குருபாத தாசர்

இயற்றிய

குமரேச சதகம்

காப்பு

பூமேவு புல்லைப் பொருந்துகும ரேசர்மேல்
தேமே வியசதகம் செப்பவே - கோமேவிக்
காக்கும் சரணவத்தான் கம்பகும்பத் தைந்துகரக்
காக்குஞ் சரவணத்தான் காப்பு.

அவையடக்கம்

ஆசிரிய விருத்தம்

மாரிக்கு நிகர்என்று பனிசொரிதல் போலவும்,
     மனைக்குநிகர் என்றுசிறுபெண்
மணல்வீடு கட்டுவது போலவும், சந்திரன்முன்
     மருவுமின் மினிபோலவும்,

பாருக்குள் நல்லோர் முனேபித்தர் பலமொழி
     பகர்ந்திடுஞ் செயல்போலவும்,
பச்சைமயில் ஆடுதற் கிணையென்று வான்கோழி
     பாரிலாடுதல் போலவும்,

பூரிக்கும் இனியகா வேரிக்கு நிகர்என்று
     போதுவாய்க் கால்போலவும்,
புகல்சிப்பி முத்துக்கு நிகராப் பளிங்கைப்
     பொருந்தவைத் ததுபோலவும்,

வாரிக்கு முன்வாவி பெருகல்போ லவுமின்சொல்
     வாணர்முன் உகந்துபுல்லை
வாலகும ரேசர்மேற்சதகம் புகன்றனன்
     மனம்பொறுத் தருள்புரிகவே.

நூல்

1. முருகன் திருவிளையாடல்

பூமிக்கொ ராறுதலை யாய்வந்து சரவணப்
     பொய்கைதனில் விளையாடியும்,
புனிதற்கு மந்த்ரவுப தேசமொழி சொல்லியும்
     பாதனைச் சிறையில் வைத்தும்,

தேமிக்க அரியரப் பிரமாதி கட்கும்
     செகுக்கமுடி யாஅசுரனைத்
தேகம் கிழித்துவடி வேலினால் இருகூறு
     செய்தமரர் சிறைதவிர்த்தும்,

நேமிக்குள் அன்பரிடர் உற்றசம யந்தனில்
     நினைக்குமுன் வந்துதவியும்,
நிதமுமெய்த் துணையாய் விளங்கலால் உலகில்உனை
     நிகரான தெய்வமுண்டோ

மாமிக்க தேன்பருகு பூங்கடம் பணியும்மணி
     மார்பனே! வள்ளிகணவா!
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

2. அந்தணர் இயல்பு

குறையாத காயத்ரி யாதிசெப மகிமையும்,
     கூறுசுரு திப்பெருமையும்,
கோதிலா ஆகம புராணத்தின் வளமையும்,
     குலவுயா காதிபலவும்,

முறையா நடத்தலால் சகலதீ வினைகளையும்
     முளரிபோ லேதகிப்பார்
முதன்மைபெறு சிலைசெம்பு பிருதுவிக ளில்தெய்வ
     மூர்த்தம்உண் டாக்குவிப்பார்

நிறையாக நீதிநெறி வழுவார்கள் ஆகையால்,
     நீள்மழை பொழிந்திடுவதும்,
நிலமது செழிப்பதும், அரசங்செங் கோல்புரியும்
     நிலையும், மா தவர்செய்தவமும்,

மறையோர்க ளாலே விளங்கும் இவ்வுலகத்தின்
     மானிடத் தெய்வம்இவர் காண்
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

3. அரசர் இயல்பு

குடிபடையில் அபிமானம், மந்திரா லோசனை,
     குறிப்பறிதல், சத்யவசனம்,
கொடைநித்தம் அவரவர்க் கேற்றமரி யாதை பொறை,
     கோடாத சதுருபாயம்

படிவிசா ரணையொடுப்ர தானிதள கர்த்தரைப்
     பண்பறிந் தேயமைத்தல்,
பல்லுயி ரெலாந்தன் உயிர்க்குநிக ரென்றே
     பரித்தல், குற்றங்கள்களைதல்,

துடிபெறு தனக்குறுதி யானநட்பகமின்மை,
     சுகுணமொடு, கல்வியறிவு,
தோலாத காலம்இடம் அறிதல், வினை வலிகண்டு
     துட்டநிக் ரகசௌரியம்,

வடிவுபெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு
     வழுவாத முறைமையிதுகாண்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

4. வணிகர் இயல்பு

கொண்டபடி போலும்விலை பேசிலா பம்சிறிது
     கூடிவர நயமுரைப்பார்;
கொள்ளுமொரு முதலுக்கு மோசம்வ ராதபடி
     குறுகவே செலவுசெய்வார்;

வண்டப் புரட்டர் தாம் முறிதந்து, பொன் அடகு
     வைக்கினும் கடன்ஈந்திடார்;
மருவுநா ணயமுளோர் கேட்டனுப் புகினுமவர்
     வார்த்தையில் எலாம்கொடுப்பார்;

கண்டெழுது பற்றுவர வினின்மயிர் பிளந்தே
     கணக்கில் அணு வாகிலும்விடார்;
காசுவீ ணிற்செல விடார் உசித மானதிற்
     கனதிரவி யங்கள்விடுவார்;

மண்டலத் தூடுகன வர்த்தகம் செய்கின்ற
     வணிகர்க்கு முறைமையிதுகாண்
மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

5. வேளாளர் இயல்பு

நல்லதே வாலயம் பூசனை நடப்பதும்,
     நாள்தோறும் மழைபொழிவதும்,
நாடிய தபோதனர்கள் மாதவம் புரிவதும்,
     நவில்வேத வேதியரெலாம்

சொல்லரிய யாகாதி கருமங்கள் செய்வதும்,
     தொல்புவி செழிக்கும்நலமும்,
சுபசோப னங்களும், கொற்றவர்கள் செங்கோல்
     துலங்குமனு நெறிமுறைமையும்,

வெல்லரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலையும்
     விற்பனையும், அதிகபுகழும்,
மிக்க அதி காரமும், தொழிலாளர் சீவனமும்,
     வீரரண சூரவலியும்,

வல்லமைகள் சகலமும், வேளாளர் மேழியின்
     வாழ்வினால் விளைவ அன்றோ?
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

6. பிதாக்கள்

தவமதுசெய் தேபெற் றெடுத்தவன் முதற்பிதா,
     தனைவளர்த் தவன் ஒரு பிதா,
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா,
     சார்ந்தசற் குருவொருபிதா,

அவம் அறுத்தாள்கின்ற அரசொருபிதா, நல்ல
     ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல்என் றுற்றதயர் தீர்த்துளோன் ஒருபிதா,
     அன்புள முனோன் ஒருபிதா,

கவளம்இடு மனைவியைப் பெற்றுளோன் ஒருபிதா,
     கலிதவிர்த் தவன் ஒருபிதா,
காசினியில் இவரைநித் தம்பிதா என்றுளம்
     கருதுவது நீதியாகும்

மவுலிதனில் மதியரவு புனைவிமலர் உதவுசிறு
     மதலையென வருகுருபரா!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

7. ஒன்றை ஒன்று பற்றியிருப்பவை

சத்தியம் தவறா திருப்பவ ரிடத்தினிற்
     சார்ந்துதிரு மாதிருக்கும்;
சந்ததம் திருமாதிருக்கும் இடந்தனில்
     தனதுபாக் கியம்இருக்கும்;

மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்
     விண்டுவின் களையிருக்கும்;
விண்டுவின் களைபூண் டிருக்கும் இடந்தனில்
     மிக்கான தயையிருக்கும்;

பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடந்தனிற்
     பகர்தருமம் மிகஇருக்கும்;
பகர்தருமம் உள்ளவர் இடந்தனிற் சத்துரு
     பலாயனத் திறல்இருக்கும்;

வைத்திசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு
     மன்னுயில் சிறக்கும் அன்றோ?
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

8. இவர்க்கு இவர் தெய்வம்

ஆதுலர்க் கன்னம் கொடுத்தவர்க ளேதெய்வம்;
     அன்பான மாணாக்கருக்
கரியகுரு வேதெய்வம் அஞ்சினோர்க் காபத்து
     அகற்றினோ னேதெய்வமாம்;

காதல்உறு கற்புடைய மங்கையர் தமக்கெலாம்
     கணவனே மிக்கதெய்வம்
காசினியில் மன்னுயிர் தமக்கெலாம் குடிமரபு
     காக்கும்மன் னவர்தெய்வமாம்

ஓதரியபிள்ளைகட் கன்னை தந்தையர் தெய்வம்
     உயர்சாதி மாந்தர்யார்க்கும்
உறவின்முறை யார்தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்
     குற்றசிவ பக்தர்தெய்வம்

மா தயையி னாற்சூர் தடிந்தருள் புரிந்ததால்
     வானவர்க் குத்தெய்வம் நீ
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

9. இவர்க்கு இதில் நினைவு

ஞானநெறி யாளர்க்கு மோட்சத்தி லேநினைவு
     நல்லறிவு ளோர்தமக்கு
நாள்தோறும் தருமத்தி லேநினைவு மன்னர்க்
     கிராச்சியந் தன்னில்நினைவு

ஆனகா முகருக்கு மாதர்மே லேநினைவு
     அஞ்சாத் திருடருக்கிங்
கனுதினம் களவிலே நினைவுதன வணிகருக்
     காதாய மீதுநினைவு

தானமிகு குடியாள ருக்கெலாம் வேளாண்மை
     தனில் நினைவு கற்பவர்க்குத்
தருகல்வி மேல்நினைவு வேசியர்க் கினியபொருள்
     தருவோர்கள் மீதுநினைவு

மானபர னுக்குமரி யாதைமேல் நினைவெற்கு
     மாறாதுன் மீதுநினைவு
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

10. இவர்க்கு இது இல்லை

வேசைக்கு நிசமில்லை திருடனுக்கு குறவில்லை
     வேந்தர்க்கு நன்றியில்லை
மிடியர்க்கு விலைமாதர் மீதுவங் கணம்இலை
     மிலேச்சற்கு நிறையதில்லை

ஆசைக்கு வெட்கம்இலை ஞானியா னவனுக்குள்
     அகம்இல்லை மூர்க்கன்தனக்
கன்பில்லை காமிக்கு முறையில்லை குணம்இலோர்க்
     கழகில்லை சித்தசுத்தன்

பூசைக்கு நவில் அங்க சுத்தியிலை யாவும்உணர்
     புலவனுக் கயலோர்இலை
புல்லனுக் கென்றுமுசி தானுசிதம் இல்லைவரு
     புலையற்கி ரக்கமில்லை

மாசைத் தவிர்த்தமதி முகதெய்வ யானையொடு
     வள்ளிக் கிசைந்த அழகா
மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

11. இப்படிப்பட்டவர் இவர்

ராயநெறி தவறாமல் உலகபரி பாலனம்
     நடத்துபவ னேயரசனாம்
ராசயோ சனைதெரிந் துறுதியா கியசெய்தி
     நவிலுமவ னேமந்திரி,

நேயமுட னேதன் சரீரத்தை எண்ணாத
     நிர்வாகி யேசூரனாம்,
நிலைபெறு மிலக்கண மிலக்கிய மறிந்துசொலும்
     நிபுணகவி யேகவிஞனாம்

ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும்
     அறியும்மதி யோன்வைத்தியன்,
அகம்இன்றி மெய்யுணர்ந் தைம்புல னொழித்துவிட்
     டவனேமெய் ஞானியெனலாம்

மாயவர் சகோதரி மனோன்மணிக் கன்பான
     வரபுத்ர வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரே சனே.

12. விரைந்து அடக்குக

அக்கினியை, வாய்முந்து துர்ச்சனரை, வஞ்சமனை
     யாளைவளர் பயிர்கொள்களையை,
அஞ்சா விரோதிகளை, அநியாயம் உடையோரை,
     அகிர்த்தியப் பெண்களார்ப்பைக்,

கைக்கினிய தொழிலாளி யைக்,கொண்ட அடிமையைக்
     களவுசெய் யுந்திருடரைக்,
கருதிய விசாரத்தை, அடக்கம்இல் பலிசையைக்,
     கடிதான கோபந்தனை,

மெய்க்கினி தலாப்பிணியை, அவையுதா சீனத்தை,
     வினைமூண் டிடுஞ்சண்டையை,
விடமேறு கோரத்தை யன்றடக் குவதலால்
     மிஞ்சவிட லாகாதுகாண்

மைக்கினிய கண்ணிகுற வள்ளிதெய் வானையை
     மணம்செய்த பேரழகனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

13. இவர்க்கு இது துரும்பு

தாராள மாகக் கொடுக்குந் தியாகிகள்
     தமக்குநற் பொருள் துரும்பு,
தன்னுயிரை யெண்ணாத சூரனுக் கெதிராளி
     தளமெலாம் ஒருதுரும்பு,

பேரான பெரியருக் கற்பரது கையினிற்
     பிரயோச னந்துரும்பு,
பெரிதான மோட்சசிந் தனையுள் ளவர்க்கெலாம்
     பெண்போகம் ஒருதுரும்பு,

தீராத சகலமும் வெறுத்ததுற விக்குவிறல்
     சேர்வேந்தன் ஒருதுரும்பு,
செய்யகலை நாமகள் கடாட்சமுள் ளோர்க்கெலாஞ்
     செந்தமிழ்க் கவிதுரும்பாம்.

வாராரும் மணிகொள்முலைவள்ளிதெய் வானையை
     மணம்புணரும் வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

14. இதனை விளக்குவது இது

பகல்விளக் குவதிரவி, நிசிவிளக் குவதுமதி,
     பார்விளக் குவதுமேகம்,
பதிவிளக் குவதுபெண், குடிவிளக் குவதரசு,
     பரிவிளக் குவதுவேகம்,

இகல்விளக் குவதுவலி, நிறைவிளக் குவதுநலம்,
     இசைவிளக் குவதுசுதி, ஊர்
இடம்விளக் குவதுகுடி, உடல்விளக் குவதுண்டி
     இனிய சொல் விளக்குவது அருள்,

புகழ்விளக் குவதுகொடை, தவம்விளக் குவதறிவு,
     பூவிளக் குவதுவாசம்,
பொருள்விளக் குவதுதிரு, முகம்விளக் குவதுநகை
     புத்தியை விளக்குவது நூல்,

மகம்விளக் குவதுமறை, சொல்விளக் குவதுநிசம்,
     வாவியை விளக்குவதுநீர்,
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல் நீடு
     மலைமேவு குமரேசனே.

15. பிறப்பினால் மட்டும் நன்மையில்லை

சிங்கார வனமதில் உதிப்பினும் காகமது
     தீஞ்சொல்புகல் குயிலாகுமோ?
திரையெறியும் வாவியிற் பூத்தாலு மேகொட்டி
     செங்கஞ்ச மலராகுமோ?

அங்கான கத்திற் பிறந்தாலும் முயலான
     தானையின் கன்றாகுமோ?
ஆண்மையா கியநல்ல குடியிற் பிறந்தாலும்
     அசடர்பெரி யோராவரோ?

சங்காடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான்
     சாலக்கி ராமமாமோ?
தடம்மேவு கடல்நீரி லேயுப்பு விளையினும்
     சாரசர்க் கரையாகுமோ?

மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு பதேசம்
     வைத்தமெய்ஞ் ஞானகுருவே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

16. பலர்க்கும் பயன்படுவன

கொண்டல்பொழி மாரியும், உதாரசற் குணமுடைய
     கோவுமூ ருணியின் நீரும்
கூட்டமிடும் அம்பலத்து றுதருவின் நீழலும்,
     குடியாளர் விவசாயமும்,

கண்டவர்கள் எல்லாம் வரும்பெருஞ் சந்தியிற்
     கனிபல பழுத்தமரமும்,
கருணையுட னேவைத் திடுந்தணீர்ப் பந்தலும்
     காவேரி போலூற்றமும்,

விண்டலத்துறைசந்தி ராதித்த கிரணமும்,
     வீசும்மா ருதசீதமும்,
விவேகியெனும் நல்லோ ரிடத்திலுறு செல்வமும்
     வெகுசனர்க்கு பகாரமாம்,

வண்டிமிர் கடப்பமலர் மாலையணி செங்களப
     மார்பனே வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

17. தாம் அழியினும் தம் பண்பு அழியாதவை

தங்கம்ஆ னது தழலில் நின்றுருகி மறுகினும்
     தன் ஒளி மழுங்கிடாது,
சந்தனக் குறடுதான் மெலிந்துதேய்ந் தாலுமே
     தன் மணம் குன்றிடாது,

பொங்கமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமே
     பொலிவெண்மை குறைவுறாது,
போதவே காய்ந்துநன் பால்குறுகி னாலும்
     பொருந்துசுவை போய்விடாது,

துங்கமணி சாணையில் தேய்ந்துவிட் டாலும்
     துலங்குகுணம் ஒழியாதுபின்
தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது
     தூயநிறை தவறாகுமோ

மங்கள கல்யாணிகுற மங்கைசுர குஞ்சரியை
     மருவு திண் புயவாசனே
மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடு
     மலைமேவு குமரேசனே.

18. நரகில் வீழ்வோர்

மன்னரைச் சமரில்விட் டோடினவர், குருமொழி
     மறந்தவர், கொலைப்பாதகர்
மாதா பிதாவைநிந் தித்தவர்கள் பரதாரம்
     மருவித் திரிந்தபேர்கள்

அன்னம் கொடுத்தபே ருக்கழிவை யெண்ணினோர்
     அரசடக்கிய அமைச்சர்
ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர்
     அருந்தவர் தமைப்பழித்தோர்

முன்னுதவி யாய்ச்செய்த நன்றியை மறந்தவர்
     முகத்துதி வழக்குரைப்போர்
முற்றுசிவ பத்தரை நடுங்கச்சி னந்தவர்கள்
     முழுதும்பொய் உரைசொல்லுவோர்

மன்னொருவர் வைத்தபொருள் அபகரித்தோர் இவர்கள்
     மாநரகில் வீழ்வரன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல் நீடு
     மலைமேவு குமரேசனே.

19. உடல்நலம்

மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது,
     மறுவறு விரோசனந்தான்
வருடத் திரண்டுவிசை தைலம் தலைக்கிடுதல்
     வாரத் திரண்டுவிசையாம்

மூதறிவி னொடுதனது வயதினுக் கிளையவொரு
     மொய்குழ லுடன்சையோகம்
முற்று தயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்
     முதிரா வழுக்கையிள நீர்

சாதத்தில் எவளாவா னாலும்பு சித்தபின்
     தாகந் தனக்குவாங்கல்
தயையாக உண்டபின் உலாவல்லிவை மேலவர்
     சரீரசுகம் ஆமென்பர்காண்

மாதவகு மாரிசா ரங்கத்து தித்தகுற
     வள்ளிக்கு கந்தசரசா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

20. விடாத குறை

தேசுபெறு மேருப்ர தட்சணஞ் செய்துமதி
     தேகவடு நீங்கவில்லை
திருமால் உறங்கிடும் சேடனுக்கு வணன்
     செறும்பகை ஒழிந்த தில்லை

ஈசன் கழுத்திலுறு பாம்பினுக்கி ரைவே
     றிலாமலே வாயுவாகும்
இனியகண் ஆகிவரு பரிதியா னவனுக்
     கிராகுவோ கனவிரோதி

ஆசிலாப் பெரியோ ரிடத்தினில் அடுக்கினும்
     அமைத்தபடி அன்றிவருமோ
அவரவர்கள னுபோகம் அனுபவித் திடல்வேண்டும்
     அல்லால் வெறுப்பதெவரை

வாசவனும் உம்பரனை வரும்விசய சயஎன்று
     வந்துதொழு தேத்துசரணா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

21. சிறவாதவை

குருவிலா வித்தைகூர் அறிவிலா வாணிபம்
     குணமிலா மனைவியாசை
குடிநலம் இலாநாடு நீதியில் லாவரசு
     குஞ்சரம்இ லாதவெம் போர்

திருவிலா மெய்த்திறமை பொறையிலா மாதவம்
     தியானம்இல் லாதநிட்டை
தீபம்இல் லாதமனை சோதரம்இ லாதவுடல்
     சேகரம்இ லாதசென்னி

உருவிலா மெய்வளமை பசியிலா உண்டிபுகல்
     உண்மையில் லாதவசனம்
யோசனை இலாமந்த்ரி தைரியம் இலாவீரம்
     உதவியில் லாதநட்பு

மருவிலா வண்ணமலர் பெரியோ ரிலாதசபை
     வையத்தி ருந்தென்பயன்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

22. ஆகாப்பகை

அரசர்பகை யும்தவம் புரிதபோ தனர்பகையும்
     அரியகரு ணீகர்பகையும்
அடுத்துக் கெடுப்போர் கொடும்பகையும் உள்பகையும்
     அருளிலாக் கொலைஞர்பகையும்

விரகுமிகும் ஊரிலுள் ளோருடன் பகையுமிகு
     விகடப்ர சங்கிபகையும்
வெகுசனப் பகையும்மந் திரவாதி யின்பகையும்
     விழைமருத் துவர்கள் பகையும்

உரமருவு கவிவாணர் பகையும்ஆ சான்பகையும்
     உறவின்முறை யார்கள்பகையும்
உற்றதிர வியமுளோர் பகையுமந் திரிபகையும்
     ஒருசிறிதும் ஆகாதுகாண்

வரநதியின் மதலையென இனியசர வணமிசையில்
     வருதருண சிறுகுழவியே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

23. வசையுறும் பேய்

கடன்உதவு வோர்வந்து கேட்கும்வே ளையில்முகம்
     கடுகடுக் கின்றபேயும்
கனம்மருவு பெரியதனம் வந்தவுடன் இறுமாந்து
     கண்விழிக் காதபேயும்

அடைவுடன் சத்துருவின் பேச்சைவிசு வாசித்
     தகப்பட்டுழன் றபேயும்
ஆசைமனை யாளுக்கு நேசமாய் உண்மைமொழி
     யானதை உரைத்தபேயும்

இடரிலா நல்லோர்கள் பெரியோர்க ளைச்சற்றும்
     எண்ணாது உரைத்தபேயும்
இனியபரி தானத்தில் ஆசைகொண் டொருவற்
     கிடுக்கண்செய் திட்டபேயும்

மடமனை யிருக்கப் பரத்தையைப் புணர்பேயும்
     வசைபெற்ற பேய்கள் அன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

24. இனத்தில் உயர்ந்தவை

தாருவில் சந்தனம் நதியினில் கங்கைவிர
     தத்தினில் சோமவாரம்
தகைபெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம்
     தலத்தினில்சி தம்பரதலம்

சீருலவு ரிஷிகளில் வசிட்டர்பசு விற்காம
     தேனுமுனி வரில்நாரதன்
செல்வநவ மணிகளில் திகழ்பதும ராகமணி
     தேமலரில் அம்போருகம்

பேருலவு கற்பினில் அருந்ததி கதித்திடு
     பெலத்தில்மா ருதம்யானையில்
பேசில்ஐ ராவதம் தமிழினில் அகத்தியம்
     பிரணவம் மந்திரத்தில்

வாரிதியி லேதிருப் பாற்கடல் குவட்டினில்
     மாமேரு ஆகும் அன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

25. வலிமை

அந்தணர்க் குயர்வேத மேபலம் கொற்றவர்க்
     கரியசௌ ரியமேபலம்
ஆனவணி கர்க்குநிதி யேபலம் வேளாளர்க்
     காயின்ஏ ருழவேபலம்

மந்திரிக் குச்சதுர் உபாயமே பலம்நீதி
     மானுக்கு நடுவேபலம்
மாதவர்க் குத்தவசு பலம்மடவி யர்க்குநிறை
     மானம்மிகு கற்பேபலம்

தந்திரம் மிகுத்தகன சேவகர் தமக்கெலாம்
     சாமிகா ரியமேபலம்
சான்றவர்க் குப்பொறுமை யேபலம் புலவோர்
     தமக்குநிறை கல்விபலமாம்

வந்தனை செயும்பூசை செய்பவர்க் கன்புபலம்
     வாலவடி வானவேலா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

26. இருந்தும் பயனில்லை

தருணத்தில் உதவிசெய் யாதநட் பாளர்பின்
     தந்தென தராமல்என்ன
தராதரம் அறிந்துமுறை செய்யாத மன்னரைச்
     சார்ந்தென்ன நீங்கிலென்ன

பெருமையுடன் ஆண்மையில் லாதஒரு பிள்ளையைப்
     பெற்றென பெறாமலென்ன
பிரியமாய் உள்ளன்பி லாதவர்கள் நேசம்
     பிடித்தென விடுக்கில்என்ன

தெருளாக மானம்இல் லாதவொரு சீவனம்
     செய்தென செயாமல் என்ன
தேகியென வருபவர்க் கீயாத செல்வம்
     சிறந்தென முறிந்தும் என்ன

மருவிளமை தன்னிலில் லாதகன் னிகைபின்பு
     வந்தென வராமலென்ன
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

27. பயன் என்ன?

கடல்நீர் மிகுந்தென்ன ஒதிதான் பருத்தென்ன
     காட்டிலவு மலரில்என்ன
கருவேல் பழுத்தென்ன நாய்ப்பால் சுரந்தென்ன
     கானில்மழை பெய்தும்என்ன

அடர்கழுதை லத்திநிலம் எல்லாம் குவிந் தென்ன
     அரியகுணம் இல்லாதபெண்
அழகாய் இருந்தென்ன ஆஸ்தான கோழைபல
     அரியநூல் ஓதியென்ன

திடம்இனிய பூதம்வெகு பொன்காத் திருந்தென்ன
     திறல்மிகும் கரடிமயிர்தான்
செறிவாகி நீண்டென்ன வஸ்த்ரபூ டணமெலாம்
     சித்திரத் துற்றும் என்ன

மடமிகுந் தெவருக்கும் உபகாரம் இல்லாத
     வம்பர்வாழ் வுக்குநிகராம்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

28. மக்கட்பதர்

தன்பெருமை சொல்லியே தன்னைப் புகழ்ந்தபதர்
     சமர்கண் டொளிக்கும்பதர்
தக்கபெரி யோர்புத்தி கேளாத பதர்தோழர்
     தம்மொடு சலிக்கும் பதர்

பின்புகாணாஇடம் தன்னிலே புறணிபல
     பேசிக்க ளிக்கும்பதர்
பெற்றதாய் தந்தைதுயர் படவாழ்ந் திருந்தபதர்
     பெண்புத்தி கேட்கும் பதர்

பொன்பணம் இருக்கவே போயிரக் கின்றபதர்
     பொய்ச்சாட்சி சொல்லும்பதர்
புவியோர் நடத்தையை இகழ்ந்தபதர் தன்மனைவி
     புணர்தல்வெளி யாக்கும்பதர்

மன்புணரும் வேசையுடன் விபசரிக் கின்றபதர்
     மனிதரில் பதரென்பர்காண்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

29. காணாத துறை

இரவிகா ணாவனசம் மாரிகா ணாதபயிர்
     இந்துகா ணாதகுமுதம்
ஏந்தல்கா ணாநாடு கரைகள்கா ணாஓடம்
     இன்சொல்கா ணாவிருந்து

சுரபிகா ணாதகன் றன்னைகா ணாமதலை
     சோலைகா ணாதவண்டு
தோழர்கா ணாநேயர் கலைகள்கா ணாதமான்
     சோடுகா ணாதபேடு

குரவர்கா ணாதசபை தியாகிகா ணாவறிஞர்
     கொழுநர்கா ணாதபெண்கள்
கொண்டல்கா ணாதமயில் சிறுவர்கா ணாவாழ்வு
     கோடைகா ணாதகுயில் கள்

வரவுகா ணாதசெலவு இவையெலாம் புவிமீதில்
     வாழ்வுகா ணாஇளமையாம்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

30. நோய்க்கு வழிகள்

கல்லினால் மயிரினால் மீதூண் விரும்பலால்
     கருதிய விசாரத்தினால்
கடுவழி நடக்கையால் மலசலம் அடக்கையால்
     கனிபழங் கறிஉண்ணலால்

நெல்லினால் உமியினால் உண்டபின் மூழ்கலால்
     நித்திரைகள் இல்லாமையால்
நீர்பகையி னால்பனிக் காற்றின்உடல் நோதலால்
     நீடுசரு கிலையூறலால்

மெல்லிநல் லார்கலவி அதிகம்உள் விரும்பலால்
     வீழ்மலம் சிக்குகையினால்
மிகுசுமை யெடுத்தலால், இளவெயில் காய்தலால்
     மெய்வாட வேலைசெயலால்

வல்லிரவி லேதயிர்கள் சருகாதி உண்ணலால்
     வன்பிணிக் கிடமென்பர்காண்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

31. இறந்தும் இறவாதவர்

அனைவர்க்கும் உபகாரம் ஆம்வாவி கூபம்உண்
     டாக்கினோர், நீதிமன்னர்
அழியாத தேவா லயங்கட்டி வைத்துளோர்
     அகரங்கள் செய்தபெரியோர்

தனையொப்பி லாப்புதல்வ னைப்பெற்ற பேர்பொருது
     சமர்வென்ற சுத்தவீரர்
தரணிதனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத
     தருமங்கள் செய்தபேர்கள்

கனவித்தை கொண்டவர்கள் ஓயாத கொடையாளர்
     காவியம் செய்தகவிஞர்
கற்பினில் மிகுந்தஒரு பத்தினி மடந்தையைக்
     கடிமணம் செய்தோர்கள்இம்

மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத
     மனிதரிவர் ஆகுமன்றோ!
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

32. இருந்தும் இறந்தோர்

மாறாத வறுமையோர் தீராத பிணியாளர்
     வருவேட் டகத்திலுண்போர்
மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்
     மன்னுமொரு ராசசபையில்

தூறாக நிந்தைசெய் துய்குவோர் சிவிகைகள்
     சுமந்தே பிழைக்கின்றபேர்
தொலையா விசாரத் தழுந்துவோர் வார்த்தையில்
     சோர்வுபட லுற்றபெரியோர்

வீறாக மனையாள் தனக்கஞ்சி வந்திடு
     விருந்தினை ஒழித்துவிடுவோர்
வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு
     மிக்கசபை ஏறும்அசடர்

மாறாக இவரெலாம் உயிருடன் செத்தசவம்
     ஆகியொளி மாய்வர்கண்டாய்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

33. சிறிதும் பயன் அற்றவர்

பதரா கிலும்கன விபூதிவிளை விக்கும்
     பழைமைபெறு சுவராகிலும்
பலருக்கும் மறைவாகும் மாடுரிஞ் சிடுமலம்
     பன்றிகட் குபயோகம்ஆம்

கதம்மிகு கடாஎன்னில் உழுதுபுவி காக்கும் வன்
     கழுதையும் பொதிசுமக்கும்
கல்லெனில் தேவர்களும் ஆலயமும் ஆம்பெருங்
     கான்புற்ற ரவமனை ஆம்

இதமிலாச் சவமாகி லும்சிலர்க் குதவிசெய்யும்
     இழிவுறு குரங்காயினும்
இரக்கப் பிடித்தவர்க் குதவிசெயும் வாருகோல்
     ஏற்றமா ளிகைவிளக்கும்

மதமது மிகும்பரம லோபரால் உபகாரம்
     மற்றொருவ ருக்குமுண்டோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

34. ஈயாதவர் இயல்பு

திரவியம் காக்குமொரு பூதங்கள் போல்பணந்
     தேடிப் புதைத்துவைப்பார்
சீலைநல மாகவும் கட்டார்கள் நல்அமுது
     செய்துணார் அறமும்செயார்

புரவலர்செய் தண்டந் தனக்கும்வலு வாகப்
     புகுந்திருட ருக்கும்ஈவார்
புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்
     புராணிகர்க் கொன்றும்உதவார்

விரகறிந் தேபிள்ளை சோறுகறி தினுமளவில்
     வெகுபணம் செலவாகலால்
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளையென
     மிகுசெட்டி சொன்னகதைபோல்

வரவுபார்க் கின்றதே அல்லாது லோபியர்கள்
     மற்றொருவ ருக்கீவரோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

35. திருமகள் வாழ்வு

கடவா ரணத்திலும் கங்கா சலத்திலும்
     கமலா சனந்தன்னிலும்
காகுத்தன் மார்பிலும் கொற்றவ ரிடத்திலும்
     காலியின் கூட்டத்திலும்

நடமாடு பரியிலும் பொய்வார்த்தை சொல்லாத
     நல்லோ ரிடந்தன்னிலும்
நல்லசுப லட்சண மிகுந்தமனை தன்னிலும்
     ரணசுத்த வீரர்பாலும்

அடர்கே தனத்திலும் சயம்வரந் தன்னிலும்
     அருந்துளசி வில்வத்திலும்
அலர்தரு கடப்பமலர் தனிலும்இர தத்திலும்
     அதிககுண மானரூப

மடவா ரிடத்திலும் குடிகொண்டு திருமாது
     மாறா திருப்பள் அன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

36. மூதேவி வாழ்வு

சோரமங் கையர்கள் நிசம்உரையார்கள் வாயினில்
     சூதகப் பெண்கள் நிழலில்
சூளையில் சூழ்தலுறு புகையில் களேபரம்
     சுடுபுகையில் நீசர்நிழலில்

காரிரவில் அரசுநிழ லில்கடா நிழலினொடு
     கருதிய விளக்குநிழலில்
காமுகரில் நிட்டையில் லாதவர் முகத்தினில்
     கடுஞ்சினத் தோர்சபையினில்

ஈரமில் லாக்களர் நிலத்தினில் இராத்தயிரில்
     இழியுமது பானர்பாலில்
இலைவேல் விளாநிழலில் நிதமழுக் கடைமனையில்
     ஏனம்நாய் அசம்கரம்தூள்

வாரிய முறத்தூள் பெருக்குதூள் மூதேவி
     மாறா திருப்பள்என்பர்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

37. திருந்துமோ?

கட்டியெரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும்
     காஞ்சிரம் கைப்புவிடுமோ
கழுதையைக் கட்டிவைத் தோமம் வளர்க்கினும்
     கதிபெறும் குதிரையாமோ

குட்டியர வுக்கமு தளித்தே வளர்க்கினும்
     கொடுவிடம் அலாதுதருமோ
குக்கல்நெடு வாலுக்கு மட்டையைக் கட்டினும்
     கோணாம லேநிற்குமோ

ஒட்டியே குறுணிமை இட்டாலும் நயமிலா
     யோனிகண் ஆகிவிடுமோ
உலவுகன கர்ப்பூர வாடைபல கூட்டினும்
     உள்ளியின் குணம்மாறுமோ

மட்டிகட் காயிரம் புத்திசொன் னாலும்அதில்
     மார்க்கமரி யாதைவருமோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

38. அறியலாம்

மனத்தில் கடும்பகை முகத்தினால் அறியலாம்
     மாநிலப் பூடுகளெலாம்
மழையினால் அறியலாம் நல்லார்பொ லார்தமை
     மக்களால் அறியலாம்

கனம்மருவு சூரரைச் சமரினால் அறியலாம்
     கற்றவொரு வித்துவானைக்
கல்விப்ர சங்கத்தி னாலறிய லாம்குணங்
     களைநடையி னாலறியலாம்

தனதகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம்
     சாதிசொல் லால்அறியலாம்
தருநீதி கேள்வியால் அறியலாம் பிணிகளைத்
     தாதுக்க ளாலறியலாம்

வனசவிக சிதவதன பரிபூர ணானந்த
     வாலவடி வானவேலா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

39. மாறாதது

குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்
     கொண்டுட் படுத்திவிடலாம்
கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது
     கொடுத்துத் திருப்பிவிடலாம்

உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை
     உகந்துகூத் தாட்டிவிடலாம்
உபாயத்தி னால்பெரும் பறவைக்கு நற்புத்தி
     உண்டாக்க லாம்உயிர்பெறப்

பிணமதை எழுப்பலாம் அக்கினி சுடாமற்
     பெரும்புனல் எனச்செய்யலாம்
பிணியையும் அகற்றலாம் காலதூ துவரையும்
     பின்புவரு கென்றுசொலலாம்

மணலையும் கயிறாத் திரிக்கலாம் கயவர்குணம்
     மட்டும் திருப்பவசமோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

40. மக்களில் விலங்குகள்

தான்பிடித் ததுபிடிப் பென்றுமே லவர்புத்தி
     தள்ளிச்செய் வோர்குரங்கு
சபையிற் குறிப்பறிய மாட்டாமல் நின்றவர்
     தாம்பயன் இலாதமரமாம்

வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்குமொரு
     வெறியர்குரை ஞமலியாவர்
மிகநாடி வருவோர் முகம்பார்த்தி டாலோபர்
     மேன்மையில் லாதகழுதை

சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும்
     தூங்கலே சண்டிக்கடா
சூதுடன் அடுத்தோர்க் கிடுக்கணே செய்திடும்
     துட்டனே கொட்டுதேளாம்

மாம்பழந் தனைவேண்டி அந்நாளில் ஈசனை
     வலமாக வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

41. அற்பருக்கு வாழ்வு

அற்பர்க்கு வாழ்வுசற் றதிகமா னால்விழிக்
     கியாவருரு வும்தோற்றிடா
தண்டிநின் றேநல்ல வார்த்தைகள் உரைத்தாலும்
     அவர்செவிக் கேறிடாது

முற்பட்சம் ஆனபேர் வருகினும் வாரும்என
     மொழியவும் வாய்வராது
மோதியே வாதப் பிடிப்புவந் ததுபோல
     முன்காலை அகலவைப்பார்

விற்பனம் மிகுந்தபெரி யோர் செய்தி சொன்னாலும்
     வெடுவெடுத் தேசிநிற்பார்
விருதா மகத்துவப் பேயது சவுக்கடி
     விழும்போது தீருமென்பார்

மற்புயந் தனில்நீப மாலையணி லோலனே
     மார்பனே வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

42. மக்களில் தீய கோள்கள்

அன்னைதந் தையர்புத்தி கேளாத பிள்ளையோ
     அட்டமச் சனியாகுவான்
அஞ்சாமல் எதிர்பேசி நிற்குமனை யாள்வாக்கில்
     அங்கார கச்சன்மமாம்

தன்னைமிஞ் சிச்சொன்ன வார்த்தைகே ளாஅடிமை
     சந்திராட் டகமென்னலாம்
தன்பங்கு தாவென்று சபையேறு தம்பியோ
     சார்ந்தசன் மச்சூரியன்

நன்னயமி லாதவஞ் சனைசெய்த தமையன்மூன்
     றாமிடத் தேவியாழம்
நாடொறும் விரோ தமிடு கொண்டோன் கொடுத்துளோன்
     ராகுகே துக்களெனலாம்

மன்னயனை அன்றுசிறை தனிலிட்டு நம்பற்கு
     மந்திரம் உரைத்தகுருவே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

43. நல்லினஞ் சேர்தல்

சந்தன விருட்சத்தை அண்டிநிற் கின்றபல
     தருவும்அவ் வாசனைதரும்
தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும்
     சாயல்பொன் மயமேதரும்

பந்தம்மிகு பாலுடன்வ ளாவியத ணீரெலாம்
     பால்போல் நிறங்கொடுக்கும்
படிகமணி கட்குளே நிற்கின்ற வடமுமப்
     படியே குணங்கொடுக்கும்

அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடில்
     அடுத்ததும் பசுமையாகும்
ஆனபெரி யோர்களொடு சகவாசம் அதுசெயின்
     அவர்கள் குணம் வருமென்பர்காண்

மந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தஅரி
     மருகமெய்ஞ் ஞானமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

44. ஊழின் பெருவலி

அன்றுமுடி சூடுவ திருக்கரகு ராமன்முன்
     அருங்கா டடைந்ததென்ன
அண்டரெல்லாம் அமிர்தம் உண்டிடப் பரமனுக்
     காலம் லபித்ததென்ன

வென்றிவரு தேவர்சிறை மீட்டநீ களவில்வே
     டிச்சியை சேர்ந்ததென்ன
மேதினி படைக்கும் அயனுக்கொரு சிரம்போகி
     வெஞ்சிறையில் உற்றதென்ன

என்றும்ஒரு பொய்சொலா மன்னவன் விலைபோன
     தென்னகாண் வல்லமையினால்
எண்ணத்தி னால்ஒன்றும் வாராது பரமசிவன்
     எத்தனப் படிமுடியுமாம்

மன்று தனில் நடனமிடு கங்கா தரன்பெற்ற
     வரபுத்ர வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

45. பெரியோர் சொற்படி நடந்தவர்

தந்தைதாய் வாக்யபரி பாலனம் செய்தவன்
     தசரத குமாரராமன்
தமையனருள் வாக்கியபரி பாலனம் செய்தோர்கள்
     தருமனுக் கிளை யநால்வர்

சிந்தையில் உணர்ந்துகுரு வாக்யபரி பாலனம்
     செய்தவன் அரிச்சந்திரன்
தேகியென் றோர்க்கில்லை எனாவாக்ய பாலனம்
     செய்தவன் தான கன்னன்

நிந்தை தவிர் வாக்யபரி பாலனம் செய்தவன்
     நீள்பலம் மிகுந்த அனுமான்
நிறைவுடன் பத்தாவின் வாக்யபரி பாலனம்
     நிலத்தினில் நளாயினிசெய்தாள்

மந்தைவழி கோயில்குள மும்குலவு தும்பிமுகன்
     மகிழ்தர உகந்ததுணைவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

46. தன் அளவே தனக்கு

வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒருகாசு
     மட்டன்றி அதிகமாமோ
வான்ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி
     வண்ணப் பருந்தாகுமோ

கங்கா சலந்தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்
     காய்நல்ல சுரையாகுமோ
கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின்
     காணுமோ நால்நாழிதான்

ஐங்காதம் ஓடினும் தன்பாவம் தன்னோடே
     அடையாமல் நீங்கிவிடுமோ
ஆரிடம் சென்றாலும் வெகுதொலைவு சுற்றினும்
     அமைத்தபடி அன்றிவருமோ.

மங்காத செந்தமிழ் கொண்டுநக் கீரர்க்கு
     வந்ததுயர் தீர்த்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

47. இறுமாப்பு

சூரபது மன்பலமும் இராவணன் தீரமும்
     துடுக்கான கஞ்சன்வலியும்
துடியான இரணியன் வரப்ரசா தங்களும்
     தொலையாத வாலி திடமும்

பாரமிகு துரியோத னாதி நூற் றுவரது
     பராக்ரமும் மதுகைடவர்
பாரிப்பும் மாவலிதன் ஆண்மையும் சோமுகன்
     பங்கில்உறு வல்லமைகளும்

ஏரணவு கீசகன் கனதையும் திரிபுரர்
     எண்ணமும் தக்கன் எழிலும்
இவர்களது சம்பத்தும் நின்றவோ அவரவர்
     இடும்பால் அழிந்த அன்றோ

மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன்தந்த
     வரபுத்ர வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

48. நல்லோர் நட்பு

மாமதியில் முயலான ததுதேய வுந்தேய்ந்து
     வளருமப் போதுவளரும்
வாவிதனில் ஆம்பல்கொட் டிகள தனில் நீர்வற்றில்
     வற்றிடும் பெருகிலுயரும்

பூமருவு புதல்பூடு கோடையில் தீய்ந்திடும்
     பொங்குகா லந்தழைக்கும்
புண்டரிகம் இரவிபோம் அளவிற் குவிந்திடும்
     போது தயம் ஆகில்மலரும்

தேமுடல் இளைக்கில்உயிர் கூடவும் இளைக்கும்அது
     தேறில்உயி ரும்சிறக்கும்
சேர்ந்தோர்க் கிடுக்கணது வந்தாலும் நல்லோர்
     சிநேகம்அப் படிஆகுமே

வாமன சொரூபமத யானைமுக னுக்கிளைய
     வாலகுரு பரவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

49. பயன்தரும்

பருவத்தி லேபெற்ற சேயும் புரட்டாசி
     பாதிசம் பாநடுகையும்
பலமினிய ஆடிதனில் ஆனைவால் போலவே
     பயிர்கொண்டு வருகரும்பும்

கருணையொடு மிக்கநா ணயமுளோர் கையினில்
     கடன்இட்டு வைத்தமுதலும்
காலமது நேரில் தனக்குறுதி யாகமுன்
     கற்றுணர்ந் திடுகல்வியும்

விருதரச ரைக்கண்டு பழகிய சிநேகமும்
     விவேகிகட் குபகாரமும்
வீண் அல்ல இவையெலாம் கைப்பலன் தாகஅபி
     விர்த்தியாய் வருமென்பர்காண்

மருவுலா வியநீப மாலையும் தண் தரள
     மாலையும் புனை மார்பனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

50. காலத்தில் உதவாதவை

கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்
     கட்டிவைத் திடுகல்வியும்
காலங்க ளுக்குதவவேண்டும்என் றன்னியன்
     கையிற் கொடுத்தபொருளும்

இல்லாளை நீங்கியே பிறர்பாரி சதம்என்
     றிருக்கின்ற குடிவாழ்க்கையும்
ஏறுமா றாகவே தேசாந் தரம்போய்
     இருக்கின்ற பிள்ளை வாழ்வும்

சொல்லான தொன்றும்அவர்மனமான தொன்றுமாச்
     சொல்லும்வஞ் சகர்நேசமும்
சுகியமாய் உண்டென் றிருப்பதெல் லாம்தருண
     துரிதத்தில் உதவா துகாண்

வல்லான கொங்கைமட மாதுதெய் வானைகுற
     வள்ளிபங் காளநேயா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

51. திரும்பாதவை

ஆடரவின் வாயினில் அகப்பட்ட தவளையும்
     ஆனைவா யிற்கரும்பும்
அரிதான கப்பலில் பாய்மரக் காற்றினில்
     அகப்பட்டு மெலிகாக்கையும்

நாடறிய வேதாரை வார்த்துக் கொடுத்ததும்
     நமன் கைக்குள் ஆனஉயிரும்
நலமாக வேஅணை கடந்திட்ட வெள்ளமும்
     நாய்வேட்டை பட்டமுயலும்

தேடியுண் பார்கைக்குள் ஆனபல உடைமையும்
     தீவாதை யானமனையும்
திரள்கொடுங் கோலரசர் கைக்கேறு பொருளும்
     திரும்பிவா ராஎன்பர்காண்

மாடமிசை அன்னக் கொடித்திரள்கொள் சோணாடு
     வாழவந் திடுமுதல்வனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

52. நன்று

கடுகடுத் தாயிரம் செய்குவதில் இன்சொலாற்
     களிகொண் டழைத்தல்நன்று
கனவேள்வி ஆயிரம் செய்வதிற் பொய்யுரை
     கருத்தொடு சொலாமைநன்று

வெடுவெடுக் கின்றதோர் அவிவேகி உறவினில்
     வீணரொடு பகைமைநன்று
வெகுமதிக ளாயிரம் செய்வதின் அரைக்காசு
     வேளைகண் டுதவல்நன்று

சடுதியிற் பக்குவம் சொல்லும் கொடைக்கிங்கு
     சற்றும்இலை என்னல்நன்று
சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற
     தாரித்தி ரியநன்றுகாண்

மடுவினில் கரிஓலம் என்னவந் தருள்செய்த
     மால்மருகன் ஆனமுதல்வா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

53. ஈடாகுமோ?

தாரகைகள் ஒருகோடி வானத் திருக்கினும்
     சந்திரற் கீடாகுமோ
தாருவில் கொடிதொனிகள் பலகூடி னாலுமொரு
     தம்பட்ட ஓசையாமோ

கோரமிகு பன்றியின் குட்டிபல கூடின்ஒரு
     குஞ்சரக் கன்றாகுமோ
கொட்டிமலர் வாவியில் பலகூடி னாலுமொரு
     கோகனக மலராகுமோ

பாரமிகு மாமலைகள் பலகூடி னாலுமொரு
     பைம் பொன்மக மேருவாமோ
பலனிலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும்விற்
     பனன்ஒருவ னுக்குநிகரோ

வாரணக் கொடியொரு கரத்திற்பிடித் தொன்றில்
     வடிவேல் அணிந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

54. அறியமுடியுமோ

மணமாலை அருமையைப் புனைபவர்க ளேஅறிவர்
     மட்டிக் குரங்கறியுமோ
மக்களுடை அருமையைப் பெற்றவர்க ளேஅறிவர்
     மலடிதான் அறிவதுண்டோ

கணவருடை அருமையைக் கற்பான மாதறிவள்
     கணிகையா னவள் அறிவளோ
கருதும் Ôஒரு சந்தி'யின் பாண்டம்என் பதைவரும்
     களவான நாயறியுமோ

குணமான கிளியருமை தனைவளர்த் தவரறிவர்
     கொடியபூ னையும்அறியுமோ
குலவுபெரி யோரருமை நல்லோர்க ளேயறிவர்
     கொடுமூடர் தாம்அறிவரோ

மணவாளன் நீயென்று குறவள்ளி பின்தொடர
     வனமூடு தழுவும்அழகா
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

55. தீச்சார்பு

மடுவினிற் கஞ்சமலர் உண்டொருவர் அணுகாமல்
     வன்முதலை அங்கிருக்கும்
மலையினில் தேன்உண்டு சென்றொருவர் கிட்டாமல்
     மருவிஅதில் வண்டிருக்கும்

நெடுமைதிகழ் தாழைமலர் உண்டொருவர் அணுகாமல்
     நீங்காத முள்ளிருக்கும்
நீடுபல சந்தன விருட்சம்உண் டணுகாது
     நீளரவு சூழ்ந்திருக்கும்

குடிமல்கி வாழ்கின்ற வீட்டினிற் செல்லாது
     குரைநாய்கள் அங்கிருக்கும்
கொடுக்கும் தியாகியுண் டிடையூறு பேசும்
     கொடும்பாவி உண்டுகண்டாய்

வடுவையும் கடுவையும் பொருவுமிரு கண்ணிகுற
     வள்ளிக் குகந்தகணவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

56. வேசையர்

பூவில்வே சிகள்வீடு சந்தைப் பெரும்பேட்டை
     புனைமலர் படுக்கைவீடு
பொன்வாசல் கட்டில்பொது அம்பலம் உடுத்ததுகில்
     பொருவில்சூ தாடுசாலை

மேவலா கியகொங்கை கையாடு திரள்பந்து
     விழிமனம் கவர்தூண்டிலாம்
மிக்கமொழி நீர்மேல் எழுத்ததிக மோகம் ஒரு
     மின்னல்இரு துடைசர்ப்பமாம்

ஆவலாகிய வல்கு லோதண்டம் வாங்குமிடம்
     அதிகபடம் ஆம்மனதுகல்
அமிர்தவாய் இதழ்சித்ர சாலையெச் சிற்குழி
     அவர்க் காசை வைக்கலாமோ

மாவடிவு கொண்டே ஒளித்தவொரு சூரனை
     வதைத்தவடி வேலாயுதா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

57. கலிகாலக் கொடுமை

தாய்புத்தி சொன்னால் மறுத்திடும் காலம்உயர்
     தந்தையைச் சீறுகாலம்
சற்குருவை நிந்தைசெய் காலம்மெய்க் கடவுளைச்
     சற்றும்எண் ணாதகாலம்

பேய்தெய்வம் என்றுப சரித்திடுங்காலம்
     புரட்டருக் கேற்றகாலம்
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம்நற்
     பெரியர்சொல் கேளாதகாலம்

தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம்மிகு
     சிறியவன் பெருகுகாலம்
செருவில்விட் டோடினார் வரிசைபெறு காலம்வசை
     செப்புவோர்க் குதவுகாலம்

வாய்மதம் பேசிடும் அநியாய காரர்க்கு
     வாய்த்தகலி காலம்ஐயா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

58. உற்ற கடமை

கல்வியொடு கனமுறச் சபையின்மேல் வட்டமாக்
     காணவைப் போன்பிதாவாம்
கற்றுணர்ந் தேதனது புகழால் பிதாவைப்ர
     காசம்செய் வோன்புத்திரன்

செல்வமிகு கணவனே தெய்வமென் றனுதினம்
     சிந்தைசெய் பவள்மனைவியாம்
சிநேகிதன் போலவே அன்புவைத் துண்மைமொழி
     செப்புமவ னேசோதரன்

தொல்வளம் மிகுந்தநூல் கரைதெரிந் துறுதிமொழி
     சொல்லும்அவ னேகுரவன்ஆம்
சொன்னநெறி தவறாமல் வழிபாடு செய்துவரு
     துய்யனே இனியசீடன்

வல்விரகம் மிஞ்சுசுர குஞ்சரி யுடன்குறவர்
     வஞ்சியை மணந்தகணவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

59. பண்பினாலே பெருமை

சேற்றிற் பிறந்திடும் கமலமலர் கடவுளது
     திருமுடியின் மேலிருக்கும்
திகழ்சிப்பி உடலில் சனித்தமுத் தரசரது
     தேகத்தின் மேலிருக்கும்

போற்றியிடு பூச்சியின் வாயின்நூல் பட்டென்று
     பூசைக்கு நேசமாகும்
புகலரிய வண்டெச்சி லானதேன் தேவர்கோன்
     புனிதவபி டேகமாகும்

சாற்றிய புலாலொடு பிறந்தகோ ரோசனை
     சவாதுபுழு கனைவர்க்கும்ஆம்
சாதியீ னத்திற் பிறக்கினும் கற்றோர்கள்
     சபையின்மேல் வட்டம் அன்றோ

மாற்றிச் சுரத்தினை விபூதியால் உடல்குளிர
     வைத்தமெய்ஞ் ஞானமுதலே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

60. செயத் தகாதவை

தானா சரித்துவரு தெய்வமிது என்றுபொய்ச்
     சத்தியம் செயின்விடாது
தன்வீட்டில் ஏற்றிய விளக்கென்று முத்தந்
     தனைக்கொடுத் தால்அதுசுடும்

ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனதென்
     றடாதுசெய் யிற்கெடுதியாம்
ஆனைதான் மெத்தப் பழக்கம்ஆ னாலுஞ்செய்
     யாதுசெய் தாற்கொன்றிடும்

தீனான தினிதென்று மீதூண் விரும்பினால்
     தேகபீ டைகளே தரும்
செகராசர் சூனுவென ஏலாத காரியம்
     செய்தால் மனம்பொறார்காண்

வானாடு புகழும்ஒரு சோணாடு தழையஇவண்
     வந்தவ தரித்தமுதலே!
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

61. நடுவுநிலைமை

வந்தவிவ காரத்தில் இனியபரி தானங்கள்
     வருமென்றும் நேசரென்றும்
வன்பகைஞ ரென்றுமய லோரென்றும் மிக்கதன
     வானென்றும் ஏழையென்றும்

இந்தவகை யைக்குறித் தொருபட்ச பாதம்ஓர்
     எள்ளள வுரைத்திடாமல்
எண்ணமுட னேலிகித புத்தியொடு சாட்சிக்கும்
     ஏற்கச்ச பாசமதமாம்

முந்த இரு தலையும் சமன்செய்த கோல்போல்
     மொழிந்திடின் தர்மமதுகாண்
முனைவீமன் உடல்பாதி மிருகந் தனக்கென்று
     முன்தருமர் சொன்னதலவோ?

மைந்தனென அன்றுமை முலைப்பால் கொடுத்திட
     வளர்ந்தருள் குழந்தைவடிவே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

62. ஓரம் சொல்லேல்

ஓரவிவ காரமா வந்தவர் முகம்பார்த்
     துரைப்போர் மலைக்குரங்காம்
உயர்வெள் ளெருக்குடன் முளைத்துவிடு மவர்இல்லம்
     உறையும் ஊர் பாழ்நத்தம்ஆம்

தாரணியில் இவர்கள்கிளை நெல்லியிலை போல்உகும்
     சமானமா எழுபிறப்பும்
சந்ததியிலா துழல்வர் அவர்முகத் தினின்மூத்த
     தையலே குடியிருப்பாள்

பாரமிவர் என்றுபுவி மங்கையும் நடுங்குவாள்
     பழித்ததுர் மரணமாவார்
பகர்முடிவி லேரவுர வாதிநர கத்தனு
     பவிப்பர்எப் போதுமென்பார்

வாரமுடன் அருணகிரி நாதருக் கனுபூதி
     வைத்தெழுதி அருள் குருபரா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

63. ஒன்று வேண்டும்

கொங்கையில் லாதவட் கெத்தனைப் பணியுடைமை
     கூடினும் பெண்மையில்லை
கூறுநிறை கல்வியில் லாமலெத் தனைகவிதை
     கூறினும் புலமையில்லை

சங்கையில் லாதவர்க் கெத்தனை விவேகம்
     தரிக்கினும் கனதையில்லை
சட்சுவை பதார்த்தவகை உற்றாலும் நெய்யிலாச்
     சாதமும் திருத்தியில்லை

பங்கயம் இலாமல்எத் தனைமலர்கள் வாவியில்
     பாரித்தும் மேன்மையில்லை
பத்தியில் லாமல்வெகு நியமமாய் அர்ச்சனைகள்
     பண்ணினும் பூசையில்லை

மங்கையர் இலாமனைக் கெத்தனை அருஞ்செல்வம்
     வரினும்இல் வாழ்க்கையில்லை
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

64. அளக்க இயலாதவை

வாரியா ழத்தையும் புனலெறியும் அலைகளையும்
     மானிடர்கள் சனனத்தையும்
மன்னவர்கள் நினைவையும் புருடர்யோ கங்களையும்
     வானின்உயர் நீளத்தையும்

பாரில்எழு மணலையும் பலபிரா ணிகளையும்
     படியாண்ட மன்ன வரையும்
பருப்பதத் தின்நிறையும் ஈசுரச் செயலையும்
     பனிமாரி பொழி துளியையும்

சீரிய தமிழ்ப்புலவர் வாக்கிலெழு கவியையும்
     சித்தர்தம துள்ளத்தையும்
தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வள வெனும்படி
     தெரிந்தள விடக்கூடுமோ

வாரிச மடந்தைகுடி கொண்டநெடு மாலுக்கு
     மருகனென வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

65. பிறர் மனைவியை நயவாதே

தம்தாரம் அன்றியே பரதார மேல்நினைவு
     தனைவைத்த காமுகர்க்குத்
தயையில்லை நிசமில்லை வெட்கமிலை சமரினில்
     தைரியம் சற்றுமில்லை

அம்தாரம்இல்லைதொடர் முறையில்லை நிலையில்லை
     அறிவில்லை மரபுமில்லை
அறம்இல்லை நிதியில்லை இரவினில் தனிவழிக்
     கச்சமோ மனதில்இல்லை

நந்தாத சனம்இல்லை இனம் இல்லை எவருக்கும்
     நட்பில்லை கனதையில்லை
நயம்இல்லை இளமைதனில் வலிமையிலை முத்திபெறும்
     ஞானம்இலை என்பர்கண்டாய்

மந்தார பரிமள சுகந்தாதி புனையுமணி
     மார்பனே அருளாளனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

66. மானம் காத்தல்

கனபாரம் ஏறினும் பிளந்திடுவ தன்றியே
     கற்றூண் வளைந்திடாது
கருதலர்க ளால்உடைந் தாலும்உயிர் அளவிலே
     கனசூரன் அமரில்முறியான்

தினமும்ஓர் இடுக்கண்வந் துற்றாலும் வேங்கைதோல்
     சீவன்அள வில்கொடாது
திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும்
     செப்பும்முறை தவறிடார்கள்

வனம்ஏறு கவரிமான் உயிர்போகும் அளவும்தன்
     மயிரின்ஒன் றும்கொடாது
வாராத ஆபத்து வருகினும் கற்புடைய
     மாதுநிறை தவறிநடவாள்

மனதார உனதடைக் கலமென்ற கீரற்கு
     வன்சிறை தவிர்த்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

67. திருவருட் சிறப்பு

திருமகள் கடாட்சம்உண் டானால் எவர்க்கும்
     சிறப்புண்டு கனதையுண்டு
சென்றவழி யெல்லாம் பெரும்பாதை ஆய்விடும்
     செல்லாத வார்த்தைசெல்லும்

பொருளொடு துரும்புமரி யாதைஆம் செல்வமோ
     புகல்பெருக் காறுபோல் ஆம்
புவியின்முன் கண்டுமதி யாதபேர் பழகினவர்
     போலவே நேசம்ஆவார்

பெருமையொடு சாதியில் உயர்ச்சிதரும் அனுதினம்
     பேரும்ப்ர திட்டையுண்டாம்
பிரியமொடு பகையாளி கூடவுற வாகுவான்
     பேச்சினிற் பிழைவராது

வருமென நினைத்தபொருள் கைகூடி வரும்அதிக
     வல்லமைகள் மிகவும்உண்டாம்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

68. நட்புநிலை

கதிரவன் உதிப்பதெங் கேநளினம் எங்கே
     களித்துளம் மலர்ந்ததென்ன
கார்மேகம் எங்கே பசுந்தோகை எங்கே
     கருத்தில்நட் பானதென்ன

மதியம்எங் கேபெருங் குமுதம்எங் கேமுகம்
     மலர்ந்துமகிழ் கொண்டதென்ன
வல்லிரவு விடிவதெங் கேகோழி எங்கே
     மகிழ்ந்துகூ விடுதல்என்ன

நிதியரசர் எங்கே யிருந்தாலும் அவர்களொடு
     நேசம்ஒன் றாயிருக்கும்
நீதிமிகு நல்லோர்கள் எங்கிருந் தாலும்அவர்
     நிறைபட்சம் மறவார்கள்காண்

மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ
     மருவுசோ ணாட்டதிபனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

69. காலம் அறிதல்

காகம் பகற்காலம் வென்றிடும் கூகையைக்
     கனகமுடி அரசர்தாமும்
கருதுசய காலமது கண்டந்த வேளையில்
     காரியம் முடித்துவிடுவார்

மேகமும் பயிர்காலம் அதுகண்டு பயிர்விளைய
     மேன்மேலும் மாரிபொழியும்
மிக்கான அறிவுளோர் வருதருண காலத்தில்
     மிடியாள ருக்கு தவுவார்

நாகரிகம் உறுகுயில் வசந்தகா லத்திலே
     நலம்என் றுகந்துகூவும்
நல்லோர் குறித்ததைப் பதறாமல் அந்தந்த
     நாளையில் முடிப்பர்கண்டாய்

வாகனைய காலைகல் மாலைபுல் எனும்உலக
     வாடிக்கை நிசம்அல்லவோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

70. இடம் அறிதல்

தரையதனில் ஓடுதேர் நீள்கடலில் ஓடுமோ
     சலதிமிசை ஓடுகப்பல்
தரைமீதில் ஓடுமோ தண்ணீரில் உறுமுதலை
     தன்முன்னே கரிநிற்குமோ

விரைமலர் முடிப்பரமர் வேணிஅர வினைவெல்ல
     மிகுகருட னால்ஆகுமோ
வேங்கைகள் இருக்கின்ற காடுதனில் அஞ்சாமல்
     வேறொருவர் செல்லவசமோ

துரைகளைப் பெரியோரை அண்டிவாழ் வோர்தமைத்
     துட்டர்பகை என்னசெய்யும்
துணைகண்டு சேரிடம் அறிந்துசேர் என்றெளவை
     சொன்னகதை பொய்யல்லவே?

வரைஊதும் மாயனை அடுத்தலாற் பஞ்சவர்கள்
     வன்போர் செயித்ததன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

71. யாக்கை நிலையாமை

மனுநல்மாந் தாதாமுன் ஆனவர்கள் எல்லோரும்
     மண்மேல் இருந்துவாழ்ந்து
மடியாதிருந்தபேர் இல்லைஅவர் தேடியதை
     வாரிவைத் தவரும்இல்லை

பனியதனை நம்பியே ஏர்பூட்டு கதையெனப்
     பாழான உடலைநம்பிப்
பார்மீதில் இன்னும்வெகு நாளிருப் போம்என்று
     பல்கோடி நினைவையெண்ணி

அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல்
     அன்பாக நின்பதத்தை
அர்ச்சித்து முத்திபெறல் வேண்டுமென் றெண்ணார்கள்
     ஆசைவலை யிற்சுழலுவார்

வனிதையர்கள் காமவி காரமே பகையாகும்
     மற்றும்ஒரு பகையும்உண்டோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

72. வேட்டக நிலை

வேட்டகந் தன்னிலே மருகன்வந் திடுமளவில்
     மேன்மேலும் உபசரித்து
விருந்துகள் சமைத்துநெய் பால்தயிர் பதார்த்தவகை
     வேண்டுவ எலாமமைப்பார்

ஊட்டமிகு வர்க்கவகை செய்திடுவர் தைலம்இட்
     றுறுதியாய் முழுகுவிப்பார்
ஓயாது தின்னவே பாக்கிலை கொடுத்திடுவர்
     உற்றநாள் நாலாகிலோ

நாட்டம்ஒரு படியிரங் குவதுபோல் மரியாதை
     நாளுக்கு நாள்குறைவுறும்
நகைசெய்வர் மைத்துனர்கள் அலுவல்பார் போஎன்று
     நாணாமல் மாமிசொல்வாள்

வாட்டமனை யாளொரு துரும்பாய் மதிப்பள் அவன்
     மட்டியிலும் மட்டிஅன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

73. செல்வம் நிலையாமை

ஓடமிடும் இடமது மணல்சுடும் சுடும்இடமும்
     ஓடம்மிக வேநடக்கும்
உற்றதோர் ஆற்றின்நடு மேடாகும் மேடெலாம்
     உறுபுனல்கொள் மடுவாயிடும்

நாடுகா டாகும்உயர் காடுநா டாகிவிடும்
     நவில்சகடு மேல்கீழதாய்
நடையுறும் சந்தைபல கூடும்உட னேகலையும்
     நல்நிலவும் இருளாய்விடும்

நீடுபகல் போயபின் இரவாகும் இரவுபோய்
     நிறைபகற் போதாய்விடும்
நிதியோர் மிடித்திடுவர் மிடியோர் செழித்திடுவர்
     நிசமல்ல வாழ்வுகண்டாய்

மாடுமனை பாரிசனம் மக்கள்நிதி பூடணமும்
     மருவுகன வாகும் அன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

74. பிறந்தோர் பெறவேண்டிய பேறு

சடம்ஒன் றெடுத்தால் புவிக்குநல் லவனென்று
     தன்பேர்வி ளங்கவேண்டும்
சதிருடன் இதல்லாது மெய்ஞ்ஞானி என்றவ
     தரிக்கவே வேண்டும்அல்லால்

திடம்இனிய ரணசூர வீரன்இவன் என்னவே
     திசைமெச்ச வேண்டும்அல்லால்
தேகியென வருபவர்க் கில்லையென் னாமலே
     செய்யவே வேண்டும்அல்லால்

அடைவுடன் பலகல்வி ஆராய்ந்து வித்துவான்
     ஆகவே வேண்டும்அல்லால்
அறிவினால் துரைமக்கள் ஆகவர வேண்டும்இவர்
     அதிகபூ பாலர்ஐயா

வடகுவடு கிடுகிடென எழுகடலும் அலையெறிய
     மணிஉரகன் முடிகள்நெரிய
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

75. வேசையர்

தேடித்தம் வீட்டிற் பணக்காரர் வந்திடின்
     தேகசீ வன்போலவே
சிநேகித்த உம்மையொரு பொழுதுகா ணாவிடின்
     செல்லுறா தன்னம்என்றே

கூடிச் சுகிப்பர்என் ஆசைஉன் மேல்என்று
     கூசாமல் ஆணையிடுவார்
கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திதழ்
     கொடுப்பர்சும் பனம்உகப்பர்

வேடிக்கை பேசியே சைம்முதல் பறித்தபின்
     வேறுபட நிந்தைசெய்து
விடவிடப் பேசுவர் தாய்கலகம் மூட்டியே
     விட்டுத் துரத்திவிடுவார்

வாடிக்கை யாய்இந்த வண்டப் பரத்தையர்
     மயக்கத்தை நம்பலாமோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

76. உறுதி

கைக்குறுதி வேல்வில் மனைக்குறுதி மனையாள்
     கவிக்குறுதி பொருளடக்கம்
கன்னியர் தமக்குறுதி கற்புடைமை சொற்குறுதி
     கண்டிடில் சத்யவசனம்

மெய்க்குறுதி முன்பின் சபைக்குறுதி வித்வசனம்
     வேசையர்க் குறுதிதேடல்
விரகருக் குறுதிபெண் மூப்பினுக் குறுதிஊண்
     வீரருக் குறுதிதீரம்

செய்க்குறுதி நீர்அரும் பார்க்குறுதி செங்கோல்
     செழும்படைக் குறுதிவேழம்
செல்வந் தனக்குறுதி பிள்ளைகள் நகர்க்குறுதி
     சேர்ந்திடும் சர்ச்சனர்களாம்

மைக்குறுதி யாகிய விழிக்குற மடந்தைசுர
     மங்கைமரு வுந்தலைவனே
மயிலேறி விளையாடு குகனேபுல்! வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

77. வறுமை

வறுமைதான் வந்திடின் தாய்பழுது சொல்லுவாள்
     மனையாட்டி சற்றும் எண்ணாள்
வாக்கிற் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத
     வசனமாய் வந்துவிளையும்

சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது
     சிந்தையில் தைரியமில்லை
செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்ஆம்
     செல்வரைக் காணில்நாணும்

உறுதிபெறு வீரமும் குன்றிடும் விருந்துவரின்
     உயிருடன் செத்தபிணமாம்
உலகம் பழித்திடும் பெருமையோர் முன்புசென்
     றொருவரொரு செய்திசொன்னால்

மறுவசன முஞ்சொலார் துன்பினில் துன்பம்இது
     வந்தணுகி டாதருளுவாய்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

78. தீய சார்பு

ஆனைதண் ணீரில்நிழல் பார்த்திடத் தவளைசென்
     றங்கே கலக்கிஉலவும்
ஆயிரம் பேர்கூடி வீடுகட் டிடில்ஏதம்
     அறைகுறளும் உடனேவரும்

ஏனைநற் பெரியோர்கள் போசனம் செயுமளவில்
     ஈக்கிடந் திசைகேடதாம்
இன்பமிகு பசுவிலே கன்றுசென் றூட்டுதற்
     கினியகோன் அது தடுக்கும்

சேனைமன் னவர்என்ன கருமநிய மிக்கினும்
     சிறியோர்க ளாற்குறைபடும்
சிங்கத்தை யும்பெரிய இடபத்தை யும்பகைமை
     செய்ததொரு நரியல்லவோ

மானையும் திகழ்தெய்வ யானையும் தழுவுமணி
     மார்பனே அருளாளனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

79. இடுக்கண் வரினும் பயன்படுபவை

ஆறுதண் ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்
     அமுதபா னம்கொடுக்கும்
ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்
     அப்போதும் உதவிசெய்வன்

கூறுமதி தேய்பிறைய தாகவே குறையினும்
     குவலயத் திருள்சிதைக்கும்
கொல்லைதான் சாவிபோய் விட்டாலும் அங்குவரு
     குருவிக்கு மேய்ச்சலுண்டு

வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும்
     மிகநாடி வருபவர்க்கு
வேறுவகை இல்லையென் றுரையா தியன்றன
     வியந்துளம் மகிழ்ந்துதவுவான்

மாறுபடு சூரசங் காரகம் பீரனே
     வடிவேல் அணிந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

80. இவர்க்கு இது இல்லை!

சார்பிலா தவருக்கு நிலையேது முதலிலா
     தவருக் கிலாபமேது
தயையிலா தவர்தமக் குறவேது பணமிலா
     தார்க்கேது வேசை உறவு

ஊர்இலா தவர்தமக் கரசேது பசிவேளை
     உண்டிடார்க் குறுதிநிலையே
துண்மையில் லாதவர்க் கறமேது முயல்விலார்க்
     குறுவதொரு செல்வமேது

சோர்விலா தவருக்கு மற்றும்ஒரு பயம்ஏது
     சுகம் இலார்க்காசையேது
துர்க்குணம் இலாதவர்க் கெதிராளி யேதிடர்செய்
     துட்டருக் கிரக்கமேது

மார்புருவ வாலிமேல் அத்திரம் விடுத்தநெடு
     மால்மருக னானமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

81. இதனினும் இது நன்று

பஞ்சரித் தருமையறி யார்பொருளை எய்தலின்
     பலர்மனைப் பிச்சைநன்று
பரிவாக உபசாரம் இல்லா விருந்தினிற்
     பட்டினி யிருக்கைநன்று

தஞ்சம்ஒரு முயலைஅடு வென்றிதனில் யானையொடு
     சமர்செய்து தோற்றல்நன்று
சரசகுணம் இல்லாத பெண்களைச் சேர்தலிற்
     சன்னியா சித்தல்நன்று

அஞ்சலார் தங்களொடு நட்பாய் இருப்பதனில்
     அரவினொடு பழகுவ துநன்
றந்தணர்க் காபத்தில் உதவா திருப்பதனில்
     ஆருயிர் விடுத்தல்நன்று

வஞ்சக ருடன்கூடி வாழ்தலில் தனியே
     வருந்திடும் சிறுமைநன்று
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

82. நிலையற்றவை

கொற்றவர்கள் ராணுவமும் ஆறுநேர் ஆகிய
     குளங்களும் வேசையுறவும்
குணம்இலார் நேசமும் பாம்பொடு பழக்கமும்
     குலவுநீர் விளையாடலும்

பற்றலார் தமதிடை வருந்துவிசு வாசமும்
     பழையதா யாதிநிணறும்
பரதார மாதரது போகமும் பெருகிவரு
     பாங்கான ஆற்றுவரவும்

கற்றும்ஒரு துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவும்
     நல்லமத யானைநட்பும்
நாவில்நல் லுறவும்ஒரு நாள்போல் இராஇவைகள்
     நம்பப் படாதுகண்டாய்

மற்றும்ஒரு துணையில்லை நீதுணை எனப்பரவும்
     வானவர்கள் சிறைமீட்டவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

83. நற்புலவர் தீப்புலவர் செயல்

மிக்கான சோலையிற் குயில்சென்று மாங்கனி
     விருப்பமொடு தேடிநாடும்
மிடைகருங் காகங்கள் எக்கனி இருந்தாலும்
     வேப்பங் கனிக்குநாடும்

எக்காலும் வரிவண்டு பங்கே ருகத்தினில்
     இருக்கின்ற தேனைநாடும்
எத்தனை சுகந்தவகை உற்றாலும் உருள்வண்
     டினம்துர் மலத்தைநாடும்

தக்கோர் பொருட்சுவை நயங்கள்எங் கேயென்று
     தாம்பார்த் துகந்துகொள்வார்
தாழ்வான வன்கண்ணர் குற்றம்எங் கேயென்று
     தமிழில்ஆ ராய்வர்கண்டாய்

மைக்காவி விழிமாது தெய்வானை யும்குறவர்
     வள்ளியும் தழுவு தலைவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

84. தாழ்வில்லை

வேங்கைகள் பதுங்குதலும் மாமுகில் ஒதுங்குதலும்
     விரிசிலை குனிந்திடுதலும்
மேடம தகன்றிடலும் யானைகள் ஒடுங்குதலும்
     வெள்விடைகள் துள்ளிவிழலும்

மூங்கில்கள் வணங்குதலும் மேலவர் இணங்குதலும்
     முனிவர்கள் நயந்துகொளலும்
முதிர்படை ஒதுங்குதலும் வினையர்கள் அடங்குதலும்
     முதலினர் பயந்திடுதலும்

ஆங்கரவு சாய்குதலும் மகிழ்மலர் உலர்ந்திடலும்
     ஆயர்குழல் சூடுபடலும்
அம்புவியில் இவைகா ரியங்களுக் கல்லாமல்
     அதனால் இளைப்புவருமோ

மாங்கனிக் காவரனை வலமது புரிந்துவளர்
     மதகரிக் கிளையமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

85. தெய்வச் செயல்

சோடாய் மரத்திற் புறாரெண் டிருந்திடத்
     துறவுகண் டேவேடுவன்
தோலாமல் அவையெய்யவேண்டும் என்றொருகணை
     தொடுத்துவில் வாங்கிநிற்க

ஊடாடி மேலே எழும்பிடின் அடிப்பதற்
     குலவுரா சாளிகூட
உயரப் பறந்துகொண் டேதிரிய அப்போ
     துதைத்தசிலை வேடன் அடியில்

சேடாக வல்விடம் தீண்டவே அவன்விழச்
     சிலையில்தொ டுத்தவாளி
சென்றிரா சாளிமெய் தைத்துவிழ அவ்விரு
     சிறைப்புறா வாழ்ந்த அன்றோ

வாடாமல் இவையெலாம் சிவன்செயல்கள் அல்லாது
     மனச்செயலி னாலும்வருமோ
மயிலேறி வி¬ளாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

86. செய்யுளின் இயல்

எழுத்தசைகள் சீர்தளைகள் அடிதொடைகள் சிதையா
     திருக்கவே வேண்டும்அப்பா
ஈரைம் பொருத்தமொடு மதுரமாய்ப் பளபளப்
     பினியசொற் கமையவேண்டும்

அழுத்தம்மிகு குறளினுக் கொப்பாக வேபொருள்
     அடக்கமும் இருக்கவேண்டும்
அன்பான பாவினம் இசைந்துவரல் வேண்டும்முன்
     அலங்காரம் உற்றதுறையில்

பழுத்துளம் உவந்தோசை உற்றுவரல் வேண்டும்
     படிக்கும்இசை கூடல்வேண்டும்
பாங்காக இன்னவை பொருந்திடச் சொற்கவிதை
     பாடிற் சிறப்பென்பர்காண்

மழுத்தினம் செங்கைதனில் வைத்தகங் காளன் அருள்
     மைந்தன் என வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

87.திருநீறு வாங்கும் முறை

பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
     பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்
     பருத்ததிண் ணையிலிருந்தும்

தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
     திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல் மூன்றாலும் வாங்கினும்
     திகழ்தம் பலத்தினோடும்

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
     அசுத்தநில மான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
     அவர்க்குநர கென்பர்கண்டாய்

வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
     மணந்துமகி¦ழ் சகநாதனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

88. திருநீறு அணியும் முறை

பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
     பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
     பருத்தபுய மீதுஒழுக

நித்தம்மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
     நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை அணுகாது தேகபரி சுத்தமாம்
     நீங்காமல் நிமலன் அங்கே

சத்தியொடு நித்தம்விளை யாடுவன் முகத்திலே
     தாண்டவம் செய்யுந்திரு
சஞ்சலம் வராதுபர கதியுதவும் இவரையே
     சத்தியும் சிவனுமென்னலாம்

மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்
     மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

89. பயனற்ற உறுப்புக்கள்

தேவா லயஞ்சுற்றி டாதகால் என்னகால்
     தெரிசியாக் கண்என்னகண்
தினமுமே நின்கமல பாதத்தை நினையாத
     சிந்தைதான் என்னசிந்தை

மேவா காம்சிவ புராண மவை கேளாமல்
     விட்டசெவி என்ன செவிகள்
விமலனை வணங்காத சென்னிஎன் சென்னிபணி
     விடைசெயாக் கையென்னகை

நாவார நினையேத்தி டாதவாய் என்னவாய்
     நல்தீர்த்தம் மூழ்காவுடல்
நானிலத் தென்னவுடல் பாவியா கியசனனம்
     நண்ணினாற் பலனேதுகாண்

மாவாகி வேலைதனில் வருசூரன் மார்புருவ
     வடிவேலை விட்டமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

90. நற்பொருளுடன் தீயபொருள்

கோகனக மங்கையுடன் மூத்தவள் பிறந்தென்ன
     குலவும் ஆட்டின்கண் அதர்தான்
கூடப் பிறந்தென்ன தண்ணீரி னுடனே
     கொடும்பாசி உற்றும்என்ன

மாகர்உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்தென்ன
     வல்இரும் பில்துருத்தான்
வந்தே பிறந்தென்ன நெடுமரந் தனில்மொக்குள்
     வளமொடு பிறந்தென்னஉண்

பாகமிகு செந்நெலொடு பதர்தான் பிறந்தென்ன
     பன்னுமொரு தாய்வயிற்றில்
பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்தென்ன
     பலன்ஏதும் இல்லை அன்றோ

மாகனக மேருவைச் சிலையென வளைத்தசிவன்
     மைந்தனென வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

91. கோடரிக்காம்பு

குலமான சம்மட்டி குறடுகைக் குதவியாய்க்
     கூர்இரும் புகளைவெல்லும்
கோடாலி தன்னுளே மரமது நுழைந்துதன்
     கோத்திரம் எலாம் அழிக்கும்

நலமான பார்வைசேர் குருவியா னதுவந்து
     நண்ணுபற வைகளை ஆர்க்கும்
நட்புடன் வளர்த்தகலை மானென்று சென்றுதன்
     நவில்சாதி தனையிழுக்கும்

உலவுநல் குடிதனிற் கோளர்கள் இருந்துகொண்
     டுற்றாரை யீடழிப்பர்
உளவன்இல் லாமல்ஊர் அழியாதெனச் சொலும்
     உலகமொழி நிசம் அல்லவோ

வலமாக வந்தர னிடத்தினிற் கனிகொண்ட
     மதயானை தன்சோதரா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

92. வீணுக்குழைத்தல்

குயில்முட்டை தனதென்று காக்கை அடைகாக்கும்
     குணம்போலும் ஈக்கள் எல்லாம்
கூடியே தாம்உண்ண வேண்டும்என் றேதினம்
     கூடுய்த்த நறவுபோலும்

பயில்சோர ருக்குப் பிறந்திடத் தாம்பெற்ற
     பாலன்என் றுட்கருதியே
பாராட்டி முத்தம்இட் டன்பாய் வளர்த்திடும்
     பண்பிலாப் புருடர்போலும்

துயிலின்றி நிதிகளைத் தேடியே ஒருவர்பால்
     தொட்டுத் தெரித்திடாமல்
தொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டு போகவரு
     சொந்தமா னவர்வேறுகாண்

வயிரமொடு சூரனைச் சங்கார மேசெய்து
     வானவர்க் குதவுதலைவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

93. வீணாவன

அழலுக்கு ளேவிட்ட நெய்யும் பெருக்கான
     ஆற்றிற்க ரைத்தபுளியும்
அரிதான கமரிற் கவிழ்த்திட்ட பாலும்வரும்
     அலகைகட் கிடுபூசையும்

சுழல்பெருங் காற்றினில் வெடித்தபஞ் சும்மணல்
     சொரிநறும் பனிநீரும்நீள்
சொல்லரிய காட்டுக் கெரித்தநில வும்கடற்
     சுழிக்குளே விடுகப்பலும்

விழலுக் கிறைத்திட்ட தண்ணீரும் முகம்மாய
     வேசைக் களித்தபொருளும்
வீணருக் கேசெய்த நன்றியும் பலனில்லை
     விருதா இ தென்பர்கண்டாய்

மழலைப் பசுங்கிள்ளை முன்கைமலை மங்கைதரு
     வண்ணக் குழந்தைமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

94. கைவிடத்தகாதவர்

அன்னைசுற் றங்களையும் அற்றைநாள் முதலாக
     அடுத்துவரு பழையோரையும்
அடுபகைவ ரில்தப்பி வந்தவொரு வேந்தனையும்
     அன்பான பெரியோரையும்

தன்னைநம் பினவரையும் ஏழையா னவரையும்
     சார்ந்தமறை யோர்தம்மையும்
தருணம்இது என்றுநல் லாபத்து வேளையிற்
     சரணம்பு குந்தோரையும்

நன்னயம தாகமுன் உதவிசெய் தோரையும்
     நாளும்த னக்குறுதியாய்
நத்துசே வகனையும் காப்பதல் லாதுகை
     நழுவவிடல் ஆகாதுகாண்

மன்னயிலும் இனியசெஞ் சேவலும் செங்கைமலர்
     வைத்தசர வணபூபனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

95. தகாத செயல்கள்

அண்டிவரும் உற்றார் பசித்தங் கிருக்கவே
     அன்னியர்க் குதவுவோரும்
ஆசுதபு பெரியோர்செய் நேசத்தை விட்டுப்பின்
     அற்பரை அடுத்தபேரும்

கொண்டஒரு மனையாள் இருக்கப் பரத்தையைக்
     கொண்டாடி மருவுவோரும்
கூறுசற் பாத்திரம் இருக்கமிகு தானமது
     குணம்இலார்க் கீந்தபேரும்

கண்டுவரு புதியோரை நம்பியே பழையோரைக்
     கைவிட் டிருந்தபேரும்
கரிவாலை விட்டுநரி வால்பற்றி நதிநீர்
     கடக்கின்ற மரியாதைகாண்

வண்டடர் கடப்பமலர் மாலிகா பரணம்அணி
     மார்பனே அருளாளனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

96. நல்லோர் முறை

கூடியே சோதரர்கள் வாழ்தலா லும்தகு
     குழந்தைபல பெறுதலாலும்
குணமாக வேபிச்சை யிட்டுண்கை யாலும்
     கொளும்பிதிர்க் கிடுதலாலும்

தேடியே தெய்வங்க ளுக்கீத லாலும்
     தியாகம் கொடுத்தலாலும்
சிறியோர்கள் செய்திடும் பிழையைப் பொறுத்துச்
     சினத்தைத் தவிர்த்தலாலும்

நாடியே தாழ்வாய் வணங்கிடுத லாலுமிக
     நல்வார்த்தை சொல்லலா லும்
நன்மையே தருமலால் தாழ்ச்சிகள் வராஇவை
     நல்லோர்கள் செயும்முறைமைகாண்

வாடிமனம் நொந்துதமிழ் சொன்னநக் கீரன்முன்
     வந்துதவி செய்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

97. அடைக்கலம் காத்தல்

அஞ்சல்என நாயினுடல் தருமன் சுமந்துமுன்
     ஆற்றைக் கடத்துவித்தான்
அடைக்கலம் எனும்கயற் காகநெடு மாலுடன்
     அருச்சுனன் சமர்புரிந்தான்

தஞ்சம்என வந்திடு புறாவுக்கு முன்சிபி
     சரீரம் தனைக்கொடுத்தான்
தடமலைச் சிறகரிந் தவனைமுன் காக்கத்
     ததீசிமுது கென்பளித்தான்

இன்சொலுட னேபூத தயவுடையர் ஆயினோர்
     எவருக்கும் ஆபத்திலே
இனியதம் சீவனை விடுத்தாகி லும்காத்
     திரங்கிரட் சிப்பர் அன்றோ

வஞ்சகிர வுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன்
     வளர்சூரன் உடல்கீண்டவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

98. தக்கவையும் தகாதவையும்

பாலினொடு தேன்வந்து சேரில்ருசி அதிகமாம்
     பருகுநீர் சேரின் என்னாம்
பவளத்தி னிடைமுத்தை வைத்திடிற் சோபிதம்
     படிகமணி கோக்கின்என்னாம்

மேலினிய மன்னர்பால் யானைசேர் வதுகனதை
     மேடமது சேரின்என்னாம்
மிக்கான தங்கத்தில் நவமணி உறின்பெருமை
     வெண்கல் அழுத்தின்என்னாம்

வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின்நலம்
     வளைகிழவர் சேரின்என்னாம்
மருவுநல் லோரிடம் பெரியோர் வரின்பிரியம்
     வருகயவர் சேரின்என்னாம்

மாலிகை தரித்தமணி மார்பனே தெய்வானை
     வள்ளிக்கு வாய்த்தகணவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

99. சான்றோர் தன்மை

அன்னதா னஞ்செய்தல் பெரியோர்சொல் வழிநிற்றல்
     ஆபத்தில் வந்தபேர்க்
கபயம் கொடுத்திடுதல் நல்லினம் சேர்ந்திடுதல்
     ஆசிரியன் வழிநின்றவன்

சொன்னமொழி தவறாது செய்திடுதல் தாய்தந்தை
     துணையடி அருச்சனைசெயல்
சோம்பலில் லாமல்உயிர் போகினும் வாய்மைமொழி
     தொல்புவியில் நாட்டியிடுதல்

மன்னரைச் சேர்ந்தொழுகல் கற்புடைய மனைவியொடு
     வைகினும் தாமரையிலை
மருவுநீர் எனவுறுதல் இவையெலாம் மேலவர்தம்
     மாண்பென் றுரைப்பர் அன்றோ

வன்னமயில் மேலிவர்ந் திவ்வுலகை ஒருநொடியில்
     வலமாக வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

100. நூலின் பயன்

வன்னமயில் எறிவரு வேலாயு தக்கடவுள்
     மலைமேல் உகந்தமுருகன்
வள்ளிக் கொடிக்கினிய வேங்கைமரம் ஆகினோன்
     வானவர்கள் சேனாபதி

கன்னல்மொழி உமையாள் திருப்புதல்வன் அரன்மகன்
     கங்கைபெற் றருள்புத்திரன்
கணபதிக் கிளையஒரு மெய்ஞ்ஞான தேசிகக்
     கடவுள்ஆ வினன் குடியினான்

பன்னரிய புல்வயலில் வானகும ரேசன்மேல்
     பரிந்துகுரு பாததாசன்
பாங்கான தமிழாசி ரியவிருத் தத்தின்அறை
     பாடலொரு நூறும்நாடி

நன்னயம தாகவே படித்தபேர் கேட்டபேர்
     நாள்தொறும் கற்றபேர்கள்
ஞானயோ கம்பெறுவர் பதவியா வும்பெறுவர்
     நன்முத்தி வும்பெறுவரே.

குமரேச சதகம் முற்றிற்று