத்திருப்பது போலப் புலப்படும். சிலர் பார்வை எதற்கோ தாழ்ந்து பணிவதைக் காண்பித்தது. சிலர் விழிகளில் கள்ளக் குறுகுறுப்பு மின்னியது. வேறு சிலர் தங்களுக்கு ஏதும் தெரியாது என்பதைக் காட்டிக்கொள்ள இயற்கையாக இருப்பதுபோல் பாவனை செய்து நடந்தனர். அவர்கள் குரலின் தொனி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அவர்கள் சிரிப்பும் பேச்சும் எதையோ கேட்க விரும்பாது, அதற்கு இடங் கொடுக்காதிருக்க உபயோகப் படுத்தப்படும் ஒரு கருவி போலத் தோன்றின. ஒரு வாலிபன் - பார்த்தால் மாணவன் போலத் தெரிகிறது - எதிரில் வரும் இரு பெண்களைச் சந்தித்தான். இருவரும் இயற்கைக்கு மாறான உற்சாகத்துடன் வரவேற்றுச் சிறிது தயங்கி நின்று பேசினர். கூர்ந்து கவனித்தால், வேகமாகச் செல்ல வேண்டும் என்று மனம் துடித்தும் அதைக் கட்டுப்படுத்தி நின்று பேசுவது போலத் தெரிந்தது. பரீலியின் கண்களில் இது படாமல் இருக்கவில்லை. மறுபடியும் அவன் உள்ளத்தில் கோபம் நாகம் போலப் படம் விரித்தது. தன் எதிரில் வருகிறவர்களையெல்லாம் குற்றவாளிகள் என்று நினைத்தான் அவன். "இந்த அசட்டுத்தனத்தின் கருத்தென்ன? என்னை, பால் பரீலியை, பிறந்த ஊருக்கு வரும்படியாகப் பிரத்தியேகமாக அழைத்துவிட்டு, இம்மாதிரி முரட்டுத்தனமாக நடந்து கொள்ளுவதாவது!"

     தியேட்டர் வாசலையடையுமுன் அவன் மனம் கோபத்தணலால் புழுங்கியது. வாசலில் காவற்காரன் வரவேற்புக்குத் தலையைக் கூட அசைக்கவில்லை.

     "கடுதாசி ஒன்றும் வரவில்லை" என்றான் காவற்காரன், அவனது சமிக்ஞைக் கேள்விக்கு.

     "இந்த நாசமாய்ப் போன ஊருக்குக் கடுதாசி எப்படி வரும்?" என்று நினைத்த வண்ணம், மங்கிய ஒளியுள்ள பாதை வழியாக உட்சென்றான்.

     பாயின் என்ற மற்றொரு நடிகன், உள்ளே கண்ணாடி முன் உட்கார்ந்து முகத்தில் வர்ணத்தைத் தடவிக் கொண்டிருந்தான். தன் முன்பிருந்த கண்ணாடியில் பரீலியின் முகம் தெரிந்தது. அதைப் பார்த்தவன் அவனைத் திரும்பி நோக்கினான்.

     "ஹல்லோ. பரீலி, என்ன விசேஷம்?" என்றான்.

     "விசேஷமா? ஒன்றுமில்லை; விசேஷம் எதற்கு இருக்க வேண்டும்?"

     பாயின் தன் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு, "முகம் என்னமோ மாதிரி இருக்கிறது; அதனால் தான் கேட்டேன்" என்றான்.

     பரீலி பதில் சொல்லவில்லை. மேல் கோட்டையும், ஹாட்டையும் மாட்டிவிட்டு வந்து உட்கார்ந்தான். அவனுடைய சொந்த ஊரே அவனைத் தொந்தரவுக்குட்படுத்தியதுடன், பயப்படும்படியும் செய்து விட்டது. தலைகுனிய வைப்பவர்களை அவன் இலகுவில் மன்னித்துவிட மாட்டான்.

     பால் பரீலி தன் ஏழாவது வயதில் தன் பெற்றோருடன் டப்ளினை விட்டு வெளியேறினான். அந்த நகரத்தைப் பற்றிய நினைவு மங்கி, உணர்ச்சி என்ற அந்தி மயக்கத்தில் முழுகியது. பரீலிகள், அதாவது அவனது பெற்றோர்கள், லண்டனில் பல வருஷங்கள் வசித்தனர். அங்கு சென்ற கொஞ்ச நாட்களில் பால் ஒரு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டான். அவன், பச்சோந்தியைப் போல், சுற்றிலும் உள்ள சகபாடிகள் தன்மையைக் கற்றுக் கொண்டான். அடங்காப்பிடாரியான 'ஐரிஷ்கார'னாக இருப்பதால் லாபமில்லை. பழக்கமுள்ள உச்சரிப்புக்களை, தன்னைச் சகபாடிகள் துன்புறுத்தாமலிருப்பதற்காக, மறைக்கவும் கற்றுக் கொண்டான். எல்லாம் அவன் பார்வையில் விழும். ஒருமுறை கேட்டதை அப்படியே தொனி கூடப் பிறழாமல் மறுபடியும் சொல்ல அவனுக்குத் திறமை இருந்தது. மற்ற பையன்களைச் சிரிக்க வைக்கும் இத்திறமையால் அவர்களின் சேஷ்டைகளிலிருந்து தப்பினான். பள்ளிக்கூடம் வந்து கொஞ்ச நாட்கள் ஆகுமுன் அந்த ஸ்தாபனத்தின் 'ஆஸ்தான விதூஷகன்' ஆனான். ஒரு நாள் உபத்தியாயரைப் போல் நடித்துக் கொண்டிருக்கும்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு உதை வாங்கினான். அதிலிருந்து அவனது விதூஷகத் தன்மை குன்றின் மேல் கட்டிய கோட்டையாயிற்று.

     அவனுக்கு வயதும் பதினாறு ஆயிற்று. அவனை ஏதாவதொரு வேலையில் வைக்கலாம் என்று ஏதோ ஒரு விதமாகச் சுற்றும் முற்றும் கவனித்து வந்தனர். அப்பொழுது அவன் தகப்பனார் திடீரென்று இறந்து போனார். தகப்பனார் கொஞ்சம் செலவாளி; அதிலும் சிரமமில்லாமல் காலம் கழிக்க விரும்பியவர். அதனால் சாகும்பொழுது ஆஸ்தி என்று வைக்க ஒன்றுமில்லை என்பதில் ஆச்சரியம் இல்லை. எப்படியும் பாலுக்கு ஒரு வேலை பார்த்தாக வேண்டும், அதுவும் உடனே.

     அப்பொழுது பள்ளிக்கூடத்தில் பரீட்சை வரும் காலம். வருஷக் கடைசியில் போடும் நாடகம் ஒன்றில் அவன் நடிப்பதாக இருந்தது. தகப்பனார் இறந்து போனார் என்ற காரணத்துக்காக, ஆசிரியர்கள் அவனை நடிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். அவன் மிகவும் மன்றாடிக் கெஞ்சிக் கூத்தாடினான். அவனுடைய மனவுறுதியைக் கண்டு - அவனது வாழ்க்கையில் முன்பும் பின்பும் அந்தக் குணம் லவலேசமும் கிடையாது - அதிகாரிகள் இரங்கினர். பின்பு அவனுடைய உடும்புப் பிடியான அந்த மன்றாட்டம் சரியானது என்பது வெளியாயிற்று. நாடகத்தைப் பார்க்க வந்தவருள் ஒருவன், அந்தத் தொழிலில் இருப்பவன், பையனின் அசாதாரணத் திறமையைக் கண்டு, அவனுக்கு ஒரு வேலை கொடுத்தான். அதன் பிறகு ஸ்ரீமதி பரீலியை இணங்க வைப்பது பெரும் பாடாகி விட்டது. நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அவளும் முடிவாக இணங்கினாள்.

     இப்பொழுது பால் பரீலிக்கு முப்பத்தேழு வயசு. அட்லாண்டிக் மகா சமுத்திரத்தின் இருகரையிலும் இப்பொழுது அவனுக்குப் பெயரும் புகழும் ஏற்பட்டது. அதாவது, இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அவன் பிரபலமடைந்து விட்டான். ஆரம்பத்தில் பலவிதமான பாத்திரங்களையெல்லாம் நடித்துப் பரீட்சித்து விட்டு, கடைசியாக ஐரிஷ்கரனின் குண விஸ்தாரத்தை நடிப்பதில் தனிப் பெருமை பெற்றான். வெளிநாட்டுக்குச் செல்லும் ஐரிஷ்காரனுக்கு மற்றவர்களைத் தமாஷ்படுத்தும் குணம் உண்டு என்பது வெகுஜன வாக்கு. அது அவன் விஷயத்தில் உயர்வு நவிச்சியற்ற சாதாரண உண்மையாகியது. அந்நியர் தன்னிடம் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டான்; அதைத் தாராளமாக அளித்தான். அவனுடைய குண விஸ்தார நடிப்புக்களை உண்மைக்கு மாறானவை என்று கூறிவிட முடியாது. அவன் நல்ல திறமைசாலியான ஒரு கலை நிபுணன்; பார்த்ததும் கண்ணில் எது படும் என்பதைத் தெரிந்து கொண்டவன். அவனுடைய ஐரிஸ்கார வேஷங்கள் யாவும் குற்றம் கூறமுடியாதபடி 'பதிப்பிக்க'ப் பட்டவை. இங்கிலீஷ்காரனும் அமெரிக்க நாட்டானும் எவ்வளவு ரஸிப்பார்களோ அந்த அளவில் ஐரிஷ்காரனைப் பற்றி ஹாஸ்யமாக நடித்துக் காண்பித்தான்.

     தேசத்தின் அடிப்படையான குண பாவத்தில் எவையெல்லாம் சுருதி லயமின்மையாகப் படுகின்றனவோ அவற்றையெல்லாம் ஒதுக்கி ஒதுக்கி நடித்ததால், தனது 'மனோபாவ ஐரிஷ்கார'னுக்குச் சிறிதளவு வித்தியாசம் எங்கு தென்பட்டாலும், அதை வெறுக்கும் குணமும் அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இருந்து வந்த சச்சரவுகளைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாக அவன் கருதினான்.

     அதாவது, தான் தழைத்து வளரச் செய்த சிநேகப்பான்மை என்ற ஓர் கற்றமைப்பின் தன்மையைக் குலைக்கும் முயற்சி என்பதற்காக அவற்றை வெறுத்தான். இடையில் ஸின்பீன் இயக்கம் அயர்லாந்தில் பிறந்துவிட்டது. நாலு பேர் விருந்தினர் வந்திருக்கும்பொழுது தன் பிடிவாதத்தினால் பெற்றோரைக் கேவலப்படுத்தும் குழந்தையைப் போலப் பாவித்தான் அயர்லாந்தை.

     இங்கிலீஷ்காரர்களுக்கு ஒரு நல்லெண்ணம் ஏற்படுவதற்காகப் பால் பரீலி சிரமப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கும்பொழுது - அதாவது தன் நடிப்பின் மூலம் ஐரீஷ்காரனும் சிநேகப் பான்மைக்கு உரியவன் என்று இங்கிலீஷ்காரர் மனத்தில் உதிக்கும்படி செய்ய முயன்று கொண்டிருக்கும் பொழுது - அயர்லாந்து இப்படியா நடந்து கொள்ளுவது?

     உலகயுத்தம் என்ற ஜெர்மன் சண்டையும் வந்து பிரச்சனையைச் சிக்கலாக்கியது. நல்ல காலமாக ராணுவ உத்தியோகஸ்தர்கள், அவனுக்கு ஏதோ வியாதியிருக்கிறது என்ற காரணத்திற்காக யுத்த முனைக்கனுப்பப்படும் தளத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டனர். ஆனால், பிரிட்டிஷ் பொதுமக்களும், ஐரிஷ் ஹாஸ்ய குணபாவ நடிப்புக்களில் காண்பித்த ரஸிப்பைத் திடீரென்று இழந்துவிட்டனர். இதுவும் நல்ல விடுதலைதான் என்று பரீலி அமெரிக்காவிற்குப் பிரயாணமானான். அங்கே துறைமுகத்தில் இறங்கியதுதான் தாமதம்; புரட்சிக் கீதம் பாடிக் கொண்டு வார்த்தை மூலம் இங்கிலாந்தை மரணக் குழிக்கு அனுப்பி, போதை மயக்கச் சதிகள் வகுக்கும் பழுத்த ஒரு தேசீயக் கூட்டத்திற்குக் கனவேகமாக அழைத்துச் செல்லப்பட்டான். இவர்களுடைய பேச்சுக்களையெல்லாம் பரீலி பிரமித்திருந்து கேட்டான். அவனும் குடித்தான். கட்டு மீறிய போதை மயக்கத்தில் ஹான் - வான் ஹோஷ்ட், பூலாவோக் முதலிய தேசீய கீதங்களை அவர்களுடைய 'ஏ - ஒன்' (முதல் தர) தேசீயவாதி போலப் பாடினான். மறுநாட்காலை குடியின் போதை தெளிந்தது. இந்தத் 'தேச பக்தி' வழிகளால் பைஸா கூட லாபம் இல்லை என்பதைச் சீக்கிரத்தில் உணர்ந்து கொண்டான். இங்கிலீஷ்காரன் மனப் போக்கையுடைய, அல்லது ஏறக்குறைய அப்படிப்பட்ட, பொது ஜனங்களைப் பொறுத்ததுதான் அவனது புகழும் வெற்றியும். ஆகையால் தேசீயவாதிகளின் பேச்சுக்களுக்குச் செவியை இறுக மூடிக் கொண்டான். பிறகு இலகுவில் அவர்களை மறந்து விட்டான். சில மாதங்கள் கழித்து அவனைக் கண்டபடி திட்டி எழுதப்பட்ட ஒரு 'அநாமதேயக் கடிதம் கிடைத்ததும் ஆச்சரியமாய்த் திடுக்கிட்டான். யாரோ எழுதப் படிக்கத் தெரியாதவன் எழுதியது. அதை எடுத்துக் கொண்டு போலீஸாரிடம் ஓடினான். அதை அவர்கள் பிரமாதப்படுத்தாதது கண்டு சிறிது கோபம்; அத்துடன் சிறிது மன நிம்மதியும் கூட.

     ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புறம் லண்டன்; அங்கு வந்தவுடன் புகழ் இன்னும் பன்மடங்கு பெருகி ஓர் உறுதியான அஸ்திவாரத்தில் அமைந்தது. ஏனென்றால் அவனுடைய ஹாஸ்ய ஐரிஷ் வெய்ட்டர் (வேலைக்காரன்) நடிப்பை லண்டன் ஒரு வருஷம் முழுவதும் ஒரு நாள் விடாது சளைக்காமல் பார்த்தது. பிறகு நெடுநாள் நடைபெற்ற நீண்ட சம்பாஷணைகளுக்கப்புறம் டப்ளினில் நடிக்க ஒப்புக் கொண்டு வந்திருக்கிறான்.

     தற்போதிருக்கும் இலகுவான வாழ்க்கை நிலையை இயற்கையாகப் பரீலியின் மனது நினைத்து அப்படியே சுழல ஆரம்பித்து விட்டது. அவன் சுதேசத்திற்குத் திரும்பும்பொழுது, ஏதோ நன்மை இயற்றியதால் அடையும் தற்பெருமையுடன் கலந்த மகிழ்ச்சியைப் பெற்றிருந்தான்.

     பாவனையொன்றுமில்லை. தானும் அயர்லாந்திற்காக ஏதோ நல்ல சேவை செய்திருப்பதாக நினைத்தான். பல வருஷங்களாகத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும் நாஸூக் தெரியாத ஒரு கட்சி அவளுக்கு (அயர்லாந்துக்கு) எப்பொழுதும் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால், பரீலி, தனது சொந்த விஷயங்கள் பலவற்றைத் தியாகம் செய்து, பொதுமக்களுக்கு மனக் கசப்பு ஏற்படா வண்ணம், அவர்கள் மனத்தில் அயர்லாந்தைப் பற்றி இனிமையான எண்ணம் நிரந்தரமாக இருந்து வரும்படியாகச் சலியாது உழைத்து வந்திருக்கின்றான். ஈஸ்டர் புரட்சி, பதுங்கித் தாக்கல்... இப்பொழுது! இங்கு வந்த பிறகும் அந்தச் சிறுபான்மைக் கட்சியின் இடைவிடாத தொந்தரவுகளினால் தியேட்டருக்கு எவ்வளவு நஷ்டம்! பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே வீட்டுக்குப் போக வேண்டும் என்ற கட்டுப்பாடு. தெருக்களில் இங்கிலீஷ் சோல்ஜர்கள் நிறைந்த லாரிகளின் ஆதிக்கம். அந்த சோல்ஜர்களில் ஒருவன் நேற்று முந்திய நாள் இரவு, மரியாதையாக, ஆனால் உறுதியாக, அவனை வீடுவரையிலும் கொண்டு விட்டுச் சென்றான்.

     அப்புறம், இப்பொழுது! அவமதிப்பின் சிகரமாக இருக்கிறதே! தன்னை நடிக்கும்படி பிரத்யேகமாக வரவழைத்துவிட்டு, அதற்காகத் தான் அமைதியாகப் போகும் அந்தத் தெருவிலா வெடி குண்டை எறிவது!

     நிலைக்கண்ணாடியின் முன்பு சாய்ந்து, கண் ஓரத்தில் வயோதிகத் தன்மையைக் காட்டும் காலத்தின் கீறல்களை வர்ண மையினால் தீட்டிக் கொண்டே, "அடுத்த முறை இவர்கள் என்னை அழைத்தால், ஏமாந்து போகவேண்டாம் என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டான். எத்தனை பிரபலஸ்தர்கள், தாய்நாட்டின் அசட்டுத் தனங்களைச் சகியாது, அயர்லாந்தை விட்டு வெளியேறி வசிக்கின்றனர்! அந்த லிஸ்ட்டில் இன்னும் ஒரு பெயர் அதிகமாகும் என்று நினைத்துக் கொண்டான்.

     அன்று இரவு நாடகம் தடங்கல் ஏதுமில்லாமல் நடைபெற்றது கூட்டம் குறைச்சல்தான்; ஆனால் யாவரும் ரஸிகர்கள். வெளியில், யாரோ வாண வேட்டுக்களை விடுவது போல, இரண்டொரு சமயம் டபார் டபார் என்று சப்தம் கேட்டது. ஆனால் நடிப்பில் மனத்தைச் செலுத்திய பரீலி அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

     நாடகம் முடிந்ததும், வந்திருப்போரின் ஆசைகளைத் திருப்திப்படுத்த ஐந்து முறை திரைகளை உயர்த்த வேண்டியிருந்தது - இரண்டு முறை கோஷ்டி முழுமைக்கும்; ஒரு முறை நாடகத்தின் நான்கு பிரதம நடிகர்களுக்கும்; ஒரு முறை முக்கிய ஸ்திரீ நடிகருக்காக; இன்னும் ஒரு முறை பரீலிக்காக; ஐந்து முறையும் கரகோஷம் வானைப் பிளந்தது. வேஷத்தைக் கலைப்பதற்காகப் பக்கத்து அறைக்குச் செல்லும் பொழுது, "அவ்வளவு மோசமில்லை!" என்று நினைத்துக் கொண்டான் பரீலி. "இதென்ன கூட்டம்? அந்தப் பயல்கள் மட்டிலும் வெளியே ஒழுங்காக இருந்தால் எவ்வளவு கூட்டம் வந்திருக்கும்!"

     முகத்தைக் கழுவிக் கொண்டிருக்கும்பொழுது சகோதரத் தொழிலாளியான பாயினிடம் இவ்விஷயத்தை விளக்கிப் பேச ஆரம்பித்தான்.

     "இந்தப் பசங்களெல்லாத்தையும் ஒன்றுமில்லாமல் சாகடிக்கிறார்கள்! தொழில், வியாபாரம் எல்லாம் நாசமாகிறது. அவன்களாலே கெடுதலைத் தவிர வேறே என்ன செய்ய முடியும்! இதுக்குள்ளே அவன்களுக்குப் புத்தி வந்திருக்கும் என்று நினைக்கிறேன்."

     பாயின் முனங்கினான். எது எப்படிப் போனால் என்ன என்பது அவன் மனநிலை. வயசும் கொண்ட மட்டும் ஆகிவிட்டது. தொழிலில் அவ்வளவு திறமைசாலியுமில்லை. அவனைப் பொறுத்தவரை மாதாமாதம் கிடைக்கும் சம்பளந்தான் குறி. அதுமட்டிலும் தட்டில்லாமல் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

     தலையைச் சீவிக்கொண்டே, வீணாய்ப் போன வியாக்யானத்தை நினைத்துப் பரீலி பெருமூச்சு விட்டுக் கொண்டான். 'பாயின் கலைஞன் இல்லை. நல்லவன். சொன்னதைச் செய்யக் கூடியவன். ஆனால் கலைஞனல்லன்' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டான்.

     பரீலி, தன் வாழ்வை பாயின் ஜீவியத்துடன் ஒப்பிட ஆரம்பித்தான். நல்ல ஸ்வாரஸ்யமான பகற்கனவு.

     "வரலியா?"

     ஓவர் - கோட் அணிந்து கொண்டு பாயின் நடைப்பக்கம் நின்று கொண்டிருந்தான்.

     அவன் கேள்வி பரீலியைச் சொப்பன லோகத்திலிருந்து இழுத்தது.

     "இல்லெ! கொஞ்சம்."

     "அப்பொ - நான் வரேன்!"

     "உம், சரி!"

     பழைய சம்பவங்களை ஒவ்வொன்றாக எண்ணிக்கையிட்டுக் கொண்டே, மெதுவாக உடைகளை அணிந்து கொள்ள ஆரம்பித்தான். வெளியே வருவதற்குப் பதினைந்து நிமிஷம் ஆயிற்று.

     தெருக்களில் ஒரே இருட்டு. ஜனநடமாட்டம் இல்லை. பரீலி ஓவர் - கோட் காலரையும் உயர்த்திப் பொத்தான்களை மாட்டினான். என்ன மோசமான ஊர்! சரியான வெளிச்சங்கூட இல்லை. முனகிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான்.

     பக்கத்துத் தெருவில் 'விர்ர்' என்று சப்தம் கேட்டது. துருப்புக்கள் நிறைந்த லாரி செல்லுகிறது என்று அவனுக்குத் தெரியும். 'அதுவும் நல்லதுதான். அவர்கள் நடமாட்டமிருந்தால் பயமில்லாமல் நிம்மதியாக வீடு போய்ச் சேரலாம் - அதாவது யாரும் தன் மீது வெடிகுண்டு எறியாவிட்டால்' என்ற நினைப்பு.

     முன்பு வெடிகுண்டு எறியப்பட்ட தெருமுனை வந்தது. அதில் நுழையச் சிறிது தயக்கம். "என்ன அசட்டுத்தனம். மறுபடியும் நடக்காது!" என்ற திடநம்பிக்கை. ஒரேயிடத்தில் இரண்டு தடவை திரும்பத் திரும்ப எப்படி இடி விழும் என்ற தர்க்கத்தை நினைவுக்கு வருவித்துக் கொண்டு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான்.

     மறுபடியும் 'விர்ர்' என்ற சப்தம். இந்த முறை சப்தம் வரவர ஓங்கி நெருங்கியது, சிறிது நின்றது, அதிகமாயிற்று, மறுபடியும் நின்றது, மறுபடியும் ஓங்கியது. பக்கவாட்டில் 'கிரீச்' சென்ற பிரேக் சப்தம். மனிதக்குரலும் யந்திர ஓலமும் குழம்பி அவன் மீது முட்டி நின்றன.

     பேய்க் கனவு கண்டவன் போல் பரீலி பரக்கப் பரக்க விழித்தான். அவனைப் பார்த்துப் பல குரல்கள் ஏகோபித்து அதிகாரத் தொனியில் உறுமின; அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத உத்தரவுகளை விதித்தன. ஏதோ ஒன்று இவனுக்குப் பின்புறச் சுவரில் மோதியது. 'டிரஞ்ச் கோட்' போட்ட உருவங்கள் லாரியிலிருந்து குதித்து இவனை நோக்கி வந்தன. ஒரு ரிவால்வர் இவன் வயிற்றைக் குத்தியது. என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளுமுன், தலைக்கு மேல் கைகளை உயர்த்திய வண்ணம், பின்புறமாகக் கால் வைத்து கிராதிக் கம்பி வேலிவரை செல்ல வேண்டியதாயிற்று.

     "அந்தப் பயலிடம் துப்பாக்கியிருக்கிறதா என்று பார்!"

     எல்லோரும் சேர்ந்து அவனைத் தடவித் தடவி, பைகளைத் தட்டிச் சோதிக்க ஆரம்பித்தனர். அவர்களுடைய குரல்களிலிருந்து, அவர்கள் கைப்பக்கத்திலிருந்து, முகத்தின் பக்கம் அடிக்கும் வாடையிலிருந்து, 'முழுக்குடி' என்ற உண்மை, விளம்பரப் பலகையின் எழுத்துக்கள் போல் பரீலியின் மனத்தில் எழுந்தது.

     அவர்களுடன் எப்படி நடந்து கொள்ளுவதென்பது, எச்சரிக்கைக் குறிப்புப் போல, வார்த்தை வார்த்தையாக மனக்கண்முன் நின்றது.

     அவன் மனம் சுறுசுறுப்பாக இருந்தது. அவர்களுடைய மனங்களைவிட அவனுடையது திறமை வாய்ந்தது. வேட்டைப் பழக்கமில்லாத நாய்க்குட்டிகளின் நடுவில் நின்று இரு திசைகளையும் திரும்பிப் பார்க்கும் மான் குட்டி மாதிரி நின்றான்.

     "நீ இங்கே என்ன செய்கிறாய்?"

     "தியேட்டரிலிருந்து வீட்டுக்குப் போகிறேன்."

     "தியேட்டரிலிருந்து வீட்டுக்கா போறே! நல்லா அளக்கிரியே!"

     ஒன்றுள் ஒன்று குழம்பி ஒலிக்கும் பல குரல்கள் எழுந்தன. பல ஜோடிக் கண்கள் அவனைக் கூர்ந்து நோக்கின. அவன் மீது துர்நாற்றமடிக்கும் உச்சுவாச நிச்சுவாசம். ரிவால்வரை வயிற்றுக்கு நேராகப் பிடித்திருந்தவன், எல்லாம் ஓய்வதற்காகக் காத்திருந்தான்.

     "எல்லாத் தியேட்டருந்தான் அரைமணி நேரத்துக்கு முந்தியே மூடியிருக்குமே!"

     "நான் ஒரு நடிகன்; வேஷத்தைக் கலைத்துவிட்டு உடுத்திக் கொண்டு வர நேரமாகும்."

     "வேஷங் கலைத்து உடுத்த அரைமணி நேரமா?"

     "சில சமயத்தில் அதற்கு மேலும் பிடிக்கும்."

     "சரிதாண்டா! இனிமே உனக்கு நேரமாகமே செய்கிறேன்!" என்றான் வேறொருவன்.

     இதைக் கேட்டதும் கொஞ்சம் சிரிப்பு. அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன், விசாரணை நடத்திக் கொண்டிருந்தவன் கையைப் பிடித்து இழுத்து காதில் என்னவோ சொன்னான். இதைக் கண்ட பரீலிக்கு வயிற்றைக் கலக்கியது.

     கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவன் கையை உதறித் தள்ளினான். மற்றவர்களைவிட அவனுக்குக் கொஞ்சம் புத்தி தெளிந்திருந்தது. பரீலி தன் முழு மனத்தையும் அவன் மீது லயிக்க விட்டான். தான் பிழைத்துக் கொள்வது அவனைப் பொறுத்துத்தான் இருக்கிறது என்று உறுதி கொண்டான்.

     "நீ நடிகன் என்று சொல்லுகிறாயே, உன் பேரென்ன?"

     "பால் பரீலி."

     "அப்படிப் பேரே கேட்டது கூட இல்லையே!" என்றான் முன்பு இடைமறித்துப் பேசியவன். மறுபடியும் விசாரணை நடத்துபவன் காதில் குசுகுசுவென்று பேசினான்.

     "அப்படி ஒரு நடிகனும் இங்கே கிடையாது; எனக்கு எல்லோரையும் தெரியும்" என்றான் மீண்டும்.

     "எனக்கு இந்த ஊரில்லை. லண்டனிலிருந்து இப்போதான் இங்கு வந்தேன்" என்றான் பரீலி.

     முகக் குறி மூலம் ஒவ்வொருவர் மனப்போக்கும் என்னவென்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு முகமாகக் கவனித்தான். தன் புத்தி தெளிவாக இருப்பது எவ்வளவு சௌகரியம் என்பதை உணர்ந்தான். ரிவால்வர் வைத்திருப்பவன் தயங்குகிறான் என்பது தெளிவாயிற்று. அவன் மறுபடியும் பேசும்பொழுது தொனியில் முன்பிருந்த உறுதியில்லை.

     "இங்கே சுற்றுப் பிரயாணம் செய்கிறாயா? இப்பொழுதுதான் வந்தாயா?"

     "ஆமாம்! இங்கே வந்து நடிப்பதே இப்பொழுதுதான் முதல் தடவை."

     "லண்டனில் இருந்தா?"

     "ஆமாம்."

     "பிக்காடில்லி எப்படி இருக்கிறது?" அந்த கும்பலிலிருந்த ஒரு குரல் அவனைப் பார்த்துக் கேட்டது. பரீலி அத்திசையில் திரும்பினான்; மீறி எழும் ஆசையைக் காண்பிக்கும் அவசரத்துடன் அல்ல; அந்தக் கூட்டத்துக்குத் தலைவன் என்று இவன் ஊகித்த ஒருவனைக் கோபப்படுத்த அஞ்சினான். அந்தத் தலைவனை மரியாதையாகப் பார்த்துவிட்டு - அதாவது, அனாவசியமாக இடைக் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்பவனைப் போல, மரியாதையாகப் பார்த்துவிட்டு... "சுகமாகத்தான் இருந்து வருகிறது" என்றான்.

     "இப்போ, அங்கேயிருந்தா நல்லது!" என்றது அக்குரல்.

     "என்னுடைய இடம் லெஸ்டர் ஸ்கொயர்டா!" என்றது மற்றொரு குரல்.

     "அடே, உன் துருத்தியெ நீ ஊது, தெரியுமா!" என்றது முதல் குரல்.

     அபிப்பிராய பேதம் ஏகக்குழப்பத்தில் கொண்டு விடும்போல் இருந்தது. அவர்கள் தயங்குகின்றனர்; அவனிருப்பதை மறக்கின்றனர். 'தலைவன்' மறுபடியும் அவன் வயிற்றில் ரிவால்வர் முனையால் இடித்தான்.

     "நடிகனோ, எவனோ - யாராயிருந்தாலும் இந்த நேரத்தில் நீ தெருக்களில் அலைந்து கொண்டிருக்கக் கூடாது. இது இன்னம் உனக்குத் தெரியாதா?"

     "மன்னிக்க வேண்டும். நான் இப்போதான் வந்தேன் என்று சொல்லுகிறேன். வேஷத்தைக் கலைத்துவிட்டு நேராகத் தியேட்டரில் இருந்து வருகிறேன்!"

     "அதெல்லாம் உனக்குத்..."

     "டேய்!" - கும்பலுக்குப் பின்புறமிருந்த ஒரு முரடன் நெட்டித் தள்ளிக்கொண்டு வந்தான். "அவதான் அவ பேரென்ன - கோரா... அவகிட்ட எங்களைக் கூட்டிக்கிட்டுப் போரியா - அவதாண்டா - அவ, இப்படி இப்படி ஆட்றாளே!" என்று இடுப்பை நெளித்துக் காண்பித்தான்.

     எல்லோரும் ஒரே குரலாக இடியிடி என்று சிரித்தனர்.

     "என்னால் முடியாது என்று அஞ்சுகிறேன்" என்றான் பரீலி, ஜாக்கிரதையாக, "நான் அந்தத் தியேட்டரில் நடிக்கவில்லை. நான்..."

     "அப்படின்னாக்கா ஒன்னாலே தம்பிடிக்கிப் பிரயோஜனமில்லை." தலைவனைத் திரும்பிப் பார்த்து, "அந்தப் பயலெ தீத்துப்புடு; அவனாலே தம்பிடிக்கிப் பிரயோசனமில்லை!" என்றான்.

     தலைவன் தயங்கினான்.

     "எங்கே குடியிருக்கே?" என்றான் பரீலியைப் பார்த்து.

     "நோலான் தெருவிலே. இந்தச் சந்துக்கு இரண்டாவது சந்திலே."

     "அப்படியா சரி." ரிவால்வரைப் பைக்குள் வைத்துக்கொண்டு, விலகி நின்றான். "நோலான் தெருவுக்குப் போ! மூன்று நிமிஷம் கொடுக்கிறேன்; அதற்குள்ளே போகாட்டா ஜாக்கிரதை! சரிதாண்டா, போ!"

     "டேய்! இங்கே வாடா!" அந்த முரடன் பரீலி தோளைப் பிடித்து நெட்டித் தள்ளிக்கொண்டு சென்றான். தன்னை விடுவித்துக் கொள்ளப் பரீலி முயன்றான்.

     "தெரு இந்தப் பக்கமில்லே, அப்படிப் போ..." பின்புறத்தில் படார் என்று ஒரு பூட்ஸ் கால் அடித்துக் குப்புறத் தள்ளியது. நல்ல காலம், சமாளித்துக்கொண்டு விழாமல் ஓடினான். அவர்களது சிரிப்பும், அசங்கிய வார்த்தைகளும், நடமாட்டமற்ற அந்தத் தெருவில் எதிரொலித்தன.

     அவன், அடுத்து எதிர்ப்பட்ட சந்தில் நுழைந்து திரும்பி, நான் குடியிருந்த வீட்டை நோக்கி ஓடினான். ஓடும்போது மறுபடியும் லாரி புறப்படும் சப்தம் கேட்டது.

     இந்தச் சம்பவம் பரீலியின் கோபத்தை அதிகரித்தது; ஆனால் பொதுப்படையாக்கியது. இதுவரை தன் தேசவாசிகளான புரட்சிக்காரர் மீது கோபங்கொண்டிருந்தான். இப்பொழுதோ இந்த இடத்தின் பேரிலேயே கோபம். அவன் நெஞ்சில் ஆழமாகப் பயம் தட்டியது. எப்பொழுதும் அவனை விட்டு அகலாத வழக்கமாயுள்ள விவேகம், அபாயத்தின் எல்லைக் கோடுகளை அவன் அணுகிவிட்டான் என்பதைத் தெளிவாக எடுத்து உணர்த்தியது; ஆனால் அதைப் பற்றியே மனத்தைக் குழப்பி அங்கலாய்த்துக் கொண்டிருக்க அவன் வெகுவாக விரும்பவில்லை. தன் தொழிற் பெருமைக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணிப் பிரமாதமாகக் கவலை கொண்டான். அவன் அவமானப் படுத்தப்பட்டான். உயிர் தப்பியது அதிர்ஷ்டவசந்தான். ஆனால் சீர்தூக்கிப் பார்க்கும்பொழுது, அவமானம் அதைவிட எத்தனையோ மடங்கு பிரமாதமாகத் தெரிந்தது அவனுக்கு. அவனை அவமதித்தது இங்கிலீஷ்காரர்கள். இவ்விபரத்தை அவன் மறந்துவிட விரும்பினான். சகிக்கக் கூடாத சம்பவங்கள் டப்ளினில் நடந்து விட்டன; கூடிய சீக்கிரத்தில் அதை விட்டுப் புறப்பட்டால் போதும் என்று ஆகிவிட்டது அவனுக்கு. இனி திரும்பவும் வரவே கூடாது.

     மறுநாட் காலை தெருக்களில் செல்லும்போதெல்லாம் சர்வ ஜாக்கிரதையாக ஜனநெருக்கடி அதிகமாக உள்ள பாதைகள் வழியாகவே சென்றான். கிராப்டன் தெருவிலுள்ள ஒரு ஹோட்டலில் காப்பி; வழிநெடுக மிகுந்த உற்சாகத்துடன் செல்லும் ஜனக் கூட்டத்தைக் கண்டால் ஒரு வெறுப்புற்ற பார்வை; மத்தியானம் சாப்பிடும்பொழுது அவன் குடியிருந்த வீட்டுக்காரி, முந்திய இரவு நடந்த கலாட்டாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

     அப்புறம், அதிகாலையிலிருந்து வரப்போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்த மழை. பரீலி எங்கும் போகாமல் வீட்டிலேயே உட்கார்ந்து வாசித்துக் கொண்டும், கடிதங்கள் எழுதியும், பொழுதைக் கழித்தான். விலாசதாரர்களுக்கெல்லாம், சங்கேதமாக, இக்கலகத்தைப்பற்றிக் குறிப்பிட்டான். 'காகிதத்தில் எழுதிவைப்பது அபாயம்; நேரில் விஸ்தாரமாகச் சொல்லுவது நலம்' என்று சூசிப்பித்தான்.

     மாலை ஆறு மணி சுமாருக்கு மழை ஓய்ந்தது. மேகத்திரை சிறிது விலகி, மேகத்தால் கழுவப்பட்ட நிர்மலமான நிலவொளியைச் சிறிது காண்பித்தது. வானத்தில் மேகப்பிளவு அகன்றது; உள்ளே சிவந்தது; நகரத்தின் சிகரங்களில் முட்டிக் கொள்ளுமோ என்ற நிலையில் காணப்பட்ட சூரியன், தன் கடைசிச் சந்தர்ப்பத்தை உபயோகித்து வான வீதியில் தன் ஒளிச் சொத்துக்களை எல்லாம் அப்படியே அள்ளிக் கொட்டினான். பளிச்சென்று சுவரில் விழுந்த ஒளித் துண்டம் பரீலியை எழுப்பியது. ஜன்னல் கதவை விரியத் திறந்து, சல்லாப்புடவை மாதிரி முகத்தில் தழுவும் மந்தமாருதத்தைப் பருகினான். வெளியே உலாவிவிட்டு, தியேட்டர் பக்கத்தில் எங்காவது ஒரு ஹோட்டலில் சாப்பிட்டால் போகிறது என்று தீர்மானித்து, அவசர அவசரமாக ஹாட்டையும் கோட்டையும் எடுத்துக்கொண்டு, படிக்கட்டுகளில் இறங்கியவாறே வீட்டுக்காரியிடம் வெளியே போவதாகச் சொல்லிவிட்டு, கதவைப் படார் என்று அடைத்துக் கொண்டு புறப்பட்டான். வீட்டுக்காரியின் புலம்பல் அவன் காதில் விழவில்லை.

     ஏதோ ஓர் உணர்ச்சி அவனை ஆற்றங்கரைப் பக்கம் தள்ளிக்கொண்டு சென்றது. நடைபாதையில் கல் பதித்த இறங்கு துறைப் பக்கம் அணுகியதும், வெறும் ஆனந்தத்தால் அவனது சுவாசம் தடைப்பட்டது. மறுபடியும் அதே மஹேந்திர ஜாலம்! வெறும் அழுக்கும் சகதியும் நிறைந்த லிப்பி நதி ஒரே ஒளிப்பாதையாக மாறிக் கிடந்தது. மற்றும் ஓர் அற்புதமும் நிகழ்ந்தது. எங்கிருந்தோ திடீரென்று பல குரல்கள் குழம்பிய கோஷம் வானத்தைப் பிளந்தது; மறுபடியும் வானைப் பிளக்கும் அந்தக் கோஷம்; இப்பொழுது வெற்றி முழக்கமாகி, சூரியனின் கடைசிக் கிரணத்துடன், அது கவிந்து மூடும் மேகப் படலத்தைக் கிழித்துத் துருவும் வெற்றி முயற்சியுடன் லயித்தது. அப்புறம் பக்கத்துத் தெருக்களிலிருந்து மடைதிறந்த வெள்ளம்போல மனிதக் கும்பல்; ஓர் எதிர்க்க முடியாத சக்தியால் உந்தித் தள்ளப்பட்டதுபோல் வந்து இறங்கு துறைத் தளவரிசைகள் மீது பரந்து நிறைந்தது. ஜனங்கள் பக்கத்துத் தெருக்களிலிருந்து விழுந்தடித்து ஓடி வந்தனர்; கும்பலாகவும், தனித்தனியாகவும், தள்ளாடிக் கொண்டும், பின்னிருப்போர் தள்ள முன்னிருந்தவர்கள் தடுமாறவும் ஓடி வந்தனர். ஆனால் துறையில் முன்னேறி ஒழுங்காகக் கால்வைத்து நடந்தனர். சிறிது நேரத்திற்கு முன் குழம்பிய வெறும் ஜனக்கும்பலாக ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஓடிவந்த கூட்டம், வெற்றியின் அணிவகுப்பாக மாறியது. அதே உணர்ச்சி அவர்களைத் தூண்ட, அவர்களது லயமற்ற கூச்சல் ஒழுங்குபட்டு ஐக்கியமாக, ஒரு பயங்கரத்துடன் ஓங்கியது. ஆண்களும் பெண்களுமாக ஐந்நூறு பேர், இறங்கு துறைப் பாதையின் வழியாக, தங்கள் எதிர்ப்பின் கீதமான படை வீரன் பாட்டைக் கோஷித்துக் கொண்டு சென்றனர்.

     பாட்டு, சமுத்திர கோஷம்போல உயர்ந்து பக்கத்துச் சுவர்க் கூரைகளைத் தாக்கி, நாதக் கனல்களாகச் சிதறி, ஒலி ஒளி இவற்றின் பேய்க் கனவுகளாக உதிர்ந்தன.

     பரீலி தன்னையும் மீறி ஓலமிட்டான். பக்கத்துச் சுவரை எட்டிப் பார்த்தான். அவன் உள்ளத்தில் ஏதோ ஒன்று கட்டுக்களை மீறியது. கண்களில் நீர் சுரந்தது. கோஷிக்க முயன்றான்; பாட முயற்சித்தான். கோஷ்டியின் முதல் அணி இவனண்டை வந்தது. ஒரு பெண்; தலை மயிர் குலைந்து ஒரு கண்ணை மறைத்தது. வியர்வையால் மின்னியது. அவன் பாடும்பொழுது இவன் கையை எட்டிப் பிடித்தாள். இவனும் அணிவகுப்பில் கலந்தான். மகிழ்ச்சியின் - புகழின் - ஒரு பகுதியாக இழுத்துச் செல்லப்பட்டான், அவன் இதயம் உயர்ந்தது; இதுவரை நாடக அரங்க வெற்றி அளிக்காத ஓர் குதூகலத்தின் எக்களிப்பின் உச்ச நாடியை எட்டியது.

     பரீலி அரை மைல் வரை அந்த ஊர்வலத்தோடு இழுத்துச் செல்லப்பட்டான். மாலையில் இருக்கும் வேலை நினைவுக்கு வரவே கையை இழுத்துக்கொண்டு ஒரு பக்கத்துச் சந்தில் நழுவினான். 'எங்கிருக்கிறோம்' என்பதை உணர்ந்து கொள்ள அவனுக்குச் சிறிது நேரமாயிற்று. அவனது உள்ளம் இருந்த நிலையில் அதைப்பற்றி அவன் அவ்வளவு பிரமாதமாகக் கவலை கொள்ளவில்லை. எப்படியானாலும் உத்தேசமாக நதிக்கு நேராக, அது செல்லும் திக்கில் சென்றால் வழி பிடிபட்டுவிடும் என்பது நிச்சயம். சாப்பிடக் கூட முடியவில்லை; அவ்வளவு உணர்ச்சி வேகம். அவசர அவசரமாகச் சாப்பிட்டான்.

     சமீபத்தில் தான் பங்கெடுத்துக்கொண்ட சம்பவங்களை நினைக்க உணர்ச்சித் தீ மூண்டெழுந்தது. அவற்றைப் பற்றி நினைக்கும்பொழுது மூச்சுத் திணறியது; நாடி அதிர்ந்தது. என்ன நடந்தது என்று அவனுக்கே இன்னும் தெரியவில்லை. ஆனால், இதுவரை தான் தன்னைத் தெரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்தான். அவனுள் ஏதோ விடுதலை பெற்றது - அல்ல - ஏதோ அவனை விடுவித்தது. அவனது உண்மைச் சொரூபம் அன்று வெடித்துக் கொண்டு உருப்பெற்றது.

     இந்த உணர்ச்சியை அநுபவிக்கும்பொழுதே, இதைப்பற்றித் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பொழுதே, அவனது இரண்டாவது தன்மை, நாடக அரங்கில் தன் ஒவ்வொரு இயக்கத்தையும் அதீதமாக நின்று கவனிக்கும் தன்னை, அவனது உள்ளத்தில் ஒரு மூலையில் இருந்து அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்து விட்டது. அவன் - அதாவது, அத்தன்மை - பால் பரீலி தனது தேசீய உணர்ச்சியையும், தான் பிறந்த நாட்டையும் மறுபடியும் கண்டுபிடிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தது. பரீலி தன் வாழ்க்கையிலேயே முதன் முதலாக, இந்த 'மெய்க்காப்பாளனை' எதிர்த்து, தன் இதய பூர்வமான உணர்ச்சிக்காகவும், தன் உரிமைக்காகவும், வெறும் தனி மனித ஜீவியத்திற்காகவும் போராடினான். 'இல்லவே இல்லை' என்று சொல்லிக் குனிந்த வண்ணம் முன்னேறி நடந்தான். எதையும் இரக்கமற்ற சிந்தையுடன் மேற்பார்வை செய்யும் தொழிலையே இயற்கையாகக் கொண்ட பால் பரீலியின் நடிகத் தன்மை, அவனது உள்ளத்தில் புதிதாகப் பிறந்த தேச பக்தியைக் கேலி செய்து, இலகுவில் கொன்று விட முடியும். ஆனால், அதை எதிர்த்துப் போராடினான் பால் பரீலி. அவன் உள்ளத்தில் நடைபெற்ற போராட்டம் ஏக்கத்தையே வளர்த்தது. வானத்தை அளாவிய இரவின் குளிர் அவனது உள்ளத்தைக் கவ்வியது. "உன் உணர்ச்சி இதுவரை எதிலும் நிலைத்திருந்ததில்லை, நிலைத்திருக்கவும் செய்யாது; உனக்கு இல்லாத தன்மையை ஏன் இருப்பதாகப் பாவனை செய்கிறாய்? உனது தொழில் நடிப்பு; கடைசி வரை அதோடு இருந்துகொள், போதும்!" என்றது அந்த விகாரப் புத்தி.

     உள்ளத்தின் உணர்ச்சி வேகத்தைக் குளிரவைக்க முயலும் இந்த விபரீத விவேகத்தை அமுக்கிக் கொல்ல மல்லாடிக்கொண்டு நடக்கும் பரீலி ஒரு மூலையில் திரும்பினான். சோல்ஜர்களும் தனித் தனியாக அங்கொருவர் இங்கொருவராக, ரஸ்தாவின் பாதசாரித் தளங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் நிற்கின்றனர் என்ற நினைப்பு எழாமலே, பரீலி, முன் வந்த வழியில் தொடர்ந்து நடந்தான். ஆனால் அவர்கள் இருக்கும் தெருக்களை விலகிச் சென்றான். அடுத்தபடி அவன் செல்ல விரும்பிய பாதை ஒரு சிறு சந்து. வழியில் வெளிச்சம் இல்லை. ஆனால் சந்தின் மறுகோடி நன்றாகக் கண்ணுக்குத் தெரிகிறது. தைரியமாக உள்ளே நுழைந்தான். வீட்டுக் கூரைகள் சந்தின் மேல் கவிந்து அமுக்க முயல்வது போல நின்றன. பாதிவழி சென்றதும், 'ஏண்டா இந்த வழியாக வந்தோம்' என்றாகிவிட்டது பரீலிக்கு! நின்றான். வீடுகள் அவன் உள்ளத்தின் ஓட்டங்களுக்குச் செவி சாய்ப்பது போல் நின்றன.

     திடீரென்று மறுபடியும் நின்றான். கீழ்த் தொண்டையில் பேசும் மனிதக் குரல்களின் குழம்பிய ஒலி - இரண்டு பேர் - ஆணும்பெண்ணும். சுய திருப்தியைக் காட்டும் மனிதனின் கனத்த குரல். அப்புறம் மூச்சுத் திணறிய பெண் குரல் - அதில் பயம் தொனித்தது. இவ்விருவரும் அவனுக்கு முன்னால், இருவீடுகளுக்கிடையில் ஒரு இடத்தில் நின்றிருந்தனர்.

     "இல்லை ஐயா! அப்படி நான் செய்ததே இல்லை! ஆணைப்படிக்கி..."

     "ஸ்! சத்தம் போடாதே!"

     பரீலி பதுங்கிப் பதுங்கி முன்னால் சென்றான். அந்த இருட்டில் என்ன நடக்கிறது என்று கடைசியாக அவன் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. ஒரு சோல்ஜர் ஒரு பெண்ணைச் சுவரோடு மடக்கி நிறுத்தியிருந்தான். அவனது ரிவால்வர் அவளது நெஞ்சில் குத்தியது. அவள் பயப்பிராந்தியால் பேச்சற்று, சுவரோடு சுவராக ஒண்டிப்போய் நின்றாள்.

     பரீலியின் ஜாக்கிரதா புத்தி அவனை எச்சரித்தது. "அப்படியா! என்ன நடக்கிறது பார்!" என்று மனத்தில் சொல்லிக்கொண்டான்.

     அந்த சோல்ஜரோ அவளோ பார்க்கு முன், பரீலி சோல்ஜரின் பின் பக்கமாய் பதுங்கிப் பதுங்கி நெருங்கி விட்டான். அந்தத் தடியன் குரல் கனத்தது. அந்தப் பெண்ணின் முகத்தருகில் முகம் வைத்தது போல நெருங்கி நின்று மெதுவாகப் பேசினான். அவனுக்கு இவன் நெருங்குவது காதில் விழவில்லை. அவனது தசைக் கோளங்கள் இறுகி விம்மின. பரீலி அசையாமல் பதிய வைத்து நின்றான். அந்தப் பெண்ணின் ஒரு அசைவு அவன் கண்களில் விழுந்தது. சோல்ஜரும் அதை கவனித்துவிட்டான். அவன் பேச்சு நின்றது. தலையைத் திருப்பப் போகிறான். அந்த க்ஷணத்தில் பரீலி அவன் மீது பாய்ந்தான்.

     சோல்ஜரின் இறுகிய குரல்வளையில் ஓலமொன்று வெளிவந்தது. பின்புறமாகத் தள்ளாடி வளைந்தான்; பரீலியின் கைகளைப் பிடிக்க முயன்றான். பரீலிக்கு ஆவேசமான எக்களிப்பு மிகுந்த கோபத்தைத் தவிர, எதிரியை வீழ்த்திட வேண்டிய பிளான் ஒன்றும் கிடையாது. எலியைப் பிடித்த நாய் அதை உதறுவது போல அவனை உதறினான். வலக்கையைத் தூக்கி சோல்ஜரின் மூஞ்சியில் ஒரு இறுக்கு இறுக்கினான். சோல்ஜரின் குல்லாய் அப்புறம் போய் விழுந்தது. சோல்ஜர் கத்திக் கொண்டு, முன் பக்கம் குனிந்து, பரீலியைத் தலைக்கு மேல் தூக்கி விட முயன்றான். பரீலியின் உள்ளத்தில் பயம் எழுந்தது. சுவரோடு சுவராக ஒண்டிக்கிடந்த பெண்ணின் பக்கம் தலையைத் திருப்பினான். அவனது கண்களின் வேண்டுகோளை அறிந்து கொண்டு அவள் உதவிக்கு வர முயன்றாள். அவளால் முடியவில்லை. சோல்ஜர் தனது வலது கையைப் பரீலி பக்கம் திருப்பி அவனைச் சுட்டு வீழ்த்த முயன்றான். பயம் பரீலிக்கு பலமளித்தது. கடைசி வலிப்பு மாதிரி தன் முழு பலத்தையும் உபயோகித்து, அந்த சோல்ஜரை அப்படியே அலக்காகத் தூக்கிச் சுவர்ப்புறம் தள்ளினான். அப்பெண் விலகிக் குதித்தாள். பிடிப்பை மாற்றி, பரீலி, சோல்ஜர் தலையை, ஒரு முறை, இரண்டு முறை, மூன்று முறை சுவரில் தன் முழு பலத்தோடும் மோதினான். ரிவால்வர் கையை விட்டு வழுக்கியது; தலையைப் பிடித்த வண்ணம் தரையில் விழுந்தான் சோல்ஜர்.

     புத்தி தெளிவற்றவன் போல, பரீலி விழுந்தவனையே ஒரு கணம் பார்த்து நின்றான். மறு நிமிஷம் அந்த பெண்ணைப் பார்த்து, "ஜல்தி! ஓடு!" என்றான்.

     மேல் போர்வையை இழுத்து மூடிய வண்ணம் அவள் துள்ளிச் சந்தின் வழியாக ஓடினாள். பரீலி அவளைப் பற்றிய நினைவேயில்லாமல் மறு திசையை நோக்கி ஓடினான். சந்தை விட்டுப் பெரிய தெருவுக்கு வந்ததும், இரண்டு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். ஒருவரும் இல்லை! நல்ல காலம் என்று உள்ளத்தில் மகிழ்ச்சி தட்ட வேகமாக நடக்க ஆரம்பித்தான். அவனது வலது விரல் மணிக்கட்டில் வலிக்க ஆரம்பித்தது. குனிந்து பார்த்தான். கை விரல் முழுதும், என்ன ஆச்சரியம், ஒரே ரத்தக்களரி. அங்கு நின்ற லாந்தல் கம்பத்தடியில் நின்று வெளிச்சத்தில் காயத்தைக் கவனிக்க ஆரம்பித்தான். திடீரென விறைத்து நின்றான். பூட்ஸ் சப்தம்; மனிதக் குரல். மற்றொரு சந்திலிருந்து தன்வசம் அகப்பட்டவனின் இரு சகபாடிகள் தன்னை நோக்கி வருவதைக் கண்டான். காயம்பட்ட கையைப் பையில் விட்டு மறைத்துக்கொண்டு, அவர்களை நோக்கி நடந்தான். முதலில் குமட்டலாக எழுந்த பயம், எக்களிப்பின் கூர்மை பெற்றது. "நீ அபாயத்தில் இருக்கிறாய், அபாயம்; - நிஜமான அபாயம்! இது நாடக அரங்கமல்ல; இல்லை. இது உண்மை; கடைசியாக நிஜம்; நிஜமான உணர்ச்சி; அவர்கள் உன்னை நிறுத்தினால், அடிபட்டவன் பிரக்ஞை பெற்று உதவிக்குக் கூக்குரலிட்டால், உனது அடிபட்ட விரல்களைக் கண்டால்..."

     அவர்கள் இருவரும் அவனைக் கடந்து சென்றுவிட்டனர். ஒரு சந்தேகமான, சண்டைக்காரப் பார்வை; ஆனால் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர்கள் போய்விட்டனர். இனி அபாயமில்லை. வேகமாகச் சென்றுகொண்டே திரும்பிப் பார்த்தான். ஒரு மூலை திரும்பியதும் ஓட ஆரம்பித்தான். பயம் மறுபடியும் அவனைக் கவ்வியது. ஆனால் அவன் கவலை கொள்ளவில்லை. அவன் அதைச் செய்து விட்டான்.

     வேஷம் போடுவதற்காக, மேஜையின் முன் சென்று உட்கார்ந்தான். அவனுடைய வாய் அந்தத் தேசீய கீதத்தை - படைவீரன் பாட்டை - முணுமுணுக்க ஆரம்பித்தது.