உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
5 அந்த மசூதித் தளத்திற்குள், வரிசை வரிசையாகவும், வரை வரையாகவும் விரிக்கப்பட்ட கோரப் பாய்களில் இப்போது சின்னச் சின்ன இடைவெளிகள் மட்டுமே தெரிந்தன. அந்தப் பாளையத்தில் உள்ள பத்து இஸ்லாமியத் தெருக்களில் எட்டுத் தெருக்களில் வாழும் பீடித் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் தவிர, அனைவருமே ஜமாத்துக்கு வந்து விட்டார்கள்; அப்படி வரும்போது இடையிடையே எதிர்ப்பட்ட இந்துக்கள் சர்வ சகஜமாக பேசியபோது, பெரும்பாலானவர்கள் பதில் பேசவில்லை என்றாலும் நின்று நிதானித்துக் கேட்கத்தான் செய்தார்கள். அந்த மசூதி கம்புக்கட்டுகளோடு தோற்றமளித்தது. சிலருக்கு அதை யாரோ இடித்துப் போட்டது போலவும், இப்போது அதற்கு பேண்டேஜ் போட்டிருப்பது போலவும் தோன்றியது. சாந்தமாக வந்தவர்கள் கூட பாயில் உட்கார்ந்த சகாக்களைப் பார்த்ததும் கோபமுகம் காட்டினார்கள். அப்பாவிகளுக்குக் கூட ஒரு அசுரத்தனம் ஏற்பட்டது. ஒவ்வொரு முகத்திலும் ஒரு பூகம்பம்; ஒவ்வொரு நெஞ்சிலும் ஒரு எரிமலை, பழைய விரோதங்கள் மறக்கப்படவில்லையானாலும், அப்போதைக்கு மறுக்கப்பட்டு அந்தக்கண்களில் புதிய சினேகிதப் பார்வைகள்; சிலர் கையோடு கொண்டு வந்த தினசரிப் பத்திரிகைகளைக் காட்டி, இந்தியாவின் எந்தெந்தப் பகுதிகளெல்லாம் உயிரோடு எரிந்து கொண்டிருக்கின்றன என்பதை விளக்கிக் கொண்டிருந்தார்கள். பெரியவர்கள், பெருமூச்சு விட்டு அசைவற்று இருந்தபோது, சம்சுதீன் உள்பட பல இளவட்டங்கள் கைகளை ஒன்றோடு ஒன்று மோத விட்டு நிலையிழந்து காணப்பட்டார்கள். எதிர்த்திசையில் கூட்டத்தை நோக்கி ஜமாத் தலைவர் திவான் முகமது சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தார். இடதுபக்கம் ஹாஜி அஜீஸ்; வலது பக்கம் நூருல்லா. தடித்த மொக்கையான முகமும் உருண்டு திரண்ட உடலும் பருத்தி வெடித்ததுபோல் மின்னும் கருப்பு நிறத்தில் நரைபடர்ந்த தாடியோடும், பெருவிரலையும், ஆள்காட்டி விரலையும் நீட்டி விரித்தது போன்ற மீசையோடும் உள்ள திவான் முகமதுக்கு இடது பக்கம் அஜீஸ்; அந்தப் பகுதியில் மெக்காவிற்கு போய்விட்டு வந்த ஹாஜி; இப்படிப் பலர் போய்விட்டு வந்தாலும் உயிரோடு இருக்கும் ஹாஜி அவர்தான். வலது பக்கம் உள்ள நூருல்லா, ஒல்லி மனிதர். பேசினாலும் பேசாவிட்டாலும் அவருக்கு எப்போதும் உதடுகள் துடித்துக் கொண்டிருக்கும். கண்கள் சராசரிக்கு அதிகமாக சிமிட்டிக் கொண்டிருக்கும். அந்த மூன்று பேருக்குமே பாபர் மசூதி இடிபட்டதை விடத் தங்களது மனக்கோட்டைகள் இடிபட்டதில் ஆவேசம். எப்படியோ கஷ்டப்பட்டும் காலில் விழுத்தும் பெரிய சூட்கேஷ் சாட்சியாக வாங்கப்பட்ட ஆற்றுக் கால்வாய் காண்ட்ராக்டிற்கு, சாராய வியாபாரி பழனிவேல் நீதிமன்றத்தில் ‘இடைக்காலத் தடை’ வாங்கப் போவதாய்க் கேள்விப்பட்ட திவானுக்கு உடம்பு மட்டுமல்ல, உடை கூடப் பற்றி எரிவது போல் இருந்தது. ஹாஜி, எந்த நேரத்தில் மகள் ஆயீஷா, முத்துக்குமார் பயலோடு ‘இஸ்க்கு தொஸ்காக’ப் பார்க்கிறாள் என்பதைக் கேள்விப்பட்டாரோ, அந்த நேரத்தில் இருந்தே இவர் மனம் அவர் வசமில்லை. இரண்டு தடவை எழுந்து மசூதியின் வாசலுக்குப் போய்ப் பார்த்தார். ஒரு தடவை தனது வீட்டுக்கு முன்னால் யாரும் இல்லாததில் ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை அப்புறம் ஏற்பட்ட துக்கம் விழுங்கிவிட்டது. மசூதி வாசலில் நின்று பார்த்தால், முத்துக்குமார் பயல், காதர்பாட்சாபயலோடு நின்று கொண்டு அவனைப் பார்க்காமல் அடுத்த பக்கம் பார்க்கிறான். அந்த ஆயிஷா கழுதையும் ஜன்னலைத் திறந்து வைத்துக் கம்பிகளில் முகம்பதித்து உதடுகளைக் குவிந்தபடி பார்த்தால் கூடத் தேவலை... சிரிக்கிறாள். திரும்பி வந்த அஜீஸ் மூன்றாவது தடவை எழுந்தபோது நூருல்லா, திவான் முகமதின் முதுகுக்குப் பின்னால் கையைக் கொண்டுபோய் அஜீஸைப் பிடித்துக் கொண்டார். அவருக்கும் ஆறுதல் தேவைப்பட்டது. அவரது பீடித் தொழிற்சாலையைச் சேர்ந்த பல பயல்கள் மேலக்கோடித் தெருவில் உள்ள ஒரு நர்சரிப்பள்ளிக் கூடத்தில் முதலாவது யூனியன் அமைப்பதில் தீவிரமாக இருக்காங்களாம். இந்த மூவரோடு சிறிது தள்ளி இமாம் அதே தலைப்பாகையுடன் இருந்தார். அவரை இவர்களோ, இவர்களை, அவரோ பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. திவான் முகமது ஜமாத்தைத் துவக்கி வைத்துக் கோபமாகத்தான் பேசப் போனார். ஆனாலும், தொழுகைத் தளவாசலை ஒட்டி கையில் ஒரு துண்டை, பட்டும் படாமலும் தொங்கப் போட்டபடி நின்ற காண்ட்ராக்டர் ராமலிங்கத்தைப் பார்த்ததும் அவர் கண்கள் கனிந்தன. கைகள் ஊறின. வாய், சினேகித முறையில் சிரிக்கப் போவதுபோல் இருந்தது. ஆனாலும் அவ்ர் உஷாரானார். அதே சமயம், அவருக்கு ரேட்டைக் கூட்டிக் கொடுக்க வேண்டும் என்பதிலும் குறியாயிருந்தார். அவரை அப்போதுதான் பார்ப்பது போலவும், அந்த நேரத்தில் அவர் வரவை அங்கீகரிக்காதது போலவும் தாக்குதல் தொடுத்தார். அதோடு இலேசான எரிச்சல். பழைய ரேட்டுக்கு ஏற்ப வேலையளவில் சில சித்துக்களை செய்து செக்கும் கொடுத்தாகிவிட்டது. மாமூல்தான் வரவில்லை. வந்துட்டான் பெரிசா. “என்ன ராமலிங்கம்? இங்கேயுமா ஒங்க தொல்லை?” “ஜமாத்திலே எனக்கு நியாயம் வழங்கணும். எல்லா விலையும் கூடிட்டு. பட்ஜெட்டுக்குப் பிறகு சிமெண்ட் கூடக் கிடைக்கமாட்டேங்கு. தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போறது மாதிரியாவது, ஜமாத்து எனக்கு கருணை காட்டணும்.” கூட்டத்தில் மூன்றாவது வரிசையில் இருந்த சுலைமானுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. இவரும் சின்ன காண்ட்ராக்டர். மசூதி மாடி கட்டும் பணியை தன்னிடம் ஒப்படைக்கும்படி திவான் முகமதுவிடம் மாமூலாகத்தான் கேட்டார். ஆனால் அவரோ தார் ரோடு போடுற அவருக்கு கட்டிடக்கலை கைவராத கலை என்று சொல்லி விட்டார். அவராவது யூனியன் ரோடுகளைப் போடுபவர். ஆனால் இந்த ராமலிங்கமோ பஞ்சாயத்து ரோடுகளைப் போடுபவர். இவருக்குக் கொடுத்துவிட்டார். விடலாமா? விடப்படாது. “இதோ பாருங்க ராமலிங்கம். நீங்க அதிகமாகப் பணம் வாங்கி இந்த மசூதியை இன்னும் அழகா முடிச்சாலும் என்ன பிரயோசனம்? பாபர் மசூதியை இடிச்சது மாதிரி உங்க ஆட்கள் இந்த மசூதியையும் ஒரு நாள் ஒரு பொழுதாவது இடிக்கத்தான் போறாங்க.” கூட்டத்தில் ஒரு பகுதி ராமலிங்கத்தை கோபமாகப் பார்த்தது. அதற்கு ஏற்றாற்போல், அவர் நெற்றியில் தீட்டியிருந்த பட்டையும், அதன் மத்தியில் வைக்கப்பட்ட குங்குமமும் வேண்டுமென்றே அவர் வம்புக்கு இழுக்க வந்ததுபோல் பட்டது. பின்வரிசையில் இருந்த சம்சுதீன், அப்பனுக்கே வேட்டு வைப்பது தெரியாமல் வெடிக்குரலில் கத்தினான். “முதல்ல அவரை வெளியேற்றுங்க. இந்த ஜமாத்துல ஒரு இந்துக்கு என்ன வேலை? இங்கு நடக்கிறத ஒட்டுக்கேட்டு முன்னணிக்காரங்ககிட்டே சொல்றதுக்கா? சுலைமானுக்கு பாயிண்ட் கிடைத்து விட்டது. “யோவ் ராமலிங்கம் எவ்வளவுய்யா கூலி கொடுத்தாங்க.” “பிடிச்சு கட்டி வையுங்கடா அவனை!” சம்சுதீனும், ராமலிங்கத்துடன் ஒரு நிலத் தகராறில் ஈடுபட்டிருக்கும் இன்னொருத்தரும், சுலைமானும் இப்படிப் பேசியதில் ராமலிங்கம் அதிர்ந்து போனார். இந்தச் சமயத்தில் முதல் வரிசையில் இருந்து அமீர் , ஒரு பக்கம் இருந்த பேராசிரியர் இதயதுல்லாவின் காதில் ஏதோ கிசுகிசுக்க, அவர் அப்படியும் சும்மா இருக்க, இறுதியில் அமீரே உரக்கப் பேசினார். “இந்த ராமலிங்கம் நமக்கு எதிரியா? அயோத்தியிலே ராமர் கோவில் இடிக்கிறதுக்குமா டெண்டர் போடுறாரு. ஏன்யா ராமலிங்கம்.உமக்கு சமயம் சந்தர்ப்பம் தெரியாதா?. ..பேசாமப் போங்க.” “ஒட்டுக் கேட்க வந்தவன் எப்படிப் போவான்?” பின்வரிசையில் துள்ளி எழுந்த சுலைமானையும், தன்னை நேருக்கு நேராய்ப் பார்த்த அமீரையும் ராமலிங்கம் ஒப்புக்குப் பார்த்து விட்டு, திவானை ஆறுதலாகப் பார்த்தார். அவரும் கத்தினார். கண்ணைச் சிமிட்டியபடியேதான் கத்தினார். ஆனால் காண்ட்ராக்டருக்குக் கத்தியதுதான் காதில் ஏறியதே தவிர, கண் சிமிட்டல் கண்ணில் படவில்லை. “யாருய்யா இவரு? கால நேரம் தெரியாம! நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்லுப் போதாதா?” என்று திவான் அவரைப் பார்க்காமலே சொன்னபோது, ராமலிங்கம் அடிவாங்கிய மாடானார். மெல்ல மெல்ல தலையைக் குனிந்து கொண்டும், ஒருவேளை கூப்பிடுவார்களா என்பது போல் காதுகளை அனிச்சையாக நிமிர்த்திக் கொண்டும், வெளியே நடந்தார். அவர் நடந்த விதத்தைப் பார்த்து, திவான் அசந்துவிட்டார். ‘பயல் சொன்னபடி பழைய மாமூலைக் கூட தரமாட்டானோ...’ திவான் முகமது பேசப்போன போது, பழனிவேல் கடைகள்ல பேன்சி கடை வைத்திருக்கும் காதர் பாட்சாவும், தாவர இயல் உதவிப் பேராசிரியர் முத்துக்குமாரும் கையோடு கைகோர்த்து உள்ளே வந்தார்கள். கூட்டத்தைப் பார்த்தபடியே ஒரு ஓரமாக நின்றார்கள். கூட்டத்தில் யாரும் அவர்களைப் பொருட் படுத்தாதபோது, ஆயிஷாவின் தந்தை ஹாஜி அஜீஸ் பொரிந்து தள்ளிவிட்டார். பெரிய மைத்துனி மகன் காதரைப் பார்த்துக் கத்தினார். “காதரு உனக்கும் இந்தப் பிள்ளையாண்டானுக்கும் ஆயிரம் உறவு இருக்கலாம். அதையெல்லாம் வெளியிலே வச்சுக்கணும். இங்க மட்டுமில்ல. இந்தப் பக்கம் உள்ள தெருவிலேயும் வச்சுக்கப்படாது. இது ஜமாத்து. கிள்ளுக்கீரையில்லை.” காதர் பாட்சா துடிதுடித்துப் போனான். எதேச்சையாய் முத்துக்குமாரைத் தன் பக்கமாய் அணைத்துக் கொண்டே கேட்டான்: “என்ன சச்சா, இப்பிடிப் பேசறியே? இவன் தலையிலே குல்லா போடல, சுன்னத் செய்யல என்கிறதைத் தவிர எல்லா விஷயத்திலேயும், இவன் நம்ம கூட இருக்கவன். மசூதி இடிச்சதைக் கேட்டதும் இவன் சோறு தண்ணி கூட சாப்பிடலேன்னு எங்கிட்ட இவங்க அம்மா முறையிடறாங்க. மசூதி இடிப்பு இந்து-முஸ்லிம் கலாட்டாவா மாறாமல் இருக்க இவனும் நானும் ஒரு திட்டம் கூட வச்சிருக்கோம். இதைச் சொல்லத்தான் வந்தோம். இவனைப் போகச் சொல்றது என்னைப் போகச் சொல்றது மாதிரி.” “நீ இருக்கறதும் இல்லாததும் ஒன்னுதான். உன்னை மாதிரி உதவாக்கரைங்க இஸ்லாமிலே பிறந்ததாலதான் காபீர்கள் பாபர் மசூதியை இடிச்சாங்க. இந்த மசூதியையும் இடிக்கப் போறாங்க.” அமீர் இப்போது கொதித்துக் கேட்டார். “மசூதியையும் கோவிலையும் விட மனுசங்க முக்கியம் காக்கா.” “தம்பி முத்துக்குமாரு, உன்னால் எவ்வளவு இடஞ்சல் பாரு, இன்னுமா நிற்கிறது?” முத்துக்குமார் அங்கும் இங்குமாய்ப் பார்த்தான். சம்சுதீனைத் தோழமையோடு நோக்கினான். அவனோ, வேறு பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஆயிஷாவாலோ அல்லது இயல்பான மனோபாவத்தாலோ இஸ்லாமியனாக மாறவில்லையென்றாலும், அதற்கு மதிப்பு கொடுப்பவன், மசூதி பாளையத்தின் எல்லாத் தெருக் களையும் சொந்தத் தெருக்களாக நினைத்து நடமாடியவன். இப்போது எங்கே நிற்கிறோம், அல்லது நிறுத்தப்பட்டோம் என்பது புரியாமல் திரும்பிப் பாராமலே நடந்தபோது, அவனை காதர் பாட்சா பின்பக்கமாய்ப் போய் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். முத்துக்குமார் கண்ணிரும் கம்பலையுமாய் அவனை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டான். இருவரும் மசூதிக்கு வெளியே வந்தபோது ஜன்னலில் முகத்தை எடுக்கப்போன ஆயிஷா, அவர்கள் நின்ற கோலத்தைப் பார்த்துப் பதறியடித்து வெளியே வந்தாள். ஜமாத் தலைவரான திவான் முகமது, மீண்டும் பேசப்போனபோது அஜீஸ் மீண்டும் எழுந்திருக்கப் போனார். முத்துக்குமார் பயல் வீட்டுப்பக்கம் என்ன செய்கிறான். அதற்குள் திவான் பேசிவிட்டதால் அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. திவான் செந்தமிழிலும் இல்லாமல், பேச்சுத் தமிழிலும் இல்லாமல் இடைப்பட்ட தமிழில் எதார்த்தமாகப் பேசினார். அவராலும் உண்மை பேச முடிந்தது. “நாம் ஏன் கூடியிருக்கோம் என்கிறது உங்களுக்கு நல்லாவே தெரியும், நாமும் இந்த ஊர்ல இரண்டு தெருவில இருக்கிற இந்துக்கள் மாதிரி இந்த மண்ணுலேயே பிறந்தவங்க, நமக்கு பாகிஸ்தானும் தெரியாது. பங்களாதேசும் புரியாது. மேற்குத் திசை நோக்கித் தொழுகை செய்யறதைத் தவிர நாம எல்லாத் திசையிலேயும் இந்தியாவைத்தான் பார்க்கிறோம். இப்படிப்பட்ட நம்மோட பழைய காலத்துப் பாபர் மசூதிய இடிச்சுட்டாங்க. இடிச்சது மட்டுமில்லை. இந்தியாவுலே பல இடங்களிலே முஸ்லீம்களைக் கொன்று குவிக்காங்க. இதை நாம் எப்படிச் சமாளிக்கலாம், கஷ்டப்படுற நம்ம இனத்துக்கு என்ன உதவி செய்யணும் என்கிறதைப் பத்தி ஜமாத் ஒரு முடிவு எடுக்கணும்.” அமீர், படபடப்பாக பதில் அளித்தார். “பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும், இன்னும் பல இஸ்லாமிய நாடுகள்ளேயும், இந்துக்களுக்கு எதிராக நடக்கிற வன்முறைகளையும் நாம கணக்கில் எடுத்துக்கணும். நம்மோட முதல் கரிசனம் குறைந்தபட்சம் இந்தப் பகுதியிலாவது இந்து முஸ்லீம் ஒற்றுமையைக் கட்டிக்காக்கிறதாய் இருக்கணும். ‘இஸ்லாம் எமது வழிபாடு. இந்தியா எங்கள் தாய்நாடு’ என்கிறதிலே நமக்குச் சந்தேகம் வரப்படாது. அதே சமயம் இங்கே இருக்கிற இந்துக்களோட நாம வழிவழியா மாமா, மச்சான், சித்தப்பா, பெரியப்பா உறவு வச்சிருக்கிறத மறந்திடக்கூடாது. எங்க பழைய வீட்டுப் பாத்திரத்திலே எங்க தாத்தாவோடபேரு பெருமாள்சாமி என்கிற நயினார் முகமது என்று போட்டிருக்கு. இந்த உறவை மறந்து நம்ம ஆட்களும் நேத்து ராத்திரியோட ராத்திரியா டவுனுல ராமர் கோவிலையும், பிள்ளையார் கோவிலையும் இடிச்சத நாம கண்டிக்கணும்.” திவான் முகமதுவால் தாள முடியவில்லை. பழைய கணக்குப் பிள்ளையை அந்தத் தொழில் வகையில் பிடிக்க முடியாது போனவர், இப்போது அவரை எங்கே பிடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்தவர் போல் அங்கே பிடிக்கப் போனார். “இஸ்லாமுக்குள்ளேயே அல்லாவையும் ஈமானையும் இளக்காரமாக நினைக்கிறவங்க வந்ததாலதான் நமக்கு இந்த நிலைமை. வயசு வந்த பொண்ணை பட்டப்பகலில் தெருக்கடையில் நிற்கவைச்சு, அதுவும் கோஷா போடாமல் எல்லா கண்ணும் படும்படியாகச் செய்றவங்க ஜமாத்துல பேசறதுக்கு யோக்கியத கிடையாது.” அமீர் இப்போது எழுந்து நின்றே பதிலளித்தார். “நபிகள் நாயகத்தை யாரும் ஸல்னு ஒப்புக் கொள்ளாதபோது, அவரை முதல் முதலா அல்லாவின் தூதராய் ஏற்றுக் கொண்டது ஒரு பெண்தான் என்கிறதை மறந்திடாதீங்க. நபிகள் நாயகத்துக்கு அவரது துணைவியார் கதீஜா அம்மையார் எப்படித்துணை நின்னாங்களோ, அப்படி வறுமைப்பட்ட என் குடும்பத்திற்குத் துணையா நிப்பது என் மகள் பாத்திமா. அவள் எல்லார்கிட்டேயும் சகஜமாகப் பழகிறதை ஒரு இஸ்லாமியப் பெருமையா நினைக்கிறேன். ஊர்க் கண் படும்படியாக நடமாடப் படாதுன்னு, பெனாசீர் பூட்டோகிட்டே கேக்க முடியுமா? பங்களாதேஷில பேகம் கலீதாவிடமோ, முஜிபுர் ரஹ்மான் மகள் கிட்டேயோ கேட்க முடியுமா? அவ்வளவு ஏன்? ஆளுங்கட்சிப் பேச்சாளர் ஜீனத் இந்தப் பக்கம் கூட்டத்திலே பேசுறத்துக்கு வந்துட்டு டி.பி.யிலே தங்கியிருக்கும்போது, அவங்களுக்காக மணிக்னக்கிலே தவம் கிடந்து ஆப்பிள் கூடையையும் லெதர் பேக்கையும் வச்சுக்கிட்டு நானா காத்து நின்னேன்?” திவான் முகமதுக்கு சுருக்கென்றது. அப்பாவுக்கு ஆதரவாகப் பேசப்போன சம்சுதீன் தோளை அழுத்தி, அந்த ஆதாரத்திலேயே பேராசிரியர் இதயத்துல்லா எழுந்தார். ஓய்வுபெற்ற தமிழ்ப்பேராசிரியர். லோக்கல் பட்டிமன்றங்களுக்கு நடுவர். மணிமேகலையிலும், தேவாரத்திலும் அதாரிட்டி. இப்போது அந்த ஜமாத்தையே இலக்கிய மன்றமாக மாற்றுவது போல் பேசினார். “மாற்றம்... மாற்றம்... எங்கும் மாற்றம்... எதிலும் மாற்றம்... இதுதான் சமூக பரிணாம வளர்ச்சி. இது தனி மனிதனுக்கும் பொருந்தும். நாமாக மாறவில்லையானால், எவராவது ஒருத்தர் அல்லது எந்த சக்தியாவது ஒன்று நம்மை மாற்றும். இதுதான் வரலாறு. நமது மூதாதையர்களான இந்துக்களை சீர்திருத்த சமணமும் பெளத்தமும் முன்வந்தன... இது, இந்துக்களின் காதில் ஏறவில்லை. இதனால் எங்கிருந்தோ வந்த முகம்மதியர்கள் நமது மூதாதையர்களை அடித்து அடித்துத் தலையில் குல்லா போடவைத்தார்கள். இந்து மதத்துக்குள்ளேயே அதன் கொடுமை தாளாமல் ஆதிதிராவிட மக்களும் முஸ்லீம்களாக மாறினாங்க. அதனால் இப்போ ஏற்படுகிற இந்து முஸ்லிம் கலவரம் கூட ஒரு பழைய கணக்கைத் தீர்க்கத்தான். இந்தியாவுக்கு வந்த முகமதியரோட மூதாதையரும் ஒரு காலத்தில் ஆரியர்களே!” திவான் முகமது தலையோடு சேர்த்து தொப்பியைச் சொறிந்த போது, நூருல்லா இடைமறித்தார். “நீங்க என்ன சொல்லவாறீங்க புரபஸர். அமீரு. நீயாவது இவரு பேச்சை மொழிபெயர்த்துச் சொல்லு.” “காலத்துக்கு ஏத்தபடி மாறணும். நம்ம பொண்ணுங்களை கோஷாவில இருந்து நீக்கணும்னு சொல்றார். இல்லன்னா, நம்ம பெண்களே நமக்கு எதிரா போராடுற காலம் வருதுன்னு சொல்றார். இல்லீங்களா ஐயா?” பேராசிரியர் இதயத்துல்லா தலையாட்டியபோது சம்சுதீன் ஆட்சேபித்தான். “சரிங்கப்பா, விஷயத்துக்கு வருவோம். நாம் என்ன முடிவு எடுக்கலாம்?” வெளிநடப்பு செய்துவிட்டு, மீண்டும் உள்ளே வந்த காதர்பாட்சா வந்ததும் வராததுமாய்ப் பேசினான், மங்கலான சிவப்பன், அதிரடிக் குரலோன். “என்ன முடிவு எடுக்கணும் என்கிறதவிட என்ன முடிவு எடுக்கப்படாது என்கிறதுதான் முக்கியம், பாபர் மசூதி இடிக்கப்பட்டது நம்ம வீட்டிலேயே ஒரு இழவு விழுந்தது மாதிரிதான், இல்லங்கல. ஆனால் முற்காலத்திலே இதே மாதிரியான சந்தர்ப்பத்திலே, நபிகள் நாயகத்தினுடைய பாட்டனார் அப்துல் முத்தலிபு எப்படி நடத்துக்கிட்டார்னு யோசித்துப் பார்க்கணும். நகரங்களின் தாயான மெக்காவில், ஏக இறைவனின் முதல் ஆலயமான காபாவை, அபிசீனிய நாட்டு அதிபதி அப்ரஹா என்பவன், யானைப் படையோடு தாக்க வரும்போது, அங்கிருந்த குர்ஷி மக்களோடு நகரத்தைக் காலி செய்யப் போன அப்துல் முத்தலிபு அந்த ஆலயத்தின் மூடியிருந்த திரையைப் பிடித்துக் கொண்டு என்ன சொன்னார். ‘இறைவனே! இது உன்னுடைய வீடு, இதைப் பாதுகாக்க இயலாதவர்களாய் நாங்கள் இருக்கிறோம். ஆகையால் உங்கள் வீட்டை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்?’ என்று அழுதழுது சொன்னாரே... அந்த அழுகை, ஒரு ஒற்றைக் குருவியை உசுப்பி, ஆயிரமாயிரம் குருவிகளை அலகுகளிலும், கால் இடுக்குகளிலும் கற்களைக் கொண்டுவரச் செய்து அபிசீனியப் படையை சின்னாபின்னமாக்கி காபாவைக் காக்கலியா? ஒரு தடவை நபிகள் நாயகமே தன் புதல்வியிடம் என்ன சொன்னார்? ‘அவர்கள் என்னை அடிக்கவில்லை. அல்லாவைத்தான் அடித்தார்கள்’ என்று கோபமற்ற குரலில் சொல்லவில்லையா? ஆகையால் மதவெறியர்கள், பாபர் மசூதியை மட்டும் இடிக்கவில்லை. எவர் தங்களை ஆக்கி, எவர் தங்களை இந்த உலகில் உலவ விட்டாரோ, எவர் தங்களுக்கு வீடுகளைக் கொடுத்தாரோ அவர் வீட்டை இடித்திருக்கிறார்கள். ஆகையால் அல்லா பார்த்துக்குவார். இன்ஸா அல்லா. ஜமாத்தை முடிக்கலாம்.” எல்லோரும் அசந்து போனார்கள். ‘கேனையன்’ மாதிரி வேட்டியோ, லுங்கியோ கட்டிக் கொண்டு, மசூதிப் பக்கம் வந்தால் கூட, அதைத் திரும்பிப் பார்க்காத காதர்பாட்சா போட்ட போட்டில் அத்தனை பேரும் திகைத்துப் போனார்கள். பேராசிரியர் இதயத்துல்லாவுக்கு மனத்தாங்கல். காதர், எங்கே பட்டிமன்ற நடுவராகி தனக்குப் போட்டியாய் விடுவானோ என்ற பயம். அதே சமயம் தாவர இயல் படித்தாலும் தமிழியலில் தேர்ச்சி பெற்ற முத்துக்குமார், காதருக்கு எழுதிக் கொடுத்திருப்பானோ என்று அவருக்கு ஒரு ஆனந்தமான சந்தேகம். மற்றவர்களோ குறிப்பாக இளவட்டங்களோ, காதர்பாட்சா கலைந்து போகும்படிச் சொல்லாமல் சொல்வதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனாலும் பெரியவர்கள் சிலர் மெளனித்தனர். அந்தச்சமயம் பார்த்து இன்னொரு டேப் பாடல்... அதுவும் இருபொருளிலான வார்த்தைகள்... பாட்டிலும் ஒரு சாராய நெடி... கூட்டம் பரபரத்து. படபடத்தது. இளவட்டங்கள் தரையில் கை ஊன்றாமலே எழுந்தனர். திவானின் முகமது யோசித்தார். பழனிவேல் பயலுக்கு பாடம் சொல்ல... நல்ல சந்தர்ப்பம்... அவன் கோர்ட்ல ‘ஸ்டே’ வாங்கப் போகவே முடியாது. நேரம் இருக்காது. கத்தினார். “பழனிவேல் சாராயக் கடையில பாட்டப் பாத்தீங்களா. இதுக்கு மேலயும் பொறுத்தால், நாம முஸ்லீம்கள் அல்ல. திருக்குரானில், ருக்கு இரண்டில் கூறப்படுவது போல், அதோ பாட்டுப் போட்டவர்களின் இதயத்திலும், அவங்கள பாட வச்ச பயல்க மனசிலும் ஒரு நோய் இருக்கு... அல்லா வேண்டும் என்றே அந்த நோயை அதிகமாக்கிட்டான்... ‘இன்சா அல்லா’, எழுந்திருங்க.” கூட்டம் எழுந்த போது, அமீர் உரத்த குரலில் மன்றாடினார். “நாம் தும்ப விட்டுவிட்டு வாலைப் பிடிக்கோம். இஸ்லாமியத் தெருவுல, அந்த மதுக்கடையைத் திறக்க அனுமதிக்கக் கூடாதுன்னு, அப்பவே ஜமாத்துல சொன்னேன். யாரும் காது கொடுக்கல.” “அப்போ, இந்த மாதிரி பாட்டு போடுறவனுகள சும்மா விடனும் என்கிறியா. நம்ம பொண்ணுக அந்த அசிங்கமான பாட்டைக் கேட்க முடியாம கூனி, குறுகி காதுகளை பொத்திக்கச் சொல்றியா.” அமீர், திவானுக்குப் பதிலடியாய்ப் பேசினார். “நாமும் வீரத்தில குறைஞ்சிடல... இப்படி அவனுக பாட்டுப் போடுறாங்கன்னா அதுல ஏதோ ஒரு சதி இருக்குன்னு நினைக்கேன்... இன்னிக்கு காலையிலேயே முன்னணிக்காரங்க அந்தக் கடைக்கு வந்துட்டுப் போனாங்களாம்... அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்... அவங்க சதி வலையில நாம விழுந்திடக்கூடாது... போலீஸ் எதுக்கு இருக்கு...” “அப்போ, கொக்கு தலையில வெண்ணெய் வைக்கச் சொல்றியா!” காதர்பாட்சா, அமீருக்குப் பதிலாக திவானுக்குப் பதில் கொடுத்தான். “அப்படி வெண்ணெய் வச்சதே நீங்கதான். பழனிவேலு, இஸ்லாமிய தெருவுல ஒயின்ஷாப் திறக்கிறதுக்கு, சிபாரிசு செய்ததும் நீங்கதான்.” திவான் முகமது திக்கு முக்காடிய போது, நூருல்லா அதட்டுவது போல் பேசினார். “போலி விசுவாசிகள் இங்கே நிற்கட்டும்... மானமுள்ள முஸ்லிம்க மட்டும் வரட்டும்... எங்கெல்லாம் இஸ்லாமிய விரோத காரியங்கள் நடக்கோ அதுங்கள தீர்த்துக் கட்டணும்... புறப்படுங்க...!” அமீர் ஏதோ இடையில் பேசப் போனார். காதர் பாட்சா கூட்டத்தை இடைமறிக்கப் போனான். அதற்குள் இன்னொரு பாட்டு. முன்பு ஒலித்ததை சாதாரணமாக்கும், அசாதாரண ஆபாசப் பாட்டு... இப்போது அமீருக்கும், காதருக்கும் கூடக் கோபம் வந்தது... அப்படியும் அவர்கள் கூட்டத்தை வழிமறித்தார்கள்... கூட்டத்தார் கேட்பதாயில்லை... ஒரே கூச்சல்... ‘ஒடுங்கடா... சுற்றி வளையுங்கடா... இப்படியே விட்டால் நம்ம வீட்லயும் கதவைத் தட்டுவானுவ... வாங்க... வாங்கடா...’ |