மீனாட்சிசுந்தரம் பிள்ளை

அருளிய

திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை

செல்வ விநாயகர்

திருவளர் கபோல மதப்பெருக் குண்டு
     தெவிட்டுகார் வண்டின மெழுந்து
மருவளர் செய்ய சாந்தினுண் மறைந்த
     மத்தக மீதுதங் கிடுதல்
கருவளர் மணிகள் பதித்தபொற் குடத்திற்
     கவினவீற் றிருந்தருள் கொழிக்கும்
உருவளர் செல்வ விநாயகன் பொற்றா
     ளுபயபங் கயமுடிக் கணிவாம்.

நூல்

பூமலி செய்ய பொலிமணித் தோடு
     புதுவெயி லெறித்துமுண் மலர்ந்த
தேமலி யாம்பற் செய்யவாய் முளைத்த
     சிறுநகை யிளநிலா வெறித்து
மாமலி குழனின் றவர்முக மலர்கண்
     வளந்தர முன்புவந் தருள்வாய்
காமலி வானும் புகழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 1

வடதிசை யவனுஞ் சமழ்ப்புறக் கனகம்
     வாய்ந்துதென் றிசைநகத் தமருங்
குடமுனி யவனுஞ் சமழ்ப்புறக் கல்வி
     கூர்ந்துமிக் குயர்ந்தவர் பலருந்
தடமலர் புரைநின் முகத்திரு கடைக்கட்
     சார்பொருங் குற்றவ ரன்றோ
கடவுளர் மனம்புக் கமர்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 2

விழிவிருந் துதவு நின்றிரு மணத்தில்
     விமலனார் கரமலர் மேற்கொண்ட்
டொழிவரு கருங்கன் மிசையுறு நின்றா
     ளுற்றவென் கரமலர் மேற்கொண்
டிழிவற வடியேன் மனக்கலி னிடத்து
     மியைந்துறு மென்றுனைத் துதித்தேன்
கழிநசை முனிவர் புகழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 3

அடியனேன் கொடிய னென்றுமுன் வருதற்
     கஞ்சினை யென்னின்வெங் கூற்ற
மடியுமுன் னுதைத்தான் றுணையடைந் தேனும்
     வருதிமற் றதுநினக் கரிதோ
நெடியவன் பிரம னிந்திரன் முதலோர்
     நித்தமும் தாழ்ந்துசூழ்ந் தேத்திக்
கடியவெவ் வினைதீர்ந் துயர்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 4

பாவிநீ நின்முன் வருவது தகாதென்
     பரிசினுக் கென்பையேன் முன்னம்
ஆவிசூழ் மதுரை யகத்துமா பாவி
     யாயினா னொருவன்முன் முக்கட்
கோவினோ டடைந்த குணத்திநீ யலையோ
     குலவது மறந்தனை கொல்லோ
காவியங் கழனி சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 5

பண்டுநீ பெருமா னருள்வழிப் புகலிப்
     பாலனுக் களித்தனை ஞான
மண்டுமற் றதனான் முழுப்புகழ் நினக்கே
     யாயதோ விரங்குபு நீயே
தொண்டுகொண் டடியேற் களித்தனை யாயிற்
     றூயநிற் கேமுழுப் புகழாங்
கண்டுநேர் மொழியார் பயிறிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 6

அளவறு பிழைகள் பொறுத்தரு ணின்னை
     யணியுருப் பாதியில் வைத்தான்
தளர்பிழை மூன்றே பொறுப்பவ டன்னைச்
     சடைமுடி வைத்தன னதனாற்
பிளவியன் மதியஞ் சூடிய பெருமான்
     பித்தனென் றொருபெயர் பெற்றான்
களமர்மொய் கழனி சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 7

பெரும்புக ழமைந்த நின்பதி யென்னும்
     பிரணவ குஞ்சர நின்கை
அரும்புவிற் கரும்பு விரும்புபு கவரு
     மடல்புரிந் தென்றுளங் குறித்தோ
வரும்புகர் முகங்கொ ளங்குச பாசம்
     வயங்குற வேந்தினை நாளுங்
கரும்புய னிறத்தோன் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 8

யானென தென்னுஞ் செருக்கிழந் தவர்மற்
     றிழப்புறார் நின்னையீ துண்மை
தானென மறைகண் முழங்கவு முணராச்
     சழக்கனே னினையிழந் துழல்வேன்
மீனென வயங்குங் கண்ணினாய் கொடியேன்
     வினைக்குமோ ரிறுதியுண் டாங்கொல்
கானென வரம்பை சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 9

விழியிடந் தப்பி மகவரிந் தூட்டி
     விருப்புறு தந்தைதா டடிந்து
பழியகன் மனையை யுதவிமற் றின்னும்
     பலசெயற் கரியசெய் தார்க்கே
மொழியுநின் கொழுந னருள்செய்வா னென்னான்
     முடிதரா தென்றுனை யடைந்தேன்
கழியுணர் வுடையார் புகழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 10

வழிபடு மடிய ராயினார் தமக்கே
     வழங்குதுங் கருணைவே றாய
பழிபடு மவர்க்கு வழங்குறா மென்னின்
     பயோதர மருதமு னன்றிப்
பொழிசுவை நறுநிர் புல்லுவர் நிலத்தும்
     பொழியுமே புண்ணியப் பொருளே
கழிதலி றென்னங் காத்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 11

கொடியவ னிவற்கு மருள்புரி யென்றுன்
     கொழுநனுக் கெனைக்குறித் துணர்த்த
முடிவிலின் னருளா லெண்ணினை யேலம்
     முதல்வனின் னூடலை யுணர்த்த
வடிபணி பொழுதி லுணர்த்திடல் வேண்டு
     மஃதுடன் பலிக்குநீ யறிதி
கடிதலில் கழகஞ் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 12

தாவருஞ் சிருக்கு மணிவடஞ் சங்கு
     சக்கரஞ் சூற்படை யிலைவே
லோவருஞ் சிறப்பின் வேறுவே றேந்து
     முண்மையால் ஒண்மல ரோன்முன்
மூவரு மியற்று மூவகைத் தொழிற்கு
     மூலநீ யென்பது தெரிந்தேன்
காவரு மலர்நல் கிடுந்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 13

தாயினைக் கொன்றுந் தந்தையைக் கொன்றுந்
     தவலரு மனைவியைக் கொன்றுஞ்
சேயினைக் கொன்றுங் கடும்பினைக் கொன்றுஞ்
     சேர்ந்தவர்க் கருள்வனின் கொழுநன்
வீயினைப் பொருவும் பதமடைந் தார்க்கே
     விருப்பினீ யருள்வதோர்ந் தடைந்தேன்
காயினைச் சுமந்த பொழிற்றிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 14

குற்றியை யடைந்த பசும்புலை யுழுநர்
     கொடியவன் னாஞ்சிலென் செயுமப்
பெற்றியி னின்னை யடைந்தநா யேனைப்
     பிறையெயிற் றந்தகன் கரத்துப்
பற்றிய தண்டப் படைசெய லென்னே
     பரவிய கருணைவா ரிதியே
கற்றிணி மதில்கள் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 15

முடிமிசை யொருமந் தாகினி வாழ
     முதல்வன்வைத் திடுதலிற் சிறந்த
கொடியவ ளென்றி யார்நினைப் பவர்கா
     கோதரம் எருக்கெலும் பாதி
படிதரு மிடத்திற் சற்றிட முடம்பிற்
     பாதியோ விடமருட் டாயே
கடிமலர்த் தடங்கள் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 16

பெருவள னமைந்த நீருருவாய
     பெருந்தகை நீருரு வாய
ஒருகுல மகளை மலர்மிசைத் தேவு
     முணர்தராக் காட்டிடை மறைத்தான்
அருகுநுண் ணிடைநிற் கஞ்சியே யன்றே
     லணியுருப் பாதிமற் றிலையோ
கருமுகி றவழு மதிற்றிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 17

அலையடி யடைந்த வகத்தடி நிலையா
     தலையடி யேற்கிரங் குபுபுன்
தலையடி சூட்டிப் பிடியடி யென்பான்
     றடியடி விலக்கியா ளிமய
மலையடி யுதித்து வளர்ந்துவெண் ணாவன்
     மரத்தடி வாழ்பவற் புணர்ந்தாய்
கலையடி யுணர்ந்தார் புகழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 18

இருவினைச் சிமிழ்ப்புண் டுழல்கொடி யவன்மற்
     றிவற்கரு ளென்றிரங் குபுநின்
ஒருமுத லவனுக் குணர்த்துதி வருத்த
     முன்னலுன் பரிசினுக் கடாது
வருபசுங் குழவிக் குறுபிணி தீர்க்கு
     மருந்தனை யன்றியார் நுகர்வார்
கருமுகி லுறங்கு மதிற்றிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 19

எடுப்பது பிச்சை யேந்துவ தோடாங்
     கியக்குவ தொற்றையே றரைக்கண்
உடுப்பது புன்றோன் மற்றிவர் மனையா
     யுற்றநீ யுயிர்வயிற் றழலாய்
அடுப்பது தவிர வூட்டுத லாதி
     யறமெலாம் வளர்ப்பையீ தழகே
கடுப்பது தவிர்ந்த மதிற்றிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 20

முற்றவம் புரிந்து முழுமலந் துமித்த
     மோனமெய்ஞ் ஞானிய ரன்றி
மற்றவர் கவரப் படுங்கொனின் கருணை
     வானகத் தெழுமதிக் கதிரை
நற்றவம் புரிந்த சகோரமோ கொடிய
     நவில்கருங் காகமோ கவரும்
கற்றவர் புகழ்ந்து சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 21

தொண்டவாய் மனமா திகளொருங் குய்க்குந்
     தூயவ ரன்றிமற் றோரும்
அண்டரா தியரு மணுகரு நின்றா
     ளடைவரோ வளவறு மேன்மை
கொண்டவான் கங்கை யடைவதோ திமமோ
     குரண்டமோ குணப்பெருங் குன்றே
கண்டவர் பவங்கா ணாத்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 22

இடையறா வன்பின் மெய்கொடு துதிப்பா
     ரின்றுதி முன்னர்மெய்ந் நிழல்போல்
புடையறா வினையேன் பொய்கொடு துதிக்கும்
     புன்றுதி யெங்ஙன மென்னில்
நடையறாத் தேமாங் குயிற்குர லெதிரோ
     ரரிட்டமுங் கதறுதல் பொருவும்
கடையறா மருதஞ் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 23

மறைபல துதிக்கு நின்பெரும் புகழை
     வழுத்திய வான்றவர் நாவும்
அறையுமோ மற்றைப் புல்லிய தெய்வந்
     தமைபுக ழறையுமே லினிமை
நிறைதரு கருப்பஞ் சாறவா வியநா
     நிம்பநெ யவாவுதல் போலும்
கறையறு வளமை மலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 24

மனைதொறு மிரப்புத் தொழில்கொடு புகுவார்
     மறலித னாலயம் புகுவார்
நினைதர முடியாக் கருக்குழி பலவு
     நிரம்பற வோடுபு புகுவார்
இனையவர் புகாநின் றிருப்பெருங் கோயி
     லேழையேன் புகவருள் புரிவாய்
கனைகடல் வாவி சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 25

எண்ணருங் கொடிய பாதகம் பலவு மியற்றுமா
     பாவியா னெனினும்
நண்ணரு நினது திருவரு டோயி னண்ணுத
     லரிதுகொல் புனிதம்
பண்ணருங் கொலைசெய் வாளும்பொன் னாமே பரிசன
     வேதிதீண் டுதலால்
கண்ணருங் கழனி சூழ்திரு வானைக் காவகி
     லாண்டநா யகியே. 26

முழுவதுங் குணமே நாடின்முற் றாது முகுந்தனா
     தியரிடத் தினுநீ
பழுதற வுணர்த்தா விடினுணர் வாரோ பரமனைப்
     பண்டவர் புரிதோம்
எழுதரி தவரு மின்னரே லம்ம வென்செயல்
     யாதெனப் புகல்கேன்
கழுவிய மணியிற் சூந்திரு வானைக் காவகி
     லாண்டநா யகியே. 27

உலகிடை யழுத பிள்ளைபால் குடிக்கு முண்மையென்
     றுரைப்பதற் கேற்ப
இலகுசீ காழி மழவழ வளித்தா யின்முலைப்
     பாலழா விடினும்
அலகற விரங்கி யளிப்பவ ரிலையோ வத்தகு
     மழவியா னருள்வாய்
கலகமில் கழகஞ் சூழ்திரு வானைக் காவகி
     லாண்டநா யகியே. 28

அழமழ வொன்றற் களித்தனன் றீம்பா லம்பலத்
     தாடிய பெருமான்
பழுதற நீயு மளித்தனை தீம்பால் பசித்தழு
     மிளமழ வொன்றற்
கெழுதரு மிவற்றா னினக்குறு புகழ்போ லெம்பிராற்
     குண்டுகொ லியம்பாய்
கழுமணிச் சிகரி பொலிதிரு வானைக் காவகி
     லாண்டநா யகியே. 29

இடையறா வன்பு பெருக்கிநீ பூசை யியற்றிட
     வினிதுள முவந்து
சடையறா முடியோ னுறைதரப் பெற்ற தண்ணிழ
     னாவலந் தருவோ
புடையறா தமர ருறை தரப் பெற்ற பொலந்தரு
     வோசிறந் ததுகட்
கடையறாக் கருணை யாய்திரு வானைக் காவகி
     லாண்டநா யகியே. 30

சிறுபிறைக் கொழுந்து வீற்றிருத் தலினாற்
     றேவதே வன்றிரு முடிமேல்
மறுவிலச் சுவடு பொலிதரு மைய
     மருவுறா தஃதுமற் றெவர்க்கும்
உறுமறைக் கரிய நின்னடி யகத்து
     மொளிருமச் சுவடுகா ரணமென்
கறுவொழித் துரைப்பாய் புகழ்த்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 31

எதிர்மலர் தொடுத்த மாரவே ளுடல
     மெரிக்குண வாக்கிய பெருமான்
அதிர்வரு மெய்யிற் பாதிநீ கவர்ந்தா
     யமைதர முழுவதுங் கவர்ந்தால்
உதிர்தலி னினது திறமையா ருணர்வா
     ரோங்கவன் வியாப்பியப் படலால்
கதிர்படு மிதுவே யருடிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 32

தவவலி யுடையோர் பலரையு மயக்கிச்
     சடைமுடி யோனெதிர் மயங்கி
இவருமம் மயக்காற் புணர்ந்தொரு மகவு
     மீன்றமான் மோகினி தனித்துப்
பவர்படர் வனம்புக் குறைதன்மற் றவன்மெய்ப்
     பாதிநீ கவர்ந்ததோர்ந் தன்றோ
கவலரும் வளமை மலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 33

நீயெனப் பெருமான் விரும்பியோர் தினத்து
     நிகழ்தரப் பொலிவதும் புவிக்குத்
தாயெனப் படுநீ யவனெனப் பொலியுந்
     தன்மையும் வேறலே மென்று
சேயெனப் படுபல் லுயிர்க்கெலா முண்மை
     தெரிப்பது போலுமீ தருளே
காயெனப் பவமுற் றகழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 34

பரவுநங் கருணை வான்றவ முடையார்
     பாலலாற் புன்மையோர் பாலும்
விரவுமோ வென்னி னெழுபெரு வெள்ளம்
     விரிதரு வாரிதி மட்டோ
உரவுநீ ருறவி யளையினும் புகுமே
     யுவமையில் கோமளக் கொழுந்தே
கரவுதீர் முனிவர் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 35

சடையெனும் வனத்து வாழ்தருங் கங்கை
     தனித்துறை வாள்கொலென் றெண்ணி
விடைமிசைப் பெருமா னவளுயிர் வாழ்வான்
     மிலைந்தனன் கொன்றையாங் கன்னப்
பெடையன நடையா யனையவன் றனைநீ
     பித்தனென் றெண்ணுதல் பிழையே
கடையுறா வளமை மலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 36

பரவுறு முலகத் துயிரெலா மீன்று
     பருவர லவையுறா தோங்க
உரவுறு கருணை யால்வளர்த் திடுநீ
     யொருமலை மகளென வுதித்து
விரவுற் புறவு கிளிமயில் பூவை
     விரும்புபு வளர்த்தவா றென்னே
கரவுறு மவர்கா ணாத்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 37

பரிதிவந் துதய மெழமுறுக் குடையும்
     பங்கய மலர்மிசை யுறைவார்
அரிமறு மார்பு மயன்றிரு நாவு
     மமர்பவ ரென்பர்நின் முகமாம்
விரிமலர்க் கமலத் துறைவரென் றுணரார்
     மேதினி மடமையென் சொல்கேன்
கரிசறு வளமை மலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 38

விரும்புநின் செங்கை தாங்கலா லிரண்டாம்
     வேற்றுமை விரித்துரை செய்யா
தரும்புதா மரைதாங் குவாரென லான்மூன்
     றாவதும் படுசொலும் விரிக்கும்
பெரும்புவி மலர்பூ மாதெனும் பெயர்கள்
     பெறும்வினைத் தொகைகுணத் தொகைப்பேர்
கரும்புபைங் கமுகிற் பொலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 39

நந்திய வறியா மையினினைத் துதிப்பே
     னாயினே னாயினு மதனால்
முந்திய வினைமுற் றொழிதரா துறையு
     முறைமையென் மறவியி னேனும்
உந்திய வழலைத் தொடிற்சுடா துறுங்கொ
     லொழிவருங் கருணைவா ரிதியே
கந்திதென் பொருவப் பொலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 40

அங்கையேந் துறுபைங் கிள்ளையின் மொழியோ
     வறுமுகக் குழவிவாய் மொழியோ
சங்கையே குழையாக் கொண்டவ னூட
     றணித்திடப் புகலுமின் மொழியோ
மங்கைநின் செவிக்கு நாயினேன் புன்சொன்
     மற்றுநீ யிரங்கலெவ் வாறோ
கங்கைதாழ் பொன்னி சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 41

ஒப்பினின் புகழே கேட்கவென் செவிகண்
     ணோங்குநின் னுருவமே காணத்
தப்பினின் றனையே பாடிட வாய்கை
     தவாதுநின் னடிப்பணி யாற்ற
இப்படி யுறுமேற் செங்கதி ருதய
     மெத்திசை யெழினுமற் றென்னே
கப்பிணர்த் தருக்கள் சூந்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 42

ஓதுறு முறைமை யொன்றின்முன் மூன்று
     ளொருசிறி யேற்குநின் பதிக்கும்
போதுறு குழனீ நடுப்பொலி தலினாற்
     புரிந்துநின் பதியொடு மெனைப்பின்
றீதுறு மிரண்டி னீக்கியொன் றாக்குந்
     திறனினக் கன்றியார்க் குளது
காதுறு கண்ணார் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 43

கோவண மறையாக் கொண்டனன் பெருமான்
     கொண்டனை நீயுமே கலையாத்
தூவண வவன்மா தேவன்மா தேவி
     துதிக்குநீ யெனிற்றிரு நெடுமா
லேவண வவற்கு நீவியாப் பியமென்
     றிசைப்பதெங் ஙனமருட் டாயே
காவண மறுகு மலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 44

பொறியரி தொடரு மருமலர்த் தாளோன்
     பொலியனந் தொடர்சடா முடியோன்
அறியுநின் கொழுநன் பொறியரி தொரு
     மலர்க்குழ லினைநடை யன்னம்
சேறிதரத் தொடர்மென் பதத்தினை யெனினீ
     தேவொடு மாறுளாய் கொல்லோ
கறிபயி லளிசூழ் பொழிற்றிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 45

திருந்துறு தந்தை யாகிய வரையைத்
     திரிபுர மெரித்தநாட் குழைத்த
பெருந்திற லுணர்ந்தம் மலையுள மகிழப்
     பெருந்தகை நிறமுலைக் கோட்டல்
பொருந்துறக் குழைத்தாய் போலுநின் றிறமை
     புகலுதற் கடங்குமோ தாயே
கருந்துழாய் மார்பன் புகழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 46

மறைமுதல் பொருவ வேந்தினை நீயு
     மலர்புரை தருகையில் வன்னி
உறைதரு மனையா னிறமுநின் னிறமு
     மொத்தன வாயினு மவன
தறைதரு மெழுநா வதுநின தொருநா
     வதுசெவி யவாமொழி யதுதான்
கறையற வெதுநீ புகறிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 47

குடகட லொடுங்கு மிரவிதண் மதியங்
     குணகட லுதிக்குமென் றுரைக்கும்
படவர வேந்து முலகநின் னொருகைப்
     பங்கயத் தொடுங்குநின் கொழுநன்
தடமலர் வதனத் துதிக்குமென் றுணராத்
     தன்மையென் மென்மைசான் மயிலே
கடவுளர் பலருஞ் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 48

பெருவழக் கெடுத்துப் பேரவை யேறிப்
     பேசுவ குறையறப் பேசி
ஒருதிரு நாவ லூரனை யாண்டா
     னோங்குவெண் ணாவலூ ரண்ணல்
அருளொடு நீயு மத்தகு செயலொன்
     றாற்றினன் றென்றியா னினைந்தேன்
கருளற வொளியின் மலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 49

முதுபுக ழுடைநின் பதியிரு பாத
     முழுமலர்க் கருச்சனை யாற்றின்
மதுமல ரொன்று குறையினு மதற்கு
     மாறுகண் ணிடந்திடல் வேண்டும்
அதுசெய மாயோ னல்லன்யா னின்பொன்
     னடியருச் சனைசெய்வான் புகுந்தேன்
கதுமென வருள்செய் தருடிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 50

தருமமென் றுரைக்கு மளியமர் நின்கைத்
     தாமரை மலரின தலர்ச்சி
பெருமதி மலர்ச்சி மாற்றுமென் றுரையார்
     பெருமதி யலர்ச்சியே செழித்த
மருமலி கமல மலரின தலர்ச்சி
     மாற்றுமென் றுரைப்பரீ தென்னே
கருணையங் கடலே யருட்டிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 51

நீவினோ தத்தா னின்பதி முகக்க
     ணிகழ்கைசேர்த் தெடுத்திடுங் காலம்
ஓவிய மனையாய் கணமுமின் றுனக்கஃ
     தும்பரா தியபல வுயிர்க்கும்
மேவிய கோடி யுகம்பல வாமவ்
     விநோதநீ யாற்றுத றகாது
காவியங் கண்ணார் பயிறிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 52

தென்னவன் புரிந்த பெருந்தவப் பேற்றாற்
     செழுந்தழ லகத்தொரு மகவே
என்னநீ யுதித்த வாஞ்சையுட் குறித்தே
     யிறைநுதற் கண்புதை யாது
மன்னமற் றிருகண் புதைத்தனை நின்னை
     மதிக்குல மென்பதோர்ந் திலையோ
கன்னவி றோளார் பயிறிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 53

அரும்புமேர் நின்கைக் கணிபல வணிந்துள்
     ளவாவொடு தாங்குமா தர்களை
விரும்புபு சுமக்கு மெல்லிதழ்க் கமல
     மெய்த்தவ முடையன வெனவே
இரும்புவி புகன்றா லனையமா தர்கட
     மிருந்தவப் பெருமையென் புகல்கேன்
கரும்புநேர் மொழியார் பயிறிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 54

சிலம்பகத் துதித்த நின்னடி தற்சூழ்
     சிலம்பகத் துதித்தமா தரைவல்
வலம்பகப் பொலியு முலையினா யங்கை
     மலரகத் துதித்தமா தென்ன
வுலம்பகப் பொருதோ ளரன்முடிக் கொளாமை
     யுணர்ந்தன்றோ வூடலிற் றாக்குங்
கலம்பக முலாமுற் புனைதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 55

பெரியவர்க் கிடுக்கண் புரிவதை யுணர்ந்து
     பெரும்புகழ்த் தந்தைதன் மரபென்
றரியவர் சிந்தை யாலயம் புகுவா
     யயர்ந்துமெண் ணாமல்வண் குறிஞ்சிக்
குரியவன் கரத்துப் புகூஉக்குரு குப்பே
     ரொருவரை கொன்றனை யழகே
கரியவன் பிரமன் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 56

நினையுணர் மகடாய் மரபென வொருமா
     னெடுங்கையேந் தினன்பெம்மா னம்மான்
தனையுணர் மகன்றாய் மரபெனக் கிள்ளை
     தன்னைநின் கையிலேந் தினையால்
வினையுண ரார்சொன் னீயுநின் பதியும்
     விரும்புறு மாடலென் னுரைக்கேன்
கனையுண ரளிசூழ் பொழிற்றிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 57

பொலிதரப் பசந்து நீர்மழை யெங்கும்
     பொழியுமே புயலது போல
மலிதரப் பசந்து நீயும்வண் கருணை
     மழைபொழி குவைகொடு வினையான்
மெலிதர லுற்ற வெனையொழித் திடுவான்
     விதியெவன் விமலமெய்ச் சுடரே
கலிதரு துயர்சா ராத்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 58

நறையிலா மலரோ நயமிலா மொழியோ
     நயனமில் லாதவண் முகமோ
பொறையிலாத் தவமோ மகவிலா மனையோ
     புனலிலா வோடையோ நீதி
முறையிலா வரசோ மதியிலா விரவோ
     மூடனேன் பத்தியில் பாடல்
கறையிலா வளமை மலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 59

குணமிலேன் மொழிபா நயமில தெனினுங்
     குறித்ததை யேற்றருள் செய்ய
இணர்மலி குழானிற் கேதகுஞ் சிலம்பி
     யியற்றுநூற் பந்தரு முவந்து
புணரருள் புரிந்தா னின்பதி யந்தப்
     புராணநீ யோர்ந்தனை யன்றே
கணமலி முனிவர் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 60

வரிவிழிக் குடைந்த மானையு நுதற்கு
     மானுறாப் பிறையையு மல்குற்
கிரிதரும் படவெவ் வரவையு மருங்குற்
     கிணைதராத் துடியையுஞ் சுமந்தான்
துரிசறு வனப்பார் நின்னுறுப் பினுக்குத்
     தோற்றறும் விசேடமென் றுணர்ந்தே
கரியகண்டத்தோ னருட்டிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 61

பொறையரு ளடக்க மன்புப சாரம்
     பொலியுமா சாரநல் வாய்மை
அறைதரு மின்ன குறையுளே னெனினு
     மடிமையே நினக்கியா னுறுப்புக்
குறையுடை யாரு மக்களென் றெடுத்துக்
     கூறுவ ருலகர்நீ யுணர்வாய்
கறையற விளங்கு மருட்டிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 62

உரைசெய்வெண் ணாவ னிழலுறை பெருமா
     னோங்கருண் முறைசெலுத் தியகோன்
விரைசெய்பூங் கொன்றை யவனென நீயும்
     விருப்பொடு செலுத்திடல் வேண்டும்
புரைசெயென் பாலே மற்றது செலுத்திற்
     பொருப்பின்மே லிடுசுடர் போலாம்
கரைசெயா வளங்கண் மலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 63

புண்ணிய வெள்ளை நாவலோ னாரம்
     பூண்டவ னெனும்பெயர் புனைந்தான்
தண்ணிய குணத்து நீயுமென் பாட
     றழுவுபு பூணுவை யாயின்
அண்ணிய பாடல் பூண்டவ ளெனுமோ
     ரரும்பெயர் நினக்குமுண் டாமே
கண்ணிய வரங்க டருதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 64

தழைசெய்வெண் ணாவ னறுநிழ லுறைவான்
     றனிமுத லவனொரு பாகத்
துழைசெயொள் விழியா யுறைகுவை நீமற்
     றுன்னடி நிழலிலெஞ் ஞான்றும்
விழைசெயா னுறையப் புரிந்திடி னதனான்
     மிக்கபுண் ணியநினக் குண்டே
கழைசெய்பூங் கழனி பொலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 65

பிரம்படி பட்டுங் கல்லடி யேற்றும்
     பிறைபொரு வில்லடி கொண்டும்
நிரம்புற வருள்வா னோங்குவெண் ணாவ
     னிழலுறை பவனடி யார்பா
லுரம்பயி லவன்போ னீயவ்வா றேற்றின்
     புதவுந ளல்லண்மெல் லியனீ
கரம்பறு கழனி மலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 66

பற்பல ரறியப் பித்தனென் றெள்ளிப்
     பனவபோ வென்றுளார் தமையும்
பொற்பலர் பெருமான் விடாமென வாண்டு
     புரந்தன னங்ஙன மின்றி
வெற்பலர் மருந்தே துதித்துவா வென்னும்
     வினையினேன் றனைவிட விதியென்
கற்பலர் நந்த வனத்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 67

தேவியோ டினிது வந்தருள் புரிந்தான்
     சிவனடி யார்க்கென்ப தன்றி
ஆவிநேர் கொழுந னோடுவந் தாண்டா
     ளம்மையென் பாரிலை யன்னே
மேவியச் சீர்த்தி நினக்குறா விதமென்
     விளம்பிட வேண்டுநா யேற்குக்
காவியார் தடஞ்சூழ் தருதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 68

அடியவர் குறிப்போர்ந் தாண்பனை காய்க்க
     வாற்றெதிர் செல்லவே டென்பின்
பொடிமட வரலா கக்கராம் விழுங்கும்
     பொருடரச் செய்தனன் பரமன்
கொடியனேன் குறிப்போர்ந் துன்னடிக் கன்பு
     கொளப்புரி வதுமுனக் கரிதோ
கடிமலர்த் தடங்கள் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 69

அயனரி குலிச னமரருண் ணடுங்க
     வடர்ந்தெழுங் கொடுவிடம் வாங்க
நயனமூன் றுடையா னுண்டனன் முன்னே
     நங்கைநின் பவளவா யமிர்தப்
பயனுணர்ந் தன்றோ வலனெனி னனைய
     பரமனெவ் வாறுணத் துணிவான்
கயன்மலர்த் தடங்கள் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 70

ஒளிமிகு சம்பு லிங்கநா யகர்போ
     லுடையையா னுதல்விழி நீயும்
அளிமிகு மனையார் மாரனை யெரித்தார்
     யாரைநீ யெரித்தனை யம்மா
விளிமிகு நாயேன் வினையினை யெரித்தா
     லிரும்புக ழவரினு நினக்காங்
களிமிகு மமரர் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 71

நெடுவலி கொடுமா மேருவிற் பிடித்தாய்
     நீயஃ துணர்குவன் யானும்
அடுதிறற் சூலி பிடித்தன னென்பா
     ரவனியுட் சிலர்கருத் தென்னோ
இடுகிடை நீயு மவனும்வே றல்லீ
     ரென்பதை யுணர்ந்தனர் கொல்லோ
கடுவிழி மடவார் பயிறிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 72

அம்பலத் தாட வெடுத்ததா டுணையென்
     றறைவனோர் கான்மலை யரையன்
வம்பலர் முன்றிற் றிருமணத் தம்மி
     வைத்ததா டுணை யென்ப னோர்காற்
செம்பொரு டுணியா னென்றெனை யிகழேல்
     தேர்ந்தொரு வழிநின்றே னன்னாய்
கம்பலர்த் தடஞ்சூழ் தருதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 73

எதிரறு பொதுவிற் குறட்பிணர் வெரிந்மே
     லியைத்திட றகாதென வுணர்ந்து
முதிருணர் வுடைய பரன்மறைச் சிலம்பார்
     மொய்வலத் தாணிறீஇ யிடத்தாள்
அதிர்வர வெடுத்தான் வழுதியவ் வருமை
     யறிதரான் பிழைத்தனன் பொறுத்தாய்
கதிரருட் கழகே யதுதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 74

பரவுவெண் ணாவ னீழலோ னிடத்தாள்
     பற்றிய வென்முனங் குறுக
உரவுசெய் தண்ட தரனுள நடுங்கு
     முதைத்ததத் தாளென வுன்னி
விரவுமப் பதநின் பதமன்றோ வதனை
     மென்பத மென்பதென் விளம்பாய்
கரவுறாப் புலவர் புகழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 75

ஒருகருங் கேழ லுருவெடுத் திணையி
     லுன்பதி யடிமலர் காண்பான்
பெருநில மகழ்ந்த மாயவ னினது
     பிறங்குபே ராலயஞ் சூழ்ந்த
பொருவினீ றிட்டான் மதிலடி கண்டாற்
     போதுமே புண்ணியக் கொழுந்தே
கருகடிந் தொளியின் மலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 76

உயன்மறந் தடருந் திரிபுரஞ் சிதைப்பா
     னொருவரை யெளிதினிற் குழைத்த
பயன்மதி முடித்த பாடல்சால் பெருமான்
     பாழியந் தடநெடுந் தோள்கள்
வியன்முலைக் கோட்டாற் குழைத்தரு ணினக்கு
     மெல்லிய லெனும்பெயர் தகுமோ
கயன்மலர்த் தடங்கண் மலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 77

மையவாண் மகனெள் ளெச்சிலுண் டாற்கு
     மகிழ்ந்தருள் செய்துநின் கொழுநன்
மெய்யவாஞ் சீர்த்தி படைத்தன னெனக்கு
     விரும்பிநீ யருளுவை யாயின்
ஐயபெண் மகளெள் ளெச்சிலுண் டானுக்
     கருளினா ளெனும்புகழ் நினக்காம்
கையர்வந் தணுகற் கருந்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 78

புனல்பயி றவளை முழங்கநின் கொழுநன்
     புகழ்ப்பெய ருரைத்ததா வுணர்ந்து
மினல்பயில் கனகம் வீசினா னொருவன்
     மெய்மையே நின்பெய ருரைக்கு
முனல்பயில் குழாம்பு கேன்றொழேன் புகழேன்
     உவந்திடேனெங்ஙன முய்வேன்
கனல்பயின் மணிமா மதிற்றிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 79

மாவியல் பெருமான் மான்பிறை சுமந்தேன்
     வாமபா கத்தினி தமரு
நீவிளை யாடற் கென்பனம் பற்க
     நிகழஃ திடைமரு தூரின்
மேவியோ ரரசில் விழுங்கிய தாதி
     வெறுப்பன மறைப்பதற் கென்று
காவியங் கண்ணா யுணர்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 80

அண்டகோ டிகளென் றுரைத்திடுஞ் சிற்றி
     லமைத்தமைத் தாடிடு வாய்நீ
துண்டவாண் மதியஞ் சூடிய சடிலச்
     சுந்தர னழித்தழித் தாடும்
பிண்டநூ லென்றும் பேதைநீ யனையான்
     பித்தனென் றுரைப்பது மெய்யே
கண்டவா மொழியார் பயிறிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 81

மகளென நினைந்து தாயென விளித்த
     மலையிறை மனையறி யாமை
புகரறு பிரமன் முதற்பல வுயிர்க்கும்
     பொருந்துதா யாமுனைக் கணேசன்
அகநகு முருகக் கடவுடா யென்று
     நவிலறி யாமையை யேய்க்குங்
ககனமே லோங்கு மதிற்றிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 82

இலங்கற முப்பத் திரண்டென வகுத்தாங்
     கிகலற வவையெலாம் வளர்த்து
மலங்குயிர் பலவும் புரக்குநீ கொடியேன்
     மாட்டருள் புரியினஃ தவற்றுள்
துலங்குமொன் றொடுசே ராதுகொ றனிப்பிற்
     சொற்றிமுப் பத்துமூன் றென்றே
கலங்கலில் வளமை மலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 83

இளைத்தடைந் தேனை யாடியென் றுனையா
     னிரந்திரந் தேத்தநீ யிரங்கி
வளைத்தபே ரருளா லாளுவ தனிலு
     மன்றநீ யேயருள் புரிந்தால்
முளைத்தசீர் பரவ விடமிலை கேட்டோ
     முகின்மழை வழங்கிடுந் தாயே
களைத்தடஞ் சிகரி சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 84

பிழைபல வுடையே னாயினு மவற்றைப்
     பேதைநீ யென்பதற் கிணங்கக்
குழைமனத் தகற்றி யாளவே வேண்டுங்
     கூர்ந்தினி தாண்டிடா யென்னின்
மழைமலர்க் கூந்தற் கங்கையைப் புகழ்வேன்
     வைவரே நொந்தவர் தாயே
கழைமலி கழனி சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 85

சடைமிசை மாதை நோக்கியா ரெனினீ
     சங்கர னீரென்பான் முகமுன்
இடைதெரி தரலென் னென்னினோக் குறுநின்
     னெழின்முக முதனிழ லென்பன்
உடையநா யகிநீ மறுத்திடிற் பிறரா
     லுணரென்பா லுணரவல் லவர்யார்
கடையுற லொழிந்த வளத்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 86

எனக்கருள் செயினின் கொழுநனைப் புகழ்வே
     னிமயநின் றந்தையைப் புகழ்வேன்
மனக்கினி தாநின் மைந்தரைப் புகழ்வேன்
     மலரினின் றோழியர்ப் புகழ்வேன்
நினக்கினி யவரா மடியரைப் புகழ்வே
     னின்னையும் புகழுவேன் றாயே
கனக்கடி மதில்சூழ் தருதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 87

பூவண நகரிற் பொன்னனை யாளிற்
     புகுந்தனன் முன்புகா மாரி
தூவண வன்பி னைந்திணை யெனுநூல்
     சொற்றதை விளக்கின னென்னின்
மாவணத் தளிர்நேர் மேனியா யுலக
     மாதுகொ னீவிடை யிதற்கென்
காவண நிறைவீ தித்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 88

பேயொடு நடிக்கும் பித்தனே யென்றோ
     பெருங்கதி யிலியிவ னென்றோ
தாயொடு தந்தை யில்லவ னென்றோ
     தம்பிரா னொருதிரு மேனி
நீயொரு பாதி நின்முனோர் பாதி
     நிலவுறக் கொண்டது நன்றே
காயொரு வாத்தென் பொலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 89

மோகினி யுருக்கொண் டொருதரம் புணர்நின்
     முன்னவன் றனக்குமோர் பாதி
ஏகலி லெழினின் றனக்குமோர் பாதி
     யெம்பிரான் மேனியி லென்றால்
ஆகிய நீயே யவனெனத் தெரிந்தே
     னல்லையென் றாற்பொறுப் பாயோ
காகனஞ் சுமக்கும் வளர்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 90

பல்லுல கீன்ற நின்றிரு வுதரப்
     பாலுள தென்னுநின் னிடைநே
ரொல்லுமா றிலதா யினுமொரு பக்க
     மொத்தலிற் சிருட்டியை யாற்றும்
வெல்லுநா யகன்கைத் துடியெனி னின்றன்
     மெல்வயிற் றிற்கது புகழோ
கல்லுமா மலத்தர் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 91

வண்படு கருப்புச் சிலைகொடு நெடிய
     வலிபடு மேருவிற் கொண்ட
தண்படு மதியஞ் சூடியைப் பொருது
     சயம்படு நகைபுரிந் துவப்பாய்
ஒண்படு வலர்க்குப் பசும்புல்வன் படையென்
     றுரைப்பதை விளக்கினை தாயே
கண்படு மனச்செய் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 92

தேவிநின் னிடைதோ ளொத்திடு குணத்தாற்
     சிதம்பர தலததும்வேய் வனத்தும்
மேவிய நகைமுத் தணிமுலை யொக்கும்
     விதத்தினாற் றிருமுல்லை வாயில்
பாவிய கயிலை யிடத்தும்வீற் றிருப்பன்
     பரன்றலை மதியனே யன்றோ
காவியன் ககன முறுந்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 93

சுவைபடு கனிசெய் பனசநெட் டரம்பை
     சூதமா மலகம்வெண் ணாவல்
இவைமுதற் பலவான் றருநிழ லுறைவா
     னினியநின் மொழிச்சுவை யவாவி
நவைபடு கொடிய வச்சிர வனமு
     நயந்தனன் பித்தனா தலினாற்
கவைபடு சூலி யெழிற்றிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 94

இறையவன் வாமத் துறையுநீ தொழில்செ
     யிமையவர் தருப்பணங் காட்ட
மறைவின்மற் றதனை நோக்கியவ் விறைவன்
     வலப்புறத் தொருமடக் கொடிநன்
குறைவதென் னெனமற் றவனொடு பிணங்கே
     லுற்றுநோக் கிடிற்பிழை யில்லான்
கறைமலி களத்தன் வளத்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 95

கொடியது பிறத்த லதனினு மம்ம
     கொடியதே யிறத்தலிவ் விரண்டுந்
தடிதர நினைந்தேன் றந்தைதா யில்லான்
     றறுகண்வெங் கூற்றுதைத் தாற்குன்
அடியனென் றுணர்த்தி யருள்விலக் குவையேல்
     அகிலமீ தொருகதி யுண்டோ
கடிமலர்த் தடங்கள் சூழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 96

தடியுண லென்றும் வனசரர் பெருமான்
     றருதடி மிசைந்தன னொழிக
மிடியிடை யவர்மா லென்றுநிற் களித்தான்
     மேனியிற் பாதியா தலினாற்
படிவிதி விலக்கி லான்பர னென்னைப்
     பற்றியா டற்கவை குறியான்
கடிதரா துணர்த்து நீதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 97

வரக்கருங் கொண்மூ மழைபொழி யாதேன்
     மண்பயி ருயும்வகை யுண்டோ
திரக்கடுங் கவலை சிதைதரப் பல்காற்
     செய்யும்விண் ணப்பம்நீ யுணர்ந்தும்
இரக்கமில் லவள்போ லிருத்தியேற் கருணை
     யெங்கினி யிருப்பது தாயே
கரக்கரும் வளங்கண் மலிதிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 98

மாயவ னாயோர் பாத்யில் லவளாய்
     மற்றொர்பா தியுங்கவர்ந் தனையால்
நாயகன் மேனி யெனினவன் வடிவ
     நாடொறு மறைந்ததா யிருக்கச்
சேயமண் சத்தி மயமெனா தந்தோ
     சிவமய மென்பதென் னுரையாய்
காயமீ தெழுந்த மதிற்றிரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 99

பனிபடு நின்றாட் பங்கயம் பொங்கு
     பனிவரை யகநக நிகழும்
துனிபடு பொழுது பரன்முடி மதியந்
     துண்ணெனத் தாக்குநீர் வாவி
நனிபடு முட்டாட் பங்கயம் பெறுமோ
     நவின்றன விணையிலென் றுணர்ந்தேன்
கனிபடு பொழில்விண் கமழ்திரு வானைக்
     காவகி லாண்டநா யகியே. 100

திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை முற்றிற்று