ஊர்ப்பகை மேலிட...

     பஞ்சாயத்துத் தலைவர் பயந்துவிட்டார். அடுத்த தேர்தலிலும், தலைவர் போட்டிக்குப் போட்டி போடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஏற்கெனவே சேரி ஜனங்கள் தங்கள் ஆள் ஒருவரை நிறுத்தப் போவதாகச் செய்தி அடிபடுகிறது. உலகம்மை வேறு, இப்போது பார்க்கிறவர்களிடத்தில் எல்லாம் "பஞ்சாயத்துத் தலைவரு ஒரு பங்காளிக் கூட்டத்துக்கு மட்டும் தலைவரா மாறிட்டாரு" என்று பேசிக் கொண்டிருக்கிறாள். கருவாட்டு வியாபாரி நாராயணசாமி வேறு "தலைவரு அவங்க ஆளுங்க இருக்க இடமாப் பாத்து லைட் போட்டுக்கிட்டார். குழாய்கள் வச்சிக்கிட்டார்" என்று பேசிக் கொண்டு வருகிறார்.

     உலகம்மையை, இப்படியே விட்டு வைத்தால், பலபேர் நாராயணசாமிகளாக மாறி விடலாம். ஆகையால் அவள் பிரச்சினையைக் கவனிக்க வேண்டும் அல்லது கவனிப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அவருக்குத் 'தங்க ஊசியான' மாரிமுத்து நாடாரை, தன் கண்ணில் எடுத்துக் குத்திக் கொள்ள விருப்பமில்லை. அதோடு பலவேச நாடார், மாரிமுத்து நாடாரிடம் பேசிவிட்டதால், இப்போது இவருக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டது. இதனால் கிடைக்கிற ஓட்டுக்களும் கிடைக்காமல் போகலாம். எல்லாத்துக்குந் தலையாட்டுகிற ஊர்ஜனங்கள், ஓட்டு என்று வரும் போது, அவரை ஓட்டி விடலாம்.

     'நாலையும்' யோசித்த பஞ்சாயத்துத் தலைவர், மாரிமுத்து அண்ணனிடம், ஊர்க் கூட்டத்தைக் கூட்டி, உலகம்மைக்கு எந்த வகையிலாவது 'ஒரு வழி வாய்க்கால்' பண்ண வேண்டும் என்று வாதாடினார். மாரிமுத்து நாடாரைக் கடத்திக் கொண்டு வந்தார். அவர் சம்மதித்தாலும், பலவேச நாடார் முடியாது என்று வாதிட்டார். 'பல காட்டில்' 'பல தண்ணி' குடிச்ச பலவேச நாடாருக்கு, இப்படி ஒருநாள் வாதிட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அதை 'அத்தானிடம்' சொன்னார். அருமையான கிரிமினல் யோசனை அது.

     ஊர்க்கூட்டம் அவசர அவசரமாகக் கூட்டப்பட்டது. இப்போதும் 'குட்டுப்பட்ட' அய்யாவுதான் அதற்குத் தலைவர் போல் தோன்றினார். 'மாரிமுத்து மனங்கோணாம எப்டி வழக்குப் பேசலாம்?' என்று பரீட்சைக்குப் படிக்கும் பையன் மாதிரி, யோசித்து வைத்திருக்கிறார். ஊர்க்கூட்டத்திற்கு ஒரு அந்தஸ்து வேண்டும் என்பதற்காக, ஆசாரி ஒருவரும், கணக்கப்பிள்ளையும், ராமையாத் தேவரும் அவரோடு இருந்தார்கள்.

     ஊர்க்காரர்களும் திரண்டு வந்தார்கள். பலபேருக்கு உலகம்மை படும் அவதி நெஞ்சை உருக்கியது. இந்தத் தடவை கொஞ்சம் எதிர்த்துப் பேச வேண்டும் என்று கூட நினைத்துக் கொண்டார்கள். உலகம்மையும், முற்றுந்துறந்த முனியைப் போல் அய்யாவை இழுத்துக் கொண்டு வந்திருந்தாள்.

     முதலில் வழக்கம் போல் பல பொதுப்படையான விஷயங்கள் பேசப்பட்டன. 'குளம் உடையுமா, மதகைத் திறக்கணுமா' என்பதிலிருந்து ஜனதா அரசாங்கம், அதிமுக, திமுக, காங்கிரஸ், வெளியூரில் நடந்த ஒரு கொலை, மாரிமுத்து நாடாரின் சர்க்கரை நோயின் இப்போதைய தன்மை முதல் பல விவகாரங்கள் பரவலாகப் பேசப்பட்டன. அய்யாவு, ஒரு தடவை கனைத்துக் கொண்டார். கூட்டம் அமைதியாகியது. பிறகு உலகம்மையை வரச்சொல்லி சைகை செய்தார். அவள், அவர் அருகில் வந்து நின்றாள். தன் இக்கட்டைப் பற்றி அவர் கேட்கப் போகிறார் என்று நினைத்து, கஷ்டங்கள் கொடுத்த கம்பீரத்துடன் அவள் நின்றாள். அய்யாவு, அதைக் கேட்காமல் எவரும் எதிர்பார்க்காத இன்னொன்றைக் கேட்டார்.

     "ஒலகம்மா ஒன் மனசுல என்னதான் நெனச்சிக்கிட்டிருக்க? முப்பது ரூபா அபராதம் போட்டோமே, ஏன் கட்டல? இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும்."

     எதிர்பாராமல் அடிபட்ட திக்குமுக்காடலில் தவித்துப் போன உலகம்மை, அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். ஆட்டுக்கு ஓநாய் நியாயம் பேசிய கதைதான். அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

     "என்னய்யா நியாயம் பேசுறிய, நியாயம்? என் வீட்ட ஜெயிலு மாதிரி அடச்சாச்சி. இருக்கிற ஒரு வழியிலயும் கழிசல போடுறானுவ! போற வழியில ராமசாமியும் வெள்ளச் சாமியும் அசிங்கமா தேவடியா செறுக்கின்னு என்னப் பாத்துப் பாடுறாங்க. அவனுகளைக் கேக்க நாதியில்ல..."

     தலைவர் இடைமறித்தார்:

     "இந்தா பாரு ஒலகம்மா! ஆம்புளைங்கள அவன் இவன்னு பேசப்படாது. இது ஊர்ச்சப. ஒன் வீடுல்ல."

     உலகம்மை தொடர்ந்தாள்:

     "அவங்க என்னத் தேவடியா செறுக்கின்னு பேசுறாங்கன்னு சொல்லுதேன். அதை ஏன்னு கேக்காம நான் அவன்னு வாய்தவறிச் சொல்லி விட்டத பிடிச்சிக்கிட்டியரு. பரவாயில்ல. என்ன நாயாய் கேவலப்படுத்துறாங்க. பேயாய் அலக்கழிக்கிறாங்க. ராத்திரி வேளயில கல்லையும் கட்டியையுந் தூக்கி எறிறாவ. இதுவள கேக்க வந்துட்டாரு. ஊர் நியாய முன்னா எல்லாத்துக்கும் பொதுதான். எனக்கு ஒத்தாச பண்ணாத சபைக்கு நான் எதுக்கு அபராதங் கட்டணும்? கையோட காலோட பிழைக்கிறவா, வயசான மனுஷன கவனிச்சிக்கிட்டு இருக்கவா, எப்டி உடனே அபராதத்த கட்ட முடியுமுன்னு, யோசிச்சி பாத்தீரா? ஒம்ம பொண்ணாயிருந்தா இப்டிக் கேட்பீரா?"

     அய்யாவு, ஏதோ பேசுவதற்கு வாயெடுத்த போது, பலவேச நாடார், "ஒன்னால கட்ட முடியுமா? முடியாதா? வசூலிக்கிற வெதமா வசூலிக்கத் தெரியும்" என்றார்.

     பீடி ஏஜெண்ட் ராமசாமி "ஒனக்குப் பணமுல்லன்னு சொல்லுறத யாரும் நம்ப மாட்டாங்க. ஒன் சங்கதியும் வருமானமும் எனக்குத் தெரியும்" என்றான்.

     அவன், எதை மறைமுகமாகச் சொல்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட உலகம்மை, "ஒன் அக்காள மாதிரி புத்தி எனக்குக் கிடையாது" என்றாள். ராமசாமியின் அக்கா ஓடிப் போய்விட்டாள். அதுவும் கல்யாணம் ஆன பிறகு.

     உடனே, சபையில் பெருங்கூச்சல்.

     "உலகம்மை, எப்படி அவன் அக்காளை இழுக்கலாம்? அவன் ஏதோ தற்செயலாய் அவள் சட்டாம்பட்டியில் தினமும் வேலைக்குப் போய்க் கூலி வாங்குவதைச் சொல்கிறான். திருடிக்குத் திருட்டுப் புத்திங்கறது மாதிரி இவா ஏன் வேற அர்த்தத்துல எடுத்துக்கணும்?"

     சில நிமிடங்கள் வரை, யார் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை.

     "அவா என் அக்காள எப்டி இழுக்கலாம்? நீங்க கேட்டுத்தாறியளா, நானே கேட்கட்டுமா?" என்று ராமசாமி குதித்தான். "பொறுல பொறுல" என்று மாரிமுத்து நாடார் பெரிய மனுஷன் தோரணையில் பேசினார். "அவா தான் அறிவு கெட்டுப் பேசினா நீயுமா பேசுறது? இருடா இருடா" என்று பலவேச நாடார் பாசாங்கு போட்டார்.

     கூட்டத்தினர் தங்களுக்குள் பேசியதை அடக்குவதற்காக, அய்யாவு இரண்டு தடவை கனைத்துக் கொண்டு, அந்த வேகத்திலேயே பேசினார்.

     "ஒலகம்மா! ஒனக்கு வாயி வளந்துகிட்டே போவுது. ராமசாமி அக்காளப் பத்திப் பேச ஒனக்குச் சட்டமில்ல. இப்ப விவகாரம் என்னென்னா, நீ ஏன் அபராதங் கட்டலங்கறதுதான். அவங்க, அவங்க நிலத்த அடச்சிக்கிட்டது ஊரு விவகாரம் இல்ல. பாதையில கழிசல் கிடக்குங்றது சின்ன விஷயம். அதையும் பேசுவோம். அதுக்கு முன்னால நீ ஏன் அபராதங் கட்டல என்கிறது தெரியணும். அதுக்கு அடுத்தபடியா ராமசாமியோட அக்காள ஏன் அனாவசியமா சப மத்தியில பேசுனங்கறது தெரியணும். அப்புறம் நீ சொல்றத விசாரிக்கணும். பதில் சொல்லு எதுக்காவ அபராதம் கட்டல?"

     உலகம்மையால், எரிச்சலை அடக்க முடியவில்லை. அவள் படுகிற பாடும் படுத்தப்படுகிற விதமும், ஒவ்வொருவருக்கும் தெரியும். 'எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயத்த தெரியாதது மாதிரி மூடி மறைக்கப் பாத்தா என்ன அர்த்தம்? எண்ணக்குடம் போட்டவனையும் தண்ணிக்குடம் போட்டவனையும் ஒண்ணாச் சேத்தா எப்டி?'

     "சப நியாயம் பேசணும். என் விஷயத்த மொதல்ல எடுக்கணும்."

     "நீ சபைக்கு உபதேசம் பண்றியா? அனாவசியமாப் பேசப்படாது. நீ அபராதம் கட்டல, போவட்டும். ஒன்னால கட்ட முடியுமா, முடியாதா? ரெண்டுல ஒண்ண ஒரே வார்த்தையில சொல்லு."

     உலகம்மை சிறிது யோசித்தாள். ஒன்றும் புரியாமல் மாயாண்டி அவள் கையைப் பிடித்துக் கொண்டு நின்றார். அவருக்கும் ஊர்க்காரர்கள் போக்கைப் பார்த்து அலுத்து விட்டது. உலகம்மை யோசிப்பதைப் பார்த்ததும் அவள் 'கட்டிடுறேன்' என்று எங்கே சொல்லிவிடப் போகிறாளோ என்று பயந்து, கணக்கப்பிள்ளை தற்செயலாகச் சொல்வது போல் சொன்னார்.

     "நீரு ஒண்ணு. அவா எங்கயா கட்டுவா? நாமெதான் அபராதம் குடுக்கணும்பா. ஒரு சபை போட்ட அபராதத்த விட அவளுக்கு போற வழியில எவனோ ரெண்டுக்கு இருக்கானாம், அதுதான் முக்கியமாம். சப போட்ட அபராதத்தையும் எவனோ ஒரு பய 'வெளிக்கி' இருந்ததையும் சோடியா நினைக்கிறாள். அந்த அளவுக்குச் சபையக் கேவலமா நினைச்சிட்டா! நீங்க ஒண்ணு வேல இல்லாம."

     கணக்கப்பிள்ளையும், அந்தப் பிள்ளையைப் பிடித்து வைத்திருந்த மாரிமுத்து - பலவேசம் கோஷ்டியும் எதிர்பார்த்தது போலவே, உலகம்மை சீறினாள். கணக்கப்பிள்ளை பொதுவான மனுஷன். அவருக்குக் 'கவுல்' கற்பிக்க முடியாது. அதோடு அந்தப் பிள்ளையை நிலம் வச்சிருக்கும் எவனும் கீரிப்பிள்ளையாய் நினைக்க முடியாது. கீறிப்புடுவார். அவர்களுக்குச் சந்தோஷம். உலகம்மை கணக்கன் போட்ட கணக்கில் ஜெயித்து, விவகாரக் கணக்கில் தோற்றுக் கொண்டிருந்தாள். இது புரியாமல் உலகம்மை 'நாலு ஊருக்குக்' கேட்கும்படியாகவே கத்தினாள்:

     "என்ன கணக்கப்பிள்ளய்யா! நீரும் அவங்ககூட சேர்ந்துக்கிட்டு ஆடுறீரு. மூணு பக்கமும் அடச்சி நாலாவது பக்கம் நாத்தம் வரும்படியாப் பண்ணியிருக்காங்க. இது ஒமக்கு இளக்காரமா இருக்கா? ஒம்ம வீட்ல யாரும் இப்டிச் செய்தா தெரியும். ஒமக்கென்ன அரண்மன மாதிரி வீடு. என் குடிசய நெனச்சிப் பேசாம, அரண்மனய நெனச்சிப் பேசறீரு."

     இந்தச் சமயத்தில் கணக்கப்பிள்ளை, "நமக்கு இந்தக் கத வேண்டாய்யா. பொது மனுஷன்னு பேசினா என்னப் பேச்சுப் பேசிட்டா? இன்னும் போனா என்னவெல்லாமோ பேசுவா! இந்த மாதிரி என் அம்பது வயசுல யார்கிட்டயும் பேச்சு வாங்கல. இது ஊராய்யா? ஒரு பொம்புளய அடக்க முடியாத ஊரு ஊராய்யா? நமக்கு ஒங்க வாடையே வேண்டாம். நான் வாரன். ஆள விடுங்க" என்று சொல்லிக் கொண்டு வெளியேறினார்.

     சபையிலிருந்து 'வாக்கவுட்' செய்த கணக்கப் பிள்ளையை, சமாதானப் படுத்துவது போல் மாரிமுத்து - பலவேச நாடார் கோஷ்டி அவர் பின்னால் போனது. அவரோ அவர்களை 'உதறிக் கொண்டு' போனார்.

     அய்யாவு முகத்தில் இப்போது கடுகடுப்பு. கூட்டத்தினரும் உலகம்மையை கோபத்தோடு பார்த்தார்கள். அதைப் பிரதிபலிப்பது போல் அவர் பேசினார்:

     "பொது மனுஷன் கணக்கப் பிள்ளையையும் கேக்காத கேள்வி கேட்டு விரட்டிட்ட. ஒன்ன இப்படியே விட்டு வைக்கது தப்பு. முன்னால போட்ட அபராதம் முப்பது. ராமசாமியோட அக்காள இழுத்ததுக்கு இருபது, கணக்கப்பிள்ளய விரட்டுனதுக்கு முப்பது, ஆக, முன்ன முப்பது, பின்ன அம்பது, மொத்தம் எம்பது ரூபாய் அபராதங் கட்டணும்."

     உலகம்மைக்கு இப்போது சொல்லமுடியாத தைரியம். தப்பிக்க வழியில்லாமல் மூலையோடு மூலையாக முடக்கப்பட்டு மரணத்தை அறிந்து கொண்ட ஒரு எலியின் தைரியம் அது.

     "இவ்வளவுதானா, இன்னும் போடப் போறீரா?"

     அய்யாவு, இப்போது எழுந்து நின்று கொண்டு பேசினார்:

     "என்ன... கிண்டலா பண்ணுத? நாங்க ஒனக்கு அவ்வளவு இளக்காரமாப் போச்சி! இல்லாட்டா ஊர்க்காரங்கள பொட்டப்பயலுவன்னு கேட்ப? ஒன் கண்ணுக்கு இவங்கெல்லாம் பொட்டப்பயலுவ, அப்படித்தானே? ஒனக்குப் பிடிக்காட்டா மாரிமுத்தச் சொல்லு. பலவேசத்தச் சொல்லு. ஒன்பாடு... அவங்கபாடு... ஒட்டுமொத்தமா எல்லாத்தையும் நீ பொட்டப்பயலுவன்னு சொல்லணும். அதுக்குப் போட்ட அபராதத்தையும் கட்டமாட்ட? பொட்டப் பயலுவளாம் பொட்டப் பயலுவ."

     'கணக்கப்பிள்ளையும் கொஞ்சம் ஓவராத்தான் பேசுனாரு. ஒலகம்மையும் அவத அப்டிப் பேசியிருக்காண்டாம். இருந்தாலும் கோபத்துல பேசுவது பெரிசில்ல' என்று நினைத்துக் கொண்டு, அதை எந்தச் சமயத்தில் எப்படிச் சபையில் வைக்கலாம் என்றும், 'எவரும் பேசாதபோது நாம ஏன் பேசணும்' என்றும் யோசித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் இப்போது அய்யாவு நாடாரின் உணர்ச்சிப் பிழம்பில் வெந்து வேக்காடாகி, உலகம்மை மீது கட்டுக்கடங்காச் சினத்தைக் கக்கத் துடித்தனர். அய்யாவு, இன்னொரு ஊசியை வாழைப்பழத்தில் ஏற்றினார்.

     "இப்ப என்ன சொல்ற? இவங்கள பொட்டப்பயலுவன்னு இன்னும் நினைச்சா அபராதங் கட்டாண்டாம். சொல்லு."

     உலகம்மை சிறிது யோசித்தாள். வயக்காட்டில், பிராந்தன், மானபங்கமாகப் பேசிய போது, தோள் கொடுத்தவர்கள் அந்த ஊர்ப் பெண்கள். இங்கே கண்டும் காணாதது மாதிரி ஒரு அனாதைப் பெண் படாதபாடு படுவது தெரிந்தும் தெரியப்படுத்தாமல் இருக்கும் ஆண்களை விட அவர்கள் எவ்வளவோ மேல்.

     அய்யாவு இறுதி எச்சரிக்கை விடுத்தார்:

     "சொல்லும்மா இவங்க பொட்டப்பயலுவ தானா இல்லியா?"

     உலகம்மைக்கு தலைக்கு மேல் சாண் போன தண்ணீர் முழம் போனால் என்ன என்கிற விரக்தி. வயக்காட்டுப் பெண்களை நினைத்துக் கொண்டாள். வாய் செத்த, இந்த ஆண்களையும் நினைத்துக் கொண்டாள்.

     "நான் பொட்டப் பயலுவன்னு சொன்னது தப்புத்தான். பொட்டச்சிங்க தைரியமாயும் நியாயமாயும் இருக்கத என் கண்ணால பாத்துருக்கேன்."

     உலகம்மை சொன்னதன் பொருள், உடனடியாக சபைக்குப் புரியவில்லை. அது புரிந்ததும் ஒரே அமளி. ஒரே கூச்சல்! கூட்டமே எழுந்தது.

     "எவ்ளவு திமிரு இருந்தா இப்டிப் பேசுவா? இவள விடக்கூடாது. கொண்டைய பிடிங்கல. தலயச் சீவுங்கல. சீலயப் பிடிச்சி இழுங்கல. மானபங்கப் படுத்துங்கல. ஏமுல நிக்கிய? செறுக்கிய இழுத்துக் கொண்டு வாங்கல."

     மச்சான்கள் பலவேச நாடாரும், மாரிமுத்து நாடாரும் கூட்டத்தைச் சமாதானப் படுத்தினார்கள். அதட்டிக் கூடப் பேசினார்கள்.

     "உக்காருப்பா. உட்காருங்க. அவா தான் அறிவில்லாம பேசினதுக்காவ நாமளும் அறிவில்லாம நடந்தா எப்டி? அட ஒங்களத்தான். உட்காருங்கடா, உட்காருங்கப்பா."

     கூட்டம் உட்கார்ந்தது; அய்யாவு தீர்ப்பளித்தார்:

     "ஒலகம்மா கட்டுப்பட மாட்டேன்னுட்டா, அது மட்டுமல்லாம பொட்டப் பயலுகன்னு ஒங்களச் சொன்னத சரிங்றது மாதிரி பேசிட்டா. பொம்பளைய அடிச்சா அசிங்கம். அவள யாரும் தொடப்படாது. எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பிரயோசனமுல்ல."

     "அதனால அவள ஊர்ல இருந்து இன்னையில இருந்து தள்ளி வைக்கிறோம். யாரும் அவா கூடப் பேசப்படாது. நல்லது கெட்டதுக்கு யாரும் போவக்கூடாது. அவளயும் கூப்புடக் கூடாது. எந்தக் கடன்காரனும் அவளுக்கு தட்டுமுட்டுச் சாமான் குடுக்கக் கூடாது. வண்ணான் வெளுக்கக் கூடாது. ஆசாரி அகப்ப செய்யக் கூடாது. யாரும் கூலிக்குக் கூப்புடக் கூடாது. ஒரு தண்ணி கூட அவளுக்குக் குடுக்கக் கூடாது. அவா குடுக்கத வாங்கக் கூடாது. அப்படி யாராவது மீறி நடந்தா அவங்களயும் தள்ளி வச்சிடலாம். அப்ப தான் ஊர்க்காரங்க பொட்டப் பயலுவ இல்லன்னு அர்த்தம். என்ன, நான் சொல்றது சரிதானே."

     "சரிதான். சரியேதான். இது மட்டும் போதாது."

     அய்யாவு இறுதியாக பேசினார்:

     "இப்போதைக்கு இவ்ளவு போதும். பொறுத்துப் பார்க்கலாம்."

     உலகம்மை மேற்கொண்டு அங்கே நிற்கவில்லை. ஒன்றும் புரியாமல் குழந்தையாகி நின்ற மாயாண்டியின் கையைப் பிடித்துக் கொண்டே நடந்தாள். மாயாண்டிக்குத் தண்டனையின் தன்மை இப்போதுதான் முழுவதும் புரிந்தது.

     "தள்ளி வச்சிட்டாங்களே உலகம்மா, நம்மள தள்ளி வச்சிட்டாங்களே."

     உலகம்மை கம்பீரமாகச் சேலையில் படிந்த தூசியைத் தட்டிவிட்டுக் கொண்டு சொன்னாள்:

     "நாமதான் ஊர தள்ளி வச்சிருக்கோம். சரி நடயும்!"