திவ்வியகவி நாராயணதாசர்

இயற்றிய

வட வேங்கட நாராயண சதகம்

பாயிரம்

நேரிசை வெண்பா

நஞ்சு வினைக்கா மமுத நமதுயிர்க்காம்
செஞ்சொல்லினோர்சதகஞ் செப்பியது - விஞ்சுபுகழ்
நாரா யணதாசர் நன்றாக நானிலத்தே
பாரா யணஞ்செய் பவர்க்கு.

காப்பு

நேரிசை வெண்பா

நல்லவட வேங்கடத்து நாரா யணசதகஞ்
சொல்ல வெனக்குத் துணையாமே - மல்லற்
பணையான திண்புயத்துப் பாண்டவர்க்கு முன்னந்
துணையான பாநந் துணை.

நூல்

கலிவிருத்தம்

நீர்கொண்டுதண் மலர்கொண்டுநன் னெறிகொண்டுநின் குறிகொண்டுவண்
சீர்கொண்டுவந் தனைசெய்துனை செறிவார்களென் பெறுவார்களோ,
பேர்கொண்டிலன் பொறிகொண்டிலன் பெரியோர்களா லருள்கொண்டிலன்,
நார்கொண்டுகண் டருள்சோதியே நாராயணா! நாராயணா! 1

பரகாரியம் பலசெய்துனைப் பணியாமலே பிணியானபின்
விரகாயிருந் தழுதாவதென் வெறியார்குணங் குறியார்களோ
உரகாரிமே லுபகாரியா யொருசாரியா வுலவாரியா
நரகாரியே முரகாரியே நாராயணா! நாராயணா! 2

சிவனீதலம் புயனீதலிந் திரனீ தல்சந் திரனீதலா
தவனீதல்விண் ணவரீதன்மா தவரீ தலோ டெவரீதலும்
அவனீதலந் தனிலெண்ணினுன் னடியாரடிப் பொடியாகுமோ
நவநீதமுண் கருமேகமே! நாராயணா! நாராயணா! 3

அலகத்தகும் பிணிவந்துநா னலையாமலே யமரர்க்கிடுங்
கலசத்திலோர் துளிநல்கியென் கவியைக்கொளாய் கருணாகரா!
குலசக்கரன் சலசேகரன் குலசேகரன் புகழ்சாகரா!
நலசக்கரா! சலசக்கரா! நாராயணா! நாராயணா! 4

எதிரும்பெரும் பிணியும்பரந் திரையுஞ்செறித் தெழிலும்பறத்
துதிரந்திரிந் துடலங்கொளுந் துயரந்தெளித் துனைநம்பவா
மதியங்கிடந் தொளிருஞ்சடா மகுடந்தொறுந் தொனியும்பவா
னதிவந்தெழும் பதபங்கயா நாராயணா! நாராயணா! 5

எல்லாருமுன் னுதரத்துளே யென்னோட மங் குறைகின்றபேர்
அல்லாதுவே றில்லாமையா லனைவர்க்குமோ ரருளல்லவோ
வல்லாருளார் வாழ்வாருளர் வறியாரு ளார் நெறியாருளார்
நல்லாருளார் பொல்லாருளார் நாராயணா! நாராயணா! 6

நீகாசுதா, நீதூசுதா நீயாடுதா நீமாடுதா
போகாதபேர்க் கிடுசோறெனப் புலையர்க்குநெஞ் சுருகச்சொனேன்
ஆகாதகா ரியமென்னிடத் தளவற்றதுண் டவையாய்வையோ,
நாகாசலா! நாகாலயா! நாராயணா! நாராயணா! 7

அயனாரெழுத் தளவன்றியே யதிகங்கணப் பொழுதாயினும்
பயனாயிருப் பவரில்லையிப் படிமீதிலப் படியன்றியே
வியனாயுனைத் தொழுவார்களவ் விதிவெல்வராய் மறைசொல்லுமே
நயனாரதன் புகழ்சோதியே! நாராயணா! நாராயணா! 8

ஒமங்களால் விரதங்களா லுயர்தீர்த்தயாத் திரைகோடியால்
ஏமங்கள்கன் னியரீதலா லெழுபாரையுஞ் சுழல்கின்றதால்
ஆமைப்புலன் கடிகின்றதா லடைபுண்ணியங் கணமேனுநின்
நாமம்புகன் றதுபோலுமே நாராயணா! நாராயணா! 9

பாடேனலோ கவிசிந்துனைப் பணியேனலோ பலகாலெழுந்
தாடேனலோ பலிபீடமுன் னணுகேனலோ சடகோபமே
சூடேனலோ வலமாகவே சுழலேனலோ கதியென்றுனை
நானேனலோ கொடியேனலோ நாராயணா! நாராயணா! 10

அறவைக்கெலா மடிமூலநா னருளுக்கெலா மடிமூலநீ
பிறருக்கெலாம் பெறுவித்ததும் பெறுவிப்பதும் பிணைதட்டிலே
உறவைக்கிலென் னுயிர்காவலுக் கொவ்வாதுவா துரைசெய்வெனோ
நறவத்துழா யணிமார்பனே நாராயணா! நாராயணா! 11

பசியாதமந் திரமேவரும் பழியாதமந் திரமந்தகன்
விசியாதமந் திரநோயிலே விழியாதமந் திரநெஞ்சிலே
முசியாதமந் திரமோதுவார் முதலானமந் திரமொன்றிலே
நசியாதமந் திரமோநமோ நாராயணா! நாராயணா! 12

அபராதமா கியபல்சரக் கடலாகவோ டமதேற்றியே
விபரீதநோ யலையிற்குளே விடநின்றதூழ் வினையென்செய்வேன்
இபராசனைக் கரையேற்றுநீ யெனையேற்றலிங் கரிதல்லவே
நபராசனே சுபராசனே நாராயணா! நாராயணா! 13

வான்சொல்லுமே புவிசொல்லுமே மறைசொல்லுமே நிறைசேடன்வாய்,
தான்சொல்லுமே முனிவோர்பெருஞ் சபைசொல்லுமே சசிசொல்லுமே,
தேன்சொல்லிபங் கிறைசொல்லுமே திசைசொல்லுமே திகையாமலே
நான்சொல்லவே, துவுமாவெனோ நாராயணா! நாராயணா! 14

சுருக்காமருந் துடற்கூறியே சுழற்றாமருந் தழற்றீயிலே,
உருக்காமருந் துலர்த்துண்டையா வுருட்டாமருந் துழக்கெண்ணெயில்,
கருக்காமருந் திகற்கையிலே கசக்காமருந் திருகல்லிலே,
நருக்காமருந் திருக்கின்றதே நாராயணா! நாராயணா! 15

தகவாயுனைப் புகழாமலே சலமேதொடுத் திகல்பேசுவார்
முகவாயிலே புழுவீழுமே முனையந்தகன் கிளைமோதுமே
சுகவாகனா மிகுமோகனா கனகன்களே பரமார்பெலாம்
நகவாளினா லரிசீயமே நாராயணா! நாராயணா! 16

தலமேழையும் படமோதினுஞ் சலமோவிடா தகிலாண்டதற்
பலம்யாவுமென் மனைசேரினும் பசைபோதிடா திசைமாதரார்
குலம்யாவுமின் பமதீயினுங் குறுகாதுமால் பெறுகாயமே
நலமேவுமே பொலமேவுமே நாராயணா! நாராயணா! 17

பண்டிட்டதா மரையுந்தியிற் படிவார்நினக் கடியாரெனெத்,
தொண்டிட்டுநின் றொழில்கொள்வதோ துயரத்திலே யடைவிப்பதோ,
கொண்டிட்டநின் புகழ்நிற்கவே குறையாளரைப் புகழ்கின்றவாய்,
நண்டிட்டபாழ் வளையொக்குமே நாராயணா! நாராயணா! 18

பகையானவன் பிணிசெய்தட்தோர் பதினாயிரம் பிழையுண்டுநான்,
வகையாநினக் குரைசெய்கிலேன் வருநோயுநின் னருளாதலால்,
மிகையானபின் முறையிட்டனென் விடுவித்திடாய் விளையாடினால்,
நகையார்களோ குறையார்களோ நாராயணா! நாராயணா! 19

குப்புற்றகன் றுடனாகெலாங் குழுவாகவோர் குழலூதவே,
மப்புக்கொளுந் தொனிகாதிலவ் வழியேகுபுட் களுமுண்ணவே,
துப்புக்குமோர் தயிர்வெண்ணெய்பால் சொரிகைக்கு மவ்விடைநங்கைமார்,
நட்புக்குமா டியகண்ணனே நாராயணா! நாராயணா! 20

தாயற்றபேர் தாயாகுவாய் தமரற்றபேர் தமராகுவாய்
சேயற்றபேர் சேயாகுவாய் செயலற்றபேர் செயலாகுவாய்;
வாயற்றபேர் வாயாகுவாய் மலைபோலுநோய்க் குனைநம்பினால்;
நாயிற்றுமுன் பனிநிற்குமோ நாராயணா! நாராயணா! 21

மந்தன்புதன் குருவெள்ளிசேய் மதிராகுகே தரிநாடொறுந்
தந்தம்பொலா விடமேவினுஞ் சகலேசநின் சரணண்டினால்
எந்தம்பிரா னிவனென்றுகொண் டேகாதசப் பலனீவரே,
நந்தன்சுதா நம்பும்பதா நாராயணா! நாராயணா! 22

ஆற்றாமையொன் றமையாமையொன் றறியாமையொன் றருளாமையொன்,
றேற்றாமையொன் றிசையாமையொன் றின்னாமையொன் றிருதாளையும்,
போற்றாமையொன் றடியாருடன் பொலியாமையொன் றொருமெய்யிலே,
நாற்றாய்விளைந் திடலாகுமோ நாராயணா! நாராயணா! 23

தன்மைக்குநீ யடியேனுடைச் சவிகைக்குநீ பொலிகைக்குநீ
மென்மைக்குநீ வன்மைக்குநீ மிகுதிக்குநீ தகுதிக்குநீ
புன்மைக்குநீ புலமைக்குநீ பொறுமைக்குநீ மறுமைக்குநீ
நன்மைக்குநீ தின்மைக்குநீ நாராயணா! நாராயணா! 24

வேட்பித்ததுன் பெருநெஞ்சமே வியப்பித்ததுன் விளையாடலே,
கேட்பித்ததுன் பலநூல்களே கிளர்ப்பித்ததுன் பதிவாசமே,
பேட்பித்ததுன் கனசத்தியே பிழைபித்தவெம் பிணிபற்றற
நாட்பிச்சையுந் தரவேண்டுமே நாராயணா! நாராயணா! 25

பூரிக்குநின் கொடியென்னவே புளகிக்குநின் சனமென்னவே,
ஈரிக்குநின் சபையென்னவே யிரதிக்குநின் புகழென்னவே,
ஆரிக்குணம் பெறுதேவர்தா மடியாருளத் தானந்தமே
நாரிக்குவில்லொ டியச்செய்தாய் நாராயணா! நாராயணா! 26

தேன்பாடித்தா வனமாலையுந் திருவாழிசங் கமுமேந்தியே
தான்பாடிநா ரதனாடுமுன் சபைமானிடர்க் கதிதூரமே
வான்பாடிபுட் புயலென்றுதான் வருமென்றுவா டுவதென்னவே,
நான்பாடினால் வரவேண்டுமே நாராயணா! நாராயணா! 27

மானோயுநின் னருளுற்றநாள் வாய்நீர்மருந் தாயங்ஙனே
தானோடுநின் னருளற்றநாள் சஞ்சீவையைத் தளியேறுமே
தானோர்பவர் சுகமெய்துவர் சார்வாருளத் தானந்தமே
நானோதவா ஞானோதயா நாராயணா! நாராயணா! 28

ஈசன்பரன் பிரமன்பிதா விறைவிண்டுவண் டுறைதண்டுழாய்
வாசன்சரா சரனென்றுநின் வழியன்பர்வாழ் பதிதம்மிலே
தீசங்கடம் பிணிதாழுமே சிறைசண்டைவஞ் சனைவீழுமே
நாசங்கடந் துயிர்வாழுமே நாராயணா! நாராயணா! 29

ஆபாதவா யுனைவையுமே யடியாருடன் படைபண்ணுமே
மாபாவநூல், பலகற்குமே மறைபன்னுவா தியர்தம்மினும்
ஒபாவியேன் இவைநின்முனே யுரைசெய்தனன் விரைசெய்தபூ
நாபாபரா பரனேயரீஇ நாராயணா! நாராயணா! 30

காற்பாலினிற் கடலாதவன் கலிகாலமே திரையாடிடுந்
தோற்பாவைநா னதுமெச்சவே தொடுசூத்திரத் துறைகாரனீ
மேற்பாவபுண் ணியமானநல் வினைதீவினைக் கெவராகுவார்
நாற்பாலினுக் கொருமூலமே நாராயணா! நாராயணா! 31

இரையாலெழுஞ் சுவரானநா லிருசாணுடம் பிடியாமலே
கரையாமலே தகராமலே கழலாமலே யழலாமலே
திரையாமலே வினைமூடிகண் டிறவாமலே வகையென்னைதா
னரையாதசோ றிடுமையனே நாராயணா! நாராயணா! 32

புற்கொண்டு வாழ்பசுவாரெடார் புலியாழ்கிணற் றிடைவீழினுங்
கற்கொண்டுவா தடிகொண்டுவா கடிதென்பரப் படுபாவிநான்
எற்கொண்டநோய்க் கெவராகுவா ரினிநீயலா திலையெட்டியும்
நற்கொண்டலால் வளர்கின்றதே நாராயணா! நாராயணா! 33

அரசன்கையா லபயம்பெறா ரயலாளுமன் னரையண்டினால்,
விரசென்றுவந் திடமீவர்நீ வினவாதசீ விகளண்டினால்
வரசங்கரா தியரஞ்சுவார் வருகென்னமேல் வகையென்னைதான்
நரசிங்கனே! முரபங்கனே! நாராயணா! நாராயணா! 34

கோட்சொல்லுவேன் வசைசொல்லுவேன் குறைசொல்லுவேன் முறைசொல்லுவேன்
கீட்சொல்லுவேன் மிகைசொல்லுவேன் கிலிசொல்லுவேன் வலிசொல்லுவேன்
சூட்சொல்லுவே னயனூழிநாள் சொலவேண்டினுஞ் சிறிதுன்னையோர்
நாட்சொல்லவென் றறிகின்றிலேன் நாராயணா! நாராயணா! 35

ஆளாகிநின் னிருநாலெழுத் தறியாதநா ளறிவார்களைக்
கேளாதநாள் செவியூறவே கிடையாதநா ளதிலாசையே
மூளாதநா ணிலமீதுதான் முதனாளிலங் கெழுதாதநாள்
நாளாகுமோ வாளாயுதா! நாராயணா! நாராயணா! 36

வீட்டுக்குளே துணையாவதும் வெளியிற்குளே துணையாவதும்
கூட்டுக்குளே துணையாவதுங் குன்றுக்குளே துணையாவதும்
காட்டுக்குளே துணையாவதுங் கடலுக்குளே துணையாவதும்
நாட்டுக்குளே துணையாவதும் நாராயணா! நாராயணா! 37

வாய்க்கின்றதேன் பகையுண்ணலா மணக்கின்றசாந் தரையுண்ணலாங்,
காய்க்கின்றமா வெறியுண்ணலாங் கறக்கின்றவாக் கட்டுண்ணலாந்,
தோய்க்கின்றபால் குடையுண்ணலாஞ் சுவைகெட்டமா னிடவாலிலா,
நாய்க்கிந்தவாத னையேனையா நாராயணா! நாராயணா! 38

தும்பிக்கையா னையுமைவர்முன் றுகிலோடிவா டியநங்கையும்,
தம்பிக்கையா மகயோகருந் தாநிற்கவே சதுர்வேதியன்,
கம்பிக்கையா லரனுக்குநீ கனியைமிட் டினியையமேன்,
நம்பிக்கையா கியதெய்வமே நாராயணா! நாராயணா! 39

பாலாவதோ தேனாவதோ பழமாவதோ பாகாவதோ,
மேலானசர்க் கரையாவதோ விரையாருநல் லமுதாவதோ
கோலாகலப் பிணிதீரவே குளியங்களோ வனமூலியோ,
நாலாவதோ நின்பேர்சொலாய் நாராயணா! நாராயணா! 40

பூவுக்குநல் லதுசொல்லவோ பொலிசீதளப் புதுவாசமே
தேவுக்குநல்லது சொல்லவோ செவியார்முனே யெதிர்நிற்பதே
ஆவுக்குநல் லதுசொல்லவோ வதுசாதுவா யமுதீவதே
நாவுக்குநல் லதுசொல்லவோ நாராயணா! நாராயணா! 41

ஆனந்தமா யழுவார்முனே யலர்சூடியே தொழுவார்முனே,
மோனந்தனிற் கரைவார்முனே முகிலென்னவே புகழ்வார்முனே,
தானந்தவம் புரிவார்முனே சரணென்றுனை யடைவார்முனே,
நானென்செய்கே னிவையொன்றிலே நாராயணா! நாராயணா! 42

செரிக்கின்ற வூணுகர்வேனலேன் சிர்க்கின்றகா ரியமேசெய்வேன்,
கரிக்கின்றகண் படையேன்வெறுங் கழப்பன்கொடுங் கடுவஞ்சகன்,
பரிக்கின்றநின் னடியாரொடும் பழகேனலேன் படர்வந்தபின்,
நரிக்கின்றனே னினிசெய்வேன் நாராயணா! நாராயணா! 43

ஆதாரதே வதையென்பனோ வடியேனையா ளரசென்பனோ
ஒதாதுணர்ந் திடவன்புகூ ருபதேசதே சிகனென்பனோ
மாதாபிதா வுடலாவிநீ மனைகாணிபொன் வலிசெல்வநீ
நாதாவுநீ தாதாநீ நாராயணா! நாராயணா! 44

வடுநிந்தையே னிடுவந்தியேன் மருள்விஞ்சினே னருளஞ்சினேன்,
அடுசிந்தையே னெடுவிந்தையே னலைபண்பினே னுனைநம்பினேன்,
விடுதுன்பிலேன் முடுகன்பிலேன் வினைமண்டினே னுனையண்டினே,
னடுவொன்றிலே மிடைகுன்றுமோ நாராயணா! நாராயணா! 45

குடிநீர்கொடீர் முகவேதிடீர் குடவெண்ணெயை வடியீர்பிரம்,
படியீர்வெணீ றெறியீர்விழிக் கதிகோரவஞ் சனமேயிடீர்
கடியீர்வயித் தியரால்வரா கமதாடுகுக் குடமிட்டுளே
நடியீரெனிற் பிணியஞ்சுமோ நாராயணா! நாராயணா! 46

பிரம்புக்குமுள் ளிடுதாமரைப் பிணிகட்குநீள் பிணியுற்றவென்
உரம்புக்குளே யறியாததெ நுலகத்தெலா முறைசோதிதோல்
வரம்புக்குளே யெலும்புக்குளே வம்புக்குளே தழும்புக்குளே,
நரம்புக்குளே புகவெட்கியோ நாராயணா! நாராயணா! 47

மன்றாடிய வதிசோபன மழைவண்ணனே! விசயங்கரா
வென்றாய்சயஞ், செயமச்சுதா!, மிகவாழி!கே சவனேசு!,பங்
கன்றால்விள வெறிந்தாய்,பெருங் கலியாணமங் கலமாதவா!
நன்றாகவேங் கடநாயகா! நாராயணா! நாராயணா! 48

இந்தாவெனா வெனதிச்சைநீ யெளிதீவையே லிழிவாகுமோ
சந்தானமா மலராலருச் சனைசெய்குவார் தவிர்வார்களோ
வந்தானபேர் துதியார்களோ வசுதேவர்சீர் குறையாகுமோ
நந்தாதபெண் ணகைசெய்வளோ நாராயணா! நாராயணா! 49

சிற்றப்பனோ துருவற்குநீ ததிபாண்டனார் பெரியப்பனோ
கற்றத்தைதே வகிதங்கையோ கண்டாகனன் மிதிலேசனோ
சுற்றத்தரோ பெறுவோரெலாந் தொடுவேன்வழக் கிடுவேன்விடேன்
நத்தப்படும் பொருடந்துபோ நாராயணா! நாராயணா! 50

தன்னெட்டெழுத் தயன்மத்தகந் தனிலேபொறித் தடிநாவிலே,
உன்னெட்டெழுத் தெழுதாமையா லுலகத்துளோ ரவனைத்தொழார்,
கன்னெட்டிடத் தருநெட்டிடக் கனனெட்டிடக் கனகாலிபின்,
நன்னெட்டெலாந் தொடர்பாதனே நாராயணா! நாராயணா! 51

உரலுக்ககுமோ ருறுபஞ்சமோ வுனைநச்சினே னெனையச்சமன்
விரலிட்டுத்தேர் வினைவல்லனோ விதிகைக்குளவ் விரலேலுமோ
பொரலுற்றநோய் கழலப்பணாய் புதிதாமருந் தொருதூதனால்
நரலைக்குளாய் வரவேண்டுமோ நாராயணா! நாராயணா! 52

சமையாதிதே வதையென்பதுஞ் சமையாதிநின் பெயரென்பதும்,
உமையாளுடன் பரமன்பரிந் துனைமாமறைப் பொருலென்பதும்,
தமையாள்வதென் றிமையோர்திலோத் தமையாதிபன், புகழ்கின்றதும்,
நமையாமலே யெனையாளுவாய் நாராயணா! நாராயணா! 53

நீயண்டரா லடிபட்டநா ணினைவில்லைநின் னுதரத்துளே
போயண்டகோ டியிலெந்தவூர் புரையிற்குளே விளையாடினேன்,
மாயங்கடந் தறிவேனெனில் வரதன்கெடீர் வானோர்க்கெலாம்
நாயன்கெடீர் விடுமென்பனே! நாராயணா! நாராயணா! 54

காசிக்குளுங் கயையிற்குளுங் கழியாதபா தகனாகையால்,
கூசிக்குலைந் துனைவந்தியேன் குறையாகுமோ வினையென்பதோர்,
வாசிக்குவந் தருள்செய்குவாய் வயிரத்திரா வணன்றங்கைதன்,
நாசிக்குவா ளெறியையனே நாராயணா! நாராயணா! 55

தாளுக்கவா வியநாவினுஞ் சலியாதுவா, சனியானநோய்
ஆளைக்கெடா தின்றைக்குவா, வசையாமலே யன்றைக்குவா,
தோளுக்குவா ளியையெய்தவன் றுயர்கண்டிரா வணனின்று போய்
நாளைக்குவா வெனுமையனே நாராயணா! நாராயணா! 56

விக்கற்கிடம் பொருமற்கிடம் விடுமூச்சுமே லெழுதற்கிடம்
கக்கற்கிட மிருமற்கிடங் கருதற்கிடந் திருகற்கிடம்
சொக்கற்கிடங் குளிர்தற்கிடஞ் சுடுதற்கிடம் வெருவற்கிடம்
நக்கற்கிடந் தருமெய்யருள் நாராயணா! நாராயணா! 57

துளசீதளத் துளசீதளத் தூய்நீரதே குடிநீரதாம்
உளதாயிரம் பெயரெண்ணுநூற் றொருகோடிமந் திரமேலதாம்
வளமார்பின்மா மணியென்னவே மணியாமெனைப் பிணியென்செயும்
நளகூபரன் பகைவென்றவா நாராயணா! நாராயணா! 58

சுவையோசையூ றொளிமாமணந் தொடராமனஞ் சுழல்கெண்டையுங்
கவைமானுமா னையும்விட்டிலுங் களிவண்டுமே, விளிகின்றபோ,
லிவைதூயவென் றிவைதீயவென் றினியுண்டிலே னினியென்செய்வே,
னவைதீரவே யருள்செய்குவாய், நாராயணா! நாராயணா! 59

நெட்டேணியின் படியெட்டுமோ நின்னெட்டெழுத் தெழிலண்டமேல்,
எட்டாமெனும் பதமெட்டவே யிரதித்தசர்க் கரையேயதின்,
வட்டேபசும் பழமேசதா மதுரித்தவா ரமுதேயெனும்,
நட்டேயருட் புனல்கட்டுவாய் நாராயணா! நாராயணா! 60

காணுங்கணே குவியுங்கையே கருதுள்ளமே கனலாஞ்சனம்
பூணும்புயம் புளகாங்கமே புகழ்நாவதே திகழ்கேள்வியே
ஆணும்பெணுஞ் சரணென்பதே யவையல்லனா னபராதிகாண்,
நாணும்பெயர்க் காதாரமே நாராயணா! நாராயணா! 61

கவிநல்லதோ கவிதீயதோ கனமூடனான் விதைவித்திடும்
புவிநல்லதேல் விளைவெய்துமே புகழ்நல்லதேல் புகர்கேட்கவென்
செவிநல்லதே லருணல்லதே செயனல்லதே லியனல்லதே
நவிநல்லதே வரினாவிலே நாராயணா! நாராயணா! 62

பசைகொண்டபா சுவதாகமம் பருகாதுகா துருகாதுநெஞ்
சசைகொண்டபா தகநீரிலே யமிழ்வேனையா ணவமாதியாம்
கசைகொண்டமோ துகைதாக்குமோ களவுள்ளநா னுனதன்பிலேன்
நசைகொண்டகா ரியமாகுமோ நாராயணா! நாராயணா! 63
பலகூறுபட் டொருநெஞ்சினன் பரிசென்னவெங் கணுமானவா,
விலகூறுகொண் டெனைவிண்டதென் விரனீக்கிமோர் நுகர்வார்களோ,
மலகூறலாய் நீதானுமென் மதிதன்னைவிட் டெனையொத்தனை,
நலகூறுவார் சுரதேனுவே நாராயணா! நாராயணா! 64

வாஞ்சித்ததே வதையாகுநீ வடவேங்கடந் தனினிற்கவும்,
நீஞ்சித்திரிந் தனன்வீணிலே நிழல்கண்டபின் வெயினிற்பரோ,
காஞ்சித்தலத் தருளாளனே கனகோபுரக் கொடியாடுமொண்,
நாஞ்சிற்றிருப் பதிவள்ளலே நாராயணா! நாராயணா! 65

மைநாகமா ழியையண்டிவாழ் வகையென்னநின் னருள்வெள்ளவாஞ்,
சையினாலிருந் ததிலூறவே சமைவேனுறத் தருமாறெவன்,
கையினாலறிந் திடரண்ணிய கலிதீரநீ யருள்செய்திடும்,
நைனாரினிற் சரியாவனோ நாராயணா! நாராயணா! 66

எமக்கென்றுவாழ் குடும்பத்திலே யிழுப்புண்ணுவா ரெம்தாதையர்,
தமக்கொன்றைவைத் திலரென்பரே சழக்குள்ளபேர் வழக்குள்ளபேர்,
சுமக்கின்றவச் சுமையாளனச் சுதன்மற்றையச் சுமைகட்கெலாம்,
நமக்கென்னகா ரியமென்பரே நாராயணா! நாராயணா! 67

பசுக்கட்குமா யினைபாடியிற் பலபாடியா டியுமாயர்தம்
சிசுக்கட்குமா யினைமைந்தனாய்த் திருட்டுக்குமா யினையன்றுதான்
முசுக்கட்குமா யினைநாயினேன் முசிப்புக்குமா யருள்பூவையே,
நசுக்கிப்பின் வாசனைகொள்வரோ நாராயணா! நாராயணா! 68

குலங்காணவே குடிகாணவே குணங்காணவே பழுதாயினும்
பலங்காணுநின் னடியாரெனிற் பவசாகரப் பரப்பென்னுளங்
கலங்காமலே கலங்காணுமே கழலாமலே கழல்காணுமே
நலங்காமலே நலங்காணுமே நாராயணா! நாராயணா! 69

ஈன்றோனுநீ யலனானுமவ் வியலுந்தியண் டினனல்லனிற்
போன்றானெவன் பெறுபிள்ளையைப் போபோபிதா வினவாதிரான்
சான்றோர்முனே யினிநோயைநீ தவிராயெனிற் சபதங்கெடும்,
நான்றோரைவீ சியவாளனே நாராயணா! நாராயணா! 70

கஞ்சப்பதந் தனையங்ஙனே கட்டிக்கரைந்த வசத்தராய்
நெஞ்சத்துநா ரணவென்றுதா னியமித்துநித் திரைகொள்ளுவார்,
கொஞ்சத்தைநின் றளவாக்குவாய் குணபத்தைவாழ் குடியாக்குவாய்
நஞ்சத்தையா ரமுதாக்குவாய் நாராயணா! நாராயணா! 71

எழுநெட்டிருப் பருமேனிவந் தென்கைக்ககப் படுமென்றுதான்,
தழுவிக்கொளத் திரிகின்றனன் சகலச்சரா சரமாகுநீ
வழுவிக்கொடங்கிங் கோடியே வரநல்கமுன் வரவஞ்சியே
நழுவிக்கொடே திரிகின்றதென் நாராயணா! நாராயணா! 72

எனைக்காக்கநீ வரமேன்மையென் றிருப்பாய்பராக் கதுவுண்டுநின்,
றனைக்காத்தவா கனமில்லையோ தகுசேனைகா வலனில்லையோ,
நினைக்காத்தசே டனுமில்லையோ நினைவில்லையோ விமையோர்பிரா,
ணனைக்காத்தமா ருதியில்லையோ நாராயணா! நாராயணா! 73

கண்பொன்றுகோ மகன்மாற்றவன் கடுகொத்தபொய்க் கிருள்பார்த்ததோர்,
பண்பொன்றுநூ லுரைசெய்யநான் பலபொய்ச்சொலால் விளையாடினேன்,
மண்பொன்றிநீ ரனல்பொன்றிவிண் வளிபொன்றவே வருமன்றுநின்,
நண்பொன்றுநீ தரல்வேண்டுமே நாராயணா! நாராயணா! 74

போகேந்திரன் சிரமேந்துநின் பூதேவிபுல் லரையேந்தவே
ஆகேனெனா வுரைசெய்வனே லடியேனையேந் துகைவேண்டுவாய்,
மாகேந்திரன் றனதம்பியே வடவேங்கடா சலவள்ளலே
நாகேந்தியே நகமேந்தியே நாராயணா! நாராயணா! 75

ஊழிற்பிறந் திடுபாவநோ யுடலைத்தொடா வகைதந்திடாய்,
வாழிக்குநா யகனிந்திரன் மனுவின்பதம் பெறவிச்சியேன்,
ஆழிக்கையுன் கொடைமிக்கதென் றடியேன்மிகப் பெறலாகுமோ,
நாழிக்குடங் கலங்கொள்ளுமோ நாராயணா! நாராயணா! 76

தனுவுக்குளே யுளராறுபேர் சலிகைக்குநா யகருன்னைநான்,
பனுவற்சொலா வகைதட்டுவார் பழகிச்சதா நெறிகட்டுவார்
அணுவற்றசோ ரரையெற்றியே யடியேனையா ளரசென்னவே
நணுகிக்கொடே திரிகின்றனன் நாராயணா! நாராயணா! 77

உடைச்சேலைதா, குழைக்கோலைதா, வுணச்சோறுதா, பணப்பேறுதா,
கடைப்பூவடா, வடைக்காயடா, கறிக்காசடா, கடைக்கோளனே,
கிடைக்கோடிவா, முடிச்சேதடா, வெனப்பாவையார் கடுப்பார்பொலா,
நடைக்காசையா யிறுத்தேனலோ நாராயணா! நாராயணா! 78

கன்னிப்பெருங் கடலோடுவான் கம்பத்திலே விளையாடுநான்,
உன்னிக்கொளும் பயமென்னநோ யுட்பட்டுநெஞ் சுழலவுற்றனன்
என்னிற்பயந் தெளிவித்திடா எல்லோர்க்குமீந் தென்மட்டிலே
நன்னிக்குணம் பிடிப்பட்டதே நாராயணா! நாராயணா! 79

புட்புள்ளவன் கொடியென்னவே பொற்பொன்னவன் கலையென்னவே,
கட்புண்டரீக கமலத்தினேர் கண்ணென்னவே, கரைகின்றிலேன்,
சட்புள்ளவுன் சமயத்திலே சலமண்டினேன் சரணண்டினேன்,
நட்புள்ளதோ பகையுள்ளதோ நாராயணா! நாராயணா! 80

கச்சுப்பிதிர்ந் தெழுகொங்கையார் கடைவாள்விழிப் படைகோடிகள்,
தச்சுக்கிடந் திடுநெஞ்சிலே தனியம்புதைத் தவருய்வரோ,
பிச்சுத்தயா பரனானநீ பெருமந்திரந் தனிலாற்றுவாய்,
நச்சுப்பெருஞ்சதை வேலையாய் நாராயணா! நாராயணா! 81

எய்தாரிருந் திடவம்பைநோ மிழிவாளர்போற் பழிபாதகம்
செய்தாரிறுத் திடலன்றியே தெய்வந்தனைச் சிதைவாகவே
வைதாவதென் விதனத்திலே வழிதப்புமே வாய்பாறுமே
நைதாதுவின் பரகாரனே! நாராயணா! நாராயணா! 82

முகிலுக்குளே யடிபட்டவோர் முதுமக்கள்போற் றுணிவிக்குநோய்,
மிகலற்பமோ விடுவித்திடாய் விமலத்தநீர் மடுவுக்குள்ளே,
துகிலைக்கொடாய், துகில்விட்டிடாய், தொழவெட்கமே வியமைக்கணார்,
நகிலுக்குள்வீழ் நகையச்சுதா நாராயணா! நாராயணா! 83

கமலத்தைவந் தயல்வண்டுணுங் கருகாததே ரைகளொக்கவே,
அமலத்த நீரிடைவாழினு மதுபோலவே யயலாரெலாம்
நிமலப்பதந் தொழுமூரிலே நிலைபெற்றிருந் துனைவந்தியேன்,
ஞமலிக்குமோ ரருள்செய்திடு நாராயணா! நாராயணா! 84

என்மாடுவீ டென்பிள்ளைபெண் டென்காணிமண் ணென்சொம்மெனும்,
தன்மாலிலே யறியாதபேர் தமதாகுமோ வவையாவுமே,
வன்மாயமென் றதுகண்டவர் வடவேங்கடப் பதிவைகியே,
நன்வானுயர் நிலைநிற்பரோ நாராயணா! நாராயணா! 85

பரலோகமும் பரரூபமும் பரபோகமும் பரமாயுவும்,
சுரலோகமுஞ் சுரரூபமுஞ் சுரபோகமுஞ் சுரராயுவும்
திரிலோகமென் றிவையாவையுந் திருவேங்கடந் தனிலுள்ளதால்,
நரலோகமே மிகநன்றுகா ணாராயணா! நாராயணா! 86

அசவாதவன் பழிவேடரா ரடியேனுடன் பினினோயெலாம்
கசவாதுதின் பவர்போலவே கவராமலிங் கருள்கூறுவாய்
குசவாயுதா சிறுகோவலா குறுவேதியா குலமன்னமா
னசவாவியிற் பயிலன்னமே நாராயணா! நாராயணா! 87

மீன்கூருமங் கிடிபாதியாண் மிருகங்குறள் பரசாளிகோ
மான்கூரலா யுதனாயன்மேல் வருவாசியும் பெருவாசியோ
தேன்கூருமா சுமசாரமுஞ் சிறுபோகமோ கமசாரமும்
நான்கூருரை குருபத்தனே நாராயணா! நாராயணா! 88

மிறுக்கத்தகா தெனதாவியின் விளக்கிற்குநின் னருணெய்யிடாய்,
பொறுக்கத்தகா ததுமெய்யுடல் புழுக்கத்தகா தொருபோரிலே,
குறுக்கிட்டபேர் நடுக்கிட்டிடக் குலைவாணனார் திரடோளெலாம்,
நறுக்கிக்கையோர் துணைவிட்டவா நாராயணா! நாராயணா! 89

புன்சொல்லிலே யகப்பட்டதும் போதாமலே யவமேற்றெனக்
கென்சொல்லுபோ மெனவெண்ணியோ யாதோவெனக் கீயாதுநீ,
தென்சொல்லிலே வடசொல்லிலே திருவாய்மொழிச் சதுர்வேதமா,
நன்சொல்லிலே விளையாடுவாய் நாராயணா! நாராயணா! 90

மெலியாமையுந் திருஞானமு மிகுபோகமுந் திடதேகமும்,
சலியாமையும் பகைநாசமுந் தனராசியுந் தகுசீலமும்
கலியாணமும் பெறநீதரக் கடனாளியாற் பினுமுன்னைநான்,
நலியாமலே யருள்கூருவாய் நாராயணா! நாராயணா! 91

சமர்த்தேதுநல் லறமேதருந் தயையேதருந் தவமேது,மிக்
கமைத்தேது,மே லடைவேதுகாரணமேதுபூ ரணமேதுசங்
கமைத்தே,துரா கதமேதுசொல் கமையேதுசெல் கதியாவுநீ
நமத்தேதுவா ரகைவாசனே நாராயணா! நாராயணா! 92

பித்தங்கயஞ் சொறிதே மல்கம்பிதமீளை காமாலைபாண்டுவுன்
மத்தஞ்சுரஞ் சளிசன்னிகால் வலிசூலைவிக் குதல்கக்குவா
யுத்தம்பனந் தலைநோவுமற் றுளநோயெலாந் தொடராமலாள்
நத்தம்மகர்க் கொருகாவல நாராயணா! நாராயணா! 93

துறையூருமா முதலைக்குலச் சுனையொத்தமன் னவர்வாசலில்
குறையூர்வதுங் கசைசாடவே சூலைக்கின்றதுந் தலைசோரியாய்
முறையூர்வதும் பிறகுன்னையே முனிபாவமுந் தெரியேனலேன்
நறையூரனே கருடாசலா! நாராயணா! நாராயணா! 94

பிணிவிட்டதே விதியாவையும் பிழைவிட்டதே சுகசீவியாய்
பணிவிட்டதே நமனாரெனும் பகைவிட்டதே பலபூசலும்
தணிவிட்டதே யதிஞானமே தகவிட்டதே யுனையோதவாய்,
நணிவிட்டதே யென்மட்டிலே நாராயணா! நாராயணா! 95

வாய்செய்தபுண் ணியங்கோடியென் வழிசெய்தபுண்ணி யங்கோடியென்
தாய்செய்தபுண் ணியங்கோடிதந் தையர்செய்தபுண் ணியங்கோடியென்,
பாசெய்தபுண் ணியங்கோடியென் பதிசெய்தபுண் ணியங்கோடியென்,
நாசெய்தபுண்ணி யங்கோடிகா ணாராயணா! நாராயணா! 96

உன்கோயிலென் கால்சூழவு முன்பாதமென் கண்காணவும்
நின்பாடலென் வாய்பாடவு நின்காரியங் கைசெய்யவும்
என்காதுநின் புகழ்கேட்கவு மென்னெஞ்சநின் னினைவுன்னவும்,
நன்காகநல் வரமேதரு நாராயணா! நாராயணா! 97

இற்கண்ணெலா நாராயணா! வெங்கெங்கணு நாராயணா!
சொற்கண்ணெலா நாராயணா! தொழிலெங்கணு நாராயணா!
முற்கண்ணெலா நாராயணா! முகமெங்கணு நாராயணா!
நற்கண்ணெலா நாராயணா! நாராயணா! நாராயணா! 98

தேறுந்திருப் பதிவேங்கடந் தெரிசித்துநா ரணவென்றுதான்,
நூறும்படிப் பவர்பன்னுவார் நூறும்மிருந் துலகாண்டபின்
பேறும்பெறும் பிள்ளைப்பெறும் பெருமைப்பெறும் பெறுவிப்பையே,
நாறுந்துழா யணிமார்பனே! நாராயணா! நாராயணா! 99

நனிவாழி!நின் பல்கோயிலு நனிவாழி!நின் பலதேவிமார்,
நனிவாழி!நின் னடியாரெலா நனிவாழி!நின் பல்வைபவம்,
நனிவாழி!நின் வடவேங்கட நனிவாழி!நின் கவிகற்றபேர்,
நனிவாழி!நின் கவிகேட்டபேர் நாராயணா! நாராயணா! 100

வட வேங்கட நாராயண சதகம் முற்றிற்று