முதற் பாகம்

1. பாரு வந்தாள்

     பிள்ளைக்கனி ஒன்றை ஈன்று, பசுமை, யாவும் உடலில் மின்னும் புதிய தாய்மையின் நிறைவும் பூரிப்பும் விளங்க அமைதியில் ஒன்றியிருக்கும் ஓர் அன்னையைப் போல், அந்த மலைப் பிரதேசம் பிற்பகலின் அந்த மோனத்தில் காட்சியளித்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி மலராடை புனைந்து கொள்ளை அழகின் குவியலாய்த் தோன்றும் அந்த மலைப் பிரதேசத்தில் அந்த நீலம் பூக்கும் பேராண்டு, வசந்தத்தில் எழில் வடிவாகக் குலுங்கி, வானவனின் அன்பைப் பெற்ற மலை மடந்தை, அருள்மாரியில் பசைத்துச் செழித்து அன்னையாக நிற்கும் கார்த்திகை மாசக் கடைசி நாட்கள்.

     நீலமலையன்னையின் அருமை பெருமைகள், செல்வங்கள் சொல்லில் அடங்குபவையோ? வெம்மை நீக்கித் தண்மை தரும் தன்மையினாள்; கனிகளும் கிழங்குகளும் தானியங்களும் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கித் தரும் வன்மையினாள். சந்தனமும் சாம்பிராணியும் கர்ப்பூரமும் மணம் வீசும் சோலைகளை உடையவள். அவளிடம் தேனுக்குப் பஞ்சமில்லை. அவள் வளம் கொண்டு பாலைப் பொழியும் கால்நடைச் செல்வங்களுக்கும் பஞ்சமில்லை. அண்டி வந்தவரை நிற இன பேதம் பாராட்டாமல், காபியும், தேயிலையுமாகக் குலுங்கிக் கொழித்து, ஆதரித்துச் செல்வர்களாக்கும் தகைமை அவளிடம் உண்டு.

     அழகு, எளிமை, ஆற்றல் அனைத்தையும் விளக்கும் இந்த மலையன்னையின் மடியையே தாயகமாகக் கொண்டு வாழும் மக்களுக்கு, அவள் சிறப்புகள் உடலோடும், உயிரோடும் கலந்திருப்பதில் வியப்பு உண்டோ?

     கார்த்திகை மாதத்தின் இறுதி நாளின் அந்தப் பிற்பகலில், பசுங்கம்பளத்தை விரித்தாற் போல் பரந்து கிடந்த மலைச்சரிவில் ஜோகி சாய்ந்திருந்தான். அந்தச் சரிவோடு ஒட்டி நீண்டு செல்லும் குன்றில் காணும் குடியிருப்புத்தான் அவனுக்கு உரிய இடம்; அவன் பிறந்த இடம் குடியிருப்பைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் மரகதக் குன்றுகள் சூழ தெற்கில் மட்டும் சோலை சூழ்ந்த கானகங்கள் நீண்டு சென்று, வெளி உலகச் சந்தடிகளும் வண்ண வாசனைகளும், போலி மினுக்கல்களும் அவ்விடத்தை எட்டி விடாதபடி, மீண்டும் குன்றுகளைச் சுற்றி வளைத்துக் காத்து வந்தன. முப்புறமும் மரகதக் குன்றுகள் சூழ, நடுவே விளங்கிய அந்தக் குடியிருப்புக்கு, ‘மரகதமலை ஹட்டி’ என்றே பெயர். (ஹட்டி - குடியிருப்பு)

     குன்றின் மேல் ஏறி வீடுகளுக்கு அருகில் சென்று நோக்கினால், மேற்கே மடிப்பு மடிப்பாக நீலவானின் வண்ணத்தில் யானை மந்தை போல் குன்றுகளும், அவற்றுக்கெல்லாம் சிகரமாக ‘தேவர் பெட்டா’ என்று அழைக்கப்படும் தேவர் சிகரமும் கண்கொள்ளாக் காட்சிகளாகத் திகழும். கீழ்ப்புறமும் பசுங்குன்றுக்கு அப்பால் வளைந்து வரும் கானகங்களும், நடுநடுவே வெள்ளை, சிவப்புப் புள்ளிபோல் குடியிருப்புகள் சிதறிக் கிடக்கும் மேடு பள்ளங்களும் இயற்கையன்னையின் பயங்கரம், கருணை என்னும் இரு தன்மைகளை விளக்குவன போல் தோன்றும்.

     கீழ்வானில் மலைக்கு அப்பாலிருந்து ஆதவன் எழும்பித் தேவர் சிகரத்துக்குப் பின் மறையும் வரையிலும் ஜோகிக்கு வெளியிலுள்ள நாட்களில் வீட்டு நிழலில் தங்க விருப்பம் கிடையாது. ஒன்பது வயதுச் சிறுவனாக அவனுடைய உலகம் முழுவதும் விரிந்து பரந்த புற்சரிவுகளும், குன்றின் கீழ் நெளிந்து நெளிந்து பாம்புபோல் செல்லும் அருவியின் கரையும், அந்த ஹட்டியுந்தாம். அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவனுடைய நாட்களில் துன்பத்தின் சாயையை அவன் காணவில்லை. அதிருப்தி இருந்தால் அல்லவோ துன்பம் தலைகாட்டும்? ஜோகிக்கு அன்பான அம்மை உண்டு; சீலமே உருவெடுத்த அப்பன் உண்டு; ஒத்த தோழர்கள் உண்டு. கதை சொல்ல ‘ஹெத்தை’ (பாட்டி) உண்டு. பொழுது இன்பமாய் நகர, எருமைகளும் பசுக்களும் மேய்க்கும் பணியும் உண்டு. அவனுக்கு எட்டிய உலகுக்கு அப்பால் ஆசை பரந்து போக, தூண்டும் பொருள் ஏது?

     அவனுடைய தோழர்களாக ராமன், பெள்ளி, ரங்கன், கிருஷ்ணன் முதலியோர். ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டே கீழிறங்கி அருவிக்கு அப்பால் வெகு தூரம் சென்று விட்டனர். ஜோகி அந்த ஓட்ட விளையாட்டில் களைத்துத்தான் சரிவில் சாய்ந்திருந்தான். அவர்கள் ஹட்டியைச் சேர்ந்த எருமைகளும் பசுக்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்ற வண்ணம், மண்டிக் கிடக்கும் புல்லை வெடுக்கு வெடுக்கென்று கடித்து இழுக்கும் ஒலி அவன் செவிகளில் விழும்படி, தன் காதைப் புற்பரப்போடு வளைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். அது அவனுக்கு ஒரு விளையாட்டு.

     ப்டுக் - ப்டுக் - இது சீலிப் பசு. டுப் - டுப் - இது மெதுவான மந்த கதி நீலி எருமையா?

     எழுந்து உட்கார்ந்து ஜோகி, தன் அநுமானம் சரியா என்று பார்ப்பவனைப் போல் ஓசை வந்த திசையில் பார்வையைச் செலுத்தினான்.

     சீலிப்பசு உட்கார்ந்து அசை போட்டுக் கொண்டிருந்தது. நீலி எருமையைக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் காணவில்லை. ராமன் வீட்டு எருமைக்கன்று மணி குலுங்க மேலிருந்து கீழே ஓடியது.

     தன் ஊகம் சரியல்ல என்று ஜோகி மறுபடியும் புற்பரப்பில் காதை வளைத்துக் கொண்டு படுத்தான். ப்டுக் ப்டுக்கென்ற ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த ஓசையில் அலுத்து, நீலவானைப் பார்த்துக் கொண்டு திரும்பிப் படுத்தான். கண்களை இடுக்கிக் கொண்டு, நீலவானமும் குனிந்து தன்னையே பார்ப்பது போல் எண்ணியவனாய் நினைத்துப் பார்த்தான்.

     அந்த நீலவானில் இருக்கும் சூரியனை நேர்க்கண்ணால் பார்க்க முடியாது. ஆனால், அந்தச் சூரியன் இல்லாமல் உலகம் இல்லை. அவர்கள் வணங்கும் ஈசனின் உயிர்த் தோற்றம் அந்தச் சூரியன். ஜோகியின் தந்தை லிங்கையர், காலையில் எழுந்ததும் கிழக்கு நோக்கிப் பொங்கி வரும் செங்கதிரோனையே கும்பிடுவார்.

     “ஒளிக் கடவுளே, நீ வாழி. மழையைத் தந்து மண்ணைச் செழிக்க வைக்கும் மாவள்ளலே, நீ வாழி. எங்களுக்கு உன் அருளையும் ஆசியையும் நல்குவாய்!” என்று பிரார்த்தனை கூறிக் கொண்டே, எருமைகளையும் கன்றுகளையும் அவர் அவிழ்த்து விடுவார். அவர் வீடு திரும்புகையில், சூரியன் தேவர் சிகரத்துக்கு அப்பால் சென்று விடுவான். அப்போது ஜோகியின் அம்மை மாதி வீட்டில் இருளை நீக்க ஆமணக்கு நெய்யூற்றித் தீபமாடத்தில் அகல் விளக்கு ஏற்றி வைத்திருப்பாள். இரவில் சூரியன் இல்லாத போது, வீட்டில் அவர்களுக்கு அந்தத் தெய்வத்தின் சின்னமாக விளங்குவது அந்த விளக்கு. வீட்டில் அவ்விளக்கு இல்லாவிட்டால், நிலம் விளையாது, மாடு மடி சுரக்காது என்பதையெல்லாம் ஜோகி அறிவான்.

     அவனுக்கு இருளென்றால் அச்சம் அதிகம். காடுகளில் வசிக்கும் குறும்பர் இருளில் தான் எவரும் அறியாமல் மந்திர மாயங்கள் செய்வார்கள். நாயாக, நரியாக, பூனையாக அவர்கள் வந்து மாயங்கள், தீமைகள் செய்த கதைகளை, ஜோகி ‘ஹெத்தை’ கூறக் கேட்டிருக்கிறான். அது மட்டுமா? சூரியன் இல்லாத சமயங்களான இரவுகளில் தான் சிறுத்தையும் கரடியும் பன்றியும் உலவுகின்றன. அவர்கள் பயிரைக் கடித்துப் பன்றிகள் பாழ் செய்கின்றன. சூரியன் இருந்தால், அவை வருமோ?

     இத்தகைய முடிவில் எண்ணக்கொடி வந்து நின்றதும் ஜோகிக்கு மின்னலென ஒரு கீற்றுப் பளிச்சிட்டது.

     வீட்டுக்குள் விளக்கு வைப்பது போல், நீள நெடுக, நிலத்தில், சோலையில், கொட்டிலில், ஆயிரமாயிரம் விளக்குகள் வைத்து விட்டால், மலை முழுவதும் விளக்குகளாகவே நிறைத்து விட்டால்? மரகத மலை முழுவதும், சுற்றிலும் விளக்குகள் போட்டு இருளின்றி அகற்றிவிட்டால், பகல் போல ஆகுமோ? இது போல் நீலவானம் தெரியுமோ?

     ஜோகி தன் கண்களை மூடிக் கொண்டான். அவன் கற்பனையில் அவன் உலகமெல்லாம் அகல் விளக்குகளின் ஒளி படர்ந்தது. ஆனால் வான் முழுவதும் அந்த ஒளி படருமோ? எட்டுமோ?

     அவன் கற்பனைக்கு அந்தக் காட்சியே எட்டவில்லை. உயர உயரக் கம்பங்கள் நட்டு, விளக்குகளை வைக்கலாம். ஓங்கி வளர்ந்திருக்கும் கானக நெடு மரங்களான கர்ப்பூர (யூகலிப்டஸ்) மரங்களில் விளக்குகள் பொருத்தலாம். பெரிய பெரிய மண் சட்டிகளில் நிறைய எருமை நெய்யோ, ஆமணக்கெண்ணெயோ ஊற்றிப் பெரிய திரிகள் இட்டு மலைகளின் மீதெல்லாம் வைக்கலாம்.

     குடங்குடமாய், பானை பானையாய் எண்ணெய் வேண்டும். நெய் வேண்டும். மலை முழுவதும் ஆமணக்குச் செடிகளாக நிறைய வேண்டும். எருமைகள் கூட்டங்கூட்டமாய்ப் பெருக வேண்டும். அத்தனை எருமைகளையும் காக்க எத்தனை வலிமை வேண்டும்!

     ஜோகியின் தந்தைக்குக் கைகளில் வலிமை உண்டு. அவர் எருமையின் மடியில் கை வைப்பதுதான் தெரியும்; ‘ஹோணே’ என்ற மூங்கிற் பாற்குழாயில் வெண்ணுரையாய்ப் பால் பொங்கி வரும். பழைய காலத்தில், மாடுகள் கறக்க நிறைய வலிமை வரவேண்டுமென்று வலத்தோள் பட்டையில் இரும்பைப் பழுக்கக் காய்ச்சிச் சூடு போடுவார்கள் என்று ஜோகியின் பாட்டி கதை சொல்லி அவன் கேட்டிருக்கிறான். வலியையும் வேதனையையும் பொறுத்தால் தான் வலிமை பெருகுமாம். ஆயிரமாயிரம் எருமைகளை ஒருவர் கறக்க வேண்டுமென்றால், அத்தனை பேரும் அத்தனை எருமைகளையும் காக்க வலிமை பெற வேண்டும்.

     ஜோகியின் கற்பனைகள் இத்தகைய முறையில் படர்ந்து செல்லுகையில் குறுக்கே குறுக்கே சந்தேகங்களும் புகுந்து வெட்டின. அத்தனை எருமைகளும் எங்கே மேயும்? காடுகள் எல்லாம் பசும் புல்வெளிகளாகவும், ஆமணக்குச் செடிகளாகவும் ஆகிவிட்டால், சாமை பயிரிடுவது எங்கே? தானியங்களின்றி எப்படிச் சோறு சமைக்க முடியும்? கிழங்கு போட வேண்டாமா? வெறும் மோசைக் குடித்து விட்டு நாள் முழுவதும் இருக்க முடியுமோ?

     நீண்டு கொண்டு போன கற்பனைக் கதிரின் முடிவு, இவ்விதமான நிறைவேறாத கட்டத்தில் வந்து நிற்கவே ஜோகிக்கு ஏமாற்றம் உண்டாயிற்று. யோசனைகளைக் கைவிட்டு அவன் நண்பர்களைத் தேடி ஓடுமுன், அவனுடைய நண்பர்களே ஓடி வந்தார்கள்.

     “நான் தான் முதல்” என்று ராமன் ஓடி வந்து, மாடு மேய்க்கும் குச்சியாலேயே ஜோகியைத் தொட்டான். மற்றவர்களும் இரைக்க இரைக்கக் குன்றின் மேல் வந்தனர்.

     நண்பர்களைக் கண்டதுமே ஜோகி, “கிருஷ்ணா, சூரியன் இல்லாது போனால் என்ன ஆகும்?” என்றான்.

     கிருஷ்ணன் தினமும் எருமைகள் மேய்க்க வரமாட்டான். மரகத மலை ஹட்டியிலேயே செல்வாக்கு மிகுந்த மணியகாரரான கரிய மல்லரின் பெண் வயிற்றுப் பேரன் அவன். ஜோகியை விடக் கொஞ்சம் பெரியவன். அந்த வட்டகைக்கே புதுமையாக, கீழ்மலை மிஷன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையன் அவன்.

     கிருஷ்ணன் சிரித்தான். “சூரியன் இல்லாது போனால் இரவு இருட்டு. இது தெரியாதா?”

     “ஒரு நாள் இல்லையென்றால்? சூரியன் ஒரு நாள் வரவே இல்லை என்று வைத்துக் கொள்ளேன்!”

     “போர்த்துப் படுத்துக் கொண்டு எழுந்திருக்காமல் தூங்குவோம்” என்றாள் பெள்ளி.

     அண்டை வீட்டுக் காகையின் மகன் பெள்ளி. அவனும் ஜோகியோடொத்தவன் தான்.

     “எழுந்திருக்காது போனால், எருமை கறப்பது எப்படி? இரவு நிலத்தில் முறைகாவல் காப்பவர் வீடு வருவதெப்படி? சூரியன் இல்லாமற் போனால் ஒன்றுமே நடக்காது. ‘இரிய உடைய ஈசரி’ன் அடையாளம் கண். சூரியன். அவர் கண்ணை மூடிவிட்டால் இருட்டாகவே இருக்கும்” என்றான் லோகி. (இரிய உடைய ஈசர் - பெரியவராக விளங்கும் இறைவன்.)

     “ஈசரின் கோயிலிலே எப்பொழுதும் நெய்விளக்கு எரிகிறதே? அவர் கண்ணை மூடவே மாட்டார்” என்றான் கிருஷ்ணன்.

     ரங்கன் இடி இடியென்று சிரித்தான். அவன் ஜோகியின் பெரியப்பன் மாதனின் மகன்; அங்கிருந்த எல்லோரையும் விட அவன் கொஞ்சம் பெரியவன். முரட்டுத்தனமான, முற்போக்கான யோசனைகளை அவன் சொல்லுவான்.

     “மக்குகளே, இரிய உடைய ஈசர் ஒன்றும் அந்தக் கோயிலில் இல்லை” என்றான்.

     “ஐயையோ! அபசாரம்! கோயிலிலே ஈசுவரனார் இல்லை என்கிறானே இவன்?” என்று பெள்ளி கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

     ஜோகி அவன் துணிச்சலைக் கண்டு வாயடைத்து நின்றான்.

     “பின்னே ஈசுவரனார் கோயில் எதற்கு இருக்கிற தாம்?” என்றான் கிருஷ்ணன்.

     “கல்லு, படம் இரண்டுந்தான் அங்கே இருக்கின்றன” என்றான் ரங்கன் திரும்பவும்.

     “உங்கள் வீட்டில் எருமை கறக்காது; பயிர் விளையாது” என்றான் பெள்ளி.

     “இரிய உடைய ஈசன் கோயிலிலே இருக்கிறார்; அவர் கண் சூரியன் என்று சொல்லுவது சரியா? சூரியன் கோயிலுக்குள்ளிருந்தா வருகிறான் பின்னே?”

     இந்த வாதம் ஏற்கக் கூடியதாகவே இருந்தது. ஆனால் விளங்குவதாக இல்லை.

     தனக்கு எவரும் எதிர் பேசாமல் இருக்கவே வெற்றி கண்ட ஒரு பெருமிதத்தில் ரங்கன், “சூரியன் ஒரு நாள் கூட வராமல் இருக்காது. நாம் தூங்கி எழுந்து வரும் போது மலைகள் எல்லாம் அப்படியே இல்லையா? அருவி இல்லையா? அப்படித்தான் சூரியனும்?” என்றான்.

     “மலையெல்லாம் காலையில் எழுந்து மாலையில் அமுங்குகிறதா? ஒரே இடத்தில் இருக்கிறதே? சூரியன் அப்படி இல்லையே? காலையில் அந்த இரட்டை மலைக்கு அப்பாலிருந்து வந்து, பகலெல்லாம் நகர்ந்து, தேவர் பொட்டாவுக்குப் பின்னே போகிறதே!” என்றான் கிருஷ்ணன்.

     “அட, இதுதானா பிரமாதம்? சூரியன் வராமற் போனால் இரவில் விளக்கு வைப்பதைப் போல் பெரிய பெரிய விளக்குகளை வைத்துக் கொள்வோம்” என்றான் ரங்கன், பேச்சை வளைத்து.

     “அதற்கு எவ்வளவோ நெய் வேண்டுமே!” என்று ஜோகி பிரச்னைக்கு வந்தான்.

     “அருவித் தண்ணீரையெல்லாம் எண்ணெயாக்குவோம்” என்றான் கிருஷ்ணன் சட்டென்று.

     ஜோகியின் வட்ட கண்கள் விரிந்தன. இந்த யோசனை அவனுக்குத் தோன்றவில்லையே?

     “அருவித் தண்ணீரை எண்ணெயாக்க முடியுமோ? போடா முட்டாள்!” என்றான் ரங்கன்.

     “சூரியன் வராமல் இருக்குமோ போடா, முட்டாள்!” என்றான் கிருஷ்ணன்.

     ரங்கனுக்குக் கிருஷ்ணன் தன்னை எதிர்த்து வந்தது பிடிக்கவில்லை. “டேய் யாரையடா முட்டாளென்கிறாய்? ஒல்லிப் பயலே!” என்று மேல் துணியை வரிந்து கொண்டு சண்டைக்குக் கொடி கட்டினான்.

     “முட்டாள், மட்டி!” என்றான் கிருஷ்ணன் பொறுக்காமல்.

     ரங்கன் உடனே அவன் மீது பாய்ந்தான். இருவரும் அடித்துக் கொண்டு கட்டிப் புரண்டார்கள்.

     இச்சமயத்தில், “ஜோகியண்ணா! ரே ஜோகியண்ணா!” என்ற இளங்குரல் ஒன்று மேலிருந்து ஒலித்தது. அந்தக் குரல்கேட்ட மாத்திரத்தில் கிருஷ்ணன் சட்டையை விடுத்துத் தலைத் துணியை நன்றாகச் சுற்றிக் கொண்டு மேலே ஓடினான். ஜோகி மேலே ஓடிக் கொண்டிருந்தான் முன்பேயே.

     ஐந்து பிராயம் மதிக்கத் தகுந்த சிறுமி ஒருத்தி, ஓடி வந்தாள். சிவந்த குண்டு முகம், கருவண்டு விழிகள், சுருட்டையான தலைமுடி, தோள்மீதும் நெற்றி மீதும் புரண்டது. இடுப்பில் வெள்ளை முண்டு உடுத்து, பெரிய மனுஷியைப் போல் மேல் முண்டும் போர்த்திருந்தாள். அவள் கைகளில் பளபளக்கும் புது வெள்ளிக் காப்புக்கள் பெரிய வளையமாகத் துவளத் துவள ஆடிக் கொண்டிருந்தன. அவை அவளுக்கு உரியனவாக இருக்க முடியாது. பெரிய அளவாகத் தோளுக்கு ஏறும் கடகமாக இருந்தன.

     “ஜோகியண்ணா தங்கைப் பாப்பா வந்திருக்கிறது. அம்மா, மாமி, அத்தை எல்லாரும் வந்திருக்கிறாங்க. பொரி உருண்டை, கடலை, ஆரஞ்சி எல்லாம் கொண்டு வந்திருக்கிறாங்க. வாங்க, வாங்க” என்று கூறி, அந்த அதிசயத்தைப் பார்க்க அவள் குத்துச் செடியின் பக்கம் நின்று கைகளை ஆட்டி அழைத்தாள். அவள் கைகளை வீசிய வேகத்தில், ஒரு வெள்ளிக் காப்பு நழுவி, குத்துச் செடிகளுக்கிடையில் உருண்டதை, இருந்த இடம் விட்டு நகராமலே குரோதம் பொங்கக் கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டிருந்த ரங்கன் சட்டென்று கவனித்தான்.

     பெள்ளியும் ராமனுங்கூட ஓட எல்லோருமாக மேலே ஏறி வீட்டுப் பக்கம் சென்று விட்டனர். அவர்கள் தலை மறையும் வரையில் ரங்கன் மட்டும் பார்த்துக் கொண்டே நின்றான், விவரிக்க இயலாத ஆத்திரத்தோடும் ஏமாற்றத்தோடும்.

     ‘சிற்றப்பன் வீட்டுக்குத் தினமும் எவரேனும் வருகிறார்கள். நினைத்த போதெல்லாம் ஜோகி சாப்பாடும் பொரிமாவும் வெல்லமுமாய்க் குதிக்கிறான். ஆனால் நம் வீட்டிலோ?’

     ரங்கனுக்குச் சொந்த அம்மை இல்லை. சின்னம்மைக்கும் தந்தைக்கும் எந்நேரமும் சண்டை. சண்டை போடாமல் அவனுடைய சிற்றன்னை ஒரு வேளைச் சோற்றை எடுத்து வைப்பவள் அல்ல. இருக்கும் ஒரே எருமையும் நோஞ்சல்; கன்றும் நோவு கண்டு இறந்து போயிற்று. ஏன்? ஏன் இப்படி?

     பாரு, வந்தவள், ஜோகியைத்தான் கூப்பிட்டுக் கொண்டு ஓடினாள். அந்தக் கிருஷ்ணன் பயலுக்குச் சட்டையும் தொப்பியுமாய்ப் பள்ளிக்கூடம் போகும் கர்வம். பெள்ளி பூனைக்கண் மட்டி; கல்லைக் கல் என்று சொன்னால் இரிய உடையார் சாபம் கொடுப்பார் என்றான். சை!

     சிறு உள்ளத்தில் பொருமி வந்த அனல் மூச்சுடன் அவன் திரும்பிப் பார்க்கையில், அந்த நோஞ்சல் எருமைதான் வெடுக்கு, வெடுக்கென்று புல்லைக் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. கிழப்பருவம் கோலமிட்ட, அதைக் கண்டதும் அவனுடைய ஆத்திரத்துக்கு ஓர் இலக்குக் கிடைத்து விட்டது.

     கீழிருந்த குச்சியினால் அதன் முதுகில் வீறு வீறென்று ஐந்தாறு அடிகள் வீறினான். அது உருண்டு கொண்டே மலை முகடுகளில் பட்டு எதிரொலிக்கும்படி, கத்திக் கொண்டே சரிந்தது.

     ரங்கனின் ஆத்திரம் இன்னும் தீரவில்லை. இடையில் தென்படும் குத்துச் செடிகளை முறித்துப் போட்டுக் கொண்டே மேலேறியவன், காப்புக் கிடந்த செடிப் புதரண்டையில் வந்தான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அதை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். பிறகு கீழ் நோக்கி ஓடினான்.

     சரிவில் உருண்ட எருமை, மடிந்த காலுடன் நீட்டிக் கொண்டிருந்த பாறை ஒன்றில், முன் இரு கால்கள் முட்ட, பரிதாபமாகக் கத்திக் கொண்டே இருந்தது.