சோழ மண்டல சதகம் - Chola Mandala Sadhagam - சதகம் நூல்கள் - Sadhagam Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com


வேளூர் ஆத்ம நாத தேசிகர்

இயற்றிய

சோழ மண்டல சதகம்

     ஒரு நாட்டின் - மண்டலத்தின் பன்முக வரலாற்றுச் சிறப்புக்களையெல்லாம் தொகுத்துக் கூறும் சதக இலக்கியங்கள் மண்டல சதகங்கள் எனப்பட்டன. ஏனைய மண்டல சதகம்போல் கட்டளைக்கலித்துறையில் பாடாமல் எளிய அறுசீர் விருத்தத்தால் பாடப்பட்டுள்ளது. சோழ நாட்டுச்சிறப்பு, மன்னர்கள், வள்ளல்கள், அடியார்கள், புலவர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளனர். கி.பி. 1723 ஆம் ஆண்டு சோழநாட்டு வேளூர் ஆத்மநாத தேசிகர் என்னும் புலவரால் இந்நூல் பாடப்பட்டது. இவர் காலம் கி.பி. 1650 முதல் 1728 வரை. இந்நூல் சித்தாமூர் பொன்வைத்தநாத சுவாமி திருச்சன்னதியில் அரங்கேற்றப்பட்டது. இந்நூலில் 105 செய்யுள்கள் உள்ளன [சதகம் 100, சிறப்புப் பாயிரம் 1, காப்பு 1, அவையடக்கம் 1, வாழ்த்து 2].

1. சிறப்புப் பாயிரம்

கொண்டலங் கரத்தின் வேளாண்
     குலத்தில்வந்து உதித்த கோமான்
கண்டலம் பொழில்சூழ் சிந்தைக்
     கனஅரு ணாச லேந்த்ரன்
அண்டலர் பரவும் காளை
     ஆத்மநா தன்செய் சோழ
மண்டல சதகம் கொண்டு
     வண்புகழ் நிறுத்தி னானே.

2. காப்பு

திருவளர் வேளாண் செல்வச்
     செழுங்குடி மிகுந்து நாளும்
வருவளம் தழைத்த சோழ
     மண்டல சதகம் பாடத்
தருகரம் ஐந்தும் ஐந்தும்
     தாழ்மதம் மூன்றும் மூன்றும்
உருவளர் முக்கண் நால்வாய்
     ஓங்கலை உன்னி வாழ்வாம்.

3. அவையடக்கம்

ஓர்ஊரைப் பாடுதல்அவ் வூருடைய கோமான்
     ஒருவனைப்பா டுதல்புலவோர்க்கு உரிமையது அல்லால்
பாரூரும் பலவாய்அவ் வூருடைய பலரும்
     பல்கியஓர் மண்டலத்தைப் பாடுவதும் எளிதோ?
நேரூரும் பழையனவாய் இருந்தசெய்யுள் வழக்கு
     நிகழ்உலக வழக்கநிலை நின்றதுறை வழியே
சீரூரும் சோழமண் டலசதகம் தனைநான்
     செப்புகின்றேன் விழுப்பொருளாய்ச் செய்வர்பெரி யோரே.

நூல்

4. காவிரியாறு

பொன்பூத் தமலர்க் கொன்றைமுடிப்
     பொழிமும் மதத்துப் பொலிமருப்பு
மின்பூத் தகரா சலமுகத்து
     மேலோன் சோழ விநாயகனே
தென்பூத் தருள்கா விரிபெருகச்
     செய்து நாளும் செழிப்பேற
வன்பூத் தழைந்து வளர்வதன்றோ
     வளம்சேர் சோழ மண்டலமே.

5. சுவாமிமலை

வெள்ளி வரையில் ஓர்சிகரம்
     விளங்கும் திருஏ ரகமலையாய்த்
தெள்ளு தமிழ்க்கீ ரனும்புகழச்
     சிறந்தாய் இடையே சிவன்தெளிய
உள்ள படியே மெய்ப்பொருளை
     உணர்த்தும் குரவன் உயர்சாமி
வள்ளல் மகிழும் திருஇருப்பு
     வளம்சேர் சோழ மண்டலமே.

6. சிதம்பரம்

எல்லா உயிர்க்கும் சிவகலைக்கும்
     எய்தும் ஒடுக்கம் சிதம்பரமே
அல்லாது இல்லை அத்தலமே
     அவனி தாங்கும் அருட்புருடன்
சொல்லார் இதய கமலம்எனத்
     தோன்ற இருந்த தொன்மையினால்
வல்லார் பணியத் தக்கதன்றோ
     வளம்சேர் சோழ மண்டலமே.

7. திருவாரூர்

அந்நாள் தமிழ்க்குத் தூதுசென்ற
     ஆதிக் கடவுள் அணிஆரூர்
பொன்நாட் டினுக்கும் அதிகம்என்று
     போந்தார் இதன்மேல் புகழும்உண்டோ?
எந்நாட் டினுக்கும் அதிகம்என்றும்
     இதற்கார் உளர்ஏற் றம்என்று
மன்னாட் டியசீர் பெற்றதன்றோ
     வளம்சேர் சோழ மண்டலமே.

8. திருவரங்கம்

கரங்கள் நாபிச் செழுங்கமலம்
     காட்ட வடிவம் கார்காட்ட
அரங்க நகர்வாய் நம்பெருமான்
     அமர்ந்தார் என்பது அறியாரோ
தரங்க வேலை இலங்கையர்கோன்
     தனக்கும் புவியோர் தங்கட்கும்
வரங்கள் தரும்வை குந்தம்அன்றோ
     வளம்சேர் சோழ மண்டலமே.

9. நல்லடியார்

பூமாது இருக்கும் பசும்துளவப்
     புயமால் உந்தி பூத்தமறைக்
கோமான் திருத்தாள் மலர்உதித்த
     குணத்தோர் சற்சூத் திரகுலத்தோர்
ஆமாறு உலகில் பல்லுயிர்க்கும்
     அனைய கொழுமீ தியின்அளிக்கும்
மாமாது உறைசோ ழியர்வாழ்வு
     வளஞ்சேர் சோழ மண்டலமே.

10. வேளாளர், காவிரி

நீதி தழைத்த மன்னவரின்
     நெடிய சோழன் நிறைந்தகொழு
மீதி தழைத்த மனைவாழ்க்கை
     வேளாண் குடியார் சோழியரே
பூதி தழைத்த பலநதியில்
     பொன்னி நதியே பூமியில்பூ
மாது தழைத்த மண்டலத்தில்
     வளஞ்சேர் சோழ மண்டலமே.

11. காவிரி, சோழர் நாடு

எந்த நதியைப் புகழ்ந்தாலும்
     இதுகா வேரிக்கு இணையென்பார்
எந்த அரசைப் புகழ்ந்தாலும்
     இவனே சோழற்கு இணையென்பார்
எந்த நாட்டைப் புகழ்ந்தாலும்
     இதுவே சோணாடு எனஇயம்ப
வந்த விசிட்டம் ஓங்கியது
     வளம்சேர் சோழ மண்டலமே.

12. காவிரி

அங்கார் பொழிய வரும்செழுநீர்
     அநந்த கோடி நதிகளுக்குள்
இங்கார் நதிகள் ஓரேழும்
     இசைக்கில் அதிகம் ஏழினுக்கும்
கங்கா நதியே அதிகம்அதன்
     கன்மம் தொலைக்கும் காவிரியே
மங்கா அதிகம் எனும்நாடு
     வளம்சேர் சோழ மண்டலமே.

13. எல்லைகள்

செல்லும் குணபால் திரைவேலை
     தென்பால் செழித்த வெள்ளாறு
வெல்லும் கோட்டைக் கரைவிளங்கும்
     மேல்பால் வடபால் வெள்ளாறே
எல்லை ஒருநான் கினும்காதம்
     இருபா னான்கும் இடம்பெரிதாம்
மல்லல் வாழ்வு தழைத்தோங்கும்
     வளம்சேர் சோழ மண்டலமே.

14. தேவாரத் தலங்கள்

தொண்டை நாட்டில் ஆறைந்து
     தொடர்ந்த பாண்டி பதினான்கு
கொண்டல் ஈழம் தனில்இரண்டு
     கொங்கில் ஏழு துளுஒன்றே
தண்து ழாயின் பசும்தொடையார்
     தவள விடையார் தலம்பலவும்
மண்டு பாதி நெடுங்கோயில்
     மருவும் சோழ மண்டலமே.

15. அடியார்கள்

பொறையார் தில்லை வாழ்முனிவர்
     புகலிப் பெருமான் சண்டீசர்
நிறையார் கலையார் பூசலையார்
     நீல நக்கன் புகழ்ச்சோழன்
முறையார் ஞானத் திருஅகவல்
     மொழிந்த கபிலர் முதலாய
மறையோர் எவரும் இமையோராய்
     வாழும் சோழ மண்டலமே.

16. திருமடங்கள்

சேணார் பரியே றும்பெரியோர்
     தெய்வப் படிமப் பதம்வைத்தோர்
கோணா நிலைமை மாணிக்கக்
     கூத்தர் காளைக் குருராயர்
பூணார் சைவ ராயருள்ளார்
     பொன்னங் கிரியில் புரிமடமும்
மாணாக் கரும்சூழ் திருஇருப்பு
     வளம்சேர் சோழ மண்டலமே.

17. சிவனுக்குக் கொடை

எந்தக் குலத்தில் பிறந்தோரும்
     இரப்போர் கரத்தில் ஈவதல்லால்
அந்தக் கடவுள் மானேந்தும்
     அங்கை ஏற்ப அளித்ததுண்டோ?
சிந்தைக்கு இனிய சோழியரே
     சிவன்பால் அளித்த சீர்த்தியினால்
வந்தித் திடும்பேர் பெறுந்தேசம்
     வளம்சேர் சோழ மண்டலமே.

18. மானக்கஞ்சாறர்

அஞ்சாது அடிகள் பஞ்சவடிக்கு
     ஆம்என்று உரைப்ப அடிவணங்கி
நஞ்சார் விழிப்பெண் புதுமணத்தில்
     நன்னாள் முடித்த நறுங்கூந்தல்
நெஞ்சார் மகிழ்ச்சி யுடன்அரிந்து
     நீட்டி உலகில் நீண்டகொடை
மஞ்சார் மானக் கஞ்சாறன்
     வாழ்வாம் சோழ மண்டலமே.

19. இளையான்குடிமாறர்

இளையான் இளையான் குடிமாறன்
     இரவில் தெறிந்த முளைவாரி
முளையா அமுதின் அமுதளிப்ப
     முக்கண் பெருமான் பசிதீர்ந்தே
கிளையா விடைமேல் தோன்றுதலும்
     கேடி லாத பதம்சேர்ந்தோன்
வளையா மகிமை படைத்ததன்றோ
     வளம்சேர் சோழ மண்டலமே.

20. அரிவாட்டாயர்

கூலிக்கு அறுத்த நெல்லரிசி
     குழந்தைக் கீரை மாவடுவும்
சாலக் கமரின் இடைக்கவிழ்த்த
     தாயன் ஊட்டி தனையரிவாள்
மேலிட்டு அறுப்ப மாவடுவின்
     விடேல் விடேலென்று ஒலிமுழங்க
மாலுக்கு அரிய பதம்சேர்ந்தோன்
     வளம்சேர் சோழ மண்டலமே.

21. ஏயர்கோன் கலிக்காமர்

ஆயும் நீதிச் சுந்தரனார்
     அடுத்து வரலும் ஆங்குஇறந்த
தூய உயிரும் படைத்தெழுந்து
     சூலை தவிர்த்து தோழமைசேர்
ஏயர் கோன்நம் கலிக்காமன்
     இல்வாழ்க் கையினீடு எழில்நாடு
வாயில் நீடு மணிமாடம்
     வளம்சேர் சோழ மண்டலமே.

22. கோட்புலியார்

துதிக்கும் பரமன் பொருள்கவர்ந்த
     சுற்றம் அனைத்தும் சுடர்வாளால்
கதிக்கும் படிமேல் அறக்கண்டார்
     கயிலைக் கிரியும் காணிகொண்டார்
குதிக்கும் புதுநீர் நாட்டியத்தான்
     குடிவே ளாளர் கோட்புலியார்
மதிக்கும் மரபோர் பெறும்காணி
     வளம்சேர் சோழ மண்டலமே.

23. சிங்கடியார்

உரைசெய் கோடி கீர்த்தியினும்
     ஒன்றே அமையும் உயர்சீர்த்தி
தரைசெய் நீதிக் கோட்புலியார்
     தந்த மகளே தன்மகவாய்ப்
பரசும் ஊரன் தேவாரப்
     பதிகம் தோறும் பதித்தபுகழ்
வரிசை உடைய சிங்கடியார்
     வளம்சேர் சோழ மண்டலமே.

24. முனையடுவார்

வீடார் தொடைக்கும் படைக்கும்இவன்
     மேலோன் என்ன வேந்தருக்குத்
தேடார் வலியார் எண்ணாரைச்
     செகுத்துப் படைத்த செழும்பொன்எலாம்
நீடாது அளித்து முனையடுவார்
     நீடூர் அமர்ந்து நெறிசேர்ந்தார்
வாடாது இருக்கும் அரசிருப்பு
     வளம்சேர் சோழ மண்டலமே.

25. செருத்துணையார்

தஞ்சைப் பதிவாழ் செருத்துணையார்
     தடந்தேர் வளவன் தன்மனையாள்
கொஞ்சத்து ஒருபூ வந்தெடுப்பக்
     குறைத்தார் நாசிக் குணமன்றே
மிஞ்சப் படுவாள் ஆண்மையினும்
     வேளாண் மையினும் மேம்பாடு
மஞ்சில் குலவும் இளஞ்சோலை
     வளஞ்சேர் சோழ மண்டலமே.

26. சத்தியார்

பரிஞ்ச வேடம் திருநீறு
     தரித்தோர்ப் புகழ்ந்து பணியாமல்
தெரிஞ்ச வாய்மை அடியாரைச்
     சீறி இகழ்ந்த செந்நாவை
அரிஞ்ச வீர விரதமுற்றும்
     அடலார் சத்தி யார்அமர்ந்த
வரிஞ்சி யூரும் தழைத்துளது
     வளம்சேர் சோழ மண்டலமே.

27. ஞானப்பிரகாசர்

பகர்ந்த கமலைத் தியாகேசர்
     பஞ்சாக் கரத்தின் பயன்அறிந்த
திகந்த குருவா யிரப்ரபந்தம்
     செய்த குரவன் திருவாரூர்
உகந்த ஞானப் பிரகாசன்
     உண்மைக் குருவின் உயர்குலத்தோர்
மகிழ்ந்த வாழ்வு பன்னாளும்
     வளம்சேர் சோழ மண்டலமே.

28. கண்ணுடைய வள்ளல்

பள்ள மலியார் கலியுலகில்
     பரமன் உருவாய்ப் பணிந்தோருக்கு
உள்ள படியீது எனஉணர்த்தி
     உலவா முத்தி உறக்காட்டிக்
கள்ள மதவல் இருள்கடிந்து
     காணும் காழிக் கண்ணுடைய
வள்ளல் கருணை செயும்சூழல்
     வளம்சேர் சோழ மண்டலமே.

29. அம்பலவாண தேசிகர்

ஒருவா மழுமான் இடமொருவி
     ஒருமா னிடமெய் உருத்தாங்கும்
அருளா கரன்அம் பலவாணற்கு
     அன்பு பெறும்ஆ வடுதுறைவாழ்
தருவார் கொடைசேர் இராமலிங்க
     சாமி தழைத்த சந்நிதியான்
மருவார் பணிபூங் கயிலாயம்
     வளம்சேர் சோழ மண்டலமே.

30. பெருஞ்செல்வர்கள்

உடையார் குலத்தில் பலவகையும்
     உயர்வே ளாளர் பலவகையும்
குடையார் குலத்தில் பலவகையும்
     கோனார் குலத்தில் பலவகையும்
அடைய வாயில் உடையாராய்&
     அளகே சனைப்போல் அருங்கடலின்
மடையார் செல்வம் பெரிதாக
     வளம்சேர் சோழ மண்டலமே.

31. சோறுடைய நாடு

வேழம் உடைத்து மலைநாடு
     மிகுமுத்து உடைத்து தென்னாடு;
தாழ்வில் தொண்டை வளநாடு
     சான்றோர் உடைத்தென்று உரைத்ததல்லால்
சோழன் புவிசோறு உடைத்தென்னும்
     துதியால் எவர்க்கும் உயிர்கொடுத்து
வாழும் பெருமைத் திருநாடு
     வளம்சேர் சோழ மண்டலமே.

32. சோழயிர் கீர்த்தி

கண்டன் கரிகா லனுக்குமுடி
     கவித்துக் காணி படைத்தோரும்
தொண்டை நாட்டின் நற்குடியாய்ச்
     சூழ அமைந்த தூயோரும்
பண்டை மநுநீ தியைத்தொகுத்துப்
     பயின்று வரும்சோ ழியர்எனவே
மண்டு கீர்த்தி படைத்தோரும்
     வளம்சேர் சோழ மண்டலமே.

33. ஆலஞ்சேரி மயிந்தன்

பயந்த மழைநீர் பெய்யாது
     பன்னீ ராண்டு பஞ்சமெல்லாம்
வியந்த சங்கத் தமிழோர்க்கு
     வெவ்வே றுதவி விடிந்தவுடன்
நயந்த காலை யெனும் தமிழை
     நாட்டும் துரைஆ லஞ்சேரி
மயிந்தன் உயர்பாண் டியன்புகழ
     வந்தோன் சோழ மண்டலமே.

34. கருப்புடையான்

தரும்போர் வளவன் பெருந்தாகம்
     தணிப்பான் உழவன் தன்னகத்தில்
கரும்பார் சாறு கெண்டியினில்
     கலிழும் தாரை காட்டுதலால்
இரும்பார் புகழ்நீ கருப்புடையான்
     என்று சோழன் முடியசைப்ப
வரும்பேர் பெறும்உத் தமர்வாழ்வும்
     வளம்சேர் சோழ மண்டலமே.

35. குண்டையூர்க் கிழார்

அண்டம் ஏறு நெல்மலைகள்
     அனந்த கோடி பொன்மலைபோல்
குண்டை ஊரன் ஊரனுக்குக்
     கொடுத்த பெருமை குறியாரோ?
தொண்டர் நீள நினைந்தவென்று
     துதிக்கும் கீர்த்திச் சோழியராய்
மண்டி வாழும் குடியிருப்பு
     வளம்சேர் சோழ மண்டலமே.

36. பரவையார் கொடை

வீடு தோறும் தெருக்கள்தொறும்
     விரிநீர் எல்லை மேடைதொறும்
நீடு பூத கணம்சொரிந்த
     நெற்போர் எல்லாம் நேர்ந்தவரே
கூடி வாரும் எனப்பரவை
     கூற முழங்கும் கொடைமுரசு
மாடு உயர்வு நிலைமையது
     வளம்சேர் சோழ மண்டலமே.

37. சுரைக்குடையான்

பாதிச் சுரைக்காய் கறிக்கும்ஒரு
     பாதிச் சுரைக்காய் விரைக்கும்என
ஆதிக் கடவுள் பசிதீர
     அளித்தாள் ஆங்கே அறஅரித்த
காதல் கணவன் மனைவியொடும்
     கயிலை காணும் கதைசூதன்
ஆதி புகலும் சுரைக்குடையான்
     மரபோர் சோழ மண்டலமே.

38. திருவீழிமிழலை

கன்னி பாகர் வீழியினில்
     கனிவாய் அப்பர் சம்பந்தர்க்கு
அன்ன தானம் செயவேண்டி
     அளித்த படிக்காசு அதற்குவிலை
செந்நெல் மாரி கொடுப்பதற்காச்
     செழுநீர் இறைத்துச் செய்துநலம்
மன்னி வாழும் குடியிருப்பு
     வளம்சேர் சோழ மண்டலமே.

39. சேந்தனார்

ஆய்ந்த முறையின் அவிழ்ந்ததுணி
     அவிழ்ந்த அமுதை அவிழ்ந்துமனம்
சார்ந்து செலுத்தி விடையேறும்
     சடையான் உரிமைத் திறம்பூண்ட
சேந்தன் இடத்தில் குலோத்துங்கன்
     சென்று பணிந்த தெய்வீகம்
வாய்ந்த மகிமை ஓங்கியது
     வளஞ்சேர் சோழ மண்டலமே.

40. ஆனைப்பாக்கமுடையான்

முட்டி லாத கடாக்களொடு
     முதிரும் கவளக் கடாக்களையும்
கொட்டில் ஊடு கட்டிவிடும்
     கோமான் அதையும் கொடைகொடுத்தோன்
பட்டம் ஏறும் புகழ்ஆனைப்
     பாக்கம் உடையான் பசுங்குடிகள்
மட்டி லாமல் நீடியது
     வளம்சேர் சோழ மண்டலமே.

41. கரிகாலன்

செல்லார் பணியும் செம்பியர்கோன்
     செழுங்கா விரியின் சிறந்தகரை
கல்லால் அணைகட் டுதற்கேவு
     கருமம் முடித்த சோழியர்கள்
பல்லார் மேழி நெடுங்கொடியைப்
     பாயும் புலியி னொடுபதித்த
வல்லாண் மையினார் குடிவாழ்வு
     வளம்சேர் சோழ மண்டலமே.

42. முனையதரையன்

புனையும் குழலாள் பரிந்தளித்த
     பொங்கல் அமுதும் பொரிக்கறியும்
அனைய சவுரி ராசருக்கே
     ஆம்என்று அருந்தும் ஆதரவின்
முனைய தரையன் பொங்கல்என்று
     முகுந்தற்கு ஏறு முதுகீர்த்தி
வனையும் பெருமை எப்போதும்
     வழங்கும் சோழ மண்டலமே.

43. அம்பர்த் தாசி

தண்ணீர் விரவும் காவேரி
     தார்வேந் தனுமே தகும்சோழன்
பெண்ணா வாள்அம் பற்சிலம்பி
     பிறங்கு மலையோ மேருவென்றே
எண்ணார் ஒளவை உரைத்தமுறை
     ஏழு புவியில் எண்டிசையின்
மண்ணா வதுதண் டலைவேலி
     வளம்சேர் சோழ மண்டலமே.

44. கருங்கண்ணி வேள்

மேழிக் கொடிசேர் கருங்கண்ணி
     வேளாண் முகப்பு மேனியமேல்
கேழில் மயிலும் உத்திரத்தில்
     கிளராடு அரவக் கிண்கிணிக்கால்
சூழப் பணிந்த தியாகருக்குச்
     சொல்லும் தியாகம் சொரிந்தோங்கும்
வாழ்விற் பெரியோன் குடிவாழ்வு
     வளம்சேர் சோழ மண்டலமே.

45. கண்டிக்கு நெல்

தேனார் தொடையார் பரராச
     சிங்கப் பெருமான் செந்தமிழ்க்குக்
கானார் நெல்லின் மலைகோடி
     கண்டி நாடு கரைசேரக்
கூனார் கப்பல் ஆயிரத்தில்
     கொடுபோய் அளித்த கொடைத்தடக்கை
மானா கரன்சங் கரன்உடையான்
     வளம்சேர் சோழ மண்டலமே.

46. காவிரி - வேளாளர் எச்சில்

விருந்து நுகர்வோர் கைகழுவ
     விளங்கும் புனற்கா விரிஎன்றால்
தரும்தாய் அனைய புகழ்ப்புதுவைச்
     சடையன் கொடைஆர் சாற்றவல்லார்
பரிந்தார் எவர்க்கும் எப்போதும்
     பாலும் சோறும் பசிதீர
வருந்தாது அளிக்க வல்லதன்றோ
     வளம்சேர் சோழ மண்டலமே.

47. பட்டினப்பாலை

குணக்கின் மலைபோல் பதினாறு
     கோடி செம்பொன் கொடுத்தவிலை
இணக்கும் ஒருபட் டினப்பாலை
     எவரும் புகழ்தற்கு எளிதாமோ
பணக்குன்று அனந்த மேருஎனப்
     பயில்கா விரிப்பூம் பட்டினம்போல்
மணக்கும் பதிகள் பலகாணும்
     வளம்சேர் சோழ மண்டலமே.

48. நாகை வேளாளர்

இசைக்கா தமிழுக்கு எல்லாரும்
     ஈந்தார் ஈந்தார் என்பதல்லால்
திசைக்கா விருது கொடிகட்டிச்
     செலுத்தும் கீர்த்தி சகத்துளதோ
நசைக்கா யிரம்பொன் கொடுத்ததலால்
     நாகைப் பதிவாழ் வேளாளர்
வசைக்கா யிரம்பொன் கொடுத்ததன்றோ
     வளம்சேர் சோழ மண்டலமே.

49. தமிழறியும் பெருமாள்

பேசும் பெருமாள் தமிழறியும்
     பெருமாள் ஒருத்தி உறையூரில்
வீசும் தமிழ்நக் கீரனையும்
     வென்றே விருதுக் கொடிகட்டித்
தேச முழுதும் கீர்த்திகொண்ட
     தெளிந்த புலமைத் திறத்தோர்கள்
வாச மலியும் தமிழ்எளிதோ
     வளம்சேர் சோழ மண்டலமே.

50. மறு இல்லாதோர்

செறிவான் மதிக்கும் மறுஉண்டு
     செய்யாள் இடத்தும் மறுஉண்டு
பெறுமால் இடத்தும் மறுஉண்டு
     பெம்மான் இடத்தும் மறுஉண்டு
குறியால் உயர்ந்த சோழியர்தம்
     குலத்தில் கூற ஒருக்காலும்
மறுவே இல்லை எனும்நாடு
     வளம்சேர் சோழ மண்டலமே.

51. சோழிய மகளிர்

ஓதும் ஆண்சித் திரம்குறியார்
     உலக்கை தீண்டார் குலக்கொழுந்தாய்
ஆதி காலம் கற்புடைமை
     அளகா புரியில் அறியநின்றார்
காதலர் ஊரைக் கடந்துசெலார்
     கரைசேர் ஆறு கடவாத
மாதர் வாழும் மும்மாரி
     வளம்சேர் சோழ மண்டலமே.

52. தேவூர் வேள்

தரிசித்து அறியும் கவுதமனார்
     தெய்வச் செயலாய்த் தேவூரில்
அரிசிக் கதிரின் பொலிவிளைந்தே
     அன்ன தானம் அளிப்பதற்காய்ப்
பரிசித் திடும்பொற் கலப்பையினால்
     பண்ணை உழுது பயன்படைத்தோன்
வரிசைக் குடிவே ளாண்பெருமான்
     வளம்சேர் சோழ மண்டலமே.

53. சோழியர் பெருமை

நூறு தொண்ணூறு எனமேலோர்
     நுவலும் தலங்கள் எவற்றினுக்கும்
வீறு சேர்ந்த தானிகமும்
     விளங்கு நிலைமைக் காணிகளும்
ஆறில் ஒன்று பெறும்வேந்தன்
     அருகில் இருப்பும் வரிசையும்சேர்
மாறி லாத சோழியரே
     வளம்சேர் சோழ மண்டலமே.

54. பாக்கம் உடையான்

ஆக்கம் மிகுந்த ஓர்புலவன்
     ஆர்ஓ லைக்கும் அடங்கான்என்று
ஊக்கம் மிகுந்த தமிழ்ப்பாட
     உரிந்து கொடுத்தான் உள்ளதெல்லாம்
பாக்கம் உடையான் எனும்வார்த்தை
     பலரும் அறிவார் அவன்வாழ்வு
வாய்க்கும் செழும்கா விரிபாயும்
     வளம்சேர் சோழ மண்டலமே.

55. அநதாரி

ஏட்டில் பொலிய ஆன்பசுஒன்று
     எழுதும் கன்றாப் புடைராயன்
சீட்டுக் கவிதை அநதாரி
     செப்பும் தமிழின் திறன்அறிந்தோன்
நாட்டில் புகழ்கன் னைக்குடையான்
     நாளும் தண்டா யுதன்பெருமை
வாட்டுப் படுமோ அவன்காணி
     வளம்சேர் சோழ மண்டலமே.

56. பொய்யாமொழியார்

திறையின் முறையென்று உலகறியச்
     செப்பும் பொய்யா மொழிதமிழ்காத்
துறையின் அளகை ராசேந்திர
     சோழன் வரிசை தொகுத்தளித்தே
அறையும் பெருமைச் சீநக்கர்
     அரசூர் முதலா ஏழூரும்
மறுவில் லாது விளங்கியது
     வளம்சேர் சோழ மண்டலமே.

57. சீநக்கர் புளியஞ்சோறு

பொய்யா மொழியார் பசிதீரப்
     புளியஞ் சோறு புகழ்ந்தளித்த
செய்யார் அரசூர் சீநக்கர்
     செய்தது எவரும் செய்தாரோ
கையார் உதவி பொறையுடைமை
     காணி யாளர் கடன்அன்றோ
மையார் புவியின் முதன்மைபெற்ற
     மரபோர் சோழ மண்டலமே.

58. தீப்பாய்ந்த ஏழு ஊரார்

புரைதீர் அரசைப் பதிபுகுந்
     பொய்யா மொழியார் புகழ்த்தமிழ்க்கா
அரசூர் முதலா ஏழூரும்
     அழலில் புகுந்தது அரிதாமோ
தரைசூழ் மதியம் மறுவாற்றும்
     சான்றோர் அஃதாற் றார்எனும்சொல்
வரையாது உலகில் பெற்றோரும்
     வளம்சேர் சோழ மண்டலமே 58

59. அம்பர் கிழான்

நல்லம் பருமோ நல்லகுடி
     நாளும் உடைத்து சித்தன்வாழ்வு
இல்லம் தொறுமூன்று எரியுடைத்துஎன்று
     இசைத்தாள் அவ்வை ஈதேயோ
சொல்லும் பெரியோர் வாழ்வுடைத்து
     தொலையாது அளிக்கும் சோறுடைத்து
வல்லம் பெரியோர் அவையுடைத்து
     வளம்சேர் சோழ மண்டலமே.

60. கடுவாய்க்கரைப் புத்தூர்

வித்தூர் ஆவி விடுத்தாலும்
     மேலோர் கருமம் விடுப்பாரோ
கத்தூர் தரங்கம் இரங்குபுனல்
     கறங்கூர் கடுவாய்க் கரைநீடு
புத்தூர் அமர்ந்த வேளாளர்
     புரிகோ புரமும் பொன்மதிலும்
வைத்தார் நந்தி காட்டியது
     வளம்சேர் சோழ மண்டலமே.

61. இரட்டைப் புலவர்

யோகாம் பெரிய சோழியர்வாழ்வு
     உடையார் ஈகை உடையாராய்ப்
பாகாம் பழைய கல்வியினும்
     பயின்றோர் என்னும் பரிசறிந்தோம்
ஏகாம் பரனார் கச்சியுலா
     இசைக்கும் புலவர் இரட்டையர்கள்
வாகாம் பதியார் இலந்துறையாய்
     வழங்கும் சோழ மண்டலமே.

62. தேவாரத்தில் வேளாளர்

ஏரின் உழவர் நெடும்பெருமை
     எமையாள் உமையாள் இளமுலைப்பாள்
ஊரும் பவளக் கழுமலத்தார்
     உரைத்தார் இதன்மேல் உயர்ச்சியுண்டோ
ஆரம் அணியும் திருமார்பன்
     அன்னார் அறம்செய் தரும்நாடு
வார முகில்தாழ் மணிமாடம்
     வளம்சேர் சோழ மண்டலமே.

63. வேளூர் கிழான்

தாளூர் மலரான் மனைப்படப்பைத்
     தணிக்கத் தரிமுள் தகைந்திழுப்பக்
கேளூர் முந்தா னையைவிடுவாய்
     கெடுவாய் என்ற கிளிமொழியால்
வேளூர்க் கிழவன் தன்மகளை
     வெந்தீப் புகுத விடுத்தகதை
வாளூர் சாபம் ஓங்கியது
     வளம்சேர் சோழ மண்டலமே.

64. காணியாளர்

எல்லா விளக்கும் விளக்கல்ல
     இதுவே விளக்காய் முக்குளத்தின்
நில்லார் அவியா விளக்குடனே
     நிரையாய் மூழ்கி நிலைநின்றார்
பல்லார் அறுபான் நான்குகுடிப்
     பழையோர் கரிகால் பார்த்திபற்கே
எல்லா மகுட முடிசூட்டும்
     வளம்சேர் சோழ மண்டலமே.

65. நாங்கூர் அதிபன் சேந்தன்

தேங்கூர் இதழிச் சடைக்காடர்
     திருவெண் காடர் திருவருளால்
ஆங்கூர் மலர்க்கைத் தளைதனையும்
     ஆசைத் தளையும் அறவிடுத்த
நாங்கூர் அதிபன் சேந்தபிரான்
     நலங்கூர் அவனி நாடாண்மை
வாங்கூர் பெருமை நெடுந்தோற்றம்
     வளம்சேர் சோழ மண்டலமே.

66. சத்திமுற்றப் புலவர்

நினையும் கழற்கால் சிலம்பலம்ப
     நின்ற பெருமான் நிலைபாடிப்
பனையின் கிழங்கு பிளந்ததெனப்
     பவளக் கூர்வாய் நாரையென்றே
புனையும் முதல்நூல் சத்திமுற்றப்
     புலவன் அமுது புசித்தூற
வனையு மதுரத் தமிழ்வாடை
     மணக்கும் சோழ மண்டலமே.

67. தக்கயாகப் பரணி

ஒத்தது உணர்ந்த நாடனைத்தும்
     ஒருங்கே கூடி உயர்கூத்தன்
கத்தி அலையத் துரத்துதலும்
     கசிந்து காழிக் கவுணியர்கோன்
பத்தி யுடனே தக்கன்மகப்
     பரணி பாடப் பணிந்துமுத்தின்
வைத்த சிவிகை மகிழ்ந்தேற
     வைத்தார் சோழ மண்டலமே.

68. குடந்தை மருதன்

தாழப் புதைக்கும் திருத்தங்கித்
     தடங்கா வாழை தனிபழுப்பப்
பாழிப் புயமா மலைமருதன்
     பலர்க்கும் உதவும் பான்மையினால்
காழில் பொலியும் இலையரிதாய்க்
     காயும் அரிதாய்க் கனியுமின்றி
வாழைக் குருத்தும் கிடையாத
     வளம்சேர் சோழ மண்டலமே.

69. எட்டில் ஒன்று

உறும்தென் புலத்தார் தெய்வம்விருந்து
     ஒக்கல் தானென்று ஓரைந்தும்
பெறும்தென் புவியில் எட்டிலொன்று
     பெற்றார் இதுவே பெற்றதன்றோ
சிறந்த சோழன் பெருமையினும்
     சிறந்தோர் வேளாண் தருமரபோர்
மறந்தும் பொய்யா தவர்வாழ்வு
     வளம்சேர் சோழ மண்டலமே.

70. புங்கனூர்க் கிழவன்

அறங்கூர் பெரியோம் அரசுவரில்
     ஆற்றாது அஃதே அமைகஇனிக்
கறங்கூர் கெண்டை புரட்டும்எனக்
     கலியா ணத்தில் கவிகேட்டுப்
புறங்கூர் பவளக் கடாமுழுதும்
     பொன்னங் கலத்தில் புடைசொரிந்த
மறங்கூர் புங்க னூர்க்கிழவன்
     வளம்சேர் சோழ மண்டலமே.

71. இராமாயண அரங்கேற்றம்

திண்மை ஏறும் கம்பனிடம்
     செய்யத் தகுமென் சிறப்பீந்து
நன்மை ஏறும் இராமகதை
     நற்பேர் புவியில் தழைத்தேற
உண்மை ஏறும் திருவரங்கத்து
     ஒருவன் சபையில் உத்தரநாள்
வண்மை ஏற அரங்கேற்றி
     வைத்தார் சோழ மண்டலமே.

72. சடையன் புகழ்

எட்டுத் திசையும் பரந்துநிலா
     எறிக்கும் கீர்த்தி ஏருழவர்
சட்டப் படும்சீர் வெண்ணெய்நல்லூர்ச்
     சடையன் கெடிலன் சரிதமெலாம்
ஒட்டிப் புகழ ஆயிரநா
     உடையாற்கு அன்றி ஒருநாவின்
மட்டுப் படுமோ அவன்காணி
     வளம்சேர் சோழ மண்டலமே.

73. இணையார மார்பன்

தீரம் பெரிய தென்னர்பிரான்
     சிங்கா தனத்தில் சேருமிவன்
ஆரென்று உரைப்ப நம்பிஇணை
     யார மார்பன் அடியேற்கும்
சாரும் சரரா மனுக்குமொரு
     தம்பி எனக்கம் பண்புகழும்
வாரம் பெறுவெண் ணெயர்பெருமான்
     வளம்சேர் சோழ மண்டலமே.

74. தாசி வல்லி

தனதா னியத்தின் உயர்ந்தோர்கள்
     தாமே என்னும் தருக்கேயோ
வினவாது இரவில் நெற்கதிரால்
     வேய்ந்தார் வல்லி வீடதல்லால்
கனிசேர் தமிழ்க்குப் பன்னிரண்டு
     கடகம் யானைக் காடளித்த
மனைவாழ்வு உடையான் வெண்ணெய்நல்லூர்
     வாழ்வான் சோழ மண்டலமே.

75. இராமகாதையில் சடையன்

எண்ணத் தகும்பார் உள்ளளவும்
     இரவி மதியம் எழும்அளவும்
கண்ணற்கு இனிய சயராம
     கதையில் ஒருபான் கவியமுதும்
வெண்ணைச் சடையன் சடையன்என
     விறல்ஆர் கம்பன் விளங்கவைத்த
வண்ணத் துரைவே ளாண்பெருமான்
     வளம்சேர் சோழ மண்டலமே.

76. வெண்ணெய்நல்லூர்

விள்ளும் மதுரை அலங்கரித்த
     வீம்பு நோக்கி வெண்ணெய்நல்லூர்
உள்ளும் இடுகாடு ஒக்கும்என
     உரைத்தார் கம்பர் உரைத்தமுறை
அள்ளும் அணியாற் பசும்பொன்னால்
     அமரா பதிபோல் அலங்கரித்தே
வள்ளல் வழுதி அதிசயிப்ப
     வாழ்ந்தோன் சோழ மண்டலமே.

77. கன்றாப்புடையான்

பொன்றாப் புகழோன் தில்லைவண்ணம்
     புகன்றோன் வெண்பா ஒன்பதுபொன்
நன்றாற் றியபொன் நூறுவண்ணம்
     நாட்டி விருது நாட்டியகோன்
கன்றாப் புடையான் பேருடையான்
     கல்வி யுடையான் கனவாழ்வு
மன்றாப் பொலியும் திரள்வீதி
     வகித்தார் சோழ மண்டலமே.

78. திருத்தொண்டத் தொகை

தரைமேல் நாவ லூர்இறைவன்
     தடுத்தாட் கொண்ட தற்பரனைக்
கரைசேர் பித்தா எனஓதிக்
     காட்டும் பவளக் கனிவாயான்
உரைசூழ் திருத்தொண் டத்தொகையின்
     நெருங்கும் அடியார் உடன்நிகழ்த்த
வரையாது அளித்த கொடைவேளாண்
     மரபோர் சோழ மண்டலமே.

79. சேக்கிழார்

காக்கு நீதி இரவிகுலக்
     கழற்கால் வளவன் கனிந்தேவ
சேக்கி ழார்தம் திருவாயில்
     தெளிந்த முதல்நூல் செழுக்கதையின்
மேக்கு யாவும் திருவேட
     மெய்யே பொருளா வீடுபெற்றோர்
வாய்க்கு யாவும் புகழ்வேளாண்
     மரபோர் சோழ மண்டலமே.

80. கம்பர்க்கு உதவி

பெற்று வளர்த்தும் வித்தைதனைப்
     பேணிக் கொடுத்தும் பெயர்கொடுத்தும்
பற்ற அரும்பால் அமுதளித்தும்
     பகைத்த வறுமைப் பயந்தீர்த்தும்
கற்ற முதல்நூல் திருவழுந்தூர்க்
     கம்பன் தழையக் கருணைசெய்தோர்
மற்றும் புலவோ ரையும்வாழ
     வைத்தார் சோழ மண்டலமே.

81. ஏர் எழுபது

குணங்கொள் சடையன் புதுச்சேரிக்
     குடையான் சேதி ராயன்முதல்
கணங்கொள் பெரியோர் பலர்கூடிக்
     கம்ப நாடன் களிகூர
இணங்கும் பரிசில் ஈந்துபுவி
     ஏழும் புகழ்ஏர் எழுபதெனும்
மணங்கொள் பெருங்காப் பியப்பனுவல்
     வகித்தார் சோழ மண்டலமே.

82. கம்பர் - இறுதிநாள்

ஆன்பால் நறுந்தேன் முக்கனிநீடு
     அமுதின் சுவையா றுடன்அருந்தித்
தான்பால் அணைய மறப்பதிலைச்
     சடையான் என்று தமிழ்ஓதும்
தேன்பாய் அலங்கல் கம்பனுக்குச்
     செழும்பா ரிடத்தில் செய்தநன்றி
வான்பா லிருக்கச் செய்துநலம்
     வைத்தார் சோழ மண்டலமே.

83. இராமாயண உத்தரகாண்டம்

பூணி லாவும் கம்பன்நலம்
     பொலியும் தமிழால் பொலிவெய்திக்
காணு மாறு காண்டம்உறும்
     கதையில் பெரிய காதையெனும்
தாணி லாவும் கழல்அபயன்
     சபையில் பயில்உத் தரகாண்டம்
வாணி தாசன் அரங்கேற்ற
     வைத்தார் சோழ மண்டலமே.

84. அறுபத்துநான்கு குடி

ஈழ நீத்தோன் அவளைத்திரை
     இரும்பால் பூட்டும் வரம்படிக்கும்
காழில் வெறித்த கார்முழுதும்
     கரத்தின் மேலாம் கவிமுழுதும்
சூழும் பொதுவில் சிறப்பாகத்
     தொடுக்கப் புனைந்த தொன்மையினோர்
வாழும் அறுபால் நான்குகுடி
     வளம்சேர் சோழ மண்டலமே.

85. குடிதாங்கி

உலகில் இலம்என்று உரையாமே
     உதவல் குணத்தோர்க்கு உளதாமே
இலகும் எறும்புக் கால்பதம்வேறு
     இல்லை எனயா வதும்ஈந்தான்
புலவன் மகிழ்ந்து பிற்பாதி
     புகலக் கேட்ட புகழாளன்
மலைகொள் புயத்துக் குடிதாங்கி
     வளம்சேர் சோழ மண்டலமே.

86. பெரியபுராண அரங்கேற்றம்

குலத்தில் பெரியோர் பேர்படைத்த
     குணத்தில் பெரியோர் கொடைப்பெரியோர்
தலத்தில் பெரிய அநபாயன்
     தழைத்த சமூகம் தனில்ஏறிப்
பலத்தில் பெறுபஞ் சாக்கரநீள்
     படியில் பெரிய புராணத்தை
வலத்தில் குலவ அரங்கேற்றி
     வைத்தார் சோழ மண்டலமே.

87. சிலம்பன் திருவேங்கடன்

நாமே வியசொல் இலக்கணமாம்
     நன்னூ லகத்து நாட்டிவைத்த
பூமேல் எனும்பா டலுக்குஅளித்த
     பொன்ஆ யிரமும் போதாதோ
தேமே விடுமா லையும்கொடுத்த
     சிலம்பன் திருவேங் கடன்வாழ்வு
மாமே வியபூம் பொழில்வாவி
     வளம்சேர் சோழ மண்டலமே.

88. புத்தூர் வேள்

இடமண் டியயாப் பருங்கலநூல்
     எனும்கா ரிகையில் பதித்தமணித்
தடமண் டியதா மரையின்எனும்
     தமிழ்போல் உலகம் தனில்உண்டோ
திடமண் டியஅத் தமிழ்க்குதவும்
     சீமான் செழும்தென் மண்டலமும்
வடமண் டலமும் பரவுபுத்தூர்
     வளம்சேர் சோழ மண்டலமே.

89. கருணாகரன்

பூதம் பணியச் சீட்டெழுதிப்
     பொருளாய் லட்சம் பொன்கொடுத்த
ஓதும் பூத மங்கலவாழ்வு
     உடையான் ஈதல் உடையானே
காதல் சேரும் கடாரமெலாம்
     கண்ட கருணா கரப்பெருமான்
மாது பாகன் திருப்பணிக்கே
     வைத்தார் சோழ மண்டலமே.

90. முட்டம் உடையான்

கொட்டம் உடையான் கீழக்கோ
     புரமும் மதிலும் குறித்தமைத்தே
முட்டம் உடையான் மகபூசை
     முழுதும் உடையான் மொய்ம்புடையான்
பட்டம் உடையான் காவிரிப்பூம்
     பதியும் உடையான் பரிந்தகுடை
வட்ட நிழலில் குளிர்ந்ததன்றோ
     வளம்சேர் சோழ மண்டலமே.

91. தியாகராசப் பள்ளு

கருணா கரன்செய் திருப்பணியைக்
     கருதி நலமாய்க் கண்டுசெய்த
பொருளீ நாலத் தொன்றுடையான்
     பூமி யானைப் போல்ஆரோ
திருவா ரூரில் வன்மீகத்
     தியாக ராசப் பள்ளுதந்தும்
மருவார் பணிய அரங்கேற்றி
     வைத்தார் சோழ மண்டலமே.

92. கணம்புல்லர்

போற்றா மற்பெண் ணார்அழலில்
     புகுந்தாள் அதிலும் புதுமையிது
முற்றா எழுந்த கணம்புல்லால்
     மூடிப் பாத முடியளவாய்
பற்றா உடலை விளக்கேற்றிப்
     பரனுக்கு ஏற்பப் பதித்தபுரி
வற்றா நிலைமைக் கணம்புல்லன்
     வாழ்வாம் சோழ மண்டலமே.

93. விண்ணன் ஆறு

கண்ணார் உலகில் பகீரதனும்
     கண்டு கொணர்ந்தான் கங்கையென்பார்
விண்ணாறு எளிதோ ஆறுதந்த
     வேளாண் குரிசில் விண்ணன்அன்றோ
தண்ணார் முள்ளி ஓடம்வரச்
     சம்பந் தனும்செந் தமிழ்பாட
மண்ணாள் செல்வம் பெருங்கீர்த்தி
     வகித்தார் சோழ மண்டலமே.

94. திரிகர்த்தராயன்

அளிக்கும் படைமூ வேந்தரும்கொண்
     டாடும் விருந்தால் அதிசயமாய்த்
திளைக்கும் திரிகர்த்த ராயன்எனச்
     செப்பும் வரிசைத் திறம்சேர்ந்தோன்
விளைக்கும் அரிசி மாற்றியநீர்
     வெள்ளம் கிழங்கு விளையும்என
வளைக்கும் பெருமைப் புதுவையர்கோன்
     வளம்சேர் சோழ மண்டலமே.

95. பாண்டிநாட்டில் சோழியர்

ஓதார் காரைக் காடர்குடி
     ஒன்று கொடுத்தே உயர்மாறன்
கொத்தார் கொடைவே ளாளர்குடி
     கொண்டே மதுரை குடியேற்றிப்
பத்தார் திசையில் இருங்கள்எனப்
     பாண்டி நாடன் பட்டமிட்டு
வைத்தார் வேளூர்க் கிழவனது
     மரபோர் சோழ மண்டலமே.

96. காங்கேயன் நாலாயிரக்கோவை

கோலா கமலன் னரில்அவன்போல்
     கொடுத்தே புகழும் கொண்டோர்ஆர்
மேலார் கவுடப் புலவன்எனும்
     விழுப்பேர் கூத்தன் முழுப்பேராய்
நாலா யிரக்கோ வையும்புனைய
     நவில்கென்று இசைத்து நாட்டுபுகழ்
மாலாம் எனும்காங் கயன்வாழ்வு
     வளம்சேர் சோழ மண்டலமே.

97. பெருமங்கலமுடையான்

களத்தில் பொலிகா டவன்பணியக்
     கண்டான் கொண்டான் களவகுப்புத்
தளத்தில் பெரிய வடஅரசர்
     தாமேல் இடும்பொய்த் தலைகொண்டான்
உளத்தில் பரவு காளியருள்
     உடையான் சோழன் உறுப்புடையான்
வளத்தில் பெரும்மங் கலமுடையான்
     வளம்சேர் சோழ மண்டலமே.

98. வீரசோழியம்

ஆர வார இலக்கண நூல்
     ஐந்தும் முழங்க அதிற்குஎதிர்நூல்
பாரின் மீது தமிழ்க்கூத்தன்
     பாடி அமைத்தான் பயன்ஓர்ந்தே
வீர சோழன் உடன்இருந்து
     வியந்தே வீர சோழியநூல்
வாரம் ஏற அரங்கேற்றி
     வைத்தார் சோழ மண்டலமே.

99. இந்திரன்

எந்த நாடு தளர்ந்தாலும்
     இதுவே தாங்கும் இன்னம்இன்னம்
புந்தி நாடிப் பொன்னாடு
     புரந்தார் குடியும் புறப்பட்டார்
சொந்த நாடாய் வந்திருந்து
     சூரன் ஒடுங்கச் சுகமாகி
வந்து வானும் குடியேற
     வைத்தார் சோழ மண்டலமே.

100. நெம்மேலித் தச்சன்

நிச்சம் உறவே நெல்பயிராய்
     நீளும் தமிழ்க்கு நெம்மேலித்
தச்சன் பொலிஆ யிரக்கலநெல்
     தந்தான் உலகிற்கு ஆதரவாய்
மெச்சும் அவனது ஆண்மையினால்
     வென்றே கொடியின் விருதுகட்டி
வைச்ச கொடையின் திறம்எளிதோ
     வளம்சேர் சோழ மண்டலமே.

101. கன்றாப்பூர் நடுதறி

தோளார் தொடையான் அரும்புடையான்
     தோன்றல் திருமால் தொண்டனுமாய்
வேளாண் மகளை மணம்புணர்ந்து
     விழைந்தான் அவளும் விடையூர்திக்கு
ஆளாய் அன்பின் நடுதறியை
     அருச்சித்து இலிங்க மாகவைத்து
மாளா நிலைமைக் கற்புடையாள்
     மரபோர் சோழ மண்டலமே.

102. அம்பலப்புளி

தெளிவந்து அயன்மால் அறியாத
     தில்லைப் பதிஅம் பலவாணர்
புளியம் பொந்தின் இடம்வாழும்
     புதுமை காட்டிப் பொருள்காட்டி
எளிதில் புளியங் குடியானென்று
     இசைக்கும் பெருமை ஏருழவர்
வளரும் குடியில் பெருவாழ்வு
     வளம்சேர் சோழ மண்டலமே.

103. நூல் அரங்கேற்றம்

சுத்த குலசோ ழியருமுடி
     சூட்டும் காணி யாளர்களும்
கத்தர் எனவே வரவழைத்துக்
     கவிக்கும் கனக மழைபொழிந்தே
சித்தர் எனும்பொன் வைத்தவர்சந்
     நிதியில் சதகம் அரங்கேற
வைத்த அருணா சலராயன்
     வாழ்வாம் சோழ மண்டலமே.

104. வாழி

அளகை ராசன் வாழிபொன்னி
     ஆறு வாழி முகில்வாழி
புளகம் மிகுசோ ழியர்வாழி
     பொன்வைத் தவர்சந் நிதிவாழி
தழையும் சதகம் வாழிகொழு
     மீதிவாழி சோணாட்டில்
வளரும் குடிகள் மிகவாழி
     வாழி சோழ மண்டலமே.

105. வாழி

சத்திரிபதியாம் சகசிமக ராசன் வாழி
     தஞ்சைநகர் வாழிசமஸ் தானம் வாழி
அத்தர்பொன்வைத் தவரும்அகி லாண்டம் வாழி
     அருள்வாழி இசைந்தரா மப்பர் வாழி
உத்தமவே ளாளர்குல உயர்சித் தாமூர்
     ஊரிலுள்ளோர் அனைவர்களும் உவந்து வாழி
வைத்தசோ ழியர்குடிகள் அனைத்தும் வாழி
     வையகமெல் லாம்தழைத்து வாழி தானே.

106. நூல் இயற்றிய காலம்

சீர்கொள் பிரபவ வருடம்
     திகழும் இடபத் திங்கள்
நார்கொள் இருபான் தேதி
     நவிலும் பானு வாரம்
கார்கொள் அமர பக்கம்
     கருதும் தசமி திதியே
ஏர்கொண்டு இலங்கும் இருபத்து
     ஏழாம் நட்சத் திரமே.

107

இன்னண ஆய நாளே
     எழுதினான் கன்னல் வேளூர்
மன்னிடும் ஆன்ம நாத
     மாப்பெரும் குரவன் ஆவான்
மன்னிய வளம்சூழ் சோழ
     மண்டல சதகம் தன்னைச்
சொன்னநூற் றைந்து பாவாய்
     சொல்லினில் துலங்க மாதோ!

சோழ மண்டல சதகம் முற்றிற்று
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247