உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மூன்றாம் பாகம் 4. மாமரம் சாய்ந்தது! மாதிக்கு அவர் தன்னிடம் விடைபெற அழைத்த குரல் அது என்பது புரியவில்லை. எப்படிப் புரியும்? அந்த முகம் பறித்தெடுத்த மலர் போல் நிமிர்ந்திருந்தது. கண்ணிதழ்கள் உறக்கத்தில் ஆழ்ந்தவை போல் மூடியிருந்தன. உதடுகளில் உள்ளடக்கிய புன்னகை வெளியே பீறிட்டு முண்டி நிற்பது போன்ற நிறைந்த அழகு; முகத்திலே என்றும் இல்லாத தெளிவு; அமைதி; சிமிழில் இயங்கிய உயிர்க்காற்றுப் பறந்து செல்ல விடுதலை தந்த நித்திய வடிவமாக உடல் கிடந்தது. “என்ன, கூப்பிட்டீர்களே? அதற்குள்ளே தூக்கமா? என்னங்க?” என்றவள் வலக்கையைத் தூக்கினாள்; முகத்தை அசைத்தாள் மெல்ல. தீயைத் தொட்டாற் போலத் திடுக்கிட்டாள். காம்பிலிருந்து ஒடிந்த மலர் போல் முகம் தொய்ந்திருந்தது. பரபரப்புடன் நெஞ்சைத் தொட்டாள்; மூக்கருகில் கை வைத்தாள். கையைக் காலைத் தொட்டுப் பிடித்துப் பார்த்தாள். அடிவயிற்றிலிருந்து பெருங்குரல், கக்கலும் கரைசலுமாகப் பீறி வந்தது; “ஜோகி! கிரி! ஐயோ!” அவளுடைய அலறலில் கிரிஜை முறத்துச் சாமையை வைத்துவிட்டு ஓடி வந்தாள். “அத்தை! என்ன அத்தை!” பரபரக்க அவர் உள்ளங்காலைத் தேய்த்த மாதி, “கிரி, ஜோகியைக் கூப்பிடு. பெரியப்பனை, எல்லோரையும் கூப்பிடு அம்மா.” குரல் அழுகைத் தழுதழுப்பில் சோகச் சுமை தாங்காமல் அலைந்தது. பெரியவரின் மூக்கருகில் அவள் பிய்த்து வைத்த நூல் உண்மையில் அவர் மூச்சில் ஆடுகிறதா? அல்லது அவளுடைய பரபரத்த மூச்சில் ஆடுகிறதா? பேதைக்கு ஏதும் புரியவில்லை. திமுதிமுவென்று செய்தி கேட்டு, அவர் படுத்திருந்த கட்டிலண்டை எல்லோரும் கூடிக் குழுமி விட்டனர். “என்ன அம்மே, சட்டென்று ‘வீரராய பணம்’ கொண்டு வாருங்கள்” என்று கூவிக் கொண்டே தமையன் பால்மனைக்குச் சென்று பாலெடுத்து வந்தான். ரங்கம்மாதான் ஓடி, நாலணாப் பெறுமானம் உள்ள அந்தப் பொன் துண்டை, நெய்யில் தோய்த்து எடுத்து வந்தாள். அண்ணனின் கண்கள் தளும்பின. “உனக்கு இது செய்யவா தம்பி, நான் இருக்கிறேன்?” என்று முட்டிய உணர்ச்சியுடன் அவர் வாயை நீக்கிப் பொன் துண்டை இட்டுப் பாலை ஊற்றினார். பொன் துண்டு அந்த நாவில் ஒட்டிப் பாலோடு இறங்கிய காட்சியில், “ஐயோ!” என்று முகத்தை மூடிக் கொண்டு அம்மை அலறினாள். ஜோகி அப்போதுதான் நீரும் சேறுமாய்க் காகை வந்து சொன்ன செய்தியில் ஓடி வந்தான். ‘ஏதோ மாதிரி இருக்கிறது’ என்ற செய்தி கேட்டுத் தானே அலையக் குலைய ஓடி வந்தான்? ‘வீரராய பணம்’ போட்டுப் பால் ஊற்றும் காட்சியில், “அப்பா” என்று கதறியவனாகப் பாய்ந்தான். கண்ணீர் சிந்தப் பெரியப்பன், “அழாதே ஜோகி” என்று கையமர்த்தினார். கரியமல்லர் அவனைப் பரிவோடு பற்றி, “அழாதே ஜோகி, உன் ஐயன் நல்ல கதிக்கு, ஈசன் திருவடிக்குத்தான் போயிருக்கிறார்” என்றார் துயரத்தை விழுங்கிக் கொண்டு. ஆண்களும் பெண்களும் குஞ்சுகளும் குழந்தைகளும் அந்தச் சிறு வாயிலில் நுழைவதும் அருகில் வந்து கண்ணீர் தளும்பக் கால் பக்கம் வந்து நின்று, ‘எப்படி இருந்த மனிதர்! முகத்திலே என்ன களை! என்ன ஒளி! தெய்வம்!’ என்று வணங்கிப் போவதுமாக இருந்தார்கள். காலையில் ரங்கன் வந்து பணம் பெற்றுப் போனது வேறு ஊரறிந்த ரகசியமாகக் கொல்லென்று ஆகிவிட்டது. “தம் சொந்த மகனுக்கு மேல் அவன் மீது வாஞ்சை. கடைசியில் ஒரு வேளை அவனைப் பார்த்துப் பேசி அவனுடன் உண்ணவே உயிர் வைத்திருந்தார் போலும்?” என்றெல்லாம் பல விதங்களில் பேச்செழுந்தன. பாரு எல்லாவற்றையும் பார்த்தவளாகச் சிலைபோல் மூலையில் நின்றிருந்தாள். ஆயிரத்தில் புரளுவதாக வேஷம் போடும் கணவனுக்கு அந்தப் பெரியவர் பணம் தந்திருக்கிறார் என்ற செய்தியில், இறந்து கிடக்கும் அவர் மீது ஆத்திரந்தான் அவளுக்கு மாளாமல் பொங்கி வந்தது. அவளுடைய வாழ்வின் இனிமையைக் குலைக்கவே திட்டமிட்டுச் செயல்புரிந்த வினைவடிவமோ? அவளுக்கு என்றேனும் அனுதாபம் காட்டினாரா? அனுதாபம் என்ன இருக்கிறது? அன்று குறும்பனின் வேருக்கு மேல் என்ன வினைகள் புரிந்து அந்த உருண்டைக் கல்லை அந்த மகன் கைகளில் சிக்க வைத்தாரோ? பால் வழிந்த உதடுகள் மூடியிருந்தாலும் பொங்கி நிற்கும் சிரிப்பைப் பார்! ஒரு பேதைப் பெண்ணின் இன்பத்தில் துன்பத்தைப் புகுத்தியது உமக்கு வெற்றியா? அன்று கூட இந்த வீட்டுக்கு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்திருப்பேனே? வெல்லத்தைப் பூசிக் கொடுக்கும் மருந்து உருண்டை போல், சர்க்கரைப் பேச்சில் என்ன என்னவோ திணித்துப் பேசினீரே? என்னை அறிவிலியாக ஆக்கினீரே? நெஞ்சு எரிய எரிய அவள் உணர்ச்சி அழுகையாகப் பொங்கி வந்தது. அதே அறையில் தான் அவர் அவளுக்கு அன்று உபதேசம் செய்தார். “விரும்பிய பெண்ணை அவன் கைப்பற்றினால், நெறியென்னும் நேர்க்கோட்டில் நடப்பான்; அவனுக்கு ஏமாற்றம் தராதே பெண்ணே, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்” என்று கூறி வஞ்சனை புரிந்தார். அவள் நெஞ்சை இளகவைத்து, அதில் அவர் தமக்கு வேண்டிய உருவத்தைச் சமைத்துக் கொண்டார். ஆனால் அது நிலைத்ததா? அவருடைய மைந்தனின் அழகான இல்லத்தில் சூழ்ந்த வெம்மையிலே, அவர் போதனைகளால் மாற்றிய உருவம் அழிந்து நீராயிற்று. அவளுடைய அன்புக்குரிய மக்கள் இரு பெண்களே. அவர்களின் வளர்ச்சிக்கு உழைப்பது ஒன்றே அவள் வாழ்வில் உள்ள குறி. இத்தனைக்கும் காரணமானவர் யார்? யார்? ரங்கம்மைக்கு என்ன சிறப்பு உண்டு? ஒரு முள் பிடிக்க வகையில்லை. அவளைக் கண்ணிமையில் மூடிக் காக்கிறான், அந்தக் கணவன். கிரிஜை, மெலிந்த சிறு உடல்; கறுப்பு முகம், அவள் காய்க்காமலே நின்றுங்கூட, அந்தக் கணவனின் அன்பணைப்புக்கு ஏது குறைவு? ஏன்? நீர் சாகும் வரையிலும் அந்த மாதம்மா என்ற அன்புக்கு உரியவளின் ஆதரவில் இருக்க வேண்டினீரே? ஓர் இளம் பெண்ணின் மனசைக் குலைத்தீரே? இப்படியெல்லாம் அவளுடைய மனமாகிய மடையின் கதவு, அவர் முகமண்டலத்தின் நிறைவிலே மோதப்பட்டுத் திறந்து கொள்ளக் கொட்டித் தீர்த்தது. மழை முழுவதும் நின்று, இருள் கும்மென்று சூழ்ந்து வர, ஈரமண்ணின் வாடையும் குளிர் காற்றுமாக, அந்தத் துயரச் சூழ்நிலைக்கு இசைந்துவிட்டது. விளக்குகளை ஏற்றி விட்டு, வாயிற்புறம் தொரியனை யார் யாருக்கெல்லாம் செய்தி சொல்ல அனுப்ப வேண்டும் என்பதைக் குறித்துப் பெரியப்பன் பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் செவ்வாய்க்கிழமை. தகனக்கிரியைகள் செய்வதற்கு அது ஏற்காத நாள். எனவே ஒரு நாள் தள்ளி, புதனன்று சடங்குகளைச் செய்யத் தீர்மானித்தார்கள். அதன்படியே முட்டுக்கோத்தர்களுக்குங் கூடச் செய்தி அனுப்பப்பட்டது. ஒத்தைக்குச் சென்று விட்ட ரங்கனுக்கும் மறுநாள் செய்தி சுமந்து செல்ல, ரங்கம்மையின் கணவன் தயாரானான். பெருகி வரும் கும்பலுக்குச் சாப்பாடு வேண்டாமா? ஒரு புறம் சமையல் தடபுடலாக நிகழத் தொடங்கியது. வீட்டுத் தலைவன் மறைய, கீழ்க்கன்றும் அவனுக்கு உரியவளும் இருளில் மூழ்கிக் கிடந்தனர். தானியமும் மற்றொன்றும் யாரை யார் கேட்பது? ரங்கம்மா பணப் பெட்டியைத் திறந்து, இருந்த சேமிப்பில் கொஞ்சம் எடுத்துத் தந்தாள். வேறு எங்கிருந்தெல்லாமோ கிழங்கும் தானியங்களும் வந்து நிறைந்தன. கரியமல்லர் வீட்டிலிருந்து, சத்தம் போட்டுக் கொண்டு எரியும் காந்த விளக்கு வந்து ஒளி பரப்பியது. பெண்கள் கூடிக்கூடி வேலைகளில் ஈடுபட்ட வண்ணம் பேசினார்கள். அந்த அளவிலே அது சாவு நிகழ்ந்த வீடாக இல்லை. சிற்றப்பனிடம் பணம் பெற்று, ஒத்தை திரும்பிய ரங்கன், மீறி நின்ற கடன்களைச் சில்லறையாகத் தீர்த்தான். மீதியிருந்த பூமியிலும் கிழங்கைத் தோண்டி விட வேண்டும் என்று ஆட்களை அழைக்கச் சென்றவனுடைய கண்களை புதிதாக வந்திருந்த படக்காட்சிக் கொட்டகையில் ஒரு புதுப்பட விளம்பரம் கவர்ந்தது. அன்று செவ்வாய்க்கிழமைச் சந்தை நாள் வேறு. கிழங்கை மறுநாள் தோண்டிக் கொள்ளலாம். வெயிலும் வந்துவிடும் என்ற எண்ணத்தில், சந்தைப் பக்கமும், படக்காட்சிக் கொட்டகையிலும் பொழுதைக் கழித்துவிட்டு இரவு ஒன்பது மணிக்குமேல் ரங்கன் வண்டு சோலை வீட்டுக்குத் திரும்பினான். வாயிற்கதவை அவன் திறக்குமுன், வால்பேரி மரத்தடியில் இருளனோ, பேயோ என்று இரவில் அஞ்சும் வண்ணம் குட்டையான உருவம் ஒன்று தலையோடு கால் போர்த்துக் கொண்டு நின்றது. ரங்கன் பேய்க்கும் அஞ்சான்; பிசாசுக்கும் அஞ்சான். “யாரது?” என்றான். “நா... நான் தான் ரங்கண்ணா; ரங்கம்மா புருஷன்” என்றான். பூட்டில் நுழைந்த சாவியைத் திருப்பாமலே ரங்கன் சற்று எரிச்சலுடன், “எங்கே வந்தாய்?” என்றான். “சிற்றப்பன் ஜோகியின் ஐயன் போய்விட்டார். சாவுச் செலவுக்குக் கையில் பணமில்லை. உன்னைத்தான் நம்பிக்கையோடு அழைத்துவரச் சொன்னாங்க சின்னம்மை” என்றான் ரங்கம்மையின் கணவன். குறிஞ்சித் தேன் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
4-7
4-8
4-9
4-10
5-1
5-2
5-3
5-4
5-5
5-6
5-7
5-8
5-9
முடிவுரை
|