மாணிக்கவாசகர்

அருளிய

திருவெம்பாவை

     மாணிக்கவாசகர் மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார். இதனால் இவருக்குத் திருவாதவூரர் என்ற பெயரும் உண்டு. இவரின் நூல்களான திருவாசகமும், திருக்கோவையாரும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டினுள் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் இவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை எனப்படுகின்றன. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து மார்கழி மாதக் காலையில் சிவனைக் குறித்துப் பாடுவது போல் பாடியுள்ளார்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
      சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
      மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
      போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
      ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய். 1

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
      பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
      சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
      கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
      ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய். 2

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
      அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துள் கடை திறவாய்
      பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்தாட்கொண்டாற்பொல்லாதோ
      எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
      இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய். 3

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
      வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
      கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
      கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோ ம் நீயேவந்(து)
      எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய். 4

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
      போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்
      ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
      சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
      ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய். 5

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
      நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
      வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
      வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
      ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 6

அன்னே இவையும் சிலவோ பல அமரர்
      உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
      தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
      சொன்னோம்கேள் வெவ்வேறாயின்னந்துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
      என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய். 7

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
      ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
      கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
      ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
      ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பவாய். 8

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
      பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
      உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவார் அவர் உகந்து
      சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
      என்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய். 9

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
      போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
      வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓதஉலவா ஒருதோழன் தொண்டருளன்
      கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
      ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். 10

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
      கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்
      செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
      ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
      எய்யாமல் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். 11

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
      தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
      காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
      ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
      ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய். 12

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
      அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
      எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
      சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
      பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 13

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
      கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
      வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
      ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
      பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். 14

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
      சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
      பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்
      ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
      ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 15

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
      என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
      பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
      தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
      என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். 16

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
      எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
      இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை
      அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
      பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 17

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
      விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
      தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
      விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
      பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 18

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)
      அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்
      எம்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
      கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
      எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய். 19

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
      போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
      போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
      போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
      போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். 20