பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி - 9 ...

801 இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்
உறக்கத்தை * நீக்கி உணரவல் லார்க்கட்
கிறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே. 3

802 ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே. 4

803 நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரு முப்பத்து மூவருந் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி யூனே. 5

804 ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளியலு மாமே. 6

805 மேலையண் ணவில் விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லை கதவுந் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே. 7

806 நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே. 8

807 தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை யாடிய தீங்கரும் பாமே. 9

808 தங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊங்கரும் பாகியே ஊனீர் வருமே. 10

809 ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே. 11

810 வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
* கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே. 12

* கோய்ந்தறிந்

811 கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே. 13

812 தீவினை யாளர்த்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்த்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்த்தம் பாகவத் துள்ளவன்
மாவினை யாளர்த்தம் மதியிலுள் ளானே. 14

813 மதியி னெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறு*நூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே. 15

* நூற்றைம்பதோ டொன்றாய்க் கதிமன வுள்ளே

814 இருந்தனள் சத்தியு மக்கலை சூழ
இருந்தனள் கன்னியு மந்நடு வாக
இருந்தனள் மானேர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே. 16

815 பொழிந்த இருவௌளி பொன்மண் ணடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகுங் குணமது தானே. 17

816 குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே. 18

817 இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே. 19

818 மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே. 20

819 ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்
கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே. 21

820 பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின்
மெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங்
கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின்
மையணி கோயில் மணிவிளக் காமே. 22

821 விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
* நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே. 23

* நலங்கிடுங் காமத்து நாடியி னுள்ளே

822 சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்
சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்
சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே. 24

823 தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைஞான முட்பெய்தி
ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே. 25

824 முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனு மாமே. 26

19. * பரியங்க யோகம் (* பரியங்கி யோகம்)

825 பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திக்
காயக் குழலி கலவி யொடுங்கலந்
* தூசித் துளையுறத் தூங்காது # போகமே. 27

* தூசத் துணையறத்
# யோகமே; போதமே; மோகமே

826 போகத்தை யுன்னவே போகாது வாயுவு
மோகத்தை வெள்ளியு மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே. 28

827 கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே. 29

828 அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே. 30

829 தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே. 31

830 அஞ்சு * கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே. 32

* கடிகையில் ஆறாங் கடிகைமேற்

831 பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே. 33

832 ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்தே. 34

833 ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம்
வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே. 35

834 வௌளி யுருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே. 36

835 வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே. 37

836 வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனந்
திங்களிற் செவ்வாய் * புதைத்திருந் தாரே. 38

* புதனிருந் தானே

837 திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந்
துருத்தியுள் வௌளியஞ் சோரா தெழுமே. 39

838 எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே. 40

839 வெளியை அறிந்து வெளியி னடுவே
* ஒளியை அறியி னுளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே. 41

* உளியை

840 மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலா நிலத்தி னடுவான வப்பொருள்
மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே. 42

841 மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னை தலைப்பெய்ய * வல்லாரேன்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே. 43

* வல்லீரே

842 வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே. 44

843 உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்க்கடிந் தாளே. 45

844 பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது * ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே. 46

* ஒன்றில்லை

20. அமுரிதாரணை

845 உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலு மாமே. 1

846 தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங்
களிதருங் காயங் கனகம தாமே. 2

847 நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே. 3

848 கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறு நமனுமங் கில்லையே. 4

849 அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
* இளகும் மேனி இருளுங் கபாலமே. 5

* இளகிடு

850 வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே. 6

21. சந்திர யோகம்

851 எய்து * மதிக்கலை சூக்கத்தி லேறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாந்
துய்யது சூக்கத்து தூலத்த காயமே. 1

* மதிநிலை

852 ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்
ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே. 2

853 ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு
மாறாக் கதிர்க்கொள்ளு மற்றங்கி கூடவே. 3

854 பத்தும் இரண்டும் பகலோன் உயர்க்கலை
பத்தினொ டாறும் உயர்க்கலை பான்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்க்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே. 4

855 எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
கட்டப் படுமீ ரெட்டா மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே. 5

856 எட்டெட்டும் ஈராறும் * ஈரெட்டுந் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்
கட்டப் படுந்தார கைகதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே. 6

* ஈரெட்டுத்

857 எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே. 7

858 அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
தங்கிய தாரகை யாகுஞ் சசிபானு
வங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே. 8

859 தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே. 9

860 தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்
தாரகைத் தாரகை தானாஞ் சொரூபமே. 10

861 முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதி னைஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யான்கழல் சேர்தலு மாமே. 11

862 அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத்
தங்குஞ் சசியால் தாமம்ஐந் தைந்தாகிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிரங்கி சேர்க்கின்ற யோகமே. 12

863 ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் * கருத்துழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. 13

* கருக்குழி; கழுக்குறி

864 அங்கி மதிகூட வாகும் கதிரொளி
அங்கி கதிர்க்கூட வாகு மதியொளி
அங்கி * சசிகதிர் கூடவத் தாரகை
தங்கி யதுவே சகலமு மாமே. 14

* சிவத்தினிற்

865 ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே. 15

866 காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்
பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே. 16

867 பாலிக்கும் நெஞ்சம் * பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே. 17

* பரையோசை

868 கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவ நீச நிடமது தானே. 18

869 உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
* அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
# அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே $ மகன்பிறந் தானே. 19

* அந்தித்த வண்ணம் அறிவா லறிந்திலர்
# அந்தித்த வண்ணம் அறிவா லறிந்தபின்
$ மகனிருந் தானே

870 ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்
வேதியன் அங்கே வெளிப்படுந் தானே. 20

871 பாம்பு மதியைத் * தினலுறும் பாம்பினைத்
தங்கு கதிரையஞ் # சோதித் தனலுறும்
பாம்பு மதியும் பகைதீர்த் $ துடங்கொளீஇ
நீங்கல் @ கொடானே நெடுந்தகை யானே. 21

* தினலுறு மப்பாம்பு
# சேரத் தினலுறும்
$ துடன் கொளின்
@ கொடானெம்

872 அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்
பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ள நடத்தி
வியந்தரு பூரணை மேவுன்ய் சசியே. 22

873 சசியுதிக் கும்அள வுந்துயி லின்றிச்
சசியுதித் தானேல் தன்தூண் அருந்திச்
சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்
சசிசரிப் * பிங்கட்டன் கண்டுயில் கொண்டதே. 23

* பின்கட் டன்றுயில்

874 ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்க்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல் லார் * இச் சசிவன்ன ராமே. 24

* இன் வழிச்சைவ ராமே

875 தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வள விற்கண மின்றே. 25

876 வளர்கின்ற ஆதித்தன் தன்கலை யாறுந்
தளர்கின்ற சந்திரன் தன்கலை யாறு
* மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே. 26

* மலர்ந்தேறு பன்னிரண்டோ டெட்டு நாலாம்

877 ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில்
ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே. 27

878 வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்
சூறுற நாங்குந் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறிலி னன்கலை யீரைந்தொ டேமதித்
தாறுட் கலையுள் அகலுவா வாமே. 28

879 உணர்விந்து சோணி உறவினன் வீசும்
புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே. 29

880 விடாத மனம்பவ நத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே. 30

881 அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற்
குமிழிக் குட்சுட ரைந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே. 31

882 உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந்
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே. 32

883 மாறு * மதியும் # மதித்திரு மாறின்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே. 33

* மதியுமா தித்தனு மாறின்றித்
# ஆதித்தனு; மதித்திடு

மூன்றாம் தந்திரம் முற்றிற்று

நான்காம் தந்திரம் *

(* இது சிந்தியாகமத்தின் சாரம் என்பர்)

1. அசபை

884 போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே. 1

(இப்பாடல் 2988-ம் பாடலாகவும் வந்துள்ளது)

885 ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே. 2

886 தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றுந்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றுந்
தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந்
தேவர் உறைகின்ற தென்பொது வாமே. 3

887 ஆமே பொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத்து அனவரத் தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத்து அருந்தாண் டவங்களே. 4

888 தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்து
தாண்டவ மானது அனுக்கிரகத் தொழில்
தாண்டவக் கூத்துத் தனிநின்ற தற்பரம்
தாண்டவக் கூத்துத் தமனியந் தானே. 5

889 தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலம் தானே. 6

890 தராதல மூலைக்குத் தற்பர மாபரன்
தராதலம் வெப்பு நமசி வாயவாந்
தராதலஞ் சொல்லில் தான்வா சியவாகும்
தராதல யோகந் தயாவாசி யாமே. 7

891 ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா விடம்என்ப
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே. 8

892 ஆனந்த மூன்றும் அறிவுஇரண்டு ஒன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலரில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்டு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே. 9

893 படுவது இரண்டும் பலகலை வல்லார்
படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே. 10

894 வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை புன்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொதுவாகு மன்றின் அமலமே. 11

895 அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலந் திரோதாயி யாகுமா னந்தமாம்
அமலஞ் சொல் ஆணவ மாயை காமியம்
அமலந் திருக்கூத்தங் காமிடம் தானே. 12

896 தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்குத் * தன்மலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே. 13

* தனமலை

897 தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே. 14

898 இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத் தொன்றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே. 15

899 ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் ஏழுகோடி தானாகி
* ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே. 16

* ஏழாயிரத்துயர்

900 இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே. 17