நால்வர் நான்மணி மாலை - Naalvar Naanmani Maalai - சைவ சித்தாந்த நூல்கள் - Saiva Sidhantha Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com


துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

இயற்றிய

நால்வர் நான்மணி மாலை

     நால்வர் நான்மணி மாலை சைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆகிய நால்வரைப் பாராட்டி பாடிய நூலாகும். நான்மணி மாலை தமிழில் வழங்கும் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகும். முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகை மணிகளைக் கொண்டு கோக்கப் பட்ட மாலை போல், இந்நூலும், வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்னும் நால்வகைப் பாக்களை, அந்தாதித் தொடையால் அமைக்கப்பட்ட நாற்பது செய்யுள்களைக் கொண்டதாகும். இந் நூலில் திருஞானசம்பந்தர் 10 வெண்பாக்களாலும், திருநாவுக்கரசர் 10 கட்டளைக் கலித்துறைகளாலும், சுந்தரர் 10 ஆசிரிய விருத்தங்களாலும், மாணிக்கவாசகர் 10 ஆசிரியப்பாக்களாலும் புகழ்ந்து பாராட்டப்பட்டுள்ளனர்.

காப்பு
குறள் வெண்பா

எப்போ தகத்து நினைவார்க் கிடரில்லை
கைப்போ தகத்தின் கழல்.

1. திருஞானசம்பந்தர்
(நேரிசை வெண்பா)

பூவால் மலிமணிநீர்ப் பொய்கைக் கரையினியற்
பாவால் மொழிஞானப் பாலுண்டு - நாவால்
மறித்தெஞ் செவிஅமுதாய் வார்த்தபிரான் தண்டை
வெறித்தண் கமலமே வீடு.

2. திருநாவுக்கரசர்
(கட்டளைக் கலித்துறை)

வீட்டிற்குவாயில் எனுந்தொடை சாத்துசொல் வேந்தபோது
ஆட்டிற்கு வல்லன் ஒருவற்கு ஞான அமுதுதவி
நாட்டிற் கிலாத குடர்நோய் நினக்குமுன் நல்கினுமென்
பாட்டிற்கு நீயும் அவனுமொப் பீரெப் படியினுமே.

3. சுந்தரர்
(அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

படியிலா நின்பாட்டில் ஆரூரா! நனிவிருப்பன் பரமன் என்பது
அடியனேன் அறிந்தனன்வான்தொழும்ஈசன்நினைத்தடுத்தாட்கொண்டுமன்றித்
தொடியுலா மென்கைமட மாந்தர்பால் நினக்காகத் தூது சென்றும்
மிடியிலா மனைகள்தொறும் இரந்திட்டும் உழன்றமையால் விளங்கு மாறே.

4. மாணிக்கவாசகர்
(நேரிசையாசிரியப்பா)

விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
காரணன் உரையெனும் ஆரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்த தென்குவீ ராயின் 5
வேதம் ஓதின் விழிநீர்ப் பெருக்கி
நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்
திருவா சகமிங் கொருகால் ஓதிற்
கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய 10
மெய்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே.

5. திருஞானசம்பந்தர்
(நேரிசை வெண்பா)

இலைபடர்ந்த பொய்கை இடத்தழுதல் கண்டு
முலைசுரந்த அன்னையோ முன்நின்-நிலைவிளம்பக்
கொங்கை சுரந்தஅருட் கோமகளோ சம்பந்தா
இங்குயர்ந்தா ளார்சொல் லெனக்கு.

6. திருநாவுக்கரசர்
(கட்டளைக் கலித்துறை)

எனக்கன்பு நின்பொருட் டெய்தாத தென்கொல்வெள் ளேறுடையான்
தனக்கன்பு செய்திருத் தாண்டக வேந்தஇத் தாரணியில்
நினக்கன்பு செய்கின்ற அப்பூதி யைச்சிவ நேசமுறும்
இனர்க்கன்பு செய்நம்பி ஆருரன் ஏத்தும் இயல்பறிந்தே.

7. சுந்தரர்
(அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

அறிந்து செல்வம் உடையானாம் அளகைப் பதியாற் தோழமைகொண்டு
உறழ்ந்த கல்வி உடையானும் ஒருவன் வேண்டுமென இருந்து
துறந்த முனிவர் தொழும்பரவை துணைவா! நினைத்தோ ழமைகொண்டான்
சிறந்த அறிவு வடிவமாய்த் திகழும் நுதற்கட் பெருமானே.

8. மாணிக்கவாசகர்
(நேரிசையாசிரியப்பா)

பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்
மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே
வாசகம் அதற்கு வாச்சியம்
தூசகல் அல்குல் வேய்த் தோளிடத் தவனே.

9. திருஞானசம்பந்தர்
(நேரிசை வெண்பா)

இடுகாட்டுள் மாதர் எலும்பிற் புரண்மால்
சுடுகாட்டுள் ஆடுவார் சுட்டின்-ஒடுகாட்டுஞ்
சம்பந்தா என்புநின்பால் தந்தாக்கிக் கொண்டிலன்என்
கும்பந்தாம் என்னுமுலைக் கொம்பு.

10. திருநாவுக்கரசர்
(கட்டளைக்கலித்துறை)

கொள்ளைக் கதிர்முத்தின் பந்தரும் சின்னமுங் கொள்ளுமொரு
பிள்ளைக் கதுதகும் நாவர சாய பெருந்தகையோய்!
கள்ளைக் குவளை உமிழ்வீ ழியிற்படிக் காசொன்றுநீ
வள்ளைக் குழைஉமை பங்காளர் கையிலென் வாங்கினையே.

11. சுந்தரர்
(எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

வாங்குசிலை புரையும்உடல் எனுங்குளத்தில் மூல
    மலமெனுமோர் வெங்கரவின் பகுவாயில்நின்றும்
தீங்கிலுயிர் எனும்பவனக் குலமகனை ஆதி
    திரோதாயி என்னுமொரு வெந்திறற் கூற்றுவனால்
ஓங்குறுநா தாந்தமெனப் பெயரியஅக் கரையில்
    உமிழ்வித்துச் சிவமெனுமோர் தந்தையொடுங் கூட்டாய்
கோங்கமுகை கவற்றும்இள முலைப்பரவை மகிழக்
    குண்டையூர் நென்மலைமுற் கொண்டஅருட் கடலே.

12. மாணிக்கவாசகர்
(நேரிசையாசிரியப்பா)

கடல்நிற வண்ணன் கண்ணொன் றிடந்து
மறைச்சிலம் பரற்றும் மலரடிக் கணியப்
பரிதி கொடுத்த சுருதிநா யகற்கு
முடிவிளக் கெரித்தும் கடிமலர்க் கோதையைச்
சுரிகுழற் கருங்கண் துணைவியை அளித்தும் 5
அருமகள் நறும்பூங் கருமயிர் உதவியும்
நென்முளை வாரி இன்னமு தருத்தியும்
கோவண நேர்தனை நிறுத்துக் கொடுத்தும்
அகப்படு மணிமீன் அரற்கென விடுத்தும்
பூட்டி அரிவாள் ஊட்டி அரிந்தும் 10
தலையுடை ஒலிக்குஞ் சிலையிடை மோதியும்
மொய்ம்மலர்க் கோதை கைம்மலர் துணித்தும்
தந்தையைத் தடிந்தும் மைந்தனைக் கொன்றும்
குற்றஞ் செய்த சுற்றங் களைந்தும்
பூக்கொளு மாதின் மூக்கினை யரிந்து 15
மிளமுலை மாதர் வளமை துறந்தும்
பண்டைநாள் ஒரு சிலர் தொண்டராயினர்
செங்கண்மால் தடக்கையில் சங்கம் நாண
முட்டாள் தாமரை முறுக்கவிழ் மலர்மேல்
வலம்புரி கிடக்கும் வாதவூர் அன்ப 20
பாடும் பணிநீ கூடும் பொருட்டு
மதுரைமா நகரிற் குதிரை மாறியும்
விண்புகழ் முடிமிசை மண்பொறை சுமந்தும்
நீற்றெழில் மேனியில் மாற்றடி பட்டும்
நின்னைத் தொண்டன் என்னக் கொண்டனன் 25
இருக்கும் அடுக்கல் அரக்கன் எடுப்ப
முலைபொர வரைபொரு மொய்ம்பின்
மலைமகள் தழுவ மனமகிழ் வோனே.

13. திருஞானசம்பந்தர்
(நேரிசை வெண்பா)

மகிழ்ச்சி மிகஉண்டு போலுமெதிர் வந்து
புகழ்ச்சியொடு நீபாடும் போது-நெகிழ்ச்சிமலர்ச்
சந்தையினும் வண்டிரையும் தண்புகலிச் சம்பந்தா!
தந்தையினும் பால் கொடுத்த தாய்க்கு.

14. திருநாவுக்கரசர்
(கட்டளைக் கலித்துறை)

தாயிலி யாகுஞ் சிவபெரு மான்தனைத் தானெனுமோர்
கோயிலி னாரறி வாகிய நாமமுன் கொண்டிருந்த
வாயிலின் ஆணவ மாகுங் கபாடமு மன்திறந்து
நோயிலி ஆகிய சொல்லிறை காட்டுவன் நோக்குதற்கே.

15. சுந்தரர்
(எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

நோக்குறு நுதலோன் நின்னிடை விருப்பால் நூற்பக வன்னநுண் மருங்குல்
வார்குவி முலைமென் மகளிர்தம் புலவி மாற்றுவான் சென்றனன் என்றால்
கோக்கலிக்காமன் வயிற்றிடைக் குத்திக் கொண்டதே துக்குநீ புகலாய்
காக்கரு மதலை விழுங்கிய முதலை கான்றிடத் தோன்றுநா வலனே.

16. மாணிக்கவாசகர்
(நேரிசையாசிரியப்பா)

வலமழு உயரிய நலமலி கங்கை
நதிதலை சேர்ந்த நற்கரு ணைக்கடன்
முகந்துல குவப்ப உகந்தமா ணிக்க
வாசகன் எனுமொருமாமழை பொழிந்த
திருவா சகமெனும் பெருநீர் ஒழுகி 5
ஓதுவார் மனமெனும் ஒண்குளம் புகுந்து
நாவெனு மதகில் நடந்து கேட்போர்
செவியெனு மடையின் செவ்விதின் செல்லா
உளமெனு நிலம்புக ஊன்றிய அன்பாம்
வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி 10
வளர்ந்து கருணை மலர்ந்து
விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே.

17. திருஞானசம்பந்தர்
(நேரிசை வெண்பா)

பயனாகு நல்லாண் பனைக்கு விடத்திற்கும்
மயிலாகு நோய்க்கு மருந்தாம்-உயிராகுஞ்
சிந்துமெலும் பிற்குச் சிரபுரத்து நாவலன்சம்
பந்தன் இயம்புதிருப் பாட்டு.

18. திருநாவுக்கரசர்
(கட்டளைக் கலித்துறை)

பாட்டால் மறைபுக ழும்பிறை சூடியைப் பாடிமகிழ்
ஊட்டா மகிழ்சொல் லிறைவனைப் பாடி உவப்புறுக்க
வேட்டான் மலிபெருங் கல்லவன்போல மிதப்பனெனப்
பூட்டா மறிதிரை வார்கடற் கேவிழப் போதுவனே.

19. சுந்தரர்
(எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

போதம்உண்ட பிள்ளை என்பு பொருகண்மாது செய்ததோ
காதல்கொண்டு சொல்லின் மன்னர் கன்மி தப்ப உய்த்ததோ
வாய்தி றந்து முதலை கக்க மகனை நீய ழைத்ததோ
யாது நம்பி அரிது நன்றெ னக்கி யம்ப வேண்டுமே.

20. மாணிக்க வாசகர்
(நேரிசையாசிரியப்பா)

"வேண்டுநின் அடியார் மெய்யன் பெனக்கும்
அருள்செய் சிவனே அலந்தேன் அந்தோ
முறையோ! முறையோ! இறையோ னே" என்று
அழுது செம்பொன் அம்பலக் கூத்தன்
அருளாற் பெற்ற அன்பினில் ஒருசிறிது 5
அடிய னேற்கும் அருளல் வேண்டும்
நீயே கோடல் நின்னருட் பெருக்கிற்கு
ஏற்ற தன்றிள ஏறுகந் தேறியைப்
பரிமா மிசைவரப் பண்ணிய வித்தக
திருந்திய வேத சிரப்பொருள் முழுவதும் 10
பெருந்துறை இடத்துப் பெருஞ் சீர்க்
குருந்துறு நீழலிற் கொள்ளை கொள்வோயே.

21. திருஞானசம்பந்தர்
(நேரிசை வெண்பா)

கொள்ளை கொள்ள வீடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத்
தள்ளும் திருஞான சம்பந்தா!-வெள்ளமிடும்
ஏடேறப் பால்குறைந்த தென்றழுவ ரேகழுவின்
காடேறப் புக்கஅரு கர்.

22. திருநாவுக்கரசர்
(கட்டளைக் கலித்துறை)

அருகக் கடல்கடந் தேறிய தோசிலை அம்பியெனப்
பெருகக் கடல்கடந் தேறிய தோசொல் பெருமிடறு
கருகக் கடல்விட முண்டோ ன் அடியிற் கசிந்து மனம்
உருகக் கடலன்பு பெற்றசொல் வேந்த உனக்கரிதே.

23. சுந்தரர்
(அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

உனற்க ரும்புகழ் மேவிய சுந்தரன் உம்பன்மீ திவரா
நினைப்ப ருங்கயி லாயம் அடைந்தமை நின்றுகாண் குறவே
எனக்கு வந்துறு மோமகவென்றழு கின்றநாள் அலைபால்
தனித்த ருந்துபு மாலை உமிழ்ந்திடு தம்பிரான் நலனே.

24. மாணிக்கவாசகர்
(நேரிசையாசிரியப்பா)

நலமலி வாதவூர் நல்லிசைப் புலவ!
மனநின் றுருக்கு மதுர வாசக!
கலங்குறு புலநெறி விலங்குறு வீர!
திங்கள் வார்சடைத் தெய்வ நாயகன்
ஒருகலை ஏனும் உணரான் அஃதான்று 5
கைகளோ முறிபடுங் கைகள் காணிற்
கண்களோ ஒன்று காலையிற் காணும்
மாலையில் ஒன்று வயங்கித் தோன்றும்
பழிப்பின் ஒன்று வழிப்பின் எரியும்
ஆயினுந் தன்னை நீபுகழ்ந் துரைத்த 10
பழுதில் செய்யுள் எழுதினன் அதனாற்
புகழ்ச்சி விருப்பன் போலும்
இகழ்ச்சி அறியா என்பணி வானே.

25. திருஞானசம்பந்தர்
(நேரிசை வெண்பா)

வானும் புகழ்புகலி மன்னன் தொடர்பொன்று
தேனுந் திதழியோன் சீரேடு-தானுங்
கரியாய் மொழியுங் கரியாய் விடாமல்
எரியார் அழல்வீழ்ந் தெழுந்து.

26. திருநாவுக்கரசர்
(கட்டளைக் கலித்துறை)

துடைவாழை மேல்மட வாரல்குற் பாம்பு தொடமயங்கி
நடைவாய்ப் பிணமெனப் பட்டார் பெறுகிலர் நச்சுக்குலை
உடைவாழை மேல்உர கந்தீண்ட மாய்ந்த ஒருவனுயிர்
அடைவான் அருள்புரி யுந்திரு நாவுக் கரசினையே.

27. சுந்தரர்
(அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

அரசன் பரிமேல் வரநெடுநல் யானை எருத்தத் தமர்ந்துபோய்
வரதன் கயிலை மலை அடைந்த மணியே! மணிநீர் இடுபசும்பொன்
திரைசங் கெறியுங் குளத்துவரச் செங்கற் செம்பொ னாப்பாடும்
பரிசின் றெனக்குன் செம்பவளத் திருவாய் மலர்ந்து பகர்வாயே.

28. மாணிக்கவாசகர்
(நேரிசையாசிரியப்பா)

பகிர்மதி தவழும் பவளவார் சடையோன்
பேரருள் பெற்றும் பெறாரின் அழுங்கி
நெஞ்சநெக் குருகி நிற்பை நீயே
பேயேன் பெறாது பெற்றார் போலக்
களிகூர்ந் துள்ளக் கவலை தீர்ந்தேனே 5
அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கை
வாதவூர் அன்ப ஆத லாலே
தெய்வப் புலமைத் திருவள் ளுவனார்
'நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்' எனும் 10
செஞ்சொற் பொருளின் தேற்றறிந் தேனே.

29. திருஞானசம்பந்தர்
(நேரிசை வெண்பா)

தேனே றலர்சூடிச் சில்பலிக்கென் றூர்திரியும்
ஆனேறி யாண்டுப்பெற் றான்கொல்நீ-தானேறும்
வெள்ளைமணி என்று வினவுவோம் வாங்கியஅப்
பிள்ளையையாங் காணப் பெறின்.

30. திருநாவுக்கரசர்
(கட்டளைக் கலித்துறை)

பெற்றால் நினைப்பெற் றவர்போற் பெறலும் பிறப்பதுண்டேல்
நற்றா ரணியில் நினைப்போற் பிறப்பது நல்லகண்டாய்
செற்றார் புரம்எரி செய்தவில் வீரன் திருப்பெயரே
பற்றா மறிவெண் திரைக்கடல் நீந்திய பாவலனே.

31. சுந்தரர்
(அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

பாவாய்ப் பொழிந்த வானமுதப் பவளத் திருவாய் நம்பிநீ
சேவாய்ப் பொருதுந் தருமமுடைத் தேவன் மலைக்குப் போம்பொழுது
காவாய்ப் பயந்த தடக்கைமலர்க் கழறிற்றறிவார் கடாவிவரு
மாவாய்ப் பிறக்கக் கிடையாதே மாவாய்ப் பிறக்குந் திருமாற்கே.

32. மாணிக்கவாசகர்
(நேரிசையாசிரியப்பா)

திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருந்தின்
நிழல்வாய் உண்ட நிகரில்லா னந்தத்
தேன்தேக் கெறியுஞ் செய்யமா ணிக்க
வாசகன் புகன்ற மதுர வாசகம்
யாவரும் ஓதும் இயற்கைக் காதலிற் 5
பொற்கலம் நிகர்க்கும் பூசுரர் நான்மறை
மட்கல நிகர்க்கும் மதுர வாசகம்
ஓதின் முத்தி உறுபயன்
வேதம் ஓதின் மெய்பயன் அறமே.

33. திருஞானசம்பந்தர்
(நேரிசை வெண்பா)

'அறத்தா றிதுஎன வேண்டாசிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை'யை-மறுத்தார்சம்
பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்
றுந்துஞ் சிவிகையினை ஊர்ந்து.

34. திருநாவுக்கரசர்
(கட்டளைக் கலித்துறை)

ஊர்ந்து வரும்இள ஏறுடை யான்தன் உளத்தருளாற்
சார்ந்து சமண்விட் டுறுமுனக்கேவருஞ் சைவநலங்
கூர்ந்து மிளிர்தரு நாவர சேநல் குரவுமுனஞ்
சேர்ந்து மருவினர்க் கேசிறந் தோங்குறுஞ் செல்வமுமே.

35. சுந்தரர்
(அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

செல்வநல்லொற்றி ஊரன் செய்யசங் கிலியால் ஆர்த்து
மல்லலம் பரவை தன்கண் மாழ்குற அமிழ்த்து மேனும்
அல்லுநன் பகலும் நீங்கா தவன்மகிழ் அடியில் எய்தி
நல்லஇன் படைந் திருப்பன் நம்பிஆ ரூரன் தானே.

36. மாணிக்கவாசகர்
(நேரிசையாசிரியப்பா)

தானே முத்தி தருகுவன் சிவனவன்
அடியன் வாதவூரனைக்
கடிவின் மனத்தாற் கட்டவல் லார்க்கே.

37. திருஞானசம்பந்தர்
(நேரிசை வெண்பா)

வல்லார் பிறப்பறுப்பர் வண்மை நலங்கல்வி
நல்லா தரவின்ப ஞானங்கள்-எல்லாம்
திருஞானசம்பந்தன் சேவடியே என்னும்
ஒருஞான சம்பந்தம் உற்று.

38. திருநாவுக்கரசர்
(கலித்துறை)

உற்றா னலன்தவந் தீயில்நின் றான்அலன் ஊண்புனலா
அற்றா னலன் நுகர் வுந்திரு நாவுக் கரசெனுமோர்
சொற்றான் எழுதியுங் கூறியு மேஎன்றுந் துன்பில்பதம்
பெற்றான் ஒருநம்பி அப்பூதி என்னும் பெருந்தகையே.

39. சுந்தரர்
(எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

பெருமிழலைக் குறும்பரெனும் பரமயோகி
    பெரிதுவந்துன் திருவடித்தா மரையைப் போற்றி
விரைமலர்தூய் வந்தனைசெய் கின்றான் என்றால்
    விளங்கிழையார் இருவரொடும் முயங்கலாமோ
உரைமதிநின் தனைவெறுப்ப தென்கொல் நின்னை
    உடையானுக் கடுத்தசெயல் உனக்கு மாயிற்
சுரர் முனிவர் பரவலுறும் பெருஞ்சீர்த் தொண்டத்
    தொகைசெய்தோய் அறமுதனால் வகைசெய்தோயே!

40. மாணிக்கவாசகர்
(நேரிசையாசிரியப்பா)

செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி
பாதம் போற்றும் வாதவூர் அன்ப
பாவெனப் படுவதுன் பாட்டுப்
'பூவெனப் படுவது பொறிவாழ் பூவே.'




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247