பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி - 6 ...

16. பாத்திரம்

501. திலமத் தனையே சிவஞானிக்கு ஈந்தாற்
பலமுத்தி சித்தி பரபோகமும் தரும்
நிலமத்தனை பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும்அற்றே பர போகமும் குன்றுமே. 1

502. கண்டிருந்தார் உயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந்தார் உயிர் கொள்ளும் குணத்தனை
நன்றுணர்ந்தார்கு அருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந்தார் சிலர் தேவருமாமே. 2

503 கைவிட்டிலேன் கருவாகிய காலத்து
மெய்விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடையான் அடி
நெய் விட்டிலாத இடிஞ்சிலும் ஆமே. 3

504 ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே. 4

(இப்பாடல் 2175-ம் பாடலாகவும் வந்துள்ளது)

17. அபாத்திரம்

505 கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே. 1

506 ஈவது யோக இயம நியமங்கள்
சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்க்கன்றி
ஆவது அறிந்து அன்பு தங்காதவர்க்களுக்கு
ஈவ பெரும்பிழை என்று கொளீரே. 2

507 ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்
காமாதி விட்டோ ர்க்குந் தரல்தந்து கற்பிப்போன்
போமா நரகிற் புகான் போதம் கற்கவே. 3

508 மண்மலை அத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்க்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே. 4

18. தீர்த்தம்

509 உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனம் உடைக் கல்வி இலோரே. 1

510 தளி அறிவாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளி அறிவாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளி அறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளி அறிவாளர் தம் சிந்தையுளானே. 2

511 உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தின் ஆரும் கலந்து அறிவார் இல்லை
வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பந்தருளானே. 3

512 அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதம் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியர் ஆமே. 4

513 கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
*உடலுற்றுத் தேடுவார் தம்மை ஒப்பார் இலர்
திடம் உற்ற நந்தி திருவருளால் சென்று
உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே. 5

* உடலுறத்

514 கலந்தது நீர் அது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீர் அது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீர் அது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர் நிலம் காற்று அது ஆமே. 6

19. திருக்கோயில் (திருக்கோயிலிழிவு)

515 தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. 1

516 கட்டுவித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக்கும் அபிடேகத்து அரசரை
முட்டுவிக்கும் முனி வேதியர் ஆயினும்
வெட்டுவித்தே விடும் விண்ணவன் ஆணையே. 2

517 ஆற்றரும் நோய்மிக்கு அவனி மழையின்றிப்
போற்றரும் மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. 3

518 முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள *வாரி வளம் குன்றும்
கன்னம் களவு மிகுத்திடும் காசினி
என்னரும் நந்தி எடுத்துரைத்தானே. 4

* மாரி

519 பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தற்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே. 5

20. அதோமுக தெரிசனம்

520 எம்பெருமான் இறைவா முறையோ என்று
வம்பு அவிழ் வானோர் அசுரன் வலி சொல்ல
அம் பவள மேனி அறுமுகன் போய் அவர்
தம்பகை கொல் என்ற தற்பரன் தானே. 1

521 அண்டமொடு எண் திசை தாங்கும் அதோமுகம்
கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை
உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர்
வெண் தலை மாலை விரிசடை யோற்கே. 2

522 செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே உரைத்துப் புகழும் *மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வன்
மை தாழ்ந்து இலங்கும் மிடறு உடையோனே. 3

* மனிதர்காள்

523 நந்தி எழுந்து நடுஉற ஓங்கிய
செந்தீக் கலந்து உள் சிவன் என நிற்கும்
முந்திக் கலந்து அங்கு உலகம் வலம் வரும்
அந்தி இறைவன் அதோ முகம் ஆமே. 4

524 அதோமுகம் கீழ் அண்டம் ஆன புராணன்
அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனும் ஆமே. 5

525 அதோமுகம் மாமலர் ஆயது கேளும்
அதோமுகத்தால் ஒரு நூறாய் விரிந்து
அதோமுகம் ஆகிய அந்தம் இல் சத்தி
அதோமுகம் ஆகி அமர்ந்திருந் தானே. 6

21. சிவ நிந்தை

526 தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளிவு உறுவார் அமராபதி நாடி
எளியன் என்று ஈசனை நீசர் இகழின்
கிளி ஒன்று பூஞையில் கீழது ஆகுமே. 1

527 முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்து அமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்ககு அல்லது தாங்க ஒண்ணாதே. 2

528 அப்பகையாலே அசுரரும் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை ஆகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே. 3

529 போகமும் மாதர் புலவி அது நினைந்து
ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலின்
வேதியர் ஆயும் விகிர்தன் ஆம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே. 4

22. குரு நிந்தை

530 பெற்றிருந்தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந்தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந்தார் வழி உற்றிருந்தார் அவர்
பெற்றிருந்தார் அன்றி யார்பெறும் பேறே. 1

531 ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத்தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்து அங்கு ஓர் உகம்
* வாரிடைக் கிருமியாய் #மாய்வர் மண்ணிலே. 2

* பாரிடைக் # படிகுவர்

532 பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் * மாண்டிடும்
சத்தியம் #ஈது சதாநந்தி ஆணையே. 3

* மாய்ந்திடுஞ்
# சொன்னோம்

533 மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறு உரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே. 4

534 ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம் அது ஆகுமே நம் நந்தி ஆணையே. 5

535 சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்கம் ஆய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்கமும் கெட்டுப் பஞ்சமும் ஆமே. 6

536 கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தான் அறக்
கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே. 7

23. மயேசுர நிந்தை

537 ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று *உண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ் நரகாகுமே. 1

* றுண்பார்

538 ஞானியை நிந்திப்பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப்பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகும்சிவ போகமே. 2

24. பொறையுடைமை

539 பற்றிநின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் *நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றாது ஒழிவது மாகமை ஆமே. 1

* நாவியும்

540 ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த *மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் #மன்னவன்
$ஞாலத்து இவன்மிக நல்லன் என்றாரே. 2

* மேனி பணிந்தடியேன் தொழ
# ஒப்புநீ
$ ஞாலத்து நம்மடி நல்கிடென்றாலே

541 ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை விளைந்து திசைதொரும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை *விளைந்தருள் எட்டலு மாமே. 3

* வளைந்தருள்

542 வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றி பதம்செய்யும்
கொல்லையில் நின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு
எல்லை இலாத இலயம் உண்டாமே. 4

25. பெரியாரைத் துணைகோடல்

543 ஓடவல்லார் தமரோடு நடாவுவன்
பாடவல்லார் ஒளி பார்மிசை வாழ்குவன்
தேடவல்லார்க்கு அருள் தேவர் பிரானொடும்
கூடவல்லார் அடி கூடுவன் யானே. 1

544 தாமிடர்ப்பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனதது அங்கு அன்பு வைத்தது இலையாகும்
நீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே
போமிடத்து என்னொடும் போது கண்டாயே. 2

545 அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் * சிலர் தத்துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன் கூடல் பேரின்பம் ஆமே. 3

* சிவதத்துவத்தை

546 தார்சடையான் தன் தமராய் உலகினில்
போர் புகழான் எந்தை பொன்னடி சேருவர்
வாய் அடையா உள்ளம் தேர்வார்க்கு அருள்செய்யும்
கோ அடைந்து அந்நெறி கூடலும் ஆமே. 4

547 உடையான் அடியார் அடியாருடன் போய்ப்
படையார் அழன்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டு அறிவிப்ப
உடையான் வருகென ஓலம் என்றாரே. 5

548 அருமை வல்லான் கலை *ஞானத்துள் தோன்றும்
பெருமை வல்லோன் பிறவிச்சுழி நீந்தும்
உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும்
திருமை வல்லாரொடு சேர்ந்தனன் யானே. 6

* ஞாலத்துள்

இரண்டாம் தந்திரம் முற்றிற்று

மூன்றாந் தந்திரம்

(வீராகமத்தின் சாரம் என்பர்)

1. அட்டாங்க யோகம்

549. *உரைத்தனவற்கு அரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
#பிரச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமம் செய்தானே. 1

* உரைத்த நவாக்கிரி
# பிரைச்சதம்

550. செய்த இயம நியமஞ் சமாதிசென்று
உய்யப் பராசக்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த உரைசெய்வன் இந்நிலை தானே. 2

551. அந்நெறி இந்நெறி என்னாது அட்டாங்கத்
தன்னெறி சென்று சமாதியிலே நின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புன்னெறி *யாகத்திற் போக்கு இல்லை ஆகுமே. 3

* யாக்கத்திற்

552. இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயாமம் *பிரத்தியாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே. 4

* நண்பிரத்தி

2. இயமம்

553. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தணியமங்கள் செய்மின் என்று அண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடையோடே
அழுந்திய நால்வர்க்கு அருள் புரிந்தானே. 1

554. கொல்லான் பொய் கூறான் களவு இலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச் செய்ய
வல்லான் பகுந்து உண்பான் மாசு இலான் கள் காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே. 2

3. நியமம்

555. ஆதியை வேதத்தின் அப்பொருளானைச்
சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசக்தியோடு உடன்
நீதி *யுணர்ந்து நியமத்தன் ஆமே. 1

* யுணர்ந்த

556. தூய்மை * அருள் ஊண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமியீரைந்து நியமத்தன் ஆமே. 2

* அருளுண்

557. தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்தன் ஆமே. 3

4. ஆதனம்

558. பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம்
அங்குள வாம் இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திகம் என மிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே. 1

559. ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்டு
ஆர வலித்ததன் மேல்வைத்து அழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மாசனம் எனல் ஆகுமே. 2

560. துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளில் அங்கையை நீட்டி
உருசி யொடும் உடல் செவ்வே இருத்திப்
பரிசு பெறும் அது பத்திராசனமே. 3

561. ஒக்க அடி இணை ஊருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றித்
தொக்க அறிந்து துளங்காது இருந்திடில்
குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே. 4

562. பாத முழந்தாளிற் பாணிகளை நீட்டி
ஆதரவோடும் வாய் அங்காந்து அழகுறக்
கோது இல் நயனம் கொடிமூக்கிலே உறச்
சீர்திகழ் சிங்காதனம் எனச் செப்புமே. 5

563. பத்திரம் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
* உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பல ஆசனமே. 6

* முத்த மயூரமுது

5. பிராணாயாமம்

564. ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடும் தானே. 1

565. ஆரியன் நல்லன் குதிரை இரண்டு உள
வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே. 2

566. புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ண வேண்டாந் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வு உடையோருக்கே. 3

567. பிராணன் மனத்தொடும் பேராது *அடங்கிப்
பிராணன் இருக்கின் பிறப்பு இறப்பு இல்லை
பிராணன் மடைமாறிப் பேச்சு அறுவித்துப்
பிராணன் அடைபேறு பெற்றுண்டீர் நீரே. 4

* தடக்கிப்

568. ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் *கும்பம் அறுபத்து நாலு அதில்
ஊறுதல் முப்பத்திரண்டு அதிரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமாமே. 5

* கும்பகம்

569. வளியினை வாங்கி *வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனுமாமே. 6

* வயிற்றில்

570. எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவு இல்லை
அங்கே பிடித்து அது விட்டு அளவும் செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே. 7

571. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியதுவாமே. 8

572. மேல் கீழ் நடுப்பக்கம் மிக்கு உறப் பூரித்துப்
பாலாம் இரேசகத்தால் உட்பதிவித்து
மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெறலாமே. 9

573. வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோ மத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே. 10

574. இட்ட தவ்வீடு இளகாதே இரேசித்துப்
புட்டிப்படத் தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து
நட்டம் இருக்க நமன் இல்லைத் தானே. 11

575. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே. 12

576. கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால் விரல்
கூடிக் கொளிற்கோல அஞ்செழுத்து ஆமே. 13

577. பன்னிரண்டு * ஆனை பகல் இரவு உள்ளது
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவு இல்லையே. 14

* டானைக்குப்

6. பிரத்தியாகாரம்

578. கண்டு கண்டு உள்ளே கருத்து உற வாங்கிடிற்
கொண்டு கொண்டு உள்ளே குணம் பல காணலாம்
பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை
இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே. 1

579. நாபிக்குக் கீழே *பன்னிரெண்டு அங்குலம்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண்டு ஈசன் #குடி இருந்தானே. 2

* நாலிரண்டங்குலம்
# குடிபுகுந்தானே

580. மூலத்து இருவிரல் மேலுக்கு முன் நின்ற
பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ்நின்ற
கோலித்த குண்டலி உள் எழும் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே. 3

581. நாசிக்கு அதோமுகம் பன்னிரண்டு அங்குலம்
நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவு இல்லை * யாமே. 4

* யாகுமே, தானே

582. சோதி இரேகைச் சுடர் ஒளி தோன்றிடிற்
கோது இல் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவதுன் உடல் உன்மத்தம் ஆமே. 5

583. மூலத் துவாரத்தை மொக்கரம் இட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்திரு
வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லும் கருத்து இது தானே. 6

584. எருவிடும் வாசற்கு இருவிரல் மேலே
கருவிடும் வாசற்கு இருவிரல் கீழே
உருவிடும் சோதியை உள்க வல்லார்க்குக்
கருவிடும் சோதி கலந்து நின்றானே. 7

585. ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்து உணர் உன்னல் கரைதல் உள் நோக்கல்
பிரத்தியாகாரப் பெருமையது ஆமே. 8

586. புறப்பட்ட வாயுப் புக விடா வண்ணம்
திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகையானே. 9

587. குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பு இருள் நீங்கி விகிர்தனை நாடும்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென்று உணரில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே. 10

(இப்பாடல் 1794-ம் பாடலாகவும் வந்துள்ளது)

7. தாரணை

588. கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண்டு ஊடே வெளியுறத் தான் நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே. 1

589. மலை ஆர் சிரத்து இடை வான் நீர் அருவி
நிலை ஆரப் பாயும் நெடு நாடி ஊடே
சிலை ஆர் பொதுவில் திருநடம் ஆடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண்டேனே. 2

590. மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் *பராநந்தி ஆணையே. 3

* பார்நந்தி

591. கடைவாசலைக் கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிது உள் இருத்தி
மடைவாயில் கொக்குப் போல் வந்தித்து இருப்பார்க்கு
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே. 4

592. கலந்த உயிருடன் காலம் அறியின்
கலந்த உயிர் அது காலின் நெருக்கம்
கலந்த உயிர் அது கால் அது கட்டில்
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே. 5

593. வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு
வாய் திறப்பாரே வளி இட்டுப் பாய்ச்சுவர்
வாய் திறவாதார் மதி இட்டு மூட்டுவர்
கோய் திறவாவிடில் கோழையும் ஆமே. 6

594. வாழலும் ஆம் பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சு ஊறில்
எழு சாலேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியது ஓர் பள்ளி அறையே. 7

595. நிரம்பிய ஈரைந்தில் ஐந்து இவை போனால்
இரங்கி விழித்திருந்து என் செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழி செய்குவார்க்குக்
குரங்கினைக் *கொட்டை பொதியலும் ஆமே. 8

* கோட்டைப்

596. முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம்
முன்னூறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே. 9

597. அரித்த உடலை ஐம்பூதத்தில் வைத்துப்
பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து
தெரித்த மனாதி சத்தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத்தோடே. 10

8. தியானம்

598. வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன் போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னும்
குரு ஆர் சிவத்தியானம் யோகத்தின் கூறே. 1

599. கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்(டு)
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
*புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்தவாறே. 2

* பிண்ணாக்கி

600. ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண் ஆரப் பார்த்துக் கலந்து அங்கு இருந்திடில்
விண் ஆறு வந்து வெளி கண்டிட ஓடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே. 3






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247