நமச்சிவாயப் புலவர் இயற்றிய சிங்கைச் சிலேடை வெண்பா சிங்கையில் எழுந்தருளிய சிவபெருமானைப் பற்றிப் பாடிய சிலேடை வெண்பாக்களினாலாகிய நூல் இது. சிங்கை, பாண்டி நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான விக்கிரமசிங்கபுரம் ஆகும். இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான் பெயர் கலியாண சுந்தரர்; அம்மையார் பெயர் திருமணக்கோல நாயகி. இந்நூலில் கூறும் சிலேடைகள் பிரிமொழிச் சிலேடை எனப்படும். பிரிமொழிச் சிலேடையாவது ஒரு வகையாக நின்ற சொல்லைப் பிரித்துத் தொகை வேறுபடுத்திப் பல பொருள்களாகக் கொள்ளுதலாம். காப்பு கங்கை வெண்பா மாலைமுடிக் கல்யாண சுந்தரனார் சிங்கைவெண்பா மாலை சிறப்பாகத் - தங்கியதென் கற்பகத்தின் கான்மலரக் கட்டினனார் கொண்டொருகைக் கற்பகத்தின் கான்மலரக் கால். நூல் பூங்கழனி மங்கையரும் புண்டரிகப் பொய்கைகளும் தேங்கமலங் களையுஞ் சிங்கையே - ஓங்கல் வரிசிலையா னனத்தான் வானிமிர்ந்து காணும் பரிசிலையா னனத்தான் பற்று. 1 எவ்வழிநின் றுள்ளோரு மேழிசைய வண்டினமும் செவ்வழியின் பண்புணருஞ் சிங்கையே - மைவழியும் காவிக் கழுத்தினார் கஞ்சபத நெஞ்சுறவிப் பாவிக் கழுத்தினார் பற்று. 2 கல்விக் குரவருமென் கார்க்குரவக் கோதையரும் செல்விக் கினமடுக்குஞ் சிங்கையே - நல்வித் துரும வரையினார் சோதியர்சார்த் தூலச் சரும வரையினார் சார்பு. 3 மாலைக் குழன்மடவார் வாள்விழியு மாளிகையும் சேலைக் கொடி திகழுஞ் சிங்கையே - ஆலைக் கரும்பனைக்கா யங்கெடுத்தார் காலாந்தத் தாடல் விரும்பனைக்கா யங்கெடுத்தார் வீடு. 4 வெவ்வாம் பரிமகமு மெல்லியலார் மெல்லிதழும் செவ்வாம் பலங்கொடுக்குஞ் சிங்கையே - கைவாங் கொருகனக வில்லா னுயரிமய வேந்தன் மருகனக வில்லான் மனை. 5 வேம்பருமட் கூனுமத வெங்களிறுந் தண்ணறவார் தீம்பருவப் பாகிவருஞ் சிங்கையே - கூம்பநிலா விட்டவிருந் துண்டார் விருப்பாற் புனிதவதி இட்டவிருந் துண்டா ரிடம். 6 ஆயுத் தமர்நாவு மந்தணரோ மக்குழியும் தேயுந் தரமாற்றுஞ் சிங்கையே - நோயுள் படிந்தவனா கப்பணியான் பாவியேன்பா லின்னல் கடிந்தவனா கப்பணியான் காப்பு. 7 மல்லியைந்த தோளினரும் வானசுணப் புள்ளினமும் சில்லியந்தே ரச்சடைக்குஞ் சிங்கையே - சொல்லினிரு கான மயிலார் கறிசமைத்த பிள்ளைவரப் போன மயிலார் புரம். 8 நித்திலத்தாற் சோறடுபொன் னீர்மையரும் பாவலரும் சித்திரப்பா வைக்கூட்டுஞ் சிங்கையே - அத்திரத்தால் சோர விலங்கையினான் சோரவென்ற வாளிதொட்ட பார விலங்கையினான் பற்று. 9 கொப்புக் குழையார்கொங் கைக்குடமு மட்குடமும் செப்புக் குடம்பழிக்குஞ் சிங்கையே - துப்புப் பழுக்கு மிதழியோர் பாகர்பசுந் தேன்வாய் ஒழுக்கு மிதழியோ ரூர். 10 காந்த ரொடும்புணர்ந்தார் கண்களுமக் காளையரும் சேந்த னலம்படருஞ் சிங்கையே - பூந்துளவ வாரிசவா சத்தார் வனைந்தார் தொழுமலைய பாரிசவா சத்தார் பதி. 11 கற்பநிலை வேட்டோர் கருத்தின்மனைப் பித்திகையில் சிற்பவரைவண்ணங்குறிக்குஞ் சிங்கையே - பொற்பின் விலங்கற் குடையார் விதிமுதலோர் சென்னி அலங்கற் குடையா ரகம். 12 விம்முமலர்ப் பூங்கொத்தும் வித்துரும வாய்ச்சியரும் செம்மலைமாற் றத்தழைக்குஞ் சிங்கையே - கைம்மலரில் துள்ளுமறி வைத்திருப்பார் தொண்டுபுரியார்க் கிருள்வாய்த் தள்ளுமறி வைத்திருப்பார் சார்பு. 13 மிக்க சிறைமயிலு மென்பயிர்க்குத் தீம்புனலும் செக்கணியா டிக்களிக்குஞ் சிங்கையே - முக்கண் ஒருவ ருமாபதியா ருன்னிலர்பான் ஞானத் திருவ ருமாபதியார் சேர்வு. 14 கோட்டரும்பொன் மாமதிலுங் கோடா விளையவரும் சேட்டருங்கன் பாற்றிவருஞ் சிங்கையே - தோட்டருக்கம் தண்ணந் தெரியலார் சத்தியவே தாந்தமுந்தம் வண்ணந் தெரியலார் வாழ்வு. 15 கட்டாம் பகைப்புலத்துங் காலமுணர்ந் தோர்கருத்தும் திட்டாந் தாந்தெரியுஞ் சிங்கையே - எட்டாம் திசைக்கலிங்கத் தார்வார் திரைப்பொருகை மான்போல் திசைக்கலிங்கத் தார்வா ரிடம். 16 ஏர்வாய் மணிமறுகு மெண்ணெண் கலையினரும் தேர்வா னினைவீட்டுஞ் சிங்கையே - ஓர்பால் பசக்கச் சிவந்தார் பனிவரைக்குத் தென்பா ரிசக்கச் சிவந்தா ரிடம். 17 காவ னனியறமுங் கான்பொருநைப் பேராறும் சீவனமன் பாற்பயந்தாழ் சிங்கையே - காவல் மறையவன்றூ தேவினார் வால்வளையை மாற்றார் மறையவன்றூ தேவினார் வாழ்வு. 18 பற்றித் தமிழ்கேட்கும் பண்பினருந் தோரணும் தெற்றித் தலையசைக்குஞ் சிங்கையே - நெற்றி கிழிக்குந் திருக்கழலார் கெற்சிதக்கூற் றாற்றல் ஒழுக்குந் திருக்கழலா ரூர். 19 இச்சைகூர் மாந்த ரிணைப்புயமும் பூந்தருவும் செச்சையா ரத்தாழுஞ் சிங்கையே - பிச்சை இடவென்று வந்தா ரிடுபலிகொண் டாசைப் படவென்று வந்தார் பதி. 20 தேசி கனைப்பழிக்குஞ் சிங்கையே - காசிமுதல் ஆளுந் தலத்தகத்தா ரம்புலிச்சூட் டிற்கவுரி தாளுந் தலத்தகத்தார் சார்பு. 21 பம்பு பொருநையுமெய்ப் பண்புடையோர் நன்மதியும் செம்புதனை யுட்குவிக்குஞ் சிங்கையே - அம்புயமார் வேதசிர மத்தார் விரிசடைவைத் தார்நடிக்கும் பாதசிர மத்தார் பதி. 22 பூங்குழலார் வார்த்தைகளும் பொய்யிகந்தோ ரைம்புலனும் தீங்குழலா வாய்த்தேறுஞ் சிங்கையே - ஓங்குமுயர் ஆன குமரனா ரையரெயின் மூன்றெரியத் தான குமரனார் சார்பு. 23 மையிற் செறி குழலார் வார்முலைச்சாந் துங்குருகும் செய்யிற் கயலாருஞ் சிங்கையே - கையில் நெருப்புக் கணிச்சியார் நேயமில்லார் பொய்மை விருப்புக் கணிச்சியார் வீடு. 24 வவ்வு நிதிக்ககன்ற மைந்தருந்துப் பும்மடவார் செவ்வி தழைக்கவருஞ் சிங்கையே - எவ்வினையும் தீரத் திருந்தகத்தர் சேவைசெயத் தண்பொருநைத் தீரத் திருந்தகத்தர் சேர்வு. 25 கன்னித் தடம்பொழிலாற் கற்றோர்கை வந்தனையால் சென்னித் தலம்புகுக்குஞ் சிங்கையே - தன்னைத் திடவ சனத்தினான் சீர்வழுத்த வைத்தான் விடவ சனத்தினான் வீடு. 26 ஓவா வளங்கெழுநீ ரூர்க்களம ருந்தெருவும் தேவா லையங்காட்டுஞ் சிங்கையே - மேவார் இருப்பரணங் காதரனா ரீர்ம்பொதியச் சாரல் விருப்பரணங் காதரனார் வீடு. 27 மெய்யுள் வழங்குதமிழ் வேந்தருமென் பால்வளையும் செய்யு ளவைவழங்குஞ் சிங்கையே - பையுள் சிதையத் திருந்தார் திறத்தகன்று மேலோர் இதையத் திருந்தா ரிடம். 28 கன்மந் தருவினையுங் கன்னியர்கொங் கைச்சுவடும் சென்மந் தரமலைக்குஞ் சிங்கையே - வன்மம் முரணகம லத்தினார் முன்பயிலா நிர்த்த சரணகம லத்தினார் சார்பு. 29 பத்த சனங்களுமென் பான்மொழியார் வேல்விழியும் சித்த சனம்பயிலுஞ் சிங்கையே - சுத்தசல வானகங்கைக் குள்ளார் வரதா பயமழுமான் நானகங்கைக் குள்ளார் நகர். 30 காம்பார் பசுந்தோளார் கண்ணு மணிவயிறும் தேம்பா னலங்கடக்குஞ் சிங்கையே - பாம்பா பரணத் தரத்தனார் பார்த்த னடித்திட்ட விரணத் தரத்தனார் வீடு. 31 அண்ணற் பழம்பொருநை யாறுமறி வோர்மனையும் திண்ணத் தறனிறைக்குஞ் சிங்கையே - எண்ணத்தின் முன்றுருவ மானான் முகன்காண மூட்டழல்போல் அன்றுருவ மானா னகம். 32 பாங்களவா வெண்டிசையும் பத்தியடி யார்குழுவும் தீங்களவா சஞ்செறியுஞ் சிங்கையே - ஓங்காரத் துள்ளொளியா நின்றா னுபநிடதத் துச்சியின்மேல் அள்ளொளியா நின்றா னகம். 33 மைவார் பொழிற்றுயிலு மாமதியை வேதியரைச் செவ்வா ரணமெழுப்புஞ் சிங்கையே - ஒவ்வாத போற்றுக் கொடியான் புகழவுமென் பாலிரங்கும் ஏற்றுக் கொடியா னிடம். 34 தூயவரை யிஞ்சியின்வாய்த் துஞ்சுமதி யைக்கண்டு தீயவர வங்கடுக்குஞ் சிங்கையே - ஆயர் கறவையா னானான் கனன்மழுவா னன்னப் பறவையா னானான் பதி. 35 அன்றலைநீ ருண்டவனு மாரத் தடம்பொழிலும் தென்றலைம ணந்துவக்குஞ் சிங்கையே - மன்றல் உலையா வணமளித்தா ரூரனையாட் கொள்ள விலையா வணமளித்தார் வீடு. 36 வந்துபகைத் தோர்பொரலால் வண்டுமதத் தால்வரலால் சிந்துரத்த வாறடுக்குஞ் சிங்கையே - கந்தரத்தில் சற்றுக் கறுப்பார் தழற்சிவப்பார் சஞ்சிதமென் பற்றுக் கறுப்பார் பதி. 37 காவ லிளைஞர் கடுநடையிற் பூந்தடத்தில் சேவ லனங்குடையுஞ் சிங்கையே - மூவர் திருப்பாட லாரத்தர் சிற்சபையி லொற்றித் திருப்பாட லாரத்தர் சேர்வு. 38 மைதவழ்கண் ணார்மருங்கு மாதவத்தோ ருந்தவறு செய்தகவஞ் சிக்காக்குஞ் சிங்கையே - கைதைநறும் போதைமுடி வைத்தணியார் போற்றறியார் புன்பிறப்பை வாதைமுடி வைத்தணியார் வாழ்வு. 39 எவ்வா யினுமுணர்ந்தோ ரின்னறிவு மாகதரும் செவ்வாய் வழுத்தடுக்குஞ் சிங்கையே - வெவ்வாய் நரககட கத்தினா னண்ணிவிடா தெண்ணும் உரககட கத்தினா னூர். 40 சேகரித்து மெய்ப்புணர்த்துஞ் சிங்கையே - சாகரத்தை உண்ட வருக்கொளியா ரோரா யிரங்கதிர்வாள் விண்ட வருக்கொளியார் வீடு. 41 தூயநிலை வாய்மையருந் தொல்லைமனு நூனெறியும் தீய வழுக்கறுக்குஞ் சிங்கையே - நேயம் எடுத்த திகம்பரத்தா ரேத்தவருள் செய்வார் உடுத்த திகம்பரத்தா ரூர். 42 வெய்ய மிடியும் விரிபொருநை வெண்டிரையும் செய்ய வளங்கொழிக்குஞ் சிங்கையே - ஐயர் துவளக் குழையார் துடியிடையார் சங்கத் தவளக் குழையார் தலம். 43 பூவகத்திற் போர்கடந்த பூட்கையும்வில் வேட்கையரும் சேவகத்தி லேவழங்குஞ் சிங்கையே - பாவகத்தில் ஒக்க வருவா ரொருவரெனில் வேறுணரத் தக்க வருவார் தலம். 44 மாவாய்மைத் தொண்டர் மணிவாயு நன்மனமும் தேவாரப் பண்பாடுஞ் சிங்கையே - ஓவாமல் சீலமிசைந் துள்ளார் தெரிவரியார் தெண்டிரைநீர் ஆலமிசைந் துள்ளா ரகம். 45 நீதியுமென் புட்குலத்தோர் நீள்சிறைய புள்ளினமும் தீதி னவந்தடுக்குஞ் சிங்கையே - பாதி மரகதமே விட்டார் வழுதியெதிர் சம்புக் குரகதமே விட்டார் குடி. 46 வேறற் கரும்பகையும் வேழம்நம் பாய்நிலமும் சேறற் கருமையவாஞ் சிங்கையே - மாறற்கு வெப்பழிக்கு நீற்றினார் மேவார் புரமெரியுந் தப்பழிக்கு நீற்றினார் சார்பு. 47 பத்தி தருவிழவும் பன்மா ளிகையுமுன்னாட் சித்திரைமா தங்குலவுஞ் சிங்கையே - புத்திரராம் தார்க்குஞ் சரமயிலான் றதையொரு பாதிதனைப் பார்க்குஞ் சரமயிலான் பற்று. 48 பிந்தாத நல்லறமும் பேராயர் வேய்ங்குழலும் சிந்தா குலந்தணிக்குஞ் சிங்கையே - சந்தார் புளகத் தனத்தனாள் பூட்டுகுறி மார்பத் துளகத் தனத்தனா ளூர். 49 வேய்வனமும் போர்க்களத்து வீரரடு செஞ்சரமும் தீவனமா கத்தாக்குஞ் சிங்கையே - நோவன்முன் தந்துபர சண்டன் சமர்விளைப்ப மார்க்கண்டன் வந்து பரசண்டன் மனை. 50 அன்னந் துணர்க்கமலத் தாடவர்கள் கோமறுகில் சின்னந் துவைத்தார்க்குஞ் சிங்கையே - பொன்னம் பலவிருப்ப ரானார் பழம்புவன கோடி பலவிருப்ப ரானார் பதி. 51 ஐய பசுந்தமிழு மாறறிநூ லந்தணரும் செய்ய மகம்புரியுஞ் சிங்கையே - சையம் தருகுமா ரத்தியார் தந்தலைவர் வேணி செருகுமா ரத்தியார் சேர்வு. 52 பந்தித்த கச்சுமின்னார் பாடகப்பூந் தாணடையும் சிந்தித்த னந்திரியுஞ் சிங்கையே - பந்திக் குடிலச் சடையார் கொடியனைப்பாண் பீறல் குடிலச் சடையார் குடி. 53 மெய்ம்மாண் பினருளமு மெல்லியலார் மெய்ச்சுணங்கும் செம்மாந் துணர்விலருஞ் சிங்கையே - பெம்மான் கணிச்சிகரத் தாற்றினான் காமருபூந் தென்றல் மணிச்சிகரத் தாற்றினான் வாழ்வு. 54 மைந்தரயில் வேல்வலியில் வாம்புரவித் தேரேற்றில் செந்தி னகரனைநேர் சிங்கையே - அந்தி திறம்பழகு மெய்யினார் சின்மயவே தாந்தத் திறம்பழகு மெய்யினார் சேர்வு. 55 கானாறு நாண்மலரிற் கன்னற் பெரும்பணையில் தேனாறு கால்பாயுஞ் சிங்கையே - யூனாற உண்டவரை வில்லா ருலகேழு முண்டசரம் கொண்டவரை வில்லார் குடி. 56 மூர லரும்பு முருக்கினரு மொய்ம்பினரும் சேரலரைக் கூழையிற்சூழ் சிங்கையே - சாரல் அலைய மலையா ரருவிகுதி பாயும் மலைய மலையார் மனை. 57 நாற்றமலர்க் கேணிகளு நாகிளஞ்சூன் ஞெண்டினமும் சேற்ற வளையார்க்குஞ் சிங்கையே - போற்றுகின்ற போகவ சனத்தினார் போர்மத கரித்தோல் வீரகவ சத்தினார் வீடு. 58 ஊறு கரிமதமு மொண்டொடியார் கண்மலரும் சேறுவள மாற்கமிடுஞ் சிங்கையே - நீறுபுனை வார்கரக பாலனார் வாழ்த்துமண வாளர்பலி தேர்கரக பாலனார் சேர்வு. 59 மையார் கரும்புயலை வாழ்வாரைக் கண்டுவப்பால் செய்யா ரளகமிகுஞ் சிங்கையே - கையால் கடனஞ் சமைத்தான் கழற்காலான் மன்றில் நடனஞ் சமைத்தா னகர். 60 தேரா தவருமுறுஞ் சிங்கையே - சோராது பூவாரப் பாட்டினார் பொன்னா டளிக்கவைத்த தேவாரப் பாட்டினார் சேர்வு. 61 ஆரத் தடம்பொருநை யாறுமடற் காளையரும் தீரத் தனம்பெயராச் சிங்கையே - வாரத்து நீளத் தருவா னிழல்வாழ் வருளடியார்க் காளத் தருவா னகம். 62 ஊறன் மதநீ ருவாக்களிறு மொண்சுரும்பும் தேறல்வாய்க் கொண்டுலவுஞ் சிங்கையே - நாறல் நவத்துவா ரத்தினா னண்ணுமுடம் பெண்ணார் தவத்துவா ரத்தினான் சார்பு. 63 அங்கம் பசுந்தளிரன் னார்நுதலு மாடவரும் சிங்கம் புலிபொருதென் சிங்கையே - மங்கை சுறவுக் குழையார் துணைவிழிதந் தோடாக் குறவுக் குழையார் குடி. 64 தப்பாத தெய்வமறைச் சைவருமின் னார்முலையும் செப்பாக மங்களங்கூர் சிங்கையே- கப்பான சூலங் கரந்திரித்தார் சூழ்ந்துதக்கன் வேள்விதொக்கார் சீலங் கரந்திரித்தார் சேர்வு. 65 பத்தித் துணர்ச்சோலைப் பைங்கனியு மென்சுரும்பும் தித்தித் துவைப்பார்க்குஞ் சிங்கையே - சத்திக்கு வாமங் கொடுக்கின்றார் வன்சமனை யோர்மகவால் தாமங் கொடுக்கின்றார் சார்பு. 66 காரளக மாதருமென் கான மயினடமும் சீரளவி னாடகநேர் சிங்கையே - நீரளவு கோடீரத் தாரார் குரைகழற்கால் வஞ்சர்கொடும் கோடீரத் தாரார் குடி. 67 ஆக்கமுறு விண்ணவரு மஞ்சிறைசெஞ் சூட்டனமும் தேக்கமல மென்றிருக்குஞ் சிங்கையே - நோக்கம் மதியா தவனழலான் வாழ்த்தினரைத் தாழ்த்த மதியா தவனழலான் வாழ்வு. 68 பாரக் குழலார் பயோதரமும் பைங்கூழும் சேரப் பணைத்துவளர் சிங்கையே - வாரத்து நச்சரவ மானார் நரகே சரிநடுங்க அச்சரவ மானா ரகம். 69 நேசத் தினின்மடமை நீக்கலினல் லோரெவர்க்கும் தேசத் தினைநிகர்க்குஞ் சிங்கையே - நீசப் புலைச்சமைய மாற்றினார் பொய்யறிவுக் கெட்டா துலைச்சமைய மாற்றினா ரூர். 70 வெவ்வலரிக் கெத்துறையு மென்சூ லியர்நாவும் செவ்வலரிப் பூமணக்குஞ் சிங்கையே - மௌவலரும் பாக முறுவலா ராம்பலித ழாளைவிட்டு யோக முறுவலா ரூர். 71 ஆகுலவா ரங்குறித்த வாயர் குலவணிகர் சேகுலவா ரம்பிரிக்குஞ் சிங்கையே - கோகுலமுன் நைவசனத் தோகையினார் ஞானவடி வின்புடையார் சைவசனத் தோகையினார் சார்பு. 72 பன்ன வருந்தமிழ்கேட் பாருமவர் மாளைகையும் தென்ன மலையனிகர் சிங்கையே - இன்னலெறி வானடிக்கு நாடகத்தார் வாழவருள் வார்சுடலைக் கானடிக்கு நாடகத்தார் காப்பு. 73 சொல்வந்த நல்லோர் தொகுமனையுஞ் சாலிகளும் செல்வந் தமருறவாஞ் சிங்கையே - இல்வந்து சேயத் தலைக்கறியார் தீப்பசியார் தீயவெனை மாயத் தலைக்கறியார் வாழ்வு. 74 மானந் தரும்பொருநர் வாளிடத்தும் பூந்தடத்தும் சேனந் துவண்டுலவுஞ் சிங்கையே - ஞானம் தழைத்தவரைக் காப்பா ரழல்விழிக்கும் பாம்பால் இழைத்தவரைக் காப்பா ரிடம். 75 சொன்முனிவ னின்னிசையுந் தோகையர்மென் சொல்லிசையும் தென்மலைய வெற்புருக்குஞ் சிங்கையே - பொன்மலைவில் கொண்டு புரங்கடந்தார் கோரவிடம் வாய்நிறைய மண்டு புரங்கடந்தார் வாழ்வு. 76 பூணம் புயத்திளைஞர் பொற்படமும் வாம்பரியும் சேணந் தரத்திரியுஞ் சிங்கையே - தூணம் கொடுக்குநர கேசரியார் கோளொழித்தா ரென்னைக் கடுக்குநர கேசரியார் காப்பு. 77 மீனுகளும் பூந்தடத்து மேதிகளு மென்புறவும் தேனுவள மேய்ந்துறையுஞ் சிங்கையே - பானு இனப்பற்று வைத்தா ரிமையமகண் மேலே மனப்பற்று வைத்தார் மனை. 78 ஊக்கத் தமர்க்களம்புக் கோர்விழியு மாமடமும் தீக்கைக் கனல்வழங்குஞ் சிங்கையே - யாக்கையெனும் தோற்பொதியச் சாரலார் தொண்டரெனக் காக்குமிளம் காற்பொதியச் சாரலார் காப்பு. 79 மேக்களவிட் டோங்குதமிழ் வெற்புமர விந்தமுஞ்சேர் தேக்கமரப் பூம்பணைபாய் சிங்கையே - நீக்கமிலா தெங்கு நிலாவிடுவோ ரீரச் சடாடவிமேல் பங்கு நிலாவிடுவார் பற்று. 80 செற்றத் தமர்வளர்க்குஞ் சிங்கையே - முற்றப் பொறைக்கமடத் தோட்டார் புலன்போயென் னெஞ்சை மறைக்கமடத் தோட்டார் மனை. 81 எவ்வெந்தப் பூம்பொழிலு மீர்ங்குமுத நாண்மலரும் செவ்வந்திப் போதலருஞ் சிங்கையே - அவ்வந்தி பிட்டுக் கலந்தார் பெருநீர்ப் பழம்புவனத் தட்டுக் கலந்தார் தலம். 82 நீரகத்தே யுற்றாளு நீள்வணிகர் பொற்றோளும் சீரகத் தார்மணக்குஞ் சிங்கையே - தாரகத்தை அந்தத் தெனக்குனித்தா னன்பினுப தேசிப்பான் தந்தத் தெனக்குனித்தான் சார்பு. 83 ஈவதற்கன் பாம்வணிக ரில்லுமறி வோர்மனையும் தீவகத்தின் சாந்தமுறுஞ் சிங்கையே - நோவறுத்தென் பாடற் களிப்பான் பணித்ததிருத் தாள்வழுத்தும் ஆடற் களிப்பா னகம். 84 விந்தைக் கிணையாம் விறலியரு மெய்யறிவும் சிந்தைச் சுகம்பயிற்றுஞ் சிங்கையே - முந்தைக் கடவுண் மறைத்தலையார் காதலித்துத் தம்பால் கடவுண் மறைத்தலையார் காப்பு. 85 ஆராயு முத்தமிழு மத்தமிழ்மந் தாநிலமும் சீரா யசைநடைகூர் சிங்கையே - போரானை வேகத் தசைத்தோன் மிடையு மிருளெறிப்ப ஆகத் தசைத்தோ னகம். 86 நாவிக் குழன்முடிக்கு நாரியரும் பல்லுயிரும் சீவித் தளவளவுஞ் சிங்கையே - நாவிக் களத்து விடக்கறுப்பார் காமியத்துப் போமென் உளத்து விடக்கறுப்பா ரூர். 87 வன்னவிலைப் பாவையர்கை வாளுகிரு மாங்குயிலும் சின்னவடு கோதியிடுஞ் சிங்கையே - மின்னலிரும் வேணிபினா கத்தான் விதிதலைமா லைச்சூல பாணிபினா கத்தான் பதி. 88 முந்துதவச் செய்கையரு மொய்குழலார் கைவிரலும் செந்துவரைத் தண்ணளிகூர் சிங்கையே - இந்து முடிக்குந் தரித்தார் முனைவிசையன் போர்வில் அடிக்குத் தரித்தா ரகம். 89 ஆறூ ரொலியுமின்னா ரல்குலந்தேர்த் தட்டுமியற் சீறூ ரரவமொக்குஞ் சிங்கையே - யேறூர்வார் முன்னகர மானார் முகைநெகிழு முண்டகப்போ தன்னகர மானா ரகம். 90 போதார் மலர்ப்பொழிலும் புத்தேளி ராலையமுஞ் சீதாரி வாசமுறுஞ் சிங்கையே - சாதாரி விண்டவிசைப் பாணனார் வெங்கரசங் காரகோ தண்டவிசைப் பாணனார் சார்பு. 91 நாகரிக ரும்பொருநை நன்னதிநீர் வீசுமுத்துஞ் சீகரமா மாலையொக்குஞ் சிங்கையே - ஏக ரனேக விதமுடையா ரன்புசெய்வார் தங்கள் சினேக விதமுடையார் சேர்வு. 92 பொன்னியலார் நெற்றியுந்தென் புள்ளு மிசைதெரிவான் சென்னியரைத் தண்மதிசேர் சிங்கையே - உன்னிமனத் தின்பாவ மாற்றினா னெய்துகதி யெய்தவணி கன்பாவ மாற்றினான் காப்பு. 93 அக்கங் கறுத்தவர்கற் றைக்குழலிற் புத்தியிற்சேர் சிக்கங் கறுத்துவிடுஞ் சிங்கையே - மைக்கனம்போய்ச் சாயுச்சி யந்தருவார் தண்பொருந்தத் தாரெனக்குச் சாயுச்சி யந்தருவார் சார்பு. 94 பார்த்திக்கி லுள்ள பலதலமு முக்களவும் சீர்த்திக் களவுபடுஞ் சிங்கையே - மூர்த்திக்கு மானமொழிந் தார்க்கு வடநிழற்கீழ் வந்திருந்து ஞானமொழிந் தார்க்கு நகர். 95 பேர்த்தண் டமிழ்வரையும் பேரறமுஞ் சேர்ந்துகலி தீர்த்தங் கொடுக்குமியற் சிங்கையே - ஊர்த்தம் முயலு நடத்தினார் மூதண்டத் தெல்லாச் செயலு நடத்தினார் சேர்வு. 96 காப்புவளைக் கையாருங் காலவளைக் குண்மடையும் சீப்பினள கஞ்செறிக்குஞ் சிங்கையே - கோப்புமுறைக் குஞ்சிதத் தாளார் கொடும்பா தகர்குடியை வஞ்சிதத் தாளார் மனை. 97 காப்பாயர் தோளிணையுங் காந்தளில்வீழ் வண்டினமும் சேப்பாய் மருப்பொசிக்குஞ் சிங்கையே - காப்பாய சற்பப் படலையார் தம்படிவ மாம்பவள வெற்பப் படலையார் வீடு. 98 பாண்டிக் குலவலியிற் பல்கடவு ளாலையத்தில் சேண்டிக் குரனவிலுஞ் சிங்கையே - வேண்டியெனை ஆழி மலையவெற்பா ராக்கையடா தாண்டுகொண்ட வாழி மலையவெற்பார் வாழ்வு. 99 (இந்நூலில் ஒரு செய்யுள் கிடைக்கப் பெறவில்லை) சிங்கைச் சிலேடை வெண்பா முற்றிற்று |