உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
‘வரராமயோகி’ என்னும் வலியமேலெழுத்து யோகீச்வரன் ராமன் பிள்ளை இயற்றிய திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் காப்பு நம்பித் தமிழ்ப் புலவோர் நன்மைபெற வாழ்குறுங்கை நம்பிச் சதகம் நவிலவே - நம்பிக்குத் தங்கை மகன் கங்கை மகன் தங்கை மகன் கங்கை மகன் கங்கை மகன் றங்கை மகன் காப்பு. நூல் திருக்கண்ட கண்டீவினை கண்டிடாது; தெரிசித்து நின் னுருக் கண்டவர்க்குப் பிறவி வராது; உயர்வான் கற்பகத் தருக்கண்டவர்க்கு வறுமை யுறாது; செந்தாமரைப்பூ மருக்கண்ட வண்டகலாதே, குறுங்கை மலைநம்பியே. 1 ஐந்தென மூன்றென நின்றேகமாகி, அனைத்துலகுந் தந்தருள் மூலனு நீயே, அதற்கொரு சாட்சி யுண்டே சிந்துரம் மூலப் பெயரிட் டழைக்கவும், சீக்கிரத்தில் வந்தனை நீயென்ற சொல்லே, குறுங்கை மலைநம்பியே. 2 எண்ணி யுனையும் சிவனையும் வேறென் றெதிர் விகற்பம் பண்ணுமவர்க்கு நரகே வெண்ணீற்றைப் பழித்தவர் தாம் நண்ணி நீறாயினர்; மண்ணாக வெய்தினர், நம்பி திரு மண்ணை நிந்தித்தவர் கண்டாய், குறுங்கை மலைநம்பியே. 3 பாவுட் பெரிது பதிபா; செவ்வாய் மொழிப் பக்தர் தொழுந் தேவுட் பெரியவன் நீயே; தெளிந்து திருமருவும் பூவுட் பெரிது துளபம்; மெய்ஞ்ஞானம் புனையுயிர் ஆன் மாவுட் பெரி; திவை மெய்யே, குறுங்கை மலைநம்பியே. 4 எட்டெழுத்தாலுனைப் போற்றாதவரும், ஏகாதசிநாட் பட்டினியாய்ப் பக்தி செய்யா தவரும், பசுந்துளபம் நட்டறியாதவரு மேகி லக்கினி நன்னதியா மட்டினில் எப்படிப் போவார், குறுங்கை மலைநம்பியே? 5 ஆலயர், வேதர், குரவர், அருந்தவர், ஐந்தவித்தோர், காலை வணங்கிப் பிரசாதம் வாங்கிற் கருணை யெய்தும்; மேலைமன் செல்வங் களைந்தான், முனிவன் விரும்பி யருள் மாலை யிகழ்ந்ததனாலே, குறுங்கை மலைநம்பியே. 6 நிலைமேவு நல்லவர்க் கெய்திய துன்பம் நெறிநிற்குமோ, தொலைவான் கதிர்முன் னிருளென்ன வோடும்; நற் சூரனுக்குத் தலையோடணுகல் தலைப்பா மட்டாம், விடம் சங்கரன்மேல் மலைபோல வந்தணு வாச்சே, குறுங்கை மலைநம்பியே. 7 கேடாக வெய்தினுஞ் சான்றோர் மனது கெதிகலங்கார்; கோடானது குலுங்காதே; கதிர்களைக் கோளரவம் பிடார் கிரணம் பிடித்தென்ன காண்; ஔவை பீடை வந்தால், வாடாதிருக்கச் சொன்னாளே, குறுங்கை மலைநம்பியே. 8 சிட்டர்களாகிய மேலோருக் கற்பம் சிறுமை வந்து கிட்டில், அதுகொண்டவர்க் கொரு தாழ்வில்லை; கெங்கையிலே கட்டி நுரையுண்டு, நெல்லுக் குமியுண்டு, காண் கருப்பு வட்டிலுங் கல்லுண்டு பாராய், குறுங்கை மலைநம்பியே. 9 மெச்சவராயினும், தந்தம் நிலைமை விட்டுப் பிரிந்தால், நிச்சயம் நின்று தயங்குவரே; முத்து நெக்குடைந்தால், துச்சமதாகும்; மரைவாடும், நீரின் றுணையிலையேல்; மச்சழிந்தாற் குச்சுமாமோ, குறுங்கை மலைநம்பியே? 10 இல்லிழந்தாற் புந்தி யுள்ளவர் நல்ல இடனறிந்தே செல்லுவர்; சீதையும் வான்மீகிதன் பதி சென்றிருந்தாள்; அல்லல் வரிற் சுரரெல்லோருங் கூடி அரனிருக்க வல்ல கயிலை யுறுவார், குறுங்கை மலைநம்பியே. 11 சிந்தையின் மெத்தக் கவலையுற்றாலும், சொற் றோர்வுடையோர் தந்தந் திறம் விட்டெளிமை சொல்லார்; தங்கு சோலைக்குள்ளே கொந்தன் மிகு மழைக்கா லிருட்டாகிலும், கொம்பிழந்து மந்திகள் பாய்வது முண்டோ, குறுங்கை மலைநம்பியே? 12 வெற்றி வந்தாற், பின்பு தோல்வியும் எய்தும்; மிகுந்த செல்வம் பெற்றிடில், சூழும் பிறகே வறுமை; பெருகு கலை பற்றிய திங்கள் குறையும்; நதிவெள்ளம் பாய்ந்துடனே வற்றும்; பகல் சென்றிராவாம், குறுங்கை மலைநம்பியே. 13 சூதிட்டுப் பஞ்சவர் நாடிழந்தார்; சொற்றாரை யென்பாள் ஏதுவின் வாலி யுயி ரழிந்தான்; இனியேது சும்மா காதுக் கணியின், முகத்துக் கழகென்று காண்பதன்றி, வாதுக்கு நிற்ப தழகோ, குறுங்கை மலைநம்பியே? 14 தள்ளுறுங் காலத்திலல்லால், ஒருவரைத் தான் கெடுக்க வெள்ளிமலை மன் வந்தாலும் ஒவ்வாது; விழி கொடவன் தெள்ளிய சங்க மெரிக்கிலனாய்க், கல்வித் தேர்ச்சியிலே, வள்ளிய கீரற் கிளைத்தான், குறுங்கை மலைநம்பியே. 15 பழித்தே யுலகர் அபகீர்த்தி சொல்லின், இப்பாருக்குட் சென் றொழித்தாலும், அங்கது போய்விடுமோ; பண்டுரோம முண்டாய்ச் செழித்தே பலர் கொண்டைப் பிச்சனென்றோதுதல் சென்னிதனை மழித்தாலும், போகறியாதே, குறுங்கை மலைநம்பியே. 16 கருநிற மந்தனை வெல்வதற்கே சிவன் கங்கையுள்ளே வெருவி யொளித்தும், வினைவிட்டதோ; இந்த மேதினியில் அருளினராகிலும், ஊழால் வருவதை யார் தடுப்பார், வரும் விதி ராத்தங்கிடுமோ, குறுங்கை மலைநம்பியே? 17 பாக்கியம் வந்தவுடனே, அவரைப் பழகி முன் நன் றாக்கிய பேர் வரின் நோக்கார்; துரோபதையைப் பயந்தோன் தூக்கிய சாபக்குருவினை யாரெவர் சொல்லுமென்று வாக்கியம் பொய்த்து விட்டான்காண், குறுங்கை மலைநம்பியே. 18 பலியாத வருடனென்றால், அதனைப் படித்து மனஞ் சலியாதிருப்பது தாடிகமே; அரன்றன் விழிக்கே பெலியாவை யென்ற இரதியைக் காய் மதன் மெய்யுமுண்டோ, வலியாருடன் பகையாமோ, குறுங்கை மலைநம்பியே? 19 பண்டு மராவென்று வான்மீகியான பரிசெனவே கொண்டி டவுடத மந்திரந் தெய்வங் குருவருளும்; உண்டெனுவோருக் குண்டாமே, பொய்யாமென்றுரைக்கும் அந்த வண்டர்க் கில்லாமலும் போமே, குறுங்கை மலைநம்பியே. 20 தஞ்சமென வந்தடைந்தோரைக் காப்பவர் தாரணியிற் கொஞ்சம்; எவர்க்கும் வராது கண்டாய், முன்குருகுலக்கோன் அஞ்ச விடத் துகி லீந்தே கருணை புரிந்தைவர் தம் வஞ்சியைக் காத்த நின்னன்பே, குறுங்கை மலைநம்பியே. 21 பிணக்குறு துன்மதியோர் நல்ல நூலைப் பிரித்திழுத்துக் குணக்கிக் களைவர்; திரிக்கறியார்; சற்றுங் குற்றமில்லா திணக்க மிகும் புத்தி நேருள்ள பேர்கள் இமைப் பொழுதில் மணற் கயிறுந் திரிப்பாரே, குறுங்கை மலைநம்பியே. 22 போகாதென் றுன்னி விளக்கேந்த வைத்திடு பூனையைப் போல், ஆகா வழிகளில் லாளாக்கல் மெத்த அரிது கண்டாய்; சீகாது மூக்கற்ற பெண்களுக்கே, மஞ்சட் டேய்த்திடினும், வாகாய் வதனம் வருமோ, குறுங்கை மலைநம்பியே? 23 எலியாயிருந்தவன் மரபெலியான திறைவனுக்கே பொலியா விளக்கினைத் தூண்டியதால்; அப்புதுமையைப்போல், நலியாது நல்லர், பெரியோர் தமக்கொரு நன்மை செய்வோர், வலிசேர் அரசரு மாவார், குறுங்கை மலைநம்பியே. 24 கலையெத்தனையும் பத்தோருக்கே ஒறாக்காலைக்குப் பாக் கிலையைக் கொடுக்கினும், ஒன்றட்சயமென வெண்ணிக்கொள்வார்; சிலையொத்திடு பெருஞ் சாத்தாவுக் கர்ச்சனை செய்வதற்கு மலையத்தனை புட்பமேன் காண், குறுங்கை மலைநம்பியே. 25 ஊர்க்கண்ட பாலரைப் பெற்றதனால், பயனொன்றுமில்லை; பார்க்கண்டலைப் பன்றி குட்டியிட்டே நொந்த பான்மைகண்டாய்; கார்க்கண்டன் அன்று மிருகண்டனுக்குக் கருணை செய்த மார்க்கண்டன்போற் பெற வேண்டும், குறுங்கை மலைநம்பியே. 26 நாப்புகழுங் குலவானாகிச், சுந்தரனாகிப், பல காப்பியங் கற்றுத், தனவானுமாகிக் கருதிவந்த பூப்புருடர்க் கறிவோர்கள் பெண்ணீயப் பொருத்த மெண்ணார்; மாப்பிளை யப்படி நீயே, குறுங்கை மலைநம்பியே. 27 அருளிச்செய் வேந்தர்க் கெதிருரையாத அமைச்சரையும், பொருவத் திறந்தெரியாத் தளவாயையும், போர்க்களத்தே செருவுக்குப் போமெனில், சம்பளந் தீர் என்ற சேனையையும், மருவிக்கொள் மன்னர்க்கு நாடேன, குறுங்கை மலைநம்பியே? 28 சிந்தை யெண்ணாமல் நிலவேந்தர் ஓர் பிழை செய்திடுகில் அந்த உலகமெல்லாம் பாழ்படு மென்ப தாரணங்காண்; இந்திரன்றன் குறை நாகரெவர்க்கும், இராக்கதாக்கும் மந்தர மாழிக்கு மாமே, குறுங்கை மலைநம்பியே. 29 கண்டே பகைஞர் வலியை அமைச்சர் கருதிவிண்டால், உண்டோ நமக்குப் பயமென்ற வேந்தர்க் கொடுக்கத்திலே கொண்டாயிரந்தரம் தன்வாயின் நூல்திரை கோத்தனென மண்டூகஞ் சொன்னது போலாம், குறுங்கை மலைநம்பியே. 30 சூடிக் குவலய மன்னர் பகைஞர்க்குத் தூதனுப்பும் வேடிக்கை வாகும் அனுமனும்போல் திறம் மேவிடுமோ, காடிக் கனுப்பிற் றயிர், கொண்டுசெல்லும் கருத்துச் சென்ம வாடிக்கையாய் வரவேண்டும், குறுங்கை மலைநம்பியே. 31 கோளகை வாங்கிக்கொண்டே எளியோரைக் குடிகெடுப்பார்; பாளையக் காரரைப்போல் ஊர்முதலைப் பறித்துத் தின்பார்; தாளையடைந்தவர் தாங்கா தழுத கண்ணீர் தடியும் வானை நிகர்த்திடுங் கண்டாய், குறுங்கை மலைநம்பியே. 32 கழுவை யெடுத்துத் தம் நெஞ்செனினும் தைப்பர், காய்கனல் புழுவை நிகர்ப்பவர் துர்ச்சனரே; அப் பொல்லதவரைக் கொழுவி யடுத்தல் புவியைப் பசு நட்புக் கொள்ளல்; நன்மா மேற் மழுவை யடுத்தல்; இஃதுண்மை, குறுங்கை மலைநம்பியே. 33 உந்து குளிகனிருக்கும் இராசிக் குடையவன், கோள் நிந்தனைபெற்றுப் பெலவீனம் மேவிய நேர்மையைப் போல், தந்தம் கிரகத்தில் துற்சனருக் கிடந்தான் கொடுத்தால், வந்துறு நாசம் பலவாம், குறுங்கை மலைநம்பியே. 34 நாகுறு துர்ச்சனர் கூடியிருக்கும் நடுச்சபையில் பாகுறு நல்லர் ஒருவர் சென்றால், அவர் பாடுறுவார், வீக நல்லன்னம் குரண்டக் குழாத்தினில் மேவுதல் போல்; வாகுறு நெற்களை கண்டாய், குறுங்கை மலைநம்பியே. 35 பொய்யிட்ட கூடெனும் துர்ச்சனர்க்கே நல்லபுத்தி சொன்னால், கையிட்டுத் தூக்கணத்தின் கூடு பிய்ந்த கருங்குரங்காம்; நெய்யிட்டு வேகினும், பேய்ச்சுரைக்காய் கைப்பு நீங்குவதோ; மையிட்டும் உந்தி கண்ணாமொ, குறுங்கை மலைநம்பியே? 36 ஏறு வயலில் உழவும், நடவும், எழவும் பெய்து, மீறு மளவில் பயிரைக் கரிக்கின்ற மேகங்கள் போல், கூறுவர் நானுண்டு நானுண்டென்றே; பகை கூடிக் கொண்டால், மாறுவர் அற்பர் குணங்காண், குறுங்கை மலைநம்பியே. 37 மூர்க்கர்க்குத் துற்புத்தி சொன்னால், உலகமுடிவு வரும்; பார்க்கவன் மாயைக் குரைத்ததிற் சூரபத்மா பிறந்தான்; வேர்க்கச் சயந்தனைத் தேவரைக் காலில் விலங்கையிட்ட மார்க்கமும் நீ அறிவாயே, குறுங்கை மலைநம்பியே. 38 தாழ்வு நமக்கில்லை யென்றே பிறர்க்கிடர் தான் செய்குவர், சூழ்வினையின் பயனொன்றறியார், உயிரேகி யுடல் வீழ்வு வரும்பொழுதெல்லாம் மறந்து விடுவர் கண்டாய், வாழ்வும் ஒருவன்றன் பங்கோ, குறுங்கை மலைநம்பியே? 39 பஞ்சத் துணைவர்க்கு நஞ்சைத் தயிரிற் பசைத்துதவும் கொஞ்சத்தனத் துரியோதனன் மாண்டிடு கொள்கையைப் போல்; வெஞ்சொற் பகைவர்க்கு நம்பிக்கை பேசி, விருந்தளித்து, வஞ்சித்து வாழ்பவருண்டோ, குறுங்கை மலைநமியே? 40 தன்னுயிர் வேண்டிப் பிறவுயிரைக் கறிதான் சமைத்துத் தின்னும்வரைப் பழிவிடுமோ, புலிச் சென்மங்களோ, முன்ன முயிர்க கழுவின் மாண்டவிய முனியை யிட்ட மன்னு கதை யறியாரோ, குறுங்கை மலைநம்பியே? 41 காலை நிகர்க்கும் பகைவர் கைக்குட் சிக்கிக் கட்டுப்பட்ட வேலையும், மேன்மை விடார் வீரர்; தானவர் வேந்தன்முன்னே சோலை சுதனை யழித்துப் பிடிபட்ட தூதனுமான் வாலை யுயர்த்தி யிருந்தான், குறுங்கை மலைநம்பியே. 42 கொடுக்கின்ற வித்தம் எவர்க்கும் கெடாது; கொடுப்பவரைத் தடுக்குங் கயவரைத் தீமை விடாது; தருந் தருவை யிடுக்குந் தொடர் முள்ளுக் கேதுங்கிட்டாது; வெள்ளிக்கொரு கண் வடுக்கொண்ட துன்னருளாமே, குறுங்கை மலைநம்பியே. 43 மோட்டுக் குலாமக் கயவர்க்கு நூலை மொழிவதெல்லாம், மேட்டுக் கிறைத்த புனலோ, உவரில் விதைத்த வித்தோ, காட்டுக் கெறித்த நிலவோ, கமருக்குங் காரெருமை மாட்டுக்கும் பெய்த மழையோ, குறுங்கை மலைநம்பியே? 44 கீர்த்தித் துரைகள் சபைமெச்ச, ஆருங் கெணிக்க, நன்றாய்ப் பார்த்துப் புகல்வர் ஒருமொழியே, சொற் பல உரையார்; தூர்த்தக் கயவர் ஒருகோடி வீண்மொழி சொல்வர், அந்த வார்த்தைக்குட் சூத்தையுமுண்டோ, குறுங்கை மலைநம்பியே? 45 நேசிக்கும் வேந்தர்க்கும், கள்ளர்க்கும், பேய்க்கும், நெருப்பினுக்கும், தாசிக்கும் ஈவர் பணத்தையெல்லாம், நல்ல தர்மஞ் செய்யார்; ஆசிக்கும் பண்டி நிறைத்து முண்ணார், அவர், அம்ம, அம்மா வாசிக்கும் உண்டறியாரோ, குறுங்கை மலைநம்பியே? 46 நித்தம் இரவலர், மாதவர், வேதர், நியமர், சிவ சித்தர், இவர்க் கன்னதானம் செய்யாமற், றிரவியத்தை மெத்தவுந் தேடும் பரலோபர், பொன்னை வெளிகளிலே வைத்து மறந்து விடுவார், குறுங்கை மலைநம்பியே. 47 சொற்கடன் சீர்ப்புலவோர் சென்று பாவைச் சொலின், உலுத்தர் இற்கடந் தோடி யொளித்துக் கொள்வார்; அங்கும் ஏகிடில், நீ முற்கடன் தந்தவனோ, போவெனவும் மொறுமொறுப்பார்; மற்கடம் என்பதவரோ, குறுங்கை மலைநம்பியே? 48 முலைதரு பாலைக்கொடுத்தால், விடத்தை முயல் கொடிய கொலை யாவொத்த துற்பாத்திரர்க்கீதல் குட விளக்கே; இலைபுற் கமுதருளாவாஞ் சற்பாத்திரர்க் கீகுவது மலைமிசை வைத்த விளக்கே, குறுங்கை மலைநம்பியே. 49 வேய்க்குழ லூதும் உனைப்பாடி வேண்டுதல் வேண்டிக் கொள்ளார்; தீக்கிரையாகும் மனிதரைப்போய்ச் செங்கண் மால் எனுவார்; நாய்க்கும் ஒரு பிழைப்புண் டென்றிரார்; அந்த நாவலர்க்கு வாய்க்கரிசித் தகையுண்டோ, குறுங்கை மலைநம்பியே? 50 சுரமுற்றும் ஓடி வெள்ளாடு பலகுழை துய்ப்பது போல், பரமற்ற வித்தை கற்றோர் சபைக் கேகப் பயப்படுவார்; தரமிக்க சோலைப் பலமரங் கண்டிடுந் தச்சன், ஒரு மரம்வெட்ட மாட்டுவனோ, சொல், குறுங்கை மலைநம்பியே. 51 செகமீதில் மூடர் ஒருகோடி கூடினும், சீர்த்த கல்வி மிகமேவு மோர் புலவோருக் கொவ்வார்; மின்மினி அனந்தம் தொக வாதவனுக கிணையோ; கல் மாமலை சூந்திருந்தும் மகமேருவுக்குச் சமமோ, குறுங்கை மலைநம்பியே? 52 கணப்பாட்டுக் காதையை அம்மானைபோற் சிலர் கட்டல், பித்தக் குணக்காரர் பாடல், பழம் பஞ்சுப் பாட்டைக் குழைந்து பக்தர் புணர்ந்தோதல், ஆக வெண்பாடற்கும், குற்றம் புலவர் சொல்லார் மணற்சோற்றில் கல்லுண்டென்பாரோ, குறுங்கை மலைநம்பியே? 53 வீரம் வைத்தாற், பின்னர் வெட்டார் நற்சூரர்; மிகுந்த புண்ணிற் காரம் வைத்தாற், காண் வையாது; நற்குலக் காளையர் பூந் தாரம் வைத்தால், மறுபெண் முகம் பார்க்கிலர்; சற்புருடர் வாரம் வைத்தால், மறவார் காண், குறுங்கை மலைநம்பியே. 54 கறுத்தால், முகிலுக்கு வீரியம்; வாய்தனைக் காத்துணவு சிறுத்தால், வியாதிக் கது மருந்தே; பிறர் செய்த பிழை பொறுத்தார் மிகப்பெரியோ ராவர்; தீயினிற் பொன்னை முற்ற வறுத்தாற், பசுந் தங்கமாமே, குறுங்கை மலைநம்பியே. 55 போக்கிடில், வெஞ்சினத்தைப் போக்க வேண்டும்; நற்புத்தகங்கள் நோக்கிடில், ஔவையுரை நோக்கவேண்டும்; நுகர்ந்து தினம் காக்கில், தன் நாவினைத் தான் காக்கவேண்டும்; கனிந்த நல்ல வாக்கு நரகம் புகுமோ, குறுங்கை மலைநம்பியே? 56 சேயுள்ளவன் கையிற் செல்வம்; கிடையன்றித் தீர்தலிலா நோயுள்ளவன் பக்கல் இன்மை; நன்னோன்புற்று நொந்துபெற்ற தாயுள்ளவனிடம் மெய்யுரம்; மன்னர் சபையில் நல்ல வாயுள்ளவன் கையில் வாணாள், குறுங்கை மலைநம்பியே. 57 பொறை கற்கவேண்டும் எவரும்; எழுத்துச்சொற் பூண்பொருள்பாத் துறை கற்கவேண்டும் இயல்பாடும் வாணர்; வசுந்தரையின் முறை கற்கவேண்டும் குடித்தனம் செய்யு முதல்வர்; சதுர் மறை கற்கவேண்டும் மறையோர்; குறுங்கை மலைநம்பியே. 58 தாய்க் காபரணம் புதல்வரைக் காப்பது; தந்த நல்ல சேய்க் காபரணம் பிதா தாயைப் பேணுதல்; செய்ய மலர்ப் பாய்க் காபரணம் புருடனும் பெண்ணும் பரிந்திருத்தல்; வாய்க் காபரணம் மெய்பேசல், குறுங்கை மலைநம்பியே. 59 இடமாம் அடுக்களைத் தூணுக்குச் சித்திரமேன்; பசும்பொற் குடமானதற்குத் திலகப்பொட்டேன்; நற் குடிப்பிறந்த திடவான்களுக்கு விளம்பரமேன்; கற்புத் தீவளர்க்கு மடவாருக் காபரணமேன், குறுங்கை மலைநம்பியே? 60 இறந்தால், உடம்பிலுயிர் புகுமோ, பசிவின் பசும்பால் கறந்தால், முலைக்குட் புகுவதுண்டோ; தவக் காவிகட்டிச் சிறந்தால், பின் இல்லறத்தாசையுண்டோ; பிறர் செய்த நன்றி மறந்தால், பரகதியுண்டோ, குறுங்கை மலைநம்பியே? 61 ஒட்டியர் சைவச் சுசியறியாதவர்; ஓர் சந்திச் சேர றிட்டிரு பானையை நாயறியாது; சூடிட் டிறக்கும் சட்டி கறிச்சுவை தானறியாது; தபோதனரை மட்டுகள் காணில் அறியார், குறுங்கை மலைநம்பியே. 62 இடித்தால், விஜயன் தசநாமஞ் சொல்வர்; எவரையும்பேய் பிடித்தால், புவனைமனுச் செபித்தோட்டுவர்; பேரரவங் கடித்தால், விடத்தை அவுடதம் தீர்க்கும்; கலங்கி மனம் மடித்தால், மருந்ததற்குண்டோ, குறுங்கை மலைநம்பியே? 63 பெண்ணார் சுகத்தை மணந்தான் அறிவன்; பிரான் நிலையைக் கண்ணான யோகி அறிகுவன்; மானிடர் காட்டும் வினை எண்ணா தறிவன் இமராயன்; ஊருக் கெளியவரை வண்ணா னறிகுவன் கண்டாய், குறுங்கை மலைநம்பியே. 64 ஏட்டுச்சுரை கறிக்காகுவதோ, கண்ணுக் கின்புறு கூத் தாட்டுச் சிலம்பம் படைவெட்டுமோ, விடியக் குக்குடப் பேட்டுக்குலம் தட்டிக் கூவிடுமோ, இந்தப் பேருலகின் மாட்டுச்சேர் மச்சேறுமோ காண், குறுங்கை மலைநம்பியே. 65 அங்கத்துக்கே நின்றவன் சுத்தவீரன்; அயன் விதித்த பங்கத்துக்கே நின்றவனாம் மெய்ஞ்ஞானி; நற் பாவலர் சேர் சங்கத்துக்கே நின்றதாம் நூல்; பணியுந் தட்டான் கொடுத்த வங்கத்துக்கே நின்றது பொன்; குறுங்கை மலைநம்பியே. 66 பெண்ணாசை யேறும் கவிவாணர்க்குப்; பிச்சை புக்கவருக் குண்ணாசை யேறும்; பணம் பணமே யென் றுறக்கத்திலும் எண்ணாசை யேறும் விலமடவாருக்; கிராசருக்கு மண்ணாசை யேறும், மெய்கண்டாய், குறுங்கை மலைநம்பியே. 67 பெற்றா ரிருக்கிற் பிணி பெருகாது; பிரிவதின்றிக் கற்றா ரிருக்கில் அறிவு கெடாது; கனகிளையாய் உற்றா ரிருக்கிற் பகைபோம், கதிதர உன்னையல்லால் மற்றா ரிருக்கின்றனர் காண், குறுங்கை மலைநம்பியே? 68 கிள்ளப் பழுத்த மரங்களிலே பட்சி; கெந்தம் நிறை தெள்ளுமலர் வனத்தே கீதவண்டு; தெளிந்த புது வெள்ள மருவு மிடங்களில் மீன்கள்; மிகுந்த கொடை வள்ள லருகிற் புலவோர், குறுங்கை மலைநம்பியே. 69 மேருவை மானிடர் பேர்க்கப்படாது; அருள் மேவி யுன்னைச் சாருமவரை வினையணுகாது; தழலெரிந்தே யாருங் கனலினை ஈக்கள் மொய்க்காது, எவ் வருந்துரும்பும் மாருதத்தைத் தொடராதே, குறுங்கை மலைநம்பியே. 70 பாய்மா இரவியைக் கையால் மறைக்கப் படாது; விண்ணிற் றோய் மீனதனை வலையாற் பிடிக்கத் துணி வெழுமோ; பேய் மானிடர்க்கு வர மீயுமோ, இந்தப் பேருலகை வாய்மூட முடியுமுண்டோ, குறுங்கை மலைநம்பியே? 71 பணமற்ற மானிடர் வாழ்வும், நதியற்ற பட்டணமும், குணமற்ற நாரியும், நெய்யற்ற உண்டியும், கூடவொரு துணையற்ற மெய்யும், மனதற்றுச் செய்யுந் தொழி லெவையும், மணமற்ற பூவென்னலாமே, குறுங்கை மலைநம்பியே. 72 கண்ட துளத்தில் அடக்காதவரும், கருத்தழிந்து பெண்டுடன் உண்மை புகல்வோரும், காமம் பெருக நத்திக் கொண்டு தினங் குக்குடம்போலப் புல்குங் கொதியர்களும், வண்டு துளைத்த மரங்காண், குறுங்கை மலைநம்பியே. 73 தகப்பன் சொல் மந்திரமென்னக் கொள்ளாத தனையரையும், சுகப்பதியோ டெதிர்த் துத்தரம் சொல்லிய தோகையையும், இகழ்த்தி முன்னோனை வழக்குக் கிழுக்கும் இளவலையும், மகச்சனி யென்றெண்ண வேண்டும், குறுங்கை மலைநம்பியே. 74 வேறாகிப் பூத்த பெண்ணாரையும், மூத்த மின்னார் தமையும், பேறான சூதகம் நீங்காதிருக்கின்ற பெண்டிரையும், தேறா விதவையையும், சேருவோரை, மூதேவி யென்றும், மாறா தடைந்து கொள்வாளே, குறுங்கை மலைநம்பியே. 75 செறுநர் சமருக்குள் வீரம் விட்டேகிய சேவகரும், பெறுமவரை விட்டு வேட்டகத்தே வளர் பித்தர்களும், உறுபதி விட்டுப் பிறந்தகத் தூர்ந்திடும் ஒண்டொடியும், மறுசெனனப் பகையோர் காண், குறுங்கை மலைநம்பியே. 76 நாடு கெடுதல் அரசர்களால், செல்வம் நாசமுற்று வீடு கெடுதல் அரிவையரால், அற மெய் மெலிந்தே ஈடு கெடுதல் வியாதிகளால், பொதியேற் றெருத்து மாடு கெடுதல் கனத்தால், குறுங்கை மலைநம்பியே. 77 அருந்தவர் சொம், புலவோர்சொம், அகதிசொம், ஆலயச்சொம், விருந்திடு சத்திரச் சொம், வேதர்சொம், நல்லவேந்தர்கள் சொம், இருந்து கதிர்க் கொட்டை நூற்றசொம், வஞ்சித்தெடுக்கில், வெடி மருந்துறு தீயென்னலாமே, குறுங்கை மலைநம்பியே. 78 கணிகையர், கள்வர், பரவர், தம் நாடரைக் காவல் செய்யும் பணி தெரியாச் சிற்றரசர், அற்றாரைப் பதறவைக்கும் துணிவுடையோர், தர்மசொத்தினை வஞ்சித்துச் சூறையிடும் வணிகர், இவர்க் குறவுண்டோ, குறுங்கை மலைநம்பியே? 79 தீராமை நெஞ்சர், மதுபானர், நோயர், சினத்த மனம் பேராத ஞானிகள், மூடர், அறிவற்ற பெண்கள், தரம் பாராமற் பேசுபவர், இவர் நூற்படித்தோர் சபையில் வாராதிருப்பது நன்றே, குறுங்கை மலைநம்பியே. 80 தெரியா திமைக்குற்றம் கண்ணுக்கென் றெய்திடுந் தீவினைகள் கரியாய் வழக்குக்கள் சொல்பவர்க்கே, கொண்ட காதலன்முன் சரியாய் மறுச் சொன்னவனுக்குப் பாரி இத்தகையலென்ற மரியாதிராமன் கதைபோற், குறுங்கை மலைநம்பியே. 81 திண்ணைக்குட் சண்ணைக் கிடாப்போலிருந்து சிலவெளிறா பெண்ணத் தமிழையும் பாடிக்கொள்வார்; கற்ற பேரைக் கண்டால், எண்ணத் தப்புக்களும் பேசுவர்; ஏன் என்றெதிர்ப்பவர் முன், வண்ணத்துக்குக் கிண்ணம் சொல்வார், குறுங்கை மலைநம்பியே. 82 அடைய வொரு நெறி நில்லாத மாந்தர், அடு கயவர், கடையர், இவர்கள் பணங்கொடுத்தால், அவர் காதுகளில் தடையற மூலபஞ்சாட்சர போதந் தரிப்பிக்கும் அம் மடையர் மடபதியாரே, குறுங்கை மலைநம்பியே. 83 தீங்குறு சீடர்க் குபதேசம் செய்வது செப்பிற், பெற்றா னோங்கிய பேரம்பல மிலந்தைக் கொட்டையுன்னி மனம் ஏங்கு முணுமுணுப்புச் சாம்பற் றொப்பையும், என்குருவே வாங்கிக் கொள்வீ ரென்னல்போலே, குறுங்கை மலைநம்பியே. 84 நெய்வளம் பெய்துள்ளுக்குள்ளே புலால் தின்பர், நீற்றை மெய்யிற் றெய்வதம் போலப் புனைகுவர், பூஜையும் செய்துகொள்வர், சைவர்தம் பந்தியிற் சோறு கொடாவிடிற், சைவர் தமை வைவர் கள்ளச்சைவர் கண்டாய், குறுங்கை மலைநம்பியே. 85 ஜெயித்திடும் பண்டிதர் என்பார் செம்மண்ணைச் செந்தூரமென்று கையிற்றருவார், முன்பணம் வாங்கிக் கட்டுவர், கைபிடித்தாற் பயித்தியந் தன்னைச் சயித்தியம் என்னப்பகர்வர், கள்ள வயித்தியர் செய்தி யிதுகாண், குறுங்கை மலைநம்பியே. 86 தந்திடு கோழி, கடா, முட்டை, கள்ளென்று தான் புசிப்பான், அந்த வன்பேய் கொண்டவனைத் தடிகொண்டடித் திழுப்பான்; பிந்தி வராதெனப் பேசிக் கொள்வான்; வந்த பேய்க் கிருப்பு மந்திரவாதி வயிறோ, குறுங்கை மலைநம்பியே? 87 ஆற்றைக் கடக்கக் கமனகுளிகை யருள்வனென்றும், சோற்றைத் தரிற் பசியா மருந்துண்டென்றும், தோற்புறத்தில் சேற்றைத் தடவிப் பணம்பறிப்பார், கள்ளச்சித்தர்தம் பம் மாற்றுக் ககப்படலாமோ, குறுங்கை மலைநம்பியே? 88 கொங்கையை முற்றும் மறைக்காது, மஞ்சட்குளித்து, மனச் சங்கையை விட்டுக் கண்காட்டுவள், கோதித் தலைமுடிப்பள், செங்கையை யொட்டிப் படிற்றுரை சொல்லிச் சிரிப்பள், அந்த மங்கையை நம்பப்படுமோ, குறுங்கை மலைநம்பியே? 89 கொண்டைக்குள் ஆயிரம்பேரை யொளிப்பர், குழிந்த வுந்தித் தொண்டுக்குள் ஆயிரம்பேரை யொளிப்பர், பைத்தோப்பை யெனும் பண்டிக்குள் ஆயிரம்பேரை யொளிப்பர், பரத்தையர்கள் வண்டச் சிறுக்கிகள் கண்டாய், குறுங்கை மலைநம்பியே. 90 தேறுதலாகப் பதியுடன் றீக்குட்டன் சீவன் விடுங் கூறுமிகும் பெண் குறையுங் கண்டாய், அவன் கூடக் கட்டை யேறுவனென்று சொல்லாணைக்கு ரோமம் எடுத்து வைக்கும் மாறுள்ள பெண்கள் பலரே, குறுங்கை மலைநம்பியே. 91 சூதரைப் பஞ்ச மகாபாதகரைத், தொடர் பிரம காதரைக், காலனை மாநோயைத், தீயைக், கடலை, மனப் பேதரைப், பாம்பை, விலங்கினையே நம்பிடினும், அந்தோ மாதரை நம்பப் படுமோ குறுங்கை மலைநம்பியே? 92 ஆசை மிகுந்து பிறர்தாரத்துக் கிச்சை யாமவர்க்கு நாசம் வருவது நிச்சயமே; இன்று நான் சொல்வதோ, பேசரும் சேனை யிராவணன் வாழ்வும், பிறைக்குறைவும், வாசவன் மெய்யுங் கரிகாண், குறுங்கை மலைநம்பியே. 93 சொந்த மகளிரை யாகிலும் உற்ற தொழில் மறந்து சிந்தனை செய்து புணர்காமிகட் செய்தும் தீவினை; சச் சந்த மகீபன் அரசை விட்டே பெண்ணைச் சார்ந்தழிவு வந்த தென்றோர் கதையுண்டே, குறுங்கை மலைநம்பியே. 94 சனங்காவல் மேவும் இராவணன் சீதையைத்தான் கொடுபோய் முனங்காவல் வைத்தும், செந்தீதனிலே அவள் மூழ்கிவந்தாள்; தினங்காவல் உங்கட்கும் ஏன்காணும், கற்புள்ள தேவியர்க்கு மனங்காவலே யரண் கண்டாய், குறுங்கை மலைநம்பியே. 95 கற்புடைய மங்கையர் மாநோன் பியற்றிக் கணவருடன் அற்புத மேவுவர் கண்டாய்; உமையவள் அப்படியே தற்பரன் மெய்யில் ஒருபாதி வாங்கினள்; சந்ததம் நின் மற்புயத்தே திருவாழ்ந்தாள், குறுங்கை மலைநம்பியே. 96 தழுவு மெய்ஞ்ஞானிகள் எங்கே யிருக்கினும், தாழ்ச்சியில்லை; தொழுவுறு குப்பையில் மாணிக்கம் வீழ்ந்திடிற் றோஷமுண்டோ? குழுவரிற் கூடிய யோகியைப் பஞ்சவர்க்குத் துணையாய் வழுவிலை யென்று வைத்தாய் நீ, குறுங்கை மலைநம்பியே. 97 ஈயத்தைப் போல் விந்து பாய்ந்து கருப்பைக்குள் ஏகுவதும், காயத்தை மெய்யென்றிருப்பதும், மாண்டிடுங் காலத்திலே தீயத்தை யுண்டு வெண்ணீறாகிப் போவதும், தேர்ந்தவர் பெண் மாயத்தில் முங்கி முழுகார், குறுங்கை மலைநம்பியே. 98 தீண்டிய நாரி, சுதர், வீடு, மாடு, முற் சென்மத்திலே வேண்டிக் கொடாக் கடன் வாங்க வந்தார்; கடன் மீட்டிவிட்டால், மீண்டவர் போவர்; அதனால் அழுது விழுவ தென்னோ, மாண்டவரும் வருவாரோ, குறுங்கை மலைநம்பியே. 99 உள்ளுறும் வாயுவைக் கும்பித்து, மூலத்துறுங் கனலை மெள்ள எழுப்பி, நுதலிடை மூட்டி, விழியொன்றி, யுன் துள்ளல் கண்டோர்க் கழிவில்லை; பெருமரஞ் சுற்றி வளர் வள்ளி படாது, மெய் கண்டாய், குறுங்கை மலைநம்பியே. 100 யோகீச்வரன் சேய் வர ராமயோகி யுன் மீதணிய நீ கீர்த்தியாய்ப் புனை நம்பிச் சதகத்தை நீணிலத்தி லே கீர்த்தன மெனக் கற்பவர், கேட்பவர்க் கிந்திரையும் வாகீச்வரியும் நன்றீவார், குறுங்கை மலைநம்பியே. 101 திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் முற்றிற்று |