33

     அசட்டு 'அச்சச்சோ' லல்லு சொன்ன செய்தி சாமண்ணாவை அதிசயத்தில் ஆழ்த்தியது.

     எந்தக் கொலைக்கும் ஒரு சாட்சி உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறான்.

     ஹோட்டல் அதிபர் கொலையில் அது இல்லையே என்று நினைத்திருக்கிறான். முனகாலா தன்னை அழைத்துப் போய் விசாரித்துத் துன்புறுத்திய போதெல்லாம், 'புராணத்தில் நடப்பது போல் கடவுளே நேரில் வந்து உண்மையை உரைக்க வேண்டும்' என்று நினைத்திருக்கிறான்.

     கடவுள் வரவில்லை. ஆனால் பிரதிநிதியாக லல்லுவை அனுப்பியிருக்கிறார். தன்னுடைய சோகம் நிறைந்த வாழ்க்கையில் அது ஒரு சின்ன அமிர்தத் துளி போலிருந்தது அவனுக்கு.

     அந்தப் பெண் இன்னும் சற்று நேரம் அசட்டுப் பிசட்டென்று பேசிவிட்டுப் பிறகு கொக்கரித்துக் கொண்டு வெளியேறினாள். அவள் போனதும் அவன் சோகம் மீண்டும் மூண்டது. அந்த அசட்டுப் பெண்ணாவது பக்கத்தில் இருந்தால் தேவலை என்று தோன்றியது அவனுக்கு.

     சன்னல் பக்கம் அமர்ந்து ஊரைப் பார்த்தான். வெளிப்புறம் இருட்டியிருந்தது. காற்றில் ஒரு நாட்டுப்புற மணம் வீசியது. யாரோ பேசிக் கொண்டு போகும் பேச்சுத் துணுக்குகள் தெளிவில்லாமல் கேட்டன.

     கல்கத்தா நினைவுகள் ரயில் தொடர் போல் ஊர்ந்து வந்தன. சகுந்தலைக் காட்சிகளில் அவன் நடித்ததும், சுபத்ரா அவனிடம் சல்லாபித்ததும் பளிச்சென்று தோன்றின. ஆச்சரியம்! அவ்வளவு அழகும், புகழும் பெற்ற நட்சத்திரம் தன்னைக் கண்டு மோகித்தது ஒரு கிளுகிளுப்பை உண்டாக்கியது.

     அதே சமயம் மல்லிகை ஓடையின் நினைவுகளும் மனத்தில் பூத்தன. ஆனால்... சுபத்ராவின் அழகுக்கு முன் சகுந்தலா எங்கே?

     சகுந்தலா கல்கத்தா வந்தபோது அவள் மீது மனம் நாடவில்லை. சுபத்ராவின் போதையில் மூழ்கியிருந்தவனுக்கு சகுந்தலா துச்சமாய்த் தோன்றினாள்.

     ஆனால்... இன்று...

     காலும் மனமும் ஊனமாகி, கேட்பாரற்ற நிலையில் அனாதையாகி ஊர் திரும்பியிருக்கிறான்.

     "என்னை யாருமே திரும்பிக் கூட பார்க்க மாட்டார்களா? நான் இறந்தாலும் அழுவதற்கு ஆள் கிடையாதா? நானே தான் அழ வேண்டுமா? நானே தான் கொள்ளி போட்டுக் கொள்ள வேண்டுமா?"

     அதையெல்லாம் நினைத்துப் பார்த்த போது துக்கம் பீறிட்டது. சுய அனுதாபம் தோன்றி சகுந்தலா வரலாம் என்று நெஞ்சின் அடிவாரத்தில் தேசலாய் ஓர் ஆசை பிறந்தது. அதுவும் இப்போது மறைந்து விட்டது.

     அவள் மனத்தை எவ்வளவு துவைத்து விட்டேன்! என் அலட்சியம் அவளை எத்தனை வேதனைக்குள்ளாக்கியிருக்கும்!

     பகல் தூக்கம் தூங்கிய பிறகு கட்டிலில் எழுந்து உட்கார்ந்த போது ஆறு மணி ஆகியிருந்தது.

     "சாமு" என்று ஒரு குரல்! மெலிதான ஒரு குரல் கேட்டது. பழக்கமான குரல்! உடம்பில் பரவசம்!

     ஜன்னலில் ஒரு நிழல் தெரிய, "யாரு?" என்று கட்டிலில் இருந்தவாறே கேட்டான்.

     "யாரு! உள்ளே வாங்க!" என்றான்.

     "நான் தான் சாமு! கோமளம் வந்திருக்கேன்."

     "யாரு? வக்கீல் மாமியா?"

     "அடேடே!" என்று தன்னை மறந்து எழுந்திருக்க, கால் ஒரு போடு போட்டது.

     பல்லைக் கடித்து வேதனையை அமுக்கிக் கொண்டு, "வாங்கோ மாமி! உள்ளே வாங்கோ!" என்று உபசாரக் குரலில் அழைத்தான்.

     "இருக்கட்டும் சாமு! நான் இங்கேயே நிற்கிறேன். உள்ளே வர்றதுக்கு இல்லை" என்றாள் கோமளம்.

     சாமண்ணா யோசித்தான். 'அந்த மூன்று நாட்களாக இருக்குமோ! சீ! அந்த நாட்களில் மாமி வீட்டை விட்டு வெளியே இறங்க மாட்டாளே?'

     ஆண் பிள்ளை தனியாக இருக்கும் வீட்டுக்குள் வரத் தயங்குகிறாளோ? க்ரச்சை எடுத்துக் கீழே வைத்தான். வலி இன்னும் தீரவில்லை. காலைத் தூக்கி வைக்க முடியவில்லை.

     "கொஞ்சம் இருங்கோ மாமி! நானே வர்றேன்!" என்றான் அவன்.

     "வேண்டாம் சாமு, வேண்டாம்! நீ இங்கே வராதே! அங்கேயே இரு! காரணமாகத்தான் சொல்றேன். நானும் உள்ளே வர்றதுக்கு இல்லை!" என்றாள்.

     சாமண்ணாவின் திகைப்பு அடங்கவில்லை. தயங்கியபடியே கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

     "சௌக்கியமா வந்து சேர்ந்தியா? எல்லாம் கேள்விப்பட்டேன்! நாட்டைக் கலக்கிண்டு வருவேன்னு நினைச்சேன். உன் புகழ் ஊர் உலகமெல்லாம் பரவற நேரத்திலே, கடவுள் உன்னைச் சிறகொடிந்த பறவையாக்கிக் கூண்டிலே அடைச்சுப் போட்டுட்டாரே! அந்தக் கடவுளுக்குக் கண் இல்லை சாமு!" என்று கேவி அழுதுவிட்டாள் மாமி.

     "கடவுள் மேலே பழி போடாதீங்க. நம்ப தலை எழுத்து அப்படி! மாமா சௌக்கியமா இருக்காரா?" என்றான்.

     கோமளத்திடமிருந்து பதில் வரவில்லை.

     மாமி விசிக்கும் சத்தம் கேட்டு, "ஏன் மாமி அழறீங்க? அழாதீங்க. என் கால் போனதுக்கா?"

     பதில் இல்லை.

     "மாமி, மாமி!"

     "இங்கே தான் இருக்கேன்!" என்று கம்மிய குரலில் பேசினாள் மாமி.

     "என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா உங்களுக்கு?"

     "எனக்கென்ன? சரியாத்தான் இருக்கேன்."

     "நானே ஆத்துக்கு வந்திருப்பேன் மாமாவைப் பார்க்க! மனசே சரியில்லை! யாரையும் நானே வந்து பார்க்கிற அளவுக்கு ஆண்டவன் என்னை விட்டு வைக்கலை. ஊனப்படுத்திட்டான்."

     "இல்லை சாமு! நீ வந்திருக்கேன்னு தெரிஞ்சா மாமா சும்மா இருப்பாரா? அவரே வந்திருப்பாரே..." என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கூறினாள் கோமளம்.

     "மாமா ஊரிலே இல்லையா?"

     மீண்டும் விசிப்பு.

     "அழாதீங்க மாமி! விஷயத்தைச் சொல்லுங்க."

     "அவர் இந்த உலகத்திலேயே இல்லை சாமு. நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான்," குரல் உடைந்து கூறினாள்.

     "என்ன மாமி?"

     "மாமா போயிட்டார் சாமு!"

     "ஐயோ, நிஜமாவா? எப்ப மாமி?"

     கோமளம் பேசவில்லை. அவள் அடங்குவதற்குக் காத்திருந்தான்.

     "ஒரு மாசம் ஆச்சுப்பா. கோர்ட்டிலேர்ந்து வந்தார். நெஞ்சு வலிக்கிறதுன்னார். படுத்துண்டார். போயிட்டார்."

     "வக்கீல் மாமா போய்ட்டாரா?" அவன் புலம்பினான்.

     சாமண்ணாவுக்குக் கண் இருண்டது. ஒரு கணம் இரண்டாவது காலும் போய் அந்தரத்தில் மிதப்பது போல் தோன்றியது.

     "மாமி! என்னால இந்த துக்கத்தைத் தாங்க முடியலையே! அவரைப் பார்க்க முடியாமல் போகும்னா கல்கத்தாவே போயிருக்க மாட்டேனே! அவர் சிரிப்பும் ஸ்ரீசூர்ணமும், தலைப்பாகையும், மாமி இனி எந்த ஜன்மத்தில் பார்ப்பேன்?"

     சாமண்ணாவிடமிருந்து அவை சத்திய வார்த்தைகளாக வந்தன.

     மாமியின் தழதழக்கும் தொண்டை மட்டும் சிறிது கேட்டது. விசித்தாள்.

     மாமியின் தோற்றம் நினைவுக்கு வந்தது. தாமரை முகம். மூக்கில் பேசரியும், உதட்டில் புன்னகையும் சுடர் அடிக்கும். இன்னிக்கும் மாமி இருபத்தைந்து போல இருப்பாள். அவளை இப்போது எப்படிப் பார்ப்பது?

     "மாமி! என்னாலே இந்த துக்கத்தைத் தாங்கிக்க முடியலை மாமி! இப்படியா சோதனை பண்ணுவார் கடவுள்! எனக்கு நேர்ந்தது கூடப் பெரிசல்ல; உங்களுக்கு இப்படி ஒரு இடியா?"

     "உனக்கு என்ன ஆச்சு சாமு?" என்று மாமி துயரத்துடன் கேட்டாள்.

     "மாமி! சினிமா ஷூட்டிங்கில் குதிரை மேலேருந்து விழுந்து பெரிய ஆக்ஸிடெண்ட். காலை எடுத்துட்டாங்க."

     மாமி கலங்கிப் போனாள்.

     "சாமு!" தன்னை மீறி அவள் கூச்சல் போட்டு விட்டாள். "உனக்கா கால் இல்லை? உன் காலையா கடவுள் பறிச்சுட்டார்? என்னால தாங்க முடியவில்லையே சாமு! கடவுள் உன்னை இப்படிச் சீரழிச்சுட்டாரே!"

     மாமிக்குக் குமிறிக் குமிறி வந்தது.

     "சாமு! நாளைக்கு நான் மல்லமங்கலம் போறேன். எங்க அம்மா ஊரு அது! பந்துக்கள் இருக்கா! இனிமே இந்த ஊர்லே எனக்கு என்ன இருக்கு? உன்னையும் பார்த்துப் பேசியாச்சு. அம்மாவோடு போய்க் கிராமத்திலேதான் இனிமே வாழ்க்கை! நீ வந்திருக்கேன்னு அந்த ஓட்டல்காரப் பெண் சொன்னா. அதிலேர்ந்து துடிச்சிண்டிருந்தேன். உங்கிட்ட ரெண்டு வார்த்தையாவது பேசிட்டுப் போகணும். ஊர் ஒத்துக்காது. மனுஷா ஒத்துக்க மாட்டா. இப்படி அவர் போய் ஆறு மாசத்துக்குள்ளே வெளியிலே கிளம்பிட்டாளேன்னு கைகொட்டிச் சிரிப்பா. ஆனால் நான் தீர்மானிச்சுட்டேன்! என்ன ஆனாலும் உன்கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போறதுன்னு. பேசிட்டேன். நான் வரட்டுமா? யாரும் பார்க்கிறதுக்கு முந்தி இருட்டோட ஆத்துக்குப் போயிடறேன். வரட்டுமா சாமு? வரட்டுமா?" என்று மனமில்லாமல் அங்கிருந்து புறப்பட்டாள்.

     "போய் வாங்க! உங்களை மறக்க மாட்டேன் மாமி! ஆயுசு முழுவதும் உங்க அன்பு என் மனசிலே பதிஞ்சு போயிருக்கும்."

     சாமண்ணா எழுந்து 'க்ரச்' எடுத்து வாயிலுக்கு வருமுன் அவள் படி இறங்கி நடந்து கொண்டிருந்தாள்.

     பின்புறமும் பக்கவாட்டும் தான் தெரிந்தன. ஒரு திடீர் இடி அவன் மீது விழுந்தது போலிருந்தது.

     கோமளம் தலையை மழித்து வெள்ளைப் புடைவையால் மூடியிருந்தாள்.

     அவள் உருவம் மெலிதாகத் தெருவில் இறங்கி விரைவாக மறைந்தது.