உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்) 24 தங்கம் உருக்கித் தழல் குழைத்த தேனாக வரும் கதிரவன் கண்டு மகிழும் அறுவடை இல்லை. அவ்வப்போது வான் கருமை காட்டி, ஆதவனின் ஆட்சி அதற்குள் மலருவதற்கில்லை என்று அச்சுறுத்தும் நாட்களின் அறுவடை. யாருக்குத் துயரமானால் என்ன? எங்கு ரத்தம் சிந்தினால் என்ன? எங்கு தீக்கருகினால் என்ன? உழைப்பைத் தந்தவர்களுக்குத் துரோகம் செய்யாத அன்னையே சத்தியம் என்று கதிர்கள் பழுத்துச் சாய்ந்திருக்கின்றன. உழைப்பே எங்கள் சத்தியம் என்று ஒட்டிய உடலும் சுருங்கிய முகமுமாகக் குப்பன் சாம்பாரும், பொன்னையனும் மற்றவரும் குளிர் இறங்கும் அந்த விடியலில் களத்திலிறங்கி அரிகளைக் கொய்து வைக்கிறார்கள். இனி பெண்கள் வந்து அரிக்கற்றைகளை அடுக்கிக் கட்டுவார்கள். ஆண்களின் தலையில் கட்டுக்களைத் தூக்கிவிட்டு, நட்டுவைத்த பயிர்கள் எங்கள் கை மகத்துவம்தான் என்று நிறைவெய்துவார்கள். களத்தில் கட்டுக்களை அடித்த மணிகளையும் வைக்கோலையும் வேறாக்கும் போது உடனிருப்பார்கள். “இன்னும் நாலு நாப் போனா களம் கெடக்காது. நாயக்கர் களத்துக்குக் கொண்டிட்டுப் போயிடலாம்!” “வானாம், அத்தினி தூரம் எதுக்குப் போவனும் முதலாளி? இதா, காவா தாண்டி ரோட்டோரம் பலவக் கல்லு போட்டு வச்சிருக்கு. நாலெட்டு, அடிச்சிரலாம்!” செவத்தையன் கூறுகிறான். சம்முகத்துக்கு வேலை செய்வது பழக்கம் விட்டுப் போய் விட்டதால் தானோ வியர்வை இப்படி ஊற்றுகிறது? உள்ளுற ஒரு சூடு பரவித் தகிக்கிறது. மூச்சு வாங்குகிறது. சற்றே நிமிர்ந்து ஆசுவாசம் பெறுகிறார். “நீங்க கரையேறிடுங்க. இத ஆச்சி, ஒரு நிமிட்டு.” குப்பன் சாம்பார் அவரை விரட்டுகிறான். “அடே பழனி, கோட்டுப் பழுதய இப்பிடி வீசுடா..?” தொலைவில் பெண்கள் காவாயைக் கடந்து வருவது தெரிகிறது. சிவப்பும் பச்சையும் நீலமுமாகப் புள்ளிகளாய் நகர்ந்து வருகின்றனர். எத்தனை பேர் இந்த நான்கு மா நிலத்துக்கு என்று கணக்கிட்டுப் பயனில்லை. இது பஞ்சத்து அறுவடை. ஆட்கள் அதோ இதோ என்று வந்து நெருங்குவார்கள். அத்தனை பேரும் பங்கிட்டுக் கொள்ளக் கொடுக்க வேண்டும். சாலையோரத்துக் கட்டாந்தரையில், முதன் முதலாக இந்தக் குறுவைக் கதிர்களை அடிக்கப் போகிறார்கள். பொன்னம்மா கூட்டிப் பெருக்குகிறாள். சாய்வாக வைத்திருக்கும் ஆறு பலகைக் கற்களிலும் பனி ஈரமா மழைத் துாற்றல் ஈரமா என்று வேறுபடுத்த இயலாத வகையில் ஈரம் படிந்திருக்கிறது. களத்தில் அறுத்து வைத்துவிட்டுக் குப்பன் சாம்பாரும் செவத்தையனும் அமாவாசியும் தலைத்துண்டை உதறிக்கொண்டு விடாயாறப் போய்விட்டார்கள். வானில் இன்று வெயில் கிடையாது என்பதைப்போல் மேகம் கூடியிருக்கிறது. ‘கருமேக மில்லை’ என்று சம்முகம் திடம் கொள்கிறார். மாரியம்மா தன் கிழக்குரலைக் கிளப்பிக் குலவை இட்டுக்கொண்டு வருகிறாள். அது குலவையொலியா, நெஞ்சு பிளந்துவரும் ஒப்பாரியா என்பது புரியாமல் சம்முகத்துக்குச் சங்கடம் பிசைகிறது. மரபுகளிலும் சடங்குகளிலும் ஊறிப்போன பெண் குலம். வாழ்க்கையின் அலைப்புக்களில் பாறைகளோடும், அத்துவானங்களுடனும் மோதுண்டாலும் இன்னமும் நம்பிக்கையை விடாத மூதாட்டி... சிவந்த கண்களில் அவளுக்கு ஈரம் பசைக்கிறது. அவள் அரிக்கற்களை ஆக்கையில் வைத்துப் பிணிக்கையில் அவள் அருகில் நின்று சுமட்டைத் தன் தலையில் ஏற்றிக் கொள்கிறார். “மொதலாளி! நீங்க போங்க. நாங் கொண்டிட்டுப் போறே...” என்று பழனிப் பயல் வந்து மறுக்கிறான். இவர்களுக்கெல்லாம் தங்கள் இனத்தில் உழைக்காமல் மேற்பார்வை செய்யும் ஒருவர் என்ற பெருமையைக் கொடுப்பதில் ஒரு கெளரவம்! ஆனால் அவர் கட்டைச் சுமந்துகொண்டு வரப்பில் நடக்கிறார். முன்பெல்லாம் இவ்வாறு ஓடி நடந்ததுண்டு. சங்கத் தலைவர் என்று ஆனபின், பெயருக்குக் கதிர் கொய்வாரே ஒழிய, அதிகமாக உழைப்புக் கொடுக்க இறங்குவதில்லை. இப்போது, ‘உங்களைப்போல், உங்களில் ஒருத்தன் நான்’ என்று சொல்லிக்கொண்டு பாரம் சுமந்து வருகிறார். அம்சு, கைதேர்ந்த விரைவுடன் அரியை தலை கால் மாற்றிப் பார்த்து வைத்துக் கட்டுகிறாள். கல்லின் பக்கம் சாம்பாரும் செவத்தையனும், அமாவாசியும் கட்டுக்களைப் பிரித்து மும்மூன்று அரிகளாக எடுத்து மாற்றிக் கல்லில் ஓங்கி அடிக்கின்றனர், நெல்மணிகள் நிலத்தில் சிதறி வீழ்கின்றன. சம்பா நெலுக்கு இத்துணை அவசரமும் உழைப்புமில்லை. நன்றாகப் பருத்துவிட்ட மணிகளை வெறுந்தரைத் தட்டலிலேயே உதிர்த்துவிடலாம். திடீரென்று வானக்கதிர் இந்த நிறைவுக் காட்சியைப் பார்க்கும் ஆவலில் மேகத்தினிடையே தலை நீட்டுகிறது. அந்த ஒளியில், சாம்பாரின் தளர்ந்த மேனி, சத்தியத்தின் வடிவாக மின்னுகிறது. சம்முகம் நெஞ்சு நெகிழக் கற்றைச் சுமையை இறக்கிவிட்டு நிற்கிறார். இந்த சத்திய ஒளி பிறர் பங்கைத் திருடுவதாக இருந்தால் கிடைக்காது. இந்தச் சத்தியம், அவன் இப்போது குடித்துவிட்டு வந்திருப்பதால் மூளியாக மழுங்கி விடவில்லை. அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் சம்முகத்துக்கு இப்படி ஓர் அழகிய வடிவம் தமக்கு இருக்குமா என்ற ஐயம் தோன்றுகிறது. இவர்கள் எப்போதும் யாருக்கும் அடிமைகளில்லை. உயிர்க்குலத்துக்கு உணவளிக்கும் இத்தொண்டு மனிதத் தொண்டு. இதுவே பரிபூரணத்துவத்தின் விளக்கங்கள். மனைவிகள், தாயர், குமாரிகள் மானம் குலைக்கப்பட்டாலும், தலை மகன்கள் குற்றம் சாட்டப்பட்டுக் காவல் சாவடிகளில் சிறையிருந்தாலும், பொட்டு பொடிசுகள் தொண்டை நனைக்கும் உயிர்ப்பாலின்றி அழுது வாடினாலும், முதிய தாய் தந்தையர் பராமரிப்பவரின்றி முடங்கிச் சோர்ந்து நைந்து கரைந்தாலும் இந்த நேரத்தின் முக்கியத் துவத்துக்குச் சமானமில்லை. குனிந்தும் நிமிர்ந்தும் நிமிர்ந்தும் குனிந்தும் மாற்றி மாற்றிக் களியில் விளைந்ததைக் கல்லில் அடித்து, மனிதனுக்கும் மாட்டுக்கும் என்று பிரித்துப் போடுகிறார்கள் மண்ணின் மைந்தர்கள். இவர்கள் தங்கள் குருதியை மண்மாதாவுக்கு உழைப்பாக்கி அவள் உயிர்ச் சூட்டை அமுதமாக்கும் இரசவாதம் புரிபவர்கள். இது பச்சை நெல்... இது ஒழுங்காகக் காய்ந்து வியாபாரியின் சாக்கை நிறைத்துக் கடனடைய வேண்டும். “என்ன சம்முவம்?. அறுப்பு வச்சிட்டியா? ரெண்டு நா போவட்டும்னியே?” உடையார் சைக்கிளில் வந்து இறங்குகிறார். “ஆமா. நாலுநாளா வெயில் காஞ்சிருக்கு. நேத்து புதிர்பாத்தே, அறுத்துடலான்னு தோணிச்சி. வெலதா என்னமாருக்கும்னு புரியல...” உடையார் உதட்டைப் பிதுக்குகிறார். “ஒண்ணும் சொகமில்ல. கட்டுப்படியே ஆவாது. அறுவதுக்குங் கீள தா கேக்குறாங்க...” சம்முகத்துக்கு நா எழவில்லை. இந்தக் குறுவை அறுப்பை எதிர்பார்த்து எத்தனை கடன்கள் வாய் பிளந்து நிற்கின்றன! அன்றாட உப்புப் புளி சாமான்களிலிருந்து, வாழ்வா சாவா என்று நெருக்கும் போராட்டங்கள், அடிதடிகள், வம்பு வழக்குகள் ஆகிய எல்லாச் செலவுகளுக்கும் இந்த ஒரே சந்தர்ப்பத்தில் தான் ஆதாரம் காண முடியும்! “நா. புதுக்குடி போறேன். காந்தி ஐயர் வீட்டில்தான இருக்கா?” “ஆமாய்யா... இந்தப் போராட்டம் இப்ப அவங்க கிட்டத்தா முனைப்பா இருக்கு. பெண்களுக்குத்தான் எல்லாப் படியிலும் அநியாயங்கள் நடக்குது. இதுக்கு ஒரு பெரிய இயக்கம் செயல்பட வைக்கணும். அதுதான் எனக்கு வாழ்க்கையிலேயே லட்சியம்னு அது ஒரே பிடியா இருக்கு. ஐயர் கூட இப்ப இவங்களுக்காக அந்தக் காலத்தைப் போல அவ்வளவு ஆக்ரோசமா நிக்கிறாரு...” “செய்யட்டும். நானும் அமைச்சர் வரார்னாங்க, பாத்து விசாரணைக் கோரிக்கை குடுக்கலான்னு போறேன். வடிவுக்கு சாமீன் கிடைச்சிடும். வீரபுத்திரனுக்கும் கிடைக்கும். தேவு விசயந்தா ஒண்ணும் செய்ய முடியாதோன்னு தோணுது...” “கூட்டத்துல சட்டில பட்டாசை வச்சு இவனுவளே கொளுத்திக்கறானுவ. இதெல்லாம் திட்டமிட்டுச் செஞ்சிருக்கானுவய்யா. தேவு வெடிகுண்டு வச்சிருந்தான், தீவிரவாதிங்கற லிஸ்டில சேக்கிறாங்கன்னு வக்கீலையா அன்னிக்கே சொன்னாரு...” “இங்க இருக்குற குண்டருகள வச்சிட்டே எல்லாக் காரியத்தையும் செஞ்சிட்டு இப்புடிப் பழியப் போடுறதும் இப்ப நடந்துட்டுத்தானிருக்கு. அந்தப் பொம்புளதா பந்தலுக்கு நெருப்பு வச்சான்னும், ஒடுறப்ப தடுக்கி வுழுந்து கல்லுல மண்ட தட்டிச் செத்திட்டான்னும் எவ்வளவு சாதுரியமாக் காரியத்தை முடிச்சி, ஒரு விசாரணயில்லாமக் கொளுத்திட்டானுவ?” “காந்தி அதைத்தான் இப்பப் புடிச்சிட்டிருக்கு. குஞ்சிதத்துக்கு இவங்க செஞ்ச அக்கிரமம் எதோ தெரிஞ்சிருக்கு. அவளப் போலீசுல புடிச்சிக் குடுக்கிறாப்புல குடுத்து, இவனுவளே கூட்டியாந்து பயமுறுத்தி இருக்கிறாங்க. மசியல, தீத்துக் கட்டியிருக்கிறானுவ. காலம நாங்க ஓடிவந்து மறிக்கிறதுக்கு முன்ன, பொணத்த எடுத்திட்டாங்களே? காலம விடியறச்சே கொடியான் நாவுவத் தேடிட்டுப் போயிருக்கிறான். பொணம் கெடந்திருக்கு. பாத்திருக்கிறான். துணியில்லாம கெடந்திச்சி, பாத்தேன்னுறான். இவனுக்குப் பயம் புடிச்சி ஓடியாந்து வந்து சொல்லியிருக்கிறான். தேவு, வடிவு உள்பட பத்துப் பேரயில்ல போலீசுல புடிச்சி வச்சிருந்தான்? நா இங்க வாரதுக்குள்ள விசாரண முடிச்சி அவள எரிச்சிட்டானுவ!” “அதான், எல்லாம் விவரமா விசாரண செய்யணும். அன்னக்கி ராத்திரி சேரில வந்து ஆடுகளைத் தாக்கியிருக்கிறாங்க. காந்தியும் மெட்ராஸில், மாதர் சங்கங்கள் பக்கம் இதை எடுத்துகிடணும்னு எழுதிப் போட்டிருக்கு. புதுக்குடியில இப்ப ஐயிருமக சாவித்திரியும், காந்தியும் ஒரு இளைஞர்மாதர் அணியே சேத்திருக்கிறாங்க. இந்தமாதிரி பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராட மேல் படிப்பு, கல்யாணம்னு எதேதோ நினைச்சேன். ஆனா, அன்னிக்கு சொந்த வாழ்க்கையை விட நம் சமுதாய விடுதலைதான் முக்கியம்னு போராட வந்தோமே, அதே ஒரு வேகம் அவங்க கிட்ட இப்ப வந்திருக்கு.” “வரட்டும். பட்டி தொட்டிலேந்து பட்டணம் வரயிலும் இன்னிக்குப் பொம்பிள வியாபாரம் நடந்துட்டுத்தானிருக்கு. அப்ப. நீ நாளக்கி வரியா?...” “இந்த அறுப்பு இல்லன்னா நானும் வருவேன், அமைச்சரைப் பார்க்கும்போது நானும் இருக்கணும்தா. பணத்தட்டு வேற, வந்த வெலக்கு நெல்ல விக்கணும். ஆனா நான் விடுறதில்லன்னு வச்சிட்டேன். வீடு வாசல் போனாலும் போகட்டும்னு வச்சிட்டேன்...” “இன்னிக்கு ஆளுறவங்க, அரிசனனுக்கு எல்லாம் செய்யணும்னு சொல்லிட்டாத்தான் கதை ஓடும். அந்தவகையில் ஒரு நியாயம் தோணியிருக்கிறதுதான் அன்னிக்கும் இன்னிக்கும் வித்தியாசம். அன்னிக்கு இந்த மேச்சாதிக்காரன் ‘கூலின்னாலும் குடுத்திடுவம். இவன் நமக்குச் சமமா நம்ம தெருவில நடக்கிறதா, மானம் போயிட்டுதே’ன்னு நெனச்சுத்தான் ஊரவுட்டுப் போனான். இன்னிக்கு எந்த மேச்சாதியானும் இப்படி வெளிப்படயாச் சொல்லமாட்டான். இல்லியா?” “...கோயில்ல நெருப்பு வச்சுது பத்தி... எதுனாலும் குறிப்பு நீங்க காட்டணுமில்ல, அவுங்க குற்றச்சாட்டை மறுக்கறாப்பல...?” “அதான் நீ வரணும்னு பாத்தேன்...” “காந்திகிட்ட சொல்லிருக்கையா... அம்சு, எங்கம்மா எல்லாருமே இதுக்கு முக்கிய சாட்சிகளா வருவாங்க. நெருப்புக் கொளுத்திப் போட்டது நாவுவா இருக்கணும். இல்லேன்னா, அவுங்களே கொளுத்திருக்கணும். நாவு அன்னிக்குப் பீடி கொளுத்தி வச்சிட்டிருந்தான்னு மாரியம்மா சொல்லி இருக்கிறா. நெருப்புக்குச்சி கிடச்சா விளக்குமாத்துக் குச்சிய ஒவ்வொண்ணா எடுத்து எரியவுடுவான். உபயோகமத்த பயல இப்படிச் சோறூட்டிக் காப்பாத்துறாளேன்னு நா நினைச்சிப்பேன். இத்தன கலவரத்தில அந்தப் பயலுக்கு ஒரு கேடு வரல பாருங்க! பெருமா கோவில் வாசல்ல மண்ணள்ளிப் போட்டுட்டிருந்தான்னு யாரோ சொல்லி எங்கம்மா போயி கூட்டியாந்தாங்க. குஞ்சிதம் நெருப்பு வச்சிட்டுத் தானே வுளுந்தாங்கறது பச்சப் பொய்யி?” “அப்ப நான் வரேன்.” “வாங்கையா... கடசீவரய்க்குமில்ல, நம்பிக்கைய எப்பவும் வுடுறதில்ல. நமக்கு அடுத்த தலைமுறையும் நியாயத்துக்குப் போராடியே ஆகணும்னிருக்கு...” சம்முகம் கண்ணீரைத் தேக்கிக் கொள்ளும் வகையில் வானைப் பார்க்கிறார். வானில் கருமை அச்சுறுத்தக் குவிகிறது. கீழே விழுந்த பச்சை நெல்லைக் குவித்துச் சாக்கில் போட்டுக் கட்டி வைக்கிறார். பகலுணவுக்குக்கூட ஓய்வு கொள்ள இயலாதபடி வான் கருமை குவிந்து தூற்றல் விழுகிறது. புகையிலையில் ஊறிய எச்சிலைத் துப்புவதற்கும் கூட ஓடாமல் மணிகளை வேறாக்க, அரிக்கற்றைகளை ஓங்கி ஓங்கி அடிக்கிறார்கள். திருக்கை மீன் வாலினால் செய்த சாட்டையடியும், முரட்டுக்காலணி உதைகளும் பட்ட சாம்பாரின் மேனி, தளர்ந்து குலுங்குகிறது. அதைப் பார்க்கையில், தலைமகனுக்கும் அதே அநுபவங்கள் தொடருகின்றனவே என்று நெஞ்சம் இறுகுகிறது. ஆண்டானும் அடிமையும் இல்லை என்று சட்டப்படி தீர்ந்துவிட்ட பின்னரும் விடிவு காலம் வரவில்லை. நெஞ்சைக் குறுக வைக்கும் இழி சொற்களும், உடல் வாதையில் துடிதுடிக்க இம்சைகளுக்கும் ஆளாக இவர்கள் என்ன தவறைச் செய்திருக்கிறார்கள்?... “மழ கொட்டும்போல இருக்கு முதலாளி. போயி வண்டி கொண்டிட்டு வாங்க...!” வியாபாரிகள் உள்ளுரில் இருக்கிறார்கள். கேள்விப்பட்டு இந்த நெல்லை வாங்க வருபவர்கள் யாரும் இல்லை. மழை என்றால் வியாபாரிகளுக்குக் கை மேலாகிவிடும். ஆழும்பாழுமாகப் போகும்போது இன்னும் விலையைக் குறைப்பார்கள். வடிவு இல்லாதது கை ஒடிந்தாற்போல் இருக்கிறது. இன்னும் கட்டுக்களைச் சுமந்து வரப்போடு நடந்து, மடைகளில் இறங்கிக் கடந்து, கொண்டுவந்து போட்டுக் கொண்டிருக்கின்றனர். சம்முகம் ஒடிச்சென்று வண்டி பிடித்து வருகிறார். சேகரித்த மணிகளை அள்ளிக்கட்டிய மூட்டைகளை வண்டியில் ஏற்றுகையில் துாற்றல் மழையாக வலுக்கிறது. “சாம்பாரே, வண்டில குந்திட்டு நீங்க போங்க மைத்தத நாங்க பாத்துக்கறோம். எனக்குச் சங்கட்டமாயிருக்கு.” “அட ஒண்ணில்ல, இதெல்லாம் புதுசா? மழை இன்னும் பெரிசா கொட்டுறதுக்குமுன்ன அடிச்சிப் போட்டுடலாம்.” சம்முகம் கையைப் பற்றி நிறுத்துகிறார். “நீங்க நில்லுங்க. பழனி அடிக்கட்டும்...” முதியவனின் கண்கள் கலங்குகின்றன; புளிய மரத்தடியில ஒதுங்கி நிற்கிறார். “இன்னைக்குப் புதிசா? மழ இப்பிடிப் பயமுறுத்தும். பொறவு செத்த வுட்டுடிச்சின்னா அடிச்சிப் போட்டு வாரிட்டுப் போறதுதா. ஆனா. இந்த மனசுல இப்ப உஜாரா எதுமில்ல... இந்தப் பத்து வருசமா, அந்தப் பயதா புதுர் கொண்டுவருவா. நாயக்கர் ஊடோ, ஐயிரு பங்கோ, எதுன்னாலும் அவந்தா. நான் பாக்காத போலிசா? இப்ப உச்ச வரம்பு நெல்லபடியா அமுல்படுத்தணும்னு போராட்டம் போகலியா? லத்தியெடுத்துப் பொம்புளக பக்கம் அடிக்கிறானேன்னு குறுக்க பூந்தே, வெறட்டினானுவ ஆத்துலியே வுழுந்தோம். ஆனா... பய இருக்கறான். இதுக்குன்னே தலையெழுத்திட்டா. அவன் கையி மண்ணுல பேசுற கையின்னு மதிப்பா இருந்தே, அவங் கைய அடிச்சிக் கூழாக்கிட்டானுவளே அதுதா தாளலப்பா!” குத்திக் கொடுத்தாற்போல் துயரம் பெருக, குலுங்கி அழுகிறான் சாம்பார். “அதெல்லாம் ஒண்ணில்லிங்க. பொம்பிள தலையில அடி வுழுந்திடும்னுதா கையவச்சு அவனே வாங்கிட்டி ருக்கிறான். ஆனா, டாக்டரிட்ட நான் கேட்டேன், பாத்தேன், நல்லாப்பூடும்னு காரண்டி குடுத்திருக்காரு, இல்லேன்னாலும் ஐயிரு அண்ணன் மவ, ரொம்பக் கைராசி. எங்காலு நடக்க முடியும்னு நெனச்சனா? அவங்க நமக்குன்னா எல்லா ஒதவியும் செய்வாங்க. கொண்டு காட்டி நல்லபடியாக்கிடலாம், நீங்க ஏன் வருத்தப்படறீங்க? செத்த வூட்டப்போயி இருங்க. அதா முக்காலும் முடிஞ்சிரிச்சே?” “அவனுக்கு, தான் முன்ன நின்னு கூட்டம் நடத்தணும், போராட்டம் போவணும்னு ஒரே புடி. ராவுல ஐயனார் கொளத்துக்குப் போயி சொல்லிட்டு வந்திருக்கிறா! பஞ்சமியும் சோலையும் நாங்க கெளம்புறப்ப வாறாங்க. ‘ஏண்டால, சம்முவ வாய்க்காரக் கேக்காம நீயா என்னடா இது’ன்னு கேட்டேன். மொகங் குடுத்தானா?. அந்த வெடப்பய தேவு, அவம் பேச்சக் கேட்டுக்கிட்டு, பொம்பிளயள எறக்கினா ஒங்க மக. அது என்ன மாரியாத்தா ஆவேசம் வந்தப்பல ஒரே புயலால்ல பேசிச்சி? இப்ப என்ன ஆச்சி! அவனுவ அநியாயத்துக்கு நூறாயிரம் சாட்சி கொண்டாருவானுவ. நாம எங்க போவம் சாட்சிக்கு?” “அப்படி எல்லாம் இல்ல சாம்பாரே, நமக்கு சாட்சி இருக்கு. சத்தியம் எப்பவுமே அநாதயாயிராது!” “குந்தக் குச்சில்லன்னு இருக்கிறோம். எப்பிடிக் கேசு நடத்தி எப்பிடி மீளப்போறம்? கண்ட கனாவெல்லாம் கதிர் முத்துறப்ப பொகையான் வுழுந்தாப்பல பாழாயிடிச்சே!” “சாம்பாரே, நீங்க என்னாத்துக்கு இப்பத் தனியா பிரிச்சுப் பேசுறீங்க? இது ஒங்க மகனோட ஒரு தனிப்பட்ட விவகாரமும் வழக்குமுமில்ல. இந்த உலகம் முச்சூடும் உள்ள சமுதாயப் பிரச்சினையோட வழக்கு. சமுதாயம் உசிர்வாழ, ஆதித் தொழில் இது. மண் ஒரு தனிப்பட்ட ஆளுங்களுக்கு மட்டும் சொந்தமில்லங்கறது தீரணும். காத்து, சூரியன், சந்திரன் இதெல்லாமும் போல மண்ணும் தண்ணியும்னு தீரணும். நாம இதுக்காகப் போராடுறோம்னு நினச்சிக்குங்க. நீங்க என்னாத்துக்கு அதைரியப்படணும்? நாம செய்யிற தொழில் இல்லேன்னா. எதுவுமே இல்லே!” வீட்டருகில் வண்டி வந்து நின்றதும், ஓட்டிவந்த செவத்தையனே மூட்டைகளை இறக்கித் திண்ணையில் போடுகிறான். அம்சுவும் லட்சுமியும் கூட்டி ஒழுங்காக்கி வைத்திருக்கிறார்கள். இதற்குள் சங்கிலி, கருப்பன் எல்லோரும் வருகிறார்கள். டீத்துள் போட்டு நீர் காய்ச்சி இறக்கி வெல்லம் போட்டு அம்சு எல்லோருக்கும் வழங்குகிறாள். “சம்முவம் களத்து மேட்டுல இருக்கிறானாடா சங்கிலி?” பாட்டிக்கு மகனைப் பற்றிக் கவலை. “பாழாப்போன மழ இன்னும் ரெண்டவுரு பொறுத்திருக்காது? அவுரு நாயக்கர் வூட்டுக்குத் தார்ப்பாயி வாங்கியாரப் போயிருக்காரு!” நாகு வண்டியைப் பார்த்ததும் ஹைஹை என்று ஓடி வருகிறான். “போட...ல... போ!” மூட்டைகளை அடுக்கியபின் எல்லோரும் அங்கேயே காத்திருக்கின்றனர். இருள் வருவது தெரியாமலே கவிந்திருக்கிறது. திண்ணையிலிருக்கும் கிழவர் சட்டென்று விழித்துப் பார்க்கிறார். “மழையா பெய்யிது?” “ஆமா. குடிக்கிற நேரம் வந்திரிச்சின்னா எந்திரிப்பே” பாட்டி அதட்டுகிறாள். அம்சு மாடத்தில் விளக்கேற்றிக்கொண்டு வந்து வைக்கிறாள். “அறுப்புவுட்டு, மழ புடிச்சிக்கிச்சே, பாதி நெல்லு வூட்டுக்கு வரலியே, எங்க கெடந்து அல்லாடுறாங்களோன்னு தவிக்கிது மனசு...” “மள பெய்யிது. வாமடல துணியக்கட்டி வச்சா மீனு வுளும். எனக்குதா கண்ணு சுத்தமாத் தெரில. ஒருக்க பாரு...” என்று ஆரம்பித்துத் தமக்குள்ளேயே சிரித்துக் கொள்ளவும், பாட்டி மீண்டும் அதட்டுகிறாள். “தாத்தா அந்த காலத்துலியே இருக்காரு” என்று குந்தி இருந்து பீடி குடிக்கும் சங்கிலி சிரிக்கிறான். அப்போது, தன் பையினால் தலை முகத்துக்கு காப்புச் செய்துகொண்டு காந்தி விரைந்து வருகிறாள். தொடர்ந்து முழுதாக நனைந்த கோலத்தில் லட்சுமியும் சம்முவமும் வந்து படியேறுகின்றனர். “அட... காந்தி? நீ எப்ப வந்த?...” “வந்திட்டே இருக்கிறேன். பஸ்ஸ அன்னாண்டயே நிறுத்திட்டான். அறுப்பு வுட்டிருக்கீங்களாப்பா இன்னிக்கி? நா நெனச்சிட்டே வந்தேன். நாகபட்டணத்துக் காப்பால காற்றழுத்த மண்டலம் உருவாகிறதுன்னு ரேடியோவிலே நேத்தே சொன்னான்...” “ஒடயாரப் பாத்தியா?...” “அங்க வந்திருக்கிறாரா?... நா இன்னும் பார்க்கல அப்பா. கால பஸ்ஸில போறேன். ஒரு முக்கியமான சங்கதி, நம்ம தங்கசாமி சொன்னாரு மட்றாசில, சங்கம் கட்சின்னு இல்லாம, பலதரப்பட்ட பொண்ணுகளும் சேந்து, பெண்களை இழிவு செய்யும் விளம்பரம், பத்திரிகை, புத்தகம் இதெல்லாம் தடுக்கணும்னு பெரிய கூட்டம், ஊர்வலம் நடத்தறாங்களாம். பெண்களுக்கெதிரா அடக்குமுறை அட்டூழியம் நடப்பதை எல்லாங் கண்டிச்சுப் பேசுவாங்களாம். நான் போயிக் கலந்துக்கறேன்னிருக்கிறேன், சாவித்திரி எங்கூட வருது. புதுக்குடில இருந்து இன்னும் ஒரு அம்மா கூட வராங்க. என்ன அக்கிரமம் அப்பா? பொண்ணுகளக் கடத்திட்டுப் போயி, அரபு நாடுகளுக்கு விக்கற வேலயே நடக்குதாம்! இதுதானா நம்ம பெருமையா சொல்லிட்டிருக்கிற பாரத நாட்டுப் பண்பு, கலாசாரம்! நெனச்சா வயிறெறியிது! மண்ணத் தனிப்பட்டவன் அடிமையா வச்சிட்டு அதன் சாரத்தைக் கறந்து, சுயநலம் பெருக்கிக்கிறான். அப்பிடிப் பெண்ணையும் அடிமையாக்கி விக்கிறான்; இதை - இந்த அக்கிரமங்களைக் காட்டி, வேசம் போடுறவங்களக் கொண்டு வந்து நிறுத்தணும்! இதுக்கு முடிவு கொண்டு வரணும்!” “நான் பட்டணம் போறப்பா நாளக்கி!” லட்சுமிக்கு நெஞ்சு விம்முகிறது. அவள் தலையில் ஆதரவாகக் கை வைத்து, “முதல்ல ஈரத் துணிய மாத்திக்க காந்தி... போவலாம்...” என்று அழைக்கிறாள். சம்முகத்துக்கு நா எழவில்லை. “ஆரு இருக்கா களத்து மேட்டுல?” குப்பன் சாம்பாரின் தளர்ந்த குரல். “ஆரு இருக்கா...? ஆரு இருக்கா...?” அந்தக் கேள்வி சம்முகத்தின் உள்ளச்சுவரை மோதி எதிரொலிக்கிறது. தார்ப்பாயைப் போட்டு மூடிவிட்டு வந்திருக்கிறார்கள். நியாயமாக உழைக்கிறவன் பங்கில் இருக்கவேண்டிய மானமே இன்னிக்கின்னு இப்பிடிக் கொட்டுது. நாம அநியாயம் கேக்கலங்கிற சத்தியந்தான் இப்பக் காவல், அம்சு இந்தச் சட்டய வாங்கி உள்ள கொடில போட்டுட்டுப் பைய எடுத்திட்டு வா; இவங்கல்லாம் காத்திருக்காங்க எந்நேரமா?” அம்சு பணப்பையைக் கொண்டு வந்து சம்முகத்திடம் கொடுக்கிறாள். “கண்டு முதல் ஒண்ணும் இப்ப பாக்குறாப்பல இல்ல. வெளவு நல்லாத்தா கண்டிருக்கு எதுக்கும் இருக்கட்டும்னு பணம் கொஞ்சம் கேட்டு வாங்கி வச்சிருக்கிறேன். இப்ப பத்துப்பத்து ரூபா தாரேன். விடிந்து கணக்குப் பாத்துக்கலாம்.” இதற்காகவே காத்திருந்தவர்கள் கள்ளுக்கடைக்குத்தான் ஓடுவார்கள்! “சாம்பாரே, நீங்க இப்ப எங்க வூட்டுக்குப் போறது? இங்க இருங்க?” காந்தியை உறுத்துப் பார்க்கிறான் சாம்பார். “வடிவு நாளைக்கி வந்திருவா...” “கையி எப்பிடி இருக்கு?” “கையெல்லா நல்லாப் போயிடும்... வீரபுத்திரன் கூட வந்திடுவா, கேசுதா நடத்தணும்... ஆனா... தேவு அவுருக்குத்தா நா இப்ப மட்றாக போறதுகூட, அது முக்கியமான காரணம். நியாயம்னு உரக்கக் குரல் எழுப்பினா இப்பிடி ஒரு ஆபத்துக் கட்சின்னு போடுறது ஒரு தந்திரமா வச்சிறாங்க. இருக்கிற அக்கிரமத்தை எல்லாம் நல்ல வேசம் போடுறவந்தான் செய்யிறான். ஏன்னு கேட்டா, அவன் ஆகாதவன். தேவுவப்போல இருக்கிறவங்களுக்கும் நாம போராட வேண்டிருக்கு...” காந்தியின் ஆழ்ந்த குரலும் மங்கலான ஒளியும் அவர்கள் சமுதாயத்தின் குரலாகவே ஒலிப்பது போன்ற சிலிர்ப்பைத் தோற்றுவிக்கிறது சம்முகத்துக்கு. தலைத்துணியை அவிழ்த்துத் தோளில் போட்டுக் கொண்டு சாம்பார் திரும்புகிறான். “இப்ப என்னாத்துக்குப் போவனும்? மருமவ சோறாக்கி வச்சிருக்கா. இருந்து பேசிட்டுப் போவுறது?” சம்முகம் அவன் பின்னே வந்து அழைக்கிறார். “இருக்கட்டும்பா! நா இப்பப் போற வூட்டுக்கு பொம்புள அப்பவே வூட்டுக்குப் போயிட்டா. சோறாக்கி எதுனாலும் கசக்கிக் கொளம்பும் வச்சிருப்பா!” அவன் படியிறங்கிப் போகிறான். இருட்டிலும் அந்த உருவம் சத்திய வடிவமாகத் துல்லியமாகப் புலனாகிறது. இருளோடு அவன் மறைந்த பின்னரும், உயிர்க்குலம் வாழும் உழைப்பைக் கொடுக்கும் அந்த மனிதனின் பிம்பம் மிக அழகாக மிகப் பெரியதாக வளர்ந்து வளர்ந்து ஆணென்றும் பெண்ணென்றும் இனம் பிரிக்கமுடியாத ஓர் ஆற்றலாக அவர் கருத்தை நிறைக்கிறது. “அப்பா! உள்ளாற வந்து எதுனாலும் சாப்பிடுங்க!” வாயிற்படியில் படச்சித்திரம்போல் தோன்றும் அம்சு அழைக்கிறாள். உடல் சிலிர்த்து அவர் திரும்புகிறார். (முற்றும்) |