கோயமுத்தூர் கந்தசாமி முதலியார்

இயற்றிய

திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது

காப்பு

வெண்பா

பிள்ளை மதிமுடியெம் பேரூர்ப் பெருமான்மேற்
கிள்ளை விடுதூது கிளத்தவே - ஒள்ளீயபூங்
காவிரியக் கும்பமுனி கைக்கரகநீர் கவிழ்த்துக்
காவிரியைத் தந்தவன்றாள் காப்பு.

நூல்

கலிவெண்பா

மாமேவு செங்கமல மாதரசும் வெண்கமலப்
பூமேவு பாமகளாம் பூவையரும் - மாமதுர 1

வாக்கியத் தாற்போற்றி மலர்க்கரங்கள் தாஞ்செய்த
பாக்கியத் தானாய பயனெய்தப் - பூக்கொய்து 2

தூவச் சிவந்துபரஞ் சோதிதிரு மேனியொடு
மேவச் சிவந்தசத்தி மெய்யொளிபோற் - பாவலர்கள் 3

மெச்சி உவமைபகர் மேனியெல்லாம் அழகாய்ப்
பச்சைப் பசுத்தசெழும் பைங்கிளியே - இச்சையாற் 4

சத்திகொடு சமைத்த தம்பிரான் மேனிநிறம்
ஒத்திலகுஞ் செவ்வா யொளிர் குருகே - நித்தநித்தம் 5

அத்தனவன் எவ்வுயிரும் ஆட்டுவான் அம்பலத்திற்
றத்தெயென ஆடுமெனுந் தத்தையே - மித்தைப்ர 6

பஞ்சமென்று முக்கட் பசுபதியின் பாதமொன்றே
அஞ்சுகமென் றேமொழியும் அஞ்சுகமே - மிஞ்சுசுரர் 7

கண்ணைப் பிசைந்து கலங்காமல் முன்னமிந்த
மண்ணையுண்டோன் மேனி வருந்தாமல் - விண்ணவர்கள் 8

வாடி மயங்காமல் மங்கலியப்பிச்சையென்று
தேடிமலர்மாதர் தியங்காமல் - நீடுருவ 9

வாசுகியும் பாற்கடலும் மந்தரமும் தங்களுக்கு
நாசமுற்ற தென்று நடுங்காமல் - பேசரிய 10

ஆற்றல் படைத்த அரக்கரையும் அங்கவர்பால்
சீற்றம் மிகவுடைய தேவரையும் - வேற்றறவே 11

சேர்த்தியிட வந்துதித்த தேவாமிர்தம்போல
வார்த்தை சொலவல்ல மரகதமே - கூர்த்தவிழித் 12

தோழியரை நோக்கியென்றுந் தோற்றமொடுக்கமிலா
வூழி முதல்வனாம் ஒருத்தன்முன் - கீழாகச் 13

செத்துப் பிறந்துழலும் தேவரையும் மூலமென்று
சித்திரமே பேசுதலைச் சீர்தூக்கி - உய்த்துணர்ந்து 14

தக்கதனைத் தேராது தர்க்கமிடுவோர் மதிபார்
அக்கக்கா வென்னு மவந்திகையே - பொற்கனகப் 15

பஞ்சரத்தில் வாழும் பசுங்குதலாய் நின்றனக்குக்
கிஞ்சுகமென்னும் பெயருங் கேட்டிலார் - நெஞ்சின் 16

மகிழ்ந்து மலைமாது மருங்கில் நினைவைத்துப்
புகழ்ந்துமொழி கேட்கின்ற பொற்பு - நெகிழ்ந்தமலர் 17

ஐங்கோலான் நின்னுடைய ஆதரவு வாய்த்தமையால்
செங்கோல் நடாத்துந் திறமுமுனம் - எங்கோனை 18

ஆதரவால் அர்ச்சித்து அதனால் சுகவனத்து
நாதரெனப் பூதலஞ்சொல் நன்னலமே - ஆதியவாம் 19

வல்லமையும் ஓரார்நின் வார்த்தையினால் யாவர்மனக்
கல்லுங் கரையும் கருத்தறியார் - வெல்லரிய 20

விக்கிரமா தித்தனெனும் வேந்தனையோர் தட்டான்செய்
அக்கிரமந் தீர்த்த தறிகிலார் - துக்கந் 21

தணவுதவ யோகியர்கள் தம்மைப் போல்நிற்கிங்
குணவு கனிகாய்தளிரென் றுன்னார் - மணவணிகள் 22

ஏயுமுனைப் பைங்கிளியே யென்றுபல கண்ணிசொன்ன
தாயுமா னார்தந் தமிழுணரார் - நேயத் 23

திருப்புகழ்ப்பா வாணருன்போற் சென்றடைந்து சோணப்
பொருப்புறு தல்கேட்டும் பொருந்தார் - விருப்பில் 24

சுகருந்தன் தொல்குலத்தில் தோன்றியதால்ஞானா
திகரான வண்ணந் தெளியார் - பகருமறை 25

வாதவூ ராளிதிரு வாசகத்தே பத்தங்கம்
ஓதவுனைச் சொன்ன துணர்கிலார் - தூதுவிட்டோர் 26

தங்காரிய மெல்லாந் தப்பாதுட்கொண் டதையுன்
றன்காரியமாய்த் தலைக்கொண்டு - முன்குறிப்பிற் 27

காலமிடமறிந்து காரியத்தை முற்றுவித்துக்
கோலமுடன் எய்துங் குறிப்பறியார் - போலிகளாம் 28

வெள்ளைமதி யோரறிவின் மிக்கவுனைத் தங்கள்சிறு
பிள்ளைமதி கொண்டுகிளிப் பிள்ளையென்பர் - கிள்ளையே 29

வீரர்களின் மேலான வீரரெனத் தேவர்புகழ்
சூரர்களை மாளத் தொலைத்தானைச் - சீரரவம் 30

பூண்டானுக்குங் குருவைப் பொற்கொடியா ரோரிருவர்க்
காண்டகையாய் மாலையிட்ட ஆண்பிளையை - வேண்டுகின்ற 31

கோலமெலாங் கொள்ளுங் குறிஞ்சிக் கிழவனையோர்
பாலனென ஓதுகின்ற பண்புகாண் - பாலின் 32

சுவையைப் பழித்துமொழி சொல்லுதலால் நின்னைச்
சுவையுடைய கீரமெனச் சொல்வர் - அவையகத்துத் 33

தூது சுகமாகச் சொல்லுதலினாற் சுகமென்
றோது முலகம் உனைவியந்து - தீதறியாப் 34

பிள்ளை மழலையும் பெண்க ளின்மொழியுங்
கிள்ளை மொழியாமென்று கேட்டிடுவர் - வள்ளுவனார் 35

குழலினிது யாழினி தென்பர்தம் மக்கள்
மழலைச் சொற்கேளா தவரென் - றழகுபெறச் 36

சொன்னதுவும் நின்சொற் சுவையறிந்தே யல்லவோ
உன்னைவிடத் தூதுக் குரியார்யார் - தன்னேரில் 37

அன்பை யுடையாய் அறிவுடையாய் ஆய்ந்திடுஞ்சொல்
வன்மை உடையாய் மகிதலத்தில் - இன்னபுகழ் 38

எய்தி உயர்வாம் இளங்கிளியே எந்தனது
செய்திசில எடுத்துச் செப்பக்கேள் - வையத்துள் 39

வீசுபுகழ்சேர் வியன்பதியென் றிவ்வுலகம்
பேசு கருவூரிற் பிறந்தென்யான் - மூசுதிறை 40

வெள்ளப் புனன்மே வியசீர்க் கங்காகுலத்தில்
பிள்ளையென வந்துபிறந் தேன்யான் - வள்ளல்பேர் 41

பூணுலக நாதன் பொருந்தவரும் பார்ப்பதிபாற்
பேணு மகவாகப் பிறந்தேன்யான். - பூணற் 42

கரிய புகழ்சேர் அரங்கசாமிக்குப்
பிரிய மருகராய்ப் பிறந்தேன்யான் - உரியபல 43

சீரிட்ட நாளினலஞ் சேர்கந்த சாமியென்று
பேரிட் டழைக்கப் பிறந்தேன்யான் - வாரிட்ட 44

நற்றொட்டி லேற்றி நலம்பலபா ராட்டியெனைப்
பெற்றவர்கள் போற்றப் பிறந்தேன்யான் - உற்ற 45

களங்க முளவெல்லாங் காசினியிற் றோன்றி
வளர்வதே போல வளர்ந்தேன் - இளமையிலே 46

தந்தை யிறந்தொழியத் தாயர்பிறந் தகத்தில்
வந்துவளர்க்க வளர்ந்தேன்யான் - செந்தமிழும் 47

அல்லாமல் இந்நாள் அரசுபுரி ஆங்கிலியர்
சொல்லதுவுங் கற்கத் தொடங்கினேன் - கல்லூரிக் 48

கோர்பெயராம் பள்ளிக் குயர்வில் சிறுசாதிப்
பேர்கா ரணமாய்ப் பெறும்வண்ணம் - சேருமொரு 49

பள்ளியிடைப் புக்கந்தப் பள்ளிச் சிறார்களுடன்
உள்ளிருந்து பாடங்க ள்:ஓதினேன் - எள்ளுமந்த 50

அன்னியபா டைக்கிணங்க அன்னியமார்க் கச்சிறப்பும்
அன்னியர்பாற் கற்றே அமர்ந்தேன்யான் - அன்னோர் 51

மருட்டு வழியான் மதிமயங்கி அந்தக்
குருட்டுவழி யென்னுளத்துட் கொண்டேன் - இருட்டின்கண் 52

கண்ட கயிரரவாய்க் காணுதல் போலாங் கவர்கள்
விண்ட பொருள்யாவும் மெய்யாயுட் - கொண்டதனாற் 53

றெய்வச் சிறப்புஞ் சிவனடியார்தஞ் சிறப்பும்
சைவச் சிறப்புந் தரிக்கிலேன் - பொய்யார் 54

புலைத்திரளின் சேர்க்கையாற் புத்தி வரத்தக்க
கலைத்திரளை யேதொன்றுங் கல்லேன் - கொலைசேர் 55

விவிலிய நூற்கொள்கை மிகுத்தலா லான்றோர்
நவிலிய னூலொன்றும் நவிலேன் - அவமாகக் 56

காலங் கழித்தேன் கழித்தேன் குலவொழுக்கஞ்
சீலங் கழித்தே திரிதந்தேன் - ஞாலமுடன் 57

காசு பணத்திற்கும் கண்மயக்கும் வேசைகட்கும்
ஏசுமதத்திற்கும் இச்சை வைத்தேன் - சீசீயென 58

நல்லாரைக் கண்டால் நடுங்குவேன் நல்லார்க
ளல்லாரைக் கண்டால் அகங்களிப்பேன் - பொல்லாத 59

துன்மார்க்க மென்றாற் சுகித்திடுவேன் சுத்தசைவ
சன்மார்க்க மென்றாற் சலித்திடுவேன் - என்மார்க்கங் 60

குற்ற முளதேனும் குலத்தில் அபிமானத்தான்
முற்றத் துறந்து முடிந்ததிலைச் - சிற்றறிவால் 61

ஏசுமதம் பெரிதென் றிச்சைவைத்தேன் ஆனாலும்
தேசுவிடுத்து அதிலே சேர்ந்ததிலைப் - பேசிடுதல் 62

எல்லாமதன் முடிவே என்றாலும் தீயேனப்
பொல்லச் சமயம் புகுதவிலைக் - கொல்லும் 63

புலியானது பசுத்தோல் போர்த்த விதமென்னப்
பொலிவார் திருநீறும் பூண்பேன் - குலவொழுக்கம் 64

இல்லாத பெண்டிர் இருமனம்போல் என்னகமும்
அல்லாப் புறமும் வேறா யிருந்தேன் - வல்லார் 65

சிலையி லெழுத்தாய்ச் சிறுவயதிற் கல்வி
நிலையுறுதல் பொய்யோ நிலத்தின் - மலதேகப் 66

பன்றி மலமருந்தப் பார்த்திருந்த நல்லாவின்
கன்றும் மலமருந்தக் காணாமோ - துன்றும் 67

பழக்கத்தி னாலே பலிக்கும் உலக
வழக்கத்தை யார் தடுக்க வல்லார் - சழக்கார் 68

மனக்கிசைந்த வாறெல்லாம் செய்யென்னும் வார்த்தை
எனக்கிசைந்த நூலா யிராதோ - இனக்கேடாய்ச் 69

சின்னஞ் சிறுவயதிற் சிற்றினத்தைச் சேர்ந்ததனால்
அன்னார் தமதுருவ மாயினேன் - முன்னாளில் 70

என்னதவஞ்செய்தேனோ ஏதுநலனோ அறியேன்
பின்னர்வரச் சென்றடுத்தேன் பேரூரைச் - என்னொடொரு 71

மித்துவரும் வீணாதி வீணரொடும் பேய்மோகப்
பித்தரொடும் சென்றடுத்தேன் பேரூரை - சித்தத் 72

தரியபொருள் பேணாமே ஆயிழையார்ப் பேணும்
பிரியமுடன் சென்றடுத்தேன் பேரூரைக் - கூறரிய 74

பன்னாள் அவமாகப் பாழுக்கிறைத்தல்விட்டுப்
பின்னாளிற் சேர்ந்தேன்யான் பேரூரை - அந்நாள் 75

திருநாளாய் எங்கோன் தெருவிற் பவனி
வருநாளாய் நேர்ந்த வகையால் - அருவுருவச் 76

சோதியான் தோன்றாச் சுயம்புவான் செஞ்சடையிற்
பாதிமதி சூடும் பரமனவன் - மாதினையோர் 77

கூறுடையான் எட்டுக் குணமுடையான் பால்வெள்ளை
நீறுடையான் கையில் நெருப்புடையான் - ஆறுடைய 78

சென்னியான் ஆறுடைய சென்னியான் றன்னை
முன்ன மளித்த முதல்வன் - பன்னகத்தின் 79

பூணுடையா னோரிந்தப் பூமிமுழுதுஞ் சுமந்த
நாணுடையான் முப்புரிசேர் நாணுடையான் - காணுமவர்க் 80

கஞ்சக் கரத்தான் அருள்பெறுவோர் உச்சரிக்கும்
அஞ்சக் கரத்தான் அரியகருப் - பஞ்சிலையால் 81

ஐயம்பெய்யுங் கரத்தான் அங்கமழ லூட்டினான்
ஐயம் பெய்யுங் கரத்த னாதியான் - பொய்பாத 82

கக்கிரியை ஓர்விலாக் கண்டகர் சாகக்கன
கக்கிரியை யோர்விலாக் கைக்கொண்டான் - மிக்கடியோ 83

முக்கண்ணா நல்லமிர்தம் ஒப்பாவான் முச்சுடரும்
முக்கண்ணாய் வாழு முகமுடையான் - தக்கார் 84

மறந்தும் பிறவி வரநினையான் தானும்
மறந்தும் பிறவியிடை வாரான் - துறந்தோர் 85

தவந்திரண்ட தென்னத் தவளநிறம் வாய்ந்து
நிவந்துலக மூடுருவி நின்று - நவந்தரும்பல் 86

விம்மிதங்க ளோங்கி விமலமாய் வேதத்தின்
சம்மதமாம் வெள்ளித் தடவரையும் - தம்மதருட் 87

சத்தியுறையுந் தடங்கிரியும் சங்கேந்தும்
புத்தே ளயன்வாழ் பொருப்பிரண்டு - நத்திக் 88

கருத மலவில்லாமற் கந்தனருள் செய்யும்
மருத மலையென்னும் மலையும் - ஒருபடித்தாய்ப் 89

பஞ்சப் பிரமமே பஞ்சவரை யானதென
மஞ்சடரும் பஞ்ச வரையுடையான் - எஞ்சாது 90

நீர்த்தரங்கத் தாலே நெருங்கும் அகன்கரையைப்
பேர்த்தெறிந்து வெள்ளப் பெருக்காகி - ஆர்த்தெழுந்தே 91

அந்நாட் பகீரதற்கா ஆங்கிழிந்த கங்கையைப்போல்
இந்நாட் பலவுலக மீடேறப் - பொன்னார் 92

பொலிந்த ரசிதப் பொருப்பி லுலாவி
மலிந்த பொருள்பற் பலவும் வாரிக் - கலந்து 93

தொடும்பொருளை யெல்லாம் சுவர்ன மயமாக்கி
விடும்பரிசாற் காரணப்பேர் மேவிக் - கடும்பவநோய் 94

யாவும் அகற்றி அறம்பொருளின் பாக்கியலை
வாவிவருங் காஞ்சி மாநதியான் - மேவுபுகழ் 95

ஏட்டில் அடங்காமல் எவ்வுலகுந் தன்மணமே
நாட்டுவிக்கும் கொங்குவள நாட்டினான் - போட்டிவிளைத் 96

தூரூரெல் லாஞ்சின்ன வூராய்ப் புறங்கொடுக்கப்
பேரூரெனத் திகழ்பே ரூரினான் - ஆரூரர் 97

பாமாலைசூடும் பணைத்தோளில் என்றன்புன்
பாமலை சூட்டப் பணித்ததுபோற் - பூமாலை 98

நேசமாய் மாசகன்ற நின்மலமாய்ப் பொன்மயமாய்
வாசமார் கொன்றைமலர் மாலையான் - வாசிக் 99

கடும்பரியி லேறுவோ ரல்லாதார் காணப்
படும்பரி சொன்றில்லாப் பரியான் - இடும்பச் 100

சிலையின் பொருட்டு வெள்ளைச் சிந்துரமும் நல்குங்
கொலைவல்ல கம்பமத குஞ்சரத்தான் - அலையாமல் 101

ஈண்டும் அடியவர்கட் கெய்தும்பே ரின்பமென
மூண்டு முழங்கும் முரசத்தான் - ஆண்டவன்றன் 102

சேவேறு சேவடியை அல்லதில்லை யென்றசையும்
கோவேறு கொற்றக் கொடியினான் - பூவேறும் 103

அந்தணனும் நாரணனும் அண்டபகி ரண்டமொடு
வந்தடங்கும் ஆணி வலியுடையன் - மைந்தர்களாம் 104

பட்டிவி நாயகனும் பன்னிருகைப் பண்ணவனும்
கிட்டி யருகே கிளர்ந்துவரத் - தொட்டரனார் 105

உண்டபரிகலமும் ஒண்மலரும் பெற்ற எங்கள்
சண்டிப் பெருமானும் சார்ந்துவர - மண்டியபேர் 106

அன்பாற் றமிழ்பாடும் அப்பருடன் சம்பந்தர்
வன்பால் அடிமை கொண்ட வன்றொண்டர் - தென்பார் 107

விளங்கவரும் வாதவூர் வேந்த ரிவரெல்லாம்
துளங்காது பக்கலிலே சூழ - உளந்தனிலே 108

இச்சையறிந் துலக மெல்லாம் படியளக்கும்
பச்சைவல்லித் தாயாரும் பாங்கர்வர - அச்சுதனோ 109

டிந்திரனே யாதி இமையோர்குழாந் திரண்டே
அந்தரத்தின் கண்ணே அலர்தூவத் - துந்துமியே 110

யாதிமுழவம் அதிர முழங்கியெழ
வீதி நிரம்ப விருதடையக் - கோதில் 111

குணவடியா ரெல்லாங் குழாங்கொண்டு கூடிப்
பணிவிடைகள் வேண்டியவா பண்ண - அணிகிளரும் 112

வேதமொரு பாலும் விமலத் தமிழ்வேத
நாதமொரு பாலும் நவின்றிலங்கச் - சீதப் 113

பனிவெண் மதியங்கள் பார்க்கவந்த தென்னக்
கனிவெண் குடைகள் கவிப்ப - நனிவிரைந்து 114

கங்கைத் திரளும் வந்த காட்சியென மேலோங்கித்
துங்கக் கவரிபுடை துள்ளவே - எங்குமாம் 115

மூவர்பெருமான் முடியாமுதற் பெருமான்
தேவர் பெருமான் சிவபெருமான் - காவலராஞ் 116

சிட்டிப்பெருமான் திதிப்பெருமான் காண்பரிய
பட்டிப்பெருமான் பவனி வந்தான் - சிட்டரெலாம் 117

ஆடுவார் தித்தித் தமுதமெனக் கானவிசை
பாடுவார் நின்று பரவுவார் - நாடுவார் 118

கண்ணே கருத்தே கதியே வான்கற்பகமே
எண்ணே எழுத்தே எனத்துதிப்பார் - நண்ணாப் 119

பதிதரெனினும் பவனி பார்க்கக் கிடைத்தாற்
கதிதருங் காணென்றே களிப்பார் - துதிசெய்யும் 120

விண்ணோரும் மண்ணோரும் வேட்ட துனதுகடைக்
கண்ணே அளித்தருளும் காண்என்பார் - விண்ணவர்க்காய்க் 121

கல்லைக் குழைவித்த கண்ணுதலே யெம்மனமாங்
கல்லைக் குழைத்தல் கடனென்பார் - அல்லைப் 122

பொருவு மிடற்றிலெங்கள் புன்மலமுஞ் சேர்த்தால்
இருமைக் கருப்பாகு மென்பார் - திருநுதலில் 123

தீவைத்த தெங்கள்பெருந் தீவினையெல் லாமொருங்கே
வேவித்தற் கேயோ விளம்பென்பார் - சேவித்தோர் 124

தங்கள்மலம் போக்கவோ தண்புனலைச் சென்னிவைத்தாய்
திங்களையும் வைத்ததென்ன சேர்த்தென்பார் - எங்கள்பொருட் 125

டாயோர் நரவுருவு மானாய்க்கு வெங்கொடிய
பேயோடு மாடலென்ன பெற்றி யென்பார். - தீயபவக் 126

காடெறியவோ கணிச்சியினைக் கைக்கொண்டாய்
மாடாயொரு மானேன் வைத்த தென்பார் - பீடரு 127

யோகத் திருந்தும் உமையாளைச் செம்பாதி
பாகத்தில் வைத்ததென்ன பற்றி யென்பார் - ஆகத்தில் 128

கந்தபொடி பூசக் கருதாமல் வெண்ணிறமாய்
வெந்தபொடி பூசலென்ன விந்தை யென்பார் - இந்தவகை 129

தத்தமனக் கிசைந்த சாற்றித் தொழுதுநிற்ப
எத்தனையோ பேர்சூழ்ந் திரங்கி நிற்பப் - பித்தனேன் 130

கொஞ்சமு முள்ளத்திலன்பு கொண்டதிலைக் கல்லான
நெஞ்சமுருக நைந்து நின்றதிலைத் - தஞ்சமெனக் 131

கண்ணருவி பாயவிலை கைதலைமேற் கொள்ளவிலை
மண்ணதனில் வீழ்ந்து வணங்கவிலைத் - துண்ணெனவென் 132

ஆகம்புளகம் அரும்பவிலை இவ்விழவின்
மோகம் ஒருசற்றும் முயங்கவிலை - வேகப் 133

பறவைவிலங் கோட்டிப் பயமுறுத்த நாட்டி
நிறுவுமொரு புல்லுருவை நேர்ந்தேன் - வெறுமையேன் 134

ஆனாலும் அந்நா ளடியரடிப் பொடியென்
மேல்நான்செய் புண்ய விசேடத்தாற் - றானாகப் 135

பட்டங்கிரசம் பரிசனவே திப்பரிசப்
பட்டதனாற் பொன்னாம் பரிசேபோல் - விட்டகன்றும் 136

குற்றியென நிற்குங் குறிபார்த் தெனக்கருளும்
பெற்றி நினைந்து பெருங்கருணை - உற்ற கரு 137

ணாகரனேயென் பொருட்டோ ராசிரியனாய்ச் சந்த்ர
சேகர னென்றோர் திருப்பேர் சேர்த்தியே - சாகரஞ்சூழ் 138

இவ்வுலகி லுள்ளமத மெத்ததனையோ அத்தனைக்கும்
பௌவமெனும் வேதப் பயோததியைத் - திவ்யாக 139

மத்தின்வழியே மதித்தநவ நீதசைவ
சித்தாந்த மெய்யுணர்த்துந் தேசிகனாய்க் - கத்துகின்ற 140

கற்பனா மார்க்கமெனுங் கட்செவிக்கு வல்லிடிபோற்
சொற்பிர யோகஞ்செய் சுகோதயனாய்ப் - பொற்பார் 141

மதமாவை மாக்கள் வசமாக்க மற்றோர்
மதமாவைக் கொண்டே மடக்கும் - விதமவனென் 142

போலோர் மனிதவுருப் பூண்டுஞ் சிவசின்னத்
தாலே பிரானாந் தகைவிளங்க - ஆலடியில் 143

அன்றமர்ந்த வாபோல் அரசமரத் தருகே
நின்றெளியேன் காணநேர் நின்றருளி - என்றன்னை 144

அன்பொட ழைத்தங் கருகிருத்திப் பற்பலவா
முன்பழமை பேசி முடித்ததற்பின் - என்பேரில் 145

வைத்த பெருத்ததயா வால்என்முக நோக்கி
வித்தகனே யெங்கோன் விழவிலுன் - மத்தனென 146

நின்றாய் என்னேயுன்றன் நெஞ்சமிரும்போ கல்லோ
ஒன்றாலும் உருகா ஒருபொருளோ - சென்றோடிப் 147

பார்க்குங்கண் ணோவியன்செய் பாவையின்கண் ணோவோசை
சேர்க்குஞ்செவி யிரும்பிற் செய்செவியோ - பார்க்குங்கால் 148

நல்லகுடிப் பிறந்தாய் நாடிளமை யோடழகும்
புல்லும் வடிவம் பொருந்தினாய் - கல்லுங் 149

கரையும் எம்மான் செல்பவனி கண்டுங்கரையா
துறையும் பெருமமதை யுற்றாய் - முறையே 150

வழிவழியாய்ச் சைவத்து வந்தமைக்குன்முன்னோர்
மொழிபெயரே சான்றுமொழிய - வழுவிநீ 151

பேயின்கோட் பட்டாயோ பேதைமையோ வேற்றவர்தம்
வாயின் கோட்புற்ற வகைதானோ - ஆயவிதஞ் 152

சொல்லென்றான் காட்டினில்வாழ் துட்டவிலங்கனையேன்
சொல்லன்று சொல்லத் தொடங்கினேன் - கல்லாத 153

மாந்தரென என்னை மதித்தனரோ இந்தப்பார்
வேந்தரெனைக் கொண்டாடி மெச்சிடுங்காற் - போந்தெனைநீர் 154

கல்லுக்கும் மண்ணுக்கும் காசடிக்கும் செம்புக்கும்
மெல்ல வணங்க விலையென்று - சொல்லுதல்தான் 155

அன்னத்தைப் பார்த்தொருகொக் கானதுவான் மேற்பொய்கை
யின்னத்தை மீனாதி யில்லையெனச் - சொன்னத்தை 156

யொப்பாகும் நீவிர் உயர்ச்சியெனுஞ் சைவமோ
தப்பாகும் ஏசுச் சமயமொன்றே - இப்பாரை 157

நீதி மிகவோதி நிலைநிறுத்த லாலதுவே
ஆதி யெனலாமென் றறைந்தேன்யான் - ஓதியவை 158

கேட்டும் பொறுத்துக் கிருபையாய் என்மீது
மீட்டும் அருட்கடைக்கண் வீட்சணியம் - நாட்டி 159

அழகழகுன் செய்கை அழகழகுன் கல்வி
அழகழகுன் சொற்பிறந்த ஆற்றல் - அழகாருஞ் 160

சைவத்தைப் போலாஞ் சமயமொன்றும் சங்கரனாந்
தெய்வத்தைப் போலான தெய்வமொன்றும் - வையத்தில் 161

ஆதித்தன் போலா யனைத்திருளை யுந்துறக்கும்
சோதித் தனியாஞ் சுடரொன்றும் - பூதலம்போல் 162

ஏற்றுநாஞ் செய்கின்ற எப்பிழையையும் பொறுத்துப்
போற்றியுண வளிக்கப் பூமியொன்றும் - பாற்றுளிபோற் 163

சூற்கொண் டுலகிற்குத் தோற்றுந் துணையாக
மேற்கொண்டு பெய்தளிக்க மேகமொன்றும் - ஏற்கெனவே 164

யில்லை யில்லை யில்லை யெனவே பறையறைந்து
தொல்லைமறை யாவுந் துணிந்துரைக்கும் - தொல்லுயிர்கட் 165

கொன்றுந் தகைய விதிவிலக்கை யோதுவித்தே
என்றுந் திரியாஇயல்பினதாய் - அன்றாலின் 166

கீழிருந்தி யோகியர்கள் கேட்க வுணர்த்தியதாய்
ஊழிதொறும் நிற்கும் உறவினதாய் - ஆழியின்கண் 167

ஆறனைத்தும் சென்றுபுகு மாறுபல சமயப்
பேறனைத்தும் வந்தொடுங்கும் பெற்றியதாய்க் - கூறுமுயிர்ப் 168

பக்குவத்திற் கேற்பவருள் பாலிக்க வல்லதாய்
மிக்குயர் சோபாந விதானமுடன் - ஒக்கவே 169

எல்லா இலக்கணமும் எல்லா மகத்துவமும்
எல்லா நலமும் இயைந்துளதாய்க் - கொல்லா 170

விரத முடையதாய் வேதாந்த மோன
சரதமெனு மோலி தரித்தே - கரதலத்தில் 171

ஆமலகம் போல வருட்சத்திப் பேறளித்துக்
காமக் குரோதங் களைவதாய் - நேம 172

நிலையுள்ளதாய் முன்பின் நேர்ந்த மலைவற்ற
கலையுள்ளதாய் ஞானக் கண்ணாய் - மலையே 173

இலக்காய் அடைந்தோர்கட் கெய்தற் குரித்தாய்க்
கலக்காத இன்பக் கலப்பாய் - மலக்கன்மம் 174

வீட்டித் திரும்பவரா வீட்டில் அருளின்முழுக்
காட்டுவிக்கத் தக்க அருமருந்தாய் - நாட்டிலே 175

சாது சமயமொன்றாய்த் தான்சமைந்தாலும் சமையா
தீதப்பயம் பொருளைச் சேர்த்துவதாய் - ஓதும் 176

பதிநிலையும் பாசநிலையும் பசுக்க
ளதுநிலையுந் தப்பா தறைந்தே - எதுநலமும் 177

ஓங்கி உயர்வெல்லாம் உடைய சமயஞ்சைவம்
ஆங்கதனில் நீவந் தவதரித்தும் - ஈங்கதனை 178

உள்ளபடியே உணராது சான்றோரால்
தள்ளப்படும் புன்சமயமாய் - எள்ளுங் 179

கொலைசெய்யக் கற்றுக் கொடுப்பதாய் முன்பின்
மலவாய் மொழிவிகற்ப மார்க்கம் - நிலையுளதாய் 180

இவ்வுலகில் வாழ்வோ ரிடர்ப்பட் டமைத்ததாய்த்
தெவ்வர்களால் வேறுபடச் செய்ததாய் - ஒவ்வாத 181

சீவபர தத்துவங்கள் செப்புவதாய்ப் புண்ணியமும்
பாவமும் அவ்வாறே பகருவதாய் - யாவரையும் 182

சண்டைக் காளாக்கித் தளஞ்சேர்க்க வல்லதாய்த்
தண்டெடுப்போர் யாவர்க்குந் தாயகமாய் - உண்டுடுத்தீண் 183

டெய்துஞ் சுகமே பேரினபமெனத் தேற்றியருள்
எய்துதற்கு முற்றும் எதிர்மறையாய் - வெய்தாக 184

மாசு திரண்டோ ருருவாய் வந்ததென வந்துதித்த
ஏசுமதமோ மனத்தில் எண்ணினாய் - காசினியில் 185

வீட்டிற் பெரிய விளக்கிருக்க மின்மினியைக்
காட்டிற் போய்த் தேடுங் கயவரையும் - ஈட்டியசெம் 186

பொன்னை மடுவுட் புகப்பெய் தரிப்பரித்துப்
பின்னைப் பொருளீட்டும் பித்தரையும் - பன்னுசெழுந் 187

தேனிருக்க உண்ணாமற் செந்தாமரை படர்ந்த
கானிருந் துலாவுமண் டூகத்தினையும் - மானிடர்கள் 188

உண்ணத் தகும்பல் லுணவிருக்க வீதியிலே
மண்ணுண்ணும் புத்தியற்ற மைந்தரையும் - நுண்ணுணர்வான் 189

நூல்நிரம்பக் கற்றெங்கோன் றாள் பரவாமல்
மானிடரைப் பாடும் பாவாணரையும் - மேனி 190

கருமையாய் ஊற்றைக் கலக்கி நீருண்ணா
எருமையையும் ஒத்தாய்நீ என்றான் - உருவமொன்றும் 191

இல்லான் குணமொன்றும் இல்லான் குறியொன்றும்
இல்லான் இறையென்றே எம்மனோர் - சொல்லிப்பின் 192

மாறுபடக் கோலம் வகுப்பாரேல் மற்றதற்கு
வேறு குறிப்பிருகவேண்டாமோ - கூறுமவர் 193

சொல்லும் பொருளுணராத் தோடத்தால் மூர்த்திகளைக்
கல்லொடு செம்பொன்றிகழக் கற்றனையால் - நல்லதுபின் 194

நீயுரைத்த ஏசுமத நீணிலத்தில் உற்பத்தி
யாயவிதஞ் சற்றே அறையக்கேள் - ஆயிரத்தை 195

நான்மடங்கு செய்யாண்டின் நாளிலிந்தப் பூமிமிசை
மேன்முடங்கு நாட்டு மிலேச்சர்பலர் - கூன்முடங்கும் 196

வெய்ய நிருவாண விலங்கொத் துழிதருங்கால்
தெய்வ உணர்ச்சி சிறிதுதிப்ப - நொய்தாகும் 197

ஏகோவா வென்றங் கியம்பு துட்டதேவதையை
ஏகோபித் தேத்தும் இயல்புற்றார். - ஏகோவாக் 198

கோபத்துக் காயாட்டைக் கொன்று மாட்டைக் கொன்றுந்
தீபமெடுத் துதிரத்தைத் தெளித்துந் - தூபமிட்டுங் 199

கொண்டாடிச் சாதியாய்க் கூலித் தொழில்செய்து
திண்டாடி வாடித் திரியும்நாள் - உண்டான 200

மோசேயத் தேவின் முழுநோக் கடைந்ததாய்
மோசஞ்செய்து சூது மொழிகிணங்கி - ஆசையினால் 201

ஆங்கவன் செய்மாயம் அனைத்தினையும் தேவனே
தீங்ககலச் செய்ததெனத் தேறியே - தாங்களும்போய்ச் 202

சண்டைசெய்து நாடுசயங்கொள்ளு மோர்வுணர்வே
கொண்டதனால் பண்டைவினை கூட்டியிடச் - சண்டையிலே 203

வெற்றி யடைந்தம் மிலேச்சர்க் கதிபதியாய்
மற்றவரைத் தங்கண் மயமாக்கி - உற்றிடுங்காற் 204

பூசாரி மார்க்குப் புகழும் பெருவாழ்வும்
காசாதி சேருதலும் காரணமாய்க் - கூசாது 205

கோர்க்கும் விடுகதையின் கொள்கையயாய்ப் பல்பொருள்சேர்
தீர்க்கதரி சனங்கள் செப்பியே - பார்க்குள்ளே 206

ஏழைமதி யோர்கள்தமை யெத்திமத மாய்ச்சேர்த்திப்
பீழை பெருகப் பிழைத்தார்காண் - கோழையா 207

அந்தவுரைப் பௌவத்தில் ஆழாமல் தேற்றியிட
முந்தச் சகுன மொழிவதொத்து - வந்ததிலே 208

கள்ளக் குருமார் கணக்கில்லோர் தோன்றியுல
கெள்ள வெளிப்பட் டிறந்ததற்பின் - பிள்ளையெனத் 209

தச்சக் குலத்திலொரு தாய்வயிற்றின் நால்வரொடு
முச்சப்பட வொருவன் உற்பவித்து - நச்சியே 210

முப்பான் வயது முடியளவுஞ் சூனியங்கற்
றப்பாற் சகப்புரட்ட னாகியே - இப்பாரில் 211

ஏசுவெனப் பேர்பூண் டிருக்களவுங் கல்விமணம்
வீசு மிடங்களிலு மேவாது - பேசும் 212

வலைஞர் பரதர் மலசர் முதலான
புலைஞருட னுறவு பூண்டு - மலையா 213

திகளில்வசித் தலைந்தும் ஏழைகள் தம்மாலே
புகழாதி மேன்மை பொருந்தி - மகிதலத்தில் 214

ஊமைக்குத் திக்குவா யுற்பாத பிண்டமென்று
நாமறியக் கூறும் நகுமொழிபோற் - சாமியமாய்க் 215

காட்டு மனிதர்கட்குக் கண்கட்டு வித்தை செய்து
காட்டி யவராலே கனம்படைத்து - மேட்டிமையோர் 216

பொய்ய னிவன்செய்யற் புதங்களும்பொய்யென் றுவசை
செய்ய மறைந்து திரிதந்து - வையத்திற் 217

சஞ்சரிகுங் காலத்தே தந்தொழிலுக் கானியென்று
வஞ்சவினைப் பூசாரி மார்திரண்டு - நெஞ்சில் 218

விரோதத்தி னாலவன்றன் மேலே தஞ்சாமித்
துரோகமெனுங் குற்றஞ் சுமத்த - ஏரோதென்பான் 219

அற்புதங்கள் செய்தக்கா லாக்கினைசெய் யாதுயிரைத்
தப்பு விப்பதாய் வாக்குத் தந்திடவும் - அப்படிச்செய் 220

துய்யாமல் நெஞ்சம் உலர்ந்து பிலாத்தென் பவன்றன்
கையாற் கொலைதீர்ப்புக் கட்டளைபெற் - றையோ 221

சிலுவைதனி லேயழுது சின்னப் பட்டேறி
வலுவிலுயிர் போக வருந்தித் - தலைவிதியாற் 222

செத்தபின்னர் அன்னவன்றன் சீடர்சில ரந்தச்ச
வத்தைத் திருடி மறைத்துவிட்டுச் - செத்தோன் 223

கடவுளே யென்றுமிந்தக் காசினியோர் பாவம்
படக்கழுவிற் பட்டிறந்தா னென்றும் - புடவிமிசை 224

மாரியம்மை பேச்சியம்மை மாடன்பொம்மன் மதுரை
வீரனு தேவென்னும் விதம்போலும் - ஊரகத்தே 225

செத்தார்மேற் பொய்ப்புகழைச் சேர்க்கும் வகைபோலும்
பித்தேறி வாயார் பிதற்றுங்கால் - ஒத்துப் 226

பவுலென்னும் பொய்யிற் பயின்றோன் ஒருவன்
கவுலாய்த்தன் பண்டைமதங் கைவிட் - டவலமுள்ள 227

ஏசுவின்றன் சீட ரெழுதிய தென்றுமேசு
பேசுசுவிசேட ப்ரசங்க மென்றும் - வாசகங்கள் 228

கூட்டிக் குறைத்தெழுதிக் கொண்டுகுருப் பட்டமுடன்
நாட்டினிலிவ் வேசுமதம் நாட்டினான் - கேட்டனையோ 229

வந்தமதம் இன்னும் அனேகவகை யாய்ப்பிரிந்த
விந்தையெல்லாஞ் சொன்னால் விரியுங்காண் - அந்தமத 230

ஆசிரியருந் தெருக்க ளாதியிலே செய்யுமுப
தேசிகரும் பட்டத்திற் றேர்ந்தவிசு - வாசிகளும் 231

எம்மதத் தையும்வீண் இகழ்ச்சிசெயினும் பொய்யாந்
தம்மதத்தை மெய்யென்று சாதிக்க - அம்மதத்தைத் 232

தாபித்தோன்றா யுதரந் தங்கி மதியம் நிறைந்து
சோபித்தி யோனித் துவாரம் வந்துங் - கோபித்துக் 233

கொல்ல வருவாரென்று கூசிப்பயந் தொளித்தும்
எல்லவருங் காணவழு தேயிறந்தும் - புல்லும் 234

உடலம்நரம்பென் புதிரந் தசைசேர்ந்
திடவிளமை யாதி பருவங்கள் - அடைவாகக் 235

கொண்டே மனிதகுணங் கொள்கையில் பேதமதா
யுண்டே யுறங்கி யுழன்றவெலாங் - கொண்டேயவ் 236

வேசுமனிதனே யென்பார் வாய்க்குப் பயந்து
யோசப் பெனுங் கருமானுக் குமணம் - பேசிவைத்த 237

கன்னிவயிற்றிற் றெய்வீகத்திலுதித்தா னென்றுஞ்
சென்னிமிசை யாவிவந்து சேர்ந்ததென்றும் - தொத்ததென்று 238

தன்னுயிர்போய் செத்த மூன்றாநாள்தன் சீடர்கள்காணப்
பிழைத்து முத்தியடைந் தானென்று முன்னுரைவந் - தொத்ததென்று 239

மானிடர்தந் தத்துவமும் வானவர்தந் தத்துவமும்
ஆனவிரு தத்துவத்தி னானென்றும் - ஞானியர்கள் 240

விண்மீ னொன்றினாலே வெளிப்படக் கண்டாரென்றும்
எண்மீறி யற்புதம்வந் தெய்துமென்றும் - உண்மையிலே 241

இல்லாக் கருமமெல்லாம் ஏசுதலை மேற்சுமத்தி
எல்லாரும்நம்பு மெனவிசைப்பார் - அல்லாத 242

வேற்றுமதத்துட் குறிப்பாய் மேவுபொருளைத் தமக்குத்
தோற்று விதமாய்ப் பொருள்கள் சொல்லியே - தூற்றுவார் 243

மட்டடங்கா மோகி மடலூரத்தான் விரும்பப்
பட்டவளைப் போலெழுதும் பாவனையுஞ் - சிட்டர் 244

அரியவொலி வடிவா மக்கரத்தை யாருந்
தெரிய வரிவடிவிற் றீட்டுதலும் - பொருவவே 245

தம்மனத்துட் கொண்ட தலைவனைத்தந் தியானாதி
செம்மைபெறவோர் வடிவஞ் செய்துளரேல் - அம்மலவர் 246

நுந்தேவின்கண் நும்மை நோக்குமோ காலாலே
வந்தேநீர் கேட்கும் வரம்தருமோ - வந்தே 247

கதிதருமோ செய்தானுங் கம்மியனே யன்றொ
மதியிலிகா ளென்றெமரை வைவார் - பதிதான் 248

இணையில் ஒருவ னெனினும் அவனைச்சேர்ந்
தணையு மடியர்பல ராமே - துணையாக 249

மன்னவனைச் சேவைசெய்வோர் மந்திரிக ளாதியரை
முன்னர்ப் பணியு முறைபோல - வுன்னிப் 250

பலவடியார் தம்மைப் பணிந்தா லுமக்குப்
பலதேவ ரென்றே பழிப்பார் - குலதேவன் 251

ஏகன்தமக் கென்பார் ஏகோவா வொன்றுபுறாக்
காகவுயி ரொன்றேசுக் கத்தனுமொன் - றாகவே 252

தோன்றிய வெவ்வேறு சொருபகுண பேதமுள்ள
மூன்றும் அதன்மேலும் மொழிவார்கள் - ஊன்றியவவ் 253

வேசுவெகு நீதிஇசைத் தான்என்பா ரிப்பாற்
பேசுலகு நாகரிகம் பெற்றதென்பார் - ஏசுதான் 254

மாதாபோற் றோன்றி வகுத்ததெனு நீதியெலாந்
தீதார் புன்கல்விச் சிறார்களெடுத் - தோதாத்தி 255

சூடியெனும் புத்தகத்திற் சொல்லியுள நீதிகளிற்
கோடியிலோர் கூறெனவுங் கூடுமோ - நாடில் 256

இதுகாலமிக்க இழிதொழில் பொய்ச்சான்று
மதுபானம் நாகரிகம் ஆமோ - பொதுமையறத் 257

தேவனுலகத்தைச் சிருட்டித்த காரணமும்
பாவம்வந் தவாறும்அந்தப் பாவந்தான் - போம்வழியும் 258

எந்தவகை யென்றக்கால் எவ்வுயிருங் தோற்றத்துள்
வந்தவகை சொல்ல அறியாமல் - புந்தியிலாத் 259

தஞ்சிறர் சோறுண்ணத் தாயர்சொல்லுங் கதைபோல்
எஞ்சியுரைவைவி லெனுந்திரட்டுட் - சஞ்சரித்துச் 260

சாமியசை வாடச் சலம்வரும் பின்னேயொளியும்
பூமியொடு வானும் பொருந்தவரும் - பூமியைநீ 261

தானேபுல் பூண்டாதி தாவென்னச் சாற்றவரும்
வானே ரிருசுடரும் வந்துதயம் - ஆனதன்முன் 262

நாளுண்டென் றோதவரும் நாட்டைத் தனைவணங்க
வாளுன்னிச் சிட்டித்த தாக்கவரும் - மூளுமுன்னைச் 263

சென்மமிலைச் சென்மத்திற் சேர்ப்பதற்குச்செய்பழய
கன்மமிலையென்றே களரவரு - நன்மைசெய்ய 264

வாதமெலும் பாலொருபெண் ணாக்கியவ னுக்களித்துச்
சாதகஞ்செய் திட்டதெனச் சாற்றவரும் - ஏதனெனுந் 265

தோட்டமொன்று செய்தந்தத் தோட்டத்திற் சீவமரங்
காட்டி யதிலான கனிபுசித்தாற் - கேட்டினாற் 266

சாவாய்என் றோதவரும் சர்ப்பமொன்று சற்பனையாய்
மேவியதை யுண்ணும் விருப்பளித்துத் - தேவியினால் 267

உண்ணுவிக்க வல்லதென ஓதவரும் உண்டவுடன்
கண்ணுடைய ராய்மானங் காணவரும் - கண்ணாலே 268

நன்மைதின்மை ஓர்ந்து நரனுமொளி பெற்றுயர்ந்த
தன்மைகண்டு பொங்கிச் சபிக்கவரும் - முன்மெலிந்தே 269

ஆறு நாளுரை யமைத்தலுப்ப தாகியிளைப்
பாறுநாளொன்றென் றறையவருங் - கூறுலகம் 270

பீடுபெறன் முன்னமே பெய்துநனைந் துளதா
மூடுபனி யென்றும் மொழியவரு - நாடிலுயிர் 271

ஒன்றி லிருந்துமற் றொன்றுண்டாகிப் பல்கியதாம்
என்றெ டுத்துக் கூசா தியம்பவரும் - சென்றவர்க்கு 272

நித்தியமாம் சொர்க்க நிரயம் வகுக்க வரு
நித்திரையாய்ச் செத்தவர்கள் நிற்கவரும் - மெத்தியே 273

சீடர்களையூரெங்குந் தேடித் திரட்டுதலே
பீடுடையசெய்கை யென்று பேசவரும் - மாடுமுத 274

லாமுயிரின் காதி லமைத்தோன் உயிரினையூ
தாமையினாற் சீவனற்ற தாக்கவரும் - யாமெவையும் 275

தீனியெனக் கொண்டு தின்னவரும் வேதமெலாம்
மானிடதங் காதையென வைக்கவரும் - மேல்நிரையே 276

சாமியசை வாடச் சலமிருந்தா லச்சலந்தான்
பூமியிருந் தல்லாற் பொருந்துமோ - பூமியது 277

முன்னே யுண்டாகி முடிந்துளதேற் றேவனதைப்
பின்னேயுண் டாக்கியதாய்ப் பேசுவதென் - முன்னமிருட் 278

கண்ணுறைந்த வேகோவா காரிருளும் பேரொளியும்
பண்ணினா னென்றல் பழுதலவோ - மண்ணதனைப் 279

பல்பூண்டைச் செய்யப் பணித்தால் அஃதெல்லாப்
புல்பூண்டுந் தேர்ந்து புரிந்திடுமோ - அல்லும் 280

பகலுமிது வென்னப் பகலவன் இல்லாமற்
புகல வகையுண்டோ புகலாய் - பகலவனாம் 281

செஞ்சுட ரில்லாமற் றினமூன்று சென்றதாய்
அஞ்சாது உரைப்பதுமோ ராச்சரியம் - தஞ்சாமி 282

மானிடரின் சாயலது வாய்த்துளனேற் சாயலுக்குத்
தானிடமாம் ரூபம்வந்து சாராதோ - வேனவனைத் 283

தோற்ற வரூபியெனச் சொல்லுவத்தித் தோற்றமெலாந்
தோற்றா விடத்துத் தொழிலென்னோ - ஆற்றலுடன் 284

தன்சாயல்போல் நரனைத்தந்து நரன்கண்ணிலனேற்
கொன்சாருந் தேவன் குருடனோ - முன்சேர்ந்து 285

தன்னை வணங்கச் சமைத்தானேன் மாக்கள்பலர்
என்னைவணங் காதிகழ்ந் துரைத்தல் - முன்னை 286

வினையின்றிச் சீவர்களை மேல்கீழாய்ச் செய்த
தெனையோ விருப்பு வெறுப்பென்னோ - மனையாளை 287

நல்லதுசெய் தோம்ப நரனெலும்பி லேபடைத்தால்
அல்லதுவுஞ் செய்தல் அழகேயோ - நல்லதென 288

ஒன்றை நினைக்க அதுவொழிந்திட் டொன்றாயிற்
றென்றல் கடவுட் கியல்பாமோ - அன்றவனோர் 289

தோட்டமன்று செய்தததிற் தோற்றும் பலன்பெறவோ
வாட்டமிலாச் சீவ மரம்வைத்த - நாட்டந்தான் 290

என்னோ மனிதனைமுன் னேமாற்றிக் கொல்வதற்கோ
பின்னோக்க மென்னோநீ பேசிடாய் - அந்நாளின் 291

மாறாகத் தேவனையும் வஞ்சிக்கப் பாம்புளதேல்
வேறாயோர் தேவால் விதித்துளதோ - கூறுமந்தப் 292

பாம்பு நரனுக்கரிய பார்வைதந்தத் அந்தத்தேவன்
சாம்பரிசு தந்தான் சதுரரெவர் - நாம்புசிக்கப் 293

பக்கிமிருகத் தையுண்டு பண்ணினால் யாமவற்றின்
குக்கிற் கிரையாதல் கூடுமோ - மிக்கிளைத்து 294

வேலைசெய்வோ ரோர்நாள் விடாயாற்ற நின்றிடுதல்
போலிருப்போன் தேவனெனப் போகுமோ - ஞாலத்து 295

வானமழை பெய்யாமுன் வந்துபனி பெய்ததென்றால்
ஏனதனைக் கேட்போ ரிகழார்கள் - தானியா 296

மோர்விளக்கில் வந்தே உதிக்கும் விளக்கென்னச்
சார்வதற்குச் சீவன் சடப்பொருளோ - நேரொவ்வாத் 297

தீவினையி லற்பத்தைச் செய்தோர் பலசெய்தோர்
தீவினையே முற்றாகச் செய்திடுவோர் -தீவினைக்கண் 298

எத்தனையோ பேதமிருக்க அவையா வினுக்கும்
நித்ய நரகத்தழுத்தல் நீதியோ - நித்திரைதீர் 299

ஞாயத்தீர்ப்புக் கொடுக்கும் நாளின்றே வந்துறினும்
மாயும் மனிதரெல்லாம் வந்தெழுந்தாற் - சாயாது 300

நிற்குமோ பூமி நெருங்க நெருங்க மென்மேல்
ஒக்கவடைத் தாலும் உலகங்கொள் -கிற்குமோ 301

ஆற்று மணலெலாம் அளவிட்டாலும் உலகில்
தோற்றியிறந் தோரெண் தொலையாதே - ஆற்றவே 302

தாகித்தோர்நீர் தேடுந் தன்மையெனச் சற்குருவை
மோகித்தோர் தேடன் முறையன்றி - ஊகித்துச் 303

சீடர்களைத் தாம்வலுவிற் சேர்க்கத் தெருத்தெருவாய்த்
தேடிக் குருமார் திரிவாறோ - கூடியுள 304

சீவன் சரமடையச் செய்யவிலையே லவைகள்
யாவுநமைப் போல்வாழ் வமைவானேன் - சீவன் 305

அறிவினுயர் வென்னில் அவையைந்தா றாய்மாறப்
பிறிதுபிறி தாதிலனே பேதாய் - அறிவன் 306

விதியா யென்றென்றும்விதித்தவிதி தப்பிப்
புதிதாய்ப் பழதாய்ப் போமோ - இதுபோற் 307

பலசரக்கு குப்பையெலாம் பார்த்தால் அவற்றுள்
சிலசரக்குங் கிட்டாது சேர்த்தே - அலகிலந்தச் 308

சொற்பதரெல்லாம் புடைத்துத் தூற்றினால் ஆங்கவற்றுள்
அற்பமணியேனும் அகப்படா - விற்பனர்கள் 309

தர்க்க நிறைகோலாற் சரிதூக்கி உத்தியெனும்
கற்கிடையே மாற்றுரைத்துக் காட்டினால் - பற்கெஞ்சிப் 310

பையவிழித்துப் பதைப்புற்று நாக்குளறிக்
கைவிரித்துத் தேவசித்தங் காணென்பார் - மெய்யுணர்ந்தோர் 311

தட்டிப்பேசாது விட்டாற் சண்டப்ரசண்டமதா
யெட்டிப்பார்ப் பார்கள் இவர்கள்வயப் - பட்டுநீ 312

பாம்பின்வாய்த் தேரை பருந்தின்கா லாகுவெனத்
தேம்பி மடியாமல் திரும்பென்றான் - வீம்புரைத்து 313

நின்றமனம் சோர்ந்து நெடுமூச்செறிந் துதிகைத்
தொன்றுந் தெரியா தொருமுகூர்த்தஞ் - சென்றதற்பின் 314

அந்தக் கிறிஸ்தேசு அவதரிக்கப் பல்கால
முந்தவதைக் கண்டு மொழிந்ததனால் -அந்தவுரை 315

வேதமென்று சொல்லி வெகுபே ரனுசரிக்க
ஏதிப்ப டிக்குரைத்தீர் என்றேன்யான் - ஓதக்கேள் 316

பின்னர்நி கழ்வதனைப் பேசுவது தான்வேதம்
என்னப் படுமோ இனிவருதல் - முன்னுணர்ந்து 317

சோதிடங் கற்றோர்கள் சுலபமா யாவருக்கும்
ஓதிடநாங் காணாத துண்டோதான் - வாதிடுமப் 318

பித்துரை யிலேசு பிறப்பதுவுஞ் சாவதுவும்
ஒத்தே யெடுத்துரைத்த துண்டுகொலோ - சத்தியமாய் 319

அன்னோன் சரிதங்கள் ஆதியந்தமாய் அதனுட்
சொன்னால் ஓர்கால்நாம் துணியலாம் - பின்னவர்கள் 320

வேலிதனக்குக் கரட்டோணான் சாட்சியெனல்
போலப் பலவும் பொருத்துவர்காண் - மேலதுவென் 321

றன்னதொரு நூலை அனுசரிக்கும் யூதரெலாம்
இன்னமதைப் பொய்யென்ப தென்னையோ - அன்னவருள் 322

சுன்னத்தைத் தள்ளாத் துருக்கரதைப் பொய்யாமென்
றென்னத் தினாலின் கியம்புகின்றார்- அன்னதைத்தான் 323

அந்நாட்டி லுள்ளோர் அனேகர் அருவருத்தால்
எந்நாட்டில் உள்ளோருக் கேற்குமது - முன்னோர் 324

பெரிதும் வருந்திப் பிழைத்திறந்த முன்னைச்
சரிதமெலாம் வேதமோ சாற்றாய் - சரிதங்கேள் 325

பெட்டியொன் றினோவாதன் பெண்டுபிள்ளை யாதியுடன்
சிட்டியொவ் வொன்றா யொருங்கே சேர்ந்தேறிப் - பெட்டியோடு 326

அந்தரத்திலே மிதந்து அரராத் மலைமேலே
வந்தடைந்தா ரென்ற மசக்கதையும் - வந்திடுங்காற் 327

சாமி யெதிர்வந்து சலத்திரளி னாலினிமேற்
பூமியழி யாதென்று போதிக்க - நேமியொன்றை 328

வானத்தில் வைத்ததுவும் வன்மதுவாற் றைந்தையினைக்
கானான் சிரித்த களிக்கதையும் - மானவர் 329

பாபேலின் கோபுரத்தைப் பார்த்துப் பலபிரிவாய்
மாபேதஞ் செய்து வகுத்ததுவும் - ஆபிரகாம் 330

சந்ததியைப் பெற்றதுவுஞ் சக்களத்தியாற் சாராள்
சந்ததியைப் பெற்ற தனிக்கதையும் - அந்தநாள் 331

ஆண்குறியின் தோலை அறுத்தலுந் தேவார்ப்பணமாய்
நாண்குலையுஞ் செய்கை நடத்தியதும் - வீண்குறித்துச் 332

சோதேம்கொமோறா வாய்ச் சொல்லுந் தேயங்களின் மேல்
தீதோர்ந்து தேவன் சினந்ததுவும் - தூதோர்கள் 333

புக்கதுவும் அந்நாட்டோர் பும்மைதுனம்விரும்பித்
தொக்கதுவும்தேடித் தொடர்ந்ததுவும் - மிக்கவவர் 334

லோத்தின் மனையில் நுழைந்து விருந்துண் டிருந்தத்
தேத்தவரைக் கண்கெடவே செய்ததுவும் - லோத்தை 335

மலையேற்றி ஊரழித்த அந்நிலைமை நோக்கித்
தலைவியப்புத் தூணாய்ச் சமைய - மலைமுழையிற் 336

கண்ணுறங் கும்போது களிமதுவை யூட்டியவன்
பெண்கள் புணர்ந்த பெருங்கதையும் - மண்மிசையே 337

ஈசாக்குக் கண்கெட்டிருக்கு நாள் யாகொபு
ஏசாபோல் வஞ்சித்தே ஏத்தியதும் - ஏசா 338

கொலைசெய்யத் தீர்மானங் கொண்டதற்குத் தப்பி
அலைவான் யாகோபும் அகன்றே - விலையாகி 339

ஆடுகளின் மேய்ப்பால் அனேகமணஞ் செய்ததுவும்
ஆடுகளை மோசத்தால் ஆர்ச்சித்து - வீடடங்க 340

ஓட்ட மெடுத்ததுவும் ஓர்சாதி மாக்கள்வந்து
காட்டிலவன் மகளைக் கற்பழிக்கக் - கேட்டஞ்சி 341

வஞ்சித்துக் கொன்ற மதிக்கதையும் மூத்தமகன்
மிஞ்சியவன் பெண்டுடனே மேவியதுஞ் - சஞ்சரித்தே 342

யூதா மருமகளை யோரிரவி லேபுணர்ந்து
தீதார் கருப்பமுறச் செய்ததுவும் - சூதாக 343

யோசேப் மறுதேய முற்றதுவௌம் ஆங்கொருத்தி
ஆசையாய்ச் சேரற் கழைத்ததுவும் - யோசனையாற் 344

சொற்பனத்தி னுட்பொருளைச் சொல்லியபின் வாழ்வுபெற்றுப்
பற்பலவாய் வாழ்ந்த பழங்கதையும் - அற்பவிலைக் 345

காலத்திற் சுற்றத்தார் கண்டெடுத்து வாழ்கதையும்
ஞாலத்தவன் என்பு நாட்படவே - கோலத்தில் 346

வைத்தகதை யும்அவர்கள் வர்த்திக்க நாட்டரசன்
கைத்தகதை யும்கொல் கடுங்கதையும் - அத்ததியின் 347

மோசே பிறந்ததுவும் மூடியொரு பேழையிலே
மாசேற்றிப் புற்புதரில்வைத்ததுவும் - நேசமுடன் 348

அந்நாட்டரசன்மகள் அக்குழவியை வளர்த்த
பின்னாளவன் பிழைத்த பெற்றிமையும் - அந்நாளில் 349

தங்கள் குலப்பகைவன் தன்னைத் தனிமையிற்கண்
டங்கவனைக் கொன்றுகர வாயொழுகித் - தயங்கியதும் 350

சண்டைவினை யாலச் சதிக்கொலைமை தான்வெளிப்பட்
டண்டை அயலார்க ளறிந்துகொண்டு - மிண்டதனை 351

அரசற் கறிவிக்க ஆங்கவனுங் கோபம்
விரவிக் கொலைபுரிய வேண்டித் - துருவிடுங்கால் 352

ஆக்கினைக்குத் தப்பிப்போய் ஆசாரியன் ஆடு
மேய்க்கி யெனவடைந்து விஞ்சைசெறி - மார்க்கமெலாம் 353

கற்றுத்தன் துட்டதெய்வங் கைவந்திடச் சித்தி
பெற்றுத்தன் சாதியரைப் பின்கூடி - எத்தி 354

அடிமைத் தனம்நீக்கி ஆறாகப் பால்தேன்
வடியும் நல்லதேயத்தே வைத்துக் - குடியேற்றும் 355

ஆசைகொளுத்தி அழைத்துவந்து தந்தேவைப்
பூசைபலி யாதிகளாற் போற்றுவித்து - மாசனங்கள் 356

தப்பிவிட லாகாதுசண்டையிடற் குந்தனதெண்
ணப்படியே கேட்டு நடத்தற்கும் - ஒப்பியதோர் 357

மார்க்கமெனப் பற்பலவா மாயவித்தை செய்ததுவும்
தீர்க்கவிதி விலக்குச்செப் பியவை - யார்க்குமினி 358

யென்றுமிருக்க இயம்பியதை விட்டுப்பொன்
கன்றுதொழத் தேவன் கனன்றதுவும் - அன்றொருவன் 359

வேலைசெய்யா நாளில் விறகெடுக்கக் கொன்றதுவும்
சீலமெல்லாம் ரத்தத்தாற் செய்ததுவும் - மேலடைய 360

எண்ணிவந்த தேயம்போ யெய்தாமுன் மோசேயிம்
மண்ணி லிறந்து மடிந்ததுவும் - அண்ணலா 361

யோசுவா என்பான்பின் னுற்றதுவும் அன்னவனைத்
தேசம்பெருகச் செயித்ததுவும் - ஆசையினால் 362

ஈப்தா எனவொருவ னீன்றமகளைப் பலியிட்டு
ஆப்தமுடன் ஊரையர சாண்டதுவும் - தீப்தியுடன் 363

சிம்சோனொரு சிங்கத் தேன்கதைக்காய் முப்பதுபேர்
தம்சோர்வு கண்ட தனிக்கதையும் - எம்சோர்வை 364

மாற்றலரும் எய்தி மடிகவென வீடிடிக்கும்
ஆற்றலுளோன் கண்ணறைய னாகியே - சீற்றமுடன் 365

பட்டதுவும் லேவியன்வைப் பாட்டியைப் பல்லோர் புணர்ந்து
விட்டதனாற் போர்புரிந்து வீந்ததுவும் - இட்டபந்துக் 366

காகக் கொலைசெய்து கன்னியரைத் தேடியதும்
ஏகும் வழியிற்பெண் ணெடுத்ததுவும் - சாகக் 367

கணவன்ற னைக்கொடுத்த காரிகை ரூத்துக்கோர்
கணவன் நிருமித்த கதையும் - மணமகனாய்ச் 368

சாமுவேல் தோன்றியதுஞ் சாட்சியாம் பெட்டிகவர்
காமுகரை நோயாற் கருக்கியதுஞ் - சாமுவேல் 369

சவுலென் றொருவன் தனக்கரசு தந்து
நவமாய் முடிசூட்டு நண்புஞ் - சவுலரசைத் 370

தாவீதடையச் சபித்ததுவும் தாவீதை
யோவாது கொல்ல உசாவியதும் - தாவீது 371

நாபால் மதுவப்ப நல்கேனென நோக்கிக்
கோபா வேசத்தால் கொலச்செல்லக் - கோபாலர் 372

தம்மொழியால் நபாலின் தாரமெதிர் தோன்றியதும்
இம்மெனவே நாபால் இறந்ததுவும் - செம்மி 373

யவன்பெண்டைத் தாவீ தணைந்ததுவும் போரில்
சவுலிறந்து நேர்ந்த சழக்கும் - தவமாகத் 374

தாவீது பூசைசெய்து சாமிசெய்ய நோக்கியிகழ்ந்
தாவீதென்னென்ற மனை யாட்டி பிள்ளை - மேவாது 375

வன்மலடி யாகவருந் தியுழலும் படித்தே
வன்மைசெய் ததுந்தா வீதரசன் - றன்மனையில் 376

உப்பரிகை மேலே உலாவுகையில் மாதவிடாய்க்
கப்பின்முழுகு பற்சோ பாளைக்கண் - டப்பொழுதே 377

கொண்டுவரச் செய்தவளைக் கூயவள் கருப்பங்
கொண்டுவிட் டாளென்ற குறிப்புணர்ந்து - தண்டுடன்போந் 378

தன்சேவக னாமத் தையல்கண வற்கூவி
உன்சேரி செல்லென் றுரைக்கஅவன் - மன்சேனை 379

யுத்தமுடியா துடன்படேன் என்றிடவன்
மத்தை மனத்தில் வைத்து மாற்றோரால் - தந்திரமாய்க் 380

கொல்லும் படிக்குக் குறித்தெழுதிக் கொல்லுவித்துப்
புல்லும் பற்சேபாளைப் புல்லியே - நல்லவன்போற் 381

சாலோமோன் என்ற தனயனைப்பெற் றீந்ததுவும்
நோலாவொருமகன் அம்நோனென்பான் -மாலேறித் 382

தன்னோ டுடன்பிறந்த தாமாரை வஞ்சித்தம்
மின்னோடு வன்மையாய் மேவியபின் -பென்னோ 383

அவளை மிகவெறுக்க அப்சலோம் கோபித்
தவனை வதைத்த அழகும் - புவனியது 384

தன்குடையின் கீழடங்கச் சாலோமோன் ராசாங்கம்
நன்குடைய தென்றுபுகழ் நாளையிலே - முன்குறித்த 385

கோவிலொன்று கட்டியதும்கொண்டாட்டஞ் செய்ததுவும்
தேவியர் பல்லோர் தோளைச் சேர்ந்ததுவும் - பாவியெனப் 386

பட்டிறுதியின் மாறு பட்டிறந்தபின் கன்றுக்
குட்டிக்குப் பூசைவந்து கூடியதும் - ஒட்டி 387

மலிவா யரசர்முன் னைமார்க்கத் திற்சேர
எலியா எலிசா இயற்றியதுஞ் - சலியாது 388

நாடாண்டி றந்தொழிந்த ராசாக்கள் தங்கதையும்
மாடார் பிரசங்கி வன்கதையும் - பீடழியச் 389

சாத்தான்செய் யோபு சரித்திரமும் சாலோமோன்
தோத்திரமும் வேறுபலர் சொற்றிரளும் - சேர்த்தியே 390

வேதமென்று சொன்னலிம் மேதினியில் எக்கதையை
வேதமல வென்று விலக்குவது - வேதத்துள் 391

வந்ததெல்லாங் கேட்க வழங்காக் கதியானால்
அந்தக்கதை மறைதான் ஆகுமே - இந்தக் 392

கதைபலவும் பற்பலவி கற்பமுள வேல்யாம்
எதைமுதல்நூல் தேவன்நூல் என்பாம் - அதையன்றி 393

யேசுகதை சீட ரெழுதுநிருபக் கதைவீண்
வாசகங்களும் வேத மாயினவே - பூசைக் 394

குருமார் சரிதமவர் கூட்டத்தின் கொள்கை
ஒருசாரார் வேதத் துரைப்பார் - கருதுங்கால் 395

ஆலையில்லா வூருக் கிலுப்பைப் பூச்சர்க்கரையைப்
போலினிதா மென்றல் புதுமையோ - மூலையிலே 396

தங்குங் கிணற்றுத் தவளையொப்பார் நாட்டுவளம்
எங்கறிவாரையோ இதுபோல்மற் - றங்குள்ள 397

கோட்டாலை சொல்லவொரு கோடிநாட் செல்லுமிதைக்
கேட்டாரும் கொட்டுவார் கெக்கலிகாண் - நாட்டிலே 398

நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத் 399

தவத்தளவே யகுமாந் தான்பெற்ற செல்வங்
குலத்தளவே யாகுங் குணங்காண் - கலப்பாய் 400

நிலத்திற் பிறந்தவை கார்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்லென் - றிலக்கியத்துட் 401

சொன்னவிதிக் கேற்பவர் தொன்னூலி னாசாரஞ்
சென்னீர் தெளித்தல் கொலைசெய்தலே- பின்னூலுள் 402

ஏசுசதையும் இரத்தமும் உட்கொண்ட்டப்பங்
கூசுமதுவுங் குடித்திடுதல் - பேசிடுங்கால் 403

நல்லா றெனப்படுவ தியாதெனில் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறியென்று - வல்லார் 404

வகுத்தமைக்கு முற்றிலும்நேர் மாறாய்க் கொலையே
மிகுத்தமையால் யாங்கூறன் மேலென் - றொகுத்தாற் 405

பெருமைகும் ஏனைச் சிறுமைக்கும் தத்தங்
கருமமே கட்டளைக் கல்லாஞ் - சரிதமெலாம் 406

வேதமாம் என்று வெகுபேர் மதிப்பதால்
ஆதிமத மாமென் றறைந்தாய்நீ - பேதாய் 407

உலகின் மலிந்தவெலாம் உத்தமமோ செம்பொன்
நிலைகுறைந்துந் தாழ்வுபட்டோ நிற்கும் - அலைகடல்தான் 408

பென்னம்பெரிதே யெனினுஞ் சிற்றூறலென
நன்னீர் மனிதர்க்கு நல்குமோ - இன்னும் 409

விரிவாய்ப் பலவுலகின் மேயவருள் ஞானி
அரிய னொருவனென ஆன்றோர் - தெரிய 410

உரைத்தா ரதனால் உயர்வு குறைந்து
தரைப்பா லிழிவுமிகச் சாரும் - உரைப்பானேன் 411

நன்றேல்லாந் தீதாயும் தீதெல்லாம் நன்றாயும்
கன்றிவரத் தக்க கலிகாலம் - என்றென்றும் 412

பொல்லாதார் நல்லாராய்ப் பொங்கி யருமறைநூல்
கல்லாதார் வாழுங் கலிகாலம் - இல்லாளை 413

அன்னியர் தோள்சேர்த்தி அரும்பொருளைத் தேடியிழி
கன்னியர்தோள் சேருங் கலிகாலம் - மன்னரென்போர் 414

பாதகங்கள் செய்து பணம்பறிக்கு மாந்தரொத்துக்
காதகங்கள் செய்யுங் கலிகாலம் - தீததனால் 415

எள்ளுண்போர் தள்ளுண்போ ரேசுண்போர் மாசுண்போர்
கள்ளுண்போர்க் கான கலிகாலம் - முள்ளுள்ளே 416

எக்குப்பெருத்து மதமேற் படுத்தித் தூஷணைத்தீ
கக்குங் கொடிய கலிகாலம் - மிக்குலகில் 417

ஈட்டுந் தவமாதி யின்மையாய்த் தெய்வநிலை
காட்டா தொழிக்கும் கலிகாலம் - கூட்டுகலி 418

காலமெலாம் வந்தோர் கனத்தவடி வெடுத்தாற்
போலவந் திங்குப் புகுந்ததுகாண் - மேலும் 419

அரசர்கள்தம் கோட்பாடும் ஆனமையால் ஓங்கி
முரசமென நின்று முழங்கும் - பிரசைகள்தாம் 420

மன்னவர்கள் செல்லும்வழியே வழிக்கொள்வார்
என்னுமுரை யெம்மால் இயம்பியதோ - பின்னுமது 421

சற்சமய நூலுணர்ச்சி சாராநாட்டுப் புறத்தி
னிற்செறிந்த கீழ்மக்க ளென்றறையுங் - கற்செறீந்த 422

புல்லறிவோ ராஞ்சிறிய புட்குலத்தை யுட்படுத்த
மெல்லியராங் கண்ணிபல மேவுவித்தும் - வல்லகல்விச் 423

சாலையென்று சொல்பஞ் சரமமைத்துங் கைக்கூலி
வேலையென்று சொல்லும்வலை மேல்விரித்து - மூலைதொறும் 424

பண்ணுமுப தேசப் பயில்குரலிற் கூவுவித்தும்
உண்ணுபல பண்டமெனும் ஒட்டுவைத்தும் - மண்ணவரைச் 425

சேர்த்துத் திரட்டவல்ல செய்கையெலாஞ்செய்தக்காற்
பேர்த்தும்அந் தக்கூட்டம் பெருகாதோ - பார்த்துணரா 426

தையோமதிமயங்கி அம்மதத்திற் சேர்ந்ததன்றி
மெய்யோர்ந்து தேர்ந்ததன்கண் மேவினர் யார் -உய்யுநெறி 427

காட்டுமென் றுள்ளாய்ந்து கலந்தவரார் தங்கள்பவம்
ஓட்டுமென்று நாடி உணர்ந்தவர்யார் - மீட்டுமதில் 428

வந்துபுகுந்த மனிதருள்ளும் வன்மையுடன்
முந்தவதி லுள்ள மூப்பருள்ளுஞ் - சிந்தைப் 429

புலையுங் கொலையுங் களவுந் தவிர்ந்த
நிலையுணர்ந்து நீங்கியார் நின்றார் - தொலையா 430

அபசார மெல்லாம் அகற்றா விடினும்
விபசாரஞ் செய்யா தார்விட்டார் - சுபமாக 431

மாதுசங்கஞ் சேர்ந்து மருவினரல்லா துயர்ந்த
சாதுசங்கந்தேடிச் சார்ந்தார்யார் - வாதமிட்டுச் 432

சந்தைக்கடைபோலச் சண்டைசெய்வா ரல்லாது
சிந்தைமையல் சற்றேனுந் தீர்ந்தார்யார் - அந்திசந்தி 433

மூக்கறையர் ஞானமென மூலைதொறும் பேசலன்றி
யாக்கைநிலைசோதித் தறிந்தார்யார் - ஊக்கமுடன் 434

செல்வத்தைத் தேடுதற்குச் சிந்தைவைத்தா ரல்லததை
அல்லலென் றுகைவிட் டகற்றினர் யார் - புல்லும் 435

இனக்கோட்ட மெம்முள் இலையென்ப தல்லால்
மனக்கோட்டம் நீங்கினார் மற்றார் - கனக்கவேறு 436

எந்தச் சமயத்தும் எய்தாச் சுகமதனை
அந்தச் சமயத் தடைந்தார்யார் - அந்தச் 437

சமயம் பெருகிடினும் தாழ்காலம்வந்தால்
இமையி லழிவெய்தி இறுதல் - அமையுமந்தத் 438

துப்பற்ற மார்க்கத்திற் றோயாதே
கைப்புற்று நிஞ்சிற் கவலாதே - எய்ப்புற்றுப் 439

பேய்த்தேரை நீரென்று பின்றொடர்ந்து நீர்நசையாற்
போய்த்தே டல்போலப் புலம்பாதே - வாய்த்தவெளிப் 440

பட்டப் பகலிற்கண் பார்வையிலாக் கூகையைப்போற்
றட்டித் தடவித் தவியாதே - கிட்டி 441

அவசமயத் துள்ளாழ்ந் தலையாதே யுன்றன்
சுவசமயந் தேரென்று சொன்னான் - சிவசமயத் 442

துண்மையெல்லாம் நெஞ்சத் துறுத்தினான் வேற்றுமதத்
திண்மையெலாம் நில்லாமற் செய்திட்டான் - அண்மை 443

பத்திநெறி யும்பழ வடியார் தாள்பணியும்
புத்திநெறியும் எனக்குப் போதித்தான் - சித்திநெறி 444

காட்டினா னென்கட் கலந்துநின்ற தீக்குழுவை
ஓட்டினான் வேறோர் உருச்செய்தான் - வேட்டுவனோர் 445

மென்புழுவைத் தன்படிவம் எய்துவித்த வண்ணமெனைத்
தன்புதிய கோலஞ் சமைப்பித்தான் - முன்பு 446

பதைப்பற் றிறுமாந்து பாறையொத்த நெஞ்சைப்
பதைப்புற் றுருகப் பணித்தான் - புதைத்தவன்பால் 447

எங்குமிருப்பான் இறையெனினும் மூர்த்தியிடைத்
தங்கும் விசேடமெனச் சார்வித்தான் - அங்கெனக்குக் 448

கண்ணிணைநீர் வார்க்கவுடல் கம்பிக்க மெய்புளகம்
நண்ணவொருசாலம் நவிற்றினான் - மண்ணிலையன் 449

தாள்துணையிலென் றலையைத் தாழ்த்திப் பணிந்தெழுந்து
மீட்டும் மொழிந்தேனோர் விண்ணப்பம் - வாட்டும் 450

மனவிருளை நில்லாமல் மாற்ற வுதயஞ்செய்
தினகரனே ஆனந்தத் தேனே - இனிதான 451

சொந்தச் சமயத்தைத் தூஷணித்துக் கைப்பான
வந்தசமயத்தை ஆதரித்தே - எந்தை 452

தனையும் அவனடியர் தங்களையும் வேடத்
தினையும் பலஇகழ்ச்சி செய்த - எனையும் 423

பொறுக்குமோ கோபித்துப் புன்னரகில் தள்ளி
ஒறுக்குமோ வேண்டா தொதுக்கி - வெறுக்குமோ 454

செய்நெறி வேறொன்றுந் தெளிகிலேன் தீவினையேற்
குய்நெறிதா னுண்டோவென் றோதினேன் - பையவே 455

என்முகத்தை நோக்கி இரங்கியருளி எங்கோன்
புன்முறுவல் சற்றே புரிந்தருளி - முன்மதித்த 456

ஏசு சமயத்து உணர்த்தும் எந்நாளும் மீளாத
வாச நரகை மதித்தனையோ - ஈசன் 457

நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன்பேர் சங்கரன்காண் - மலையெடுத்த 458

வல்லரக்க னுக்கும்மிக வன்மம்செய் தக்கனுக்கும்
நல்ல வரம்பலவும் நல்கினான் - எல்லவரும் 459

ஆரமிர்தம் உண்டிடுவான் ஆலாலம் உண்டமைந்த
காரமரும் நீலமணிக் கந்தரத்தான் - நீரகமாம் 460

அன்பில்லார் மால்பிரம ரானாலுங் காண்பரியான்
அன்புடையார் புன்புலைய ராயிடினும் - தன்பெருமை 461

எண்ணா தெழுந்தருள்வான் எவ்வுயிர்க்கும் எப்பொருட்கும்
தண்ணா ரருளளிக்குந் தாயானான் - மண்ணகத்தே 462

பெற்றெடுத்த தாயேதன் பிள்ளையைக் கைவிட்டக்கால்
மற்றதனைக் காப்பாற்று வார்யாரே - குற்றமொன்றுங் 463

கொள்ளான் குணமாகக் கொள்வான் தொழிலனைத்துந்
தள்ளான்நின் அச்சந் தவிர்திகாண் - வள்ளல்தனைப் 464

பற்றினா லுன்னையவன் பற்றுவா னெப்பற்றும்
பற்றாமல் நின்ற பரமேட்டி - உற்று 465

மருத்துவன்றான் மந்த்ர மணிமருந்தா னோயைத்
திருத்துதல்போற் சற்குரவன் தேர்ந்தே - பெருத்தபவ 466

மூர்த்திதலந் தீர்த்தமெனும் மூன்றா லறமாற்றித்
தீர்த்திடுவ னென்றுமறை செப்புதலால் - ஆர்த்திகொடம் 467

மூர்த்திதலந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்குங்காண் - கூர்த்தறிவாற் 468

றேராது முன்னிழைத்த தீவினைக்கா யச்சமுடன்
ஆராமை நின்பா லடைந்தமையால் - சாராத 469

வேற்றுச் சமயந் தனைமதித்த வெம்பாவம்
மாற்றுங் கழுவாய் வகுக்கக்கேள் - தோற்றுகின்ற 470

இந்தத்த லம்போல எல்லா விசிட்டமும்மற்
றெந்தத் தலத்து மிலைகண்டாய் - முந்தையோர் 471

போற்றுதலம் பாவங்கள் போக்குதலம் வேதத்திற்
சாற்றுதலம் தானாய்ச் சமைந்ததலம் - ஏற்றற் 472

குரியதல மிவ்வுலகத் துள்ள தலத்துள்ளே
பெரியதலம் எம்மாலே பேசற் - கரியதலம் 473

ஆனாலுஞ் சற்றே அறைவேன் அதன்பெருமை
மானார் கரத்து மழுவலத்தெங் - கோனானோன் 474

புற்றிற் சயம்பாகப் போந்தலந் தேவர்கடங்
கற்றாத் தொழுது சிட்டி கற்றதலஞ் - சற்றேனும் 475

மாலவனும் காணா மலர்த்தாள்கண் டர்ச்சித்துக்
காலவனார் முத்தி கலந்ததலம் - மேலாந் 476

தலத்தி லுயர்ந்த தலம்தேடி வானோர்
நலத்ததெனக் கண்டடைந்து நண்ணுதலம் - வலத்தாலே 477

கொம்பின் குளம்பின்வடுக் கொண்டருளி மெய்யடியார்
தம்பிறவி மாசுவடுத் தள்ளுதலம் - அம்போரு 478

கக்கண்ணான் கோமுனிவ னாகியடி யர்ச்சித்துத்
தெக்கணகை லாயமொன்று செய்ததலம் - புக்கு 479

நடையனத்தான் பட்டிமுனி நாமமொடு போந்து
வடகைலை செய்து வசித்ததலம் - நடனமவர் 480

பார்க்கும்படி ருத்ர பாதத்திற் றீவினைகள்
தீர்க்கும் திருநடனம் செய்ததலம் - சேர்க்குமிகு 481

சீரார் மருதமலைச் செவ்வேளால் அன்றமரர்
சூராதி வாட்டித் துதித்ததலம் - நேராத 482

பாவஞ்செயுஞ் சுமதிப் பார்ப்பான் இறந்தொழியத்
தேவத்தலத் தவனைச் சேர்த்ததலம் - தேவர் 483

சமுகத்தவ மானத் தான்முசுகுந்தன்றன்
சுமுகம்பெற் றோங்கிச் சுகித்த தலம் - கமுகங் 484

களத்தாள் பிருகுமகள் கைப்பற்று சாபம்
உளத்தாம லிந்திரனா ருய்ந்ததலம் - பளத்தின்கண் 485

வேதியனாம் ஏனத்தை வேந்தறியா தெய்தபழி
காதியருள் நல்குங் கடவுள்தலம் - தூதிருளில் 486

சென்றாண்ட தொண்டருக்குத் தேவியொடு நெல்வயற்கண்
அன்றுபள்ள னாய்ப்போ யருளுதல் - நன்றுணர்ந்த 487

தில்லைமுனி வோரழகு சிற்றம்பல செய்திங்
கெல்லையறு பூசை யியற்றுதலஞ் - சொல்லைநம்பக் 488

கைதூக்கிவ் யாசன்முனங் காசித்தலத் துரைத்த
பொய்தூக்கு பாவத்தைப் போக்குதலம் - மெய்தூக்கிக் 489

கோசிகனார் போற்றியருள் கொண்டுதிரி சங்கினுக்குக்
காசினிவே றேயமைக்கக் கற்றதலம் - பேசிடுவோர் 490
எல்லாங்கதி செலல்பார்த் தேமனிந்த நற்றலத்தில்
நல்லார்க்கே பத்திவர நாட்டுதலம் - பொல்லாக் 491

கிராதனாய் வாழங்கிர னிறந்துங் கீழாய்
வராதுகதி மேலேற வைத்ததலம் - பராபரையாள் 492

நற்றவத்தைச் செய்துபட்டி நாதரிடப் பாலமரப்
பெற்றுமகிழ் அந்தரங்கம் பெற்றதலம் - கற்றவர்கள் 493

தாங்குசிவ சின்னந் தவத்தோர் சரிதமெலாந்
தீங்ககல எங்கோன் தெருட்டுதலம் - ஆங்குவிளை 494

நீற்றா லொருத்தியின்பேய் நீக்கி யந்தப்பேயினுக்கு
மாற்றாலே முத்தி யளித்ததலம் - சாற்றுமதன் 495

பேர்பலவாம் பேரூர் பிறவாநெறி வளருஞ்
சீர்பலசேர் மேலைச் சிதம்பரமிப் - பார்பரவும் 496

ஆதிபுரம் தென்கயிலை யாவினுயர் தேனுபுரம்
போதிவனம் ஞானபுரம் போகபுரம் - ஆதியவாம் 497

தோய்ந்தோர்கள் பாவஞ் சுடர்முன் இருளென்னத்
தேய்ந்தோடத் தீர்த்தளிக்கும் தீர்த்தங்கள் - ஆய்ந்தக்கால் 498

காஞ்சிநதி யாதி கணிப்பிலவாம் ஒவ்வொன்றும்
வாஞ்சை யறிந்தே யுதவ வல்லனவாம் - பூஞ்சினைசேர் 499

திந்திருணி யும்பனையுஞ் சென்மமிலை யிங்கடைந்தோர்க்
கந்தமிலை யென்பதனுக் கத்தாக்ஷி - இந்தநகர் 500

ஆவின்மயம் கிருமியாதி யடையா தென்னிற்
பாவ நிரயத்தின் பயமுண்டோ - பாவமெலாஞ் 501

சேர்த்திவி ழுங்கவொரு தீபகம்போல் வந்தபட்டி
மூர்த்தி விசேட மொழிவானேன் - மூர்த்திதனை 502

வந்தித்தோர் வேண்டும் வரம்பெறுவர் சிந்தையுள்ளே
சிந்தித்தோர் பாவமெல்லாந் தீய்த்திடுவர் - சந்தித்தே 503

தோத்திரித்தோர் எய்தாச் சுகமுண்டோ பாவங்கள்
மாத்திரமோ சன்மவிடாய் மாறுமே - கோத்திரத்தில் 504

எள்ளால் தருப்பணஞ்செய் திட்டோர்பெறும் பேற்றை
வெள்ளெலும் புங்கல்லாய் விளம்புங்காண் - உள்ளவெலாம் 505

என்னாற் சொலமுடியாது எண்ணிறந்த நாவுள்ளோன்
சொன்னாலும் பன்னாட் தொலையுமால் - உன்னிடத்து 506

நற்காலம் வந்த நலத்தா லிஃதுணர்ந்தாய்
துற்கால மெல்லாந் தொலைந்ததுகாண் - முற்காணும் 507

பட்டிப் பெருமானைப் பச்சைவல்லித் தாயுடன்கண்டு
இட்டசித்தி யெல்லாம்நீ எய்துவாய் - துட்டசங்கஞ் 508

சேர்ந்தொழுகு பாவமுன் சென்மாந்தி ரப்பவமுந்
தீர்ந்தகல நெஞ்சந் தெளிந்துகளி - கூர்ந்தே 509

அருமையாய் யாரும் அடைதற்கரிய
பெருமையெலாம் நல்கப் பெறுவாய் - ஒருமையாய் 510

இவ்வண்ணம் பன்னாள்நீ எம்மான்பணி புரிந்தால்
அவ்வண்ணல் கண்ணுற்று அருளியே - செவ்வண்ணக் 511

கோலமொளித்தோர் குருவடிவாய் வந்துதவ
சீலமுடன் தீக்கையெலாஞ் செய்தருளி - மேலாகுந் 512

தன்னிலையும் நின்னிலையும் சாரும் உயிரின் நிலையும்
முன்னிலையாய்க் காட்டி முரணறுப்பான் - இந்நிலையில் 513

ஐயமொன்று மில்லையென்று எனையனருள் செய்துதிருக்
கையதனாலே நுதலிற் காப்பணிந்தான் - மெய்யை 514

விரிந்த பொருளால் விளம்பிய என்னையன்
பிரிந்தருளினான் என்னைப் பின்னர்த் - தெரிந்துணரா 515

தங்கையுறும் பொன்னை அவமதித்து மண்ணினைத்தஞ்
செங்கையுறக் கொள்ளும் சிறாரென்னத் - தங்கினேன் 516

கல்லெறியப் பாசி கலைந்து நன்னீர்தானும் நல்லோர்
சொல்லுணரில் ஞானம்வந்து தோன்றுமெனச் - சொல்லுகின்ற 517

மூதுரையி னாலென்றன் மூடஞ் சிறிதகன்றப்
போதுசிறு ஞானமென்றன் புந்திவர - ஓதும் 518

புனிதமொழி யுரைத்த போதகனை யானோர்
மனிதனென மதித்த மாண்பால் - இனிதாக 519

மெஞ்ஞானம் முற்றும் விளங்கவிலை உள்ளத்தில்
அஞ்ஞான முற்றும் அகலவிலை - அஞ்ஞான்று 520

தேசிகன்தன் நோக்கஞ் சிறிதடைந்த வாற்றாலும்
பேசியவனோடு உறைந்த பெற்றியினும் - நேசமது 521

பேரூரிற் பற்றிப் பிடர்பிடித் துந்தி யென்னைத்
தேரூர் தெருவிற் செலுத்தவே - நேரேபோய்க் 522

கங்கா சலத்துயர்ந்த காஞ்சிப் புனலாடிப்
பொங்குபல தீத்தம் புகுந்தாடித் - தங்குதிரு 523

நீற்றுத் திடரில்விளை நீ றாடித் தேவர்குழாம்
போற்று மருகிற் பொடியாடித் - தேற்றுபுகழ் 524

கொண்டாடி மேருவன்ன கோபுரத்தைக் கண்ணாரக்
கண்டாடி யுள்ளக் கசிவாடித் - தொண்டர்தொழும் 525

பட்டிக் களிற்றின் பருத்தவிமானத் தடைந்து
கிட்டிக்கன் மப்படலங் கீறவே - குட்டிக்கொண் 526

டோரிரண்டு கையா லுபயசெவியும் பிடித்துப்
பாரிற்படிதோப் பணம்போட்டு - நேராய் 527

வலம்வந்து போற்றி வரமிரந்து நீங்கிப்
புலம்வந்து கோவிலினுட் போகி - நலம்வந்த 528

கோபுரத்தி லுட்புகுந்து கும்பிட்டுத் தெண்டெனவீழ்ந்
தேபுரளு மங்கப்ப்ர தெக்கணமாய்த் - தீபுரத்தில் 529

இட்டான்திருச்சந் நிதிகண்டு தாழ்ந்தெழுந் தங்
கட்டாங்க பஞ்சாங்கத் தாற்பணிந்து - வெட்டுதுண்ட 530

நந்திப்பெருமா னகைமணிப் பொற்றாள் வணங்கி
வந்தித்துட் போக வரமேற்றுச் - சந்தித் 531

திரண்டாம் பிரகாரத் தெய்திக் கல்லாற்கீழ்ச்
சரண்தொழுவார் சன்மார்க்கஞ் சாரக் - கரங்காட்டி 532

மோன வழிதேற்றுபு சின்முத்திரையோ டாங்கமர்ந்த
ஞானகுரு தேசிகன்றாள் நான்பணிந்தேன் - வானங் 533

குடியேற்றித் தேவர்கள்தங் கோமான்தலைக்கு
முடியேற்றி மூவுலகுஞ் சேவற் - கொடியேற்றிப் 534

பன்னிரண்டு கண்கள் படைத்தருளுஞ் செவ்வேளை
என்னிரண்டு கண்களால் யான்கண்டேன் - முன்னர் 535

வணங்கிப் புறத்தொட்டி வார்புனலை யள்ளி
இணங்கிப் புரோகித்துள் ளேகி -மணங்கமழும் 536

சிங்கதீர்த்தத்தைச் சிரத்தில் எடுத்துத் தெளித்துள்
ளங்கையினாற் மூன்றுதர மாசமித்துப் -பொங்கிமேற் 537

போந்திரண்டு துவாரம் புரப்போர் பதம்போற்றி
ஏந்தல்திருச் சந்நிதிவந் தெய்தினேன் - தேய்ந்து 538

வினையெனை விட்டேக விடைகேட் காநிற்ப
நனையவிரு கண்ணீர் நனைப்பத் - தினையளவும் 539

இல்லாத அன்பு பனையென்ன நனிபெருகச்
சொல்லாத வானந்தந் தோன்றியெழப் - பொல்லாப் 540

பொருட்செறிவு சேர்ந்தடர்ந்த புந்தியி லன்றேதோ
தெருட்சி மருட்சி திகழ - அருட்செறிவொன் 541

றில்லையென்று சொல்லும் எனக்கும் அஃதுண்டென்ன
வல்லையிலே பிரத்யட்ச மாய்விளங்க - நல்லவெலாம் 542

பெற்றேன்போற் பட்டிப் பெருமானையான் காணப்
பெற்றேன்என் கண்படைத்த பேறுற்றேன் - சற்றேனுங் 543

கூசாதுனை யிகழ்ந்த குற்றம் பொறுத்தியென்று
வாசா கயிங்கரியம் ஆற்றினேன் - பூசாரி 544

சாற்றுதிரு வெண்ணீறு தந்தாரிதுபோல
வேற்று நிமித்த மிலையெனவே - யேற்றுடலில் 545

அங்கந் திமிர்ந்தேன் அகங்கொண்டேன் உள்மாசுந்
தங்கு புறமாசுந் தள்ளினேன் - அங்கப் 546

பெருமான் றனக்கெனது பின்காட்டா தேகி
ஒருமா நடனசபை யுற்றேன் - திருமான் 547

அழகாத்திரிநா யகன்பொன்னாற் செய்தங்
கழகார் திருக்கயிலை யாக - அழகுசெய்து 548

கண்கொண்டு பார்த்தற் கடங்காத ஓவியமா
எண்கொண்ட தேவர்க் கிருப்பிடமாய் - விண்கொண்டு 549

நின்றுநிலாவு நிலைபார்த்துத் தாயினைப்போய்க்
கன்றுதொடர்ந்த கணக்கேபோற் - சென்றழலிற் 550

பட்ட மெழுகென்னப் பதைத்துருகிக் கோமுனிவர்
பட்டிமுனிவர் பதம்போற்றி - நெட்டிலைவேற் 551

கண்ணுடைய வெங்கள்சிவ காமியுமை கண்களிப்ப
விண்ணுடையோர் கண்கள் விருந்தயர - எண்ணுடைய 552

தோற்றம் துடியதனில் தோன்றுந் திதியமைப்பிற்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாம் 553

ஊன்றுமலர்ப் பதத்தே உற்ற திரோதமுத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடுகவென் -றான்றோர் சொல் 554

ஐந்தொழிற்குந் தானே அதிபனெனக் காட்டுதற்கஞ்
சுந்தரமார் திவ்ய சொரூபமுடன் - வந்தனையோ 555

இன்றென்ற னைப்பார்த் திளமுறுவல் காட்டியைந்தும்
வென்றுளோர் சிந்தை விமலமென - நின்றிலகும் 556

அம்பலத்தே யாடுகின்ற ஆனந்தச் செந்தேனைச்
செம்பதும பாதங்கள் சேவித்தேன் - கம்பிதங்கொண் 557

டச்சந்நிதியை அகலா தகன்று சென்று
பச்சைக் கொடிபாற் படர்ந்துற்றேன் - நச்சியே. 558

துற்கை யொருபாலும் துளவோ னொருபாலும்
நிற்கும் நிலைகண்டு நேசித்தேன் - சொற்கத் 559

திருப்போர் மனித ரெனவடைந்து போற்றி
விருப்போடு கூட்டமாய் மேவும் - நெருக்கத்துட் 560

புக்கேன் விரைந்துகரும் பொன்காந்தஞ் சேருதல்போல்
மிக்கேன் நனிவிரைந்துள் மேவினேன் - அக்காலத் 561

தெண்ணில் புவனங்கள் எல்லாங் கடைத்தேறக்
கண்ணிற் பொழியருணோக் கத்தழகும் - எண்ணில் 562

வளமை திகழும் வதனத் தழகும்
களமாரும் மங்கலநாண் காப்புந் - தளதளவென் 563

றெங்கும் ப்ரகாசித் திருளகற்றி மேனியெலாந்
தங்கியொளி வீசுபணிச் சார்பழகும் - செங்கைச்சுட்டிச் 564

சம்பந்தப் பிள்ளை தமிழ்பாடப் பால்சுரந்த
கும்பத் துணைநேர் குயத்தழகும் - நம்பினருக் 565

கொல்லைப் புறச்சமயத் துள்ளுதிக்கு மொஇன்பமென
வில்லையுண்டென்னும் இடையழகும் - மெல்லப் 566

புலம்பலம்பல் போலப் புரிநூ புரத்தின்
சிலபலம்பு சேவடியின் சீரழகும் - நலம்பலவும் 567

கண்ணாரக் கண்டு களிகூர் மரகதமாம்
பெண்ணா ரமுதப் பெரும்பிழம்பை - அண்ணா 568

அயர்ந்தே ஒருசற்ற வசமுற்று மீட்டுப்
பெயர்ந்தே மதிகூடப் பெற்றேன் - வயந்தவறி 569

நாக்குளிரப் போற்றி நவின்றதுதி செப்பியங்கு
நீக்கமுற வொண்ணாமல் நின்றிடுங்கால் - பாக்கியத்தால் 570

கைத்தலத்தில் உன்னிருக்கை கண்டேன் களிகூர்ந்து
சித்தத்தை நின்பாற் செலுத்தினேன் - தத்தையே 571

நேராயெனை நோக்கி நீயாரென்றாற் போலோர்
சீரான வாக்குச் செவிபுகலும் - ஆராயாது 572

என்னையோ தோற்றம்அஃ தென்றெண்ணி யாய்ந்தபசும்
பொன்னை யொக்கும் வாக்கைப் புறக்கணித்தேன் - பின்னரிவ்வூர் 573

நேயத்தால் நீங்காமல் நீங்கிக் குணதிசைக்கட்
கோயம்பதியில்குடிபுகுந்தேன் - ஓயாமே 574

அன்றுதொட்டு மார்கழியில் ஆதிரையும் மீனமதி
யொன்றும் திருநாளாம் உத்திரத்தும் - நன்றுசெறி 575

நாட்களிலுஞ் சென்றுசென்று நாயகனார் நாயகியார்
தாட்களிலே நாயேன் சரண்புகுந்தேன் - வேட்கையினால் 576

சின்னாளில் நாயைச் சிவிகைமிசை யேற்றலென
என்னால் அறியா இயல்பளித்தான் - ஒன்னார்போல் 577

மாறா யெதிர்த்தபல மாற்றலரை மாற்றிமகப்
பேறாதி பேறும் பெறுவித்தான் - வீறாக 578

எண்ணிய எண்ணங்கள் எல்லாம் எனக்களித்தான்
மண்ணிலுள்ளோர் என்னை மதிக்கவே - பண்ணுந் 579

திருப்பணியும் கொண்டருளிச் செந்தமிழ்ப்பாப் பாடும்
விருப்பருளி யாண்டுகொண்டான் மேனாள் - திருக்கனைத்தும் 580

நீக்கி வலியவந்து நேர்நின் றொருமனிதன்
ஆக்கி அருளும்பழய ஆசிரியன் - வாக்கியத்துள் 581

அண்ணல் குருவாய்த்தம் அருமைத் திருவுருவங்
கண்ணெதிரே காட்டிக் கருணையொடு - நண்ணுமெனும் 582

ஒன்றொழிய எல்லாம் உறப்பெற்றேன் அவ்வொன்றும்
என்றெய்துங் கொல்லோவென் றெண்ணினேன் - அன்றொருநாள் 583

என்கனவினூடே எழுந்தருளித் தன்கோலம்
முன்கோலமாய் வந்து முன்னின்று - நின்சரிதம் 584

எல்லாம் அமைய இயற்றமிழால் தூதொன்று
சொல்லாய்நீ சொல்லுமந்தத் தூதேசென் - றெல்லாந் 585

தருமென்றான் எம்பெருமான் சற்குருவாய் உன்முன்
வருமென்றான் சொல்லி மறைந்தான் - குருவாய் 586

நனவகத்து வந்தஅந்த நாளினைஇப் போலவேயென்
கனவகத்துங் காட்டிக் கரந்தான் - நினைவெய்தி 587

ஏதொன்றுங் கல்லா எனைப்பார்த்துக் கற்றவர்சொல்
தூதொன்று சொல்லென்று சொல்லியதால் - தீதொன்று 588

தன்மையேன் சொல்லத் தரமில்லே னாயினுமென்
மென்மையே நோக்கி மெலியாமல் - வன்மையுள்ள 589

போதகன் சொல்லாகும் புணைதுணையாக் கொண்டுதுணிந்
தோத ஒருவாறு ஒருப்பட்டேன் - யாதினையாந் 590

தூதுசெல முன்னிலையாய்ச் சொல்லுவதென் றெண்ணிமனம்
வாதுசெய வுள்ளே மதித்துணரும் - போதுதனில் 591

தாயார் கரத்திடைநீ தங்கியெனைப் பார்த்தொருநாள்
நீயாரென் றோதல் நினைவுவர - வாயார 592

என்சரிதம் நின்பால் எடுத்துரைத்தல் தக்கதென்று
முன்சரித மெல்லாம்மொ ழிந்தனன்காண் - வன்சரிதம் 593

உள்ளே னானாலும் உற்றதுரைத் தேன்அதனால்
எள்ளேல் என்மீதில் இரங்குவாய் - தள்ளுகிலா 594

அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கென்று - முன்புகன்ற 595

பொய்யா மொழியுணர்ந்த புந்தியெற் குதவி
செய்யா தொழிதல் திறமன்றே - மெய்யாயென் 596

அம்மையுடன் அப்பன் அருளுஞ் சமயங்கள்
தம்மை உணர்வாய்நீதான் அன்றோ - அம்மையப்பர் 597

மேவுமிடஞ் சேறல் விண்ணோரின் மண்ணோரில்
யாவருக்கும் ஒண்ணாதே ஆயிடினும் - தேவியார் 598

கையூ டிருத்தலினால் காதூடு தூதோதற்
கையமிலை நிற்கெளிதே யாகுங்காண் - பையவே 599

எவ்வாறென் செய்தி இயம்பினால் ஏற்றிடுமோ
அவ்வா றெல்லாம்நீ அறிந்தோதி - எவ்வமுறும் 600

மாலவற்கும் இந்திரற்கும் வானவர்க்கும் தானவர்க்கும்
மேலவர்க்கும்நீ அருளா விட்டாலும் - சால 601

வெளியா ரெங்குள்ளா ரெனத்தேடியாள்தல்
அளியாரும் நிற்கே அணியாய் - மொழிதலால் 602

அன்னவனை யாள்த லழகா மஃதன்றி
இன்னமொரு வாற்றால் இசைவாகும் - அன்னவன்றான் 603

புன்மதத்தி லாழ்ந்தலைந்து புந்திவரப் பெற்றுப்பின்
நின்மதத்தை ஆதரித்து நின்றமையால் - தொன்மை 604

முருகாரும் நின்சமயம் முற்றத் துறந்து
திருகார் சமணமதஞ் சேர்ந்தங் - கருகான 605

சொற்கோவை யாண்ட தொடர்பானுங் காத்தாளல்
நிற்கே கடனென்று நேர்ந்துணர்த்திச் - சற்குருவாய் 606

இன்னமொருகால் எழுந்தருளி என்முன்வரச்
சொல்நீ பசுங்கிள்ளாய் தூது. 607

திருச்சிற்றம்பலம்

திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது முற்றிற்று
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247