கணபதி தாசர்

இயற்றிய

நெஞ்சறி விளக்கம்

காப்பு

வஞ்சக மனத்தின் ஆசை மாற்றிய பெரியோர் தாளில்
கஞ்ச மாமலர் இட்டோதும் கணபதி தாசன் அன்பால்
நெஞ்சறி விளக்க ஞான நீதி நூல் நூறும் பாடக்
குஞ்சர ஞகத்து மூலக் குருபரன் காப்பதாமே.

நூல்

பூமியில் சவுந்தரப் பெண் புணர்ந்திடு நாகை நாதர்
நாமம் எந்நாளும் நாவில் நவின்று செந்தமிழால் பாடிக்
காமமு ஆசா பாசக் கன்மமும் அகற்றி மூல
ஓமெனும் எழுத்து ஐந்தாலே உனை அறிந்து உணர்வாய் தெஞ்சே. 1

தந்தைதாய் நிசமும் அல்ல சனங்களும் நிசமும் அல்ல
மைந்தரும் நிசமும் அல்ல மனைவியும் நிசமும் அல்ல
இந்த மெய் நிசமும் அல்ல இல்லறிம் நிசமும் அல்ல
சுந்தர நாகை நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே. 2

காண்பதும் அழிந்து போகும் காயமும் அழிந்து போகும்
ஊண் பொருள் அழிந்து போகும் உலகமும் அழிந்து போகும்
பூண்பணி நாகை நாதர் பொற்பதம் அழியாது என்று
வீண் பொழுதினைப் போக்காமல் வெளிதனில் ஒளிபார் நெஞ்சே. 3

மனமெனும் பேயினாலே மாய்கையாம் இருடான் மூடச்
சனமெனும் ஆசா பாசம் தலைமிசை ஏற்றிக்கொண்டு
கனமெனும் சுமையைத் தூக்கிக் கவலை உற்றிட்டாய் நீயும்
பனமெனும் நாகை நாதர் பதம் பணிந்து அருள்சேர் நெஞ்சே. 4

இருவினைப் பகுதியாலே எடுத்த இந்தத் தேகம் தன்னை
மருவிய நானான் என்று மாயையில் அழிந்தாய் நீதான்
குருவினால் குறியைப் பார்த்துக் குண்டலி வழியே சென்றங்கு
உருவினால் நாகைநாதர் உண்மையை உணர்வாய் தெஞ்சே. 5

வான் அதில் இரவி உன்றன் வயதெலாம் கொடு போகின்றான்
தான் அதை அறிந்திடாமல் தரணியில் இருப்போம்என்றே
ஊனமாம் உடலை நம்பி உண்மை கெட்டு அலைந்தாய் நீமெய்ஞ்
ஞானமே பொருளாய்நாகை நாதரைத் தொழுவாய் நெஞ்சே. 6

எட்டுடன் இரண்டுமாகி இருந்ததோர் எழுத்தைக் காணார்
விட்டதோர் குறியும் காணார் விதியின் தன் விவரம் காணார்
தொட்டதோர் குறியும் காணார் சோதி மெய்ப்பொருளும் காணார்
கிட்டுமோ நாகை நாதர் கிருபை தான் உரைப்பாய் நெஞ்சே. 7

வஞ்சக நடை மரத்தில் வளர்வினைக் கொம்பிலேறிச்
சஞ்சல மனக்குரங்கு தாவியே அலைய நீதான்
பஞ்ச பாதகங்கள் செய்து பாம்பின் வாய்த் தேரை ஆனாய்
நஞ்சமும் அருந்து நாகை நாதரை வணங்கு தெஞ்சே. 8

உடலினை நிசமென்று எண்ணி உலகெலாம் ஓடியாடிக்
கடல் மரக்கலப்பாய்க் கம்பக் காகம் போல் கலக்கம் உற்றாய்
திடம் அருள் குருவின்பாதம் சிக்கெனப் பிடித்து நின்றால்
நடமிடு நாகை நாதர் நற்பதம் பணிவாய் நெஞ்சே. 9

வீட்டிருள் போகவென்றே விளக்கினை ஏற்றி வைத்தால்
வீட்டிருள் எங்கே போச்சு விளக்கு ஒளி எங்கே போச்சு
கூட்டினில் நடஞ்செய் ஈசன் குறிப்பு அறியாமல் நீதான்
நாட்டினில் அலைந்தாய் நாகை நாதரை வணங்கு நெஞ்சே. 10

காட்டினில் மேவுகின்ற கனபுழு எல்லாம் பார்த்து
வேட்டுவன் எடுத்து வந்து விரும்பியக் கிருமி தன்னைக்
கூட்டிலே அடைத்தும் அந்தக் குளவி தன் உருவாய்ச் செய்யும்
நாட்டினில் நீதான் நாகை நாதரை வணங்கு நெஞ்சே. 11

குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டை இட்டுக்
குளத்து நீர்க்கு உள்ளிருந்து குறிப்புடன் நினைக்கும் போது
குளத்திலே புதைத்த முட்டை கருவுரு ஆனாற் போலுன்
உளத்திலே நாகை நாதர் உருவறிந்து உணர்வாய் நெஞ்சே. 12

மருவிய சிலந்திப் பூச்சி வயிற்றினில் நூலுண்டாக்கி
உருவுடன் கூடு கட்டி உகந்ததில் இருக்கும் ஆபோல்
குருபரன் உனது கூட்டில் குடியிருப்ப அதனைப் பார்த்து
பெருவெளி நாகை நாதர் பெருமை கண்டு அருள்சேர் நெஞ்சே. 13

வாரணம் முட்டையிட்டு வயிற்றில் வைத்து அணைத்துக் கொண்டு
பூரணக் கூடு உண்டாக்கிப் பொரித்திடும் குஞ்சு போலக்
காரணக் குருவை மூலக் கனல் விளக்ககு அதனால் கண்டு
நாரணன் அறியா நாகை நாதரைப் பணிவாய் யெஞ்சே. 14

புல்லினுள் இருக்கும் பூச்சி பொருந்த வெண்ணுரை உண்டாக்கி
மெல்லிய தண்ணீர் வீட்டில் வெயிற்படாது இருக்குமா போல்
சொல்லிலே நாகை நாதர் தோய்ந்திடச் சூட்சம் கண்டாற்
கல்லிலே தெய்வம் இல்லை கருத்திலே தெய்வம் நெஞ்சே. 15

தண்ணீரில் உருக்கும் மீன்கள் தண்ணீரில் கருவைப் பித்திக்
கண்ணினால் பார்க்கும் போது கயல் உருவானால் போல
நண்ணிய குருவைக் கண்டு நாதன் நல் உருவைச் சேர்த்து
விண்ணின் மேல் நாகை நாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே. 16

இலகிய ஊசிக் காந்தம் இரும்பினை இழுப்பதே போல்
உலவிய குருபரன் தான் உன்னை ஆட்கொண்ட தன்மை
நலமுடன் அறிந்த நீதான் நாயனை அறிந்திடாமல்
நிலமிசை அலைந்தாய் நாத லிங்கரை நினைப்பாய் நெஞ்சே. 17

சூரிய காந்தம் பஞ்சைச் சுட்டிடுஞ் சுடரே போலக்
கூரிய அடிமூலத்தின் குண்டலிக் கனலை மூட்டி
வீரிய விருந்துணாத வெளிவீடு தன்னில் சென்றே
ஆரிய நாகை நாதர் அடியிணை தொழுவாய் நெஞ்சே. 18

ஐவகைப் பூதம் தொண்ணூற்றாறு தத்துவங்கள் ஆட்டும்
தெய்வம் உன்னிடத்தில் இருக்கத் தேசத்தில் அலைந்தாய் நீதான்
பொய்வசத் தேகபந்தம் போக்கி மெய்ப் பொருளை நோக்கி
ஐவர் ஓரிடத்தில் கூடும் ஆனந்தம் அறிவாய் நெஞ்சே. 19

ஊனமாம் உடலம் பொய்யென்று உணர்ந்து மெய்யறிவைக் கண்டு
தானவன் ஆனபோதே சற்குரு பதத்தைச் சேர்ந்தாய்
வானதில் இரவி திங்கள் வந்து போவதனைக் கண்டால்
ஞானவான் நாகை நாதர் நடனமும் கண்டாய் நெஞ்சே. 20

கிட்டுமோ ஞான யோகம் கிடைக்குமோ குருவின் பாதம்
கட்டுமோ மூல வாசி காணுமோ கயிலை வீடு
எட்டுமோ நாகலிங்கம் ஏற்றுமோ தீப சோதி
தட்டுமோ பளிங்கு மேடை தனை அறியார்க்கு நெஞ்சே. 21

ஒருபதம் தன்னைத் தூக்கி ஒருபதந் தன்னை மாற்றி
இருபதம் ஆடுகின்ற இயல்பை நீ அறிந்தாய் ஆனால்
குருபதம் என்று கூறும் குறிப்பு உனக்குள்ளே ஆச்சு
வருபத நாகை நாதர் மலரடி காண்பாய் நெஞ்சே. 22

நாடென்றும் நகரம் என்றும் நலந்திகழ் வாழ்வதென்றும்
வீடென்றும் மனையாள் என்றும் மிக்கதோர் மைந்தர் என்றும்
மாடென்றும் சம்பத்தென்றும் வாஞ்சை கொண்டு அலைந்தாய் இந்தக்
கூடொன்றும் அழிந்தால் கூடத் தொடருமோ கூறு நெஞ்சே. 23

ஏட்டிலே எழுதும் நூல்கள் எத்தனை படித்தும் நீ தான்
காட்டிலே எறிந்த திங்கள் கானலில் சலம் போலானாய்
நாட்டிலே தெய்வமென்று நடந்து அலையாமல் உன்றன்
கூட்டினில் நாகை நாதர் குறிப்பறிந்து உணர்வாய் நெஞ்சே. 24

நற்பிடி சோறு வைத்தால் நாயன் என்று அறிந்துகொண்டு
சொற்படி பின்னே ஓடும் சுணங்கன் போற்குணம் உண்டாகி
வில்பிடித்து அடிக்கப் பெற்ற விமலனார் கமலபாதம்
பிற்பிடி பிடித்து நாகை நாதரைக் காண்பாய் நெஞ்சே. 25

விரக நாயகனைத் தேடி விரும்பிய மங்கை போலக்
குரவனார் உபதேசத்தைக் குறிப்புடன் நிதமும் தேடி
இரவுடன் பகலுமான இருபத நடனம் கண்டால்
சிரமதில் நாகை நாதர் சிலம்பொலி கேட்கும் நெஞ்சே. 26

வாரணன் அயன்மால் ருத்ரன் மகேசுரன் சதாசிவன் தன்
காரண மாறு வீட்டில் கலந்தவர் இருக்கும் அப்பால்
பூரண நிராதா ரத்தின் புதுமையும் கண்டு போற்றி
ஆரண நாகை நாதர் அடியினை தொழுவாய் நெஞ்சே. 27

மோரிலே நீரை விட்டால் முறிந்திடும் கொள்கை போலக்
காரிய குருவை விட்டுக் காரண குருவைக் கொண்டு
சீரிய சாலு நீர்போல் சேர்ந்து இருவரும் ஒன்றாகி
ஆரிய நாகை நாதர் அடிபணிந்து ஏத்து நெஞ்சே. 28

நித்திரை வந்தபோது நினைவுதான் இருந்தது எங்கே
புத்திரர் தாமும் எங்கே புணர்ந்திடும் மனைவி எங்கே
பத்திர பூசை எங்கே பல தொழில் செய்வதெங்கே
சிற்பர நாகை நாதர் செயலினை அறிவாய் நெஞ்சே. 29

வேடத்தைத் தரித்தால் என்ன வெண்பொடி அணிந்தால் என்ன
நாடொத்து வா.ழ்ந்தால் என்ன நதிதலம் கண்டால் என்ன
தேடொத்த நாகை நாதர் சீரடி சிந்தை தேர்ந்தே
ஓடைத் தாமரையின் பூப்போல் உயர்வர் நற்பெரியோர்நெஞ்சே. 30

தள்ளிடு சுணங்கன் போலச் சாத்திரம் படுத்தால் என்ன
வெள்ளிய துகிலைத் தாவி வேட்டியாய்த் தரித்தால் என்ன
உள்ளிருந்து ஆட்டுவிக்கும் ஒருவனை உருகித் தேடித்
தெள்ளியல் நாகை நாதர் செயல் காணார் மாந்தர் நெஞ்சே. 31

பளிங்குற்ற குளத்து நீரைபாசிதான் மறைத்தாற்போல
களங்கற்ற புத்தி தன்னைக் காமந்தான் மூடிக்கொண்டு
விளங்கத் தான் செய்வதில்லை மெய்யறி விளக்கை ஏற்றி
முழங்கத்தான் நாகை நாதர் முழுமொழி பகர்வாய் நெஞ்சே. 32

மண்ணதை எடுத்து நீரால் வகையுடன் பிசைந்து பாண்டம்
பண்ணியே கனலால் சுட்டுப் பாதையென்பது தான் விட்டே
அண்ணலார் வாய் ஆகாசம் அடைந்த ஐம்பூதக் கூட்டை
விண்ணமால் நாகை நாதர் விளையாட்டு என்று அறிவாய் நெஞ்சே. 33

கண்ணாடி தன்னில் ஏற்றும் காரண உருவம் போல
உண்ணாடி மூலாதாரத்து உதித்த சற்குருவைக் கண்டு
விண்ணாடி வெளியைப் பார்த்து விளக்கொளி மகிமை சேர்ந்தால்
மண்ணாடு நாகை நாதர் வந்துனை ஆள்வார் நெஞ்சே. 34

உருவமும் நிழலும் போல உகந்து பின்தொடரும் நாயன்
பருவம் கண்டு அறிந்திடாமல் பருந்தின் கால் பட்சியானாய்
புருவனை நடுவணைக்குள் பொருந்திய நடனம் கண்டால்
குருபர நாகை நாதர் கூப்பிட வருவார் நெஞ்சே. 35

கணக்கிலா எழு வகைக்குள் கலந்துரு எடுத்த இந்நாள்
பிணக்கிலா நர செந்மந்தான் பிறப்பதே அரிதென்று எண்ணிக்
குணக்கிலாக் குணம் உண்டாகிக் கோதிலா ஞானம் போற்றி
இணக்கிலா நாகை நாதர் இணையடி சேர்வாய் நெஞ்சே. 36

அரியதோர் நரசென்மம் தான் அவனியில் பிறந்து பின்னாள்
பெரிய பேரின்ப ஞானம் பெறுவதே அரிதென்று எண்ணி
உரிய வேதாந்தத் தன்மை உரைக்கும் ஆசானைப் போற்றித்
தெரியொணா நாகை நாதர் சீர்பதம் தேடு நெஞ்சே. 37

பசும்பொனின் நாமம் ஒன்றில் பணிதி வேறானாற் போலே
விசும்பெலாம் கலந்த சோதி வெவ்வேறு தெய்வம் ஆகி
உடம்பு சீவாத்து மாக்கள் உடல் பல வான தன்மை
கசிந்து கண்டு உருகி நாகை லிங்கரைக் காண்பாய் நெஞ்சே. 38

விண்டவர் கண்டதில்லை விட்டதோர் குறைமெய்ஞ் ஞானம்
கண்டவர் விண்டதில்லை ககன அம்பலத்தின் காட்சி
அண்டர் கோள் தஞ்சை ஈசன் அடியினை வாசி உச்சி
மண்டல நாகை நாதர் வாழ்பதி வழிபார் நெஞ்சே. 39

காதுடன் நாக்கு மூக்குக் கண்ணுயிர் சிரம் கருத்து
மாதுடன் ஈசனாடு மலர்ப்பதம் அறிந்திடாமல்
வாதுசொல் தர்க்க நூல்கள் வகைபல படித்தால் என்ன
சாதுவாய் நாகை நாதர் தாள்கண்டு தனைப்பார் நெஞ்சே. 40

தீபத்தை மலரென்று எண்ணிச் சென்றிடும் விட்டில் போலக்
கோபத்தின் கனலில் வீழ்ந்து கொடியதோர் பிறவி பெற்றாய்
ஆபத்து வந்தால் உன்னோடு யாவர் தாம் வருவார் அந்தக்
கோபத்தை மறந்து நாகை லிங்கரைத் தொழுவாய் நெஞ்சே. 41

மின்மினிப் பூச்சி தன்னுள் மெய்யொளி கண்டாற் போல
உன்மனம் ஒடுங்கியே உன் உள்ளொளி கண்டாற் பின்னைச்
சென்மமும் இல்லை அந்தச் சிவத்துளே சேர்வாய் நாளும்
பொன்மகள் புகழும் நாகை நாதரைப் போற்று நெஞ்சே. 42

செம்பினில் களிம்பு போலச் சீவனும் சடமும் கூடி
நம்பின உடலைக் கண்டு நல்லுயிர் வடிவம் காணாய்
வெம்பிய காம மாயை விட்டு மெய்ப் பொருளைத் தேடிக்
கும்பிய நாகை நாதர் கூத்தாடல் காண்பாய் நெஞ்சே. 43

இலவு காத்திருந்த பட்சி ஏங்கியே பறக்கு மாபோல்
உலகமே பொருளாய் நம்பி ன் அற்றாய் நீ தான்
தலைமையாம் குருவைப் போற்றித் தாளினை வாசி கண்டால்
நிலைமையாம் நாகை நாதர் நின்னிடை நிற்பார் நெஞ்சே. 44

ஆத்தும லிங்கம் கண்டுள் அன்பெனும் மலரை நன்றாய்ச்
சார்த்தியே பிரணவத்தால் தனிப்பெரு வட்டம் சூட்டிப்
போற்றியே தீபமூலப் புரிசுடர் விளக்கும் பார்த்துப்
போற்றியே நாகை நாதர் பொன்னடி பூசி நெஞ்சே. 45

சுக்கில விந்து தானும் சுரோணிதக் கருவில் கூடிப்
பக்குவக் குழவியாகிப் பையுளே அடைந்த பாவை
அக்குவை அதனை விட்டிங்கு அவனியில் பிறந்த சூட்சம்
அக்கினி நாகை நாதர் அமைத்தது என்று அறிவாய் நெஞ்சே. 46

நீக்கம் இல்லாமல் எங்கும் நிறைந்ததோர் வெளியை உன்னுள்
தாக்கியே அறிவினாலே தனை மறந்திருந்து பார்வை
நோக்கியே நிட்டை கூடி நொடி அரை நிமிடம் வாங்கித்
தூக்கியே நாத நாகை நாதரைத் தொழுவாய் நெஞ்சே. 47

கடலென விளங்கும் வேத காரணக் குருவைக் கண்டும்
உடல் பொருள் ஆவி மூன்றும் உகந்தவர்க்கு உதவி நீ தான்
திடமுடன் பூர்த்தியாகிச் செந்து சிற்பரத்திற் சேர்ந்து
நடமிடும் வாசி நாகை நாதரை நாடு நெஞ்சே. 48

நாசியின் நுனியின் மீது நடனமே செய்யும் தேசி
வாசிவா என்றே உன்னுள் வாங்கியே மௌன முற்றுக்
காசிமா ந்தியும் தில்லைக் கனக அம்பலமும் கண்டு
பூசித்து நாகை நாதர் பொன்னடி வணங்கு நெஞ்சே. 49

தாவுநல்லுதய காலந்தபனன் தேரெழும்பக் கண்டு
கூவுமாக் குக்கு டங்கள் கூப்பிடு காட்டில் காட்டில் சம்பு
மேவியே நீயும் அந்த மெய்யறிவு அறிந்தாய் ஆனால்
மூவர் கோன் நாகை நாதர் முன்வந்து நிற்பர் நெஞ்சே. 50

வஞ்சியர் மீதில் ஆசை வைத்து இந்த வைய மீதில்
சங்கை இல்லாத துன்பச் சாகரம் தனிலே வீழ்ந்தாய்
நங்கைமேல் வைத்த பாசம் நாயன்மேல் வைத்து நீயும்
செங்கையால் நாகை நாதர் சீர்பதம் தொழுவாய் நெஞ்சே. 51

அன்றிலும் பேடும் போல அடிமையும் குருவும் கூடிக்
கொண்டிருந்து அடிமூலத்திற் குதித்தெழு வாசியாடக்
கண்டு இமையாத நாட்டக் கருணையால் வெளியில் ஏறிப்
பண்டித நாகை நாத லிங்கரைப் பணிவாய் நெஞ்சே. 52

குலம் கெட்டுப் பாசம் கெட்டுக் கோத்திர பேதம் கெட்டு
மலம் கெட்டுக் கோபம் கெட்டு மங்கையர் ஆசை கெட்டுத்
கலம் கெட்டுத் தானும் கெட்டுத் தனக்குளே வெறும் பாழாகிப்
பலம் கெட்டு நாகை நாதர் பதம் கொள்வார் பெரியோர் நெஞ்சே. 53

ஓமெனும் பிரண வத்துள் உதித்த ஐந்தெழுத்தும் ஆகி
ஆமெனும் அகார பீடத்து அமர்ந்திடும் வாசி கண்டே
ஊமெனும் மௌனம் உற்றே ஊறிடு மதிப்பால் உண்டு
தாமெனும் நாகை நாதர் தாண்டவம் பார்ப்பாய் நெஞ்சே. 54

அலைதனில் துரும்பு போலும் ஆலைவாய்க் கரும்பு போலும்
வலைதனில் மானைப் போலும் மயங்கி நைந்து அலைந்தாய்
உலைதனில் மெழுகைப் போலும் உருகி மெய்ப் பொருளை உன்னி
நிலைதனில் நின்று நாகை லிங்கரைக் காணபாய் நெஞ்சே. 55

பொறிவழி அலைந்து மீளும் புலன்களை அடக்கி ஞான
அறிவெனும் விழியினாலே அம்பர வெளியைப் பார்த்தே
உறிதனில் இருக்கும் கள்ளை உண்டு தற்போதம் விட்டு
நெறிதரு நாகை நாதர் நிலைமை கண்டு அறிவாய் நெஞ்சே. 56

ஆயாத நூல்கள் எல்லாம் ஆய்ந்து நீ பார்த்தும் காமத்
தீயான குழியில் வீழ்ந்து செனனமுற்று அலைந்தாய் உன்னின்
காயாத பாலை உண்டு கனக அம்பலத்தைக் கண்டு
மாயாமா நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே. 57

ஆதாரம் ஆறுந் தாண்டி ஐம்பூத வடிவும் தாண்டி
மீதான வெளியும் தாண்டி விளங்கிய பரன் தன்கூத்தை
நாதானும் அறிந்து கொண்டு நின்மல வடிவமாகி
வேதாந்த நாகை நாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே. 58

பார்த்திடும் திசைகள் எங்கும் பராபர வெளிதான் கூடிக்
கோத்திடும் வடிவை ஞானக் குருவினால் அறிந்து கொண்டு
பேர்த்திடும் இமையா நாட்டத்து இருந்து பேரின்ப வெள்ளம்
வார்த்திட மூழ்கி நாகை லிங்கரை வணங்கு நெஞ்சே. 59

சச்சிதானந்தம் ஆன சற்குரு பதத்தைப் போற்றிக்
கச்சிமாநகரம் மூலக் கனல் விளக்கு அதனை ஏற்றி
உச்சிமேல் வைத்துப் பார்வை உணர்வினால் வெளியில் உன்னித்
தச்சிலாத வீட்டில் நாகை லிங்கரைத் தழுவு நெஞ்சே. 60

மாரின்ப முளையாளோடு மன்றிலே நடஞ் செய்வோனைப்
பேரின்ப வீட்டைக் கண்டு பிரணவ விளக்கை ஏற்றிச்
சேரின்ப வெளியில் வாசித் திருவிளையாடல் பார்த்தால்
ஓரின்ப நாகை நாதர்க்கு உகந்து வந்து உரைப்பார் நெஞ்சே. 61

நாயனை அறிந்திடாமல் நானென்னும் ஆண்மை யாலே
ஆயன் இல்லாத காலியாகி நீ அலையல் உற்றாய்
காயமே கோயிலாகக் கலந்து இருந்தவனைக் கண்டு
மாயொணா வாழ்க்கை நாகை நாதரை வணங்கு நெஞ்சே. 62

உருப்படும் கல்லும் செம்பும் உண்மையாய்த் தெய்வம் என்றே
மருப்புனை மலரைச் சூட்டி மணியாட்டி தூபம் காட்டி
விருப்பம் உறறு அலைந்தாய் அந்த வினைமயல் விட்டு நின்னுள்
இருப்பவர் நாகை நாதர் இணையடி பூசி நெஞ்சே. 63

உனைவிட வேறே தெய்வம் உண்டென உலகில் தேடும்
நினைவதே தெய்வமாகி நீ கண்டு நின்றாய் ஆனால்
செனனமாம் பிறவி போகும் சிவத்துளே சேர்க்கும் எங்கோன்
மனமகிழ் வாசி நாகை நாதர் தான் வணங்கு நெஞ்சே. 64

ஆசையாம் பாச மாயை அறிவதை மயக்கி உன்னுள்
ஈசனைத் தேட ஒட்டாமல் இருக்கும் அவ்விருளைப் போக்கிக்
கோசமா குறியை நோக்கிக் குருபரன் வடிவைக் கண்டு
வாசமா மலரால் நாகை நாதரை வணங்கு நெஞ்சே. 65

கன்றதைத் தேடும் காறுங் காலியைப் போலே உன்னுள்
நின்ற பேரொளியைக் கண்டு நினைவெனும் அறிவால் தெய்வம்
ஒன்றெனக் கண்டாயானால் உமையவளுடனே தில்லை
மன்றினுள் ஆடும் நாகை நாதர் முன் வருவாய் நெஞ்சே. 66

மடைவாயில் பட்சி போலே மனந்தனை அடக்கி வாதி
விடையேறு ஈசன் பாதம் விரும்பிய பெரியோர் பின்னே
தடையறத் திருந்து ஞான சாதகம் பெற்று நீதான்
புடைசூழ நாகை நாதர் பொன்னடி போற்று நெஞ்சே. 67

சிரமெனும் குகையின் உள்ளே சிவ கயிலாய மன்றில்
அரனிடம் அமையும் வாசி ஆடல்தான் செய்வார் என்று
பரமமெய் ஞான நூல்கள் பகர்வதை அறிந்து பார்த்து
வரமிகு நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே. 68

கடமதில் நிறைந்து நின்ற கனவொளி போலே உன்றன்
செடமதில் நிறைந்து நின்ற சீவனை அறிவால் கண்டு
திடமிகு சீவ சாட்சி தரிசிக்க அச்சீவன் முத்தி
இடமரு நாகை நாதர் இணையடி உணர்வாய் நெஞ்சே. 69

மெய்யருள் விளங்கு உட்சோதி வெளிதனை அறிவால் உன்னி
ஐயமில்லாமல் காண்போர் அவரின்ப முத்தர் என்று
துய்ய மெய்ஞ்ஞான நூல்கள் சொல்வதால் பரத்தை நோக்கிச்
செய்ய தாள் வாசி நாகை லிங்கரைத் தெரிசி நெஞ்சே. 70

முந்தின பிறப்பு வந்த முதன்மையும் அறியாய் இப்பால்
பிந்தின பிறப்பு வந்த பெருமையும் அறியாய் நீதான்
அந்தரப் பட்சி போல அலைகின்றாய் அகத்து உளேமுச்
சந்தியை அறிந்து நாகை நாதரைச் சார்வாய் நெஞ்சே. 71

காகத்தின் கண் இரண்டில் காண்பதும் கண் ஒன்றே போல்
தேகத்தின் அறிவின் கண்ணைத் திடமுடன் அறிந்து கொண்டு
மோகத்தின் கனலில் வீழா முனைசுழி வாசி பார்த்தால்
ஏகத்தால் நாகை நாதர் இணையடி சார்வாய் நெஞ்சே. 72

ஓட்டிலே பட்ட பட்சி உழல்கின்ற நெறிபோல் ஆசைக்
கட்டிலே மயங்கி மாறாக் கவலை உற்று அலைந்தாய் நீதான்
நெட்டில் ஏயொடு வாசி நிலைமையாய் நிறுத்தி மேரு
வட்டிலே நாகை நாதர் வாழ்பதி அறிவாய் நெஞ்சே. 73

ஆனைவாய்க் கரும்பு போலும் அரவின் வாய்த் தேரை போலும்
பூனை வாய் எலியைப் போலும் புவியில் நைந்து அலைந்தாய் ஞானத்
தேனைவாய் அருந்தி முத்தி சேர்ந்திடச் சிவத்தை நோக்கி
ஊனுளே நாகை நாதர் உற்றிட மறவாய் நெஞ்சே. 74

மித்திர குருக்கள் சொல்லை மெய்யென்று கல்லை வைத்துப்
பத்திர புட்பம் சார்த்திப் பணிந்திடும் பாவை நீதான்
சித்திரப் பதுமை போலும் செய்தொழில் ஒடுங்கி நின்று
புத்தியாய் நாகை நாதர் பொன்னடி போற்று நெஞ்சே. 75

உப்போடு புளிப்பும் கைப்பும் உணர்வினால் அறிந்து நீதான்
எப்போதும் உனக்குள் நாயன் உருப்பிடம் அறியாது என்னே
முப்போதும் குருவைப் போற்றி முனைசுழி வாசி பார்த்தால்
அப்போது நாகை நாதர் அடியினை அறிவாய் நெஞ்சே. 76

படிக்கவும் நாவு இருக்கப் பணியவும் சிரம் இருக்கப்
பிடிக்கவும் கரம் இருக்கப் பேணவும் குரு இருக்க
நடிக்கவும் தாள் இருக்க நாடவும் கண் இருக்க
இடுக்கம் உற்று அலைந்தாய் நாகை நாதரை இறைஞ்சு நெஞ்சே. 77

அருவுரு இல்லா நாயன் அணுவினுக்கு அணுவாய் நின்றும்
மருவு பல்லுயிர்களுக்கு எல்லாம் வடிவு வேறான தன்மை
ஒருவரும் அறியார் நல்லோர் உறுதியால் அறிவார் ஞான
குருபர நாகை நாதர் குறிப்பு அறிந்து உணர்வாய் நெஞ்சே. 78

ஆண்டொறு நூறு கற்பம் ஔடத மூலி உண்டு
நீண்டதோர் காயசித்தி நெடு நாளைக்கு இருந்த பேரும்
மாண்டுதான் போவார் அல்லால் வையகத்து இருப்பார் உண்டோ
தீண்டொணா நாகை நாதர் சீர்பதம் தேடு நெஞ்சே. 79

பொருள்தனைத் தேடிப் பாரில் புதைக்கின்ற புத்தி போல்மெய்
அருள்தனை தினமும் தேடி அரனடி அதனில் வைத்தால்
இருள்தனை அகற்றும் சோதி எம்பிரான் முன்னே வந்துன்
மருள்தனை மாற்றும் நாகை நாதரை வணங்கும் நெஞ்சே. 80

ஆண்டியின் வேடம் தானும் அறிவுடன் எடுத்திடாமல்
தூண்டிலில் மீனைப் போலத் துள்ளி வீழ்ந்து அலைந்தாய் நீதான்
வேண்டிய போது நாயன் மெல்லடி வெளித்தாய்த் தோன்றும்
தாண்டிய வாசி நாகை நாதரைத் தழுவாய் நெஞ்சே. 81

சேற்றிலே நுழைந்து இருந்த சிறு பிள்ளைப் பூச்சி போலும்
நீற்றிலே நுழைந்து இருந்த நேர்மையாம் அழற்சி போலும்
மாற்று பேருலகில் நல்லோர் மருவிரி மருவார் சித்தத்
தேற்றியே நாகை நாதர் இணையடி வைப்பாய் நெஞ்சே. 82

நாடகப் பெண்ணை ஆட்டும் நட்டுவன் போலே உன்றன்
கூடகச் சடத்தை ஆட்டும் குருவை நீ அறிந்திடாமல்
மூடகம் ஆனாய் ஞான முதல்வனை அறிவால் தேடி
ஆடக நாகை நாதர் அடியினைப் பணிவாய் நெஞ்சே. 83

சத்தியும் சிவமுமாகித் தாண்டவம் ஆடும் வாசி
சுத்திய மூல நாடிச் சுழுமுனைக் கம்பத்து உள்ளே
புத்தியைச் செலுத்தி மேலாம் பொருள்தனை எடுக்க வல்லார்
பத்திசெய் நாகை நாதர் பதிதனைப் பார்ப்பாய் நெஞ்சே. 84

நாட்டமாம் அறிவின் கண்ணால் நாயனைப் பருகிப் பார்த்துத்
தேட்டமாம் கருணை பெற்ற சிவன் அடியார்கள் தங்கள்
கூட்டமாம் பரத்தில் சென்று குரு பணிவிடையும் செய்கொண்டு
ஆட்டமா நாகை நாதர் அருள்தர வருவார் நெஞ்சே. 85

காலனை உதைத்த நாயன் காலெனும் வாசி தாளை
மூலநல் மனையில் கண்டு முப்பதி முப்பாழ் தாண்டிப்
பால் அமுது அருந்த மேலாம் பராபரை பாதம் போற்றி
மால் அயன் அறியா நாகை நாதரை வணங்கு நெஞ்சே. 86

கடுமையாம் பகட்டில் ஏறிக் கயிற்றோடு சூலம் ஏந்திக்
கொடுமையாம் காலன்வந்து கொண்டுபோம் முன்னே நீதான்
அடிமையா நாதன் பாதம் அனுதினம் மறவாது ஏத்தில்
நெடுமையா நாகை நாதர் நிலைமை கண்டு அறிவாய் நெஞ்சே. 87

அரகரா சிவசிவா என்று அனுதினம் மறவாது ஏத்திச்
சிரகயிலாய வீட்டில் சிவனை நீ அறிந்து தேடில்
மரகத வல்லி பங்கன் வந்துமுன் காட்சி நல்கிப்
பரகதி கொடுக்கும் நாகை நாதரைப் பணிவாய் நெஞ்சே. 88

நடக்கிலும் வாசி பாரு நாட்டமும் வாசி பாரு
முடக்கிலும் வாசி பாரு முனிசுழி வாசி பாரு
மடக்கிலும் வாசி பாரு மறிவிலும் வாசி பாரு
திடக்குரு நாகை நாதர் திருநடம் செய்வார் நெஞ்சே. 89

போன நாள் வீணாய்ப் போனால் புதிய நாள் கெடவிடாமல்
ஞான நாள் இதுநான் என்று நாடெங்கும் குருவைப் போற்றி
வான நாளத்தில் சென்னி வழிகண்டு மதிப்பால் ஊறும்
தேனை நன்கு அருந்தி நாகை லிங்கரைத் தெரிசி நெஞ்சே. 90

பராதலம் எல்லாம் தானாய் அத்தாவர சங்க மங்கள்
நிராமயம் ஆகக் கோத்து நின்றதோர் பொருளாம் அந்தப்
பராபர வடிவம் கண்டு பரத்துளே அடக்கி மேலாம்
தராதன மூர்த்தி நாகை லிங்கரைப் போற்று நெஞ்சே. 91

மாணிக்க வாச கர்க்கும் மகிழ்ப்பரஞ் சுந்தரர்க்கும்
ஆனிப்பொன் திருமூலர்க்கும் அறுபத்து மூவருக்கும்
பேணிக்கொள் பெரியோருக்கும் பேரருள் சிவனை உன்னுள்
தோணக்கண்டு இருந்து நாகை லிங்கரைத் தொழுவாய் நெஞ்சே. 92

மகத்துவம் அடைந்த நெஞ்சே மலமாயை கொண்ட நெஞ்சே
பகுத்தறிவு இல்லா நெஞ்சே பல நினைவான நெஞ்சே
மிகுத்திடு காம நெஞ்சே மெய்ப்பொருள் அறியா நெஞ்சே
செகத்தினில் நாகை நாதர சீர்பதம் தேடு நெஞ்சே. 93

காலது மேலதாகக் கனி உண்ணும் வௌவால் போல
மூலநல் ஆசியோடு முறைமையை அறிவால் கண்டு
சீலமெய்ஞ் ஞான போத சிவயோகம் தன்னைப் பார்த்து
ஞானமேல் நாகை நாதர் நடனமும் காணபாய் நெஞ்சே. 94

உறக்கமும் விழிப்பும் போல உடல் பிறந்து இறக்கும் தன்மை
சிறக்கவே அறிந்தும் இந்தச் செகவாழ்வை மெய்யென்று எண்ணிக்
குறித்தலை குலாமர் சொல்லைக் குறிப்புடன் நம்பலாமோ
மறக்கொணா நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே. 95

எத்தனை புத்தி சொல்லி எடுத்தெடுத்து உரைத்தும் நீதான்
பித்தனைப் போலே ஓடிப் பிறவி சாகரத்தில் வீழ்ந்தாய்
முத்தமிழ் நாகை நாதர் முண்டக மலர்த்தாள் போற்றி
சத்தம் உன்னுடலில் ஏற்றுந் தலந்தனைப் பார்ப்பாய் நெஞ்சே. 96

சுவர்த்தலைப் பூனை போலச் சுற்றிய பிறவி தீரத்
தவத்தினுக்கு உருவமான சற்குரு தாளைப் போற்றிச்
சிவத்துடன் கலந்து மேவிச் சிதம்பர வழியே சென்றங்
செவக்கும் மேலான நாகை நாதரை வணங்கு நெஞ்சே. 97

அலைவாயில் பூடு போலும் ஆனைவாய்க் கவளம் போலும்
வலைவாயில் மிருகம் போலும் மயங்கி நைந்து அலைந்தாய் நீதான்
உலைவாயில் மெழுகைப் போல உருகி மெய்ப் பொருளை உன்னிப்
பலகாலும் ஏத்தி நாகை லிங்கரைப் பணிவாய் நெஞ்சே. 98

மூலமாம் நகரமீதில் முளைத்தெழும் சுடரைக் கண்டு
காலத்தீ மேலே ஏற்றிக் கபாலத் தேனமுது அருந்திக்
கோலமா மதுவே உண்டு குருபதம் தன்னில் சேர்ந்து
வாலகம் தரியால் நாகை லிங்கரை வணங்கு நெஞ்சே. 99

இறந்திடும் இருபத்து ஓராயிரத்து ஆறுநூறு பேரும்
இறந்து இக்காயம் போனால் ஈசனைக் காண்பது எந்நாள்
மறந்திடாது அறிவால் மூலவாசியை மேலே ஏற்றிச்
சிறந்த சிற்பரத்து நாகை லிங்கரைத் தெரிசி நெஞ்சே. 100

நூற் பயன்

கதிதரு மூலா தாரக் கணபதி தாசன் சொன்ன
நிதிமணி மாலையான நெஞ்சறி விளக்கம் நூறும்
துதி செய்யும் அறிவோர் ஞான சோதியின் வடிவமாக
மதியணி நாகை நாதர் மலர்ப்பதம் பெற்று வாழ்வார். 101

நித்தியப் பொருள் அதான நெஞ்சறி விளக்கம் நூறும்
பத்தியாய் மனத்தில் எண்ணிப் படித்ததன் பயன் காண்போர்கள்
முத்திமெய்ஞ் ஞானம் பெற்று மூவர்க்கும் முதல்வராகிச்
சத்தியும் சிவமும் தோன்றும் தற்பரம் அதனுள் சார்வார். 102

கனகமார் மணிசேர் மூல கணபதி தாசனாக
நினைவினால் அறிகண் செப்பும் நெஞ்சறி விளக்கம் நூறும்
வினவியே படிப்போர் கேட்போர் வினையெலாம் அகன்று மெய்யுற்
பனிமெனும் மோட்ச நாலாம் பதம் பெற்றுப் பதத்துள் வாழ்வார். 103

நெஞ்சறி விளக்கம் முற்றிற்று