5

     ‘மங்கள பவனம்’

     மங்கள பவனம் என்ற சொல் தாதுலிங்க முதலியாரின் வீட்டைப் பொறுத்தவரை காரணப் பெயர் என்று தான் சொல்ல வேண்டும். தாலிங்க முதலியாரின் வீட்டை அப்படி அழைப்பது உயர்வு நவிற்சியாகி விட்டது. ஓர் அடுக்கு மாடி கொண்ட புதிய காரை வீடு தான் மங்கள பவனம்; எனினும் சுற்றுப்புறத்திலுள்ள பொட்டல் வெளியும், அக்கம் பக்கத்திலுள்ள தணிந்தமட்டப்பா, கூரைச் சாய்ப்பு வீடுகளும், மங்கள பவனத்தைத் தன்னிகரில்லாத் தலைவன் போல் ராஜகம்பீரத்துடன் காட்சி அளிக்க இடம் கொடுத்தன. வீட்டுக்கு முன் முகப்பில் போர்டிகோ, போர்டிகோவின் இரு பக்கங்களிலும் வீட்டின் ராஜ கம்பீரத்துக்குக் கவரி வீசுவது போல இரண்டு விசிறி வாழைக் கன்றுகள்; போர்டிகோவிலிருந்து வெளிவாசல் நோக்கிச் செம்மண் சரலிட்டுப் பரப்பிய பாதை நடை பாவாடை விரித்ததுபோல் அழகு தந்தது. அந்தப் பாதையின் இருமருங்கிலும், போர்டிகோ அருகிலும், கத்தரித்து விடப்பட்ட பச்சைப் புதர்ச் செடிகளும், பால்ஸன், மேரி கோல்டு, கிரிஸாந்தம் முதலிய அன்னிய நாட்டுப் பூஞ்செடி கொடி வகைகளும் அலங்காரமாகக் குளுமை தந்து கொண்டிருந்தன.

     செம்மண் சரல்பாதை வந்து முடியும் வெளிவாசலில் ஈயமுலாம் பூசப்பட்ட அழகிய பூ வேலைப்பாடு கொண்ட இரும்புக் கிராதி கேட்; கேட்டுக்கு இருமருங்கிலும் உள்ள சுவர்களில் இரண்டு பித்தளைத் தகடுகள் பதிக்கப் பட்டிருந்தன. பளபளவென்று மின்னும் அந்தத் தகடுகள் ஒன்றில் ‘ராவ் சாகிப் தாதுலிங்க முதலியார்’ என்றும் மற்றொன்றில் ‘மங்கள பவனம்’ என்றும் விலாசங்கள் காணப்பட்டன. இரண்டாவது உலக யுத்த காலத்தில் தாதுலிங்க முதலியார் யுத்த நிதி, தேசியப் பாதுகாப்பு நிதி முதலியனவற்றுக்கு, ராஜ விசுவாசத்தோடு உதவி ஒத்துழைத்த காரணத்தால், அப்போதைய மேன்மை தங்கிய வெள்ளைக் கவர்னர் பெருமான் உவந்தளித்த புது வருஷப் பட்டம் தான் அந்த ‘ராவ் சாகிப்’ எனினும், இந்திய தேசியத் தலைவர்களின் கையில் ஆட்சி மாறிய காலக் கட்டத்தில், நமது நாட்டில் எத்தனையோ பெரிய மனிதர்கள் தாம் அன்னியராட்சியில் பெற்றிருந்த பட்டங்களையும் விருதுகளையும், உதறித் தள்ளி, தமது ‘தேச பக்தி’ விசுவாசத்தையும் ‘தியாக’ புத்தியையும் விளம்பரப்படுத்திக் கொண்டது போலவே, தாதுலிங்க முதலியாரும் யுத்தப் பிற்காலத்தில் அந்தப் பட்டத்தைத் திரஸ்கரித்து விட்டார். எனினும் அந்தப் பித்தளை போர்டில் மட்டும் அந்தப் பட்டம் அழிக்கப்படவில்லை. அது அழிக்கப் பெறாமல் இருந்ததும் ஒரு வகையில் நல்லதாய்ப் போயிற்று.

     ‘ஒரு காலத்தில் ஸ்ரீமான் தாதுலிங்க முதலியார் ஒரு ராவ் சாகிப்பாக இருந்து, பின்னர் தேச பக்தியின் காரணமாக, அதைத் திரஸ்கரித்தவராக்கும்!’ என்ற வெள்ளிடை மலை உண்மையை, அவரது தியாகத்தை, அவருக்கும் பிறருக்கும், காண்கிற வேளையெல்லாம் நினைவூட்டிக் கொண்டிருக்கும் சின்னமாக, சாட்சியமாக அந்தப் போர்டு இலங்கி வந்தது.

     தாதுலிங்க முதலியார் அம்பாசமுத்திரத்திலுள்ள பரம்பரைப் பணக்காரர்களில் ஒருவர். பரம்பரைப் பணக்காரர் என்றால் அவரது மூதாதையர்களில் எவரும் ராஜா வீட்டுக் குழந்தையாக, ஒரு ராஜ்யத்துக்கு வாரிசாகப் பிறந்து விடவில்லை. நாலைந்து தலைமுறைகளுக்கு முன்பு, ரூபாய்க்கு எட்டுப்படி பத்துப்படி அரிசி விற்ற அந்தக் காலத்தில், தாதுலிங்க முதலியாரின் மூதாதையர்கள் செயலுள்ள மத்திய தர வர்க்கத்தாராகத்தான் இருந்தார்கள். எனினும், அந்த மூதாதையர்கள் தம்மிடமிருந்து பணத்தை பூதம் காத்த புதையலைப் போல் பெட்டிக்குள் பூட்டி வைக்காமல், அந்தப் பணத்தை, தொழிலில் முதலீடு செய்து குட்டி போடச் செய்யும் பொருளாதார வித்தையில் தாதுலிங்க முதலியார்தான் தமது மூதாதையரை யெல்லாம் விட, சிறந்தவராகவும் கெட்டிக்காரராகவும் விளங்கினார். மேலும் அவரது மூதாதையர்களின் காலத்தில் அவர்கள் தாது வருஷப் பஞ்சத்தின் அக விலையைப் பயன்படுத்தித்தான் ஏதோ கொஞ்சம் சொத்தைப் பெருக்க முடிந்ததே தவிர, யுத்த காலக் காண்ட்ராக்ட்கள், கள்ள மார்க்கெட், ஸ்டாக் எக்ஸ்சேஞ்சு, சூதாட்டம் போன்ற அட்டமா சித்திகளைக் கையாண்டு பெருஞ்செல்வம் திரட்ட முடியவில்லை. ஆனால் தாதுலிங்க முதலியாரோ இந்த வித்தைகளிலெல்லாம் கை வந்த சித்த புருஷராக விளங்கினார். அதன் காரணமாக, அவர் பஞ்சு நூல் ஜவுளி வியாபாரம், வீரவநல்லூர் அருகிலுள்ள உள்ளூர் முதலாளிகளின் டெக்ஸ்டைல் மில், மேற்கு மலையிலுள்ள தேயிலை எஸ்டேட், உள்ளூர் முதலாளிகள் தொடங்கிய ஒரு பாங்கியில் டைரக்டர், பங்குத் தொகை முதலீடு முதலிய பற்பல் துறைகளிலும் பணத்தை விதைத்து முறையாகக் கண்டுமுதல் பெற்று வந்தார்; அத்துடன் தர்மாம்பாளை அவர் தொட்டுத் தாலி கட்டிய புண்ணியத்தால், அவருக்கு ‘கொள்ளி முடிந்த சொத்து’ என்ற சௌபாக்கிய சித்தியும் கிட்டியது.

     திருமதி தர்மாம்பாள் செயலுள்ள குடும்பத்திலே பிறந்து செயலுள்ள குடும்பத்திலே வாழ்க்கைப்பட்டு, வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அறியாது, இருந்து சாப்பிட்டு, வாழ்ந்து அனுபவித்தவள். காதுகளில் வைரத்தோடுகள் பளீரென்று மின்ன, கொசுவம் வைத்துக் கட்டிய கொறநாட்டுப் புடவை உடுத்தி, இட்ட அடி பதிய, எடுத்த அடி தயங்க அவள் நடந்து வரும் போது, அதில் ஒரு பெருமிதமும் நிறைவும் நிரம்பித் ததும்பும். தர்மாம்பாள் வீடு நிறைந்த லக்ஷ்மியாகத்தான் விளங்கி வந்தாள். அவளுக்குத் தன் குழந்தைகளான சங்கரின் மீதும் கமலாவின் மீதும் அபார வாஞ்சை. அவர்கள் மனம் நிரம்பினால் அவள் மனம் நிரம்பிய மாதிரி.

     தர்மாம்பாளுக்கும் தாதுலிங்க முதலியாருக்கும் இருபத்திரண்டு வருஷங்களுக்கு முன்னர் செல்வச் சிரஞ்சீவி சங்கர் சீமந்த புத்திரனாகப் பிறந்த போது, அவர்கள் இருவரும் சங்கரைத் தங்கள் குலத்தை விளங்க வந்த கொழுந்தாகத் தான் கருதினார்கள். ஆனால், இப்போதோ தாதுலிங்க முதலியார் மட்டும் ஏக புத்திரனை அந்த மாதிரிக் கருதவில்லை. குலத்தை விளக்க வந்த கொழுந்தாக இருப்பதற்குப் பதிலாக, சங்கர் எங்கே கோடாலிக் காம்பாக மாறி விடுவானோ என்ற அரிச்சலும், தம் கனவுகளை யெல்லாம் பாழாக்கி விடுவானோ என்ற அங்கலாய்ப்பும் அவருக்கு இருந்து வந்தன. காரணம், சங்கர் முதலாளிக்குப் பிறந்த சின்ன முதலாளியாக இராமல், அரசியல் ஈடுபாடும், ‘அபாயகரமான’ கருத்துக்களும் கொண்டவனாக இருந்தான். அவனது அரசியல் ஈடுபாடு தாதுலிங்க முதலியாருக்குப் பிடித்த் அரசியலாக இருந்திருந்தால், அவனை அவர் இதற்குள் ஒரு ‘எம்.பி.’ யாகவோ அல்லது குறைந்த பக்ஷம் ‘எம்.எல்.ஏ.’ யாகவோ ஆக்கி விடுவதற்கு லட்சம் ரூபாய் வேண்டுமானாலும் செலவழித்திருப்பார். ஆனால் சங்கரோ என்னென்னவோ ‘இஸங்’களைப் பற்றியெல்லாம் பேசும் இளைஞனாக இருந்தான். எங்கேயோ கிடக்கும் ருஷ்யாவையும் சீனாவையும் பிரமாதப் படுத்திப் பேசும் புள்ளியாக இருந்தான். தன் தந்தை செய்யும் வியாபாரத் தந்திரங்களையெல்லாம், அவரையும் விடத் திறமையாகக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல், அவற்றை அம்பலப்படுத்தி விடக்கூடிய ஆசாமியாகவும் இருந்தான். இவ்விதக் காரணங்களால் தாதுலிங்க முதலியார் தம் மகனைப் பற்றி எப்போதும் சந்தேகாஸ்பதமான கண்ணோட்டம் தான் கொண்டிருந்தார்.

     அன்று காலை ஒன்பது மணி இருக்கலாம்.

     மங்கள பவனத்தின் போர்டிகோவில் ஒரு மோரிஸ் மைனர் கார் நின்று கொண்டிருந்தது. போர்டிகோவை அடுத்து வீட்டின் இடது புறத்திலுள்ள தாதுலிங்க முதலியாரின் காரியாலயத்தில் தாதுலிங்க முதலியார் வருமானவரி ஆபீசிலிருந்து வந்திருந்த ஒரு குமாஸ்தாவிடம் ஏதோ தணிந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்.

     “அப்பா!”

     வாசல் நடையில் வந்து நின்று குரல் கொடுத்த சங்கரின் பக்கம் திரும்பினார் முதலியார்.

     “என்ன?”

     “நாங்க இன்னிக்கி நம்ம எஸ்டேட் பக்கம் பிக்னிக் போயிட்டு வரப்போறோம்.”

     “நாங்கன்னா யாரு?” என்று சந்தேக பாவத்துடன் கேட்டார் தந்தை.

     “நான், கமலா, மணி என்று சுருக்கமாகப் பதிலளித்தான் சங்கர்.

     “ஏண்டா வயசுப் பெண்ணை எங்கேயெல்லாம் இழுத்தடிக்கிறது? ம்... போ... போ. ஜாக்கிரதையாய்ப் போயிட்டு வா. அது சரி மணியும் வர்ரானா? அவன் எதுக்கு...?”

     “துணைக்கு!” என்று இடைமறித்துப் பதில் கூறினான் சங்கர்.

     தாதுலிங்க முதலியாரின் முகம் சட்டென்ற விகாரம் பெற்றது. எனினும் ஒன்றும் சொல்லவில்லை. இரண்டு விநாடி நின்றுவிட்டு, சங்கர் தந்தையின் மௌனத்தைச் சர்வார்த்த சாதகமாக ஏற்றுக் கொண்டு வீட்டுக்குள் திரும்பினான்.

     வீட்டிற்குள் தர்மாம்பாள் தனது புதல்வி கமலாவுக்குத் தலைவாரி முடிந்து கொண்டிருந்தாள். அழகிய கனகாம்பர நிறப் பட்டுப்புடவையும், பச்சை ரவிக்கையும் அணிந்து கோலாகலமாக வீற்றிருந்தாள் கமலா. எதிரேயிருந்து நிர்விசாரமாக லதா மங்கேஷ்கரின் ஹிந்தி சங்கீதத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்தது ரேடியோ. ரேடியோவிலிருந்து எழும் கீதத்தின் இசையோடு கமலாவும் வாய்க்குள் குதூகலத்தோடு முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். தர்மாம்பாள் கமலாவின் தலையில் மல்லிகைப் பூச்சரத்தைச் சூட்டிவிட்டு நெற்றி வழித்து விரல்களைச் சொடுக்கித் திருஷ்டி கழித்தாள். அலங்காரம் முடிந்து எழுந்த கமலா எதிரிலே ஆளுயரத்துக்குத் தோன்றிய பெல்ஜியம் நிலைக் கண்ணாடி முன் நின்று, நெற்றிக்குத் திலகம் இட்டுவிட்டு, கண்களை அப்படியும் இப்படியும் உருட்டி அழகு பார்த்துக் கொண்டாள்.

     உள்ளே வந்த சங்கர் கமலாவைப் பார்த்தான்.

     “அடடே! கமலாவுக்கு இன்னிக்கு அலங்காரம் பிரமாதமாயிருக்கே!” என்று கூறிவிட்டு தன் தாயிடம் திரும்பி, “அம்மா, கமலா அசல் புதுப் பொண்ணு மாதிரி இல்லே! நீயே சொல்லு!” என்று கேட்டுவிட்டுக் கமலாவை, குறும்பாகப் பார்த்தான்.

     அண்ணனின் பேச்சைக் காதில் வாங்கிய இன்பக் கிளுகிளுப்போடு, “போ அண்ணா, உனக்கு எப்பவும் கேலிதான்!” என்று செல்லக் கோபம் காட்டி, வெட்கித் தலை குனிந்தாள் கமலா.

     சங்கர் விடவில்லை.

     “அடடே, பொண்ணுக்கு வெட்கத்தைப் பாரேன்!”

     மேலும் வாய்கொடுத்துப் பரிகாசத்துக்கு ஆளாகாமல் கமலா வீட்டுக்குள் துள்ளி ஓடி மறைந்தாள்.

     “ஏண்டாப்பா, அவ பொண்ணு மாதிரியில்லாம, பின்னே எப்படி இருப்பா? காலாகாலத்திலே அவளையும் ஒருத்தன் கையிலே பிடிச்சிக் கொடுக்க வேண்டியதுதானே” என்று வாய் நிறைந்த சொற்களோடு பதிலளித்தாள் தர்மாம்பாள்.

     “ஏம்மா, கையிலே பிடிச்சிக் கொடுக்கிறதுக்கு அவ என்ன ஆடா, மாடா? அவள் இஷ்டப்பட்டவனை அவள் கட்டிக் கொள்ளணும். நான் ஒண்ணும் விளையாட்டாச் சொல்றேன்னு நினைக்காதே. ஆமா” என்று செல்லக் குரலோடும் அர்த்த பாவத்தோடும் பேசினான் சங்கர்.

     “என்னமோடாப்பா. எல்லாம் நம்ம அந்தஸ்துக்கும் தகுதிக்கும் தகுந்த இடமாத்தான் பார்க்கணும். கமலாவின் அழகுக்கும் அந்தஸ்துக்கும் ஆயிரம் பேர் ஓடி வர மாட்டானா?”

     “வருவான், வருவான். ஆனா, கமலா சம்மதத்தையும் தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணனும். சொல்லப் போனா, அவளே மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளணும்.”

     தர்மாம்பாளுக்குச் சங்கரோடு மேலும் விவாதம் செய்து கொண்டிருக்க இயலவில்லை. எனவே சங்கரை மடக்குவதற்காக ஒரு கேள்வியைத் திடீரென்று கேட்டு வைத்தாள்.

     “அதுசரி, ஏண்டா, உன் கல்யாணம்?”

     “அதுதான் சொன்னேனே, இந்தக் காலத்திலே பெண்ணே மாப்பிள்ளையைத் தேடிக் கொள்ளணும்; மாப்பிள்ளையே பெண்ணைத் தேடிக் கொள்ளணும். அந்தக் கவலை உனக்கு எதுக்கு?” என்று சொல்லிவிட்டு, பதிலை எதிர்பாராமலே மாடிக்குச் சென்றான்.

     மாடிக்குச் சென்று சங்கர் புறப்படுவதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்த சமயத்தில் கமலா உள்ளே வந்தாள்.

     “என்ன அண்ணா, கிளம்பலாமா?”

     “கிளம்பி விட்டாயா?” என்று கேட்டுவிட்டு, சங்கர் கமலாவின் பக்கம் திரும்பினான்: “பெண்கள் அலங்காரம் செய்து கொண்டு கிளம்பறதுக்குத்தான் நேரமாகும் என்பது உலக வழக்கம். நீயானால், எனக்கு முன்னே ரெடியாகி விட்டாயே!” என்றான்.

     “அதற்கில்லை அண்ணா. அத்தானிடம் ஒன்பது மணிக்கே வந்து விடுகிறோம்ணு சொன்னேன். மணி ஒன்பதரை ஆச்சு. அத்தான் காத்துக்கிட்டிருக்கும்” என்று வெள்ளை மொழியில் பதில் சொன்னாள் கமலா.

     சங்கர் ஒரு நிமிஷம் பதில் சொல்லவில்லை. பிறகு மிகவும் அமைதியாகக் கமலாவை நோக்கிப் பேசினான்:

     “கமலா நானும், உன்னிடம் பல நாட்களாகக் கேட்கணும் என்று தான் இருந்தேன். நீயும் மணியும் பழகி வரும் உறவையும் நான் உணர்ந்துதான் இருக்கிறேன். உங்கள் கனவை நனவாக்க வேண்டுமென்பது தான் என் விரும்பம். மணியை மணந்து கொள்ள உனக்குச் சம்மதந்தானே” என்று கேட்டுவிட்டு, அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான்.

     ஆனால் கமலாவோ தன் அண்ணன் கேட்பதற்குப் பதிலே கூறாமல், தோன்றாமல் தோன்றும் மெல்லிய புன்னகையோடு, தலை குனிந்து கால் பெருவிரலால் தரையைக் கீறிக் கொண்டிருந்தாள்.

     சங்கர் மீண்டும் பேசினான்.

     “கமலா, உன் இஷ்டம் தான் என் இஷ்டம். அம்மாவைச் சம்மதிக்க வைப்பது என்பாடு. அப்பாவைச் சரிக்கட்ட வேண்டியது அம்மா பொறுப்பு. சரிதானே!”

     கமலா அதற்கும் பதில் சொல்லவில்லை.

     சங்கர் மேலும் கேட்டான்:

     “பதில் சொல்லு, கமலா. தங்கள் வாழ்க்கையையே பாதிக்கக் கூடிய இந்த ஜீவாதாரமான கேள்விக்குப் பதில் சொல்லத் தைரியமில்லாமல், நம் நாட்டில் எத்தனை பெண்கள் தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கியிருக்கிறார்கள் தெரியுமா? இதிலெல்லாம்...”

     சங்கரை மேலும் பேசவிடவில்லை கமலா.

     “சரி அண்ணா” என்று கூறிவிட்டுக் கமலா தலை நிமிர்ந்தாள்.

     “அப்படிச் சொல்லு!” என்று பரிகாசமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் பதில் சொல்லிவிட்டு, “சரி கமலா, நீ போய்க் காரில் சாமான்களையெல்லாம் எடுத்து வைக்க ஏற்பாடு செய். புறப்படு” என்று கூறி வழியனுப்பினான்.

     சிறிது நேரத்தில் மங்கள பவனத்தின் போர்டிகோவில் நின்ற மோரிஸ் மைனர் இடம் விட்டுப் பெயர்ந்து வெளிவந்தது; சங்கர் தான் காரை ஓட்டிக் கொண்டு வந்தான். கமலா பின் ஸீட்டில் குதூகலத்தோடு உட்கார்ந்திருந்தாள். புறப்பட்டதும் தெரியாமல், நின்றதும் தெரியாமல் கார் சில நிமிஷத்தில், கைலாச முதலியாரின் வீட்டு முன் வந்து நின்று, தாள லயத்தோடு ஹார்ன் செய்தது.

     “அண்ணாச்சி, கார் வந்துவிட்டுது, புப்பாய்ங் புப்பாய்ங்!” என்று கத்திக் கொண்டு, வீட்டுக்குள் ஓடிச் சென்றான், வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஆறுமுகம். சங்கரும், கமலாவும் காரை விட்டு இறங்கி உள்ளே வந்தார்கள்.

     “வாம்மா, கமலா” என்று பரிவோடு வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள் தங்கம்.

     கூடத்தில் ஒட்டடை அடித்துக் கொண்டிருந்த இருளப்பக் கோனார் “வாங்க தம்பி” என்று சங்கரை வரவேற்றார்.

     “என்னப்பா மணி, என்ன புறப்பாடு ஆச்சா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்றான் சங்கர்.

     சிறிது நேரத்தில் மணி, சங்கர், கமலா மூவரும் புறப்பட்டு வெளியே வந்தார்கள். மணியின் தம்பி ஆறுமுகம் தன் தாயிடம் போய் ஒட்டிக் கொண்டு, “அம்மா, நானும் போறேன்!” என்று அழாக்குறையாகக் கெஞ்சினான்.

     “நம்ம எல்லாம் இன்னொரு நாள் போவோண்டா” என்று அவனை ஏமாற்றினாள் தாய்.

     வெளியே வந்த சங்கர், இருளப்பக் கோனாரைப் பார்த்து, “என்ன கோனாரே, வாங்களேன். எஸ்டேட் பக்கம் போய்விட்டு வரலாம். எங்களுக்கும் துணை ஆச்சு” என்று அன்போடு கூப்பிட்டான்.

     “கொல்லன் பட்டறையிலே ஈக்கு என்ன வேலை, தம்பி? நீங்க போயிட்டு வாங்க” என்று பதில் சொன்னார் இருளப்பக் கோனார். அவரது குரல் ஏனோ அடைபட்டுப் போன மாதிரி இருந்தது.

     “அவர் வரமாட்டார்” என்று அர்த்த பாவத்தோடு ஆங்கிலத்தில் சொன்னான் மணி.

     “ஏன்?” என்று பதிலுக்கு ஆங்கிலத்தில் கேட்டான் சங்கர்.

     அதற்கு மணி எதுவும் பதில் சொல்லவில்லை.

     “புறப்படலாமே” என்று தான் மணி சொன்னான்.

     மூவரும் காரில் சென்று ஏறி அமர்ந்தார்கள்.

     இருளப்பக் கோனாரும், தங்கம்மாளும் அந்தச் ‘சின்னஞ், சிறுசுகள்’ குதூகலத்தோடு சென்று அமருவதைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்கம்மாள் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுவிட்டு, வாய்விட்டுத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்:

     “அழகான பெண்; அடக்கமான பெண். மணிக்குக் கொடுத்து வைக்கணும்!”

     அவள் மீண்டும் பெருமூச்செறிந்தாள்.

     “சாமி வரங் கொடுத்தாலும், பூசாரி தட்டிப் பறிக்காமல் இருக்கணுமே. பெரிய முதலியார் குணம் உங்களுக்கு தெரியாதாம்மா?” என்று கரகரக்கும் குரலில் பதில் சொன்னார் இருளப்பக் கோனார்.

     இருளப்பக் கோனாரும் ஏனோ ஆழ்ந்த பெரு மூச்செறிந்தார்.

     தெருவில் நின்ற காரை ‘ஸ்டார்ட்’ எடுத்துக் கொண்டே சங்கர் மணியை நோக்கிக் கேட்டான்: “என்ன மணி, கோனார் ஏன் வரமாட்டார்?”

     “அவர் கதை பெரிய கதை.”

     “என்னது? சொல்லேன்.”

     “இருக்கு. சொல்றேன்” என்று அழுத்திக் கூறினான் மணி.

     “சரி” என்று கூறிவிட்டு, காரை ஓட்டத் தொடங்கினான் சங்கர். சிறிது தூரம் சென்றதும், சங்கர் மணியைப் பார்த்து, “நானும் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்” என்றான்.

     “என்னது? சொல்லேன்.”

     “இருக்கு. சொல்றேன்” என்று மணியைப் போலவே அழுத்தலாகப் பதில் கூறினான் சங்கர்.

     சங்கர் குறிப்பிடும் விஷயத்தை உணர்ந்து கொண்ட கமலா, எதுவுமே அறியாதவள் மாதிரி கன்றிச் சிவந்த கன்னங்களோடு தலையைக் குனிந்து கொண்டாள். முன் ஸீட்டிலிருந்த சங்கரும் மணியும் அதைக் கண்டு கொள்ளவே வழியில்லை.



பஞ்சும் பசியும் : 1 2 3 4 5