உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
திருக்குற்றால ஊடல் காப்பு பொருப்பிறை திருக்குற்றாலப் புனிதனும் புவன மீன்ற ஒருத்தியும் புலவி தீர்ந்த ஓலக்க மினிது பாடத் திருக்கைவேற் கதிரென் றோங்குஞ் சேவகன் முன்னே தோன்றி மருப்பெனப் பிறையொன் றேந்தும் வழுவையான் வழுவை யானே. நூல் குழல்வாய்மொழியம்மையார்: தேரேறுஞ் சூரியர்கள் வலம்புரியும் வலம்புரியின் செம்பொற் கோயில் தாரேறு மலர்தூவித் தாலத்தார் பரவியகுற் றாலத் தாரே ஏரேறு கடல்பிறந்த கருணைநகை முத்துவெளுத் திருப்ப தல்லால் ஆரேறு மழுப்படையீர் பவளம்வெளுத் திருப்பதழ காகுந் தானே 1 குற்றாலநாதர்: காகமணு காததிரி கூடமலை அணங்கேயுன் கற்பின் சீர்த்தி யோகமுறை பணிந்தேத்தி உயர்மறை எலாம்வெளுப்பா யுனக்கு மூத்த வேகவண்ணன் கடல்வெளுப்பாய் யாமிருக்கும் மலைமுழுதும் வெளுப்பா யென்றன் ஆகமெலாம் வெளுப்பானா லதரம்வெளுப் பேறாதென் றார்சொல் வாரே. 2 குழல்வாய்மொழியம்மையார்: ஆரிருந்தும் தனித்திருந்தும் பிறைமவுலித் திரிகூடத் தண்ணலாரே சீரியபொன் முலைக்குறியும் வளைக்குறியும் பெற்றிருந்த தேவ ரீர்தாம் மார்பிலொரு மைக்குறியும் வாடைமஞ்சட் குறியுமன்று வரப்பெற் றீரே நேரிழைதன் பேருரையீர் வஞ்சம்தா னோ உமது நெஞ்சந் தானே. 3 குற்றாலநாதர்: நெஞ்சகத்தில் நீயிருக்க நின்னையல்லா லொருவரையு நினைய லாமோ உஞ்சலிட்ட குழைதடவும் கயல்விழிப்பெண் குழல்மொழியே ஒன்று கேளாய் அஞ்சனத்தின் வண்ணமல்ல திருச்சாந்து வழிந்துநிற மதுவே யன்றி மஞ்சளைப்போ லிருந்தநிறம் பொன்னிதழித் தாதவிழ்ந்த மாற்றந் தானே 4 குழல்வாய்மொழியம்மையார்: மாற்றுவெள்ளி மலையிலொரு பவளமலை கொலுவிருக்கு மகிமை போல வேற்றுவெள்ளை விடைமீதில் காட்சிதருங் குற்றாலத்து எந்தை யாரே ஆற்றுவெள்ளை சடையிருக்கக் கீற்றுவெள்ளை மதியிருக்க அதிக மாநீர் நேற்றுவெள்ளை சாத்தினதை இன்றுசிவப் பானகண்ணால் நிறுத்தி னீரே 5 குற்றாலநாதர்: நிறுத்திநாம் பிரிந்ததில்லை நீபிரிந்து பனிவரைக்கே நிற்கு நாளில் பொறுத்துநாம் வடவாலின் கீழிருந்தோம் அதுதனக்குப் பொறுப்பில் லாமல் சிறுத்துநாள் மலர்தூவிக் கறுத்துவந்த சேவகனைச் சிவந்த போது குறித்துநாம் பார்த்தவிழி சிவப்பன்றோ குழல்மொழிப்பூங் கொடியன் னாளே. 6 குழல்வாய்மொழியம்மையார்: அந்நாளிற் கோவணமும் புலித்தோலும் வேடமுமாய் ஆலின் கீழே பன்னாளும் தூங்கினநீ ரென்னாலே மணக்கோலப் பதம்பெற்றீரே இந்நாளிற் சலவைக்கட்டிப் பூமுடித்துத் தினஞ்சுகித்தா லிதுவோ செய்வீர் மின்னாரும் இனிச்சிலபேர் வேண்டாவோ நீண்டசங்க வீதி யாரே. 7 குற்றாலநாதர்: வீதியாய் மரவுரிகிட் டினாசம்பூண்டரியதவ வேடம் தாங்கி ஆதிநாட் கான்தோறு மலைந்துதிரிந் தானதுபோ யயோத்தி மேவி மாதுசீ தையைப்புணர்ந்து பாராண்ட உங்களண்ணன் மார்க்க மெல்லாம் காதுகேட்டிருந்துமிது சொன்னதென்ன குழல்மொழிப்பூங் கயல்கண் மாதே. 8 குழல்வாய்மொழியம்மையார்: மாதர்பாற் பலிஇரந்தீர் பலியிடப்பைந் தார்துகிலும் வளையும் கொண்டீர் சாதுவாய்த் தோலுடுப்பீர் அரையிலுள்ள சோமனையும் தலைமேற் கொள்வீர் காதிலே பாம்பையிட்டீர் கழுத்திலே நஞ்சையிட்டீர் கனபேய் கொண்டீர் ஆதலா லுமைப்போலும் பித்தருண்டோ குற்றாலத் தண்ண லாரே 9 குற்றாலநாதர்: அண்ணல்வரைத் திரிகூடப் பெண்ணமுதே கேட்டி உங்க ளண்ண னான கண்ணன்முதல் வரகுதின்று வாயாலெ டுத்தபண்டைக் கதைகே ளாயோ மண்ணிலொரு காற்சிலம்பைக் கையிலிட்டான் கைவளையை வாய்மே லிட்டான் பெண்ணொருத்திக் காயொருத்தி புடவைகிழித் தானவனே பித்த னாமே. 10 குழல்வாய்மொழியம்மையார்: பித்தனென்றும் பாராமற் பெண்கொடுத்தான் அவனோடு பிறந்த வாசிக்கு இத்தனைபெண் சீருமிட்டான் கையம்பா(க) உமக்கிருந்தான் எந்த நாளும் மைத்துனனைப் பாராட்டி எங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே சத்திபீ டத்துறைவீர் செய்தநன்றி நீர்மறந்த சங்கை தானே. 11 குற்றாலநாதர்: சங்கமெடுத் தேதிரிந்தான் சக்கராயு தங்கொடுத்தோம் தலைநாள்கொண்ட சிங்கவெறி தீர்த்தருளிச் செய்யாளை முகம்பார்க்கச் செய்தோம் கண்டாய் மங்கைகுழல் வாய்மொழியே உங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே எங்கெல்லாம் பால்திருடி எங்கெல்லாம் அடிபடவும் ஏது வாச்சே. 12 குழல்வாய்மொழியம்மையார்: வாய்ச்சதிரி கூடமலைக்கு இறையவரே சொன்னமொழி மறக்க வேண்டா ஏச்சுவந்து சுமந்ததெங்கள் அண்ணற்கோ உமக்கோஎவன் றெண்ணிப் பாரீர் காய்ச்சியபால் கண்ணனுண்டான் வேடனெச்சில் நீர்கலந்தீர் கருணை யாமால் ஆய்ச்சியர்கை யாலடிபட்ட டான் ஐயரேநீர் பேடிகையா லடிபட்டீரே. 13 குற்றாலநாதர்: அடிப்பதுவும் ஆய்ச்சியர்பால் குடிப்பதுவும் இசைந்தானும் அரச னாக முடித்தலையில் முடியுமின்றிப் படிபுரந்தா னும் உனது முன்வந்தானும் படிக்கலமும் பசுநிரையும் பயின்றானுங் குழல்மொழிப்பூம் பாவை கேளாய் இடைக்குலத்திற் பிறந்தானோ எதுகுலத்திற் பிறந்தானோ இவன் கண்டாயே. 14 குழல்வாய்மொழியம்மையார்: கண்டிருந்தும் கன்னியர்க்கா எனைப்பிரிந்த மதந்தானோ கலவித்தேறல் உண்டிருந்த மதந்தானோ எங்களண்ணன் குலத்தில்மறு வுரைத்தீர் ஐயா பண்டிருந்த உமதுகுலம் நான்சொன்னாற் பழுதாமோ பரம ரேநீர் கொண்டருந்தும் குலம்பேசல் ஞாயமோ குற்றாலக் கூத்த னாரே. 15 குற்றாலநாதர்: கூத்திருந்த பதம்பெறவே கொதித் திருந்த முனிவர்களும் கொலுச்சே விக்கக் காத்திருந்த தேவர்களும் காட்சிபெற வேண்டிஉனைக் கரந்து போனோம் பூத்திருந்த திரிகூடப் பொருப்பிருந்த பசுங்கிளியே புலவிக் காக வேத்திருந்த வார்த்தையெல்லாம் எதிர்த்திருந்து நீஉரைத்தால் என்செய் வோமே. 16 குழல்வாய்மொழியம்மையார்: என்மேலும் பத்தியில்லாத் தேவருண்டோ எனைப்பிரிந்து வீதி போகத் தென்மேவு திரிகூடச் செல்வரே நீதியுண்டோ தேவரீர் மேல் முன்மேவும் குற்றமுண்டு திருவாக்குக்கு எதிர்வாக்கு மொழிந்த தாலே தன்மேலும் குற்றமுண்டு தமையனார் மேலும் உண்டோ தாழ்த்தி தானே. 17 குற்றாலநாதர்: தமையனென்றும் தங்கையென்றும் வேற்றுமை என் குழன்மொழிப்பூஞ் சாயல்மாதே உமையவளே தமையனுனக்கு அருமையென்றால் நமக்குமவ னருமை யாமே நமையுமோர் குறையுரைத்தாய் நாமவனைச் சரசமாக நவின்றோம் கண்டாய் இமையவர்கள் வேண்டுதற்கா இத்தனையும் பொறுத்தருள்வாய் இமய மாதே. 18 குழல்வாய்மொழியம்மையார்: மாதேவர் நீரொருவ ராடினது கூத்தாச்சு வலியோர் செய்தால் தீதேதுஞ் செமியாதீர் குற்றால நஞ்சையுண்டு செமிப்பீரையா போதாது நீரளக்கு மிருநாழிப் படியெனக்குப் பொன்னும் பூணுஞ் சூதான வகைமுழுதுஞ் சொன்னாலென் னாற்பெருமை சொல்ல லாமோ. 19 குற்றாலநாதர்: சொன்னமலை தனதாச்சுப் பொன்னுலகு வெள்ளிமலை சொந்த மாயிச்சு இன்னமொரு பொருளுமுண்டோ பெண்கள் பேதமைக்குணந்தான் இதுபோ லுண்டோ உன்னரிய விளைநிலமு நன்னகர நவநிதியு முனக்கே யென்று பன்னிகுழல் வாய்மொழியே பாலித்தோம் பட்டயமும் பாலித் தோமே. 20 திருக்குற்றால ஊடல் முற்றிற்று வாழ்த்து வார்வாழுட் தனித்திகுழல் வாய்மொழியி னும்பிகை வாழி வதுவை சூட்டும் தார்வாழி திரிகூடத் தார்வாழி குறுமுனிவன் தலைநாள் சொன்ன பேர்வாழி அரசர்கள்செங் கோல்வாழி நன்னகரப் பேரா லோங்கும் ஊர்வாழி குற்றாலச் சிவனடி யார்வாழி நீடுழி வாழி. |