புராணத் திருமலைநாதர்

அருளிய

மதுரைச் சொக்கநாதருலா

கலிவெண்பா

பூமேவு செல்வி புணருந் திருமாலும்
தேமேவு கஞ்சத் திசை முகனும் - தாமேவி 1

இன்னநெறி யின்னசெய லின்னவுரு வென்றறிவால்
உன்ன வரிய வொருமுதல்வன் - தன்னிகராம் 2

ஆதி யதாதி யடிமுடியொன் றில்லாத
சோதி யளவுபடாத் தோற்றத்தான் - ஓதும் 3

இமய முதல்வி யிறைவி மறைதேர்
சமய முதல்வி தலைவி - உமைகௌரி 4

மாணிக்க வல்லி மரகத வல்லியிசை
பேணித் தமிழறியும் பேராட்டி - காணரிய 5

பங்கயற்கண் ணான்கனக பங்கயக்கண் ணான்புகழ்ந்த
அங்கயற்க ணம்மைபுண ராகத்தான் - பொங்கும் 6

செழுந்தண் டமிழ்வெள்ளந் திண்முனிமா மேகம்
பொழிந்த பொதியப் பொருப்பன் - மொழிந்த 7

இறைமுனருட் பாட லெதிரேற்று நன்னூற்
றுறைபுகழ்ந்த வைகைத் துறைவன் - நறைகமழும் 8

வான்பாயுஞ் சோலை வயற்செந்நெல் கன்னலுக்குத்
தேன்பாயும் பாண்டித்திருநாடன் - கான்பாடல் 9

தங்கு மறையோசை ஈங்கத் தமிழோசை
பொங்கு மதுரா புரிவேந்தன் - எங்கும் 10

கருதுங் கனகக் கதிர்தயங்க வாசம்
மருவுந் தொடையிதழி மார்பன் - பொருவில் 11

துரகங் கறிறு துவசங் கதிகள்
விரவுங் கடிய விடையன் - பரவரிய 12

எங்கோன் மறைமுரச னெவ்வுயிர்க்குந் தன்கருணைச்
செங்கோ னடாத்துஞ் சிவானந்தன் - துங்கப் 13

பனுவன் மறைகள் பரவு முனைவன்
அனக னசல னகண்டன்-வனசப் 14

பதியா ரணன்படைக்கப் பாலித்தோன் காக்கும்
அதிகார மாலுக் களித்தோன்-பதியாய் 15

நரமடங்க லாங்கார நீங்கி நடுங்கச்
சரபவுரு வங்கொண்ட தாணு -வெருவாமல் 16

எப்புவன மும்புரப்பா ரெவ்வெவரு மேத்துதலால்
முப்புரமுஞ் சுட்டவிள முரலான்-ஒப்பிலா 17

ஐந்தருநாட் டண்ண லரும்பழிக்கா வன்றுதனக்
கிந்திரவி மான மினிதமைத்து-வந்தித் 18

தழகிய சொக்கரென வானதிரு நாமம்
குழைவுதரு நேசமுடன் கொண்டோன்-பிழையகல 19

மன்னு கடவுட் கணிறுவினை மாற்றியதன்
பின்ன ரடைந்த பெருவணிகன்-தன்னால் 20

அறிந்த வழுதி யழகிய சொக்கர்
உறைந்த திருவெல்லை யுற்று-நிறந்தயங்கும் 21

மண்டபமுஞ் சூளிகையு மாளிகையு நீளுமணித்
தண்டரள பீடிகையுஞ் சாளரமும்-மண்டுமெழில் 22

அங்கயற்க ணம்மைதிரு வாலயமு மாமதிகளும்
பொங்குமணிக் கோபுரமும் பூங்கிடங்கும்-எங்கணும் 23

நீடுபல வீதிகளு நேரின்றித் தாரகையைக்
கூடி வளர்மாட கூடமுடன்-ஆடகத் 24

தெற்றியுந் தோரணமுஞ் செய்குன்றுந் தேர்நிரையும்
சுற்று மலர்த்தடமுஞ் சோலைகளும்-மற்றும் 25

நலமுடைய வெல்லா நகரமைத்துத் தென்பாற்
குலவு வடபாற் குடபாற்-கலையூரும் 26

சூலிக்குங் காளிக்குந் துய்ய சுடராழி
மாலுக்குங் கோயில் வகுத்தமைத்துக்-கோலரிய 27

பாசப் பகையாம் படர்சடைமேற் கங்கைநீர்
வீசிப் புனித மிகவருளித் - தேசு 28

மதியி னமிர்தத் துளியான் மதுரம்
பதிமுழுது மெய்தப் பணிப்பப் - புதுமை 29

மருவு புரியு மதுரா புரியென்
றிருநலமு மேத்துபெய ரேற்க - அருமறையோர் 30

ஆதிபல சாதிகளு மண்ணல் பணிவிடைக்கங்
கோது பரிகரமு முற்றமர்த்திப் - போத 31

மதுரா புரேசற்கு வைதிக சைவ
விதியாரப் பூசை விளக்கிப் - பதியுறையும் 32

மன்னன் குடைவீர மாறன் குலதிலகன்
தென்னன் செழியன் செகதீரன் - முன்னை 33

ஒருநாள் மறைவிதியா லுற்றருளாற் கண்ட
திருநாளி லங்கோர் தினத்தில் - உரியவரால் 34

குற்றமிலா மெய்பூசை கொண்டருளி மிண்டுநவை
அற்ற விழாச்சிறப்பு மானதற்பின் - கொற்றமறைத் 35

தண்டமிழும் வாசகமுஞ் சங்கத் தமிழமுதம்
மண்டுந் திருவிசையு மந்திரமும் - தொண்டர் 36

அருள்விரித்த சேக்கிழா ரான்றதமிழ்ப் பாடற்
றிருவிருத்தச் செய்யுட் சிறப்பும் - இருமருங்கும் 37

பொங்க மகளிர் புரியாடம் பஃறீபம்
கங்குற் பொழுதைக் கடிதகற்ற - எங்களிடத் 38

தல்லற் பவந்தொலைக்கு மங்கயற்க ணம்மையுறை
செலவத் திருக்கோயில் சேர்ந்தருளி - எல்லோர்க்கும் 39

நீங்கா விடையருளி நீங்கா வுரிமைபுரி
பாங்கா மடவார் பணிபுரியத் - தேங்குமணம் 40

சேர்ந்த மலர்த்தொடையுந் தெண்ணித் திலத்தொடையும்
ஆர்ந்ததிருப் பள்ளி யறையின்கண் - போந்து 41

மலயத் தனிக்கால் வரசரனந் தைவந்
துலவப் பரிமளங்க னோங்கப் - பலவுயிரும் 42

முன்னை யகில முழுதும் பயந்தவொரு
கன்னிகையுந் தாமுங் கலந்தருளி - இன்னருளால் 43

ஈருருவு மோருருவா யெவ்வுயிரு மீடேற
ஓருருவு மீருருவா யுற்றுணர்ந்து - சீருதவும் 44

வேதவொலி சங்கவொலி வீணையொலி யாழுதவும்
கீதவொலி யெங்குங் கிளர்ந்திசைப்பப் - போதின் 45

மருவிரித்த தெய்வ மலரணையை நீங்கித்
திருவிருப்பி லன்பருடன் சேர்ந்து - பெருவிருப்பிற் 46

சைவ சவுராதி சண்டாந்த வர்ச்சனைகள்
மெய்வளரக் கொண்டு விளக்கமுறக் - கைவளரும் 47

மாறின்மணி மண்டபங்க ணாயனெனு மண்டபத்தின்
ஏறிமணிப் பீடத் திருந்தருள - ஏறுடையான் 48

தன்பா லலகில்பணி சாத்துமறை யோரிறைஞ்சி
அன்பா லணிபுனைவா ராயினார் - ஒன்பதுகோள் 49

ஏற்க வணங்கு மெழில்சேர் நவமணிசூழ்
காற்கமல வீரக் கழல்விளங்க - ஆர்க்கும் 50

புகற்கரிய பேரொளிகூர் பொன்னாடை யாதி
உகத்திருளை யெல்லா மொழிக்க - மிகுத்த 51

திகழ்வாள் வயிரமணி சேருதா பந்தம்
அகல்வான் கதிரைமதி யாக்கப் - புகலளிகள் 52

சாலத் திரண்டுசூழ் தாமரைபோற் செங்கைமேல்
நீலக் கடகவொளி நின்றிலங்க - கோலமணிச் 53

சுந்தரமார் திண்புயமேற் சோதிமணிக் கேயூரம்
மந்தரஞ்சூழ் வாசுகியின் வாய்ப்புதவ - எந்தைமுடி 54

வைத்தநதி கைபரப்பி மார்பத்தைத் தைவரல்போல்
நித்தில மாலை நிலவெறிப்ப - முத்தம். 55

கதித்த திருமார்பிற் கதிரார மேரு
உதித்தகதிர் மண்டில மொப்ப - மதிக்கரிய 56

தற்படியொன் றில்லாத சாம்பு நதநிதியம்
விற்பவள வெற்பினிடை வீழ்வதெனக் - கற்பகத்தின் 57

பொற்பூண் மலர்மாலை பூங்கொன்றை நாண்மாலை
சொற்பூ தரமார்பிற் றோற்றமெழக் - கற்பூரச் 58

சுண்ணம் பனிநீரிற் றோயும் பசுங்களபம்
விண்ணும் புவியும் விடாயாற்ற - அண்ணலருட் 59

கண்ட மரகதக் கோவை கடுவமைத்த
ஒண்டொடி மெல்விரல்க ளொத்திலங்கத் - தண்டத் 60

துருகா தவரு முருகக் குழைகள்
இருகாதின் மீதி லிலங்கக் - கருதினர்தம் 61

எண்ணிலாப் பாவ விருளகற்றும் வெண்ணீறு
வெண்ணிலா நன்னுதலின் மேல்விளங்க - வண்ணப் 62
புதிய மணிமுடிமேற் பொற்பே ரொளியின்
திதலைத் திருவாசிச் சேவை-உதயகிரி 63

வந்தெழுந்த செஞ்சுடர்மேற் கால்கொண்டு வானிட்ட
இந்திரவில் போல வினிதிலங்கச்-சுந்தரத்துக் 64

கொப்பனைபோற் சாத்தியபின் னொப்பிலான் பேரருட்கு
வைப்பனையான் தேவர் வரவருள-மெய்ப்பதிவாய் 65

நந்தி விரைவி னணுகிக் கடவுளர்கள்
வந்துதொழக் காலம் வருகவெனச்-செந்திருமால் 66

வந்திறைஞ்சி நான்முகனும் வாசவனும் வானவரும்
எந்தை யிவனிவனென் றேத்தெடுப்ப-ஐந்தொழிற்கும் 67

போக்காங் கலாதி மனாதி புலாதியுடன்
வாக்காதி சத்தாதி வானாதி-தாக்கா 68

தடலே யுதவு மரனே பரனே
உடலே யுயிரே யுணர்வே-நடமருவு 69
தெய்வச்சுடரே சிவானந்த போகமே
சைவச் சலதி தருமமுதே-மொய்வார் 70

மருவார் குழலாண் மகிழ்வே மதுரைத்
திருவால வாயுறையுந் தேவே-அருடா 71

எனவரிய தொண்ட ரிருமருங்குஞ் சூழ்ந்து
மனமுருகி மெய்யுருகி வாழ்த்தக்-கனமருவு 72

தும்புருவு நாரதனுஞ் சுத்த விசைபாடக்
கொம்பனைய மாதர் குனிப்பமிட-நம்பன் 73

புனித விமயமலைப் பொற்றொடியுந் தானும்
இனிதி னிருந்தருளு மெல்லை-நனிகூர் 74

பொருவி றிருவுலாப் போத முகிழ்த்தம்
மருமலரோன் கூறிவணங்க-அருளால் 75

எழுந்து கனக வெழிற்கோ புரத்துச்
செழுந்தண் டிருவாயில் சேர்ந்து-தொழுமடியார் 76

பல்லாண்டு கூற விமையோர் பரவமறை
வல்லாரு மாதவரும் வாழ்த்தெடுப்பச்-சொல்லரிய 77

மாணிக்க ரச்சி வயக்குந் தமனியத்திற்
பூணப் பதித்துப் பொலிதலாற்-காணரிய 78

பன்னிரண்டு கோடி பருதியரும் வந்துதித்த
பொன்னசல நேர்தேர் புகுந்தருளி-நன்னெறியால் 79

மிக்க திருநீற்று மெய்த்தொண்டர் வெள்ளவொளி
புக்கதிருப் பாற்கடலே போல்விளங்க-அக்கடலில் 80

அம்பொற் கிரிமே லலைகளெனத் தேர்மீது
பைம்பொற் கவரி பணிமாற-அம்புவிக்கண் 81

மூன்றுடையா னைச்சேர்ந்து முன்னைந்தன் மெய்க்களங்கம்
கான்றொழுகு தெய்வக் கலைத்திங்கள் -போன்றணிந்த 82

நீல மணிவயங்கு நீள்காம்பு பற்றியவெண்
கோலமணி முத்துக் குடைவிளங்க- ஞாலங்கள் 83

முற்றுஞ் சுருதி முழுதுங் கருணையாற்
பெற்றமடக் கன்னிதேர் பின்போதப்-பற்றியதன் 84

செய்கை யழிந்தயலே சேவைக் கயர்வோர்தம்
கைகடலையேறக் கண்பனிப்ப-வைகையெதிர் 85

ஏடேற்றித் தென்னவனை யீடேற்றி வெஞ்சழணக்
காடேற்ற மேறக் கழுவேற்றி-நீடேற்றம் 86

தானேற்ற புத்தன் றலையி லிடியேற்றும்
கானேற்ற பாடற் கவுணியனும்-மேனாள் 87

நிலைகடந்த கற்றுணா னீண்ட கடலாழி
அலைகடந்த நாவுக் கரசும் - மலரடைந்த 88

புள்ளவாம் பொய்கையிடைப் புக்க முதலைவாய்ப்
பிள்ளைவா வென்ற பெருமாளும் - தள்ளரிய 89

போதிநழற் புத்தன் பொன்னம் பலத்திட்ட
வாதழித்த மாணிக்க வாசகனும் - மூதுணர்வால் 90
முந்தை வினைகண் முழுதுஞ் செழுமறைநூற்
றந்தையிரு தாளுந் தடிந்தோனும் - எந்தைமகிழ்ந் 91

தாடுந் திருப்பெரும்பே ரம்பலம்பொன் மேய்ந்தருளைச்
சூடுந் திருநீற்றுச் சோழனும் - நீடருளால் 92

விண்புகழச் சுந்தரர்தம் வெள்ளானை முன்செல்லத்
திண்புரவி மேற்கொண்ட சேரலனும் - வண்புகலி 93

வேந்தரா லாருயிர்க்கூன் மெய்க்கூன் தவிர்ந்தருளே
சேர்ந்துவாழ் நின்றசீர்த் தென்னவனும் - காந்துமனச் 94

செற்றம் புனையமணர் தீத்தொழிலை மாய்த்தடர்த்துக்
கொற்றம் புனைந்த குலச்சிறையும் - சொற்றகைய 95

இத்தகைய ரென்னு மிவர்முதலா வெண்ணிறந்த
சுத்தநெறி நின்றமெய்த் தொண்டர்களும்-மெய்த்திறமை 96

கோலும் படையசுரர் கொற்றமெலா முற்றிமதம்
காலுங் களிற்றுமுகக் கற்பகமும்-மேலோர் 97

குறைமீட்டு வெஞ்சூர் குடிமடியத் தேவர்
சிறைமீட்ட வேற்றடக்கைத் தேவும்-பொறைகூர் 98

திருமகளு மாலுந் திருநெடுமா லுந்தி
தருசதுர் வேத தரனும்--பருதியர்கள் 99

பன்னிருவ ரீசர் பதினொருவ ரெண்வசுக்கள்
மன்னு மிருவர் மருத்துவர்கள்-இன்னவரும் 100

இந்திரனு மற்றெவரு மீரொன் பதுகணமும்
தந்தம வாகனங்க டாம்புகுத -அந்தர 101

துந்துபிக ளார்ப்பச் சுரரார்ப்பப் பூமாரி
வந்து பொழிய மழைதுனிப்ப-நந்து 102

வளைகண் முரல மருடி வயிர்கள்
கிளைக லொலிகள் கிளர -அளவில் 103

முரச மதிர முழவு துடிகள்
பரசு பதலை பணவம் - விரசு 104

வலம்புரி யெங்கு முழங்க வயங்கு
சலஞ்சல நின்று தழங்க - நலம்புரியும் 105

சின்னங்க ளார்ப்பச் செழுநான் மறைமுழுதும்
முன்னெங்கும் பின்னெங்கு மொய்த்தொலிப்ப - இந்நிலமேல் 106

மானிடருங் கின்னரரும் வானவரும் விஞ்சையரும்
தானவருங் கூடித் தலைமயங்க - ஆன 107

படியுந் திசையும் பகிரண்ட கூட
முடியு மயக்க முயக்கக் - கொடிகள் 108

இரவி கிரண மெறியாத வண்ணம்
விரவு விசும்பை விழுங்கத் - தரைமேல் 109

முதிரா முதல்வியுடன் முக்கட் பெருமான்
மதுரா புரிவீதி வந்தான் - பதியிலாக் 110

குழாங்கள்

கின்னரர்தங் கன்னியருங் கிஞ்சுவாய் விஞ்சையர்தம்
கன்னியருங் கந்திருவக் கன்னியரும் - பொன்னடைந்த 111

விண்ணுலக மங்கையரும் வின்னொருங்கத் தண்ணனிகூர்
மண்ணுலக மங்கையரும் வந்தீண்டி - எண்ணரிய 112

செல்வக் கனகநிலைச் செய்குன்றிற் பொன்வரைமேல்
வல்லிக் கொடியின் வயங்குவார் - அல்லற் 113

பளிக்குநிலா முன்றின்மேற் பாலாழி முன்னம்
அளிக்கு மரம்பையர்நே ராவார் - விளிக்கரிய 114

வீர மடவார் விமானத் தடைவதுபோல்
பாரநிலைத் தேரிற் படருவார் - ஆர்வமுடன் 115

பற்றிய வோவம் பரன்பவனி பார்க்கவுயிர்
பெற்றதென மாடம் பெயர்குவார் - சுற்றும் 116

விரிந்தமணி வீதி மிடைவா ரிறைதாள்
பரிந்து புகழ்வார் பணிவார் - பிரிந்துமையாள் 117

மும்முலைகொண்டுற்பவிக்க முன்முனிந்தார் தோள்விரும்பி
நம்முலைகள் விம்ம னகையென்பார் - செம்மை 118

விதம்பயின்ற வம்மடவாள் வேட்கையுற வேட்டார்
இதம்புரிவா ரெங்கட்கு மென்பார் - பதஞ்சலிக்குச் 119

சீர்க்கூத் தருள்வார் திருவுலா நாமதனன்
போர்க்கூத்துக் காணப் புரிந்ததென்பார் - தார்க்கவிகைக் 120

குண்டோ தரற்குத்தா கம்பசிபோற் கொள்காதல்
கண்டோர்க்கு மீகை கடனென்பார் - கொண்டபசிக் 121

கன்னக் குழியா றழைத்தா ரவற்கெமக்கும்
இன்னற் றுயரொழிப்பா ரின்றென்பார் - முன்னோன் 122

திருமுறுவல் போற்றுவார் செய்ய முறுவல்
தருநிலவா லுள்ளந் தளர்வார் - முருகு 123

செறியுந் திருமார்பஞ் சேவிப்பார் கொங்கைக்
குறிகண்டு நாணமால் கொள்வார் - அறிவுடையாற் 124

கெங்க டுகிலு மெழிற்றொடியும் வேண்டிற்றோ
தங்கநறு மாலை தரவென்பார் - கங்கை 125

மருவார் மலரமுதால் வாசவனார் பேணும்
திருவால வாயுறையுந் தேவற் - கிருகண்ணீர் 126

மஞ்சனமோ வெங்கை வளைபள்ளித் தாமமோ
நெஞ்சமமு தோவென்று நின்றுரைப்பார் - அஞ்சாமற் 127

செல்வார் நகைப்பார் திகைப்பார் மதனனெமைக்
கொல்வான் வருமென்று கூறுவார் - சொல்வார்போல் 128

நிற்பார்தஞ் சேடியர்பா னித்தற் குரைக்குமொழி
கற்பார் மறப்பார் கலங்குவார் - அற்புதமாம் 129

மாணிக்க வல்லி மணவாளற் கியாங்கொடுக்கும்
காணிக்கை யோநங் கலனென்பார் - நாணமுறச் 130

சாத்துந் துகிலிழப்பார் தம்மானம் வின்மாரன்
கோத்த மலர்மறைப்பக் கூசுவார் - பாத்து 131

விதமருவு மாத ரவர்நிற்க வேளுக்
குதவவரு பேதை யொருத்தி - மதனூல் 132

பேதை

படியாத பூவை படராத வல்லி
வடியா மதுமலரா மாலை - கடியாரப் 133

பூவாத சூதம் புனையாத மாணிக்கம்
கூவாத செல்வக் குயிற்பின்னை - மேவிக் 134

கவடுபடா வஞ்சி கலைமலயத் தென்றற்
சுவடுபடாக் கன்னிநறுஞ் சோலை - கவினத் 135

தெளியுந் தெளியாத செய்கையுந் தாங்கித்
தளருங் குதலைமொழித் தத்தை-ஒளிகள் 136

நிறையா விளந்திங்க ணீருடன்பால் பேதித்
தறியாத பேடையிள வன்னம்- இறுதிநாள் 137

துற்ற பருதியர்தந் தோற்றத்து முன்னாக
உற்ற வருணத் துதயம்போற்-பற்றிய 138

வான்றா ரணிமுழுதும் வந்தழிக்குந் தம்பெருமை
தோன்றாமற் றோன்றுந் துணைநகிலாள்-ஆன்ற 139

விடையா னுடையான் விளங்கு மழுவாட்
படையா னிருகமல பாதம்-அடையாமற் 140

பொய்வாழ் வடைந்தோர் புலன்கள்போ லொன்றோடொன்
றொவ்வா தலைகின்ற வோதியான் - பவ்வத் 141

துலக மயக்க மொழிந்தோர் மனம்போற்
கலகஞ் சிறிதறியாக் கண்ணாள்-உலவுமதிற் 142

செற்றார் புரமெரித்த தெய்வங்க ணாயகற்குக்
கற்றார் புகள்மதுரைக் கண்ணுதற்கு-வெற்றி 143

மருவார் தொடைத்தென்னன் மாமுத் தளக்கும்
திருவாயின் மாதருடன் சேர்ந்து-பொருவிலா 144

நித்திலத்தின் கூட்ட நிறையக் கொணர்ந்தேகி
வித்துருமக் காற்பந்தர் வீதிக்கண்-முத்தினத்தாற் 145

சிற்றி லிழைத்துச் சிறுசோறம் முத்தத்தாற்
சற்று முணராள் சமைத்தனள்போற்-பற்றிவரும் 146

கிள்ளைக்குந் நாயர் கிளைக்குந்தன் கைப்பாவைப்
பிள்ளைக்கு மூட்டுகின்ற பெற்றியான்-புள்ளினத்துள் 147

அற்புதமாம் பூவைக் கதன்வார்த்தை தான்மகிழ்ந்து
கற்பதுபோற் றன்வார்த்தை கற்பிப்பாள்-மற்றொருநாள் 148

மாதவிப் பந்தர் மருங்கேதன் கைத்தாயர்
போத வுடன்றானும் போயிருந்து-காதலருட் 149

பெண்களிக்க வாரி யழைத்ததுவும் பெய்வளையாள்
கண்களிக்கத் தந்தைதனைக் காட்டியதும் - மண்களிக்க 150

உக்கிரனார் தோன்றியது முக்கிரற்கு வேல்வளைசெண்
டக்கணிவோ னல்கி யகன்றதுவும்-மைக்கடன்மேல் 151

மிக்கவயில் தொட்டதுவும் விண்ணோர் பிரான்முடியைத்
தக்க வளையாற் றகர்த்ததுவும் - அக்கனகத் 152

திண்மை வடகிரியிற் சேலிட் டதுமறைநூல்
உண்மை முனிவர்க் குணர்த்தியதும் - வண்மையால் 153

தத்தையினஞ் சாற்றவயல் சார்பூ வைகளிருந்து
முத்திதருஞ் சொற்பொழிந்த முப்புலவோர் - சுத்தத் 154

திருப்பதிகத் தோசை செவியூடு தேக்க
விருப்பமுடன் கேட்டிருக்கும் வேலை - நிருத்தன் 155

சரத னிமலன் சதானந்தன் மாறா
விரதன் வடமேரு வெற்பன் - வரதன் 156

அறவ னமல னருளாளன் வைகைத்
துறைவ னபிடேகச் சொக்கன் - நிறைவீதி 157

வந்தா னெனச்சின்னம் வாழ்த்தெடுப்பத் தாயாருடன்
செந்தா மரைசேப்பச் சென்ற‌டைந்து - சிந்தைமகிழ்ந் 158

தன்னையரைக் கண்டு மயலார் தமைக்கண்டும்
முன்ன ரிருகை முகிழ்த்திறைஞ்சி - அன்னமே 159

பூவையே மானே புனமயிலே பூங்கிளியே
பாவையே யிங்கிவரைப் பார்த்திடீர் - மேவுமான் 160

கன்றுமொரு பாற்கிளியுங் காதலித்தார் நம்முடனே
யொன்றிவிளை யாடற் கொருப்பட்டோ - அன்றியுநம் 161

சிற்றில்வாய் வந்தார் சிறுசோ றுகந்தோயாம்
கற்ற கழங்காடல் கற்கவோ - சொற்றகைய 162

அண்ணல் கருத்தை யறையுமென வன்னையர்கேட்
டுண்ணெகிழப் புல்லி யுரைசெய்வார் - எண்ணெண் 163

திருவிளையாட் டண்ணனீ செய்விளையா டற்கு
வருவரெனச் சொன்னால் வழக்கோ - அருமறைநூல் 164

வல்ல முனிவோர் மகத்தவியுங் கொள்ளார்நின்
சில்லடிசிற் காவின்று சேர்வரோ - நல்லபணி 165

நிற்கவெள்ளி மன்றாடு நித்தர் கழங்காடல்
கற்கவந் தாரென்றுரைத்தல் கற்பாமோ - அற்புதமென் 166

றிந்த மொழியுரைக்குந் தாயர்க் கிவரிங்கு
வந்ததுதா னேதென்று மான்வினவப் - பைந்தொடியே 167

எல்லா வுயிருமகிழ்ந் தீடேற வைந்தொழிலும்
வல்லா னுலாவந்த வாறென்னச் - சொல்லுதலும் 168

நீரேற்ற செய்யசடை நித்த னுறையுமணித்
தேரேற்று மென்னையெனச் சென்றுரைத்துக் - காரேற்ற 169

கண்ணீர் வழிந்திழியக் காமந் தலைப்பட்டோர்
உண்ணீர்மை போல வுளந்தளர்ந்தாள் - பெண்ணீர்மை 170

இப்படியுண் டோவென்று தாய ரியம்புதலும்
கைப்பணிலந் தன்னைக் கழற்றிவிடுத் - தொப்பனைசெய் 171

பொன்னணியிற் சில்லணிகள் போக்கிப் பொழிநீரால்
தன்னயனந் தீட்டஞ் சனமொழித்து - மின்னனையாள் 172

பேரிளம்பெண் ணீதிதனைப் பேதைப் பருவத்தே
யாரு மதிசயிப்ப வெய்தினன்போல் - ஓர்வின்றி 173

நிற்பதனைக் கைத்தாயர் நேர்கண் டெடுத்தணைத்துப்
பொற்புவளர் மாளிகையிற் போய்ப்புகுந்தார் - மற்றொருத்தி 174

பெதும்பை

பேதைப் பருவம் பிரிந்து பெதும்பையெனும்
காதற் பருவத்துக் காட்சியாள் - மேதக 175

முற்றாத வல்லி முளரி முகிழிரண்டு
பெற்றா லெனவழியாப் பேருலகம் - செற்றழிக்க 176

வேண்டிப் பிறக்குமெழில் வெள்ளத் துடன்வடவை
மூண்டிங் கிரண்டாய் முகிழ்த்ததென - மாண்டவத்தோர் 177

கைமுகிழ்க்க வெங்காலன் கண்முகிழ்க்கக் காமுகர்தம்
மெய்முகிழ்க்க மேன்முகிழ்க்கு மென்னகிலாள் - தண்மை 178

விளைக்குந் தவமடைந்தோர் வெவ்வினைபோ னாளும்
இளைக்கவடிக் கொண்ட விடையான் - விளைத்த 179

அளவிலரும் பாலாழி யாலால மென்னக்
களவு பிறந்துடைய கண்ணாள் - அனிகள் 180

கடியாத தார்முடிக்க்க் காமன் றனக்கு
முடியாத வெல்லா முடிக்கப் - படிமுழுதும் 181

கூடி முடிக்குங் கொடியவிருள் போலமுடிக்
கூடி முடிக்குங் குழலினாள் - நீடிவளர் 182

முல்லையரும் புக்கும் முருந்துக்கும் பேரொளிகள்
இல்லையென வீறு மிளநகையாள் - தொல்லுலகில் 183

மின்னுக் கொருவடிவ மேன்மேல் வளர்ந்தேறல்
என்னப் பொலிந்துவளர் வெய்தினாள் - பன்னும் 184

மலர்ச்சயன நீங்கி வரவுதய காலத்
தலர்க்கை குவித்தோ ரணங்கு - கொலைக்கிங் 185

கிடம்பார்த்த கண்ணா யெழுகடலாந் தெய்வத்
தடம்பார்க்க வாவென்று சாற்ற - விடம்புறர்த்த 186

செங்கட் கருங்கூந்தற் சேடியர் கோடியர்
அங்கட் புடைமிடைய வாயிழையும் - எங்கும் 187

மருவுதவு சோலை வளர்வு கிளரத்
திருமருவு வாவி செறிய - அருகொருத்தி 188

மின்னே யமிர்த விளைவே செழுங்கமலப்
பொன்னேயிப் பொய்கைதனைப் போற்றிடாய் - பன்னும் 189

பரன்றன் பவனிதொழும் பாவையர்க்குட் காதல்
அரும்பும் பருவத் தவர்போல் - திருந்து 190

வலம்புரி யேறி மகிழ்ந்தர சன்னம்
கலந்து பணிலங் கலிப்ப - நலங்கோள் 191

அளித்து வரவெதி ரன்னத்தோ டேகிக்
களிக்கு மிளம்பேடை காணாய் - தளிர்த்து 192

விரிந்தசடை யண்ணலுலா மேவுமவ ருள்ளம்
புரிந்து நெகிழ்வது போலத் - தெரிந்த 193

இரவிச் சுடர்கண் டிதழவிழ்ந்து சேந்த
பருவக் கமலமுகை பாராய் - அருமறைதேர் 194

மாக விமான மதுரா புரேசன்றன்
ஆக முறவெண்ணு மன்னவர்போல் - நாகத் 195

தடர்ந்து படர்வா னணிமென் பவளம்
நுடங்குகொடி நோக்கி னோக்காய் - தடங்கடல்கள் 196

வந்தடைந்த வாவி மகிழ்ந்தாடா யென்றியம்பப்
புந்திபெரு நாணமுறப் புன்மூரல் - தந்தருகு 197

நேசச் செவிலியர்க ணீராட்ட நீராடி
ஓசைக் கடலொன் றுதவுதிருக் - கூச 198

எழுகட றந்த விளந்திரு வென்னத்
தொழுது மகளிர் துதிப்பச் - செழுமைக் 199

கரையிற் சுரபுன்னைக் காவினிடை மேவி
விரைமெய்த் தவிசின் விளங்கப் - புரைதீர் 200

கலனணிந்து நன்னீற்றுக் காப்பு மணிந்து
மலர்வதனக் கைத்தாயர் வாழ்த்தும் - பொலனிழைமுன் 201

ஆதி திருவிளை யாடலிவ் வாவிநலம்
ஓதுமவள் பின்னு முரைக்கின்றாள் - பூதலங்கள் 202

வாழிபெற மாணிக்கம் விற்றுதுவு மாகமுகில்
ஆழி பருக வருளியதும் - சூழுமியற் 203

கோநகரை நான்மாடக் கூடலென வைத்ததுவும்
மானநெறிச் சித்தரென வந்ததுவும் - மீனவன்றன் 204

கன்னலணி கல்லானை வாங்கியதுங் காரமணர்
துன்னுமத யானை துணித்ததுவும் - உன்னரிய 205

ஓர்விருத்த வால குமாரனுரு வுற்றதுவும்
ஆர்முடித்தோன் கான்மாறி யாடியதும் - பாரித் 206

துரைத்தா னவளை யுகந்தருளிச் செந்தா
மரைததான மாதிலுயர் மாதும் - உரைத்தவற்றுப் 207

பூணுங் கருத்தும் புனிதன் றிருவுலாக்
காணும் பெருவிருப்புங் கைக்கொண்டாள் - சேணடைந்து 208

தோற்றும் பொழிலூடு துய்யசீ தேவியினும்
ஏற்றம் புனைவா ளிருந்திடலும் - நீற்றுக் 209

கவச னுமையாள் கணவ னிடபத்
துவசன் கடம்பவனச் சொக்கன் - தவள 210

மதவா ரணமீது வந்தா னெனவற்
புதவா ரணமுரசம் பொங்க - இதயநிகர் 211

பாங்கியர்முன் செல்லப் பதறியுடன் பின்சென்று
தாங்கரிய பேருவகை தானெய்தி - நீங்காத 212

மல்லற் கருணை மலையாண் முலைத்தடங்கள்
புல்லக் குழைந்த புயத்தாளைத் - தொல்லைமறை 213

கூறா தரமடந்தை கொங்கைக் குறியென்றும்
மாறா தழகெறிக்கு மார்பானை - வேறின்றித் 214

தோற்றுமிகு தாளானைத் தொல்லைக் கொடும்பாசம்
மாற்றுந் திருவால வாயானை - ஏற்றமுறப் 215

பார்த்தாள் பணிந்தாள் பறிபோந் தனிநெஞ்சம்
காத்தாடன் னாணங் கடைபிடித்தாள் - வேர்த்தாண்முன் 216

காணாத காட்சியாற் கண்ணுக்குஞ் சிந்தைக்கும்
பேணாத நல்விருந்து பேணினாள் - நாணயந்து 217

விண்டலருஞ் செம்முகையின் மேவு முருகென்னக்
கண்டறியாக் காமமுங் கைகலப்பக் - கெண்டைவிழி 218

பாராத பார்வை படைப்ப மனத்துக்கும்
வாரா மகிழ்ச்சியும் வந்தெய்த - ஓராமல் 219

நின்றதோர் முன்னை நிறையுங் கரையழிந்து
சென்றதோ வென்னென்று செப்புகேன் - ஒன்றிமால் 220

ஆளுந் தனிநெஞ்சத் தாதரவா லானனமும்
தோளுந் தனமுஞ் சுரிகுழலும் - வேளைப் 221

பொரவழைத்தல் போலப் பொலிந்தாலும் வேளும்
விரைமலர்ப் பாணம் விடுரே - பரவிநாம் 222

கட்டிய காஞ்சியின் கட்டுவிடச் செங்கைமேல்
இட்ட வளையி னினமுரியக் - கிட்டா 223

உருவமிகப் பேதித் தொளிபடைத்து மற்றைப்
பருவ மெனப்புளகம் பாரித் - தொருவாத 224

பேரழகு நந்தம் பெருமாட்டிக் கெய்தியதிங்
காரறிய வல்லாரென் றன்னையரும் - மாரன் 225

சிறுநா ணெறிந்து சிலைபார்க்கு முன்னே
முறுகாமான் மேல்வளரு முன்னே - அறுகால்சேர் 226

தாமஞ் சரிகுழலா டன்னைக் கரத்தணைத்துச்
சேமம் பெறமாடஞ் சென்றடைந்து - பூமலர்கள் 227

ஏறுந் திருப்பாய லேற்றி யவண்மோகம்
ஆறும் படியொருவா றாற்றினார் - கூறுமதன் 228

மங்கை

செங்கண் சிவப்பக் கருங்கண் சிவப்பூறும்
மங்கைப் பருவத்து மற்றொருத்தி - திங்கண்மதி 229

சூழுஞ் சடையான் றுணைத்திண் புயாசலமேல்
வாழுங் கருத்தே வளர்தோகை - ஆழித் 230

திருவால வாயண்ண றேங்கருணை வெள்ளப்
பெருவாவி தேடன்னப் பேடை - வருதென்றல் 231

கால்கொண் டுலவுங் கடம்பவனச் சோலைக்கு
மால்கொண் டுருகு மனத்தத்தை - கோலம் 232

படரு மதனன் படையுலகை யெல்லாம்
அடர வடர வடர்ந்து - புடவி 233

தளர மதனன் றனியாண்மை யெங்கும்
வளர வளர வளரக் - களவு 234

பெருகத் தபோதனர்மேற் பேரநங்க னெஞ்சம்
கருகக் கருகக் கருகிப் - பொருதவியல் 235

பென்னப் புனைந்துலகத் தெய்தாத வெற்றிமதன்
தன்னைப் புனைவித்த தாழ்குழலாள் - முன்னொருவேல் 236

உந்து கடல்குடித்த தென்ன வுயிர்குடிக்க
வந்தவிட வேலனைய வாட்கண்ணாள் - முந்தைநிறம் 237

பேதித்து வேட்கை பெருத்தழகு பெற்றிலகும்
சோதிக் கனகவளைத் தோளினாள் - மோதிக் 238

கரையழியா வாவி கலக்கிக் கமல
விரைமுகையைச் சாடிவிழ வீழ்த்திப் - பரவும் 239

மலைக்கோட்டை யெற்றி வருமத்த யானைக்
கொலைக்கோட்டை யொப்பக் குலாவிச் - சொலற்கரிய 240

முத்தத் தொடைகண் முயங்குகிர ணப்பத்தி
தத்துங் களபத் தனக்குவட்டாள் - பத்திதரும் 241

தேர்த்தட் டினுக்குஞ் சிறுமை கொடுத்தகன்ற
ஆர்த்த மணிக்காஞ்சி யல்குலாள் - ஏத்தரிய 242

அங்கயற்க ணம்மைமுலை யானைக் கிடங்கொடுக்கும்
செங்கனகக் குன்றைச் சிவக்கொழுந்தை - எங்கள் 243

அழகிய செக்கனைநா லாரணமுங் கூடப்
பழகியுங் காணாப் பரனைத் - தொழுதெவரும் 244

சேவிக்க வாழ்விக்குந் தெய்வப் பெருமானை
ஆவித் துணையா மருமருந்தை - மேவி 245

ஒருநாட் பவனியிற்கண் டுள்ளந் தனக்குத்
திருநாட் பொலிவுதனைச் செய்து - வருநாள் 246

திருமடந்தை போலத் தெரிவையர்கள் கோடி
இருமருங்குஞ் சேவிக்க வேகி - அரியநெறிச் 247

செய்கைத் தமிழேடு செல்ல யெதிரேற்றும்
வைகைக்கரையின் மருங்குவளர்-பொய்கைப் 248

புடைமருவசுந் தெய்வப் புதுமலர்ப்பூங் காவின்
இடைமருவு மண்டபத்தி லெய்தி-அடர்கனகத் 249

தண்டரளப் பத்தித் தனிவே திகைத்தவளப்
புண்டரிகத் தன்னமெனப் போயிருப்பக்-கண்டொருத்தி 250

ஊசல் விளையாட் டுளமகிழ்ச்சி நல்குமெனப்
பேச வுடனே பெயர்ந்தெழுந்து - நேசக் 251

கலக மதவேள் களிகூர மின்போல்
இலகு மணியூ லேறிக் -குலமதியம் 252

தக்க வமிர்தந் ததும்பித் துளிப்பதுபோல்
மிக்க முகத்துல் வெயர்வரும்பத்-திக்கின் 253

வழிபோய் முனிவர் மனமடைய வாரி
விழிவேல்க டாவடிபோய் மீளப்-பொழிபுயலைக் 254

காந்திருளை வென்று களிவென்றி பாடுவபோல்
ஏந்து குழல்வண் டிசைபரப்ப-மாந்தளிரைக் 255

காந்தளைக் கட்டுரைத்த கட்டாண்மை போற்செங்கை
ஏந்து வளைக ளினிதொலிப்பப்-பாந்தளை 256

மின்னைப் புறங்கண்ட வீரப் புகழ்பாடல்
என்னக் கலைக்காஞ்சி யேத்தெடுப்ப - அன்னத்தை 257

அம்பதுமந் தன்னை யடர்த்த வடலெனக்காற்
செம்பதுமந் தம்மிற் சிலம்பலம்ப - நம்பெருமான் 258

மாலந் தகவசுரன் மாறா வயமாறச்
சூலந் தனிலிட்ட சொற்பாடும் - காலன் 259

உரத்தி லுதைத்த வுரமும் பிரமன்
சிரத்தை யறுத்த திறனும் - புரத்தை 260

எரித்த புகழு மிராவணனை வெற்பில்
நெரித்த சயத்து நிலையும் - உரித்துக் 261

கரியுரி போர்த்த கணக்குங் கணைவேள்
எரியெழப் பார்த்த வியல்பும் - விரியா 262

மொழியும் பரிசனமுன் மூதண்ட மெங்கும்
ஒழிவின்றி நின்ற வொருவன் - பழியஞ்சி 263

வெங்கால தூதுவரால் வேந்தற் குணர்த்தியதும்
மங்காத பாதகத்தை மாற்றியதும் - அங்கம்போய் 264

வெட்டியதும் பொய்யமணர் விட்டபணி மாய்த்ததுவும்
பட்டுவிழ வானைப் பணித்ததுவும் - கிட்டி 265

எழிலார மெய்க்காட்டங் கிட்டதுவுந் தென்னற்
கழியாக் கிழிகொடுத்த வன்பும் - மொழியும் 266

திருமா தனையார் தியங்கிவளை விற்ற
பெருவாழ்வும் பாடிப் பெயர்ந்தாள் - அருகொருத்தி 267

வந்திறைஞ்சி மஞ்சன மாட வருகவென
உந்துமணி யூச லுடனிழிந்து - சந்ததமும் 268

விசுந் திரைவகை மேவிநீர் நாவிமலர்
வாசம் புணர மகிழ்ந்தாடித் - தூசும் 269

களபமும் பூந்தொடையுங் காந்திமணிப் பூணும்
புளகமுங் கூடப் புனைந்து - தளவ 270

முறவன் மடமகளிர் மொய்த்தீண்டக் கண்டோர்
மறுக மதவேண் மகிழ - இறைமார்பில் 271

சிந்தையுற நின்றாண்முன் றெய்வமறைப் பாய்பரிமேல்
இந்திரனு மாலயனு மேத்தெடுப்ப - வந்தான் 272

அருவா யுருவா யருவுருவ மில்லா
உருவா யளியா யொளியாய் - மருவிலயன் 273

ஆடும் பெருமா னகிலம் புரக்கமுடி
சூடும் பழியஞ்சிச் சொக்கனென - நாடி 274

உருகி யொருத்தி யுரைக்க மகிழ்வே
பெருகிப் பிடிபோற் பெயர்ந்து - கருணைக்கோர் 275

ஆகரனைப் பூரணனை யானந் தனைச்சந்த்ர
சேகரனை யட்டாலைச் சேவகன் - ஏகி 276

வணங்கினாள் பார்த்தாள் வழுத்தினாண் மாலோ
டிணங்கினாள் சிந்தை யிளைத்தாள் - அணங்குடையான் 277

வேதப் புரவியுடன் வீதி தனைக்கடந்தான்
மாதுக் கரசனைய மாமயிலைத் - தாதியர்கள் 278

கண்டவர்க ணின்றிரங்கக் கையணையிற் கொண்டேகிப்
புண்டரிக மாளிகையிற் போய்ப்புகுந்து - வண்டலர்த்தும் 279

பாயன்மே லேற்றப் பகற்செங் கதிர்க்கடவுள்
ஆய குடதிசைவா யாழிபுக - மாயப் 280

பெருமாலை நல்கும் பெருங்கங்குன் முன்னே
மருண்மாலை வந்து மருட்டத் - திருமாலை 281

தாங்குந் தனக்குவட்டுத் தையலுங் கண்டுமனம்
ஏங்குந் தவிக்கு மிரங்கியிடும் - பாங்கிலெழும் 282

வெண்மதியப் பாவி விடுக்கின்ற செந்தீக்கென்
பெண்மதிய மாற்றப் பெறாதென்னும் - கண்ணீர் 283

துளிக்கு மனமயங்குஞ் சோருங் குயிலை
விளிக்கு முடலம் வெதும்பும் - அளிக்கரசை 284

வாவென்னும் போவென்னும் வண்கிளியை வாய்முத்தம்
தாவென்னு மாலை தருகென்னும் - கோவென்னும் 285

இப்படி வாடு மிவடன்னை யன்னையரும்
அப்பரிசை யாற்றுவா ராயிழாய் - ஒப்பிலான் 286

மாலையுந் தோளு மணிமார்பு நீதோயக்
காலையில் யாஞ்சென்று கட்டுரைப்பம் - வேலையெனத் 287

தோற்றுமா மையற் றுயரொழியென் றின்சொல்லால்
ஆற்றினா ராறினா ளங்கொருத்தி - சாற்றும் 288

மடந்தை

சலம்புரி காமன் றழைத்தோங்க வெற்றி
வலம்புரி ந‌ல்கு மடந்தை - தலம்புகழும் 289

காம ரதக்கரும்பு காமச் சுவையமிர்தம்
காமன் றனக்குள்ள கட்டாண்மை - காமன்றன் 290

சேமத் தனஞ்செல்வஞ் செங்கோ லவன்கொற்றத்
தாமத் தரளத் தனிமவுலி - தேமுற்றுத் 291

தாது நெகிழுஞ் சதகோடி செங்குமுதம்
வாதிலழி யச்சிவந்த வாயினாள் - பூதலத்தோர் 292

முன்னூசல் கொண்டுமன மோக முறவேண்டும்
பொன்னூச லன்னமணிப் பொற்குழையாள் - மன்னும் 293

அலகின் மறையோ ரறிவி னுயர்வோர்
உலைய வுலக முலைய - நலமகலச் 294

செங்கோ லொழித்தெவர்க்குந் தீங்கு புரிவேந்தர்
வெங்கோ லினுங்கொடிய வேற்கண்ணாள் - பொங்கி 295

மலையைக் கடிந்தெடுத்து வச்சிரத்தா லோங்கி
உலைவின் மகத்துக் குரித்தாய்ப் - பலகண் 296

படைத்துக் கருகிப் பணைக்களிற்றின் மேலாய்
மடற்கொத்து மாலை வளைந்து - திடத்தால் 297

புரந்தரனைப் போலப் பொலிந்து முனிவோர்
முரண்கெடுக்க விம்மு முலையாள் - நிரந்தரமும் 298

வஞ்சம் புரிவேந்தர் மண்டலத்துள் வாழ்வோர்தம்
நெஞ்சம்போ னின்றலையு நேரிடையாள் - அஞ்சிவரும் 299

கோகனகந் தண்டரளக் கோவைதனைப் பூத்ததென
மோகந் தருவதன மூரலாள் - தோகை 300

ஒருபாக னெங்கோ னுலகே ழுடையான்
திருவால வாயான் றிருத்தோள் - மருவுவான் 301

சிந்தித்துத் தூதுநீ செல்லென்று பைங்கிளியை
வந்தித்துப் பாயன் மருங்கேறி - அந்திப் 302

பொழுதுவர வுள்ளம் புழுங்கி யழுங்கி
எழுதியே மின்போ லிருந்து - தெழுதாற்றா 303

ளாகித் தமியேனை யாற்றுவா ராரென்று
மோகித் தரிவையர்த முன்மொழிய - ஓகைபெற 304

இன்னிசையாழ் வல்லாளோ ரேந்திழை யாழ்வாங்கித்
தென்னதென வென்றெடுத்துச் செந்தமிழாற் - பன்னியிசை 305

ஆக்கியவெண் சித்தி மடவார்க் கருளியதும்
மாக்கனக வாசல் வளவற்கு - நீக்கியதும் 306

வேட்டவர்க்குத் தண்ணீர் வினைமுகத்து நல்கியதும்
வாட்ட மறவிரத வாதத்தைக் - காட்டியதும் 307

வந்துபரி யாளாய் வளவற் குணர்த்தியதும்
எந்தையுல வாக்கோட்டை யீந்ததுவும் - முந்தைவழக் 308

கேறி வணிகற்கு மாதுலரா யெய்தியதும்
மாறன் பிரமகத்தி மாற்றியதும் - கூற 309

மனத்துயரும் போக மதியிருளும் போகத்
தினத்தை விளைப்பான் றிகழ - அனத்தை 310

அனையநடை வல்லிநீ ராடினா ளாடை
புனைகலன் வாசம் பொறுத்தாள் - தனைநேர் 311

இலகுமணிச் செங்கண்மா லேற்றின் முனிவோர்
மலர்பொழிய மாமறைகள் வாழ்த்தப் - பலமுகிலிற் 312

பல்லிய மார்ப்பப் பணிலத் திரண்முழங்க
எல்லையி றேவரினி தேத்தெடுப்பத் - தொல்லை 313

அருண சயில னசல னமலன்
ஒருவ னருவ னுருவன் - இருவர் 314

மகிழு முதல்வன் மதுரை யிறைவன்
அகில புவன வதிபன் - இகலின் 315

இலகு மதன வயிரி யிமய
மலையின் வனிதை மகிழ்நன் - அலகிலாப் 316

பேத தபேதன் பெருமான் பிறப்பறுக்கும்
பாதன் பரமன் பரானந்தன் - நாதனணி 317

வீதிபுகுந் தானென்று மெல்லியலாண் முன்விட்ட
தூதுபோய் மீண்டகிளி சொல்லுதலும் - போதக் 318

களியுதவு தென்றலெனக் காமருபூ மாலை
அளிசிறந்த காற்றங் கசைய - ஒளிவிரியும் 319

பாதவங்கொள் பல்லவத்தை மெல்விரல்கள் பாரிப்பச்
சூத மலர்போற் சுணங்கெறிப்பச் - சாதி 320

விளையு மதுச்செருந்தி மிக்கமல ரெல்லாம்
அளகமலர்க் காவி னலரப் - புளகக் 321

கமுகத்திற் பாலையெனக் கண்டத்திற் கொண்ட
சமுகத் தரளந் தயங்க - அமுத 322

வளநீர்மை தாங்கி வளர்கனகக் கொங்கை
இளநீர்க் குலம்போ லிலங்க - உளமகிழச் 323

சாற்றுமொழி கோகிலத்தின் றன்மைபெற வெந்நிலமும்
மாற்ற வரிய மகிழ்ச்சியுறத் - தோற்ற 324

உருவ மதனுக் குடையானை வேண்டி
வருவசந்த காலம்போல் வந்தாள் - பெருமான் 325

திருவுலாக் கண்டா டிருவழகுங் கண்டாள்
உருகினா ளுள்ள முடைந்தாள் - அருகொருத்தி 326

ஆங்கதனைக் கண்டொழிய வானந்த வாரிதிமுன்
பாங்கியொருத்தி பகருவாள் - தாங்கிநீர் 327

ஏந்து மலையோ விவண்முலையோ நன்றென்று
சேந்துணரும் வாறின்று சேர்ந்திடீர் - வேய்ந்த 328

இளம்பிறையோ வல்லி யிவணுதலோ செவ்வி
வளம்புனைவ தென்ற்றிய வாரீர் - விளங்கநீர் 329

துய்த்த கடுவிடமோ தோகைக்கருங் கூந்தலோ
மைத்த தெனவறிய வந்திடீர் - கைத்தலத்தில் 330

தங்கு முழைவிழியோ தையன் மதர்விழியோ
பொங்குநல மென்ற்றியப் போந்திடீர் - செங்கைதனிற் 331

சேர்ந்த துடியிடையோ தேமொழியாள் சிற்றிடையோ
நேர்ந்த தெனவறிய நீர்வாரீர் - காந்தியொளிர் 332

போதணியுங் கொன்றையோ பொற்கொடியாள் பொற்சுணங்கோ
ஏதுநிற மென்றறிய வெய்திடீர் - ஓதரிய 333

சித்தரே நித்தரே சிற்பரா நந்தரே
சுத்தரே யாலவாய்ச் சொக்கரே - இத்தகைமை 334

செய்யு மெனமடவாள் செப்ப வவளருகே
மையன் மடந்தையும் வந்திறைஞ்ச - ஐயன் 335

திருப்பார்வை யீந்தருளச் சிந்தைகளி கூர்ந்து
விருப்பா யிவள்பெற்று மீண்டாள் - ஒருத்தி 336

அரிவை

புடவி முனிவோர் புகழ மதவேளுக்
கடர்மௌலி சூட்டு மரிவை - கடையும் 337

உவரி தருமமிர்த மன்றி யுலகோர்க்
கவனி யுதவு மமிர்தம் - புவனிவலை 338

போதாத முத்தம் புகரொழிந்த மாணிக்கம்
சீதார விந்தத் திருச்செல்வம் - யாதும் 339

புகன்ற திசையும் புவியுஞ் சுருங்க
அகன்ற நிதம்பத் தணங்கு - முகந்தவிசை 340

வண்டி னொழுங்கும் வளையு நுதற்சிலையும்
கொண்ட னிறமுங் குளிர்மலரும் - கண்டுமருள் 341

மாலைக் கடுத்த வழகும் படைத்துமதன்
கோலத்தை யொத்தகருங் கூந்தலாள் - ஞாலத்துள் 342

நற்கனகப் பூணை நயந்தக்கா லோரிரண்டு
பொற்கனக மேருப் பொருப்பாயும் - சொற்குலவும் 343

கொள்ளைத் தரளமணிக் கோவைத் திரளணிந்தால்
வெள்ளித் துணைக்கிரியின் மேம்பட்டும் - உள்ளம் 344

புதையவொளிர் மாணிக்கம் பூண்டக்கால் வெய்யோன்
உதைய வரையிணையை யொத்தும் - இதையம் 345

பனித்து முனிவர் பதைப்ப மதனன்
குனிப்ப மறலி குலைய - மனத்தை 346

உருக்கி யிடையை யொதுக்கி மிகவும்
தருக்கி வளருந் தனத்தாள் - செருக்கண் 347

உறுசமர வீர ருரங்கிழித்து மீண்ட
நிறவலகு போல நிமிர்ந்து - கறுவி 348

விலகி மறலி விடுதூதர் போல
உலக மடைய வுலாவிக் - கலகம் 349

விளைத்துக் கடுவை வெறுத்துயிரைச் சேர
வளைத்துப் பருகி மதர்த்துத் - திளைத்துக் 350

கொடுங்கால காலன் குவலயத்தைச் சாடும்
கடுங்கால தண்டநிகர் கண்ணாள் - தொடர்ந்து 351

திருவால வாயான் றிருமாலை வேண்டி
வருமால் வளர வருந்தும் - ஒருநாள் 352

படைமதனும் பல்கோடி பாவையருஞ் சூழ
மடலவிழும் பூங்காவில் வந்து -புடைமருவும் 353

தேமாவைப் பார்த்துகந்தித் தேமா நறுநிழலில்
நாமா தரித்திருத்த னன்றென்னப் - பூமடந்தை 354

அன்னா ளொருத்தி யடியிறைஞ்சி யாரணங்கே
என்னா ருயிரேயெ னின்னமுதே - முன்னாளில் 355

இந்தமா நீழல்கா ணீரேழு பேருலகும்
தந்தமா னன்பாய்த் தழுவுதலும் - எந்தை 356

மறுவகன்ற செய்ய வடிவத்திற் கொங்கைக்
குறியும் வளைத்தழும்புங் கொண்டான் - அறிகிலை நீ 357

கள்ளுதவுந் தேமாவிற் காரணமீ தென்றுரைப்ப
உள்ளமே னாணத்தை யுள்ளடக்கி - வள்ளல் 358

செறிந்த திதுவன்றித் தெய்வ மரங்கள்
அறிந்ததிலை யோவென் றறைய - நறுங்குழலாய் 359

ஆல மகிழ்தில்லை யாத்தி குராமருது
பாலைபலா வெண்ணாவல் பாடலம் - கோல 360

மருக்கொன்றை போலு மரங்களுள வண்ணல்
இருக்குமிட மிங்குவற்று ளிந்தத் - திருக்கடம்பு 361

போற்று மதுரா புரியால வாய்ச்சொக்கர்
வீற்றிருப்ப தென்று விளம்புதலும் - கோற்றொடியும் 362

நெஞ்சங் களிப்பமிக நீண்டகன்ற தூண்டுவிழிக்
கஞ்சங் களிப்பக் கடிதணைந்து - தஞ்சமென 363

நேர்வந் திறைஞ்சினா ணீபந் தனைநோக்கி
ஆர்வந் திகழ வறைகின்றாள் - சேரும் 364

அரியயனு மேத்த வருமறைகள் போற்ற
உரிய முனிவ ருவப்ப்ப் - புரியும் 365

விரியுமலர் வேணியான் வீற்றிருக்கப் பெற்றாய்
உரிய சிவலோக மொப்பாய் - பெரிய 366

தனியான் மதனன் சரத்தான் மயலால்
துனியாற் றளந்தேனென் சொல்கேன் - முனிவகலத் 367

தீதன்றி முன்விறகு விற்றதுவுஞ் சேரலற்கு
நாதன் றிருமுகத்தை நல்கியதும் - ஓதல் 368

உறுபலகை பாணற் குதவிதுந் தூய
விறலி யிசைவியந்த வீறும் - மறுகியுழல் 369

ஏனக் குருளைக் கிரங்கிமுலை யீந்ததுவும்
மான வரசமைச்சா வைத்ததுவும் - ஆனபயம் 370

தீரத் திறல்வலியா னுக்குபதே சித்ததுவும்
நாரைக்கு முத்திதனை நல்கியதும் - தேரிற் 371

கருணையது வன்றியொரு கைம்மாற்றுக் கன்றே
அருளுடையா னாளுமோ வாளா - தொருவுமோ 372

என்றுரைக்கும் போதி லிறைவன் றிருவெழுச்சி
துன்று பணைக டுவைத்திடலும் - வென்றி 373

இருபுருவ மாக மெடுத்ததனு வென்னத்
தருகலன்கண் மின்னிற் றயங்கக் - கருகிநிறம் 374

கொண்ட மலரளகங் கொண்டற் குழாமென்ன
மண்டி வழிதேன் மழைகாட்டத் - துண்டமும் 375

கண்ணுங் கரமுங் குமிழுங் கருவினையும்
தண்ணென்ற காந்தளுந் தாநேர - வண்ண 376

முலைமே லணிதரள மொய்வடங்கள் செய்ய
மலைமே லருவிகண் மான - அலர்மேவும் 377

கந்தமிகுங் கார்காலங் காமப் பயிர்விளைக்க
வந்த தெனவீதி வந்தணைந்தாள் - எந்தை 378

கலாதி யிலாதி கலாமதி சூடி
வலாரி பராவு மணாளன் - நிலாவு 379

சுராரி முராரி சுபால கபாலி
புராரி பராதி புராணன் - கிராதனணி 380

கண்ணன் கருணைபொழி கண்ணன் செழும்பவள
வண்ணன் சதுரன் மதுரேசன் - எண்ணெண் 381

கலையா னிறைபரமன் கங்காளன் வெள்ளி
மலையான் மழவிடைமேல் வந்தான் - குலவிப் 382

பணிந்தாண் மடவாள் படர்மயலைச் சொல்லத்
துணிந்தாள் சிலவார்த்தை சொல்வாள் - கொணர்ந்தயலார் 383

பாரக் குவளைமலர்ப் பாயன் மலர்த்தொடையென்
றீரப் புழுகெனவ றிமசலமென் - றோராமற் 384

பேசும் பொழுதும் பெருமானே யென்னெஞ்சம்
கூசும் படியென்னோ கூறிடீர் - ஆசைமால் 385

தந்தக்கான் மந்தக்கா றாழாம னென்னல்போல்
வந்தக்கா னானாற்ற வல்லேனோ - அந்தி 386

மதிக்குட் தழலு மலைச்சந் தனத்திற்
கொதிப்புந் தரளக் கொதிப்பும் - விதித்ததுதான் 387

என்னளவே வந்ததோ வெல்லார்க்கு மொக்குமோ
பொன்னளவு கொன்றையாற் பொன்படைத்த- தன்ன 388

படியே வருளீரேற் பாரீர் நகையீர்
அடியேன் மதன் போருக் காளோ - தொடியோ 389

கலையோ மனமோ கவர்ந்தீ ரளித்தீர்
அலையோ வலரோ வயர்வோ - தொலையாதோ 390

என்மயக்க மென்னென் றியம்பு மிவணிற்க
மின்மயக்கும் பெண்ணமுதம் வேறொருத்தி - மன்னும் 391

தெரிவை

உலகுபதி னாலு மொருகுடைக்கீ ழாளச்
சிலைமதனக் கீந்த தெரிவை - பலவுயிரைப் 392

பட்டுப் பறியும் படைவே லனவரற்கு
மட்டுப் படாத கடு வல்விடம்போல் - கிட்டரிய 393

கூற்றந் தனக்குங் கொலைநூல் படிப்பித்தும்
சாற்று மதனூ றலைகண்டும்- ஆற்றா 394

தடல்போ யகில மழிய வுகாந்தக்
கடல்போ லுலாப்போதுங் கண்ணாள் - புடவி 395

மருளக் கொடுமை வளர வளர்ந்த
இருளும் வெளிபோ லிரியக் - கருமையுற 396

வீசி யுயிரை வெருட்டிப் பிணித்தயம
பாசநிகர் கொந்தனக பந்தியான் - தேசம் 397

பணியப் பணியிற் பயின்று திருவை
மணியைப் புணர்ந்து மணந்து - தணிய 398

உலகை யளவிட் டுலகை விழுங்கி
உலகுக் கினிமை யுதவி - இலகி 399

அரியிற் குலவி யமுதிற் சமைத்த
கிரியிற் பொலிவு கிளர - உரிய 400

புழுகு பனிநீர் புணர்களபச் சேற்றில்
முழுகி வளரு முலையாள் - எழுதும் 401

பழுதற்ற வோவியரும் பண்பாற் றெரிந்தும்
எழுதக் கிடையா விடையாள் - மொழியும் 402

குடபா லிரவி குதிப்பக் கலைகள்
உடையான் குணபா லுதிப்ப - இடையாடும் 403

தென்றற் கொழுந்துலவுந் தெய்வமணி மண்டபத்தின்
முன்றிற் றிருமாதர் மொய்த்திறைஞ்ச - நின்று 404

மனங்கவரு மையல் வளர விருப்பாள்
அனங்கன் கொடுஞ்சமருக் கஞ்சி - இனம்பயிலும் 405

கோவைக் கனித்துவர்வாய்க் கோதையர்க்குக் கூறாமல்
பூவையர்க்குக் கற்பிப்பாள் போலிருந்து - தேவர்க் 406

கதிபன் முதல்வ னணியால வாயின்
முதல்வ னிசைகண் மொழிவாள் - மதுரைதிரு 407

வாலவா யானதுவும் வாள்வளவன் சேனையொளி
கோலுமட லம்பாற் குலைத்ததுவும் - சீலமுறச் 408

சங்கப் பலகை புலவர்பெறத் தந்ததுவும்
கொங்குதேர் வேதியற்காக் கூறியதும் - கொங்குதேர் 409

சோராவற்குத் தீதகலச் சொற்றதுவும் பற்றியநக்
கீரர் தமிழ்முனிபாற் கேட்டதுவும் - சீருடைய 410

செந்தமிழை யூமை தெரிவித் ததுவும்வடபால்
எந்தையிடைக் காடற்கா வெய்தியதும் - சிந்தை 411

மகிழ்ந்துரைக்கும் போது வனசப் பதியும்
புகழ்ந்த வுதயகிரி போத - மிகுந்துலகம் 412

மொய்த்த விருளு மகல முகமலர்ந்து
சித்திர மன்ன திருவெழுந்து - முத்தமிழும் 413

கற்றார் புகழுங் கடம்பவனத் தாலயத்துள்
பொற்றா மரைப்பொய்கை போயணுகிச் - சுற்றும் 414

விரிந்ததடங் கண்டு வியந்து நயந்து
பரிந்து சிலதியரைப் பார்த்துத் - திருந்துமணி 415

நீலக் கருங்கெண்டை யங்க ணிறைவுதரும்
கோலத்தோ டுள்ளங் குளிர்ச்சியடைந் - தேல 416

முளரி முகமலர்ந்து முத்தந் தரித்து
வளைகள் செறிந்து வயங்கி - அளிசேர்ந் 417

துகளு மிருப்பா லுடையான் றிருத்தார்
அகமகிழப் பெற்றுமய லாற்றும் - மகளிர் 418

தமைப்பொருவு மிந்தத் தடமென்று நேசத்
திமைக்குமணிப் பூணா ளியம்பி - அமைத்தவிழி 419

ஓரா யிரக்கடவு ளுற்றபெருந் தீவினைபோல்
தீராத வென்மயலைத் தீர்த்திரென - நீராடி 420

ஆடை யணிமுற் றணிந்தான் கரையணையப்
பாடலிசைப் பாணன் பணிந்திறைஞ்சி - ஆடல்வேள் 421

வெற்றித் திருவளைய மின்னே யரன்பவனி
இற்றைக்கு முண்டென் றியம்பினான் - சொற்றகைய 422

பாணற்குப் பைம்பூணும் பட்டா டையுமுதவி
யாணர்த் திருமா ளிகையெய்தி - ஆணிமணிப் 423

பீடத் திருக்கவொரு பெய்வளையாள் வந்திறைஞ்சி
ஆடகப் பொற்பூ ணணிந்தக்கால் - கூடல் 424

அமலர் பவனி யருகி னெடுமால்
கமல வனிதையெனக் காணும் - அமையும் 425

வயிர மணிபுனைந்தான் மாமலரோ னன்னூல்
பயிலு மரிவையெனப் பார்க்கும் - செயிரில் 426

கதிருதய பானு கதிர்கரப்ப வீசும்
புதிய மரகதப் பூணான் - மதிமுகத்து 427

வல்லிக் கலங்காரஞ் செய்து மலர்க்கரத்தில்
அல்லிக் குவளை அளித்தயல்சூழ் - மெல்லியர்க்கு 428

வைத்த கனகம் வயிரந் தரளமணிப்
பத்தி யணியணிந்து பன்மாதர் - மொய்த்திறைஞ்சப் 429

பக்க முறநிறுத்திப் பாணன் றனைநோக்கி
மிக்க வுவமை விளம்பென்றாள் - தக்கமலர்ச் 430

செந்தா மரையாளும் வெண்டா மரையாளும்
மந்தா கினியு மருங்கெய்த - வந்தித் 431

தரமகளிர் சூழ வகிலாண்டம் பெற்ற
வரைமகடான் வீற்றிருந்த வாறு - பொருவுமெனச் 432

கன்னி யெதிர்நின்று கைகுவிய மெய்குழைய
இன்னிசையாழ்ப் பாண னியம்பினான் - தென்னவற்காக் 433

கான்மாறி யாடுகின்ற காரணனை யாரணனை
நான்மாடக் கூடலுக்கு நாயகனைத் - தான்மால்கொண் 434

டாவியப் பூணா யழுத்தி நினைந்துருகி
ஓவியப் பாவையை யொத்திருந்தாள் - மேவா 435

அரக்க னுரத்தை யடுக்க லெடுக்க
நெரித்த வொருத்த னிருத்தன் - விரித்த 436

விதிப்படி யுற்ற விற‌ற்சமன் வெற்றி
பதைக்க வுதைத்த பதத்தன் - மதித்த 437

சதுரான னன்கண்ணன் சங்கார காலன்
மதுரா புரேசன் மணாளன் - கதுவுமலர்ப் 438

போதுதிர்க்குங் கற்பகப்பூம் பொன்விருக் கத்தின்மேல்
வீதி மறைபரவ மேவுதலும் - ஆதரவு 439

கொண்டாள் விரைந்தணைந்தாள் கூடிப்பெருமானைக்
கண்டா ளிருகண் களிகூர்ந்தாள் - வண்டு 440

மருக்கமழுங் கொன்றையான் மாமூர லீந்தான்
தருக்கிப் புளகந் தழைத்தாள் - கருப்புச் 441

சிலையி னுதறிகழச் செங்கமல வாச
மலரின் வதனம் வயங்க - நிலவு 442

தளவ முறுவ றயங்க வசோகத்
தொளியும் வடிவு மொளிர - மிளிர்சூதப் 443

போதிற் சுணங்கு பொலியக் கழுநீரிற்
காதிற் பொருகண் களிசிறப்ப - ஓதும் 444

மகரக் கொடியின் மணிக்குழைகள் வாய்ப்ப
இகலிப் பொருமதன னேற்றம் - அகலவெதிர் 445

வென்றிறைவன் றன்னருளால் வேளரசு கைக்கொண்டு
நின்றனன்போ லாயிழையு நேர்நின்றாள் - குன்றாத 446

மெய்ப்பா லணங்குடையான் வெள்ளிமணி மன்றுடையான்
அப்பா லுலாவந்தா னாங்கொருத்தி - இப்பாரில் 447

பேரிளம்பெண்

மாறாத வெற்றிபுனை மாரவேண் மாதவத்தின்
பேறா மெனவந்த பேரிளம்பெண் - கூறின் 448

வருத்தி யுடனே மகிழு மதனூல்
விருத்தி யதுராக வெள்ளம் - திருத்தும் 449

அமுத முதவ வவதரித்த மூரற்
குமுத வதனநறுங் கொம்பு - தமரம் 450

பழகு முத்திப் படிபுதுமை யேற
அழகு பயந்த வணங்கு - விழையும் 451

சுரத மதனச் சுருதி யறிவுக்
கிரதி பரவ விருப்பாள் - மருவு 452

திருவா லுருவாற் றிருப்பாற் கடன்மேல்
வருவாள் புகழ வருவாள் - பெரியோர் 453

நிறைகழிக்க மையொழித்து நேரெதிர்த்த வேந்தர்
உறைகழித்த வேலொத் துலாவி - இறையெடுத்த 454

முத்தலைவே லென்னவுயிர் முற்று முடித்தறவோர்
சத்தியவெஞெ சாபந் தனையொத்து - வித்தகமாம் 455

விற்றே ரநங்கனையும் வேற்றடக்கைக் கூற்றினையும்
குற்றேவல் கொண்டகொடுங் கூர்விழியாள் - துற்றணிந்த 456

வேரித்தா மப்பளித மென்சந் தனக்குழம்பாற்
பூரிப்பாற் செய்யமணிப் பூணாரப் - பாரிப்பால் 457

எண்பார்த் தலத்துளிடை யில்லையென்று போகாமல்
கண்பார்த்த வன்ன கனதனத்தாள் - நண்பால் 458

இறைப்பொழுது நீங்கா திறைதிருமே னிக்கண்
உறைக்குந் தகையுமென வுற்றோ - மறைத்ததற்கு 459

மெய்வளையு மாமை மிகவெறுக்கு மென்றோமுன்
கைவளையுந் தோள்வளையுங் காதலியாள் - மைவளையும் 460

விண்படைத்த மாடத்தின் மீதே மதிள்புடைசூழ்
வண்பளிங்கிற் செய்தமைத்த மண்டபத்துக் - கண்களிப்ப 461
வெண்ணிலா முன்றிலிடை மீதேறி நீர்வெள்ளம்
தண்ணிலா வெள்ளமெனத் தையலார்-எண்ணிலார் 462

தங்க டிருமுகமுந் தாழ்குழலும் பங்கயத்திற்
பொங்கி யெழுமளிகள் போற்பொலியத்-தங்கம் 463
செறியு மணிக்குழையுஞ் செங்கண்ணும் வள்ளை
மறியுங் கயற்செயல்கண் மானக்-குறியாத் 464

தளரிடையுங் கொங்கைகளுந் தாமரைநா ளத்து
வளரு மிருமுகையின் வாய்ப்பக்-களமும் 465

நகையு மணிபணில நன்முத்த மென்னத்
துகில்க டிரைபோலத் தோற்றத்-திகழும் 466

புலராத செவ்விப் பொலிவா லொளிகூர்
மலர்வாவி யைமுன்றின் மான-மலர்வாவிச் 467

செம்பதுமப் பீடத்துச் சேரோ திமமென்ன
அம்பவளப் பீடத் தமர்ந்திருந்து-நம்பன் 468

ஒருவ னெமையா ளுடையான் புயங்கள்
கருதி யயர்கென்ற காலை-முருகியலும் 469

அம்புயமும் பாற்கடலு மைந்தருவுஞ் சிந்தித்தோர்
தம்பதங்க ளாக்கொள்ளத் தந்தருளும்-நம்பெருமான் 470

திங்க டனையொழித்துச் செங்கதிராம் வெங்கதிரைக்
கங்குலுக்குங் கற்பித்த காரணத்தை-மங்கைமீர் 471

சாற்றுமென யாழ்த்தடக்கைத் தைய லொருவிறலி
கோற்றொடியஞ் செங்கை குவித்திறைஞ்சித்-தோற்றம் 472

கருனா கரனைக் கடம்பவனத் தானை
மருவாமல் வாடு மகளிர் - திருவாயாம் 473

செங்குமுதத் துக்குந் திகழ்முரன் முல்லைக்கும்
அங்கட் சகோதர மவைதமக்கும் - திங்கள் 474

பரிதியெனத் தோன்றும் பரமன் புயத்துக்
குரிய நினக்கிவ் வுரையேன் - தெரியிழாய் 475

ஓசை ய‌மிர்த‌டியே முற்ற‌ருந்த‌ யாழ்சிறிது
வாசியென‌ நின்று வ‌ண‌ங்குத‌லும் - மாசிலாத் 476

த‌ந்திரியாழ் வாங்கிச் சராசரங்க ணின்றுருகக்
கந்திருவக் கன்னியருங் கண்டுவப்ப - அந்தமிசை 477

ஆதி வ‌லைவீசி ய‌ன்புற் ற‌த‌வுமுண்மை
வாதவூ ர‌ர்க்கு வ‌ழ‌ங்கிய‌தும் - பேத‌ம‌ற‌ 478

வெம்ப‌ரியைப் பாண்டிய‌ற்கு விற்ற‌துவு ம‌ற்றைநாள்
அம்புவியெண் வையை ய‌ழைத்த‌துவும் - எம்பெருமான் 479

பிட்டுக்கு ம‌ண்சும‌ந்த‌ பேர‌ருளுந் தென்ன‌வ‌னை
அட்ட‌த‌ழ‌ல் வெப்பை ய‌க‌ற்றிய‌தும் - ம‌ட்டில‌ம‌ண் 480

வெங்க‌ழுவி லேற விடுத்த‌துவும் வ‌ன்னிகிண‌
ற‌‌ங்க‌ளை க‌ற்பா ல‌ழைத்த‌துவும் - த‌ங்கும் 481

இருந்தண் டமிழ்பாடி யாழ்கலனே யாகக்
கருங்கங்கு லாழிகரை கண்டாள் - பெருங்கவர்க்கால் 482

வாரண மார்ப்ப மலர்வண் டொலியெழுப்பக்
காரிரு ளோடக் கடிக்கமல - வேரி 483

அலர நிருத ரழியக் கதிர்கள்
மலரத் தொழில்கள் வளர - விரகால் 484

இரவி குணபா லெழுபுரவித் தேர்மேல்
வரும்பி ராம மழுங்கப் - பரவும் 485

மதவா ரணமு மணிவா ரணமும்
விதவார வாரம் விளைக்கக் - கதுவு 486

முறைச்சுருதி யாழொலியு மூவாத தெய்வ
மறைச்சுருதி சூழொலியு மல்கத் - திறத்தடையும் 487

பல்லுயிரிற் பேரிருளும் பாரிற் கலியிருளும்
ஒல்லை யடையா துடைந்திரிய - நல்லோர் 488

முகத்தா மரையு முனிவொன் ற்றியா
அகத்தா மரையு மலரப் - பகைத்தமொழி 489

ஈனச் சமயத் திகலழிய வெல்லையிலா
ஞானக் கதிர்க ணலமுதவத் - தானே 490

தருமந்த மில்லாச் சராசரங்கட் கெல்லாம்
பருவம் பெறஞான பானு - ஒருவனெழில் 491

எட்டானை பூண்டெழுந்த விந்திரவி மானத்து
மட்டார் மலர்வீதி வந்தணையத் - தொட்டாரேல் 492

முன்னமய லைத்தீர்க்க மோகம் வடிவுடைய
தன்ன மடப்பாவை யாயத்தார் - தன்னருகு 493

போற்ற மதுரா புரேசன் பவனியெதிர்
ஏற்று நடந்தா ளிறைஞ்சினாள் - ஆற்றாப் 494

பெருமா மயக்கத்தைப் பெற்றுவந்த தன்மை
ஒருநாவா லோத லுறுமே - அருகொரு 495

சேடி யிவணிற்கச் செந்தமி ழாகரனை
ஓடி வணங்கி யுடையானே - நீடி 496

வளமதியத் தீயால் வதன மதியும்
உளமதியும் வாட லுணரேம் - அளவில் 497

ஒருமைக் கடலொலியா லுற்றதுயி னீங்கி
இருமைக் கடலுலைவ தென்னே - ஒருமலயக் 498

காற்றா லிரண்டு களபவரை முத்தாரம்
ஆற்றாத தென்னோ வறிகிலேம் - கூற்றின் 499

விளங்கியவே யோசையால் வேய்த்தோ ளிரண்டும்
துளங்குவகை யென்னென்று சொல்கேம் - விளிந்தால் 500

மறுகு மிவளென்று வாழ்த்த வவளும்
சிறிது மயக்கந் தெளிந்து - முறைகடந்து 501

புக்க கடவுளர்தம் பொற்பழியத் தற்போத்
தக்க னியாகந் தனை யழிப்பாய் - மிக்க 502

உருவிலாக் காம னுயர்தோ ணெரித்தும்
திருவிலா மாலைச் சிதைத்தும் - இருமருங்கும் 503

யாமத்து மாதரவா மாமதிதேய்த் திட்டழித்தும்
காமக் கொடுங்கனலின் கைகுறைத்தும் - சேமித்துப் 504

பாத்துரையா மித்தரைத் பல்லுதிர்த்து மாமடலிற்
சாய்த்த விதியைத் தலைகெடுத்துஞ் - சாத்தியொளிர் 505

மாக விமான மனம்வளர்த்த வென்றுயரம்
யோக மளித்தொழிக்க வொண்ணாதோ - மோகமுற 506

வாரூ டறுத்து வளர்முலைக்குந் தோளுக்கும்
சீரூரு மானிடர்க்குந் தேவர்க்கும் - ஆரூரில் 507

செம்பொற் றியாக மளிப்பதுபோற் செம்பசலை
அம்பொற் றியாக‌ ம‌ளிப்ப‌தேன் - அம்பிகை 508

ஆர‌த் த‌ழுவு ம‌ரிய‌ திருமேனி
சேய‌க் குழைத்த‌ செய‌றீர‌ப் - பாரில் 509

அரிவைய‌ர்த‌ நெஞ்ச‌முட னாகங் குழைத்தால்
புரிவுதரு மத்தழும்பு போமே - விரியும் 510

ச‌டைப்பா‌ல் விள‌ங்க‌த் த‌கும்பூந் தொடையும்
இட‌ப்பாக‌ப் பூந்தொடையு மீந்தால் - ப‌டைத்த‌ 511

குலப்பாவை யாரூடல் கொள்வரேன் மற்றை
வலப்பாகத் தாமம் வழங்காய் - முலைத்தடத்திற் 512

சேர்ந்தா ளெனநின்று செப்பினா டன்னெஞ்சம்
சோர்ந்தா ளுடலந் துள‌ங்கினாள் - போந்தணுகி 513

இப்படி மாத ரெழுவகையு மால்கொள்ள‌
முப்புவன‌ங் காக்க‌ முடிபுனைந் - தொப்பிலாச் 514

சுந்த‌ர‌ மாற‌ன் சுருதி சுர‌நாட‌ர்
வ‌ந்து ப‌ர‌வு ம‌துரேச‌ன் - எந்தை 515

அருள்பாவு கோன்க‌ருனை ய‌ங்க‌யற்க ண‌ம்மை
ஒருபாக‌ன் போந்தா னுலா. 516

நூற் சிறப்புப் பாயிரம்

(இவற்றை இயற்றியவர் பெயர் தெரியவில்லை)

வெண்பா

சீரார் புராணத் திருமலைநா தன்கருணைப்
பாராளன் மெய்ஞ்ஞானப் பால்விளங்க - ஆராய்ந்து
வேதக் குலாவால் விரித்தால வாய்ச்சொக்க
நாதர்க் குலாப்பாடி னான். 1

வேதநூற் றென்முழைசை வீரமா றன்கடல்சூழ்
பூதலங்க ளன்பாய்ப் புரக்குநாள் - ஆதிநெறித்
தெய்வ மதுரைத் திருவால வாயுறைந்த
ஐயருலாக் கொண்டருளி னார். 2

வாழி மறைவாழி மன்னன் புகழ்வாழி
வாழி மதுரை நகர்வாழி - வாழியே
தண்ணளிகூர் வைகைத் தமிழ்நாடு வாழியே
கண்ணுதலோன் சைவா கமம். 3

மதுரைச் சொக்கநாதருலா முற்றும்.