பாடை விரிந்திட...

     உயிரையே பணயமாக வைத்த ஒருவனுக்கு வாழைப்பழம் கொடுத்ததால் புதிய விரோதம் முளைத்து, அது பழைய விரோதத்துடன் சேர்ந்து கொண்டதைப் புரிந்து கொண்ட உலகம்மைக்கு ஒன்றும் ஓடவில்லை. தெருக்களில் அவளிடம் பேசாவிட்டாலும், சிநேகித பாவத்துடன் சிரித்துக் கொண்டு போகும் சிலர் கூட, இப்போது அவளைப் பார்த்ததும், பல்லைக் கடித்துக் கொண்டு போவதைப் பார்த்துத் திடுக்கிட்டாள். ஒற்றையடிப் பாதைக்கு அசிங்கம் மேலும் பயங்கரமாகியது. இதுவரை வெள்ளைச்சாமியும், ராமசாமியுந்தான் அவள் போகும் போது கீழ்த்தரமாகப் பாடுவார்கள், ஆடுவார்கள். இப்போதோ, பாதிப்பேர் 'காலிகளாகவும்', அடுத்த மீதிப் பேர் நல்லவர்களாகவும் இருந்த இதர பிள்ளையாண்டான்களும், 'முழுக்காலிகள் போல்' அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஆபாசமாகப் பேசுவது, நன்றாக அளவுக்கு அதிகமாகக் கேட்டது. அந்தப் பிள்ளையாண்டான்களின் அய்யாமார்களில் சிலரும் இந்தக் கோரஸில் சேர்ந்து கொண்டார்கள்.

     உலகம்மை, 'அருணாசலத்திற்கு ஏன் 'வாழைப்பழம்' கொடுத்தோம்?' என்று கூட நினைத்துக் கொண்டாள். பிறகு, அப்படி நினைப்பது நன்றி கெட்டத்தனமாகவும் அவளுக்குத் தெரிந்தது.

     'அய்யா கோட்டுக்குள்ள நிக்கையில ஏன்னு கேக்கல. நடந்த விஷயத்துல பாதியக் கூட போலீஸ்ல சொல்லல. அய்யாவ ஏட்டு இழுத்துக்கிட்டுப் போகையில ஒருவன் கூட நியாயம் பேசல. ஏன்னு கேட்டவள அபராதம் குடுன்னு சொல்லும் போது, ஊர்சனமே ஒண்ணாயிட்டு... ஓடோட விரட்டுறானுக. ஒருவனுக்குக்கூட நியாயம் தெரியல... தெரிஞ்சவனும் ஒதுங்கிப் போறான். இவங்களுக்குப் பயந்துகிட்டு எதுக்காவ இருக்கணும்? அப்பப்போ வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போற அருணாசலத்தவிட இவனுக எந்த விதத்துல உசத்தி?'

     உலகம்மை, தன் செயலை நியாயப்படுத்திக் கொண்டாலும், எந்த வித விரோதத்திற்கும் காரணமில்லாத, அவளைப் போன்ற ஏழை எளியவர்கள் கூட, அவளைப் பயங்கர எதிரியாகக் கருதுவதைத்தான் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்வதற்காக அவள் சிந்தித்த போது தலை வலித்தது தான் மிச்சம்.

     ஆண்டாண்டுக் காலமாக, வறுமைக் குப்பையில் நெளியும் புழுக்களாக மாறிப் போன ஏழை எளியவர்கள், தற்காப்பு உணர்வும், தன்னம்பிக்கையும் இல்லாமல் தாழ்வு மனப்பான்மையில் ஊறிப்போய் விடுவார்கள் என்பதும், அவர்கள் வெளிமனம் அந்த பிரத்யட்ச நிலையை ஒப்புக் கொள்ள மறுக்கும். இப்படி அடிமனதில் அடிவாங்கிப் பழகிப் போன அவர்கள், வலுவான மனிதர்களோடு, தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு, தங்களையும் வலுவான மனிதர்களாகக் காட்டிக் கொள்வார்கள். மனோதத்துவ ரீதியில் சொல்லப் போனால் அடிமை மனோபாவத்திற்கு 'காம்பென்ஸேஷன்' தேடிக் கொள்ளும் 'எஜமானத்துவ' வகையில் பெரிய இடத்தாரோடு ஒட்டிக் கொண்டு தங்களையும், பெரியவர்களாகக் காட்டிக் கொள்வார்கள். இந்த மனோ நுணுக்கம் உலகம்மைக்குத் தெரிய நியாயமில்லை. இதை அறியாமலேயே, 'வெங்கனுக்கு வீம்பு அதிகம்' என்ற பழமொழியின் உள்ளர்த்தம், பலரைப் போல் அவளுக்கும் தெரியாது.

     தொட்டிலிலேயே 'ஆனைக்கட்டிப் போரடிச்சார் உங்களய்யா. கைகட்டி வாய் புதைத்துக் காசினியார் நிற்கையிலே கப்பலுலே வந்திறங்கும் கண்மணியே, தாலேலோ' என்ற பாடலைக் கேட்டு, அதற்கேற்ப, 'சீமைத்துரை', 'வெள்ளைத்துரை', 'பாண்டியராஜன்', 'ராசாக்கண்ணு' என்று பெற்றோர்களால் பெயர்கள் வைக்கப்பட்டு, அவர்கள் சொன்னபடி நடக்காமல், எதிர்மறையில் நடந்தாலுங் கூட ஒவ்வொருவனும் தன்னைச் சக்கரவர்த்தியாக - தன்னையறியாமலே அங்கீகரித்துக் கொண்டு, அப்படிச் 'சக்கரவர்த்தி' மாதிரி இருப்பவர்களோடு ஒட்டிக் கொள்வார்கள் என்பதும், இந்த அடிப்படை மனோபாவத்தை உலுக்கித் தள்ளும் வகையில் இலக்கியங்களும், செயல்களும் துவக்கப்படாதது வரை, நிலைமை இப்படியேதான் இருக்கும் என்பதும், 'உயர்ந்தோர் மாட்டே உலகு' என்ற அந்த உலகிற்கே இதைச் சரியாகக் கணிக்கத் தெரியாத போது, உலகம்மைக்கு தெரிய வேண்டிய நியாயமில்லை. என்றாலும், அவள் உள்ளுணர்வு, 'பட்டிதொட்டி பதினாறிலும்' ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்பதை மட்டும் உணர்த்திக் கொண்டிருந்தது.

     இதோடு இன்னொரு வேலையும் அவளுக்கு. வீட்டில் பட்டைச் சாராயம் வைக்கப்படுகிறதா என்று அவள் கண்காணிப்பு வேறு செய்ய வேண்டியிருந்தது. தள்ளாமையில் தள்ளாடும் அவள் அய்யாவும், அவள் இல்லாதபோது விழிப்போடு இருக்க வேண்டும் என்ற நிலை. இந்தச் சமயத்தில், லோகுவின் எண்ணமும், உள்ளத்தில் எட்டிப் பார்ப்பதை அறிந்து, அவள் தன்னைத்தானே நொந்து, தனக்குள்ளேயே எரிச்சல் பட்டுக் கொண்டாள். என்றாலும், அவள் ஒன்றை மட்டும் விடவில்லை.

     நம்பிக்கை! நம்பிக்கை!

     'ஊரில் பதட்டநிலை முடிந்ததும், சேரி மக்கள் மீண்டும் 'வரப்போக' இருப்பார்கள். இந்தப் பயங்கரத் தனிமை நிரந்தரமாக இருக்காது. சரோசாவை, தங்கப்பழம் ஒருமாதிரியாக நடத்தினாலும், இப்போது கொஞ்சம் அவன் அன்பு காட்டுவதாகக் கூறப்படுகிறது. மாரிமுத்து நாடாருக்குக் கோபம் தணிந்து விடும். சேரி மக்களைப் பகைக்கக் கூடாது என்பதற்காகவே, ஊர்க்காரர்கள் போகப்போக அவளிடம் குரோதத்தைக் குறைத்துக் கொள்ளலாம். ஒருவேளை லோகுவே அவளை வந்து பார்க்கலாம். ஒருவேளை அவன், அவளை...'

     உலகம்மை மேற்கொண்டும் நினைத்ததைத் தொடராமல் சட்டாம்பட்டி வயக்காட்டுக்குப் புறப்பட்டாள். இப்போது மெட்ராஸுக்குப் போகும் எண்ணமே ஏற்படவில்லை. 'இந்த ஊர்க்காரன் என்னதான் பண்றான்னு கடைசிவரை பாத்துடலாம்' என்றே வைராக்கியமும் பிறந்தது. ஊர்க்கொசுவுக்குப் பயந்து, கோட்டை இருக்கும் சென்னைக்குப் போக அவள் விரும்பவில்லை.

     உலகம்மை தோட்டச்சுவரில் ஏறிக்குதித்துப் போவதை பார்த்துவிட்டு, மாயாண்டி மீண்டும் கட்டிலில் வந்து படுத்தார். அவரையும், தனிமை வாட்டியது. அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருந்த அருணாசலத்தை, தற்சமயத்துக்கு வரவேண்டாம் என்று அவர் தான் சொல்லியிருந்தார். கலகத்திற்குக் காரணமாகக் கருதப்படும் அவனை, எவனாவது 'ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிடப்படாது' என்கிற பயத்தில் சொன்னவர், இப்போது தனிமையே ஒரு பயங்கரமாக வடிவெடுக்க, அதைத் தாங்க மாட்டாது, சேரிக்குப் போகலாம் என்று யோசித்துப் பின்னர், தோட்டத்துச் சுவரில் ஏற முடியாத இயலாமையை நொந்து கொண்டு கண்ணயர்ந்தார்.

     வெளியே சத்தம் கேட்பதைக் கேட்டதும், எவனோ சாராயப் பானையை வைக்க வருவதாக நினைத்துக் கொண்டு மாயாண்டி வெளியே வந்தார். அவராலேயே நம்ப முடியவில்லை.

     தோட்டத்திற்கு உரிமையாளராக இருந்தும், தனக்குத் தானே உரிமையாளராக இருக்க முடியாமல் போன ஐவராசா, தோட்டச்சுவரை ஒட்டி, நாலைந்து கம்புகளை நட்டுவிட்டு, சுவரில் போடப்பட்டிருந்த முட்கம்பிகளை எடுக்க முடியாமல் எடுத்துக் கொண்டிருந்தார். சில பனைவோலைகளும் சுவரில் கிடந்தன. மாயாண்டிக்கு, 'இப்டிச் செய்ய இவனால எப்டி முடிஞ்சுது?' என்று உள்ளத்துக்குள் கேள்வி ஓங்கியது. வேகமாக ஐவராசாவை நெருங்கினார். ஆனால் ஐவராசாவால் மாயாண்டியை நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லை. கம்பியை எடுக்கிற சாக்கில், தலையைத் தாழ்த்திக் கொண்டார்.

     "என்ன மாப்பிள்ள, எதுக்குக் கம்பி நடுறீரு?"

     "என்னோடத் தோட்டத்த அடைக்கப் போறேன். அடிக்கடி பன்னி வந்து மேஞ்சிட்டுப் போவுது."

     "எந்தப் பன்னிய சொல்றீரு. மனுஷப் பன்னியயா? மிருவப் பன்னியயா?"

     ஐவராசா, அவரை நிமிர்ந்து பார்த்தார். என்ன பதிலளிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. மீண்டும் மும்முரமாக வேலையில் இறங்கினார். மாயாண்டி பேசுவது, காதில் நன்றாகத்தான் கேட்டது.

     "மாப்பிள, நல்லா யோசிச்சுப்பாரும். மொட்ட மரமா நிக்கறோம். வீட்டச் சுத்தி அடச்சிப்புட்டானுவ. ஒம்ம தோட்டத்தையும் அடச்சுட்டா நாங்க எங்க போவ முடியும்? ஒம்ம தோட்டத்துல குருவி நாயி கூடப் போவுது; நாங்க போவக் கூடாதா? மாப்பிள, மாப்பிள! நீரு செய்யுறது முறயில்ல மாப்பிள்ள! என் மொகத்த ஏறிட்டுப் பாரும்! அதுக்குப் பிறவும் ஒமக்கு அடைக்கணுமுன்னு நெனச்சா அடையும்! ஒம்மத்தான் மாப்பிள்ளை, வீட்டையே ஜெயிலா மாத்திட்டா, நாங்க எங்க போவம்? மாட்ட பவுண்டில அடைக்கது மாதிரி எங்கள அடச்சா எப்டி மாப்பிள்ள?"

     ஐவராசா, 'கண்டுக்காமல்' முட்கம்பியின் கீழ்முனையை, ஒரு கம்பில் கட்டிக் கொண்டிருந்தார். கிழவர் பேச்சைத் தாங்க முடியாதது போலவும், அது தன் இதயத்தைத் தாக்குவதற்கு முன்பாக, வேலியைப் போட்டுவிடுவதென்றும் நினைத்தவர் போல், அவசர அவசரமாக, முட்கம்பியின் மேல் முனையைத் தூக்கி, கம்பியின் நுனியில் கட்டிக் கொண்டிருந்தார். அதையே பார்த்துக் கொண்டிருந்த மாயாண்டி, வெளியே போன மகள் உள்ளே வரமுடியாது என்பதை நினைத்ததும், ஒரு குழந்தையாகவும் ஆகிவிட்டார்.

     "அய்வராசா! நான் சொல்றதக் கேளும். மாப்பிள்ள! இது கடவுளுக்கே பொறுக்காது மாப்பிள்ள. ஊரு ஒலகத்துல எங்கேயும் இப்டி நடக்காது! நல்லா நெனச்சிப் பாரும் மாப்பிள்ள. ஒருகாலத்துல ஒய்யா வீட்டச்சுத்தி 'செருவ' அடைக்க என்னக் கூப்பிட்டார். நானும் கறுக்குமட்டய வச்சி பன ஓலயச் சாத்தி நல்லா அடச்சிக் குடுத்தேன். ஒடனே ஒங்கய்ய ஒரு எட்டணாவ நீட்டுனாரு. 'நான் கூலிக்காரன் இல்ல மாமான்னு' ஒய்யாகிட்ட சொல்லிட்டு, 'மருமவன் பேர்ல 'செருவ' இருக்கட்டுமுன்னு' தமாஷா சொல்லிட்டு வந்துட்டேன். வேணுமுன்னா ஒய்யாகிட்ட கேட்டுப் பாரும். எனக்கே வேலி வந்துட்டா, எப்டி மாப்பிள்ள? ஒம்ம மனசு இளகாதா? ஒய்யாவுக்கும் இப்டி வராதுன்னு நினைக்கியா? நீரு கொண்டு வந்திருக்கிற ஓலை சாதாரண பனையோலை இல்ல! என் சாவச் சொல்ல வந்துருக்கிற துஷ்டி ஓல மாபிள்ள, துஷ்டி ஓல!"

     ஐவராசாவிற்கு மாயாண்டியின் கெஞ்சலைக் கேட்டதும் அதற்கு மேல் மனங்கேட்கவில்லை. ஊர்க்காரன்களை சபித்துக் கொண்டார். குளத்து வாய்க்கால் இல்லாத தன் வயல் வரப்பைத் திட்டிக் கொண்டார். முள் கம்பியால் பாதி இடத்தை அடைத்துவிட்ட அவர், மேற்கொண்டு வேலையைத் தொடராமல் மாயாண்டியைப் பார்க்காமலே பேசினார்:

     "நான் செய்யுற வேலையில எனக்கொண்ணும் சந்தோஷம் இருக்கதா நெனைக்காண்டாம்! ஊர்க்காரங்க பேச்சைக் கேட்காட்டா ஒம்ம மவா வயசுல இருக்கிற என் மவளைக் கரையேத்த முடியாது! இந்த வேலிய நான் அடைக்காட்டா, ஊர்ஜனம் என்னச் சுத்தி வேலி போட்டுடும்! இப்பவும் குடி முழுகிடல. பேசாம ஊர்க்காரங்க காலுல கையில போயி விழும்! செய்ததுல்லாம் தப்புன்னு தோப்புக்கரணம் போட்டாலும் பாதகமுல்ல! அவங்க வந்து, என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாப் போதும்! நீரு ஊரோட ராஜிய போயிட்டீர்னா இந்தத் தோட்டத்துல வேணுமுன்னாலும் குடிச போட்டுக்கும். நானும் மனுஷன் தான் மாமா."

     மாயாண்டி, அந்த 'மனுஷனையே' பார்த்தார். அவன் சொல்வதில் 'மனுஷத்தனம்' சாகாமல் துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். ஆனால் எண்சாண் உடம்பை எப்டி ஒரு சாணாக்குவது?

     ஒரு காலத்தில் ஒரு சாண் கயிற்றில் உயர்ந்தோங்கிய பனைமுகட்டில் நின்று, ஒரு மனிதப் பனையே நிற்பது போல் பனைமட்டையோடு, தன் மண்டையை அழுத்தி வைத்துக் கொண்டிருந்த மாயாண்டி, உடம்பு ஒரு சாணாகக் கூச, ஊர்க்காரர்களிடம் கெஞ்சுவதற்காக, அந்தத் தோட்டச்சுவரில் ஏற முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். சந்தர்ப்பம் சரியாக இருந்ததால் நல்லவராக இருக்கும் ஐவராசா, கிழவரின் கையைத் தூக்கி அவரை தோட்டச்சுவரில் 'கரையேற்றினார்'. "சீக்கிரமா வாரும். ஊர்க்காரணுக ஒரு வார்த்த சொல்லாட்டா நீரு என்னைக் குத்தம் சொல்லக்கூடாது" என்றும் அவரை உஷார் படுத்தினார்.

     நடக்க முடியாத மாயாண்டியால், இப்போது எப்படித் தான் ஓட முடிந்ததோ! 'கைதூக்கி' விட்டு 'கரையேற்றி' விட்ட ஐவராசாவைத் திரும்பிப் பார்க்காமலே, அப்படித் திரும்பிப் பார்த்தால், ஒரு நொடி வீணாகிவிடலாம் என்பது போல், ஓட்டமும் நடையுமாக, உடம்பெல்லாம் ஆட, பூமி குலுங்க, பறவைகள் பயத்துடன் இறக்கைகளைச் சிலிர்த்துக் கொண்டு பறந்தோட, அவர் பாய்ந்தோடிக் கொண்டிருந்தார். நாலு திசையும் முட்ட, எட்டுக் கோணமும் தட்ட, தட்டுத்தடுமாறி, வழிபார்த்து ஓடாமல், கால்பட்ட இடத்தையெல்லாம் வழியாக நினைத்து, கண்பட்ட ஆட்களையெல்லாம் உண்மையிலேயே மனிதராக நினைத்து, அவர் ஓடினார். வேர்க்க விறுவிறுக்க உயிர் அவரைப் பிடித்திழுப்பது போலவும், உயிரை அவர் பிடித்திழுப்பது போலவும், கொலை செய்தவனைத் துரத்தும் போலீஸ்காரனைப் போல, அந்தப் போலீஸில் இருந்து தப்பித்து ஓடும் கொலைகாரனைப் போல, அவர் ஓடினார். அத்துவானக் காட்டில் நரிமுகங்களையும், பரிமுகங்களையும் பார்த்து அலுத்துப் போன ஒருவர், மனித முகத்தைப் பார்க்க ஏங்கிக் கிடந்த ஒருவர், அது கிடைக்காமல், இறுதியில் பார்த்த முகங்களையே மனித முகங்களாகப் பாவித்துக் கொண்டு, அவற்றைப் பார்க்கப் போகும் மனிதனைப் போல் தள்ளாடிக் கொண்டும் ஓடினார். தன்னையே தான் தள்ளிக் கொண்டும் ஓடினார். உலகம்மைக்கு இரு மடங்காகவும் தனக்கு ஒரு மடங்காகவும் அந்த வயோதிகர் மும்மடங்காக ஓடினார்.

     புளியந்தோப்பில், முன்பெல்லாம் உலகம்மையைச் சீண்டிப் பார்ப்பதை மட்டுமே ஒரு கடமையாகவும், இப்போது அதை ஒரு இனிமையான பொழுது போக்காகவும் கொண்ட ராமசாமி, வெள்ளைச்சாமியிடம் அவர்கள் யாரென்றும் தெரிந்தும் ஓடினார். அவர்கள் முன்னால் போய் நின்று கொண்டு, "என் வீட்டு ஒரே வழியயும் ஐவராசா அடைக்கிறான். நீங்க சொன்னா கேட்பானாம். ஒரு வார்த்த வந்து சொல்லுங்க. சொல்லுங்க" என்று கெஞ்சினார். சாமிகள் இருவரும், அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்று நினைத்தார்கள். அவர் நிர்வாணமாக இல்லாமலும், குறைந்த பட்சம் வேட்டியைக் கிழிக்காமலும், இருப்பதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். பிறகு ஐவராசாவை உற்சாகப்படுத்த, ஒரே சமயத்தில் இருவரும் நினைத்து, தோட்டத்தைப் பார்த்து நடந்தார்கள்.

     மாயாண்டி நிற்கவில்லை. "சிரிக்கவாடா செய்யுறிக. ஒங்களப் பாத்து சொள்ளமாடன் சிரிக்கத மறந்துடாதிகடா" என்று சொல்லிக் கொண்டே, தலைதெறிக்க ஓடினார். புளியந் தோப்பில் இருந்து, தென்கிழக்கே உள்ள ஒரு தோட்டத்து வழியாக ஓடினார். விழுந்து போன சோளதட்டைகளை நாலைந்தாகச் சேர்த்து, செங்குத்தாக வைத்துக் கட்டிக் கொண்டிருந்த ராமையாத் தேவரைப் பார்த்து, "தேவரைய்யா, என் வீட்டு வாசப்பாதைய ஐவராசா அடச்சிக்கிட்டு இருக்கான். ஒம்ம மாதிரிப் பெரிய மனுஷன் வேண்டான்னா விட்டுடுவானாம். தயவு செஞ்சி வாரியரா?" என்று படபடப்பாகப் பேசிக்கொண்டு நின்றார். ராமையாத் தேவர், அவர் முகத்தைப் பார்க்கவில்லை. தேவர் யோசிப்பதாக நினைத்த மாயாண்டி, "ஏல சோமு, தக்காளி வயலுக்கிட்ட எருமமாடு தெரியுது. ஓடிபோயி விரட்டுல" என்று எங்கேயோ ஒருவனுக்குச் சத்தம் கொடுப்பதை உணர்ந்த அவர், தேவர் தன்னைத்தான் ஒருவேளை எருமை மாடுன்னு சொல்கிறாரோ என்று நினைத்து, அங்கிருந்து ஓடினார்.

     யூனியன் ரோடிற்கு அவர் வந்தபோது, இரண்டு பேர் ஒரு கட்டை வண்டியில் உட்கார்ந்திருக்க, ஒருவர் மாடுகளின் மூக்கணாங் கயிறுகளை லாவகமாக இழுத்துக் கொண்டே 'இம்மா இம்மா' என்று மாடுகளை விரட்டிக் கொண்டிருந்தார். முன்னால் போய் நின்ற மாயாண்டியைப் பார்த்ததும் 'பிரேக்கான' மூக்கணாங் கயிற்றை பிடித்திழுத்து மாடுகளை நிறுத்தினார் வண்டியோட்டி.

     "மாடக்கண்ணு மச்சான், சிவசாமி கோனார! என் வீட்டு வழிய ஐவராசா அடைக்கான். அடைச்சிட்டாமுன்னா வெளிலயும் வரமுடியாது. உள்ளயும் போகமுடியாதுய்யா. பெரிய மனசு பண்ணி கொஞ்சம் வந்து சொல்லுங்கய்யா. அவன் கேக்குறேங்குறான்."

     வண்டிக்காரர்கள் சிறிது யோசித்தார்கள். "இந்த புத்தி மொதல்லவே இருக்கணும். தும்ப விட்டுட்டு வாலப்பிடிச்சா எப்டி?" என்று சிவசாமிக்கோனார் 'கீதோபதேசம்' செய்ய, இன்னொருவர் "சரி சரி நகரும். ஒம்ம பாடு ஊருபாடு" என்று சொல்ல, வண்டியின் முன் பகுதியான 'சட்டத்தில்' உட்கார்ந்திருந்த வண்டியோட்டி, வண்டி மாடுகளை சாட்டைக் கம்பால் விளாசினார். வண்டிச்சக்கரம் காலில் படாமல் இருப்பதற்காக, மாயாண்டி துள்ளிக் குதிக்க வேண்டியதாயிருந்தது.

     மாயாண்டி தலைவிரி கோலமாக, ஊர்க்கிணற்றுப் பக்கமாக, காளியம்மன் கோவிலுக்கு முன்னால் வந்து, "காளியாத்தா, இன்னும் பொறுத்துக்கிட்டுத்தான் இருக்கியா?" என்று ஊரே அதிரும்படி கதறிவிட்டு, ஒரு ஓரத்தில் மேடாக இருந்தத் திட்டில் உருளைக்கிழங்கு கருவாடு வகையறாக்களை விற்றுக் கொண்டிருந்த பகுதி நேர வியாபாரிகளிடம் விஷயத்தைச் சொல்லிக் கெஞ்சினார். அந்தப் பக்கமாகக் குடங்களை இடுப்பில் வைத்துக் குலுங்காமல் போய்க் கொண்டிருந்த பெண்களிடம் "ஒங்க வூட்டுக்காரங்கள வரச்சொல்லுங்கம்மா. ஐவராசாகிட்ட சொல்லச் சொல்லுங்கம்மா" என்று கெஞ்சினார். அந்தப் பெண்கள் பரிதாபப்பட்டார்களே தவிர, பதிலளிக்கவில்லை. வியாபாரிகள், தராசுத் தட்டுகளைக் கொஞ்சம் விட்டுப் பிடித்தார்களே தவிர, விடையளிக்கவில்லை.

     கிழவர், அதைரியப்படாமல், 'வாலிபால்'காரர்களிடம் வந்தார். அவர்களிடமும் விஷயத்தைச் சொன்னார். அந்த 'மைனர்கள்' பந்தை பிடித்துக் கொண்டு சிறிது யோசித்து விட்டு, பிறகு, 'விவகாரம் பெரியவர்கள் சம்பந்தப்பட்டது' என்று நினைத்துக் கொண்டு, எது அவர்களிடம் இல்லையோ அதையே 'சர்வீஸ்' போடுபவர் சொல்லிக் கொண்டு பந்தை அடித்தார்.

     "லவ் ஆன். ஒன் லவ். லவ் ஒன்."

     கைப்பந்து அங்குமிங்குமாக உருண்டோடிக் கொண்டிருந்தது மாயாண்டியைப் போல. ஒரு கணம் திகைத்து, மறுகணம் ஊர்ப்பிரமுகர்கள், கூடித்தின்னும் காத்தமுத்துவின் டிக்கடைக்கு முன்னால் வந்து கத்தினார்:

     "அய்யாமாருங்களே! தர்மப் பிரபுமாருங்களே! என்னோட வீட்டு வழிய ஐவராசா அடச்சிக்கிட்டு இருக்கான். நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படறேன். ஒங்க காலுல வேணுமுன்னாலும் செருப்பா கிடக்கேன். தயவு செஞ்சி இப்பவே வாங்கய்யா. அவன அடைக்காண்டாமுன்னு சொல்லுங்கய்யா. நான் செஞ்சதுல்லாம் தப்புத்தாய்யா... நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன்... தயவு செஞ்சி வாங்க! பழயதப் பாக்காம வாங்கய்யா! ஒங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டுய்யா! காளியாத்தா ஒங்க காலுகைய நல்லா வைப்பாயா! சொள்ளமாடன் சுகங்குடுப்பான்யா! வாங்கய்யா, வந்து கேளுங்கய்யா! தர்மப் பிரபுக்களே! ஒங்களத்தாய்யா."

     கூட்டத்தில் ஒரு குலுக்கல் ஏற்பட்டது; ஒரு அப்பாவியால் பொறுக்க முடியவில்லை.

     "வயசான மனுஷன் வாளுவாளுன்னு கத்துறான்; ஒழிஞ்சி போறான். பாலப்பாக்கதா, பால் காய்ச்சிற சட்டியப் பாக்கதா? பலவேச மச்சான், அய்வராசாவ போயிச் சத்தம் போடும்."

     "நான் எப்டியா போவ முடியும்? பறப்பயலுக்கு அவன் மவா வாழப்பளத்தக் குடுத்து நம்மள எல்லாம் கேவலப்படுத்துனா! அது ஒனக்குப் பெரிசாத் தெரியலியா?"

     "பொம்பிளையோட புத்தி பின்புத்திதான? போவட்டும். போயிச் சொல்லிட்டு வாரும். ஆசாரி, நீராவது போயிட்டு வாருமே!"

     "என்னவே செத்தப் பேச்சிப் பேசுறீரு? மவள இவரால அடக்க முடியல! சேரிப்பக்கம் போவாம தடுக்க முடியல! பொண்ணஞ்சட்டி மாதிரி, பொண்ண ஒழுங்கா நடத்தத் தெரியாம, இப்பக் கையக்காலப் பிடிச்சா எப்டிவே? ஊருன்னா கிள்ளுகீரையா? இல்ல தெரியாமத்தான் கேக்கேன்."

     "அப்போ நான் போவட்டுமா?"

     "மானத்த உதித்திட்டு வேணுமுன்னா மகாராசனா போவும்! அப்புறம் வருத்தப்படாதேயும். அவ்வளவுதான் சொல்லுவேன்."

     "என் மானங்கெட்டாலும் பரவாயில்ல, நான் போகத் தான் போறேன்!"

     "நானும் வாரேம்பா."

     "நானும் வாரேன்."

     "நானும்."

     "நா."

     கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் மாரிமுத்து நாடார் எங்கிருந்தோ பிரசன்னமானார். அவரைப் பார்த்ததும், அவர் அங்கேயே வட்டி கேட்பார் என்று பயந்து சலசலப்பு அடங்கியது. மாரிமுத்து நிதானமாக, அழுத்தந்திருத்தமாக, நறுக்குத் தெறித்தாற் போல் பேசினார்.

     "ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுங்கப்பா. ரெண்டு நாளைக்கி விட்டுப் பிடிப்போம்! ஒலகம்மையும் இவர மாதிரி தெருத்தெருவா பிச்சக்காரி மாதிரி அலைஞ்சி கண்டவன் காலுலல்லாம் விழுந்து, கடைசில நம்ம கால்ல விழணும்! விழுந்திடுவா. அதுவரைக்கும் பொறு. இல்லன்னா ஊர்க்காரன பொட்டப்பயலுவன்னு சொன்னதும் பத்தாம, பறப்பயலுக்கு வாழப்பழத்தக் குடுத்து நம்ம மானத்த வாங்குனவா இன்னும் என்னவெல்லாமோ செய்வா! செறுக்கிமவா கையில காலுல விழுறது வரைக்கும் பல்லக் கடிச்சிக்கங்க! என் மனசுகூடத்தான் இளகுது! எளகிட்டா எப்டி? ஊருன்னா நாளக்கி ஒரு பயம் வராண்டாமா? என்ன நான் சொல்றது, செட்டியார?"

     "சரியாச் சொன்னீக. அவள் நம்ம கால்ல விழுறது வரைக்கும் நாம இருதயத்தக் கல்லா வச்சிக்கிடணும் இல்லியா ஆசாரியார?"

     "நான் நெனச்சத நீரு சொல்லிட்டீரு."

     'நம்ம காலுல விழணும்' என்ற வார்த்தை, எல்லாருக்கும் இதமாக இருந்தது. அதோடு 'ரெண்டு நாளைக்குக் கிழவன் கஷ்டப்பட்டாதான் அந்தக் குமரிக்குப் புத்திவரும்' என்று எல்லோரும் நினைத்தார்கள்.

     ஊர்க்காரர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், நல்ல முடிவு கிடைக்கும் என்று கையைப் பிசைந்து கொண்டிருந்த மாயாண்டி, இறுதியில் அவர்கள் கைகழுவி விட்டது போல், முகங்களைத் திருப்பிக் கொண்டதைப் பார்த்ததும், மீண்டும் புலம்பினார்:

     "ஒங்களத்தான். தயவு செஞ்சி என்னோட குத்தத்த மறந்துடுங்கய்யா. இந்நேரம் ஐவராசா அடச்சி முடிச்சிருப்பான். ஒரு நட வந்து சொல்லிட்டு வந்துடுங்க. இந்தக் கெழவன் பேசுறது கேக்கலியாய்யா? ஒங்களத்தான் மவராசாமாரே."

     பொறுமைக்குப் பெயர் போகவே போகாத பலவேச நாடாரால் பொறுக்க முடியவில்லை; அதட்டிப் பேசினார்:

     "என்ன மாயாண்டி நாடாரே! ஒரேயடியாய் குழுவஞ்சி போடுறீரு. வயசுப் பொண்ண ஒம்மால அடக்க முடியல. பட்டப்பகல்ல பப்ளிக்கா பறப்பய மவனுக்குப் பழம் கொடுக்கா! அதத் தடுக்க ஒம்மால முடியல! கண்கெட்ட பிறவு சூரிய நமஸ்காரம் பண்ணுனா எப்டி?"

     "பழயத மறந்துடும், பலவேசம், ஒன்கூடப் பொறக்காத அண்ணன் மாதிரி என்ன நினைச்சு ஒரு நட வா, ராசா! மாரிமுத்து! உன்னையுந்தாப்பா. சின்னப் பயமவா சின்னத்தனமா பேசுனத நீ பெரிய மனுஷன் பெருந்தன்மையா விட்டுடுப்பா! வாப்பா, வந்து ஐவராசாகிட்டச் சொல்லு ராசா. ஒன்ன இடுப்பில எடுத்தவன்டா நான். இப்போ இடுப்பு ஒடிய நிக்கதப் பாக்கதுக்கு ஒனக்கே நல்லா இருக்கா மாரிமுத்து? ஆசாரியார, ஒமக்கு எத்தன தடவை நொங்கு வெட்டி தந்திருக்கேன்! தின்னத மறந்துட்டீரா?"

     மாரிமுத்து நாடார், கூட்டம் மீண்டும் சலசலப்பு அடையாமல் இருப்பதற்காக, வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசாமல், 'ஈரத்துணியைச் சுத்திக் கழுத்தை அறுக்கப்' பேசினார்:

     "ஒம்ம மேல எங்க யாருக்குமே வருத்தங் கிடையாது. ஆனால் ஊர்க்காரன பொட்டப்பயலுவன்னு சொல்லிட்டு, நாயி, ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி கடைசில மனுஷனையே கடிக்கிற மாதிரி, சாப்புடுறதுக்கு மட்டும் வாய் வச்சிக்கிட்டு பேசத் தெரியாமக் கிடந்த பறப்பயலுவ கூட சேந்துகிட்டு, குலங்கோத்திரம் தெரியாம அருணாசலம் பயலுக்கு வாழப்பழத்தக் குடுத்து நம்ம எல்லாத்தையும் அவமானப்படுத்திட்டா! நாங்க இருந்ததுலயும் கணக்கில்லாம செத்ததுலயும் கணக்கில்லாம தலயத் தொங்கப் போட்டுக் கிட்டு இருக்கோம்."

     மாரிமுத்து பேசியதும், அதுவரை தலைகளைத் தொங்கப் போடாத தலையர்கள், இப்போது அவற்றைத் தொங்கப் போட்டுக் கொண்டார்கள். மாரிமுத்து நாடார், "அதனால" என்று பேசத் துவங்கிய போது, அவரை அதிகமாய் மதிக்காத பலவேசமும் "அதனால" என்று சொல்லிவிட்டு, அதற்கு மேலும் பேசினார்:

     "அதனால இப்ப சொல்றதுதான் எப்பவும் சொல்றதும்! ஒம்ம மவா, அந்த அடங்காப்பிடாரி, ஊர்ல இருக்கிற ஒவ்வொரு ஆளுடைய கால்லுலயும் விழுந்து 'அய்யா சாமி'ன்னு கெஞ்சணும். நடையாய் நடந்து, காலு கரையணும். பாத்துப் பாத்துக் கண்ணு பூக்கணும்! நின்னு நின்னு நடவாசல் தேயணும். அப்புறந்தான் ஐவராசா மச்சாங்கிட்டச் சொல்லலாமா, வேண்டாமா என்கிறத ஊரு யோசிக்கும்! நீரு வீணாப்புலம்புறதுல புண்ணியமில்ல!"

     மாயாண்டியும், "புண்ணியமில்லை" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் புண்ணியவான்களையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது புலம்பவில்லை. தன்னைத்தானே அதட்டி, அடக்கிக் கொண்டார். இந்தச் சமயத்தில், பஞ்சாட்சர ஆசாரியார், "ஒரு பொம்புள முண்டைக்கு இவ்வளவு திமுரு ஆவாதுப்பா! நீரும் அதிகமாக இடங்குடுத்திட்டீரு! அவள வந்து இவங்க கையில காலுல விழச் சொல்லும்! வீணா நேரத்தப் போக்காதேயும்" என்றார்.

     மாயாண்டி பிடரியைச் சிலிரித்துக் கொண்டார். உலகம்மை, அவர்கள் கையில காலுல விழுவதாக இருந்தால், அவரே அவள் கைகாலை வெட்டிவிடப் போகிறவர் போல உடம்பை ஒரு தடவை உதறிக்கொண்டு, அனாவசியமாகப் பேசினார்:

     "என்ன சொன்ன ஆசாரி? உலகம்ம வந்து ஒங்க காலுல விழணுமா? அவா நடந்துபோற தூசில அறுந்துபோற தூசிக்கு நீங்க பெறுவியளாடா? என்னமோ எளியவன் சொன்னான்னு இளக்காரமா பண்ணுறீய?"

     "நீங்க வந்தாலும் சரிதான். வராம நாசமாப் போனாலுஞ் சரிதான். ஆனால் ஒண்ணு... நான் 'நாடு நகர்' சுத்தாத பனையேறிதான். அறிவுகெட்ட முண்டந்தான். ஆனால் மாரிமுத்து மாதிரி கசாப்புக்கறியக் குடுத்து காணி நிலத்த வாங்கல. ஒம்ம மாதிரி தங்கத்துல பித்தளயச் சேக்கல! அய்யாவுவ மாதிரி அரவட்டி வாங்கி ஏழபாழ வயத்துல அடிக்கல! பலவேசத்த மாதிரி சித்தி மவளயே வச்சிக்கிட்டு இருக்கல! கடவுளே கதின்னு நான் உண்டு என் பனைவுண்டுன்னு இருந்தவன்! என் வயித்துல அநியாயமா நெருப்பக் கொட்டிட்டிய! நீங்க இப்ப செய்றதுக்கு எப்பவாவது வாதத்துல விழுந்தாவது, லாரில கைகாலு போயாவது துள்ளத்துடிக்கக் கிடக்கலன்னா நான் ஒரு அப்பனுக்குப் பிறக்கல. "வாயாடா பேசுறீய?" மாயாண்டி சிறிது மூச்சுவிட்டுக் கொண்டு மேலும் தொடர்ந்தார்:

     "பொண் பாவம் பொல்லாததுடா. அது ஒங்களக் கேக்காம போவாதுடா! பாப்பமோடா, பன்னாடப் பயலுகளா."

     மாயாண்டி தரையில் குனிந்து ஒரு பிடி மண்ணெடுத்து அதை உள்ளங்கையில் ஏந்தி ஊதிவிட்டார்.

     "இந்த மாதிரி நீங்க மண்ணாப் போவாட்டா, என் பேரு மாயாண்டி இல்லடா."

     கூட்டத்தினர், எதிர்பாராத இந்த வசவில் மாட்டி என்ன பதிலளிப்பது, யார் முதலில் பதிலளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், மாயாண்டி போட்ட மண் துகள்கள், எல்லார் தலையிலும் ஏறின.

     மாயாண்டி, வீட்டைப் பார்த்து ஓடினார். இதுவரைக்கும் வீராப்பாய் இருந்துகிட்டு, இப்பப்போய் 'முடிச்சி மாறிப்' பயலுவ காலுல விழுந்துட்டமே, என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு, அதற்கு வெட்கப்பட்டவர் போல் ஓடினார். ஒரே நாளில் மொத்தமாக ஓடிவிட்டு உலகைவிட்டு ஓடப்போகிறவர் போல் ஓடினார். தோட்டச்சுவரில், அனாவசியமாக ஏறி, அலட்சியமாகக் குதித்தார். ஐவராசாவையே, வெறிபிடித்தவர் போல், சூன்யமாகப் பார்த்தார். அந்தச் சூனியத்தின் சூடு தாங்கமுடியாத வேலிக்காரர், "என்ன மாமா யாரும் வாராங்களா?" என்று கேட்டார். அவருக்கும், ஆள் தேவையாக இருந்தது.

     மாயாண்டிக் குரலில் இப்போது கெஞ்சல் இல்லை. கேவல் இல்லை. பிசிறு இல்லை. பிலாக்கணம் இல்லை. அவர் குரல் கம்பீரமாக ஒலித்தது. ஆலய மணியைப் போல முழங்கியது:

     "ஐவராசா, தோட்டத்த அடைக்கறதும் அடைக்காததும் உன்னோட இஷ்டம். நான் ஒண்ணும் ஒன்கிட்டப் பிச்சை கேக்கல! நீ அடச்சாலுஞ் சரிதான். அடைக்காட்டியும் சரிதான்! ஒனக்கு நீயே குழிவெட்டிக்கிட்டா நான் என்ன பண்ன முடியும்? அவனவன் கர்மவினய அவனவன் அனுபவிச்சுத்தான் ஆவணும்! நான் உள்ள போறேன்."

     மாயாண்டி வீட்டுக்குள் போனார். பிறகு ஒரு நிமிடத்தில் திரும்ப ஐவராசாவின் அருகில் வந்தார்.

     "ஐவராசா! ஒரே ஒரு உதவி. அதுவும் முடிஞ்சா. இஷ்டமிருந்தா செய்யி! என் மவள் இன்னுங் கொஞ்ச நேரத்துல வந்துடுவா. அவள உள்ள அனுப்பிட்டு அப்புறமா நல்லா அடச்சிக்க! அதுவரைக்கும் உன்னால பொறுக்க முடியாதுன்னா, அடச்சிடு! வெளில நிக்கப்போற என் மவாகிட்ட மட்டும், 'அவசரப்பட்டு ஒண்ணும் பண்ணாண்டாமாம். காளியாத்தா வாசல்ல போயிப் பழியாய்க் கிடக்கணுமாமுன்னு' நான் சொன்னேன்னு மட்டும் சொல்லிடு! வாரேன். ஐவராசா, ஐவராசான்னா அர்த்தம் தெரியுமாடா? தர்மத்துக்குக் கட்டுப்பட்டு வனவாசம் போன பஞ்சபாண்டவங்கன்னு அர்த்தம்! தர்மத்துக்குக் கட்டுப்பட்ட கெழவன் வீட்ட வனமா ஆக்கினவன்னு அர்த்தமில்ல. மாமாவால நிக்க முடியல. வேல செய்யுற ஒனக்குப் பேச்சுத்துணை கொடுக்க முடியல! வரட்டுமா?"

     "நான் போறேன் ஐவராசா. உலகம்மகிட்ட மறக்காமச் சொல்லிடு. சரிசரி உன் வேலயப் பாரு."

     மாயாண்டி கம்பீரமாக, சிங்கத்தைப் போல் பார்த்துக் கொண்டு அடிமேல் அடிவைத்து, நூலிழை பிறழாத இடைவெளியுடன், நிர்மலத்துடனும், நிர்க்குணத்துடனும், முன்னாலும் பார்க்காமல், பின்னாலும் பார்க்காமல், கைகளிரண்டையும் முதுகுக்குப் பின்னால் கட்டிக்கொண்டு, தன் பாதங்களின் பெருவிரல்களை மட்டுமே பார்த்துக் கொண்டு, வீட்டுக்குள் சென்றார்.

     அவரையே பார்த்துக் கொண்டிருந்த ஐவராசாவிற்கு, மனம் கேட்டதோ இல்லையோ, அதில் பயம் கேட்டது. உண்மையிலேயே அவர் நடுங்கிவிட்டார். தோட்டச் சுவரில் ஒரு பாதி அடைக்கப்பட்டிருந்தது. சன்னமான கம்பி வலையால் பின்னப்பட்டு, இடையிடையே பெரிய முட்கம்பிகளால் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த கம்பிவலை மடிப்புக் கலைந்து காற்றில் ஆடியது. கம்பி வலையோடு சேர்த்து, பனையோலைகள் திணிக்கப்படாமல், சுவரிலேயே கிடந்தன. நாலைந்து மூங்கில் கழிகள் வேறு.

     ஐவராசா பயந்து விட்டார். போட்டதைப் போட்டபடி விட்டுவிட்டு, அரிவாளையும், மண்வெட்டியையும் மட்டும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

     அந்தக் கம்பிவலை, காற்றில் லேசாக ஆடி, பிறகு பிரிந்து, பாடை மாதிரி விரிந்தது.