பட்டினத்தார்

அருளிய

பூரண மாலை

மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே. 1

உந்திக் கமலத்து உதித்து நின்ற பிருமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரசமே 2

நாவிக் கமல நடு நெடுமால் காணாமல்
ஆவி கெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே. 3

உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே. 4

விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே. 5

நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே. 6

நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
போதம் மயங்கி பொறி அழிந்தேன் பூரணமே. 7

உச்சிவெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே. 8

மூக்கு முனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கை கெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே. 9

இடைபிங்கலையின் இயல்பறிய மாட்டாமல்
தடையுடனே நானும் தயங்கினேன் பூரணமே. 10

ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே. 11

மெய் வாழ்வை நம்பி விரும்பி மிக வாழாமல்
பொய் வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே. 12

பெண்டுபிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை
உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே. 13

தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்து களும்
உண்டென்று நம்பி உணர்வழிந்தேன் பூரணமே. 14

இந்த உடல் உயிரை எப்போ தும்நான் சதமாய்ப்
பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே. 15

மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே. 16

சரியை கிரியா யோகம்தான் ஞானம் பாராமல்
பரிதிகண்ட மதியதுபோல் பயன் அழிந்தேன் பூரணமே. 17

மண் பெண் பொன்னாசை மயக்கத்திலே விழுந்து
கண் கெட்ட மாடதுபோல் கலங்கினேன் பூரணமே. 18

தனி முதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல்
அநியாயமாய்ப் பிறந்திங்கு அலைந்து நின்றேன் பூரணமே. 19

ஈராறு தன் கலைக்குள் இருந்து கூத்து ஆடினதை
ஆராய்ந்து பாராமல் அறிவழிந்தேன் பூரணமே. 20

வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காசிவரை போய்த்திரிந்து கால் அலுத்தேன் பூரணமே. 21

கருவிகள் தொண்ணூற்றாறில் கலந்து விளையாடினதை
இருவிழியால் பாராமல் ஈடழிந்தேன் பூரணமே. 22

உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
கடல்மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே. 23

எத்தேச காலமும் நாம் இறவாது இருப்பம் என்று
உற்றுனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே. 24

எத்தனை தாய் தந்தை இவர்களிடத்தே இருந்து
பித்தனாய் நானும் பிறந்து இறந்தேன் பூரணமே. 25

பெற்று அலுத்தார் தாயார் பிறந்து அலுத்தேன் யானும் உன்றன்
பொன் துணைத்தாள் தந்து புகல் அருள்வாய் பூரணமே. 26

உற்றார் அழுதுஅலுத்தார் உறன் முறையர் சுட்டலுத்தார்
பெற்று அலுத்தார் தாயார் பிறந்து அலுத்தேன் பூரணமே. 27

பிரமன் படைத்து அலுத்தான் பிறந்து இறந்து நான்
உரமுடைய அக்கினிதான் உண்டு அலுத்தான் பூரணமே. 28

எண்பத்து நான்கு நூறாயிரம் செனனமும் சனித்துப்
புண்பட்டு நானும் புலம்பினேன் பூரணமே. 29

என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே. 30

கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய்
அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே. 31

செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல்
பம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே. 32

எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நான் இருக்க
மனக்கவலை நீர வரம் அருள்வாய் பூரணமே. 33

எழுவகைத் தோற்றத்து இருந்து விளையாடினதைப்
பழுதறவே பாராமல் பயன் இழந்தேன் பூரணமே. 34

சாதி பேதங்கள் தனை அறியமாட்டாமல்
வாதனையால் நின்று மயங்கினேன் பூரணமே. 35

குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல் நான்
மலபாண்டத்துள்ளிருந்து மயங்கினேன் பூரணமே. 36

அண்ட பிண்டம் எல்லாம் அணுவுக்கு அணுவாய் நீ
கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே. 37

சகத்திரத்தின் மேல் இருக்கும் சற்குருவைப் போற்றாமல்
அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே. 38

ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்
நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே. 39

என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தால்
உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே. 40

நரம்பு தசை போல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே. 41

சிலந்தியிடை நூல்போல் சீவசெந்துக் குள்ளிருந்து
நலந்தனைத்தான் பாராமல் நலம் அழிந்தேன் பூரணமே. 42

குருவாய் பரமாகிக் குடிலை சத்தி நாதவிந்தாய்
அருவாய் உருவானது அறிகிலேன் பூரணமே. 43

ஒளியாய்க் கதிர்மதியாய் உள் இருளாய் அக்கினியாய்
வெளியாகி நின்ற வியன் அறியேன் பூரணமே. 44

இடையாகிப் பிங்கலையாய் எழுந்த சுழுமுனையாய்
உடல் உயிராய் நீ இருந்த உளவறியேன் பூரணமே. 45

மூலவித்தாய் நின்று முளைத்து உடல் தோறும் இருந்து
காலன் என அழிக்கும் கணக்கு அறியேன் பூரணமே. 46

உள்ளும் புறம்புமாய் உடலுக்குள் நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே. 47

தாயாகி தந்தையாய்த் தமர்கிளைஞர் சுற்றம் எல்லாம்
நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே. 48

விலங்கு புள்ளூர் வன அசரம் விண்ணவர் நீர்ச் சாதிமனுக்
குலங்கள் எழுவகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே. 49

ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவாய்
மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே. 50

வாலையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே. 51

பொய்யாய்ப் புவியாய் புகழ்வா ரிதியாகி
மெய்யாகி நின்ற வியன் அறியேன் பூரணமே. 52

பூவாய் மணமாகிப் பொன்னாகி மாற்றாகி
நாவாய்ச் சொல்லான நயம் அறியேன் பூரணமே. 53

முதலாய் நடுவாகி முப்பொருளாய் மூன்றுலகாய்
இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே. 54

ஊனாய் உடல் உயிராய் உள் நிறைந்த கண்ணொளியாய்த்
தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே. 55

வித்தாய் மரமாய் விளைந்த கனியாய்ப் பூவாய்ச்
சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே. 56

ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம் எலாம்
தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே. 57

மனமாய்க் கனவாகி மாய்கையாய் உள்ளிருந்து
நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே. 58

சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச்
சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே. 59

பொறியாய்ப் புலன் ஆகிப் பூதபேதப் பிரிவாய்
அறிவாகி நின்ற அளவறி யேன் பூரணமே. 60

வானில் கதிர்மதியாய் வளர்ந்து பின் ஒன்று ஆனது போல்
ஊன் உடலுக்குள்ளிருந்த உயிர்ப் பறியேன் பூரணமே. 61

பொய்யும் புலையும் மிகப் பொருந்தி வீண் பேசலன்றி
ஐயோ உனை உரைக்க அறிகிலேன் பூரணமே. 62

நிரந்தரமாய் எங்கும் நின்று விளையாடினதைப்
பரம் அதுவே என்னைப் பதம் அறியேன் பூரணமே. 63

கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே. 64

வாரிதியாய் வையம் எல்லாம் மன்னும் அண்டபிண்டம் எலாம்
சாரதியாய் நின்ற தலம் அறியேன் பூரணமே. 65

வித்தாய் மரமாய் வெளியாய் ஒளியாய் நீ
சத்தாய் இருந்த தரம் அறியேன் பூரணமே. 66

தத்துவத்தைப் பார்த்து மிகத் தன்னை அறிந்த அறிவால்
உய்த்து உனைத்தான் பாராமல் உய்வாரோ பூரணமே. 67

ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே. 68

நேற்று என்றும் நாளை என்றும் நினைப்புமறப் பாய்ப்படைத்தும்
மாற்றமாய் நின்ற வளம் அறியேன் பூரணமே. 69

மனம்புத்தி சித்தம்மகிழ் அறிவு ஆங்காரமதாய்
நினைவாம் தலமான நிலை அறியேன் பூரணமே. 70

உருப்பேதம் இன்றி உய்ந்தசப்த பேதமதாய்க்
குருப்பேத மாய்வந்த குணம் அறியேன் பூரணமே. 71

சட்சமய பேதங்கள் தான்வகுத்துப் பின்னும் ஒரு
உட்சமயம் உண்டென்று உரைத்தனையே பூரணமே. 72

முப்பத்திரண்டு உறுப்பாய் முனைந்துபடத்து உள்ளிருந்த
செப்பிடு வித்தைத் திறம் அறியேன் பூரணமே. 73

என்னதான் கற்றால் என் எப்பொருளும் பெற்றால் என்
உன்னை அறியாதார் உய்வரோ பூரணமே. 74

கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தைப்
பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பு அறுமோ பூரணமே. 75

வான் என்பார் அண்டம் என்பார் வாய்ஞான மேபேசித்
தான் என்பார் வீணர் தனை அறியார் பூரணமே. 76

ஆதி என்பார் அந்தம் என்பார் அதற்குண்டுவாய் இருந்த
சோதி என்பார் நாதத் தொழில் அறியார் பூரணமே. 77

மூச்சென்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார்
பேச்சென்பார் உன்னுடைய பேர் அறியார் பூரணமே. 78

பரம் என்பார் பானு என்பார் பாழ்வெளியாய் நின்ற
வரம் என்பார் உன்றன் வழி அறியார் பூரணமே. 79

எத்தனை பேரோ எடுத்தெடுத்துத்தான் உரைத்தார்
அத்தனை பேர்க்கு ஒன்றானது அறிகிலேன் பூரணமே. 80

நகாரமகாரம் என்பார் நடுவே சிகாரம் என்பார்
வகாரயகாரம் என்பார் வகை அறியார் பூரணமே. 81

மகத்துவமாய்க் காம மயக்கத்துக் குள்ளிருந்து
பகுத்தறிய மாட்டாமல் பயன் இழந்தேன் பூரணமே. 82

உண்மைப் பொருளை உகந்திருந்து பாராமல்
பெண் மயக்கத்தாலே பிறந்து இறந்தேன் பூரணமே. 83

வாயார வாழ்த்தி மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்
காயம் எடுத்துக் கலங்கினேன் பூரணமே. 84

சந்திரனை மேகமது தான் மறைத்த வாரது போல்
பந்தமுற யானும் உனைப் பார்க்கிலேன் பூரணமே. 85

செந்தா மரைத்தாளைத் தினந்தினமும் போற்றாமல்
அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன் நான் பூரணமே. 86

நீர் மேல் குமிழி போல் நிலையற்ற காயம் இதைத்
தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன் பூரணமே. 87

நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு
வஞ்சகத்தைப் போக்க வகை அறியேன் பூரணமே. 88

எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே. 89

மாயாப் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்தே
ஓயாச் சனனம் ஒழிந்திலேன் பூரணமே. 90

பூசையுடன் புவனபோகம் எனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும் அறிவழிந்தேன் பூரணமே. 91

படைத்தும் அழித்திடுவாய் பார்க்கில் பிரமாவெழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீவியாய்த் துலங்குவிப்பாய் பூரணமே. 92

மந்திரமாய்ச் சாத்திரமாய் மறைநான்காய் நீ இருந்த
தந்திரத்தை நான் அறியத் தகுமோ தான் பூரணமே. 93

அல்லாய்ப் பகலாய் அனவரத காலம் எனும்
சொல்லாய்ப் பகுத்த தொடர்பறியேன் பூரணமே. 94

நரகம் சுவர்க்கம் என நண்ணும் இரண்டு உண்டாயும்
அரகரா என்பது அறிகிலேன் பூரணமே. 95

பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்திங்கு
ஆவலையுண்டாக்கி வைத்த அருள் அறியேன் பூரணமே. 96

சாந்தம் என்றும் கோபம் என்றும் சாதிபே தங்கள் என்றும்
பாந்தம் என்றும் புத்தியென்றும் படைத்தனையே பூரணமே. 97

பாசம் உடலாய்ப் பசு அதுவும்தான் உயிராய்
நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே பூரணமே. 98

ஏதில் அடியார் இரங்கி இகத்தில் வந்துன்
பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே. 99

நானே நீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியது போல் தெவிட்டாய் நீ பூரணமே. 100

முடிவில் ஒரு சூனியத்தை முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில் அலைந்தேன் பூரணமே. 101

பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு
தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய் பூரணமே. 102

பூரண மாலை முற்றிற்று