உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
இரண்டாம் பாகம் 4. ஒத்தை மாப்பிள்ளை கல் இயந்திரம் தேயத் தேய, ராகியை மாவாக்கித் தள்ளிக் கொண்டிருந்தது. நான்கு தளிர்க் கைகள் அந்தப் பெரிய கல்திரிகையை இருக்கிக் கொண்டிருந்தன. கிரிஜை, அச்சில் மேலாகக் கை வைத்துக் கொண்டிருந்தாள். கீழ்ப் பகுதியில் கை வைத்துக் கொண்டு அவ்வப்போது தானியத்தை எடுத்து இயந்திரக் குழியில் இட்டுக் கொண்டிருந்தவள், பாரு. வீட்டில் அப்போது யாருமே இல்லை. பாட்டன் தேன் மலைக்குச் சென்றிருந்தார். பெற்றோர் கிழங்குத் தோட்டத்துக்குச் சென்றிருந்தனர். பாருவின் கைகள் தாம் இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருந்தனவே தவிர, மனம் அவள் வசம் இல்லை. களங்கமற்ற படிகத்திலே ஒரு நிழல் விழுந்து விட்டது. அந்த நிழல், கன்னித்தடாகமாக இருந்த உள்ளத்தில் இதுவரை அவள் அறிந்திராத விதமாகச் சலனத்தை ஏற்படுத்தி விட்டது. கிருஷ்ணன் மரகத மலைக்குப் போய்விட்டான் என்று அறிந்ததிலிருந்தே அவள் உள்ளம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அந்த வட்டகைக்கே அவன் ஓர் அரசனைப் போல் உயர்ந்து விட்டவன். எத்தனையோ சீமான்களும் பெரியதனக்காரர்களும் பெண்கள் பெற்றவர்களாக இருக்க மாட்டார்களா? அவர்கள் வீட்டுக்கு எந்தப் பெண் செல்லக் கொடுத்து வைத்திருக்கிறாளோ? “என்ன அக்கா? ராகியே போடாமல் வெறுமே அரைக்கச் சொல்லுகிறாயே! எவ்வளவு நேரமாச்சு?” கிரிஜை கேட்டதும் பாருவுக்கு வெட்கம் உண்டாயிற்று. ஒரு பிடி ராகியைப் போட்டாள். அவர்கள் வீட்டிலிருந்து கிருஷ்ணனின் தந்தையும் தாயும் அவள் பெற்றோரை வந்து கண்டு அவளைத் தங்கள் மகனுக்குக் கேட்காது போனால்... சில நாட்களில் மரகதமலை அத்தையும் மாமனும் வருவார்கள். ரங்கனோ இல்லை. ஜோகிக்குத்தான் அவள் என்பது தீர்மானமாயிற்றே வெளி உலகு சென்று வண்ண வண்ணப் புதுமைகளில் முழுகி வந்து அவள் இருதயம் கவர்ந்த அழகன் எங்கே? பத்து ஆண்டுகள் போல் இரிய உடையார் கோயிலின் எல்லையை விட்டு வராத ஜோகி எங்கே? மாலை, தீபமாடத்தில் விளக்கு வைத்துவிட்டுத் தாயும் தந்தையும் வருவதை எதிர்பார்த்து அவள் நிற்கையிலே அண்ணன் பீமன் அம்மையுடன் பேசிக் கொண்டே வருவதைக் கண்டான். அம்மை பின்புறமாக வந்து சுள்ளிக்கட்டைக் கீழே தள்ளிவிட்டு வந்தாள். சாப்பாடு எடுத்துச் செல்லும் புதிய தூக்குப் பாத்திரம் ஒன்றை ஆட்டுக் கொண்டு வந்த பீமனைக் கண்டதும், பாரு ஆவலுடன் அதை அவன் கையிலிருந்து வாங்கினாள். திறந்து பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே, “எனக்கு ஒன்றும் வாங்கி வரவில்லையா அண்ணா?” என்றாள். பீமன் சிரித்து விட்டுக் கண்ணை சிமிட்டினான். “ஒன்றும் வாங்கி வரவில்லையா? அம்மையிடம் கேள். உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேனென்று சொல்லுவாள்” என்றான். ஒத்தைக்குச் செல்லும் அவனிடம், புதிது புதிதாக, மங்கையர் மேலுக்கு அணியும் பட்டு ரவிக்கைத் துணிகள் வந்திருப்பதைச் சொல்லி, தனக்கும் அவ்விதம் புதிய துணிகள் வேண்டுமென்று கேட்டிருந்தாள் அவள். அந்தத் துணிகளை அம்மை தன் முண்டுக்குள் ஒளித்து வைத்திருக்கக் கூடுமோ? உடனே அவள் அம்மையிடம் ஓடி, “எங்கேயம்மா காட்டு” என்றாள். தாயும் சிரித்தாள். அவள் சிரிப்பில் பொதிந்திருந்த பொருளை உணரக் கூடப் பாருவுக்கு பொறுமை இருக்கவில்லை; “எங்கேயம்மா?” என்றாள் சிணுங்கலும் சிடுசிடுப்புமாக. “என்னிடம் ஏது, அவனல்லவா வேண்டி வந்திருக்கிறான்?... கிரி, சுடுதண்ணீர் கொண்டாம்மா!” என்று தலைவட்டை அவிழ்த்து உதறிக் கொண்டு, தாய் கைகால் கழுவ நின்றாள். தாயின் மறுமொழியும் தமையனின் சிரிப்பும் அவளுக்கு அர்த்தமற்ற கோபத்தையே உண்டு பண்ணின. கோபத்துடன் அடுப்படியில் உட்கார்ந்து எரிந்து வெளியே வந்து கொண்டிருந்த விறகை ஆத்திரத்துடன் உள்ளுக்குத் தள்ளினாள். கையைத் தேய்த்துத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்த தாய், திருதிருவென்று எரிந்த செந்தழல் ஒளியில், மகளின் கோபமுகத்தின் அழகைக் கண்டு உள்ளூறச் சிரித்துக் கொண்டிருந்தாள். கால் கை கழுவி முடிந்ததும் அருகிலே வந்து, மகளைப் பார்த்துக் கொண்டே, “அண்ணனிடம் முதலில் என்ன வாங்கி வந்திருக்கிறான் என்று கேட்டாயா, மகளே?” என்றாள். “எத்தனை தரம் கேட்க வேண்டுமாம்? வாங்கி வந்ததைக் கொடுத்தால் கொடுக்கிறார், இல்லாவிட்டால் வேண்டாம்!” என்றாள் பாரு. அடுப்பின் கீழ் வந்து நின்ற பீமன், “அட அட அட! இந்தாம்மா, முகத்தைக் கொஞ்சம் இப்படிக் காட்டு; என்னைப் பார்த்து நான் கொண்டு வந்த பரிசை இப்போது வேண்டாமென்று சொல்லு!” என்றான். கோபத்தோடு முழங்காலில் மோவாயைப் பதித்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் காதருகிலே, “ஒத்தைக்குப் போய் அழகான மாப்பிள்ளையைச் சம்பாதித்து வந்திருக்கிறேன். எங்கே வேண்டாமென்று சொல்!” என்று அவள் தலையைத் தூக்கிக் கலகலவென்று நகைத்தான் அவன். முகம் சிவக்க, நாணம் கவிந்த கண்களைப் பொய்க் கோபத்திரையால் போர்த்துக் கொண்டவள், ஒரு கணம் தடுமாறினாள். ஒத்தைக்குப் போய் மாப்பிள்ளையா? அது யார்? ஒருவேளை கிருஷ்ணன் ஒத்தைக்குப் போயிருக்கக் கூடுமோ? இருதயத்தில் களி துள்ள, கருவிழிகளில் ஒளி சிந்த, அவள் மௌனம் சாதித்தது கண்டு பீமன் கைகொட்டி நகைத்தான். “பார்த்தாயா! இப்போது வேண்டாமென்று சொல்லு!” “நான் ஒன்றும் அதெல்லாம் கேட்கவில்லை. பட்டு வாங்கி வந்தாயா என்று தானே கேட்டேன்?” என்றாள் அந்தப் பொய்க் கோபம் மாறாமலே. “பட்டா? பட்டுக்கென்ன தங்கச்சி! உனக்கு எத்தனை பட்டு வேண்டும்? பளபளக்கும் பட்டு, தங்கம், வெள்ளி எல்லாம் வரப்போகின்றன. ஐந்தைப் பத்தாக்கி, பத்தை நூறாக்கி, நூறை ஆயிரமாக்கும் அருமையான மாப்பிள்ளை. உயரம், அளவான பருமன், செவேலென்று நிறம், அழகிய மீசை...” இந்தக் கட்டத்துக்கு அவன் வந்த போது பாருவுக்கு உண்மையாகவே கோபம் வந்துவிட்டது. சரேலென்று அவன் கையைத் தள்ளிவிட்டுப் புறமனையில் போய் உட்கார்ந்து கொண்டாள். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு. அந்த ஆணழகனுக்கு அழகிய மீசையும் இல்லை; தாடியும் இல்லை! நூறை ஆயிரமாக்கும் இந்த அருமை மாப்பிள்ளை யார்? வெகுநேரம் கழித்து, இருட்டில் அம்மை வந்து அன்பாக அவளை நெருங்கி உட்கார்ந்து, “என்ன பாரு? இதென்ன அசட்டுக் கோபம்?” என்றாள். “எனக்கு ஒன்றும் கோபம் இல்லை” என்றாள் அவள் எங்கோ பார்த்துக் கொண்டு. “அப்ப ரங்கன் மீது உனக்கு இஷ்டம் இல்லையா?” பாருவுக்குத் திக்கென்றது. ரங்கனா? “யார் பெரிய மாமன் மகனா?” “ஆமாம். பீமன் அவனைத்தான் ஒத்தையில் பார்த்தானாம். துரைமார்களை அண்டி வெள்ளி வெள்ளியாகச் சம்பாதித்திருக்கிறானாம். விருந்து வைத்தானாம். ஆடு இருக்கிறதாம்; மாடு இருக்கிறதாம். கோட்டும் தொப்பியுமாய் கன சொகுசாய் நடக்கிறானாம்.” “இத்தனை வருஷங்களாய் அத்தான் ஒத்தையிலா இருந்தார்?” “ஆமாம்.” “உனக்கு இஷ்டமாம்மா?” என்று ஏக்கம் நிறைந்த விழிகளுடன் தாயைப் பார்த்தாள் மகள். அந்த விழிகள் உணர்த்திய உண்மையைத் தாய் அறிவாள். அருவிச் சுழலில் சிக்கியவளை ஆபத்திலிருந்து ஒருவன் மீட்டதையும், சில நிமிஷங்களில் அங்கு நிகழ்ந்ததோர் காதல் நாடகத்தையும் எதிர்வீட்டுத் தோழி, அவள் காதில் போட்டுத் தான் இருந்தாள். என்றாலும் நமுட்டுச் சிரிப்புடன், “நிறைய வெள்ளிப் பணம் கொண்டு வந்து வைத்து மாமன் காலில் விழுந்து, பெண்ணைத் தாருங்கள் என்று முறைப்பையன் கேட்கையில் மறுக்கலாமா?” என்றாள். பாரு மெல்லிய இதழ்களைக் குவித்தாள்; “வேண்டாமம்மா. நான்... நான்” என்று மிழற்றியபடியே தாயின் மேல் கவிழ்ந்து சாய்ந்தாள். தாய் வாய்விட்டு மறுபடியும் சிரித்தாள். “கிருஷ்ணன் இரண்டு நூறு தருவானா? தங்க மணிச்சரமும் கடகமும் வளையலும் போடுவானா? கேட்டாயா?” “எனக்கு அதெல்லாம் அவரே கட்டாயமாகப் போடுவாரம்மா.” “அசட்டுப் பெண்ணே, கரியமல்ல மாமன் வந்து கேட்கட்டும். நாமே வலியச் செல்வது முறையல்ல” என்றாள் தாய். இதற்குப் பிறகு, வாயிலில் அடிச் சத்தம் கேட்கும் போதெல்லாம், நிழல் தட்டும் போதெல்லாம் கரியமல்லர் தம் பூண்போட்ட தடியுடன் வருகிறாரோ என்று பாரு கதவருகில் நின்று நெஞ்சுத் துடிப்புடன் நோக்கலானாள். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|