உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
திருக்குற்றால மாலை காப்பு பூமண்ட லம்பரவும் புங்கவர்குற் றாலலிங்கர் நாமஞ்சேர் பாமாலை நாட்டவே - தாமஞ்சேர் தந்தமதத் தந்திமுகத் தந்தைதுணைச் செந்தினகர்க் கந்தனிணைச் செஞ்சரணங் காப்பு. நூல் மொழிகொண்ட மூவர் திருப்பாடல் கற்று முழுதுமுன்பால் வழிகொண்ட பேரன் புவைப்பதென்றே குழல்வாய் மொழிப்பெண் விழிகொண்ட காட்சிக் கெளியாய்பெண் பூமிபொன் வேட்கையெல்லா மொழிகொண்ட தொண்டர்க் குரியாய்குற் றாலத் துறைபவனே. 1 எனக்கேற நின்வழி நில்லாமல் யானென தென்னும்வழி தனக்கேறி ஐவர் தடையிற்பட் டேன்தடை தீர்ப்பதற்கோ கனக்கே ளுனையன்றிக் காணேன் முழுதும் உன் கையிற்பிள்ளை உனக்கேயடைக்கலம் திருவாசகம்கண்டாய்குற்றாலத் துறைபவனே 2 பொன்னைப் பரமென்று மின்னார் கலவிப் புலவியின்பம் தன்னைப் பரமென்று மேயிருந் தேன்யம தண்டம்வந்தால் பின்னைப் பரமொன்றுங் காணே னுனதருட் பேறருள்வாய் உன்னைப் பரமென்று சார்ந்தேன்குற் றாலத் துறைபவனே 3 ஆக்கமுண்டாக மகிழ்ச்சியுண்டாகியு மல்லவென்றான ஏக்கமுண்டாகியு மேயிளைத் தேனன்ப ரின்பக்கல்வித் தேக்கமுண் டாகியுந் தேறே னெனைமுற்றுந் தேற்றுகண்டாய் ஊக்கமுந் தூக்கமு மில்லாய்குற்றாலத் துறைபவனே 4 அருமந்த நின்னருள் போற்றென் பொசிப்புக் கமைத்தபடி வருமென்றிருக்கவு மாட்டேன் பிறவி மயக்கமறக் குருவென்று நீவந்து தோன்றாய்முன் மூவர்கள் கோட்டைகொன்ற ஒருமந்த காசப் படையாய்குற்றாலத் துறைபவனே 5 பெற்றார்தம் பிள்ளைக ணோவறியார் பிள்ளை நோவறிந்தால் சற்றா கிலும்பகிர்ந்தால் தரியார் தந்தை தாயினுமென் பற்றாப் பசிகண்டமுதூட்டி நோயறப் பார்க்கவல்ல உற்றா ருனையன்றி யுண்டோ குற்றாலத் துறைபவனே 6 மறையாடும் தெய்வத் திரிகூடஞ் சார்ந்து வடவருவித் துறையாடி உன்னைத் தொழுவதென் றோதடஞ் சோலையெல்லாம் சிறையாறு கால்வண்டு பண்பாட மாந்தளிர்ச் செங்கரத்தால் உறையாடுந் தேனமு தூட்டுங்குற் றாலத் துறைபவனே 7 கிள்ளைகள் போற்படித் தாவதிங் கேதுன் கிருபையின்பால் பிள்ளைகள் போலுண்ணப் பேறவருள் வாய்கிளிப் பிள்ளையெல்லாம் வள்ளைகள் பாடுஞ் சித்ராநதி யாயன்பு வைத்ததொண்டர் உள்ளையெல் லாங்கொள்ளை கொண்டாய்குற்றாலத் துறைபவனே 8 ஆசையெ லாம்பொருண் மேலோ யொருவ னகத்திலிரா வேசையு மென்னெஞ்சு மொக்குங்கண்டாய் விண்ணு ளோர்புரியும் பூசையம் போருகத் தாளாய் நிறைந்த சம்பூரணமாம் ஓசையும் விந்துவு மாவாய்குற் றாலத் துறைபவனே 9 கருக்கொண்ட போதுள்ளுங் கன்மருவி யாதி கருவிலுருப் பெருக்கும் பொழுது நெருக்கும் வியாதி பிறந்துபின்னை இருக்குஞ் சடமும் வியாதியென் றாலிதை நம்பிநன்றாய் உருக்குஞ் செனன மெடுத்தேன்குற் றாலத் துறைபவனே 10 கன்மமரும் பியவா வீங்கியைம் புலன்கண் கள்வைத்துப் பன்மலஞ்சீக் கொண்ட சென்மவி யாதி பழுத்துவந்தால் தன்ம வயித்தியன் சத்ரமிடா மற்ற விர்க்கமருந் துன்மலர்த் தாளினை தாராய்குற் றாலத் துறைபவனே 11 அமையம் பலவு மொருபொழு தாயசை யாமலுன்றன் சமயங் கருதத் தவமெய்து மோசண்ப காடவிசூழ் இமயம் பெறுமங்கை சுந்தரி கோமளையா மளையென்னும் உமையம் பிகைமண வாளாகுற்றாலத் துறைபவனே 12 பூங்கா ரணிகுழ லார்மயக் கால்மனம் புத்திசித்தம் ஆங்கா ரந்தட் டழிவேற்கி ரங்காயன் புநீர்பெருகித் தேங்கா மற்றேங்கு மனத்தார் பரவித்தி யானஞ்செய்யும் ஓங்கார வட்டத் தொளியேகுற் றாலத் துறைபவனே 13 முன்வடி வாய்முன் னிருந்திட லேது முளைக்கருவாப் பின்வடி வார்க்கும் வினைவடி வேதுகை பேணிநின்ற என்வடி வேதுபின்யா னென்பதே தென்னை யாட்டிவைக்கும் உன்வடி வேதுகொல் சொல்லாய்குற் றாலத் துறைபவனே 14 நில்லா வுடம்பி லுயிர் நின்ற தோவுயிர் நின்றிடத்தே எல்லா வுடம்பு நிலைநின்ற தோவியல் சேர்வடிவம் பல்லா வுயிரு மொன்றே புறம்போ பகையோவுறவோ ஒல்லா மலோர்வழி சொல்லாய்குற் றாலத் துறைபவனே 15 வருநாள வர்கள் மனைசந்தைக் கூட்டம் வரவற்றநாள் திருநாட் கழிந்த மடமொக்கு மேயிதைச் சிந்தித்துநான் பருநாட் கழிப்பது பாரைய யான்பல நாளுமுன்னை ஒருநாளிற் காண்ப துரையாய்குற் றாலத் துறைபவனே 16 வாசக் குழந்தையு மாய்மட வார்மண வாளனுமாய் ஆசைப் பருவமது தப்பினா லந்த மாதருங்கண் கூசக் கிழங்கொண்டு தோலாகி நாற்றம் குலைக்குமிந்த ஊசச் சடமென்று போமோகுற் றாலத் துறைபவனே 17 திருத்தப் புகுந்திடி லண்டங்கள் கோடி திருத்துவையென் கருத்தைத் திருத்தவுனக் கரிதோ கெளவை காட்டுங்கன்ம வருத்தத்தை மாற்றவோர் மாற்றங் கொடாய்குழல் வாய்மொழியாள் ஒருத்திக் கொர்பாகங் கொடுத்தாய்குற் றாலத் துறைபவனே 18 காணுறக் கண்டுனைப் போற்றறி யார்கடை யாம்பொசிப்பும் வீணுறக் கங்களு மேகுறிப் பாரருள் வெள்ளத்தின்பால் சேணுறக் கண்டு சிவயோக நித்திரை செய்யுமன்பர் ஊணுறக் கங்குறிப் பாரோகுற் றாலத் துறைபவனே 19 நிறையும் பிரணவ மூடாச் சதுர்மறை நீண்டகொப்பா அறைகின்ற சாகை கிளையா யறமுத னான்கரும்பிக் குறைவின்றி ஞான மணநாறுந் தெய்வக் குறும்பலாவில் உறைகின்ற முக்கட் கனியேகுற் றாலத் துறைபவனே 20 எல்லா வடிவு மொன்றானா லுமங்கங் கிருந்துநல்லார் பொல்லா தெனவிளை யாட்டிய தாலது போல்மனத்திற் கல்லாமை கற்பிக்கு மென்பாச நேசங் கருதிலன்பர் உல்லாச நேசமொப் பாமோகுற் றாலத் துறைபவனே 21 அருவித் துறைபடிந் தாடிவெண் ணீறிட்டு னன்பர்தம்பான் மருவிப் பணிலமறு கூடுவந் துன்னை வாழ்த்தும்வண்ணம் கருவிப் பவமறு கூடுசெல் லாக்கதி காட்டுகண்டா உருவிற் குவமையொன்றில்லாய்குற்றாலத் துறைபவனே 22 விருத்தரையும் வெல்லு மெல்லியர் நேசம் விடுத்துநின்பால் இருத்தரை மாத்திரைக்கே ஐவ ரோடலை யேத்துமுண்மைக் கருத்தரைக் கண்டு கருதாமற் சிந்தைக பாடஞ்செய்தால் ஒருத்தரை நோவ தழகோகுற் றாலத் துறைபவனே 23 நானா ரெனதுடம் பேதுணர் வேதெனை நாட்டினைநீ யானாரெனத் தெளியே னெளியேன் செண்ப காடவிசூழ் கானார் சிவமது கங்கையின் மூழ்கக் கருணைசெய்தே ஊனாற் பிறவி யொழிப்பாய்குற் றாலத் துறைபவனே 24 வேம்பே புழுவுக் கதிரசமாய் வெவ்விடம் கிடந்த பாம்பே கலுழனுக் காரமுதாய்ப் பற்பல வுயிர்க்கும் ஆம்போ தபேதமட் டூட்டிய தால்வினை யாம்பொசிப்பை ஓம்பே னருளமு தூட்டாய்குற் றாலத் துறைபவனே 25 குன்றாத ஞானக் கனியை அஞ்ஞானக் கொடும்பசிக்குத் தின்றே கவென்னினு மைவரொட் டார்திகைத் தேங்கிமனம் கன்றா மலுன்னரு ளூடாடி யுள்ளனுங் கள்ளனும்போல் ஒன்றா குநாளினி யென்றோகுற்றாலத் துறைபவனே 26 பொன்னென்று சொன்ன வுடனே மயக்குமென் புத்தியைநான் என்னென்று சொல்லி திருத்திக் கொள்வேனெனை யீன்றுசெஞ்சோற் பன்னென்று சொன்ன படிபோல வுள்ள படியை நெஞ்சில் உன்னென்று போதித் தருள்வாய்குற் றாலத் துறைபவனே 27 நாறுங் குரம்பைக் குள்ளே மருண்டேனுனை நாடிமனம் தேறும் படிக்கொரு தேற்றஞ் சொல்வாயன் புதேக்கியுள்ளே ஆறுங் கருத்தினர் சித்தாம் புயத்தி லருட்பெருக்காய் ஊறுஞ் சிவானந்தத் தேனேகுற் றாலத் துறைபவனே 28 ஆற்றிற் குமிழியின் றோற்றங்கட் போலண்ட கோடியெல்லாம் தோற்றிக் கணப்பொழு தேமறைப் பாய்துறைப் பாவிலுன்சீர் சாற்றித் துதிப்பவர்முன் வருவாய் சண்ட னென்னுயிரை ஊற்றிக் குடிக்குமுன் வாராய்குற் றாலத் துறைபவனே 29 திடம்போத வுண்ணக் கிடைத்தால் நடக்குஞ் சிலகுறைந்தால் முடம்போற்கி டக்கு மிகுந்தாலு வாதிக்கு முன்கொடுத்த கடன்போலு னுதினங் கைக்கூலி வாங்குங் களிசலிந்த உடம்போடி ருப்ப தெளிதோகுற் றாலத் துறைபவனே 30 மழைமுகந் தேடும் பயிர்முகம் போலநின் வாய்த்தசங்கக் குழைமுகந் தேடுமென் சிந்தைக்கண் டாய்கொன்றை வேணிவில்லத் தழைமுகந் தாட மறைபாடச் சித்ர சபையினின்றே உழைமுகந் தாடுங் கரத்தாய்குற்றாலத் துறைபவனே 31 வெண்மைப் பொருளின் விவகாரங்கள் நீங்கிவி காரமில்லாத் திண்மைப் பொருளென்று சேருங்கொல் லோசிந்தை செய்யுமன்பர் வண்மைப் பெரும்பெருக் கேஒருக் காலு மவுனம்விடார் உண்மைச் சிவானந்த வாழ்வேகுற்றாலத் துறைபவனே 32 கற்பனை யாஞ்செக வாழ்க்கையெல் லாங்கண்டு கண்விழிக்குஞ் சொற்பன மாமென்று தூஷணி யேனியான் றூஷணிக்க நிற்பன வேண்டு நெறியிலி யேனெனை நீபுரப்பா உற்பன ஞானப் பொருளேகுற் றாலத் துறைபவனே 33 அருவ மென்றோருக் கருவமுற் றாய்தம் மறிவுமட்டுஞ் சொருவ மென்றோர்க்குச் சொரூபமுற் றாய்தொல்லை மூவுலகும் செருவில் வெல்வாய் படைப்பாளிப் பாயுன் றிருவிளையாட் டொருவிளை யாட்டல்ல கண்டாய்குற் றாலத் துறைபவனே 34 வென்றறி யாச்சமர் வெல்பவ ராகிலும் வெவ்வினையைச் சென்றறி வால்வெல்ல வல்லருண் டோ நின் செயல்பிரிந்தால் நன்றறி வாருமி ரப்பா ருனதருள் நாட்டம்பெற்றால் ஒன்றறி யாருல காள்வார்குற் றாலத்துறைபவனே 35 பூதாதி பல்லுயிர்க் குந்தலை யானநின் பொற்சிலம்பின் பாதாம்பு யஞ்சென்னி சேர்த்தருள் வாய்பெரும் பார்படைக்கும் வேதாவின் மேல்விதியே வித்தில் லாமல் விளைபொருளே ஓதா துணரு முணர்வேகுற் றாலத் துறைபவனே 36 படையாத சென்ம முமேன்படைத் தாய்பஞ்ச பூதவெறி விடையாதி யில்விட வோவிட வோமெத்த வேமெலிந்து கடையாயி னேனிரங் காயொரு பாகங் கவுரிகொண்டாய் உடையாய் கரந்தைச் சடையாய்குற் றாலத் துறைபவனே 37 அடுக்குறுந் துன்பமு மின்பமு மாய வலையடித்த நடுக்குறுஞ் சென்மக் கடல்புகுந் தேநலி யாமலென்னை யெடுக்குறு நின்னருட் பேரின்பத் தோணியி லேற்றுகண்டாய் ஏடுக்கமுந் தோற்றமு மில்லாய்குற்றாலத் துறைபவனே 38 இருகாது கேட்கில் வருமாசை யற்ப மிருகண்கண்டாற் பெருகாசை கொண்டு பிதற்றிய தாற்பெரும் பேதமையாற் கருகா வண்ணங் கருகிநொந் தேன்கருத் தாறியுன்பால் உருகாத நெஞ்சனை யாள்வாய்குற் றாலத் துறைபவனே 39 பொன்மேரு வத்தனை பொன்குவித் தாலுமென் புத்தியின்னம் மென்மேலுந் தேட நினைக்குங்கண் டாய்வினை போக்கறவே என்மேற்ற யாவினு மெண்மடங் காவெந்தக் காலமுநான் உன்மேன்ம னம்வைப்ப தென்றோகுற் றாலத் துறைபவனே 40 பன்னாளுங் காமம் பொறுத்திருந் தாலும் பசியொருநாள் என்னாற்பொ றுக்கப்ப டாதுகண் டாயிதை யார்க்குரைப்பேன் சொன்னாற்ப குத்தறிவார்க் கண்டிலேன் சுற்றிப் பார்க்கிலெங்கு முன்னால் பதமன்றிக் காணேன்குற் றாலத் துறைபவனே 41 விரகப் படாமணிக் கொங்கையர் காமத்தில் வீழ்ந்துபொல்லா நரகப் படாமலெ னைப்புரப்பா யுண்மை ஞானமொன்றிக் கிரகப் படாமனத் தார்க்குரி யாய்மதிக் கீற்றணிந்த உரகச் சடாடவி யானேகுற் றாலத் துறைபவனே 42 வேறு படாம லுலகாண்ட மன்னரும் வெந்துடலம் நீறு படாரில்லை நீணிலத் தேநெடும் பாசவினைத் தூறு படாவழி பார்த்தியென் றேன்சொலச் சொல்லமனம் ஊறு படாதென்ன செய்வேன்குற் றாலத் துறைபவனே 43 மறுக்கிச் சுறுக்கென் றெமதூதர் வந்துகை வாளெடுத்துக் குறுக்கித் தறுக்குமுன் னேவருவாய் மந்தி குந்திவெள்வான் முறுக்கிச் சுருக்கிக் குறித்துப் பலாப்பழ மொக்கிவிக்கி உறுக்கித் தறுக்கி நடிக்குங்குற் றாலத் துறைபவனே 44 வெறுமந்தி முன்னிருட் போல்வருங் காலன்வெ குண்டுயிரைத் தெறுமந்தி யகாலத்தின் முன்வரு வாய்கனி தின்றுதட்டி மறுமந்தி மேற்செலத்தேன் பாயுங் கொம்பு வழுகிவிழுந் துறுமந்தி குந்திந டிக்குங்குற்றாலத் துறைபவனே 45 அவப்பாடல் பாடி யலைவது தீர வனுதினமும் சிவப்பாடல் பாடித் தெளிவதென் றேதெய்வப் பாடல்மறைத் தவப்பாடல் காட்டுநற் றாருடை யாய்கொன்றைத் தாருடையாய் யுவப்பாடன் மாமன்று டையாய்குற் றாலத் துறைபவனே 46 வருபான் மதிவைத்த செஞ்சடைக் காடும் வழுத்தமுத்தி தருபா தமுமென்று சந்திப்ப னோமலைச் சாரலெலாம் இருபா லுமுத்துங் கனகமும் வாரியி றைத்துநித்தம் ஒருபா லருவி குதிபாய்குற் றாலத் துறைபவனே 47 செண்பகக் காவுந் திரிகூடமுஞ் சித்ர மாநதியுங் கண்படைத் தார்பிரிந் தாற்றுவ ரோகன்மி யாய்ப்பிறந்து புண்படைத் தேனுக் கிரங்கா யிரவிற்பொன் மேடையெல்லாம் ஒண்பகற் போலொளி வீசுங்குற் றாலத் துறைபவனே 48 நீட்டி நினைப்பதை வேறுசெய் வாய்நினை யாததெல்லாங் காட்டி வைத்தங்கன மேமறைப் பாயெனைக் காத்தருள்வாய் ஆட்டி யசைக்கின்ற சூத்திரத் தாலனைத்த தாருயிர்க்கும் ஊட்டி யுறக்கந் தருள்வாய்குற் றாலத் துறைபவனே 49 மறவேன் மயக்கென்று நெஞ்சில்வி காரத்தை வஞ்சமறத் துறவேன் வெருட்டித் தொடருமில் வாழ்க்கையைச் சுற்றிச்சுற்றி அறவே தளர்ந்துவிட் டேனிரங் காயென்று மாசையற்றா ருறவே மெய்ஞ்ஞான நறவேகுற் றாலத் துறைபவனே 50 பேசிய வாய்மையெல் லாமுனைப் பேசியுன் பேரருளாம் வாசியை மேற்கொண்டு வாழ்வதல் லால்கவி வாணரென்றால் கூசிய மூடரைப் பாடித்திண் டாடிக்கொ டுங்கலியாம் ஊசியின் மேனிற்கப் போமோகுற் றாலத் துறைபவனே 51 கள்ளார்ந்த பூமணம் போலிருப் பாயுன் கருணையின்பத் தெள்ளா ரமுதுண்டு தேக்கியி ராமல் திகைத்துநித்தம் வெள்ளாவி நாற்றமுடை நாறுங் காய விடக்குக்குநான் உள்ளாசை வைத்தது நன்றோகுற் றாலத் துறைபவனே 52 குறைந்தாற் குறைந்து நிறைந்தா னிறைந்தெவர் கோலத்துள்ளும் அறைந்தா யுன்கோலத் தையார றிவாரென்னை வாழ்விகண்டாய் அறைந்தா டருவி மலைச்சாரல் சூழ்செண்ப காடவியில் உறைந்தா யுலக நிறைந்தாய்குற் றாலத் துறைபவனே 53 ஆகார நித்திரை யேகா ரணமென்றறமயங்கி மாகாமி நான்கொண் டமாலொ ழிப்பாய் மங்கையின்ப மோகா குழன்மொழி பாகாமெய்ஞ் ஞானத்தின் மோனம்விடா யோகா வசந்தவை போகாகுற்றாலத் துறைபவனே 54 வண்டாடும் பூங்குழல் கண்டாடும் பால்மொழி மாதர்மயல் கொண்டாடி நித்தமும் திண்டாடி னேன் கொடுங் கூற்றதைத்துத் தண்டா முனியுய்யக் கொண்டா யமரரைத் தாங்கவிட முண்டா யடைக்கலங் கண்டாய்குற் றாலத் துறைபவனே 55 சாலக் கொடும்பசி தாக்கநொந் தேன்வினை தாக்குகலி காலத்தை வெல்லக் கருணைசெய் யாய்தனிக் காலங்கண்டு வாலக் களிமொழி யாரிசை வாதுக்கு மாறனைப்போல் ஓலக் கருங்குயில் கூவுங்குற் றாலத் துறைபவனே 56 கையார் தொழிலுக்கெல் லாந்தொல்லைப் பாரங்க ருத்திலஞ்சிச் செய்யா திருக்கிற் கடும்பசி பாரஞ்செய் துண்ணவென்றாற் பொய்யா முடம்பிற் பிணிபார நின்றுபு லம்புகிறே னுய்யாமை தீர்த்தரு ளையாகுற் றாலத் துறைபவனே 57 இம்பரைக் காமித்து வந்துநின் னன்பரை யேத்தலன்றி வம்பரைப் போய்வணங் காதருள் வாய்வண்டு கிண்டுமலர்க் கொம்பரைக் காத மணக்குந் திரிகூடக் குவட்டினின்றே உடம்பரைக் கானவர் கூவுங்குற் றாலத் துறைபவனே 58 வெறுத்திடுந் தீவினை செய்தாலுந் தொண்டனை வேண்டியென்றும் பொறுத்தினி யாளக் கடனுனக் கேமழை போலிருள்போல் கறுத்திடுங் கோதையர் பூந்தாளின் மாணிக்கக் கற்படிகள் உறுத்திடுங் கோல மலைசூழ்குற் றாலத் துறைபவனே 59 கொடுக்கச் சடைவற்ற வுன்னையும் பாடிக்கு லாமர்முன்போய் இடுக்கட் படுவ தழகல்ல வேகவ்வை யீடழிக்கும் நடுக்கத்தை யாற்றப் படாதுகண் டாய் எந்த நாளுமுண்ண உடுக்கங் குறைவருத் தாதேகுற் றாலத் துறைபவனே 60 பேராசைக் கள்ளத்தை யுள்ளேய டக்கிப்பி றருக்கெல்லாம் பாராசை யற்றவர் போல்திரி வேன்பசுத் தோல்புனைந்து போராசை கொண்ட புலிநானென் னாசையைப் போக்குகண்டாய் ஓராசை யுமற்ற யோகீகுற்றாலத் துறைபவனே 61 கழிக்கும் பலபொழு தோர்பொழு தாய்க்கலங் காமலுள்ளே விழிக்கும் விழிவெளி யாவதென் றோவெண்ணி லாக்கதிரைப் பழிக்கும் திரிகூடத் தருவிநன் னீர்பக லோனைவெம்மை யொழிக்குந் திவலை தெளிக்குங்குற் றாலத் துறைபவனே 62 செருமிக் கவலை யுளந்தடு மாறித் தினம்பொருமிப் பொருமிக் கரைவது கண்டிரங்காய்ப் புல்லும் பூடுங்கல்லும் தருமிக்க பட்சி மிருகங்க ளாதி சராசரமும் ஒருமிக்கத் தெய்வ வடிவாங்குற் றாலத் துறைபவனே 63 சிறையோ படுவ தினிக்கவை யோதினந் தான்படுதல் முறையோ முறையிடல் கேட்கிலை யோமுன்னை நாளிற்செய்த குறையோ குறையுன்முன் னேநிற்கு மோகொண்ட கோபமென்னோ உறையாங்கு கொண்ட லுலாவுங்குற் றாலத் துறைபவனே 64 தண்டேன் மலர்சொரி சண்பகச் சோலையுஞ் சந்நிதியும் பண்டே பழகுநின் சித்ரா நதியும் பலவளமுங் கண்டே பிரிந்துந்தரித் தேனென்போ லொத்தகன் னெஞ்சர்தாம் உண்டேநின் கற்பனைக் குள்ளேகுற் றாலத் துறைபவனே 65 பொறுக்கும் படைகொண்டு கோபத்தை மாய்த்துப் புரையற்றுநான் வெறுப்பு விருப்பற் றிருப்பதென் றோவண்டம் விண்டுகிறு கிறுக்கும் படிமலை யைச்சிலை யாக்கிக் கிளர்புரங்கள் ஒருக்குந் தனிப்பெரு வீராகுற் றாலத் துறைபவனே 66 வருக்காம் பலகரும்பைப் பார்க்க நன்றொரு வட்டெனவே பெருக்காசை விட்டு நின்றாளே பரவிப் பிறவியின்வேர் கருக்காம லென்றுமென் சிந்தைக்குள் ளேயொருக் காற்றெளிவு மொருக்கான் மயக்கமு மாமோகுற் றாலத் துறைபவனே 67 தருகோடி யம்புயத் தாள்தொழும் போது சதுரயுக மிருகோடி யும்நொடிப் போதொக்கு மேதுன்ப மீட்டுங்கவ்வை யருகோடி யுன்னைப் பிரிந்தா லரைநொடிப் போதுமெனக் கொருகோடி கோடியு கங்காண்குற் றாலத் துறைபவனே 68 காண்பதெல் லாங்கண் மயக்கமென் றேமனங் கண்டிருந்தும் வீண்பல கௌவைக்கு ளோடிய தால்வந்து மீட்டருள்வாய் சேண்படர் கங்கைச் சடையாய் பிரமன்சி ரத்திலொன்று மூண்பலி தேடுங்க ரத்தாய்குற் றாலத் துறைபவனே 69 கண்பார்த்துச் சோரமிடுங் கள்வரை வர்கை கள்ளமிட்டுப் பண்பார்த்த துன்னைப் பணிவதென் றோபுயல் பார்த்துநின்று விண்பார்க்குஞ் சாதகம்போ லுன்னைப் பார்த்துநின் மெய்யருட்பால் உண்பார்க்கு ஞானப் பெருக்கேகுற் றாலத் துறைபவனே 70 சிறுகாலந் தாயர் முலைப்பால் மயக்கம் செகத்தறிவு பெறுகால மாதர் முலைமேல் மயக்கம் பெருங்கிழமா யிறுகாலம் வஞ்சப் பிணியால்ம யக்கமுன்னின் பத்தைநா னுறுகால மாவதெக் காலங்குற் றாலத் துறைபவனே 71 ஆணவங் காட்டுவித் தாசையுங் காட்டுவித் தார்க்குமில்லா நாணமுங் காட்டிய மாயையி னால்நெடு நாட்கருத்தை வீணவம் போக்கிவிட் டேனிரங் காய்கடல் வெவ்விடத்தின் ஊணலங் காரமி டற்றாய்குற் றாலத் துறைபவனே 72 கருநோயுங் கன்மப் பிறவியி னோயுங்க ருத்திற்கவ்வை பொருநோயும் பூண்ட சரீரத்தி னோய்களும் போக்குந்தெய்வத் திருநீரு டையநின் சித்ரா நதிக்கரை சேர்ந்தவன்றே ஒருநோயு மின்றித் தவிர்ந்தேன்குற் றாலத் துறைபவனே 73 மறைப்பொரு ளானநின் சேவடி வாழத்தி வடவருவித் துறைப்புன லாடிக் குழல்வாய் மொழியுடன் சோதியுன்னை இறைப்பொழு தாகிமுள் ளேதியா னித்தி ருக்கநெஞ்சி லுறைப்பிலை யேயென்ன செய்வேன்குற் றாலத் துறைபவனே 74 செய்வதெல் லாங்குற்ற மேயத னாற்செகத் தோர்களென்னை வைவதெல் லாங்கொடுந் துட்டனென் றேகட்ட வல்வினையால் நைவதெல்லாமுன் பொருட்டே சரண்புக்கு நானினிமே லுய்வது நின்பொருட் டையாகுற் றாலத் துறைபவனே 75 தேயா மயக்கந் தெளிந்தோர்கண் முன்னந் தெளிவொன்றில்லாப் பேயாக நின்று பிதற்றுவ னோமனப் பேதமையால் மாயா மலத்துக்குள் வீணே கிடந்து மயங்குமிந்த ஓயா மயக்கந் தவிர்ப்பாய்குற் றாலத் துறைபவனே 76 எளியேனை யாட்டுஞ் செயல்யாவு முன்செய லென்றுநன்றாய்த் தெளியேனெவ் வாறு தெளிவிப்பை யோதிரை யேவரையே வளியே மறிபுன லேகன லேநெடு வானகமே ஒளியே பரந்த வெளியேகுற்றாலத் துறைபவனே 77 அடக்கிக்கொண் டாலுள் ளடங்கிக்கொள் வேன்புவி யாதிக்குநீ நடத்திக்கொண் டாலுநடந்துகொள் வேனன்றி நானென்றென்னைத் தொடக்கிக் கொண்டாட்டமி டாதே சகல தொழிற்குமெண்சாண் உடக்கைக்கொண்டாட்டிய சித்தாகுற்றாலத் துறைபவனே 78 எழுதிண் புவியு நொடிக்கேறுஞ் சிந்தை யெருதுமங்கோர் பொழுதென் னோரு மடக்கேறி வராது புலன்கலப்பை பழுதன்றிச் சேர்க்கவல் லெனல்லன் நான் அபர மாநிலத்தில் உழுதுண்டு வாழ்வதெவ் வாறோகுற்றாலத் துறைபவனே 79 பிறர்பொரு ளாசித்துப் போய்பேசிச் சாணும் பிழைப்பதற்கா அறமுத னானி லைபிழைத் தேனடி யார்க்கடிமைத் திறமில னாகிலு நின்னடி யார்திருக் கூட்டமல்லால் உறவினி வேறிலை யாள்வாய்குற் றாலத் துறைபவனே 80 கொலைபா தகங்செய்யக் கற்றேனுன் பத்தர்கு ழாத்திற்செல்ல மலையாத வுண்மை வரக்கற்றி லேனெனை வாழ்விப்பையோ நிலையா ரணங்களுக் கெட்டாத நாத நெடுவெளிக்கே உலையாத வானந்தக் கூத்தாகுற் றாலத் துறைபவனே 81 ஆலமென் றாலு மமுதா முனைக்கண்ட ஆடரவின் கோலமு மாலையின் கோலம் தாங்கொடி யேன்வினையும் காலமுஞ் சாலநன்றாவதென் றோவரை காலருவி ஓலமென் றார்க்குந் துறைசூழ்குற்றாலத் துறைபவனே 82 தொண்டென் றுனக்குப் புரியேன் மகளிர் சுரிகுழற்கே வண்டென்று மாலையென்றுஞ் சுழல்வே னெனைவாழ் விப்பையோ விண்டொன்றும் வெள்ளிப் பொருப்பாய் விருப்பும் வெறுப்புமில்லாய் உண்டென் றவர்மனத் துள்ளாய்குற் றாலத் துறைபவனே 83 வன்பெருங் காய மெடுத்தவர் யார்க்கும் வருவதின்பத் துன்பங்கட் கூடத் தொடர்ந்தல் லதொடர்ந் தாலுமித்தை யென்பரஞ் சாட்டி யிடையாம லொன்றுபட் டென்றைக்குநான் உன்பரஞ் சாட்டி யிருப்பேன்குற்றாலத் துறைபவனே 84 செகந்தோறுஞ் சென்று செனித்தலுத் தேன்சென்மந் தோறும்புல்லர் முகந்தோறுஞ் சென்றலுத் தேனிரங் காய்முனி வோர்மடவா ரகந்தோறு முண்பலிக் காய்நடந் தாயயன் மாலென்றிங்கே யுகந்தோறும் பேர்பெற் றிருந்தாய்குற் றாலத் துறைபவனே 85 சென்னிற வேழ முகத்தெம்பி ரானையுந் தென்னிலஞ்சிப் பன்னிரு கையனையும் பயந்தாய் வெற்பர சன்பெற்ற கன்னியைக் கைவச மாக்கிக்கொண் டாயென் கருத்தையெல்லா முன்னிரு தாள்வச மாக்காய்குற் றாலத் துறைபவனே 86 வாலத் தனையு மொடுக்கிமிக் காய்வினை வாய்பிளந்து காலக் கடும்புலி பாயுமுன் னேசெண்ப காடவிக்கே ஏலக் குழன்மட மாதொடு நீயுமி ருந்ததிரு ஓலக் கங்காட்டி யருளாய்குற் றாலத்துறைபவனே 87 பத்தியுமில்லை வைராக் கியமில்லை பாரிலுண்மைச் சத்திய மில்லை தவமா கிலுமில்லை சார்ந்தகுணப் புத்தியு மில்லை கொடியே னிருந்ததுர்ப் புத்திக்குநீ ஒத்திருந் தெப்படி யாள்வாய்குற் றாலத் துறைபவனே 88 பழுக்குமுன் னேயுடல் நொய்க்குமுன் னேபதைத் தாவியெல்லா நழுக்குமுன் னேயுட்கி நாறுமுன் னேநமன் பாசத்தினா லிழுக்குமுன் னேகண்கண் மூடுமுன் னேயிர தங்கடைவா யொழுக்குமுன் னேவந்து தோன்றாய்குற் றாலத் துறைபவனே 89 குருவாக்கி யங்கள்கல் லேன்பத்தர் கூடுங்கு ழாத்திற்செல்லேன் திருவாக்கு முண்மை தெளிந்துநில் லேன்தெளி வேதுமின்றி எருவாக் கிடுமெலும்பா னேன்முழு பித்த னென்னையுமோ குருவாக்கி விட்டெனை யாள்வாய்குற் றாலத் துறைபவனே 90 சுகதுக்க பாசத்தி னாலே பிறவித்து வட்சிக்குநான் முகம்வைத்த மோசந் தவிர்ந்திட வேமுத லந்தமிலாப் பகலுற்ற சுத்த வெளிக்கே யிருக்குநின் பாதபத்ம யுகபத்தி முற்றுந் தருவாய்குற் றாலத் துறைபவனே 91 வினைப்பாத கர்க்குள் முழுப்பாவி யாகியும் வெட்கமின்றி யெனைப்பார்க்கயார் மிக்காரென்றெண்ணு வேனுன்னை யென்றுமொன்றாய் நினைப்பா ரிகழ்ச்சி மகிழ்ச்சி வந்தாலு நிலைமைவிடா ருனைப்பாரஞ் சாட்டி யிருப்பார்குற் றாலத் துறைபவனே 92 எனதெனக் கென்றுத விப்பதல் லாலுனை யெண்ணுதற்கென் மனதுசற் றாகிலு முண்மையுண் டோ வஞ்ச னேனுமுன்னைத் தனதுபட் டாதிக்கம் போலே தமிழ்க்கவி சாற்றுவது முனதுகட் டாயத்தொ ழில்காண்குற் றாலத் துறைபவனே 93 முடக்கிட்டு மாயப் பிறவிக்குள் ளேவிட்டு மூட்டியென்னைத் துடக்கிட்டு நானென்று பேச்சிட்ட தென்வரை சூழ்ந்தவட்டக் கடற்குட்ட மிட்ட புவனிக்கெல் லாமொரு கம்பத்திலே உடக்கிட்ட சூத்திர தாரீகுற்றாலத் துறைபவனே 94 அன்பது வைத்துனைப் போற்றுகி லேனடி யார்க்கெளியா யென்பது சற்றுங் கருத்திலுன் னேனெனை யாட்கொள்வையோ முன்பது மத்தயன் மாலா னவர்முத லொன்றுக்கொவ்வா ஒன்பது மான ஒளியேகுற் றாலத்துறைபவனே 95 மலைவாய்க் குவடன்ன வார்முலை யார்க்கு மயல்கொடுதேக் கிலைவாய்ப் படுபுனல்போ லலைந்தே னஞ்ச லென்றருள்வா யலைவாய்ப் படாததெள் ளாரமு தேதுளை யாதமுத்தே உலைவாய்ப் படாதசெம் பொன்னேகுற் றாலத் துறைபவனே 96 தடுக்கும் பொழுதி லணுவள வேனுந்த டுத்துக்கொள்வாய் கொடுக்கும் பொழுதிலெல் லாங்கொடுப் பாய்திருக் கூத்துக்குநீ எடுக்குஞ் சொரூபங்க ளாரறிவா ரெனையாள் புலித்தோல் உடுக்குஞ் சதாநந்த யோகீகுற் றாலத் துறைபவனே 97 நின்னாச் சிரம முனியாச் சிரம நினதடியார் பொன்னாச் சிரமம் பூவாச் சிரமும் பூமடந்தை மன்னாச் சிரமு மன்னுவர் காண்மனத் தாலும்வஞ்ச ருன்னாச் சிரம பதத்தாய்குற் றாலத் துறைபவனே 98 திரையற்ற ஞானக் கடலுடை யாயுனைச் சேர்ந்துசென்மக் கரையற்ற வாரி கடக்கின்ற வாறு கருணைசெய்வாய் புரையற்ற தொண்டர் மனத்தே யிருந்து பொருள்விளைக்கு முரையற்ற மோன வுணர்வேகுற் றாலத் துறைபவனே 99 நித்தர்கள் போற்று நின்னாவணி மூலத்தி னெல்லைவந்து முத்தமிழ் பாடக் கருணைசெய் தாண்டனை முற்றுமினிக் கொத்தடி யேனுக்குன் பொற்பதந் தாகுழல் வாய்மொழியாள் உத்தமி பாகம் உவந்தாய்குற் றாலத் துறைபவனே 100 |