சதகம் நூல்கள்

     சதகம் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம். சதம் என்பது நூறு எனப்பொருள்படும் வடமொழிச் சொல். ஆகவே நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் எனப்பட்டது.

     சதகங்கள் பல பொருட்களைக் கொண்டவையாக அமைந்து உள்ளன. இறைவனை வழிபடுவதற்கான பக்திச் சதகங்கள், சமயக் கொள்கைகளை எடுத்தியம்பும் தத்துவச் சதகங்கள், வாழ்க்கை பற்றிக் கூறும் வாழ்வியல் சதகங்கள் எனப் பலவாறாக உள்ளன. நாட்டுப் பகுதிகளைப் பற்றிக்கூறும் சதகங்கள், பழமொழிச் சதகங்கள், நீதிகளைக் கூறும் சதகங்கள், மருத்துவம் சார்ந்த சதகங்கள் எனவும் பல வகைகள் உள்ளன.

     நாட்டுப் பகுதிகளைப் பற்றிக் கூறும் சதகங்களுக்கு எடுத்துக் காட்டாகப் பாண்டி மண்டல சதகம், சோழமண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், தொண்டைமண்டல சதகம், ஈழமண்டல சதகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். திருச்சதகம், திருத்தொண்டர் சதகம், யேசுநாதர் சதகம் என்பன சமயத் தொடர்புடையவை. செயங்கொண்டார் சதகம் பழமொழிகள் பற்றியது. கைலாசநாதர் சதகம் நீதிக் கருத்துக்களைக் கொண்டது.

     அடியார்களின் வரலாறுகளைத் தொகுத்துக் கூறுவதில் ஆர்வம் கொண்ட ஒருவர் திருத்தொண்டர் சதகம் இயற்றினார். தண்டலையார் சதகம், கோவிந்த சதகம் என்பவை பழமொழிகளை அமைத்து, தெய்வ வழிபாட்டுடன் சேர்த்து இயற்றப்பட்டவை.

     ஜெயங்கொண்டார் சதகத்தில் பழமொழிகளும் அவற்றை விளக்கும் கதைகளும் நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கைலாச நாதர் சதகம் என்பதில் நீதிகள் மட்டும் அல்லாமல், சோதிடம் உடலோம்பல் முதலியன பற்றிய கருத்துகளும் கூறப்பட்டுள்ளன.

     திருவண்ணாமலை, திருப்பதி முதலான தலங்களின் தெய்வங்களை வழிபடும் முறையில் அமைந்த சதகங்கள் பல உண்டு. இசுலாமிய மதத்தவர் பாடிய சதகங்கள் அகத்தீசர் சதகம், அரபிச் சதகம் முதலியன.

     தமிழில் தோன்றிய முதல் சதக இலக்கியமாக மாணிக்கவாசகரின் திருச்சதகத்தைக் குறிப்பிடலாம். இச்சதகம் இயற்றப்பட்ட காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.

     11 ஆம் நூற்றாண்டில் ஆறைக் கிழார் என்னும் புலவர் கார்மண்டல சதகம் என்னும் நூலை இயற்றினார். பின்னர், 17 ஆம் நூற்றாண்டில் படிக்காசுப் புலவரின் தண்டலையார் சதகம், கொங்கு மண்டல சதகம், தொண்டைமண்டல சதகம், குணங்குடி மஸ்தான் சாகிபுவின் நந்தீசர் சதகம், முகைதீன் சதகம் போன்ற நூல்கள் எழுந்தன. கைலாசநாதர் சதகம், அம்பலவாணக் கவிராயரின் அறப்பளீசுர சதகம், சாந்தலிங்க அடிகளாரின் வைராக்கிய சதகம் ஆகியன கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை. கி.பி. 19ஆம் நூற்றாண்டில் இயேசுநாதர் திருச்சதகம் என்பது யாழ்ப்பாணத்தாராகிய சதாசிவப் பிள்ளை இயேசுநாதரைப் போற்றி எழுதிய சதகம், செயங்கொண்டர் சதகம், ஈழமண்டல சதகம் போன்ற நூல்கள் எழுந்தன. மலைக்கொழுந்துக் கவிராயர் இயற்றிய திருத்தொண்டர் சதகம் 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

     சதக இலக்கியங்கள் நூறு என்னும் எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தவை. நூறு செய்யுட்கள் ஒவ்வொன்றிலும் இறுதியடியோ, அதற்கு முந்திய பகுதியோ ஒரே வகையான தொடரைப் பெற்று விளங்கும். பாடல் தோறும் பயின்று வரும். இவற்றை மகுடம் என்பர். எடுத்துக்காட்டாக, பாண்டி மண்டல சதகத்தின் செய்யுட்கள் பாண்டி மண்டலமே என்று முடியும். அறப்பளீசுர சதகத்தில் அறப்பளீசுர தேவனே என்று ஒவ்வொரு செய்யுளிலும் மகுடம் அமையும். ‘மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடுமலை மேவு குமரேசனே’ என்று குமரேச சதகத்தில் ஒவ்வொரு செய்யுளும் முடிவு பெறும்.

     நீதி கூறும் இலக்கியத்தில், சதகங்கள் மக்கள் செல்வாக்குப் பெற்றவை. கலைக்களஞ்சியம் போன்றவை இல்லாத அக்காலத்தில் கற்பவர்க்குத் தேவையான பல குறிப்புகளையும் இவ் விலக்கியங்களில் புலவர்கள் தந்திருக்கிறார்கள். திருமாலின் அவதாரங்களைக் குறித்தும், புராணங்கள் குறித்தும் அறங்கள் முப்பத்திரண்டு என்னென்ன என்பது பற்றியும் விளக்கம் தரப்படுகிறது.

     குமரேச சதகம், சிலவகை மனிதர்களைப் பேய்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் குற்றங்களை எடுத்துக் காட்டுகிறது. கடன் தந்தவர் வந்து திருப்பிக் கேட்கும்போது முகம் கடுகடுப்பவர் பேயாம். பெரிய பதவி வந்த போது செருக்கோடு நடப்பவர் பேய். பகைவரின் சொல்லை மதித்து அதில் மயங்கி அகப்படுவோர் பேய். இலஞ்சம் வாங்கும் ஆசையால் பிறர்க்குத் துன்பம் செய்பவர் பேய். மனைவி வீட்டில் இருக்கப் பரத்தையரை நாடிச் செல்வோர் பேய். இவ்வாறு நீதிகள் வெவ்வேறு வகையாக உணர்த்தப்படுதல் காணலாம்.

சதகம் நூல்கள்

அகத்தீசர் சதகம் - குணங்குடி மஸ்தான் சாகிபு
அடைக்கலச் சதகம் - வயிரவநாதன் கவிராயர்
அண்ணாமலைச் சதகம் - திருச்சிற்றம்பல நாவலர்
அண்ணாமலையார் சதகம் - மாம்பாக்கம் திருச்சிற்றம்பல நாவலர்
அபயாம்பிகை சதகம் - கிருஷ்ணையர்
அப்துல்றகுமானிற்றகீம் சதகம் - மு. பவானிப்புலவர்
அரபிச் சதகம் - அப்துல் ரஹ்மான்
அர்ச்தேவமாதாவின் சதகம் - கி.அ. பொன்னுசாமி முதலியார்
அவிநாசிக் கருணாம்பிகை சதகம் - வாசுதேவ முதலியார்
அபயாம்பிகை சதகம் - கிருஷ்ணையர்
அழகம்மை சதகம் - அப்பாச்சாமி
ஆண்டவர் சதகம்
ஆபத்சகாயர் சதகம் - ஆபத்சகாயஞ் செட்டியார்
இணுவில் சிவகாமியம்மை சதகம் - சி. சின்னத்தம்பிப் புலவர்
இயேசுநாதர் சதகம் - அருணாசலம் சதாசிவம்பிள்ளை
இயேசுநாதர் சதகம் - ஆணல்
இராமலிங்க சதகம் - சங்கரமூர்த்திப் புலவர்
இராமாயண சதகம் - கேசவ சுப்பராயச் செட்டியார்
இராமாயண சதகம் - முருகேசச் செட்டியார்
இலக்குமிகாந்த சதகம் - சீனிவாசய்யர்
ஈழமண்டல சதகம் - ம.க. வேற்பிள்ளை
ஈழமண்டல சதகம் - கணபதிப்பிள்ளை
உண்ணாமுலையம்மன் சதகம் - சின்னக் கவுண்டர்
உமாமகேசுர சதகம்
உருக்குமாங்கதன் சதகம் - கு. சுப்பிரமணிய ஐயர்
எதிராஜ சதகம் - புதுவை இராமானுச நாவலர்
எம்பிரான் சதகம் - ஸ்ரீபெரும்புதூர் கோபாலகிருஷ்ணதாசர்
ஏகாம்பரநாதர் சதகம் - பாரதப்பிரசங்கம் இரகுநாதய்யர்
கஞ்சகிரி சித்தேசர் சதகம் - அனந்தநாராயண சர்மா
கடிகா சதகம் - கடிகாசதக அம்மான்
கதிர்காமச் சதகம் - கணபதிப்பிள்ளை புலவர்
கந்தபுராணச் சதகம் - சந்திரசேகர உபாத்தியாயர்
கந்தபுராணச் சதகம் - முத்துக்குமாரதாசர்
கந்தர் சதகம் - முத்து வைத்தியநாத பண்டாரம்
கருணாம்பிகை சதகம் - வாசுதேவ முதலியார்
கருப்பண்ணசாமி சதகம் - மிதிலைப்பட்டி அ. இராமசாமிக்கவிராயர்
கலைவாணி சதகம் - கி. சுந்தராச்சாரியார்
கழுகாசல சதகம் - கழுகாசலப் புலவர்
கழுகாசல சதகம் - திருமயிலை சண்முகம்பிள்ளை
காசி விசுவநாத சதகம் - கனகராச ஐயர்
காந்தி சதகம் - நா. முத்துசுந்தர முதலியார்
கார்க்கூர்ச் சங்கர சதகம் - லா.சி. சுப்பிரமணியஞ் செட்டியார்
கார்மண்டல சதகம் - அவிநாசி ஆறைகிழார்
கானாட்டுச் சதகம்
குமரேச சதகம் - வெங்குப்பிள்ளை
குருசிஷ்ய அந்தாதிச் சதகம் - வேதாந்த சிதாகாச சுவாமி
கேசவர் சதகம் - வெங்குப்பிள்ளை
கைலாசநாதர் சதகம் - சேலம் தம்பரம்பிள்ளை (சிதம்பரவாணர்)
கைலாசநாதர் சதகம் - கைலாசநாதக் கவிஞர்
கொங்குமண்டல சதகம் - வாலசுந்தரர்
கோதண்டராம சதகம் - இராமதாசர்
கோமதியம்மை சதகம் - திருக்கமலப் புலவர்
கோவிந்த சதகம் - வெண்மணி நாராயணபாரதி
கோவிந்த சதகம் - முத்தப்பச் செட்டியார்
சங்கர சதகம் - லா.சி. சுப்பிரமணியஞ் செட்டியார்
சண்முகநாதன் சதகம் - அருனாசல நாவலர்
சதகப் பதிகம் (10 சதகங்களின் தொகுப்பு - வண்ணச்சரபம்
சதனபுரீசர் சதகம் - இராமச்சந்திர குருசாமிதாசர்
சதானந்த சதகம் - பொன்னைய சுவாமிகள்
சதுர்லிங்க சதகம்
சதுர்லிங்க தசகோத்திர சதகம் - ஆறுமுகமெய்ஞ்ஞான சிவாச்சாரியார்
சப்த சதகம் (7 சதகங்கள்) - வண்ணச்சரபம்
சயவரதர் சதகம் - வே.கி. நாராயணசாமிப் பிள்ளை
சல்லாசர் சதகம்
சன்மார்க்க சதகம் - முத்து வைத்தியநாத பண்டாரம்
சிங்கார வேலாயுதர் சதகம் - முத்துசாமிக் கவிராயர்
சிருங்கார சதகம் - சுவாமிநாத தேசிகர்
சிவகாமி சதகம் - முத்துவைத்தியநாத பண்டாரம்
சிவகாமியம்மை சதகம் - மாயூரம் கிருஷ்ணையர்
சிவகுரு சதகம் - சிவானந்த சரசுவதி
சிவசங்கர சதகம் - எழுமூர் வீராசாமி உபாத்தியாயர்
சிவபெருமான் சதகம் - வண்ணச்சரபம்
சிற்சுகவாரிதிச் சதகம் - அ. மாத்ரூபூதம்பிள்ளை
சீரங்க நாராயண சதகம் - வண்ணச்சரபம்
சீறாச் சதகம் - மகமத் சுல்தான் இபின் அகமத்
சீனிவாச சதகம் - அனந்தநாத சுவாமிகள்
சுமதி சதகம் - எம்.ஆர். சீனிவாசய்யங்கார்
சுமதி சதகம் - சமரபுரி முதலியார்
செந்தில்நாயக சதகம் - வண்ணச்சரபம்
செயங்கொண்டார் சதகம் - முத்தப்பச் செட்டியார்
செயவரதர் சதகம் - வெங்குப்பிள்ளை
செல்லாண்டியம்மன் சதகம் - சக்கரபாணி ஆச்சாரியார்
சொக்கநாதர் சதகம் - சங்குப்புலவர்
சொக்கநாதர் மலைச்சதகம் - கவிஞர் அடிகள் கு.ஆ. அரங்கநாதனார்
சௌந்தரிய நாயகி சதகம் - தே. பெரியசாமிப்பிள்ளை
ஞானசித்தர் சதகம் - மகாதேவ யோகீந்திரர்
தசரத ராமச் சதகம் - இ. மாவிலிங்கம் பிள்ளை
தசரத ராமச் சதகம் - சினீவாசாச்சாரியார்
தசாவதாரச் சதகம்
தண்டலையார் சதகம் - தண்டலைச்சேரி சாந்தலிங்கக் கவிராயர்
தரிசனமாலைச் சதகம் - மீரான் சாகிப் புலவர்
தியாகராசசுவாமி சதகம் - ப. சோமசுந்தரதேசிகர்
திருக்கூட்டச் சதகம் - தியாகராச தேசிகர்
திருச் சதகம் - சதாசிவம்பிள்ளை
திருச்செங்கோட்டுச் சதகம் - கிருஷ்ணசாமி முதலியார்
திருச்செங்கோட்டுச் சதகம் - சதாசிவ பண்டிதர்
திருச்செந்தில்நாயகச் சதகம் - தண்டபாணி சுவாமிகள்
திருச்செந்தூர் சண்முக சதகம் - வரராம யோகி
திருத்தொண்டர் சதகம் - மலைக்கொழுந்து நாவலர் கொடுமுடி
திருப்போரூர் சதகம் - பு. அ. சபாபதி முதலியார்
திருப்போரூர் பிரணவாசலச் சதகம் - பு. அ. சபாபதி முதலியார்
திருவரந்துறைநாத சதகம் - அர. அரங்கசாமி ஐயங்கார்
திருவாட் சதகம் - வி.மெ. மெய்யப்பச் செட்டியார்
திருவாசக திருச்சதகம் - மாணிக்கவாசகர்
திருவிளையாடற் சதகம் - கு. சுப்பிரமணிய ஐயர்
திருவுரு அட்டபந்தன சதகம் - சிவ.சு. குமாரசாமித் தேசிகர்
திருவேங்கட சதகம் (அ) மணவாள நாராயண சதகம் - வெண்மணி நாராயண பாரதி திருவேங்கடநாத சதகம்
திருவேங்கடேசுவரர் சதகம் - கற்பூர வேங்கடசாமி செட்டியார்
தில்லைக் கற்பக விநாயகர் சதகம் - சிதம்பரஞ் செட்டியார்
தில்லைக் கற்பக விநாயகர் சதகம் - ஐயாத்துறை ஞானியார்
தில்லை நடராசர் சதகம் - ஐயாத்துறை ஞானியார்
தில்லை நடராசர் சதகம் - மாயூரம் இராமையா
தொண்டை மண்டல சதகம் - வடலூர் இராமலிங்க சுவாமிகள்
தொண்டை மண்டல சதகம் - படிக்காசுப்புலவர்
நடராசர் சதகம் - சிதம்பரநாத முனிவர்
நந்தமண்டல சதகம் - சொ. தெய்வநாயகப் பெருமாள் நாயுடு
நந்தமண்டல சதகம் - திருவேங்கடப் புலவர்
நந்தமண்டல சதகம் - மாத்ருபூதமையர்
நந்தீசர் சதகம் - மஸ்தான் சாகிபு
நானிலைச் சதகம் - தண்டபாணி சுவாமிகள்
நியாய சதகம்
நீதி சதகம் - சுவாமிநாத தேசிகர்
பர்த்துருகரி நீதி சதகம் - பர்த்துருகரி
பர்த்துருகரி நீதி சதகம் - ம. மாணிக்கவாசகம் பிள்ளை
பர்த்துருகரி வைராக்கிய சதகம் - வீரசுப்பைய ஞானதேசிகர்
பழனியாண்டவர் சதகம் - சேலம் குமாரசாமி முதலியார்
பழனியாண்டவர் சதகம் - ஐயம்பெருமானாசிரியர்
பாண்டிமண்டல சதகம் - ஐயம்பெருமானாசிரியர்
பிரதான சதகம்
பிரமோத்தரகாண்ட சதகம் - கு. சுப்பிரமணிய ஐயர்
புவனேசுவரி சதகம்
பூவைச் சிங்காரச் சதகம் - மனோன்மணியம்மையார்
பொய்யாமொழியீசர் சதகம்
மகாத்மாகாந்தி சதகம் - மாப்பேராசிரியர் முத்துசுந்தர முதலியார்
மகாபாரத சதகம் - கிருட்டிணமூர்த்தி ஐயர்
மதலைச் சதகம் - பார்த்தசாரதி முதலியார்
மயிலாசல சதகம் - ப. நமச்சிவாய நாவலர்
மருந்தீசர் சதகம் - குட்டியக் கவுண்டர்
மழவைச் சிங்கார சதகம் - மகாலிங்கையர்
மனுநீதி சதகம் - இராசப்ப நாவலர்
மனுநீதி சதகம் - வேதகிரி முதலியார்
மனிவியாக்கியானச் சதகம் - வேதகிரி முதலியார்
மிழலைச் சதகம் - சர்க்கரை முத்து முருகப்பப் புலவர்
மிழலைச் சதகம் - சின்ன சருக்கரைப்புலவர்
மீனாட்சி சுந்தரேசுவரர் சதகம் - புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார்
மீனாட்சியம்மை சதகம் - மீனாட்சி சுந்தரம்பிள்ளை
முகியித்தீன் சதகம் - அப்துல் காதிறு பேகம்பூர்
முகியித்தீன் வரலாற்று சதகம் - முகம்மது நாகூர் முத்துப்புலவர்
முருகேசர் சதகம் - சீனிவாச நாடார்
மூனாசாத்து சதகம் - சுல்தான் அப்துல்காதிர் மரைக்காயர்
மெய்கண்ட வேலாயுத சதகம் - தஞ்சை அழகுமுத்துப்புலவர்
மெய்வரோதய சதகம் - வண்ணச்சரபம்
வடவேங்கட நாராயண சதகம் - நாராயணதாசர்
வடிவேலர் சதகம் - முத்துசாமிக் கவிராயர்
வரதராசப் பெருமாள் சதகம் - வேங்கடரமண ஐயர்
வானமாமலைச் சதகம் - சோ. தெய்வநாயகப் பெருமாள் நயினார்
விசுவகுரு சதகம் - பெருநகர் சண்முகாசாரியர்
விநாயகர் சதகம் - சி. இராமசாமி ஐயங்கார்
விருத்தீசுவரர் சதகம் - வாணியம்பாடி சுப்பராயப் புலவர்
விவரண சதகம் - கோனேரிதாஸ்யை
வீரட்டேசுர சதகம் - திருச்சிற்றம்பல நாவலர்
வீரபத்திரர் சதகம் - தா. சின்னத்தம்பி உபாத்தியாயர்
வீரராகவர் சதகம் - வீரராகவதாசர்
வீரராகவர் சதகம் - சின்னத்தம்பி
வேங்கடேச சதகம் - புட்பகிரி அரிதாசர்
வேலாயுத சதகம் - அழகுமுத்துப்புலவர்
வேலாயுத சதகம் - திரு. கந்தப்பையர்
வேலாயுத சுவாமிமலை சதகம் - கவிஞர் அடிகள் கு.ஆ. அரன்க்கனாதனார்
வைகுந்த சதகம்
வைராக்கிய சதகம் - சாந்தலிங்க சுவாமிகள்
வைராக்கிய சதகம் - சுவாமிநாத தேசிகர்