மேகவிடு தூது - Megavidu Thoothu - தூது நூல்கள் - Thoothu Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com


திருநறையூர் நம்பி

இயற்றிய

மேகவிடு தூது

தனியன்

போதுமண வாளணங்கு புல்லுநறை யூர்நம்பி
மீதுமண வாளரருண் மேகவிடு - தூதுதனைச்
சொல்லுவார் கேட்போர் துதிப்பாரிம் மேதினிமேல்
வெல்லுவா ரெல்லாம் விரைந்து.

காப்பு

நம்மாழ்வார்

நாரணனை யெவ்வுயிர்க்கும் நாயகனை யண்டாண்ட
பூரணனை நாகணையிற் புண்ணியனை - வாரணமுன்
வந்தானை யேத்தி மறையா யிரந் தமிழாற்
றந்தானை நெஞ்சே தரி.

திருமங்கையாழ்வார்

நாட்டியசீர்த் தென்னறையூர் நம்பி திருவடிக்கே
சூட்டியதோர் மேகவிடு தூதுக்குக் - கூட்டம்
பொலியன்ப ரேத்தும் புனலாலி நாடன்
கலியன் பரகாலன் காப்பு.

நூல்

கலிவெண்பா

மேகத்தை விளித்தல்

சீர்கொண்ட செங்கமலச் செல்வத் திருமகளு
நீர்கொண்ட வேலை நிலமகளு - மேர்கொண்ட 1

காந்தண் மணிக்கடகக் கையா லடிவருடப்
பாந்தண் மணிச்சுடிகைப் பாயன்மேற் - சேர்ந் துறங்குஞ் 2

செங்கண்மா லுந்தித் திருத்தா மரைப்பிறந்த
வங்கண்மா ஞாலத் தனைத்துயிர்க்குந் - தங்காமும் 3

மாரி வழங்குதன் மாறாமே கைம்மாறு
காரிய மென்று கருதாமே - பாரிற் 4

றுளிக்கின்ற தண்ணந் துளியமுத நல்கி
யளிக்கின்ற கொண்மூ வரசே - களிக்கின்ற 5

மேலுலக மேறி விரிஞ்சனா மம்படைத்து
நாலு திசைமுகமு நண்ணுதலான் - மாலுமாய் 6

நீலநிற மாகி நிறைகமலக் கண்ணாகிக்
கோல வளையாழிக் கொள்கையாற் - சூலம் 7

விரவிய பாணியால் மின்னையிடந் தாங்கி
யரவ மணியு மழகால் - வரமளிக்கு 8

மெத்தே வருக்கு மிறைவராய் மேலாய்
முத்தே வருநிகரா மூர்த்தியே - மைத்தகன்ற 9

வானத்து ளேபிறந்து வானத்து ளேதவழ்ந்து
வானத்து ளேவளரும் வானமே - வானத்து 10

வேலைவாய் நீரருந்தி வெற்பி லரசிருந்து
சோலைவாய்க் கண்படுக்குந் தோன்றலே - ஞாலமிசைத் 11

மேகத்தின் சிறப்புரைத்தல்

தானமும் மெய்யுந் தருமமுங் கல்வியு
மானமுந் தானமு மாதவமு - நானக் 12

கருங்கொண்டை மங்கையர்தங் கற்புநிலைநிற்ப
தருங்கொண்ட லேயுனைக்கொண் டன்றோ - நெருங்குமுவ 13

ராழிநீர் துய்யவமுத நீரானதுவும்
வாழிநீ யுண்ட வளமன்றோ - தாழுமடி 14

தந்துயர்கூறி மேகத்தை வேண்டுதல்

யாவுஞ் சிந்தாமணியு மம்புயமுஞ் சங்கமுங்
காவும் பணியவுயர் கார்வேந்தே - நாவினாற் 15

சாதகமும் தோகைத்தனி மயிலும்போலவே
மேதகையை நின்வரவை வேட்டிருந்தேன் - பூதலத்துப் 16

பல்லுயிருங் காக்கும் பரமா முனக்கெனது
புல்லுயிருங் காக்கில் புகழன்றோ - வல்லதொரு 17

சீருயிரு மேகமே செங்கண்மாற் காளானேன்
ஆருயிரு மேகமே யல்லவோ - பேரரவ 18

நீலமஞ்சே கேட்டியா னின்னையல்லா தென்னையிந்தக்
காலமஞ்சே லென்பாரைக் காணகிலேன் - ஓலமரு 19

விண்மாரியே பெருமாள் வேரித்துழாய் வேட்டென்
கண்மாரி பெய்வதெல்லாங் கண்டாயே - தண்மை 20

விளையும் பயோதரமே வெம்பாத செம்பொன்
அளையும் பயோதரமே ஆனேன் - கிளைபிரியாக் 21

கோலமழையே குயில்மாரனையங்குக்
காலமழையாமல் காப்பாரார் - நீலநிற 22

மங்குலுக்கு வேந்தே மலர்க்கண் புதைத்தனைய
கங்குலுக்கு நெஞ்சங்கரைகின்றேன் - இங்கு 23

நடந்தகனமே முலையினாலுந்தரள
வடந்தகனமே செய்து மாய்த்தேன் - விடந்திரண்ட 24

திங்களெழிலிக்குச் சிலைமாரவேள் முனியில்
எங்களெழிலிக்கரசே யென்செய்கேன் - மங்கலமா 25

மிந்திரவில் வாங்கி யெழுகின்ற மைப்புயலே
வந்திரவில் வாடை வருத்துங்காண் - அந்தரத்து 26

விண்ணே யுனக்கிவற்றை விண்டுரைத்தே னல்லாதெ
னுண்ணேய வேட்கை யெவர்க்கோதுவேன் - கண்ணழலால் 27

வேட்கைபிறர்க் குரையேனென்றல்

வெந்தானிலத்துக்கு வீறாகத் தாங்குதலால்
மந்தானிலத்துக்கும் வாய்திறவேன் - அந்த 28

குருத்தத்தை மாரன்குரகதாமா மென்றே
வருத்தத்தை யங்குரைக்க மாட்டேன் - கருத்துள்ள 29

மாதண்டலைவாய் மதுகரத்துக்கும வன்றன்
கோதண்ட நாணென்று கூறேனான் - மூதண்ட 30

கோளக்குயிற் கெல்லாங் கோவே யவன்றனது
கானக்குயிற்குங் கழறேனான் - நாளொன்றில் 31

அன்புருவுக்கு மரசனுட லீர்வித்த
புன்புறாவுக்கும் புகலேனான் - மென்புரத்து 32

கோம்பிக்குடல் பனிக்கும் கொச்சை மடமஞ்ஜைக்கும்
சோம்பித் தளரும் துயர் பணியேன் - றேம்பிரச 33

நிற்கின்ற பூவைக்கு நீள்குழலார் சொல்லியதே
கற்கின்ற பூவைக்குங் கட்டுரையேன் - பொற்கால் 34

வெறிப்பதுவும் வீட்டன்னம் வெண்பாலு நீரும்
பிறிப்பதுபோல் நட்புப் பிரிக்குங் - குறிப்பறிந்து 35

காதலா லுள்ளக் கவலையது கேட்க
வோதலாகா தென்றுரையேனான் - ஆதலால் 36

உள்ளே புழுங்குவதன்றி யோருவருக்கு
விள்ளே னுனக்கு விளம்பினேன் - தெள்ளியநூல் 37

இரக்கந் தோன்றவுரைத்துத் தூதுவேண்டல்

ஓதுவாரெல்லாம் உதவுவாரொப் புரைக்க
வேதுவாய் நின்ற வெழிலியே - பூதலத்து 38

பெய்யுதவியும் புரிந்தால் பேச்சுதவியுஞ் சிறிது
மெய்யுதவியும் புரிய வேண்டாவோ - துய்ய 39

அடலாழி யானடிக்கே அன்பாயகாதல்
கடலாழி மூய்கினேன் கண்டாய் - உடல்வாழ 40

விம்முகிலே சந்தாக மீளத் திருமால்பால்
மைம்முகிலே சந்தாகமாட்டாயோ - பெய்மதவேள் 41

தண்ணப்பஞ் செய்வதெல்லாந் தாமோதரனடிக்கீழ்
விண்ணப்பஞ் செய்தருள வேண்டாவோ - வெண்ணத்தின் 42

சீதரனை நீயிரந்து தெய்வத் துழாய் கொணர்ந்தென்
ஆதரவு தீர்த்தருள லாகாதோ - கேதகைக்கு 43

மின்கேள்வனாக்கிய நீவிண்ணோர் பெருமானை
என்கேள்வனாக்கினா லேலாதோ - முன்கேட்டு 44

மெள்ளரிய தாமம் எனக்குதவா யேலுனக்கு
வள்ளலெனும் நாமம் வழுவாதோ - தெள்ளுகடன் 45

ஞாலத் துளவமே நல்லிளமை போகாமல்
கோலத்துளவமே கொண்டுதவாய் - சீலத்தா 46

லூனா யுடலாயுறு துணையாய்த் தெய்வமா
யானா மருந்தா யென்னாருயிராய் - ஆனாத 47

நெஞ்சமாய்க் கண்ணாய் நினைவாய் வினையேற்கு
தஞ்சமாய்நின்ற தனிமுதலே - பஞ்சவர்க்காய் 48

மெய்த்தூது சென்றவரை வெல்லவே வெண்சங்கம்
வைத்தூது செங்கமல மாயோன்பால் - இத்தூது 49

நல்லதெனக்காரே நடந்தருள வேண்டுநீ
அல்லதெனக்காரே யருள் செய்வார் - சொல்லித் 50

தருதுமெனக் கந்தரமே சாற்றாயே லுய்யக்
கருதுமெனக் கந்தரமே கண்டாய் - பெரிது 51

தூது சென்றார் சிலரை எடுத்துக்காட்டல்

மெனைத் தோன்றியோ துயரமெய்தினார் பார்மேல்
தோன்றியோ தூதுழன்றார் - நினைத்தார் 52

தமது பிறப்பறுக்கும் தாயாகி மேனாள்
அமுதிற் பிறந்தாள் பாலன்றோ - நமது 53

கருமஞ்சனை யவர்க்கா காய்கதிரைப் பாய்ந்து
பொருமஞ்சனை சிறுவன் போனான் - தரணிதனில் 54

மீது பரவை விடமுண்டவ னன்றோ
மாது பரவைமனை வந்தான் - ஆதலால் 55

ஓதுமிவரில் உயர்ந்தாரிலை யென்றே
தூது புரிந்தோரை தொகுத்துரைத்தேன் - ஆதலால் 56

தேனின்புறத் தூது தெய்வத் துளவினன்பால்
யானின்புறத் தூது எழுந்தருளாய் - வானிற் 57

றிவலை பிலிற்றி வருந்தெய்வமே நீயென்
கவலையறத் தூது போங்காலை - குவலயத்தி 58

பாற்கடலிற் பரமன் பெருமையும் நிலைமையும்

லெம்பிரானூரு மவர்பெயரு மெற்பயின்ற
தம்பிரான் செய்தமையுஞ் சாற்றக்கேள் - உம்பரில் 59

பன்னிருவர் மான்றேர் பரிதிக் கடவுளரு
மன்னிருவர் தெய்வ மருத்துவரும் - ஒன்னலரைப் 60

பாயும் விடையர் பதினொருவருந் திசையில்
காயுங் கடாஆ யானைக் காவலரும் - தூயகதிர் 61

வெண்ணிலா விட்டுவிளங்குங் கலா மதியும்
எண்ணினத் தாரகை யீட்டமும் - கண்ணி 62

லருடரு மாஞானத் தகுந்தவர் நாகர்
தெருடரும் விஞ்சையர் சித்தர் - கருடர் 63

அரக்கரி யக்கரவுணர் முதலோர்
பரக்கும் கணங்கள் பலரும் - பெருக்கரு 64

நீரேழுமேழு நினது பெருங்கணமும்
பாரேழு மேழு பருப்பதமும் - ஈரே 65

ழடுக்கும் புவனமு மாடகமால் வெற்பு
மெடுக்கு மரவரசு மெல்லாம் - தொடுக்கத்தான் 66

முண்டக நாபிமுளைக்குஞ் சதுமுகனோ
டண்ட வளாக மடங்கலுந் தான் - கண்டளித்து 67

முன்னிய வண்ண முடித்து விளையாடும்
தன்னிக ரில்லாத் தனி முதல்வன் - அன்னமாய் 68

மீனாகி ஆமையாய் வெள்ளேனமாய் மடங்கல்
மானாகி மாயையாய் வாமனமாய் - ஆனாத 69

மானிடராய் பாய்பரியாய் வாழு மடியவர்க்கு
தானிட ராற்றப் புகுந்த தம்பிரான் - மேனாளிற் 70

பைந்நாகப் பள்ளிமேல் பங்கயங்கள் பூத்தொளிரும்
மைந்நாகம்போல் கண்வளருநாட் - பொன்னாய 71

வன்ன முளரிமலர்த்தவிசில் வீற்றிருக்கும்
அன்ன முணர்த்த வுணராமையால் - என்னையல்லால் 72

இந்நித்திரை மடந்தை எய்தலுமாயிற் றோவென்
றுன்னித்திரை மடந்தை யூடினளால் - அந்நிலையே 73

திருமகள் சுகந்தவனம் வருதல்

காயத்திரியுங் கலைமகள் சாவித்திரியும்
ஆயத் தெரிவைய ராமாங்கு வர - நேயத்தார் 74

கோலத்தார் கைதொழுது கூரிலைய முக்கவட்டுச்
சூலத்தாளே வற்றொழில் கேட்ப - ஞாலத்து 75

மானிட மங்கைவடி வாகவந் துறையும்
கானிடம் யாதென்று கண்சாத்தி - யானா 76

யோசனையோர் நாற்றிசையும் முத்தித்
தலமாஞ் சுகவனந்தன்னுள் - அலமாற 77

வான்றிகழுங் கங்கைமுதல் மங்கைமார் மார்கழியில்
தோன்றிய முற்பக்கத் துவாதசியில் - தேன்றிகழும் 78

கூந்தனனை குடைந்தாடலான திக்கு
வேந்தனென நாமம் விளம்பியே - பாய்ந்த 79

திருமணி முத்தாறலைக்குந் தீரத்தினின்ற
மருமருவுவஞ்சியின் கீழ்வைக - வருகைமா 80

வானமே தாவிவளரும் மகிழடியின்
ஞான மேதாவியெனு நன்முனிவன் - தானெய்திச் 81

மேதாவி திருமகளைத் தமக்கு அருமகளாகப் போற்றல்

செய்ய கமலத்துச் செய்யவளைக் கண்டுவந்தே
யையர் பயந்தெடுத்த வன்னையார் - துய்யபெய 82

ரூரேதெனப் பெயருமூருமிலை தந்தைதாய்
நீரேயென முனிவன் நெஞ்சுருகி - பாரேத்த 83

மன்னிள வஞ்சியின் கீழ்வந்துறைதலால் பெயரும்
என்னிள வஞ்சியரே என்றுரைத்து - தன்றுழையி 84

லானவர முனிவனவ் வனத்துள் கொண்டிருப்ப
வானவர் தோலாவலி தோற்று - தானவரால் 85

எம்பெருமான் மானிட வடிவாய் மாமகளைத் தேடி வருதல்

விண்ணாடிழந்து விரிஞ்சகனோடு கூப்பிடுநாட்
டண்ணாந்துழாய் மாதவனுணர்ந்து - நண்ணார் 86

மிடைகிடைத்துமென்று விடைகொடுத்து பின்னர்
கிடைகிடைத்தச் செந்துவர் வாய்க்கிள்ளை - யடைகொடுத்த 87

புண்டரீகமாளிகைமேல் பூவைதணந்தமையும்
அண்டரெல்லா மாற்றலகன் றமையும் - கண்டருளிச் 88

செந்திருவை நாடுவான் தெய்வ வடிவகற்றி
யைந்துருவமாகி யவனியின்மேல் - வந்தருளி 89

ஆடல்பறவை யரசன கல்விசும்பு
திசையனைத்துந் தேடியணாள் - நீடும் 90

சுகந்தவன நோக்கித் துணையாய் செல்வி
யுகந்த வனமீதென்றுணர்ந்து - புகுந்தருள 91

மேதாவி அதிதிகளை ஆராதித்தல்

மேதாவிகண்டு விருந்தளிப்ப வெவ்வுயிர்க்கு
மாதாவினல்லான் மகிழ்ந்த கற்பின் - போதார் 92

முருகுவளை மொய்கழலை முன்றிதனிற்கண்டு
பெருகுவளை முன்கை பிடிப்பத் - திருமகளும் 93

காதலால்வந்த நம்பி கைபிடித்தா னென்றலறி
கோதிலா மாமுனியைக் கூவுதலும் - வேதியனும் 94

கண்புகையச்செய்யக் கதிர்புகைய கார் வெளிற
விண்புகைய வாய்துடிப்ப மெய்பதற - மண்புகைய 95

எம்பெருமான் ப்ரஸந்நனாதலும் முனிவர் துதித்துத் தம்மகளை மணஞ் செய்து கொடுத்தலும்

வந்தான் கரகநீர் வாங்கிச் சபிப்பதற்கு
முந்தாமுன் சங்காழி முன்காட்டச் - சிந்தை 96

மயங்கினான் அஞ்சினான் வாய்குழறிப் பார்மேல்
முயங்கினான் செங்கை முகிழ்த்தான் - தியங்கி 97

அழுதான் துளவின்மா லஞ்சலென வானோர்
விழுதாமரைத் தாளில் வீழ்ந்து - முழுது 98

மறியாமை செய்தேன் அதுபொறுத்தியென்ன
எறியாழியம்மா னிரங்கிச் - செறிதுழாய் 99

கோதைமணம் புணர்ந்த வக்கொண்டலுமப் புண்டரீக
மாதைமணம் புணர்ந்து வைகியபின் - நீதி 100

வாக்குவரமளித்து வீடருளி எம்பெருமான் சுகந்தகிரிமேல் அமர்தல்

யறந்திறம்பா நேமியானவ் வனஞ்சேர்கைக்கும்
பிறந்தார்கள் வீடுபெறற்கும் - சிறந்த மலர் 101

மாமாதின் பேரே வழங்குகைக்கும் கேட்டவர
மாமாதவனுக் கருளியபின் - பூமாதை 102

பாமாதுள்ளிட்டார் பணிந்துவிடை கொடுபோய்
தேமாமலரோன் செவிபடுப்ப - நாம 103

மறையாளனவ் வனத்து வந்தரசனீழல்
முறையாய வேள்வி முடித்து - பொறையார்ந்த 104

பாதாரவிந்தம் பணிந்தேத்தப் பாற்கடலில்
சீதாரவிந்தத் திருவினொடும் - பூதலத்தோர் 105

பேறுபெறவே பஞ்சபேரவடிவுகந்து
வீறுபெற மாமுனிக்கு வீடருளி - கூறரிய 106

ஞாலத்தெழுபத்து நான்கு சதுரயுகம்
நீலத்தடவரை போனின்றபிரான் - மேலைச் 107

திருக்காவிரிவளனும் திருநறையூர்ச் சிறப்பும்

சிகரக் குடகிரியில் சென்றிழிந்து கீழை
மகரக் கடல் வயிறு மட்டும் - அகலிடத்தில் 108

பாரங்கிழித்துப் பரவி மதகிடறி
யாரஞ்சுருட்டி யகிலுருட்டி - நார 109

நுரையெறிந்து வித்துருமக் கொத்து நுடங்கி
திரையெறிந்து முத்தஞ் சிதறி - கரையில் 110

கொழிக்குங் காவேரி குதித்தோடப் பாய்ந்து
சுழிக்குங் காவேரித் துறையான் - வெழிற்கருகி 111

யோங்கிப் பகலிருளை உண்டாக்கி மேகரும்பை
தாங்கிப் புயறடுத்த தண்டலையும் - தேங்கமலப் 112

பூமிசை யன்னம் பொருந்தி வலம்புரியும்
நேமியு மேந்திய நீள்கயமும் - காம 113

ருளமகிழ வெண்ணிலா வொண்கதிரைக் கன்னல்
வளமதனை ஈன்ற வயலும் - அளவின்றி 114

தன்னையே போலத் தழைப்பத் தரணிக்கோ
ரன்னையே போல வருள்செய்வான் - மன்னு 115

மருநறையூர் வீதி மணிமாடக் கோயில்
திருநறையூர் வாழ்வாசு தேவன் - இரணியனைப் 116

நம்பியின் சிறப்புரைத்தல்

பாரிலுரங் கிழித்த பன்னகத்தான் பன்னகத்தான்
வாரிநிகர் வண்ணத்தான் வண்ணத்தான் - ஆரிடத்தும் 117

தண்ணளியான் தண்ணளியான் தாழ்ந்தவசைக் கரத்தான்
கண்ணினழகார் முகத்தான் கார்முகத்தான் - விண்ணுலகில் 118

நல்லசுரர்க் கண்ணியான் நாறுதுழாய்க் கண்ணியான்
புல்லசுரர்க்குக் கொடியான் புட்கொடியான் - தொல்லிலங்கை 119

வஞ்சனை யங்கறுத்தான் வாய்ந்த வடிவங்கறுத்தான்
கஞ்சனை முன்சிவந்தான் கண்சிவந்தான் - துஞ்சுந் 120

திரையான் மலரிந்திரையான் கவிகை
வரையான் செழுந்துவரையான் - திரையார் 121

மங்கையான் வேதநியமங்கையான் சென்னியிலோர்
கங்கையான் சூடிய காற்கங்கையான் - பங்கயக்கை 122

ஆரணன் கேசவன் ஆழியான் அச்சுதன்
காரண னெம்பெருமான் காகுத்தன் - நாரணன் 123

யாதவன் கண்ண னிருடிகேசன் முகுந்தன்
மாதவன் கோவிந்தன் வைகுந்தன் - சீதரன் 124

மாயன் அனந்தன் மதுசூதனன் திருமால்
ஆயன் முராரி அருளாளன் - தூயகழல் 125

தேவாதிதேவன் திருநாயகத்தேவன்
றவாவிடர் கெடுத்த தம்பிரான் - ஓவாப் 126

படந்திகழு மாடரவப் பாய்க்கிடந்து மேலா
மிடந்திகழ் வைகுந்தத்திருந்து - நடந்து 127

பொறையூ ரடிக்கமலம் பூத்தோயவந்து
நறையூரி னின்றருளும் நம்பி - மறையூரு 128

நம்பி திருவிழாக் கோலங்கொண்டு மண்டபத்து அமர்தலும் வானவராதியோர் வந்து பணிதலும்

மாயிரம் பேழ்வாய் அனந்தன் பணாடவிமேல்
மாயிரு ஞாலம் மகிழ்ந்திறைஞ்ச - சேயிருந்தார் 129

அண்டர்குழாமும் அருந்தவரீட்டமும்
தொண்டர் குழாமுந் தொழுதேத்தப் - பண்டைத் 130

திருவாய்மொழியும் திருமொழியும் வேதாத்
துருவாய் மொழியுந் தழைப்ப - வருவாத 131

திங்களு நாளுந் திருவிழா நின்றோங்க
மங்கல வெண்சங்கம் வாய்பிளிற - வங்கமர்ந்து 132

நன்பஞ்சேர் நாடகக்கானம்பிக்கு நாயகிதன்
இன்பஞ்சேர் நாளிலினி தொருநாள்- அன்பமர்ந்து 133

தன்னிசையாற் புள்வேந்தன் சாமவேதம்பாடும்
இன்னிசையால் பள்ளியெழுந்தருளி - மன்னி 134

சிலம்பு திரைமோது திருமணி முத்தாற்றி
னலம்பு திருமஞ்சனமாடி - நலம்பரவு 135

சேலைகளைந்தணிந்து தெய்வ பசுந்துளப
மாலை புதியவகைசூடிக் - கோல 136

துயங்கு திருவாராதனைக் கொண்டபின்னர்
இயங்கு கடற்சங்கமிசைப்பப் - பெயர்ந்ததோர் 137

திருந்து மணிமண்டபத்துச் சிங்கஞ்சுமந்த
வருந்தவிசினேறியருளி - பொருந்தியநூல் 138

வேதமும்வேதாந்தமெய்த்த திருவாய்மொழியு
நாதமுங் கேட்டு நயந்துருகி - யோது 139

மருவை வடவரை அம்பொற்குவட்டிற்
றருணமவுலிதயங்க - திருநாம 140

மிட்டவதனத்தெழுதிய கத்தூரி
வட்டமதியின் மறுவேய்ப்பக் - கிட்டரிய 141

தேங்குழைக்கீழ்க் கற்பகத்தில் செம்பாம்பு சூழ்ந்ததென
பூங்குழைக்கீழ்வாகுபுரிதயங்க - வாங்கிற் 142

பதிக்குங் கவுத்துவமும் மார்பும் பருதி
உதிக்குமரகதக்குன்றொப்ப - குதித்தொருநாட் 143

கால்வீழ்ந்தகங்கை விலங்கிக்கடிமார்பின்
மேல்வீழ்ந்ததென்ன முந்நூல்விட்டிலங்க - சூல்வீங்கு 144

கொண்டலின்கீழ்தோன்று குடதிசையில்செக்கரென
விண்டிலங்கு பொன்னாடை மெய்யசைய - தொண்டரெல்லாம் 145

பற்றிக்கழல வடபாதாரவிந்தத்தின்
வெற்றிக்கழலின் வெயிலெறிப்பட - மற்றுந்தான் 146

வேண்டும்பலகலனுமேகவடிவிற்கேற்ப
பூண்டுகளபம்புயத்தணிந்து - நீண்டகடற் 147

பெண்ணாடியதன் பெரியதிருவடியைக்
கண்ணாடிமண்டிலத்தில் கண்சாத்தி - வண்ணத் 148

திருமருங்குக் கேற்பதொரு சிற்றுடைவாள்வீக்கி
யிருமருங்கும் ஐம்படையுமேந்தித் - திருமறுகில் 149

போதரலுநாற்கடல்சூழ் பூதலத்தும் வானத்தும்
மாதரரம்பையர்கள் வந்தீண்டிப் - பாதம் 150

தொழுவார்வளைகலைநாண் சோர்வார் மயலா
யழுவார்முலை பசலையாவார் - குழுவாகி 151

தலைவி தனது குறையுரைத்தல்

யம்மாதர் நிற்பயருவினையேன் கைதொழுதேன்
விம்மாவெதும்பாமெலிவானேன் - எம்மானுக் 152

கென்னெஞ்சுமென்கலையுமென்னாணுஞ் சங்குமவன்
தன்னெஞ்சறியத்தனிதோற்றேன் - பின்னுமொரு 153

விண்ணப்பமுண்டென்று மெய்ந்நடுங்கிக் கைகூப்பி
வண்ணத்துகிலொதுக்கி வாய்புதைத்துன் - கண்ணுதலாம் 154

வீரன்சிலையிறுத்தவேந்தே வினைவிளைக்கு
மாரன் சிலையிறுக்க வாராயோ - பாரமலை 155

யன்றெரித்தகையால் அழல்வீசியதென்றல்
குன்றெடுத்தபோது குறையாமோ - நின்றெரிக்கும் 156

செய்யகதிர்மறைத்த சீராழியால் மதியின்
வெய்யகதிர்மறைக்க வேண்டாவோ - கையசைக்கு 157

முன்னநீவாயடங்கு முந்நீரையென்பொருட்டால்
இன்னநீவாயடக்கிலேலாதோ - பன்னகத்தின் 158

பூமரமேழுந்துளைத்த போர்வாளிபுன்குயில்வாழ்
மாமரமொன்றுந்துளைக்கமாட்டாதோ - சேமலைந்து 159

மாவாய்பிளந்த மரகதமே வம்புரைப்பார்
நாவாய்பிளந்தால் நவையாமோ - பூவாய்த்த 160

தூயகுருந்தொசித்த தோளாய் செவிவெதுப்பு
மாயர்குழலொசித்தால் ஆகாதோ - மாயமாங் 161

காதிச்சுழல்காற்றைக்காய்ந்த நீவாடையா
வாதிச்சுழல்காற்றை மாற்றாயோ - மோதிவரு 162

மண்ணாறுநீங்கவழிகண்டநீயெனது
கண்ணாறுநீங்கவழிகாட்டாயோ - தண்ணார்ந்த 163

தாதுதிரும்பைந்துழாய் தாராயேல் கண்ணனென
வோதுதிருநாம மாசுண்ணாதோ - வீதிருக்க 164

நீநெடுமாலானநிலை நின்சேவடிதொழுது
நாணெடுமாலாகவோ நம்பியே - மாநிலத்து 165

பாவையர்கைச்சங்கம் பறிப்பதற்கு நின்சங்கம்
தீவகமோ நேமித்திருமாலே - மேவத் 166

திருக்கடைக்கண் சாத்தாய் திருவாய்மலராய்
யருட்கடலே என்னுமளவின் - மருக்கமலை 167

தலைவி தனது மையலுரைத்தல்

நாதன்சிறிதேநகைகோட்டி வெண்கோட்டு
மாதங்கமீதே மறைதலால் - சீதரன்தனா 168

வையம்புதைக்குமலர்கருதி மாரவேள்
எய்யம்புதைக்குமிலக்கானேன் - செய்யநிறப் 169

பீதகவாடைக்கும் பெரியதிருவரை
பாதகவாடைக்கும் பரிவானேன் - ஆதலால் 170

அந்திக்கமலனணையுங் கொலென்றிருந்தேன்
உந்திக்கமலத்துளமானேன் - கொந்துற்ற 171

கொய்துழாய்மார்பகலம்கூடுங் கொலோவெனவே
கைதுழாய்மண்சுழித்துக் கைசோர்ந்தேன் - எய்தி 172

யயனாலுங்காணவரியான்கரிய
புயனாலுங்காணாமல் பூண்டேன் - வியமாரன் 173

தாதைதிருப்பவளந்தான் வேட்டிளந்தென்றல்
ஊதைதிருப்பவளமொல்கினேன் - மாதுவரை 174

ஆயன்பவனிதொழுதன்றுமுதல் இன்றளவும்
தூயநயனந் துயினீங்கி - யாயொறுக்க 175

பந்துகழன்மறந்து பாவைகிளிதுறந்து
சந்துபனிநீர் தனத்தகற்றி - வெந்துயரால் 176

போதக்கழலணிந்து பூவிழிந்து நீரிழிந்து
காதற்சிறையிருத்தல் கண்டாயே - மாதுளபத் 177

தலைவி தூது செல்ல மேகத்திற்குத் துணிவு கூறல்

தாரானை வேட்கையெல்லாந் தந்தானை மும்மதமும்
வாரானை யன்றழைக்க வந்தானை - காரானை 178

மெய்யானை யன்பருக்குமெய்த்தானைகண்கைகால்
செய்யானை வேலையணைசெய்தானை - வையமெல்லாம் 179

பெற்றானைக்காணப் பெறாதானைக் கன்மழையில்
கற்றானைக்காத்த தொருகல்லானை - யற்றார்க்கு 180

வாய்ந்தானை செம்பவளவாயானை மாமடியப்
பாய்ந்தானை ஆடரவப்பாயானை - பூந்துவரை 181

மாமாலைக் கண்டந்திமாலைவருமுன்னமே
தேமாலைவாங்க நீசெல்லுங்கால் - பூமாயன் 182

முன்னந்தடுத்த முளரித்திருக்கரத்தால்
இன்னந்தடுக்குமென்றெண்ணாதே - நின்னுடைய 183

தீமுழக்கின் மிக்கதெனச் செங்கண்மால் கைச்சங்கின்
வாய்முழக்கங்கேட்டு மயங்காதே - நீமருவும் 184

வானச்சிலையின் வனப்புளதென்றெம்பெருமான்
கூனற்சிலைகண்டுகூசாதே - மேனிலத்து 185

மின்சோதியெல்லாம் விழுங்குமென்று நாந்தகத்தின்
நன்சோதிகண்டு மிகநாணாதே - நின்சோதி 186

மையழகினீலமணியழகிலெம்மான்றன்
மெய்யழகு நன்றென்றுவெள்காதே - துய்யமணி 187

தலைவி தன்செய்தி கூற உபாயமுரைத்தல்

யாரக் கபாட மணிக்கோயில் வாசலெல்லா
சேரக் கடந்து திருமுன்போய் - தூரத்தில் 188

நின்றுவணங்கி நெடிதேத்தி வாய்புதைத்து
சென்று பெருமான்திருச் செவியில் - துன்றுகடல் 189

தையற்கரசே யுன்னார்வேட்டொருபேதை
மையற்கரைசேருமாறறியாள் - மெய்யுருகி 190

கொம்பனையாளோர் விரகங்கொண்டாளதுதன்னை
யெம்பெருமான் கேட்டருளாயேதென்னில் - அம்பரமும் 191

மட்புலனுமுண்டுமிழ்ந்த மாயோனுருவமல்லால்
கட்புலனும் வேறுருவும் காணற்க - புட்புளத்து 192

மூர்த்திபுகழேமுகப்பதல்லான் மற்றொருவர்
கீர்த்திசெவிமடுத்துக் கேளற்க - நீர்த்தரங்கப் 193

பூவெடுத்த வெண்கோட்டுப்புண்ணியனையல்லாதென்
நாவெடுத்துவேறு நவிலற்க - கோவெடுத்து 194

கங்கையுலவும்கழலினாற் கல்லாதென்
செங்கைத்தலைமிசை போய்ச்சேரற்க - பங்கயத்தாள் 195

தாங்குந் திருத்துழாய்தாம மணமல்லாதென்
மூக்கும் பிறிதுமணமோவற்க - மாக்கடல்போல் 196

அஞ்சனவண்ணனடிக்கமலமல்லாதென்
நெஞ்சமுமொன்றை நினையற்க - செஞ்சுணங்கோ 197

டிங்கெழுந்த கொங்கையெழுபிறப்பு மெம்பெருமான்
கொங்கணைந்த தோளல்லால் கூடற்க - மங்கைநல்லீர் 198

என்று வருந்தியிருந்தாளவளுக்குன்
மன்றல்கமழ்தார் வழங்கென்று - நின்றிரந்து 199

மாலைபெற்று வாவென்றல்

பண்டுளவத்தாமரையாள் பற்றுந்திருமார்பின்
வண்டுளவத்தார் வாங்கிவா. 200

அழகியமணவாளர் அடியிணை வாழ்க

மேகவிடுதூது முற்றிற்று




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247