உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்டலிங்க குறுங்கழிநெடில் எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் பொன்செய்வா ணிகர்போ லெவ்வழி யானும் புண்ணிய மீட்டினு மறிஞர் கொன்செய்பா தகமே புரிந்தன னின்றாள் குறுகுவ தென்றென விரங்க முன்செய்தீ வினையோ கனவினு மறமே மொழிகிலேன் களித்திருக் கின்றே னென்செய்கோ மறலிக் கென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. 1 மென்னிழற் றருவை யடைபவர் தம்மை விடாநிழல் விட்டிடு மாபோ னின்னடிக் கமல மடைந்திடிற் றொடர்ந்து நீங்கலா வினையுநீங் குறுமே கன்னலிற் கனியிற் சுவைதரு மமுதே கண்மணி யேயருட் கடலே யென்னுயிர்த் துணையே யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. 2 முந்திரு வினையுந் தமவென விருப்பின் முற்றவற் றின்பயன் றருவாய் வந்தவை நினவென் றிருப்பினங் கவற்றை மாற்றிவீ டுறவருள் குவையே நிந்தையி லென்னெஞ் சுனதுநெஞ் சென்மெய் நினதுமெய் யென்றனிந் தியநின் னிந்திய மெனக்கொண் டென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. 3 கண்ணுடைக் குறையாற் சுடர்பல வாகிக் காட்டல்போற் காரண முதலாப் பண்ணுடற் றிறஞ்சே ரென்றிருக் கதனாற் பலவுரு வாயினை யொருநீ பெண்ணுருப் படைத்த பேரரு ளிடப்பால் பெற்றிட வுகந்தளித் தவனே யெண்ணிடைப் படாம லென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. 4 பிறவிமா மிடியன் றானெதிர் கண்ட பெறற்கரி தாயவைப் பென்ன வறிவிலே னயன்மாற் கரியநின் றன்னை யம்மவோ வெளிதுகண் ணுற்றேன் றுறவினோ ருள்ளத் தெழுந்தொளி பரப்பித் தொல்லிருள் கடியுமெய்ச் சுடரே யிறைவிகூற் றுடையா யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. 5 நினக்குறு கூறா மென்மன மதனை நிறைவளைத் தளிர்க்கைநெட் டிலைவேற் சினக்குறு மலர்க்கட் பேதையர் கொளாமற் செறிந்துநீ யேகவர்ந் தருள்வாய் புனக்குற மகட்கு மயல்கொடு திரிந்த பொறிமயிற் குமரனைப் பயந்தோ யெனக்குறு துணையா யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. 6 அன்பினுக் கன்றி நான்புனை மலருக் கருளுவை யலைமலர்க் கருளின் முன்படுத் தெறிந்த சாக்கியன் கல்லின் முருகலர் மிகவுமின் னாதோ துன்பமுற் றிடுசிற் றின்பவெவ் விடயந் துறந்துளோர் மனத்தெழு தருபே ரின்பநற் கடலே யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. 7 ஆடுற வடியேன் புதுக்குடந் தருநீ ரன்பன்வாய்ப் புனலுனக் காமோ கூடையின் மலர்பித் தையிற்றரு மலரோ கூறுமென் கவியவன் மொழியோ நாடரு மொருநீ யிறையெனும் வழக்கை ஞானசம் பந்தனாற் றிட்ட வேடுறை செய்ய வென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. 8 மெய்யுறு பிணிக்கு விலக்குவ வொழித்து விதித்தன கொள்ளுவன் பிறவி மையுறு பிணிக்கு மவ்வகை செயாமல் வருத்துமந் நோயிடைப் படுவேன் பெய்யுறு வளைக்கைத் திருநுத லுமையாள் பெருவிழிக் கணைகொடு விடாம லெய்யுறு முரத்தோ யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. 9 சரிப்பினு மொருபா லிருப்பினு முறக்கச் சார்வினும் விழிப்பினு மொருசொல் லுரைப்பினும் போக நுகர்வினு மாவி யொழிவினு நின்னையான் மறவேன் விருப்புறு மலரும் விரையுமே போல விம்மியெங் கணுமுறு பொருளா யிருப்பினு மரியோ யென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே. 10 இட்டலிங்க குறுங்கழிநெடில் முற்றிற்று |