அமிர்த கவிராயர்

இயற்றிய

கோகுல சதகம்

காப்பு

கட்டளைக் கலித்துறை

சீர்மேவு பாடியில் வாழண்டர் செல்வஞ் செழிப்புறவே
ஏர்மேவு கோகுல மேன்மைச் சதக மிசைப்பதற்கு
நீர்மேவு மண்ட சராசர மியாவுமோர் நீள்சுடருங்
கார்மேவு முந்தியிற் காத்தான் கழலிணை காப்பதுவே.

நூல்

கட்டளைக் கலித்துறை

மணங்கொண்ட வேதன் முகத்திற் புயத்தில் வளர்குறங்கிற்
கணங்கொண்ட பாதத்திற் றோன்றிய நான்கும் கவின்பெறவே
பணங்கொண்ட பாம்பணை யானமிர் தூறுமிப் பார்தழைக்கக்
குணங்கொண்டு முன்வரு மன்பர்தங் கோத்திரர் கோகுலரே. 1

அண்டங்க ளாயிரம் கோடியுண் டாக்க வலர்ந்தவிதழ்
முண்டக னாகிப் பராபரன் பாரில் முறைநிறுத்த
மண்டலத் தேவகி பால்வசு தேவன்கை வாய்க்கப்பெற்ற
கொண்டலை யேந்தி வளர்த்தோர்கள் பாடியிற் கோகுலரே. 2

பழையானை யெட்டக் கரத்தானைத் தன்பதம் பற்றினருக்
கிழையானை யானைமுன் னேயெதிர் வானை யெழிற்கருணை
மழையானை ரோகணிப் பாலுதித் தானை மலிந்தவொரு
குழையானை யேந்தி வளர்த்தோர்கள் பாடியிற் கோகுலரே. 3

நிலவிய வணடம் பகிரண்ட கோடியை நேர்படைத்து
நலமுள தாமரை நாபியிற் காத்தவந் நாரணற்குப்
பலவித மாகிய பூச்சூடு நூற்றெண் பதியுரைக்கக்
குலவிய பாட லுரைத்தோர்கள் பாடியிற் கோகுலரே. 4

மழவியல் பாக மடிமீ திருத்தி வனசமுகத்
தழகுந் திருவு மருந்திக்கண் ணாலன்பு மானமறைப்
பழமிது வேயெனப் போற்றிய கண்ணனைப் பாரிற்றங்கள்
குழவியைக் காப்பிடு பாடலு ரைத்தவர் கோகுலரே. 5

தேறப் புவியின் மறையைக் கடைந்து திரட்டமுதம்
ஏறக் கைரயினில் வைத்தது போல வெடுத்ததமிழ்
மீறப் பதின்மர்க ணாலாயி ரத்தினு மெய்ப்புகழைக்
கூறச் சிறந்து வளர்வோர்கள் பாடியிற் கோகுலரே. 6

பண்டா டியதழ லாடியும் பாம்பின் படத்திலன்பு
கொண்டா டியுமொன்று மாய்நின்ற மாலண்ட கோளமெல்லாம்
உண்டாடி யுங்கடு கொவ்வாத வாயிலுறி யின்வெண்ணெய்
கொண்டாடி யுண்டு தெவிட்டச்செய் தாரவர் கோகுலரே. 7

முறையாக நற்றவஞ் செய்திடு வோருடன் முற்றுநின்று
மறையாமற் றேவர்க்கு மாந்தர்க்கும் வேள்வி வகுத்தருளை
நிறைவாகத் தந்து மலர்வாச முற்று நிலைத்த செல்வங்
குறையாத பின்னை யெனுந்திரு வீன்றவர் கோகுலரே. 8

தொடுத்தகல் யாணத் தெருதேழ் கொடுநிற்கச் சூதசுரர்
எடுத்தெறீ யத்தெய்வ வுருவாகி, யோங்கிய வேற்றைவெல்ல
அடுத்துநங் கண்ணனிவரை யழைக்கவந் தகனடுங்கிக்
கொடுத்தா னுயிரைப் பிழைத்தோர்கள் பாடியிற் கோகுலரே. 9

ஞாலங்கண் டோங்கிய நானுமுகன் கண்ணுநற் றேவர்கண்ணும்
ஆலங்கண் டோடிய வயிராணி கேள்வற் கலர்ந்தகண்ணும்
மூலங்கண் டோமெனுங் காண்பரி தான முகுந்தன்மணக்
கோலங்கண் டேகண் குளிர்ந்தோர்கள் பாடியிற் கோகுலரே. 10

நளிர்மலர் நாப னயந்தண்ட ருய்ய நடுக்கடலை
ஒளிர்மலை மத்திற் கடைந்ததிற் றோன்றிய வொண்பொருளிற்
றளிரியல் பார்ந்த திருவை மணந்துபின் றந்தமுதைக்
குளிர்ந்தன்பு கூர்ந்து கொண்டோர்கள் பாடியிற் கோகுலரே. 11

வானென்ற சொர்க்கப் புரந்தரன் றானு மாலயனுந்
தேனென்ற சொல்லுமை கேள்வனு மற்றுள்ள தேவர்களுந்
தானென் றுலகுக் கரசரும் பூணத் தகாவிஜயக்
கோனென்ற மேன்பட்டங் கொண்டோர்கள் பாடியிற் கோகுலரே. 12

அடுக்குந் தொழிலவர்க் காகிய தேவிரு தாகப்பெற்றார்
எடுக்குந் தொறுமதி லேற்றமுண் டேயெங்க ணாரணனே
தொடுக்குங் கருணை புரிந்தே தனது சுடர்க்கரத்தாற்
கொடுக்கக் கருடக் கொடிபடைத் தாரவர் கோகுலரே. 13

நற்றுஞ் சுருதியுங் காணாத நாரண னற்றுளபம்
பெற்ற திருவின் னகைபோன்ற மாரன் பிடித்தவம்பால்
முற்றுஞ் செயஞ்செய்த கால்அங்ங னேஇன் னமிர்துதவிக்
கொற்றந் தருமுல்லை மாலையைத் தாங்கினர் கோகுலரே. 14

மண்டலந் தன்னி னிலனைந்து கூறதில் வண்மைபெறுந்
தண்டலை நன்னதி சார்மயி லானிரை தார்குருந்து
விண்டலத் தோர்மகிழ் வேய்ங்குழ லோசை விளங்குபைந்தேன்
கொண்ட வளந்தரு முல்லைத் தலைவர்கள் கோகுலரே. 15

ஆவர்த் தனையுள்ள வெத்தனை யோகுடி யாய்த்தழைத்தோர்
மாவர்த் தனையுள்ள முல்லை நிலத்தர் மலர்நிறைந்த
காவர்த் தனையுள்ள யமுனையுங் காவிரி காளிந்தியுங்
கோவர்த் தனமலை யுள்ளோர்கள் பாடியிற் கோகுலரே. 16

வேலாயு தம்பிடித் தான்முரு கேசன்வெள் வெற்புறைவோன்
சூலாயு தம்பிடித் தான்சசி காந்தன் சுடரும்வச்சிர
மேலாயு தம்பிடித் தான்கஞ்ச னேவிய மேதிக்கன்றைக்
கோலாயு தம்பிடித் தானாயர் பாடியிற் கோகுலரே. 17

தலஞ்சுத்தி யாகவுந் தார்வேந்தர் சென்னி தரிக்கமுடி
நலஞ்சுத்தி யாகவு நானிலத் தாலய நான்மறையோர்
பலஞ்சுத்தி யாகவும் பதினெட்டுச் சுத்தங்கள் பண்ணவுநற்
குலஞ்சுத்தி யாம்பஞ்ச கௌவிய மீந்தவர் கோகுலரே. 18

சுற்றிய பாரிலுண் டாகிய தோற்றஞ் சுகம்பெறவே
மற்ற முயற்சியில் வருவதுண் டோவளங் கூர்சதுர்த்தர்
பற்றிய தங்க டொழில்கடைத் தேறிஅப் பலனுறவே
கொற்றநல் லேறு கொடுத்தோர்கள் பாடியிற் கோகுலரே. 19

புழுங்கிய கோபத்தி லந்தகன் சாபம் பொறுத்தவங்கி
மழுங்கிய தன்னுரு வோடு மறைந்திட மன்னுயிர்கள்
அழுங்கிய போதினி லந்தணர் யாகமனைத் துஞ்செய்யக்
கொழுந்தனல் காட்டு மரணிதந் தாரவர் கோகுலரே. 20

பிலமா மிலங்கையை வென்றுகற் பாகிய பெண்ணரசை
நலமாக மீட்டு வரும்போது தண்டக நன்முனிவர்
பலமா மிராமனைத் தழுவ நினைக்கவப் பாடியினீர்
குலமாத ராகப் பிறக்க வளர்த்தவர் கோகுலரே. 21

உண்டா கியபதி னாறா யிரம்பெண்ணை யோங்குகண்ணன்
கண்டான் கமலத் திருவொப்ப வேகலியா ணஞ்செய்யப்
பண்டான வூர்வலம் வாழ்நாக வல்லி பரிமளநீர்
கொண்டாடி யேழ்தினஞ் சோபனம் பாடினர் கோகுலர். 22

பண்டான வாய்மை நினைந்தே மலரயன் பாரதனில்
உண்டான கண்ணன் றிருவிளை யாடலுணர்த்தக் கன்றுந்
தொண்டான் வாய ருடன்மறைத் தேகவுந் தோன்றுருவங்
கொண்டானை யன்புடன் கொண்டாண்ட செல்வர்கள் கோகுலரே. 23

பாடிக்கொள் நாரதன் எண்ணிரண்டாயிரம் பாவையரில்
நாடிக்கொண் டேயொன்று தாவென்ற போதினி னானின்மையைத்
தேடிக்கொண் டேகெனக் கண்ணினிற் றோன்றுந் திருவுருவாய்க்
கூடிக்கொள் செல்வப் பதிபெற்ற பேறவர் கோகுலரே. 24

நீட்டுற்ற சாகையின் சூர்மாவை வேல்கொடு நீக்கிவெற்றி
காட்டு முருகர்க்கு மேனடு வான கனலிறைக்குந்
தேட்டுக் குரிய வினைநாடி யேற்றிற் றிருகுபுரிக்
கோட்டுத் தகர்பெற வீந்தவர் பாடியிற் கோகுலரே. 25

சமர்தனிற் சூரனை வேல்கொடு தாக்கிச் சயம்புரிந்தே
அமரரைக் காத்தவன் பன்னிரு தோண்மறைத் தௌவைதன்னைக்
கமரரி முல்லையிற் காத்திருந் தேபரி காசஞ்செய்யக்
குமரனு மேதிகண் மேய்க்கப்பெ றாரவர் கோகுலரே. 26

மாரியி னேர்கொடை யீந்தோர்க ளௌவை மனங்குளிரச்
சீரிய வாடை கொடுத்தோர்கள் போசனஞ் செய்யநல்ல
மூரிய பொன்னிலை யீந்தோர்கள் பாரி யெனமொழிந்த
கூரிய வள்ள லுதித்தோர்கள் பாடியிற் கோகுலரே. 27

தணவாத நீதி புரிந்தோர் மகுடந் தரித்தனந்தன்
பணமாகத் தாங்கிய சேரனுஞ் சோழனும் பாண்டியனுங்
கணமாகச் சோபனப் பந்தலி லேநின்று கையதனாற்
குணமாய் மணமிடக் கலியாணம் பெற்றவர் கோகுலரே. 28

வடியாய்ப் பனந்துண்டு மூன்றர சாகிய மன்னவர்க்குத்
துடியாக மூன்று பழந்தர லாலவர் தோத்திரஞ்செய்
படியார்க் கெளியரு மிச்சிக்க நான்கெனும் பாடல்பெற்ற
குடியார் பெரிய கொடையாற் பெரியவர் கோகுலரே. 29

தண்டா மரைப்பெண்ணைத் தாம்பெற்ற தாலுந் தரணிச்செல்வம்
உண்டான வாய்மை யுடைமையினாலு முணர்ந்தௌவையார்
பண்டாங் குடியிற் பெரியோ ரெனச்சொன்ன பாடல்தனைக்
கொண்டே பெரும்புகழ் கொண்டோர்கள் பாடியிற் கோகுலரே. 30

பணத்தா யிரஞ்சென்னிச் சேடனு மேத்தப் பகர்ந்தவிலக்
கணத்தான் மிகுந்தவ ரௌவையை யோர்சொற் கழறிவெல்ல
மணத்தா மரைக்கை மணிப்பொற் கடகத்தை வாங்கியவள்
குணத்தாற் கொடுக்கப் புனைந்தவர் பாடியிற் கோகுலரே. 31

பிலமா மிராகவன் காதையைக் கம்பன் பெருகச்செய்ய
நலமா மதிலொரு சீரிற் சமுசய நாடவிடத்
தலமாந் திசைசொலைச் சரஸ்வதி சாற்றத் தயிர்கடையுங்
குலமாது மாகப்பெற் றாரவர் பாடியிற் கோகுலரே. 32

தொடுத்தநற் கற்புடைக் கன்னகை கேள்வன் றுயரதனாற்
கடுத்து வருகின்ற போதவள் கொங்கைக் கரம்பறித்து
விடுத்தவள் கூடற் பதியினி லாயர்பெண் வெண்ணெயப்பக்
கொடுத்த வரம்பெற்றூ வாழ்வோர்கள் பாடியிற் கோகுலரே. 33

ஆடற் பதிக்கு நிகர்கடம் பாடவி யானதிலே
தேடற் கரிய பொருளைக்கண் டேதமிழ் செப்பியவர்
நாடத் தயவு புரிந்தேபின் பாக நடந்துவருங்
கூடற் பதிச்சொக்கை யேவல்கொண் டோரவர் கோகுலரே. 34

நம்பிட வேயிடைக் காட்டூரி லீசனை நாட்டிவைத்துச்
சொம்பிடக் கண்டனன் பாண்டியன் பாதத் துணையில்விழ
அம்பிடு சென்னிய னன்பனைப் போற்றென வன்றரசன்
கும்பிடச் சொக்கரைக் கோவில்வைத் தாரவர் கோகுலரே. 35

நாலா கலைக்கென்றும் வல்லவர் சோதனை நற்பலகை
மேலா யிருந்தரன் கீழாகி நின்றிட மேன்மைபெற்று
நாலா நிறைகின்ற பேரெழு தாமன்முன்னற்றமிழாற்
கோலா கலச்சங்கம் வென்றோர்கள் பாடியிற் கோகுலரே. 36

சங்கத்தை வென்றவர் மங்காத நீதி தமிழுரைத்தோர்
துங்கக் கஜேந்திர மோட்சமு மாயிரஞ் சொன்னவல்லோர்
எங்கட் கிறைமகிழ் பாக வதமுமே ழாயிரமாய்க்
கொங்குற்ற வாணி கடாட்சத்திற் செய்தவர் கோகுலரே. 37

அம்போ ருகனு மறியாத மாய னவதரிக்க
உம்பரு மேற்றிட மண்டல மேற்ற வுலகமெங்குந்
தம்போல வாழ்வு தழைத்திடக் கஞ்சனைத் தாக்குபதக்
கொம்பான துர்க்கை யெனுஞ்சத்தி யீன்றவர் கோகுலரே. 38

மதித்தே வருகின்ற பூதகி யாதி வருபகையை
மிதித்தேறி வென்று முனிந்தே வருகின்ற வேழத்தையும்
எதிர்த்தே மருப்பைப் பிடுங்கியுங் கஞ்சன்மு னேமிக்கண்ணன்
குதித்தே யுதைத்திடு காட்சிபெற் றாரவர் கோகுலரே. 39

மாவா யிரம்பல முள்ள பராக்கிரம மல்குகஞ்சன்
மேவா யமபுர மேவிய பின்னர் விளங்கவெங்குந்
தேவாதி தேவ னெனவுக்கிர சேனனைச் சீர்பெறவே
கோவாய் மௌலி தரித்தோர்கள் பாடியிற் கோகுலரே. 40

கஞ்சனைப் பெற்ற வுக்கிர சேனனைக் காசினியின்
மிஞ்சிய நீதி செலுத்தர சாக்கிப்பொன் வீதிவலம்
நெஞ்சில் உவந்திவ ரைப்பதி னாயிரநீள்பெரியோ
குஞ்சர மேற்ற வருவோர்கள் பாடியிற் கோகுலரே. 41

ஞானக மாயக் குரூர ரழைக்கநன் மாமதுரைத்
தானநல் வீதியிற் கஞ்சனற் றூசுகள் தந்தியின்மேல்
ஆன பொதியைப் பறித்துப்பீ தாம்பர மானவெல்லாம்
கோனகர் பார்க்கப் புனைந்தோர்கள் பாடியிற் கோகுலரே. 42

ஒலிபெறு மேகங்க ளேழையு மேவ உவரியெல்லா
மலிவுடன் மாந்திப் பொழிந்து வருந்தி மகபதிபான்
மெலிவினைக் கூறிட மேதினிக் கோவலர் மெய்ப்புகழைக்
குலிசனு மேத்தப்பெற் றாரவர் பாடியிற் கோகுலரே. 43

நடையாய் மகரத்திற் செய்கின்ற பொங்கலை நாரணன்றான்
தடையாக வுட்கொண்ட தென்றறி யாமற் சதமகத்தான்
படையாக மேகங்க ளேழையு மேவப் பரனெடுத்த
குடையான கோவர்த் தனநீழ னின்றவர் கோகுலரே. 44

மணமுற்ற முல்லை புனைவீர கோதனன் மாயவனைப்
பணமுற்ற சேடனு மேத்த நினைந்து பலவிதத்தால்
உணர்வுற்று நாணப் பதினா யிரம்விப்ர ருண்ணவன்னங்
குணமுற்று மாய்த்தர லாற்றிரு வீன்றவர் கோகுலரே. 45

மாதனங் கோடி மணிப்பணிப் பேழை மலர்மங்கைநேர்
சாதனச் சேடியர் நூற்றெண்மர் பெண்ணினிற் சார்சிவிகை
சீதனத் தேனு பதினாயி ரம்பல சீர்சிறக்கக்
கோதனன் பெண்ணைக் கண்ணனுக் கீந்தவர் கோகுலரே. 46

தளவமொப் பாமெனக் கட்டமிர் தாயர் தனையருடன்
உளமகிழ் மாயனுங் கொண்டே யமுனையி லுண்ணவக்கால்
வளமுடன் றங்க ளனமீந்து மாலுக் கவரமிர்தங்
கொளவுங் கொடுத்துண் டகமகிழ் வோரவர் கோகுலரே. 47

துடிகோத் திரமெனச் சொல்வார்க ளொன்றைச் சுதரிசனன்
அடிகோத் திரமிணை யாகும தோவன்று நாரதனும்
படிகோத் திரமனை யைந்து நிலத்தினும் பார்த்துவந்த
குடிகோத் திரமுடன் வாழ்வோர்கள் பாடியிற் கோகுலரே. 48

அன்றுமை யூர்திரு வேங்கடன் சந்ததி யாரொருவர்
கன்றொடு காலியை முல்லையிற் காக்கும் கடும்பகலிற்
தின்றிட வந்திடுந் தேவா வமிர்தத்தைத் தினேதினமுங்
குன்றெடுத் தாருடன் கூடியுண் டாரவர் கோகுலரே. 49

நன்றா கவதென்ற கோடான கோடிக ணல்லமிர்தந்
தின்றா ரதிர்பலங் கண்டதொன் றில்லைச்சிற் றாயர்க்கன்பின்
ஒன்றாய்க் கவளங் கொடுத்தத னாலுட லோடவற்குக்
குன்றாப் பதவி கொடுக்கப்பெற் றாரவர் கோகுலரே. 50

மாகன கத்துரு வீன்றன காளிங்கன் வாழ்தடத்தி
னாகன சிற்றுரு வாகிய வாயர் நலம்பருகித்
தாக மகற்ற மயக்கிய வல்விடந் தான் முறியக்
கோகன கைக்கட் கருணைபெற் றாரவர் கோகுலரே. 51

பூபால னஞ்செய்வ ராகுதிப் பாலனம் போந்துசெய்வர்
நாபால னஞ்செய்வர் நல்லமிர் தீந்து நளினமலர்
மாபால னஞ்செய்யு மார்பனு மிச்சிக்க வாழ்வுதருங்
கோபா லனஞ்செய்வர் கோபாலர் கோவலர் கோகுலரே. 52

தவமுள விண்டலத் துண்டான வண்டர்க்குத் தானமிர்தம்
உவகைய தாகவு முண்டிட வன்பி லுதவிசெய்தோர்
புவனமெ லாமிவர் புண்ணிய மேநலம்பொங்குதலாற்
குவலயத் தண்ட ரெனநிகண் டோதிய கோகுலரே. 53

உணத்தான் பிறந்த வுயிர்களுக் காரமிர் துதவிபுகழ்
மணத்தா லவர்க்கு வழுவாமை யாலும் வழங்குநெறிக்
கணத்தாலு முன்மநு வேந்த னறிந்து கனந்தந்திடுங்
குணத்தாற் பொதுவரென் றோதப்பெற் றாரவர் கோகுலரே. 54

பூபாரந் தீரவுந் தன்கைக் கபாலம் புனனிறைய
மாபா ரத முடித் தானென்றும் வெள்ளி மலைக்கடவுள்
நாபாடல் செய்தது நான்முகன் றானு நலமுணர்ந்து
கோபால னென்று வணங்குமப் பேர்கொண்ட கோகுலரே. 55

தருமன் முதலியோர் தாங்கிய வேடந் தகுதியென்றே
பெருமைய தாக வறிந்தமெஞ் ஞானம் பெரிதுடையார்
இருமையுங் கண்ட சகாதேவ ராய னின்னுருவே
குருகுலங் காக்குமென் றேற்றத னாற்சேட்டங் கோகுலரே. 56

பாடற் குருகிமுன் னாடிருப் பாற்கடற் பள்ளிகொள்ளும்
தேடற் கரிய பொருளான நாரணன் றேவரைநீர்
நாடற் குரிய நரராக முல்லையி னாரணனாய்க்
கூடப் பிறக்க விளையாடல் பெற்றவர் கோகுலரே. 57

ஆடவந் தோடுயிர் மாய்ந்திடு மூலன்ற னங்கத்திலே
நாட வுயிர்புகுந் தேயவன் செய்து நயந்தபின்பு
தேடரி தானதன் னுடலிற் புகுந்திடு சித்திகற்றுக்
கூடுவிட் டேவசி சித்தன் மரபினர் கோகுலரே. 58

ஆயிர நாமத் தவற்குச்செய் பூசனை யானவெல்லாம்
நேய மிவர்கடம் பேரரு ளானிறை வேற்றலல்லாற்
றாயினு நல்ல சிதம்பரந் தன்னிற் றமனியப்பொற்
கோயி லமைத்துப சாரஞ்செய் தாரவர் கோகுலரே. 59

நிலவிய வெள்ளிக் கிரியான கத்தி னினைந்துநிதம்
நலமுள வேணுவிற் கானங்கள் பாடி நயந்துருகி
அலமர னீங்கிய வானாயர் தோன்று மருளுருவாங்
குலமெனும் பேறதைப் பெற்றோர்கள் பாடியிற் கோகுலரே. 60

பிரதோடஞ் சேவிக்கும் பெண்மக வேந்தும் பெருமைகண்டு
திரமா மனையிற்சென் றேசமைத் தாளச் சிறுவனப்போ
மறவாமற் பூசனை மண்வீட்டிற் கோலிட மாதுமதைக்
குறையாற் றுடைக்க வதுலிங்க மாக்கிய கோகுலரே. 61

முழுத்தவர் போற்று மரன்செய்த முப்புர வெஞ்சமரில்
வழுத்துநற் றேரொன்று வானோ ரமைக்க வதிலிருந்து
மழுக்கரன் வெற்றி பெறவே மகிழ்வுடன் வானந்தொடர்
கொழுத்தநல் லேறு கொடுத்தோர்கள் பாடியிற் கோகுலரே. 62

கவலையில் லாமற் சகத்துயிர் வாழக் கடவுளருந்
தவறிலை யாகத் தருமங்க ளோங்கவுந் தானறிந்தே
உவகைய தாகவு மெங்கு நிறைந்தவ னொண்டொடியைக்
குவலய மாவென வாண்டோர்கள் பாடியிற் கோகுலரே. 63

மீறிய ஞானச் சுடர்விளக் கேற்றிய மெய்யுணர்விற்
றேறிய மாதர் சுவையாற் சுகித்துச் செயல்பெறவே
ஏறிய கோடி யுகம்போய்த் திரித யுகமதனில்
கூறிய மூல ரவதரித் தோங்கிய கோகுலரே. 64

நலமான பூசையிற் சிற்றாயர் கேட்டிட நல்லமிர்தம்
இலதேகென் றந்தணர் சீறிய போதவர்க் கீவதுவே
பலனாகும் வேள்வியி லென்னாகு மென்றிவர் பண்பையெல்லாங்
குலமாதர் கூறி வணங்கிய பாடியிற் கோகுலரே. 65

உரைகட வாதவ ரன்பாளர் மாதவ னோரிரண்டு
மரைமலர்ப் பாத மறவாத சிந்தையர் மாயவற்குத்
திரையுறு பாற்கட லீந்து தயிர்நெய் செறியவென்றுங்
குரைகடன் மூன்று மமைத்தோர்கள் பாடியிற் கோகுலரே. 66

ஆடலுண் டாகு மயிலு மரவமு மன்பிலொன்றி
நாடநின் றேயுற வாடவுங் கேட்டிடு நான்மறையின்
பாடலென் றேவிண் ணவருட் களிக்கப் பசுப்புலியும்
கூடநின் றேற்கவும் வேணிசை கூறுவர் கோகுலரே. 67

வளந்தையி லேபிறை போலே தருமம் வளர்ப்பவர்கள்
தளர்ந்தவர்க் கேநடுக் காட்டினிற் பாலனந் தான்கொடுக்க
உளந்தய வானவ ரியாவரு முண்ணு முயர்குலத்தோர்
குளந்தையில் வந்தவர்க் கேவிருந் தேசெய்வர் கோகுலரே. 68

அடுத்தோர் பசுவினுக் கோர்பிடி புல்லை யளித்தவர்கள்
நடுத்தா ரணியினற் பாக்கியம் பெற்றுநற் சேய்கள்பெற்று
எடுத்தோங்கு சொர்க்கம் பெறுவா ரிவரெத் தனைபிடிபுல்
கொடுத்தா ரிவர்பல னளவிற் குறைவிலர் கோகுலரே. 69

நறுந்திரை வீசிய மூன்றரைக் கோடி நதிப்பலனும்
அறிந்தன வேதத்தி னங்க முரைத்த ததிசயமாய்ச்
செறிந்திவர் தேனுவும் நீருண்டு வால்சுற்றச் சிந்துபுனற்
குறிந்துளிக் கொப்பில்லை யென்றும் புனிதர்கள் கோகுலரே. 70

மீறத் தவத்தருந் தேவரு நல்வரம் வேண்டத்தரும்
பேறெப் புவிதனி லுண்டென்ப ரானிப் புனிதர்க்கிதந்
தேறப் பலருந் தெளிந்தன்பு கூர்ந்துசெய் தாலுடனே
கூறப் பலிக்குநல் வாக்குள்ள பேறவர் கோகுலரே. 71

வடிவி லுதித்த பிராமண ராதி வருணங்களும்
படியி லுதித்தபின் நூல்பூண் டிருபிறப் பாளரென்பார்
நெடியவன் றன்னுருப் போலே யகத்தி னினைக்கவன்று
குடிமுந் நூலுடன் றான்பிறந் தாரவர் கோகுலரே. 72

சம்புவி னற்கனி சிற்றாயர் கண்ணனுந் தான்பருக
அம்பொ னிறைந்தன கூடை யெடுத்தவ ளாயர்முன்பாய்த்
தங்குஇவ ரால்வந்த தென்றன ணீகொண்டு தான்செல்கெனக்
கும்பிட்ட வள்செல வாசையில் லாதவர் கோகுலரே. 73

தலமெத் தனையுண் டதற்கேற்ற பூசனை தானதர்மம்
பலனைத் தருங்கோடி கன்னிகா தானங்கள் பண்ணிக்கற்பின்
நலனுற்ற கோசலை போலு மசோதை நகர்க்கழகாங்
குலத்தனி மாதருட் பெற்றோர்கள் பாடியிற் கோகுலரே. 74

மரகத மேனிநம் மாயனும் பால்வண்ண மாதவனுங்
கரசல மாகிய வாயருங் கந்துகங் கண்டடிக்க
உரமுடை வெற்றி கவரு மிருவரு முவந்துவந்து
குரகத மேறி விளையாடல் செய்தவர் கோகுலரே. 75

மண்டலத் தெங்கு முளதாம் பலநகர் வாழ்வதிலே
திண்டிறற் கஞ்சன் வராததொன் றில்லைசொற் சேர்நகரில்
அண்டப் படாத வரம்பெற்று நாளு மணங்கினருட்
கொண்டுற்ற நற்றிரு வாய்பாடி வாழ்பவர் கோகுலரே. 76

கவலை விடமுனம் மாயோன்விண் ணோர்க்குக் கடைந்தமிர்தம்
உவகைய தாக வொருபாற் கடலி லுதவிசெய்தான்
தவளித பாற்கடத் தேதினந் தோன்றுந் தனியமிர்தாற்
குவலயந் தன்னிற் கவலைக டீர்ந்தனர் கோகுலரே. 77

மேவிய தேவ ரனைவரும் ரோமங்கள் வீசியவால்
தேவியு மாயன் மடிநான் முகன்முலை சேர்சுருதி
ஆவியு மீசனடித்தலந் தீர்த்த மதின்மயமாங்
கோவினப் பாலனஞ் செய்வோர்கள் பாடியிற் கோகுலரே. 78

மாறாப் பரிவுட னாயருங் கண்ணனு மாசுணவர்
ஆறா மெனச்செல வப்புறம் போக்கில்லை யாகநின்று
பேறாய்ப் பசுத்தங்கள் பால்பாதி யீயப்பெற் றேயிரண்டு
கூறாய்க் கிழிக்க மகிழ்வோர்கள் பாடியிற் கோகுலரே. 79

அடக்க முடையா ரரிய தரும மறிந்து செய்வார்
நடக்கு மநுநெறி தான்கட வாதவர் நாரணர்க்குத்
தொடுக்கும் விழாவினி லாயிரந் தீவர்த்தி தோன்றநெய்யே
கொடுக்க வரங்கர் கருணைபெற் றாரவர் கோகுலரே. 80

சேவிந்து பூணு மரனயன் றானுஞ் சிறந்தொன்றதாய்ப்
பூவிந்த மாக வளர்ந்தோன் றிருப்பெயர் போற்றுதற்கு
நாவிந்த மாக வனந்த மறைகள் நவில்வனபோற்
கோவிந்த பட்டந் தரித்தோர்கள் பாடியிற் கோகுலரே. 81

தொட்டீர டிக்கொண்டு மண்டலம் விண்டலஞ் சூழ்ந்தளந்த
நெட்டிநற் பாதம் பலதரம் வைக்க நெடுமனையோர்
பட்டி சுரர்க்கபி டேக முலைகுடப் பால்சொரியக்
கொட்டிலில் வாழ்பசு வீந்தவர் பாடியிற் கோகுலரே. 82

நூற்றெண் டிருப்பதிக் காலையிற் பூங்குட னூற்றுப்பத்தோ
டேற்றநற் பாற்பசுப் பூசனைக் கேற்றன வெப்பொருளும்
நேர்த்தி பெறவைத்து மார்க்கங்கள் தோறு நிறைந்தசத்ரங்
கோத்திரம் வாழவைத் தார்நந்த கோன்குலங் கோகுலரே. 83

சாத்திரக் கங்கைப் புனல்படி வோர்கட்குச் சார்யமுனை
மாத்திர மப்பல மாடா விடிற்குறை வந்ததுண்டோ
வேத்தி யமுனையுங் காளிந்தி கோதா விரிநினைக்கக்
கோத்திர மோங்கிக் குருவாழ வாழ்கின்ற கோகுலரே. 84

வருதேச காலமி லுத்தரம் போய்வரு மாயவர்க்குத்
தருவாசி பால்சுடத் தன்கையில் வாங்கித் தயவதனால்
அருளேற வூக வனைத்தாய னாரென் றரங்கர்புகல்
குருதேசிகனைப் பணிவோர்கள் பாடியிற் கோகுலரே. 85

நளிவா கனம்பெறக் கடல்கடந் தேயவர் நன்மைமனத்
தெளிவாகி யெங்கள் பங்கனைச் சேர்ந்தகஞ் சேருதற்கு
வளர்மா மலர்முல்லை யாயர்க் கியற்கைநல் வாசமுறுங்
குளிர்வாச சாந்தங் கொடுக்கப் புனைந்தவர் கோகுலரே. 86

நன்றாள் புவியி லிவர்தேனு நின்றது நரகத்தினும்
அன்றாள வந்த திவர்தேனு வேயகல் பூவுலகில்
என்றாலுழவ ரிவர்தேனு வாலுர மேத்திவைத்துக்
குன்றாத செல்வங் கொடுத்தோர்கள் பாடியிற் கோகுலரே. 87

பண்டாந் தவம்புரி யோர்விந்தி யாதரர் பற்பமின்னை
உண்டான சக்கரத் தேயமைத் தேயுயர் யோகமிகக்
கண்டான் விஜய னற்சேய் பிரவிடை காசினியிற்
கொண்டா னரபதி தங்கோத் திரமெனுங் கோகுலரே. 88

உள்ள புவியிற் பொருள்படைத் தென்ன வுதவுபுனற்
பள்ள நிறைந்த தடாகமுண் டாக்கிப் பரிந்துநிதி
அள்ளிக் கொடுத்து மிவர்தேனு வாய்வைத் தருந்துபுல்லைக்
கொள்ளெண் ணான்கு தருமம் புரிந்தவர் கோகுலரே. 89

இடிக்கட்டி செய்துமின் னில்லாமன் மேகங்க ளெங்குமின்றிப்
படிக்கட்டி யாண்டு பனிரண்டு வாக்கியம் பண்ணுமன்னார்
படிக்கட்டி மேட மதினான்கு கோட்கண் மயங்கவென்று
கொடிக்கட்டிக் கொண்ட வீரர்கள் பாடியிற் கோகுலரே. 90

தலமேழில் மாயன் சமயம் வகுத்திடத் தான்குருவாய்
உலகூடு நான்கு வருணமு மோங்கி யொளிபெறவே
நலமாய் நடுவில் வைணவ நாரண நல்லுருவின்
குலமேவு வைணவ ராகவந் தாரவர் கோகுலரே. 91

நலத்தன யாகங்க ளுள்ளன செய்து நளிர்புனல்சூழ்
தலத்தைப் புரக்கின்ற கோனாதி நந்தன் சந்ததியாய்ச்
சொலப்புக ழோங்க மநுநெறி யோங்கிடச் சூழ்ந்தமதிக்
குலத்தினி லாதவர் தங்கோத் திரமெனுங் கோகுலரே. 92

நலத்தைப் பொதுப்பி யருளொன்று நாற்குல நன்குறலாற்
பலத்தி லதிக மிவர்பஞ்ச கௌவியம் பார்கொளலாற்
றலத்தை விளக்கும் புனித மிவர்பொருட் டானென்றதாற்
குலத்திற் றிலகமென் றோதப்பெற் றாரவர் கோகுலரே. 93

மூலத் திருமரு மார்ப னூருவின் முளைத்தவர்நற்
சீலத்தர் தேனுவைப் பாலனஞ் செய்பவர் செந்திருமுற்
காலத்திற் பின்னைப் பிராட்டி யெனப் பெற்ற கருணையெனும்
கூலத்தர் ஞானத்தர் மேலுற்ற பாடியிற் கோகுலரே. 94

மறையோது வார்முத னாலாம் வருணங்கண் மாண்புபெற
முறையாக வூணி னறுநெயும் பாலு மோர்பிறவும்
நிறைவாக வேண்டிய வெல்லா முதவிய நீதியினாற்
குறையாத செல்வ ரிவரென்ற பேறவர் கோகுலரே. 95

நாவி லனங்கள் புசிப்போர்க்குச் சுத்தியும் நல்கவல்லார்
பூவில் விளங்கிய தேவால யங்களைப் போற்றிடவே
மேவிய திங்களும் வெய்யோனும் போல விடிவிளக்குக்
கோவில் விளங்கநெய் யீந்தவர் பாடியிற் கோகுலரே. 96

நெறிபெறு சேய்க்கும் புகர்க்குநல் லாட்சி நிலைக்கவென்றுஞ்
செறிபல மான மனைபனி ரண்டினுஞ் சேய்முதலாய்
அறிவரி தாமக மேரு முகட்டி லரிதிசையிற்
குறிபெற மேட மிடபம்வைத் தாரவர் கோகுலரே. 97

காதா லுணர்ந்திடுஞ் சோதிடங் கூறுங் கனயோகமும்
வேதாக மங்கள் விளக்கிய யோகமும் வேறுளதும்
போதா தெனமுன் வியாச ரறிந்திவர் போற்றவளர்
கோதாளி யோக மதிகம தாப்பெற்ற கோகுலரே. 98

நெறியாற் சகத்தினிற் கீர்த்திபெற் றோர்க ணிறைசெல்வரென்
றறிவாளர் பேசிய தல்லாம லன்பரென் றாண்மைபெற்றோர்
செறிவான வேதத்தி னங்க மறிந்து செயலையெல்லாங்
குறியா யுரைத்தமிர் துண்டோர்கள் பாடியிற் கோகுலரே. 99

செழும்பாரின் முன்னங் கொடாமற் பிறந்து திரிபவர்க்கு
மழுங்காத செல்வம் வருவதுண் டோவதின் ஆறறிந்து
தொழும்பாய் வறுமைத் துயர்தாங்கிச் சித்தஞ் சுழல்பவர்க்குக்
கொழும்பா லனங்கள் கொடுக்குந் தியாகிகள் கோகுலரே. 100

அடியிற் பெரிய துலகளந் தானடி யாதிமன்னர்
முடியிற் பெரியது சோழன் றிருமுடி முத்தமிழ்சேர்
படியிற் பெரியது பாண்டியன் சங்கமிப் பாருலகிற்
குடியிற் பெரியது கோபாலர் தங்கள் குலக்குடியே. 101

தரங்க மெறியுந் திருப்பாற் கடலிவர் தன்மனைபோல்
அரங்கந் துயிலும் பிரானரு ளாலண்ட ராய்த்தழைத்தார்
வரங்கள் பெறுகின்ற கோகுலப் பாவையர் மகிழ்வடைய
உரங்கொள் பெறும்புகழ் கொண்டார் குருவரு ளோங்கவுமே. 102

வாழ்த்து

குருவாழி கோவலர் கோக்குடி வாழி கொடிக்கருட
உருவாழி முல்லை நிலம்வாழி யாக்குல மோங்கிவளர்
திருவாழி பாடி நகர்வாழி வெற்றி சிறந்தமுல்லை
மருவாழி மாமறை வாழி தமிழ்நிதம் வாழியவே. 103

கோகுல சதகம் முற்றிற்று