மதுரை ஐயம்பெருமாள் ஆசிரியர்

இயற்றிய

பாண்டிமண்டலச் சதகம்

காப்பு

திங்கண்மும் மாரி பெய்யத் தென்னவன் செங்கோ லோங்க
மங்களம் பொலியும் பாண்டி மண்டல சதகம் வாழ்க
சங்கமா மதுரை மூதூர்ச் சங்கரர் சடையின் மீதிற்
கங்கையார் பெற்ற சித்திக் கணபதி காப்புத் தானே. 1

தண்டமிழ் வழங்கத் தென்னன் றனிச்செங்கோல் தழைக்கப் பாண்டி
மண்டல சதக மென்னும் வடிதமிழ் வளர்ந்து வாழ்க
அண்டர்கள் முனிவோர் மாந்தர்க் கருள்செய வமிர்த ரூபங்
கொண்டவர் பரங்கொண் டாளுங் குமரனை வணக்கஞ் செய்வாம். 2

அவை அடக்கம்

ஆண்டவர் தந்த சங்கத் தமர்ந்தவர்க் கடங்காக் கீர்த்திப்
பாண்டிமண் டலத்தைத் தானே பாடுவேன் பாவை பங்கர்
தாண்டவ மாடு வார்முன் பேயாடித் தடுப்ப தேபோற்
பூண்டபே ரரவின் முன்னம் பூநாக மாடல் போலும். 3

சிறப்புப்பாயிரம் - நூல் செய்தார்

பழுதில் மதுரைப் பதிவீர பூபதி பாலனுயர்
வழுதி புரக்கின்ற தென்பாண்டி நாட்டினை வண்மைபெற
வுழுது தழைக்கின்ற வேளாளர் தம்மை யுயர்வரென
வெழுதும் பெருமான் புவிநல்ல தம்பியெங் காங்கேயனே. 4

நூல் செய்தார்

வளங்கொ ளரிய நயினாந்தை யார்தொண்டை மண்டலத்தை
விளங்கும் வடமலை தென்காரைக் காட்டை மிகவுயர்த்தார்
நளம்பெறு மையம் பெருமாள்தென் பாண்டிநன் னாட்டினில்வந்
துளங்கொள வோங்கிய வேளாளர் தம்மை யுயர்த்தினனே. 5

நூல்

பூமாது பொன்னம் புயத்தினில் மேவிப் பொலிந்திருக்க
நாமாது சங்கப் பலகையி லேறி நலம்பெருக்கக்
கோமான் மலயத் துவசன் பயந்த குமரியெனு
மாமாது நீதி யரசாளும் பாண்டியன் மண்டலமே. 1

விகடம் புரிதிக்குப் பாலரை வென்று விசயமண்ட
முகடொன்று மும்முலைப் பெண்மா மணஞ்செய்து மூரியதேர்ப்
பகடும் புரவியு மூர்ந்த சவுந்தர பாண்டியனாய்
மகுடம் புனைசொக்கர் செங்கோல்செய் பாண்டியன் மண்டலமே. 2

பழுதறு மேருவிற் செண்டுங் கயலும் பதித்துவைய
முழுதுந்தன் கொற்றக் குடையால் நிழற்றி முறைபுரிந்தே
யுழுதுசெந் தேனுண்டு வண்டாடும் வேம்பணி யுக்கிரப்பேர்
வழுதியென் றாறு முகன்காக்கும் பாண்டியன் மண்டலமே. 3

தென்றிசை மேலும் வடதிசை தாழவுந் தேவிமண
மன்றுசெய் கின்ற வரனா ரகத்திய வப்பொதிகைக்
குன்றினி லேகு கெனவுந் தமிழ்பொதி கூடல்வெள்ளி
மன்றினில் வந்து சமானஞ்செய் பாண்டியன் மண்டலமே. 4

தண்டமிழ் கொண்டு சிவத்தலம் விண்டு தலம்விளக்கி
யெண்டரு முற்சங்க மேறி யிலக்கண லக்யஞ்செய்து
குண்டிகை நீர்கொண்டு காவேரி தந்து கொழுந்தமிழின்
மண்டலங் கண்ட குறுமுனி பாண்டியன் மண்டலமே. 5

ஒருகவிக் கோரொரு தேங்காய்பொன் னாற்செய் துருட்டிக்கல்வி
பெருகச்செய் நாவலர் வாழக் கொடுத்துப்ர தாபம்பெற்றான்
திருமலி தஞ்சையிற் கோவைத் தமிழ்கொண்டு செல்வமிக
வருதரு வாகிய வாணனும் பாண்டியன் மண்டலமே. 6

ஏரொக்குஞ் செஞ்சொ லகப்பொரு ணூலுக் கிலக்கியமாய்
நேரொக்க வாழும் இரட்டையர் பாடி நிறுத்தவவர்
பூரிக்கத் தஞ்சைநற் கோவைகொண் டேமெச்சிப் பொக்கசத்து
வாரிக் கொளச்சொன்ன வாணனும் பாண்டியன் மண்டலமே. 7

தெரிபுல வோர்தம் மதுரைமட் டாய்ச்செல்லச் சென்றபொதி
யெருதினி லேற்றிப் பொதித்தலஞ் சென்றதற் கேயஞ்சலாய்ப்
பெருமுர சார்த்திடக் கப்பனற் கோவைப்ர பந்தங்கொண்ட
வருகரு மாணிக்கன் வாழ்வான பாண்டியன் மண்டலமே. 8

நற்குடி நாற்பத்தெண் ணாயிர வோரைமுன் னாட்டொண்டைமான்
சக்கர வர்த்தி தரவேண்டு மென்றுவந் தாதரிப்பத்
திக்கனைத் தும்புகழ் தென்னவன் தேடித் தெரிந்தனுப்பும்
வர்க்கமாகிய வேளாளர் பாண்டியன் மண்டலமே. 9

கொல்ல னொடுதச்சன் தட்டான்வண் ணான்குய வன்கணக்கன்
புல்லிய பூக்கட்டி நாவிதன் வீரன் புனமடக்கி
நல்ல வுவச்சன் பறைகொட்டி தொண்டைநன் னாட்டினிலே
வல்ல குடிவைத்த மாறனும் பாண்டியன் மண்டலமே. 10

மூவேந்த ரிற்றன் னுடனிருந் தானென முன்முகிலைத்
தேவேந் திரன்றா னிருவர்க்கும் நல்கிடத் தென்னவனாம்
பூவேந்தன் மேகம் விலங்கிடும் போது புயற்குப்பிணை
மரவேந்தன் முன்சொன்ன வேளாளர் பாண்டியன் மண்டலமே. 11

காரூர் புயற்குப் பிணைசொல்லிக் கீர்த்திக் கவிதைகொள்ளும்
நீரூ ருவக்குங் காரினைக் காத்த நெறிமுறையின்
நேரூறு மன்னவ னுத்தர தேசத் தகன்றிருக்கும்
வாரூறு மங்கல வேளாளர் பாண்டியன் மண்டலமே. 12

அரனடி யார்க்கமு திட்டவ ரெச்சி லருந்துகின்ற
வுரனுடை யாரவ்வே ளாளர் மகிமையுண் டாக்குஞ்சொக்கப்
பரனரு ளால்நிலை யாகிய கோட்டயம் பாரிலுள்ள
மரபவர்க் கன்னங் கொடுத்தாரும் பாண்டியன் மண்டலமே. 13

உழுதொழி லொன்றியல் பாகவே கற்றிவ் வுயருலகில்
தொழுவது தானுந் தொடருந் தொழிலுந் துவர்க்குமென்ன
வெழுபெருங் கூற்றத்து வேளாள ரென்றுல கேழும்வென்று
பழுதற நற்குடி யாய்வாழ்வர் பாண்டியன் மண்டலமே. 14

ஈட்டுங் கொடிய அரசர்கள் போர்செய் திடினும்நதி
மேட்டிற் புகுந்துவந் தூர்புகுந் தாலும் மிகவுயர்ந்த
கோட்டையை விட்டு வெளியே வராரென்று கூறுகின்ற
வாட்டமி லாதுறை வேளாளர் பாண்டியன் மண்டலமே. 15

பொருந்திய சீவில்லி புத்தூரின் மேவிய புண்டரிகத்
திருந்தரு ளேசெய் திடுநாச்சி யாரம்ம னென்பவரைத்
தரும்பெரும் பொன்மதிச் சீர்க்கரு ணைப்பெயர் தாங்குகின்ற
வரும்பெரு மேன்மைகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 16

வீசிய தென்றற் றமிழோ டுலவும் வியன்மதுரை
ஈசன்செங் கோல்செயு மாகீர்த்தி பாண்டிய னின்பமுறத்
தேசியும் யானையுந் தேருங் கொடுத்துத் திருமுடிமேல்
வாசிகை யும்புனை வேளாளர் பாண்டியன் மண்டலமே. 17

நந்தேறும் வாவிப் பெருந்துறை யெல்லை நமக்கெனச்சொ
லிந்தேறு செஞ்சடை யெம்மா னுடனெதி ரேற்றுக்கொண்டு
செந்தே னொழுகும் பொழில்மது ராபுரித் தென்னவன்முன்
வந்தே வளஞ்சொலும் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 18

பரத்தினி லேயுயர் வாகிய பார்மகிழ் பங்குனியுத்
திரத்திரு நாளினில் மேலைச் சிதம்பரத் தேநயமாய்த்
துரைத்தன மாகச்செய் கல்யாண மண்டபம் சொர்ணநவ
இரத்தினத் தாற்செய்த வேளாளர் பாண்டியன் மண்டலமே. 19

அன்புறப் பார்முழு தும்முழு தேபயி ராக்கிமுதிர்ந்
தின்புறத் தான்விளை நெல்லொடு தானிய மீட்டியவை
தென்புலத் தார்தெய்வ மொக்கல் விருந்தொடு தென்னவனா
மன்பெறத் தந்தருள் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 20

படிமீ தறுபத்து மூவரிற் பேரும் படைத்ததற்கா
முடிமீது கீரையும் மாவடு வுங்கொண்டு முக்கணற்குக்
கடிதேகும் போதிட ருற்றுக் கழுத்ததைக் கையிலுள்ள
வடிவாள்கொண் டேயரி வேளாளர் பாண்டியன் மண்டலமே. 21

செந்நெல் முதிர்ந்தது பொன்னாய் விளைந்திடச் சிந்தைமகிழ்ந்
தந்நெல் செலவிடல் போலப் புலவர்க்கு மாதுலர்க்குந்
துன்னிய கூலிக்கும் வேண்டிய பேர்க்குநற் சுந்தரர்க்கும்
மன்னர்க்கு நல்கிய வேளாளர் பாண்டியன் மண்டலமே. 22

உழுதுண்டு வாழ்பவ ரேவாழ் பவர்மற் றுலகிலுள்ளோர்
தொழுதுண்டு பின்செல் பவரென்று வள்ளுவர் சொன்னவரப்
பழுதின்றி யேகம்ப னாரே ரெழுபது பாடியவர்
வழுவொன்றி லாதவவ் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 23

களமார் கறைக்கண்டச் சொக்கேசர் நிற்கக் கரணபரந்
தளமான பாத முருக்கொடு நாப்பண் தளைத்திருப்ப
வுளமா தவரொடு சங்கப் பலகையி லொக்கவைகும்
வளமான பன்னிரு வேளாளர் பாண்டியன் மண்டலமே. 24

உத்தம னாமவ் வழுதியைச் சோழ னுயிர்கவர்ந்தே
இத்தலங் காக்கு மவனிறந் தேவிட விந்துகுலப்
புத்திர னாண்டிட வேளாளர் பொன்முடி நெல்முடியை
வைத்தர சாட்சி கொடுத்ததும் பாண்டியன் மண்டலமே. 25

நளனைப் புகழ்கின்ற வெண்பாவைப் பாடிநன் னாட்கவிதை
களகத்தில் மிக்க புகழேந்தி யாங்கவி ராசன் றன்னைத்
தளவப் பெருநகை மாதொடு தென்னவன் றான்மணஞ்செய்
வளவற்குச் சீதன மீந்ததும் பாண்டியன் மண்டலமே. 26

தேனலர் கற்பக நாடனுஞ் சேரனுஞ் சோழனுஞ்சொல்
தானுறு மேகம் புவியி லெனும்படி தாமவணி
மீனவன் மீனக் கொடிக்கே துணைகொண்டு மேற்குடியில்
வானள வோச்சிய வேளாளர் பாண்டியன் மண்டலமே. 27

முளைவாரி முன்னமெம் மாற்கமு திட்டும் முழங்கைவரைத்
துளைவாயி லிட்டும் சுடுசோறு சூலி முதுகிலிட்டும்
விளைவாஞ் சிலந்தியை யாடையைக் கீறி வெளியிலிட்டும்
வளமான கீர்த்திகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 28

பார்த்தொரு பாணன் பிணமுஞ் சுமந்து பறையனுயிர்
காத்திதற் குப்பின்பு நீலி பழியைத் தழுவிக்கங்கா
கோத்திரத் தாரென்றே பேர்கொண்டு கம்பற்குக் கொத்துடனே
மாத்தொழில் தான்செய்யும் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 29

பேர்கொண் டரசுசெய் மீனாட்சி யம்மன்றன் பிள்ளைத்தமிழ்
கூர்கொண்ட சூலங்கொள் சொக்கேசர் மும்மணிக் கோவைமுதல்
தேர்ந்து சிறக்குங் குமர குருபரத் தம்பிரான்சொல்
பார்கொள் பெருமையைப் பெற்றது பாண்டியன் மண்டலமே. 30

ஆளும் சிவனும் புறம்பாக வாங்கவ ராளன்பர்தம்
மூளுந் திறனுங் குறும்பாக வேயிவர் முன்புவந்தால்
தாளுந்திண் டோளுந் துணிப்பே னெனவுந் தடங்கைவிடா
வாளுந் தடியுங்கொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 31

கடிமணக் கோலஞ்செய் மங்கைநற் கூந்தலைக் கண்டுசிவன்
அடியவர் பஞ்ச வடிக்கா மெனவடி யோடரிந்து
படிமிசைக் கீர்த்தி கொளக்கொடுத் தேயரன் பாற்கருணை
வடிவான மானக்கஞ் சாறனும் பாண்டியன் மண்டலமே. 32

நாமா ரடிமைவே ளாள ரடிமையெந் நாளுமென்று
கோமான் வளவன்முன் கூற வவனுரை கூறித்தென்னன்
பாவாண னாகவந் தாண்டவ னென்று பகருங்கஞ்ச
மாவார் களந்தைப் புகழேந்தி பாண்டியன் மண்டலமே. 33

பொல்லாச் சமண ரிடுந்துன்ப நீறிட்டுப் போக்கிக்கடல்
கல்லாற் கடந்து படிக்காசு வாங்கிக் கபாடந்திறந்
தெல்லாரும் பேறு பெறத்திருத் தாண்டக மேத்துமையர்
வல்லாள ராகிய வேளாளர் பாண்டியன் மண்டலமே. 34

சதுரங்கங் கொண்டு தளகர்த்த ராகித் தமையடுத்தோர்க்
கெதிர்வந்த சத்ரு சயஞ்செய்து முக்கண் இறையவர்க்கு
நிதியது கொண்டேயந் நீளடிக் கன்பாய் முனையடுவார்
மதிகொண்ட காவியங் கொண்டதும் பாண்டியன் மண்டலமே. 35

துரிசற்ற முக்கட் சிவனடி யார்தமைத் தூடித்தபே
ருருவத்து நாவை யடியறுத் தோட்டி யுலகத்திலே
பொருசத்தி யுள்ள புருடருக் குள்ளிவர் போர்ப்புகழால்
வருசத்தி யானாரும் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 36

ஈசனைத் தூது விடுத்தாரைக் காணி னிறப்பனென்று
பேசுவார் முன்னரவ் வன்றொண்டர் நக்கர் பிரான்வரவே
காசுறும் வாளால் வயிற்றைக் கிழித்த கலிக்காமரு
மாசற்ற தொல்குடி வேளாளர் பாண்டியன் மண்டலமே. 37

வேட்கையிற் றண்டி யடிகட் கமுதிட வேண்டிவைத்தும்
பாட்பட வேயெடுத் துண்டிடுஞ் சுற்றத்தைப் பற்றறுத்துக்
கோட்புலி யாரென் றிடுபேர்கொண் டார்முன்பு கொண்டுபெற்ற
வாட்படை யாளரும் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 38

காக்கு மரசன் மனைவிநற் பூவினைக் கான்முகர
மூக்கை யரிந்தரன் பாதத்தி லன்பினை முற்றுவித்த
தேக்குங் கருணை வடிவால் மிகுந்த செருத்துணையாய்
வாக்கின் பெருமைகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 39

தேனலர் கொன்றை யணிசிவன் கோயிலைச் செம்பொன்னினால்
தூநல மாகும் பிராகாரங் கோபுரங் தூபிமுத
லூன மிலாது புரிவாயி லாரென்று முள்ளத்திலே
மானத பூசைசெய் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 40

புகுந்த சமயம் விடார்தேரர் ஞானமில் புல்லவரா
லுகந்தவர் போலவர்க் குள்ளாகி யின்மை யொழிக்குமருள்
மிகுந்த சிவனிடத் தன்பாகிப் பூவென மேற்கல்லினால்
மகிழ்ந்தெறி சாக்கியர் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 41

வேறா ருலகத் திருந்துதன் னூரினில் மேவுகின்ற
வாறாருஞ் செஞ்சடை யார்தெய்வ மென்றே யறிந்தவர்க்குந்
தேறா தவர்க்கும் தெளிய மதுரைச் சிவன்றனையம்
மாறா லடித்தவர் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 42

தணவா வறுபத்து மூவரிற் றாமும் முதன்மைபெற்றுப்
பணவா ரணிகின்ற பெம்மான்பொற் பாதத்தைப் பற்றவைத்துக்
குணமான சைவ நெறிநின்று வாழுங் குலச்சிறையும்
மணமேற் குடியில்வாழ் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 43

முதியவர் மூவர் தமிழ்கொள் சுழியல் முதிரநெல்லை
துதிசெய் பரங்குன்ற மாடானை காளையார் தூவாப்பனூ
ரெதிர்கொடுங் குன்று புனவாயில் பூவண மேடகமே
மதுரைகுற் றால மிராமேசம் பாண்டியன் மண்டலமே. 44

செய்கை தவத்த சமண்குண் டரையவர் சென்றுசெய்த
துய்யற்கு மங்கைக் கரசி குலச்சிறை யுண்மகிழ்ந்து
சைவத்தை யோங்கச்செய் சம்பந்த ரேட்டைத்தண் ணாற்றெதிரே
வையைக்கு ளேயோடச் செய்தது பாண்டியன் மண்டலமே. 45

அணிகாரைக் காலம்மை சோணாடு விட்டுவந் தங்கமேபாழ்
துணிவாய்க் கணவனோ டூடிக் கயிலை தொடரவெண்ணித்
தணிவா நடக்கும் பொழுதிலந் தாதி தனியிரட்டை
மணிமாலை கொண்டு புகழ்தரும் பாண்டியன் மண்டலமே. 46

நந்தா வடியவர் கண்டேத்த வானக நாடுவிட்டே
இந்த்ரா திகள்வந் தேபோற்றி வேண்டிய தெய்தவின்பந்
தந்தாளுஞ் சொக்க ரறுபத்து நாலு தரந்தனியே
வந்தாடல் செய்து விளையாடும் பாண்டியன் மண்டலமே. 47

திருவாத வூரரெம் மாணிக்க வாசகர் தென்னவன்முன்
வெருவாது காட்டு நரிபரி யாய்விற்க மீண்டவைதாம்
நரியாக வைகை நதிபெருக் காய்வரும் நாளிற்சொக்க
ரறியாது போய்மண் சுமந்ததும் பாண்டியன் மண்டலமே. 48

தெள்ளிய சங்கப் புலவோரும் வாணியுஞ் செஞ்சடைமே
லொள்ளிய கங்கை தரித்தோருங் கூறி யொரோர்கவிதை
வெள்ளிய செஞ்சொற் றொடர்பா வகையை வியந்துகொண்டு
வள்ளுவர் மாலை பகர்ந்தாரும் பாண்டியன் மண்டலமே. 49

கனமான மானையங் கங்கொண்டு காசிக்குப் போகையிலே
தனமான வாசையிற் சென்றங்கு தங்கவங் கம்புனைந்து
புனமான செம்ம லிறக்கிடப் போற்றுநற் பூவணமா
வனமான காசி விளங்கிய பாண்டியன் மண்டலமே. 50

அலைவைத்த வையைத் திரைச்சீத னத்தையு மள்ளிக்கொண்டு
குலைவைத்த தண்ணறுந் தாதலர் பூமணங் கொள்ளைகொண்டு
நிலைவைத்த சந்தன வாசமும் வாரி நிலவுதென்றல்
மலயத் தமழ்மண மேவீசும் பாண்டியன் மண்டலமே. 51

மடலுற்ற புட்ப மணிநாச்சி யாரம்மை மாமணஞ்செய்
திடமிக்க வாசை யுடனே புதுவையிற் சென்றுமென்றே
யடல்பெற்ற வேங்கடத் தாருமன் னாரு மழகருந்தென்
வடபத்ர சாயியுந் தாமமர் பாண்டியன் மண்டலமே. 52

பாலினும் வெண்ணெ யினுந்தயிர் மீதினும் பட்சம்வைத்த
வேலினுங் கூரிய கண்ணா ளகோதைதன் வீட்டிடத்தே
ஆலினும் வேலையி னுந்துயில் சங்கத் தழகரெனு
மாலிருஞ் சோலை மலையாரும் பாண்டியன் மண்டலமே. 53

பந்தா முலையுமை தாயென வாரிதன் பால்முழுகத்
தந்தீரம் விட்டுக் கடவாத வாரிதி தானைமுன்னம்
செந்தே னொழுகுங் கடம்பா டவியில் திருக்குளத்தில்
வந்தே யெழுகட லானதும் பாண்டியன் மண்டலமே. 54

கானம் புனையும் நெறியுழி மாறன் கருவைப்பெருந்
தான தருக்கள் நிறைந்தபால் வண்ணநா தப்பரனைத்
தேன்மொண்டு மொண்டபி டேகஞ்செய் போது திருவுருவாய்
மான்மழு வோடெதிர் காட்டிடும் பாண்டியன் மண்டலமே. 55

அரைசிலை யொன்று புனல்வீழ மீனு மணைக்கரையில்
தரைமிசை பாதியப் பட்சியு மாகியத் தண்ணியநீர்க்
கரைமிசைப் பாதியப் பட்சியு மீனுங் கவர்ந்திருக்கும்
வரைசெய் திருப்பரங் குன்றமும் பாண்டியன் மண்டலமே. 56

அதிகார மாகச்சொக் கேசரைப் பூசைசெய் தானைநர
பதியான மெய்கண்ட சைவ சிகாமணி பக்தியினால்
விதியாகப் பூசித்த வேளாளர்க் கேவெள்ளை நீறளித்த
மதியா மதுரா புரியது பாண்டியன் மண்டலமே. 57

திருவாய் மொழித்திரு மேனிய ரானதுஞ் செந்தமிழா
லொருநான் மறையென வோதிய பாடல்கொண் டோங்குபதி
யிருநாலு பத்து முடைத்தாகி யெண்டிசை யேற்றம்பெற்று
வருமால் திருப்பதி யுள்ளதும் பாண்டியன் மண்டலமே. 58

செகத்தினில் பஞ்சம் வரவே யருச்சனை செய்கையிலே
புகழ்த்துணை யார்திருப் புத்தூர்ச் சிவன்முடி மேல்புடைக்க
வகத்துணை யாகப்பெற் றேபடிக் காசொன் றளித்துவரும்
மகத்துவ மானாரும் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 59

கரைபெற்ற தோர்பஞ்ச லட்சண மானதொல் காப்பியமுந்
தரைமுற்றும் போற்றிய சிந்தா மணியுந் தமிழ்ச்சங்கத்தில்
நிரைபெற் றுயர்பத்துப் பாட்டும் விளங்க நிசவுரையை
வரைநச்சி னார்க்கினி யார்வாழ்வு பாண்டியன் மண்டலமே. 60

அதிசய மெய்துறு சக்கர வாத்திக ளானவரு
முதிர்தமிழ் கொண்டு வரையாது நல்கு முதல்வள்ளலுட்
டுதிகொள வோங்கு நளனுஞ் சகரனுந் தொல்லுலகில்
மதிகுல மாறன் குலத்தவர் பாண்டியன் மண்டலமே. 61

தேவிக்கு மன்னவன் காப்பானென் றேகித் திரும்பிவந்து
மேவிக் கலந்த விரவினில் சோதிக்க வேந்தன் தட்டிப்
பூவிற் பொலிகைவைத் தேகிடப் பூசுரன் போந்துதர
மாவிற்கை பொற்கை தருமாறன் பாண்டியன் மண்டலமே. 62

புரிசைப் புரத்தினிற் சேரனுஞ் சோழனும் போர்புரிய
விரியச் சயங்கொண்ட போழ்தினில் யாமினி யீங்கிவனைப்
பரிசுக்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்யமென்றே
வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே. 63

அகத்திய ரேவிட வாட்சேபஞ் செய்ததங் கோட்டுமுனி
மிகக்களி கூரப் புலவோர்கள் வாழ்த்த வியன்மதுரைச்
செகத்தர சென்பவன் முன்னேதொல் காப்பியச் செந்தமிழை
மகத்துவ மாயரங் கேற்றிய பாண்டியன் மண்டலமே. 64

பேறுதந் தாளு முமையவள் தேகப் பெருநலததைக்
கூறுஞ் சவுந்த்ர லகிரியென் றோர்தமிழ் கூறிமிக
வீறிய நல்ல கவிராச பண்டிதர் மேன்மையொன்ற
மாற னரசு புரிந்தாளும் பாண்டியன் மண்டலமே. 65

நரதுங்கன் கொண்டாடு முச்சங்கங் கூறுநற் காசிகண்ட
மரதுங்க மேசொல் இலிங்க புராணமந் நைடதஞ்செய்
கரதுங்க சீல னதிவீர ராமனுங் காசினியில்
சரதுங்க ராமனும் வாழ்வது பாண்டியன் மண்டலமே. 66

இணங்கி யுலகத்து மெண்ணியல் விண்ணோர் எழின்மடவார்
கணங்கொண்ட சாபந் தவிர்ந்தே விளங்குங் கனிமதுர
குணங்கொண்ட சேது புராணத்தைப் பாடிக் குவலயத்தில்
வணங்கும் நிரம்ப வழகியார் பாண்டியன் மண்டலமே. 67

தைந்நின்ற பாண மதவே ளெடுத்துச் சமர்புரிய
மொய்ந்நின்ற வண்டு பசுந்தே னருந்தி முகம்விரியச்
செய்ந்நின்ற பூஞ்சோலை சூழுங் கழுகு செறிசயில
மய்ந்நின்ற வானை முருகனும் பாண்டியன் மண்டலமே. 68

சேரர்க்குஞ் சோழர்க்கும் மாமுடி மீது சிகாமணியாய்ப்
பூரிக்கு மாந்தர்க ளெல்லோரும் வாரிப் புனைந்துகொள்ளப்
பாரிக்குங் கொங்கை மடவா ரெடுத்துப் பணிந்தணைய
வாரிக்கு முத்தம் விளைவான பாண்டியன் மண்டலமே. 69

சிந்திக்கும் பேறு பெறவே வருந்தியித் தேசத்திலே
தொந்திக்குஞ் சஞ்சீவி தீர்த்தத்தி லாடிச் சுரர்பணிய
அந்திப் பிறையணி யெம்மான்வந் தாட்கொண் டருளவுமே
வந்திக்கும் பாவ விமோசனம் பாண்டியன் மண்டலமே. 70

ஒள்ளிய மாயனும் வேதனு மெய்திட வும்பர்தொழுந்
துள்ளிய மான்மழுக் கையர்நின் றாடத் துதிபெருகுந்
தெள்ளிய சித்ர சபைவெள்ளி யம்பலம் சீர்மருவும்
வள்ளிய தாம்ர சபைமூன்றும் பாண்டியன் மண்டலமே. 71

மீனவன் வேதியர் பங்கைத் தடுக்க விரைந்தநுமான்
றானுள நொந்து மனுவிறந் தானென்று தண்டமிழைக்
கோனுள மெச்சக் கொடுத்துத்தம் பங்கினைக் கொண்டுமகிழ்
வானர வீரன் மதுரையும் பாண்டியன் மண்டலமே. 72

சொல்லிய மங்கைக் கரசியார் கொங்கைத் துணையழுந்திப்
புல்கி மணஞ்செய்து நேரியன் போர்வென்று பூதியணி
நெல்லையில் வாழ்கின்ற சீர்நெடு மாறர்தம் நேசம்வைத்து
வல்லியங் காத்துப் புரந்தவர் பாண்டியன் மண்டலமே. 73

அரிணம் பெறும்விழித் தேன்மொழி யாளபி ராமியம்மை
தருணம் வரநலத் தண்டீசர் கண்ணொளி தான்சிறக்க
வருணன் பரிவோ டிடியும் மழையும் தாய்வரவத்
திருவரு ளைப்பூசை செய்தவர் பாண்டியன் மண்டலமே. 74

தேகம் செழித்திடு மென்றே தெளிந்து சிவமயமாய்
மேகம் நிறங்கொளும் போதங்கு மேவிடில் மீனுமுண்டாய்க்
காகம் படர்ந்து கருத்து மதிசயங் காட்டுமலர்
வாசம் பொருந்துபொற் றாமரை பாண்டியன் மண்டலமே. 75

தேனேறு மின்சொ லிராமா யணத்தில் திருவழுந்தூ
ரானே றனைய தமிழ்க்கம்ப நாட னமைத்துவைத்த
தானேரில் கீர்த்திசெய் வெண்ணெய்நல் லூரிற் சடையனென்னும்
வானேறு சீர்த்திகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 76

திருந்திய சீவில்லி புத்தூரில் ஞானத் திருவுருவாய்ப்
பொருந்துசொக் கேச ரதிகார மாய்வைத்துப் பூசைசெய்தே
யருந்தவ ராகித் தரும புரத்தி லருள்புரிய
வருந்திரு ஞானசம் பந்தரும் பாண்டியன் மண்டலமே. 77

தேனிமிர் காழித் திருஞான சம்பந்தர் தென்னவன்றன்
கூனிமி ரச்செய்து குண்டர்தந் தொண்டரைக் கூர்ங்கழுவில்
தானிடும் நீறும் விளங்க மதுரைத் தனிலிழைத்து
மானிடும் பேறு பெறவாழும் பாண்டியன் மண்டலமே. 78

செய்கொண்ட பங்கயம் போலே முகமும் திருவிழியும்
கைகொண்ட வாழியுஞ் சங்கமு மேந்திக் கருடன்மிசை
மெய்கொண்ட மேக நிறங்கொண்ட மாயனு மேவியசீ
வைகுண்ட பூமியைக் காட்டிடும் பாண்டியன் மண்டலமே. 79

தென்னாடு முத்துடைத் தென்னு மிதுவன்றிச் சேரனுடை
நன்னாடு கல்லென்னும் வல்லிரும் பாகுமுன் னாடென்றுதான்
சொன்னா வலர்புகழ் சோழன்மு னேநின்று சொல்லவுயர்
மன்னாளு நாடது வன்றோதென் பாண்டியன் மண்டலமே. 80

இடைக்காடர் முன்செல்லப் பின்செலு மீச னிருப்பதுபோல்
தடைக்கான காட்டினில் முட்டையென் றேபெயர் சாற்றிச்செஞ்சொற்
றொடைக்கான பாடல்பொய் யாமொழி யார்தொடுத் தேத்துமடி
மடக்கான பாடல்கொள் செவ்வேளும் பாண்டியன் மண்டலமே. 81

புண்ணியஞ் செய்தவ ரிங்கிவர் பாவம் புரிந்துலகில்
நண்ணின ரங்கவ ரென்றே வரவும்விண் ணாடுதனில்
தண்ணிய நீரில் வெளுப்புங் கறுப்பதுந் தந்தருவி
மண்ணியல் பாந்திருக் குற்றாலம் பாண்டியன் மண்டலமே. 82

குளங்கண்டு நீர்கொண்டு மஞ்சன மாடுமக் குஞ்சரத்தை
இளங்கோ கனமடு வில்வன மீனுற் றிடர்புரிய
வுளங்கொண்டு யானை யழைக்கக் கராவை யுளைசெய்தமால்
வளங்குளத் தானைநல் லூரரும் பாண்டியன் மண்டலமே. 83

தரணியில் பல்லுருச் சொக்கரில் லாத தலங்களில்லை
தெரிதரு சொற்றமிழ் சொல்லாத தெய்வமும் தேசத்திலை
பொருள்பெறுஞ் சங்கப் புலவரைப் போலப் புலவரில்லை
வருசெய லாலிவண் முற்படும் பாண்டியன் மண்டலமே. 84

கடைசியில் யாவருங் கண்டு தொழுஞ்சீர்க் கணங்களவை
புடைசெய் கருவூரிற் றோன்றிய சித்தர் புகுந்தழைக்க
உடல்மகிழ்ந் தாமென்று சேர்த்துக் கொளவெனச் சேர்த்துக்கொண்டு
மடமயி லோர்பங்க ரார்வது பாண்டியன் மண்டலமே. 85

பலர்புகழ் கம்ப ருமையுட னீயுமொப் பாயென்றது
முலவிய சம்பந்தர் மங்கைக் கரசியென் றோதியதும்
நிலவிய பாண்டியர்க் கன்றியிந் நீணில நேரியர்க்கும்
மலைபெறு சேரர்க்கு மில்லெனும் பாண்டியன் மண்டலமே. 86

தாக்கரி தான விராவண னைக்கொன்று தாசரதி
போக்கரி தாகிய பாதகம் போக்கிப் புவியிற்கங்கை
தேக்கிய நீரன்றிப் பூசைகொள் ளாதுசெய் சேதுவெனும்
மாக்கடல் சூழு மிராமேசம் பாண்டியன் மண்டலமே. 87

வக்கை நகராளு மாட்கொண்டா னைந்தா மறையெனவே
யெக்கணுஞ் சொல்பா ரதஞ்சனி யூர்வில்லி யேந்திசையோன்
தக்க தமிழிசை யாற்பாடச் செய்தேயித் தாரணியில்
மிக்க பரிசு கொடுத்ததும் பாண்டியன் மண்டலமே. 88

துரியோ தனன்கன்ன னச்சுவத் தாமன் றுரோணனொடு
பொருபாண் டவர்க்குச் சயமெனும் பாரதப் போர்முடித்துத்
திருமேவு பாக வதம்புரி லீலையும் செய்மதுரை
வருமா லெதுகுலக் கிட்டினன் பாண்டியன் மண்டலமே. 89

ஏழிசை யாரை யெடுத்துத் தரைமிசை யேத்துகவி
ஆழிசங் கத்தார் புகழ்பாடல் கொண்டே யவனியிலே
மேழியி னால்வளர் வேளாளர் யாரு வியந்திருந்து
வாழி வளம்பெற வாழ்வதும் பாண்டியன் மண்டலமே. 90

லியவரை வென்றுநற் சாதாரி பாடிமுன் வெள்ளிமன்றில்
நயமுட னாடிப் பொருளதி காரம் நவின்றசொக்கர்
தயவுடன் யாவரு மின்ப முறுமத் தனப்பொருளை
யியலிசை நாடக மாச்சொன்ன பாண்டியன் மண்டலமே. 91

கல்லாடம் சிற்றம் பலக்கோவைக் கொப்பக் கடம்பவனத்
தெல்லோருங் கொண்டேத்து வாரலா திந்தமேல் காரிகைக்குத்
துல்லிய சங்கத்தார் கொண்ட வுரைநற சுருதியெனச்
சொல்லிய வேளாளர் சூழ்வதும் பாண்டியன் மண்டலமே. 92

திருமிக்க சேரற் கரசு பெறத்தமிழ் செப்பிடவுந்
தருமிக்கு மிக்கசுத் தித்தமிழ் கொங்கென்று தான்சொலவும்
கருணைக் கடல்நங் கடம்பா டவியிற் கலந்திருக்க
வரிசைப் புலமை செலுத்திய பாண்டியன் மண்டலமே. 93

பாட்டொன்று பாடிப் பதினாறு கோடி பரிசுபெற்றுத்
தீட்டும் பதினாறு நூறா யிரம்பொனார் செந்தமிழ்க்கு
வேட்டு வளவன்றன் சங்கத்தி லேறி வியந்திருந்து
வாட்ட மிலாது களிகூரும் பாண்டியன் மண்டலமே. 94

மும்மண் டலத்திலும் பாண்டியன் மண்டல முக்யமென்ப
விம்மண் டலத்திலெல் லோருமே போற்றி யியம்பவல
னம்மண் டலஞ்செய் சவுந்தர பாண்டிய னாரரசு
மம்மர் தவிர்ப்பதன் றோவெனும் பாண்டியன் மண்டலமே. 95

காசிக்குஞ் சேதுவுக் கும்புக ழேபெறக் கற்றவரும்
பூசிக்க யாரு முபாசிக்க நேசிக்கும் பூதியினால்
தேசிற் சிதம்பரத் தேநிலை நிற்கச்செய் தேசிறந்த
மாசற்ற கல்மடம் வேளாளர் பாண்டியன் மண்டலமே. 96

தண்டாநா டாண்ட வழகுபட் டாரிமன் தன்னாட்டிலே
மண்ணாளும் காரைக்காட் டார்தம் மரபினில் மங்கைதனைப்
பண்கேட்ட மன்னற்குப் பெண்ணா யழகாரப் பந்தலிலே
மண்காணக் கட்டிய வேளாளர் பாண்டியன் மண்டலமே. 97

தென்கும ரிக்கும் வடக்குவெள் ளாற்றுக்குந் தெற்குவரு
மன்புறு திண்டுக்கல் லுக்குங்கா ரைக்காட்டிற் குங்கிழக்கா
யன்புறு சேதுவின் மேற்கான வெல்லைக்கு ளானதெல்லாம்
வன்பெரு மாறன் புரக்கின்ற பாண்டியன் மண்டலமே. 98

தள்ளருந் தேவர்கட் கெல்லாம் விநாயகர் தாமுயர்ந்து
பிள்ளையென் றேபெயர் பெற்றா ரதுகண்டிப் பேருலகி
லுள்ளவே ளாளரில் பாண்டிவே ளாள ருயர்வரென்றே
வள்ளியப் பிள்ளைப் பெயரேகொள் பாண்டியன் மண்டலமே. 99

அங்கமும் வாழச் சுரர்வேத மந்தணர் ஆப்பெருகச்
செங்கையிற் கோல்செலுத் தும்நல்ல தம்பி சிறக்கும்நல்ல
கங்கா குலபதி முன்னே யிசையாரும காதைதன்னை
மங்கள மாய்க்கேட் டவர்வாழி பாண்டியன் மண்டலமே. 100

பாண்டிமண்டலச் சதகம் முற்றிற்று
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247