உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முதற் பாகம் 4. பாலும் பாவமும் லிங்கையா வீடு திரும்பியதும், அன்று வழக்கம் போல் சுடுநீரில் உடல் கழுவிக் கொண்டு, பால்மனைக்கு வந்து, மடி ஆடை உடுத்துக் கொண்டான். ஒரே மாதிரியான ஹட்டியின் இல்லங்கள், தாழ்ந்து குறுகிய வாயில்களைக் கொண்டவையாய், இரு முக்கியமான பகுதிகளை உடையனவாய் அமையப் பெற்றவை. முன்புறம் சிறு வராந்தாவைப் போன்ற பகுதியை ஒட்டி, ஒவ்வொரு வீட்டிலும், வெளிமனை என்ற பகுதி உண்டு; அதை அடுத்து, உள்மனை என்ற பகுதியில் வாயிலுக்கு நேர்வளைவான வாயில் சமையற் பகுதியைப் பிரிக்கும் உள்மனையின் வலது ஓரத்தில், பால்மனை அல்லது பூசை அறை, சுவரோடு ஒட்டிய வளைவு வாயிலுடன் இணைந்திருக்கும். உள்மனையின் நடுவே, சமையலறை வாயிலில், சுவர்த்தண்டில், எல்லா இடங்களுக்கும் வெளிச்சம் தெரியும் வண்ணம் தீபமடம் அமைக்கப் பெற்றிருக்கும். மேலே, மூங்கிலால் ஆன சேமிப்புப் பரண்களும் உண்டு. இரவில் சூரியனின் பிரதிநிதியான விளக்குத் தெய்வத்துக்கு அஞ்சலி செய்துவிட்டு, லிங்கையா பால் கறக்கப் புறப்பட்டு விட்டான். காப்புக் காணாத செய்தியை ஆற்றாமையுடன் கணவனிடம் கூற வந்த ஜோகியின் தாய், அவன், ‘ஹொணே’ சகிதம் பால் கறக்கப் புறப்பட்டு விட்டதை அறிந்து, ஒதுங்கி நின்றாள். குழந்தையின் மடியில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்த மைத்துனன் மனைவி, சரேலென்று எழுந்து அடுப்படிக்கு ஒதுங்கினாள். பால்கறக்கும் அந்த வேளை, அவர்களுக்குப் புனிதமான வேளை. இறைவனை வழிபடுகையில் கடைப்பிடிக்கும் புனித விதிகள் அனைத்தும், பால் கறக்கும் சடங்கைச் செய்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை. கொட்டிலுக்குச் சென்று மூங்கிற்குழாய் வழிய வழியக் கறந்த பாலைப் பெரிய பானையில் ஊற்றிக் கொண்டு அவன் வரும் போது, பெண்கள் எவரும் குறுக்கே வரமாட்டார்கள்; பேச மாட்டார்கள். பால் மனையாகிய புனித அறைக்குள் அவர்கல் புகவும் மாட்டார்கள்; அப்படிப் புனிதமாகக் கறந்த பாலை, அடுப்பிலிட்டுக் காய்ச்ச மாட்டார்கள்; பேதைப் பருவம் தாண்டிய பெண்கள், அந்நாட்களில் பாலை அருந்தவும் மாட்டார்கள். பால்மனையில் பாலை எடுத்துக் கொண்டு வந்து லிங்கையா வைத்ததும், மாதி வெளியே வைத்திருந்த கலத்தில், வீட்டுச் செலவுக்கு வேண்டிய பாலை ஊற்றினான். வேறொரு கலத்தில், தமையன் வீட்டுச் செலவுக்குத் தனியாகப் பாலூற்றி வைத்தான். மீதிப் பாலைப் புரை ஊற்றி வைத்துவிட்டு, மடி ஆடையை மாற்றிக் கொண்டான். கையில் அண்ணன் வீட்டுக்கு வேண்டிய பாலுடன் அவன் புறப்பட்டதும் மாதி எதிரே வந்தாள். “பால் - அண்ணன் வீட்டுக்கா?” “ஆமாம். ஏன்?” “எல்லோரும் சொல்வதைப் போல் நீங்கள் பரிவு காட்டுவதாலேயே உங்கள் அண்ணன் குடும்பம் தழைத்துப் பிழைக்காமல் போகிறது. நீங்கள் முந்தித் தானியமாய் அளக்கிறீர்கள்; பாலாய்ச் சாய்க்கிறீர்கள். அவர்கள் ஏன் வேலை செய்கிறார்கள்?” அவள் கணவனை ஒரு நாளும் அப்படித் தடுத்ததில்லை. வெகு நாட்களாக இருந்த குடைச்சல் அன்று வெளிவந்து விட்டது. “இன்று பார்த்து உன் உபதேசத்தைச் செய்கிறாயா நீ?” “இந்தப் பாலை அண்ணி குடிக்கிறாள்!” மாதியின் குரலில் கடுமையும் கசப்பும் பீறி வந்தன. “அப்படியானால் பாலைக் கொடுக்காதே என்கிறாயா மாதம்மா? எருமை ஒன்று இருந்தது; அதுவும் காலொடிந்து கிடக்கிறது. ஓர் அப்பனுக்குப் பிறந்து ஒன்றாக ஒட்டியிருந்த கிளை ஒன்று வாட ஒன்று பார்ப்பது கேவலம். அவரவர் பாவம் அவரவர்க்கு. தடுக்காதே.” இளகிய உணர்ச்சிகளைக் குரலுடன் விழுங்கிக் கொண்டு லிங்கையா எதிர் வீட்டுக்குச் சென்றான். வெளிமனையில், தமையன் போதையுடன் விழுந்து கிடந்தான். தீப மாடத்தில் ஒளி இல்லை. எட்டு வயசு ரங்கம்மை மூலையில் உட்கார்ந்து அழுத குரலே கேட்டது. “ரங்கி, அம்மை இல்லை?” சிற்றப்பனின் குரல் கேட்டதுமே ரங்கி அழுகையை நிறுத்திவிட்டு, “அம்மை அருவிக்குப் போனாள்” என்றாள். “இந்நேரம் கழித்தா? ஏனம்மா விளக்கு வைக்க வில்லை? விளக்கெண்ணெய் இல்லையா?” உண்மையில் அவள் இருட்டில் விளக்கெண்ணெய்க் கலயத்தை நழுவவிட்டு உடைத்திருந்தால். தாய் திரும்பியதும் அவளுடைய கடுமையைச் சமாளிக்க வேண்டுமே! ரங்கி மறுபடியும் நினைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள். “தா, ரங்கம்மா ஏம்மா அழறே?” சிற்றப்பன் பரிவோடு அவள் தலையை நிமிர்த்தித் தூக்கிக் கேட்ட போது, அவள் அழுகை அதிகமாயிற்று. இந்த நிலையில் குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு நஞ்சம்மை திரும்பி விட்டாள். “விளக்கேற்றவில்லை? ஏ ரங்கி, யாரது?” என்று குரல் கொடுத்துக் கொண்டே நுழைந்தவள், வந்தவர் மைத்துனர் என்பதை உணர்ந்தாள். “மெள்ள, இருட்டு அண்ணி” என்று லிங்கையா எச்சரிக்கையிலேயே ரங்கி நழுவ விட்டிருந்த விளக்கெண்ணெய் தரையில் அவளுடைய காலுக்கடியில் புகுந்து சறுக்கச் செய்து, தலைக்குடத்தைக் கீழே தள்ளி உடைத்து ஒரு நொடியில் அங்கே ஒரு பிரளயத்தை உண்டாக்கி விட்டது. “ஈசுவரா!” என்று கத்திக் கொண்டே கீழே சாய்ந்த நஞ்சம்மை பெரிய கூக்குரலிடுமுன், லிங்கையா வீட்டுக்கு ஓடி விளக்கை எடுத்து வந்தான். அவன் பின், மாதி, பாரு, ஜோகி எல்லாருமே வந்தார்கள். “எல்லோரும் வேடிக்கை பார்க்க வந்தீர்களா? பாழாய்ப் போன பெண்ணே! விளக்கெண்ணெய் கலயத்தை உடைத்து விட்டு ஒப்பாரி வைக்கிறாயே! எருமை போச்சு, வீட்டுப் பயலைக் காணோம், தண்ணீர் குடமும் போச்சு” என்று பிரலாபம் தொடங்கி விட்டாள் அவள். “பாலை எடுத்து உள்ளே வை. அட என்னவோ இருட்டில் நடந்து விட்டது. மாதி, எல்லாம் துடைத்து விடு. இதைப் போய்ப் பெரிசு பண்ணாதீர்கள்.” சமாதானம் செய்துவிட்டு லிங்கையா சென்றான். ரங்கி, அழத் தொடங்கிய குழந்தைத் தம்பியை எடுத்துக் கொண்டு பாரு, ஜோகியுடன் வெளியேறினாள், சமயம் வாய்த்தவளாக. கணவனின் சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பவளாக மாதி எல்லாவற்றையும் எடுத்துச் சுத்தம் செய்யும் வரையில் நஞ்சம்மை அழுது புலம்பிய வண்ணம் மடிந்த காலுடன் உட்கார்ந்திருந்தாள். இது போன்ற சம்பவங்கள் மாதிக்குச் சகஜமானவை என்றாலும் வீட்டில் புதுக் குழந்தை ஒன்று வந்து, அதற்காகக் கொண்டாடும் மகிழ்ச்சி விருந்து கலகலப்பற்றுப் போகும்படி சம்பவங்கள் நேர்ந்ததில் அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. லிங்கையா, “அப்பாடா!” என்று ஒரு வழியாக வீட்டுக்குள் வந்து அப்போதுதான் அமர்ந்தான். குழந்தைகள் எல்லோரும் ரங்கம்மை உட்பட, சுற்றி உட்கார்ந்து விட்டனர். அம்மாதிரி அவன் உட்கார்ந்தால், குடும்பத் தலைவன் உணவு கொள்வதற்குரிய பெரிய வட்டிலை வைத்து மனைவி அமுது படைக்க வேண்டும் என்பதே பொருள். அன்று மாதி வட்டிலை வைக்குமுன் மருமகளை, அவன் மடியில் கொண்டு வந்து விட்டாள். “அட! தங்கச்சி, எப்போது வந்தாய்? சுகமா?” லிங்கையாவின் விசாரணைக்குக் குழந்தையின் தாய் தலையை நீட்டினாள். “சாயங்காலம் வந்தேன். அண்ணனுக்கு வாயில் ஈ புகுந்தது தெரியவில்லை” என்றான். “அட, தொரியன் வந்தானா?” “ஆமாம்!” “கிண்ணத்தில் பால் கொண்டு வா, மாதி!” அவன் சொல்லு முன்னரே இனிக்கும் பாலுடன் கிண்ணம் வந்து விட்டது. “நல்ல வீட்டில் வாழ்க்கைப்பட்டு, ஒன்று விதைத்தால் ஓராயிரம் பெருக, வீடு நிறைய மக்களுடன் சுகமாக இருக்கட்டும்” என்று அவன் வாழ்த்திக் குழந்தையின் நாவில் பாலை வைத்த பின், “பேரென்ன, அம்மே?” என்றான். “கிரிஜை!” “நல்லபேர்” என்று குழந்தையைத் தாயினிடம் கொடுத்தான் அவன். “பாருவின் காப்பு அகப்படவே இல்லை. வந்ததும் ஜோகியைத் தேடிக் கொண்டு ஓடினாள். எங்கே விழுந்ததோ தெரியவில்லை. ரங்கன் ஒருத்தன் தான் அங்கு இவர்கள் வந்த பின் இருந்தானாம். அந்தப் பயலை இன்னமும் காணவில்லை.” மாதியின் கூற்றில் பொதிந்திருந்த நுட்பமான உலகம் லிங்கையாவுக்கு எட்டாமல் இல்லை. அயர்ந்து மறந்தால் ‘பலப்பெட்டி’யைத் திறந்து வெல்லமோ, பொரியோ, மாவோ, தேனோ எடுக்கும் சுபாவம் அவனுக்கு உண்டு. அது வளமை இல்லாத வீட்டில் வளரும் குறை. அந்தச் சுபாவம் குறித்து மாதி அவனைப் பற்றிக் கொண்டு வரும் புகார்களை அவன் செவிகளில் போடுக் கொண்டதே இல்லை. “காப்பு எங்கே விழுந்ததோ? பழியோரிடம் பாவமோரிடம் என்று எதுவும் பேசாதே” என்று மனைவியைக் கடிந்து கொண்டான். மாதி வட்டிலைக் கொண்டு வந்து வைத்து சாமைச் சோறும் மணக்க மணக்க நெய்யுமாக அமுது படைத்தாள். மொச்சைப் பருப்பின் புளியில்லாத குழம்பை ஊற்றினாள். சோற்றைக் கலந்து லிங்கையா குழந்தைகளுக்கெல்லாம் கொடுத்தான். அவனுக்கு உணவு இறங்கவில்லை. வீட்டுக்கு வராமல் எங்கோ குளிரில், பசியும் பட்டினியுமாகப் பதுங்கியிருக்கும் ரங்கனின் நினைவு, சோற்றைக் கசக்கச் செய்தது. மனைவி கொண்டு வந்து வைத்த பாலை மட்டும் வேண்டா வெறுப்பாகக் குடித்து விட்டு, அவன் இரவு காவலுக்குக் கிளம்பி விட்டான். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|