தூது இலக்கிய நூல்கள்

     அஃறிணைப் பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமையும் இலக்கியம் தூது இலக்கியம் எனப்படுகிறது. தலைவன் தலைவியரிடையே பிரிவு ஏற்படும்போது ஒருவர் தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்கும்படி அஃறிணைப் பொருட்களைத் தூது அனுப்பும் உத்தி நற்றிணை போன்ற சங்கப் பாடல்களிலும், பின்னர் வந்த இலக்கியங்களிலும் கூடக் காணப்பட்டவைதான் எனினும், தூது அனுப்பும் செயலையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை தூது இலக்கியங்களே.

     இது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். தூதுச் சிற்றிலக்கியம் கலிவெண்பாவினாலே பாடப்படுகின்றன. சொல்ல விரும்பும் ஒரு விடயத்தைக் கவிநயத்துடன் சொல்வதற்கான ஒரு கற்பனை வடிவமே இது. தலைவன் தலைவி என்ற பாத்திரங்களும் உருவகங்களாகவே அமைவதும் உண்டு. தூது செல்ல ஏவப்படுகின்றவையும் பலவாறாக இருக்கின்றன. அன்னம், கிளி, மான், வண்டு போன்ற உயிரினங்கள் மட்டுமன்றி, காற்று, முகில், தமிழ் என்பனவும் தூது இலக்கியங்களிலே தூது செல்ல ஏவப்படுகின்றன.

     நவநீதப் பாட்டியல், பிரபந்த மரபியல், இலக்கண விளக்கம், முத்து வீரியம், சிதம்பரப் பாட்டியல், இலக்கணச் சுருக்கம் முதலிய பாட்டியல் நூல்களில் தூது இலக்கிய வகையின் இலக்கணத்தைக் காணமுடிகின்றது. பாட்டியல் நூல்கள் கூறும் வகைப்படி தூது இலக்கியம் பின்வருமாறு அமையும்.

1. காதல் துயரம் காரணமாக ஓர் ஆண் அல்லது பெண், தான் காதல் கொண்ட பெண் அல்லது ஆணுக்குத் தூது அனுப்புவதாக அமைவது.

2. உயர்திணையைப்போல் ஓர் அஃறிணைப் பொருளைத் தூது சென்று வருமாறு வேண்டுவது.

3. தூது பெறுவோரிடம் சென்று மாலை வாங்கி வருமாறு தூது அனுப்புவோர், தூது செல்லும் பொருளிடம் வேண்டுவது.

     தொல்காப்பியர் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு நிகழ்வதற்குரிய காரணங்கள் கூறுகின்றார்.கல்வி கற்கும் பொருட்டுச் செல்லுதல், மன்னனின் பகைவர்கள் மேல் போர்தொடுத்துச் செல்லுதல், தூது செல்லுதல் ஆகிய காரணங்களுக்காகத் தலைவன் செல்வான். அப்போது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு ஏற்படும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். இந்த இடத்தில் தூது செல்லுதல் பற்றிய குறிப்பு உள்ளது. தூதாகச் செல்வதற்கு உரியவர்களைத் தொல்காப்பியர் வாயில்கள் என்று குறிப்பிடுகிறார்.

     அதியமான் என்ற மன்னனுக்காக ஒளவையார் என்ற புலவர் தொண்டைமான் என்ற அரசனிடம், போர் மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்துவதற்காகத் தூது சென்றதாகப் புறநானூற்றுப் பாடல் (95) ஒன்று உள்ளது. இதைப் புறப்பொருள் சார்பான தூதுக்குச் சான்றாகக் கூறலாம்.

     திருவள்ளுவர் திருக்குறளில் தூது என்ற ஒரு தனி அதிகாரமே அமைத்துள்ளார். இப்பகுதியில் தூது செல்பவர்களின் பண்புகள், தூது செல்பவர்களின் இலக்கணம், தூது சொல்லும் முறை முதலியவற்றைக் கூறக் காணலாம்.

     பக்தி இலக்கியம் ஆகிய திருமுறைகளிலும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலும், தலைவனாகிய இறைவனிடம் அன்பு கொண்ட தலைவி தூது அனுப்புவதாய் அமைந்த பாடல்கள் உள்ளன.

     காப்பியங்களாகிய கம்பராமாயணம், சீவக சிந்தாமணி ஆகியவற்றிலும் தூதுச் செய்திகள் காணப்படுகின்றன. கம்பராமாயணத்தில் அனுமன் தூது காணப்படுகிறது. சீவகசிந்தாமணியில் சீவகனிடம் குணமாலை கிளியைத் தூது அனுப்பும் செய்தி இடம் பெறுகின்றது.

     தூது இலக்கிய வகையின் முதல் நூல் நெஞ்சுவிடு தூது என்ற நூல் ஆகும். இதனை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியர் ஆவார். இதன் காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு. தமது ஞானாசாரியரிடம் சென்று தமது குறைகளை எடுத்துக் கூறுமாறு, உமாபதி சிவாச்சாரியர் தமது நெஞ்சைத் தூது விடுக்கிறார். இந்நூலைத் தொடர்ந்து பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இப்போது முந்நூற்றுக்கும் மேற்பட்ட தூது நூல்கள் உள்ளன.

     எல்லாத் தூது நூல்களும் பொதுவாகத் தூது என்ற சொல்லை இறுதியில் பெற்றுள்ளன. சான்றாக நெஞ்சுவிடு தூது என்ற நூலைக் கூறலாம். ஆனால் சோம சுந்தர பாரதியார் இயற்றிய தூது நூல் மட்டும் மாரிவாயில் என்ற பெயரைப் பெற்றுள்ளது. மாரி என்றால் மேகம் என்றும் வாயில் என்றால் தூது என்றும் பொருள்படும். மேகவிடு தூது என்பது இதன் பொருள் ஆகும்.

     தூது நூல்கள் பெயர் பெறும் நிலையில் சில முறைகள் உள்ளன. தூது அனுப்பும் பொருளின் பெயரால் பெயர் பெறுகின்றன. சான்றாக, மான்விடு தூது என்ற நூலைக் கூறலாம். இதில் தூது செல்வது மான் ஆகும். சில நூல்கள் தூது பெறும் தலைவன் பெயரையும், தூது செல்லும் பொருளின் பெயரையும் கொண்டு அமைகின்றன. சான்றாக, மதுரை சொக்கநாதர் தமிழ்விடு தூது என்ற நூலைக் கூறலாம். இதில் தூது பெறுவோர் இறைவனாகிய சொக்கநாதர், தூது செல்வது தமிழ் ஆகும்.

     தூது அனுப்புவோர், தூது பெறுவோர் ஆகிய அடிப்படையில் தூது நூல்களை மூன்று வகைகளாகப் பாகுபடுத்தலாம்.

1. ஆடவர் ஆடவர்க்குத் தூது அனுப்பும் நூல்கள்
2. ஆடவர் பெண்களுக்குத் தூது அனுப்பும் நூல்கள்
3. பெண்கள் ஆடவர்க்குத் தூது அனுப்பும் நூல்கள்

தூது இலக்கிய நூல்கள்