புலவர் மன்னமுத்துக் கவுண்டர்

இயற்றிய

மருத வரை உலா

முன்னுரை

     'மருதவரை உலா' என்னும் இந்நூலை ஆக்கித் தந்தவர் அமரர் புலவர் மன்னமுத்துக் கவுண்டர். அவர்கள் கற்பனை நயமும், கவிதை அழகும் செறிந்த படைப்பாக இதனை உருவாக்கித் தந்த அவர் தம் காலத்தில் தம் சொந்த நூலை அச்சிட்டுப் பார்க்க முடியவில்லை. அவர் மறைந்து இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் அவரது மகன் புலவர் சாமிநாதன், மகள் புலவர் அம்மாக்கண்ணு ஆகியோரது முயற்சியின் பலனாக இந்நூல் நம் கைகளில் தவழ்கின்றது. அவர்களுக்குத் தமிழ் உலகம் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளது.

நூலாசிரியர்

     செந்தமிழால் வளமலியும் மருதவரை உலா' வினைத் தந்த புலவர் மன்னமுத்துக் கவுண்டர் கொங்கு நாட்டின் ஒரு பகுதிக்கு ஆட்சியுரிமை பெற்றிருந்த பரம்பரையில் தோன்றியவர்.

     கொங்கு மண்டல சதகம் பாராட்டிப் பேசும் தலைவர்களில் ஒருவர், கோவைக்கருகிலுள்ள கவசை என்னும் கோயில்பாளையத்தைத் தலை நகராகக் கொண்டு அரசு புரிந்த மசக்காளி மன்றாடியார், பால வேளாளர் எனப் படும் குலத்தைச் சார்ந்த இவரது பரம்பரை பிற்காலத்தில் அரசுரிமை இழந்தது. எனினும் பெரிய தனப் பட்டம் பெற்று மதிப்பு மிக்கதாக இந்தப் பரம்பரை வாழ்ந்து வந்தது. இந்தக் குடும்பத்தில் மசக் கவுண்ட மன்றாடியாருக்குப் பின் பட்டத்துக்கு வரவேண்டியவர் நூலாசிரியர் மன்னமுத்துக் கவுண்டர். எதிர்பாராத காரணங்களால் இவருக்குப் பட்டம் சூட்டும் விழா தடைப் பட்டுப் போயிற்று.

     தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட திரு மன்னமுத்துக் கவுண்டர் அவர்கள் கோவை மாவட்டம் சோமையனூரில் சுப்பண்ணக் கவுண்டர் தஞ்சம்மாள் தம்பதிகளுக்கு 7-6-1901-ல் மகவாகப் பிறந்தார். தொடக்க நிலைக் கல்வியை தடாகம் என்னும் சிற்றூரில் முடித்தார். சில ஆண்டுகள் உழவுத் தொழிலிலும் துணி விற்பனைத் தொழிலிலும் ஈடுபட்டார். 1923-ல் வடவள்ளி அரங்கசாமிக் கவுண்டர் மகளும் மருதமலை முருகன் கோவில் முன்னாள் அறங்காவலர் வி.ஆர்.இராமலிங்கம் அவர்களின் தமக்கையாருமாகிய மருதம்மாளை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார்.

     1933-ல் வித்துவான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியாரிடம் தமிழாசிரியப் பயிற்சி பெற்றார். 1934-ல் பொள்ளாச்சி நகரமன்ற உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி ஏற்றார். அதே பள்ளியில் நீண்ட பல ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றி ஓய்வு பெற்றார். 1961-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் தம் அறுபதாம் வயதில் காலமானார்.

     'மருதவரையுலா' அன்றி வேறு தனிக் கவிதைகள் பல எழுதி இருந்தார் என்று அறிகிறோம். தமிழ்ப் புலமை தக்க மதிப்பு ஏற்படாதிருந்த சூழலில் அக்கவிதைகள் அச்சிலும் வராமல், பேணிப் பாதுகாக்கவும் படாமல் போனது வருத்தத்துக்குரியது.

உலா

     தொல்காப்பியப் பேரிலக்கணத்துள் 'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப' என்னும் சூத்திரம் உலாவைப் பற்றி உரைக்கின்றது. அரசன், தெய்வம், அல்லது சிறப்புமிகு தலைமகன் மணம் புரிந்தோ. வெற்றி பெற்றோ தேர் மீதோ ஊர்தி மீதோ உலா வரும்போது ஏழு பருவ மகளிரும் தலைமகனைக் கண்டு காதல் கொண்டு மயங்குவதாகச் சித்தரிப்பது உலாவின் போக்கு. தலைமகன் சிறப்புக்களை முற்படக் குறித்து பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் முதலிய ஏழு பருவப் பெண்களின் நிலையை வருணித்து முடிப்பது உலா என்னும் சிற்றிலக்கியத்தின் நடை முறை.

     சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், பெருங்கதை முதலிய பெருங்காவியங்களில் தலைமகன் உலாக் காட்சிகள் திகழ்கின்றன. இக்காட்சிகளே உலா என்னும் இலக்கிய வகையின் மலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தன. எனினும் காலத்தால் முற்பட்ட ஆதியுலா என்னும் திருக்கயிலாய உலா, ஞான உலா, சேரமான் பெருமாள் நாயனாரால் இயற்றப் பட்டதாக அறிகிறோம். நம்பியாண்டார் நம்பிகளின் 'ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை' அடுத்து குறிக்கத் தக்கதாகும். ஒட்டக் கூத்தரின் விக்கிரம சோழனுலா. குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா என்னும் மூன்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. காளமேகப் புலவரின் திரு ஆனைக்கா உலாவும் இரட்டைப் புலவர்களின் ஏகாம்பர நாதருலாவும் உலா இலக்கிய வகையில் தனிப் பெருமைக்குரியவை.

     அந்த வரிசையில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த மருதவரை யுலா' நயத்தாலும் கற்பனை வளத்தாலும் மேன்மை கொண்டு விளங்குகின்றது.

     தற்கால(க்) கவிதையின் நோக்கும் போக்குமில்லாது பழ மரபுப் படி இயற்றப் பட்டிருப்பது புதுச் செந்நெறி இலக்கியமாக (NEO-CLASSICAL) இதனை ஆக்காதா என்ற கேள்வி எழுவது நியாயம் தான், எழுதிய ஆசிரியர் தொழிலால் தமிழாசிரியர் என்பதாலும், அவர் வாழ்ந்த காலத்து அறிவுத் துறையில் ஒரு சாரார் பழமையின் பெருமையில் திளைக்கும் பண்புடையாராக இருந்தனர் என்பதாலும் ஆசிரியர் இம்முயற்சியில் தலைப் பட்டார் என்று கருதலாம். இந்நூலில் அமைந்திருக்கும் மொழி வளமும் கற்பனையும் தரும் இன்பத்துக்குக்காக இப்படைப்பை மதிக்கலாம். இதனை இன்று பதிப்பித்து வெளியிடுவதற்கான காரணம் இது தான்.

நூல்

     மருதவரையுலா என்ற இந்நூல் கொங்கு நாட்டில் மருத மலையில் கோயில் கொண்டுள்ள முருகனைத் தலைமகனாகக் கொண்டு இயற்றப் பெற்றுள்ளது. முருகன் பிறப்பின் பெருமை, இளம் பருவத்து விளையாட்டுக்கள், அவன் திருக்கோயில்கள், மருதமலைச் சிறப்பு, அவன் அலங்காரம், அவனுடன் உலாப் போந்தோர் பெருமை ஆகியவற்றை நிரல் பட வருணித்து(ப்) பேதை முதல் பேரிளம் பெண் வரையுள்ள ஏழு பருவ மகளிர் நிலைகளையும் எடுத்துக் கூறுவது இந்நூலின் அமைப்பு முறையாகும்.

     சொல் வளம், பொருள் வளம், கற்பனை வளம் முதலிய வளங்கள் செறிந்து விளங்கும் வண்ணம் இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர்.

     தெள்ளு தமிழ் நடை துள்ளி விளையாடும் இந்நூலின் சொல் வளம் வியப்பூட்டுவது. எதுகை மோனைகளின் இனிய ஓசைநயம் சந்தஇன்பம் கூட்டுகிறது. சொல் விளையாட்டுக்கள் சொக்க வைக்கின்றன.

     கதித்த வரை சேர்ந்தான் கதித்தவரைச் சேரான்
     கதித்தவரைக் காக்கும் கருத்தன்

     (உயர்ந்த மலை சேர்ந்தவன், மிகு சினமுடையாரைச் சேரான், சிறந்தவரை; அடைக்கலம் அடைபவரை(க்) காக்கும் கருத்துடையவன்)

என்னும் வரிகளைப் போல் சொல் சிலம்பங்கள் பல இந்நூலில் பொதிந்துள்ளன.

     ஏழு பருவ மகளிரும் மருத மலைமுருகனைக் காண வந்த காட்சியை.

மான்கன்றினைக் கண்டு மன்னு முறவாடு
வான் வந்து பொய்க்கின்ற மான்களெனக்- கான்வந்த

வேடன் திருப்புயத்து வெண்ணீற்றைப் பாலென்று
கூடவரு மன்னக் குழாமென்னத் - தேடவரும்

புண்ணியற்கு நாமும் பொருவூர்தி யாவோமென்
றெண்ணி மயிற் கூட்டம் எழுந்ததென - நண்ணியங்கு

நற்குஞ் சரியிடத்து நல்ல நடையெழிலைக்
கற்கப் பிடிகள் கலந்ததென - பொற்புடையோன்

ஆட்கொ ளருணகிரி யாரின் அனுபூதி
கேட்குமா வந்த கிளிகளென

என்று கற்பனை நயம் ததும்ப வருணிக்கும் பாங்கு சுவை நலம் மிக்கது. வள்ளிமான் முருகனுக்கு அருகில் இருப்பதால் நமக்கு உறவாயிற்றே என்று மான்கள் வருகை தருவது போல மகளிர் வந்தனர். முருகன் மேனியில் திகழும் திருநீற்றைப் பால் என்று கருதி அன்னங்கள் வருவது போல் வருகை தந்தனர். குமரனின் ஊர்தியாக மயில் அமைந்திருப்பது போல நமக்கும் வாய்க்கலாகாதா என்று மயில்கள் திரண்டது போல் மகளிர் வந்தனர், தேவ கன்னிகையான தெய்வயானை முருகன் அருகிலிருப்பதால் அவளிடம் நடை கற்போமெனப் பிடிகள் புறப்பட்டது போல் பெண்கள் வந்தனர். திருப்புகழ் செப்பும் அருணகிரியாரின் கந்தரனுபூதியை இங்கே கற்றுக் கொள்ளலாமெனக் கிளிகள் வந்தது போலவும் இளங் கன்னியர் வந்தார்கள். இவ்வாறு கற்பனை அழகு பொலிய விளங்கும் வருணனைகள் பல இந்நூலில் அமைந்துள்ளன.

     பேதை பெதும்பை முதலிய ஏழு பருவ மகளிரின் செயல்களிலும் இலக்கிய நயம் கொஞ்சுகின்றது. பழைய மரபின் அழுத்தமும் புதிய கற்பனைத் திருத்தமும் கொண்டு திகழும் ' மருதவரையுலா' சென்ற தலைமுறை யொன்றின் கவிதைப் பாங்குக்கு எடுத்துக் காட்டாய் விளங்குகின்றது.

     தன் காலத்தில் இந்த நூல் வெளி வரும் வாய்ப்புப் பெற்றிருந்தால் பெரும் புலவர் மன்னமுத்துக் கவுண்டர் அவர்கள் மேலும் பல படைப்புகளை எழுதும் தூண்டுதல் பெற்றிருக்கக் கூடும். அதனால் பழ மரபுத் தமிழிலக்கியத்துக்கு ஒரு வரவு என்று நாம் பயன் பெற்றிருக்க முடியும்.

     எவ்வாறாயினும் தமிழ் இலக்கிய வரலாற்றின் இடைக் காலத்தில் சிற்றிலக்கியங்கள் மலர்ந்ததையும், அவை இருபதாம் நூற்றாண்டிலும் எதிரொலிகளை மீட்டின என்பதையும் சுட்டிக் காட்ட ஒரு நல்ல சான்றாக மருதவரையுலா திகழ்கின்றது.

     கொங்கு நாட்டின் சிறந்த புலவர் ஒருவர் ஆக்கித் தந்துள்ள இந்நூல் தமிழ்ச் சிறப்புப் பாடம் பயிலும் மாணவ மாணவியருக்குப் பாடமாக வைக்க ஏற்றதாகவும் இருப்பதைக் குறிப்பிட வேண்டும்.

     தந்தையார் படைத்த இந்த நூலை ஆர்வத்துடன் வெளியிட முன் வந்த புலவர் சாமிநாதன், புலவர் அம்மாக்கண்ணு ஆகிய இருவரையும் தமிழ் உலகின் சார்பில் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

     இந்தப் பதிப்பு மிக அவசரமாய் வெளியிட நேர்ந்தமையால் இன்றியமையாத குறிப்புரை எழுதிச் சேர்க்க முடியாமல் போயிற்று, இக்குறையை அடுத்த பதிப்பில் நீக்க முடியும் என்று நம்புகின்றேன்.

     என் இளமையில் நான் நேரில் அறிந்த பெரும் புலவர் மன்னமுத்துக் கவுண்டர் அவர்களின் நூலுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்புத் தந்த குடும்பத்தாருக்கு என் பணிவார்ந்த நன்றி உரியது.

     இந்நூலை அச்சிட்டுத் தந்துள்ள கோவை செந்தமிழ் அச்சக உரிமையாளர் திரு வீ.மாரியப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

சிற்பி

பொள்ளாச்சி
9-8-1985


புலவர் மன்னமுத்துக் கவுண்டர்

இயற்றிய

மருத வரை உலா

தலவிநாயகர் துதி

ஏரார் மருதவரை யெம்மா னருள்சேரும்
சீரா ருலாவைச் சிறப்பிக்கும்- பாராரும்
வான்றோன்றி யாரும் வணங்கு மலர்ச்சரணத்
தான்றோன்றி யானைமுகன் சார்ந்து

நூல்

சீர்பூத்த கஞ்சத் தமரும் திருத்தேவும்
கார்பூத்த மேனிக் கடல்வணனும் - ஏர்பூத்துப்

பன்னும் பழமறையும் பல்காலந் தேடியும்
இன்னு மனந்தறியா வெம்பெருமான் - துன்னுமொரு

வாக்குமனக் கெட்டா வடிவாய் வழங்குமொரு
போக்குவர வில்லாப் பொருளாகி - நீக்கமற

எங்கும் நிறைந்த விருஞ்சுடரா யாவர்க்கும்
பொங்கும் கருணைப் புதுப்புனலாய்த் - திங்களொடு

சூரியரும் தானாகித் துய்யபல கோள்களாய்க்
காரியமுங் காரணமுந் தானாகிப் - பாரனைத்தும்

ஆக்குந் தொழில்முதலா வைந்தொழிலு மாற்றியின்பம்
தேக்கும் பரம சிவமாகிச் - சூக்குமத்திற்

கப்பாலுக் கப்பாலா யாதி நடு வந்தமெனும்
முப்பாலுந் தள்ளி நின்ற மூர்த்தியான் - இப்பாரில்

வானவரும் ஏனை மண்ணவரும் மற்றவரும்
தானவர்த ருந்துயரைத் தாங்காது- மோனமிகும்

வெள்ளி வரையணைந்து மேலோன் றிருப்பாதம்
உள்ளி முறையோவென் றொலமிட - வெள்விடையோன்

ஆறு திருநுதலி லாறு பொறிதரலும்
வீறு மிகவெழுந்து விண்பரவிப் - பேறுபெறு

காலாலே சென்றந்தக் கங்கையங்கை மேவியவள்
சேலார் சரவணத்திற் சேர்த்திடலும் - காலாறு

கொண்டவண்டு தாலாட்டக் கோகனத் தொட்டிலமர்ந்
தண்டரெல்லாம் போற்ற வறுவர்முலை - யுண்டருளி

யாம்ப லனைய வணி முறுவல் வாய்திறந்து
தேம்பி யழுத திறங்கேட்டுச் - சாம்பவியும்

தங்கணவ ரோடணைந்து தாவி யெடுத்துகந்து
அங்க ணருள்கூர்ந் தகங்கனியக் - கொங்கை வழி

ஊற்றெடுத்த பாலருந்தி உச்சிதனை மோந்துலகம்
போற்றெடுப்பக் கைலை புகவங்கண் - வீற்றிருந்து

ஓமென்ற வோரெழுத்தி னுண்மைப் பொருளையறி
யோமென்ற பூமன்ற னொண்சிரத்துத் - தாமே

புடைத்துச் சிறையிட்டுப் பூவுலக மெல்லாம்
படைத்துக் கருணை பரப்பித் - துடைத்துக்

கருவுட் கிடந்து கலுழு முயிர்க்கு
மருவும் மலர்த்தாள் வணங்கி - அருள்கவெனப்

பாங்காகக் கேட்ட பரமன் றிருச் செவியில்
ஓங்காரத் துட்பொருளை யோதிவைத்துத் - தீங்காரும்

வன்னிவரும் செச்சைதனை வாகனமாக் கொண்டுநலம்
உன்னிவரும் வானோர்க் குளங்கொண்டு - முன்னு
செருவொழியச் சூரன் திறல்கடிந்து தேவர்
வெருவொழியச் செய்த விறலோன் - கருவுளுறும்

வேதனையை மாற்றி வெதுப்பும் பிறவியெனும்
நோய்தனை மாற்றியருள் நோன்கழலோன் - போதம்

படிக்கு மகத்தியர்க்குப் பைந்தமிழை வாரி
வடித்துக் கொடுக்க வருவோன் -- படிக்குளுயிர்க்

கோட்டமெல்லாம் தீரக் கொடியவினை தீர்த்தருளி
வாட்டமில் லாதளிக்கும் வள்ளலான் - வேட்டுருவ

மாகிவள்ளி மானை யணைத்துலக மேழினிலும்
போகியருக் கின்பம் புணர்ப்பிப்போன் - யோகியர்தம்

மாய இருடுரத்தி மாயாக் கதியளிக்கும்
தூய சுடர்ஞானம் துய்ப்பிப்போன் - பாயுதிரைச்

சீதம் படரும் திருச்செந்தி லம்பதியும்
ஏதம் படராத வேரகமும் - போதப்

பழமுதிர் சோலைப் பழனி மலையும்
அழகார் பரங்குன்று மாடி - மழவிடையோன்

மன்றுதோ றாடல் வழக்கிற்கு மாறாது
குன்றுதோ றாடலுங் கொண்டருளி - இன்றமிழைப்

பாடும் புலவர் பசியாம லீந்துபுகழ்
தேடும் திருக்கைவலிச் செம்மல்கள் - கூடியதாய்த்

தெங்கு பலா கதலி தேமாங் கனி சொரியும்
கொங்கு வளமுதிரும் கொங்கென்றே - எங்கும்

புகழ்பரந்து மண்டிப் பொலியுநன் னாட்டிற்
றிகழும் வளத்திற் சிறந்து - மிகவோங்கும்

தக்க வரையைந்திற் றானதிக மாகியதும்
மிக்கவரை யேந்தி விளங்குவதும் -- துக்கமுடன்

தெய்வப் புலவர் திருமா லுடனொருங்கே
எய்தப் பலவரங்க ளீந்ததுவும் - கைதொழுது

முத்தர் பணிந்ததுவு மோனமிகு பாம்பாட்டிச்
சித்தர் விளை யாடித் திகழ்ந்ததுவும் - சித்தப்

பிரமை பெருவயிறு பேரண்ட வாயு
சுரமுதல வாய துயரும் - சிரவலியும்

தோய்வார்க்குப் போக்கித் தொடர்ந்து வழிவழியே
தாய்பார்க்கும் வேலை தவிர்த்தருளி - ஆய்வார்க்குக்

கல்வி நலந்துய்க்க காசினியெ லாமாளும்
செல்வ மொருங்குநனி சேர்வித்து- சொல்லக்

கருத வரிதாகிக் காண்கின்ற தெய்வ
மருதச் சுனை கொண்ட மாண்பும் - வருதிசைமூப்

பக்கணமே போக்கியருள் வக்கனையூற் றும்புகழ்த்
தக்க வனுபாவித் தண்சுனையும் - புக்கல்குற்

புற்றுக் கண்ணில் வீழ்ந்து போகா தளிக்கின்ற
புற்றுக்க ணென்ற புனலூற்றும் - பற்றறுந்த

ஞான மிகுவிக்கும் நல்ல சரவணமும்
ஆன சுனைக ளளவிலளாய் -- வானத்தை (ஆன சுனைக ளலவிலதாய்)

அள்ளும் படியுயர்ந்தே அண்டருலகும் விலகித்
தள்ள வரையுருவம் தானேயாய் - வெள்ளிய

வேலே மருதமாய் விண்ணோர் தமைக் காக்க
மேலே யெழுந்த விதமிருக்கச் - சாலக்

கருது பவர்க்குக் களிதர வல்ல
மருத வரையில் வளர்ந்தோன் - வெருவாது

வம்மின் மருதவரி மால்மருகனைப் பணிந்து
உய்ம்மின் பெறுமி னுறுதியென - விம்மி நின்று

தாவி யிருசிறகாஞ் தன்கையினா லெற்றியெற்றிக்
கூவுகின்ற கோழிக் கொடியினான் - பாவிற்

பரசுஞ் தமிழ்ப்புலவர் பாடி வரும்ஞான
முரசதிரு முன்றி லுடையான் - பிரசமெனும்

((பரசும் என்பதற்குப் பதில் பரவும் என்ற சொல் பொருத்த முடையது).

வெள்ளம் பெருகு விரைமலரிட் டேத்துமவர்
உள்ளக் கமலத்தி லூர்ந்திடுவான் - தெள்ளுதமிழ்

வேதப் பொருப்புடையான் வேற்படையான் விண்ணதிரும்
கீதப் பறையான் கிருத்திகையான் - போதுவிரி

கொங்கு வளநாடன் கோல மயிற்பரியான்
பொங்கு நறைக் கடப்பம் பூந்தாரான் - துங்கமுடைத்

தங்க விமானத்தான் தங்க விமானத்தான்
சங்க முழங்கும் தமிழுடையான் - தங்குமெழில்

(இரண்டாவது பதமான தங்கவிமானத்தான் என்பது தங்கவி மானத்தால் என்றிருப்பின் சாலச் சிறந்தது- தம் அளப்பரிய கவித்துவத்தால் என்ற பொருள்)

ஆரணத்தா லும்மறியொ ணாதவத்தா னும்மலர்க்கை
வாரணத்தான் தானவர்க்கு மாரணத்தான் - காரூர்

(இவ்விடத்தில் மகரவொற்று மிக்குளது)

கதித்தவரை சேர்ந்தான் கதித்தவரைச் சேர்ந்தான்
கதித்தவரைக் காக்கும் கருத்தன் - விதித்தபடி

வாளிரவி (வானில்+ர=வானிரவி) வந்து மகரம் புகுதமதி
தேனிற் (தேளிற்?) செறிந்து திகழ்ந்தெதிரில் -- மூள

(என்றிருப்பின் சிறப்பான பொருள் தருகின்றது)

உலகமெலா மேத்திட உம்பர்கு ழாஞ்சூழ
வுலவிவரு நாளி லொருநாள் -- இலகு

கனக மணி போன்று கடல்வந்து தந்த
தென வுதையன் வானத் தெழலும் - வனமாது

வள்ளி யுடனே மகிழ்ந்து விளையாடும்
பள்ளி யுணர்ந்து பரிவோடு - வள்ளலும்

செம்பொற் கதிராற் றிகழுமணி மண்டபத்துள்
அம்பொற் பலகை யமர்ந்திருந்து - நம்பன்முன்

நல்லா கமத்தி னவிலுந் திருப்பூசை
எல்லா மகத்தி லினிதேற்று - நல்லாயன்

கோவியர் தம்மனையிற் கொண்டு குவித்தவெலாம்
மேவி யொருங்குவந்து வீழ்ந்ததென - ஆவினத்தின்

நெய்யும் தயிரும் நிறைபாலும் செந்தேனும்
பெய்யும் புனலும் பெரிதாடித் - துய்ய

மறைநாலுந் தேடி யறியா வரதன்
குறையா வபிடேகங் கொண்டு - நிறைமதியின்

பானிலவு தான்வந்து பாய்ந்து சொரிந்ததென
மேனிதனில் வெண்ணீறு வேய்ந்திட்டு - வானிருந்த

ஈரா றருக்க ரீரிரண்டா யொன்றாகி
ஓரா றுருவுகொன் டுற்றதெனச் - சீரார்

மணிகொண் டிழைத்தபரு வைரமா ணிக்க
வணிமகுட மோரா றமைத்துத் - துணிவுடைய

செந்நாப் புலவன் திருவள்ளுவன் நெய்த
பொன்னாடை போற்றிப் புனைந்தருளித் - தன்னாலே

கண்ட சரமெல்லாம் கண்ட சரமாகக்
கண்டசரம் கண்டத்திற் கண்டிருந்து - தெண்டிரையில்

உற்றிடு மேருவின்மேல் ஓரரவம் சூழ்ந்தங்குச்
சுற்றி வளைந்திருக்கும் தோற்றம்போல் - ஏற்றி

வளர்ந்த திருத்தோண்மேல் வாகாக சோதி
கிளர்ந்தமணிக் கேயூரம் தாங்கி - விளங்கும்

பொருப்பி னகட்டுருளும் பொன்னருவி போல
விருப்பினொடு முப்புரிநூல் வீக்கித் - திருப்புகழில்

முத்துக்கு மாரனென முன்மொழிந்த பேர்பொருந்த
முத்துக்கு மார்பமெலா முட்படுத்தித் - தத்திவரும்

கற்கடகம் வந்தத்தம் காண வளைவது போல்
பொற்கடக மத்தத்திற் பூண்டிருந்து - பொற்பார்

திருவுதர பந்தம் செறிவுதரச் சேர்ந்து
பொருவிலுயர் கண்மணியும் பூண்டு - பெருமை

இவளவெனக் காண வியலாத செம்மைப்
பவளசரம் கண்டம் பணித்துத் - தவளநிறக்

கற்பூர சாந்தம் (கற்பூரஞ் சாந்தம்) கமழுமான் கத்தூரி
பொற்பூர மெய்யூரப் பூசியபின் - சொற்கான்ற

போதம் பரிமளிக்கும் பொற்கடப்பந் தாரணிந்து
வேதம் பரிமளிக்கும் மென்சிலம்பும் - நாதம்

கனியவரும் கிண்கிணியும் கான்மலரிற் சுட்டி
இனியெவரும் தன்னே ரிலாதான் - எனநினையும்

விண்ணாடர் தாமயங்கி வேரொருவ லுள்ளாரென்
றுண்ணாடக் கண்ணாடி உண்ணோக்கி(ப்) - பண்ணாரும்

தெய்வத் திருப்பாட்டும் தீபவா ராதனையும்
வைவைத்த வேலோன் மனத்தேற்று - மொய்வைத்த

தோளமருங் கண்ணியரும் தோன்றலிட னேயமரும்
வாளமருங் கன்னியரும் வாய்ப்புடனே - நீளகில

வண்டங் கிடுகிடென வார்ப்ப ரதமேறித்
தண்டங் கொருகரத்திற் சார்த்தியே - பண்டுகனி

காரணமா யிற்கடந்தோன் காரணவு நீள்குன்றத்
தோரண வாயிற்கடந்து தோன்றினான் - ஈரமதி

வேளுக்குச் செய்த பணி வீணான தென்றுமற்றிவ்
வேளுக்குத் தொண்டாய் விரிந்ததெனக் - கேளென்னும்

நீலமணி ரத்ன நிரையிட்ட திண்காம்பின்
கோலமணி முத்துக் குடைநிழற்றா - ஆலமென

மையிட்ட கண்ணார் மணிக்கவரி வீசிவர
நெய்யிட்ட ஆலத்தி நின்றேத்த - ஐயன்

பணிசெய்ய வாருமெனப் பன்னுமா போல
அணிகொண்ட பீலி யசையப் - பணிவுடைய

அன்ன மிசையேறி ஆரணனும் சூழ்போத
வன்னக் கருடன்மேல் மால்திகழ - இன்னும்

கருடர் சுரருரகர் கந்திருவர் சித்தர்
புருடர் நிருதரும் போத -விருடீர்ந்த

ஆதித்தர் பன்னிருவர் அம்பொற் றிருத்தேரின்
மீதிற் பொலிந்துடன் மேவி வர -ஓதத்

தொருங்கு திரையாவு மொல்லென் றொலிக்கக்
கருங்கு திரையான் கடுக - மருங்கினில்

தாவடியா லென்றுந் தளரா விடும்பனுந்தோட்
காவடி யேந்திக் கலந்துவரச் - சேவடிசேர்

வீரப் புயத்தண்ணல் வெள்ளிப் பிரம்புகொடு
சேர வருகிருந்து செல்லவும் - பேரழகு

காலு மருமைதனைக் கண்டு களிகூரச்
சால விழைத்த தவப்பயனாய்க் - கோலமிடும்

கண்ணாயிரம் கொடுத்த கௌதமனைப் பாராட்டி
விண்ணாடர் கோனும் விளங்கிவர - மண்ணிற்

பயங்கொண் டமணர் பணிந்து கழுவேறிச்
செயங்கொண் டுலாவுதிருத் தேவும் - நயங்கொண்ட

பாவிற் குழலதென பாரிற் பசுபதியைப்
பாவிற் குழலவிடும் பாவலனும் - நாவிற்குச்

சொல்லே துணையாக்கித் தொல்கடலில் ஆழாமற்
கல்லே துணையாக்கும் காவலனும் - மெல்லக்

கருதுவார் ருள்ளங் கனியக் கனியத்
திருவா சகமுரைத்த தேவும் - கருவூர்த்

திருமா ளிகைத்தேவர் சேந்தனார் கண்டர்
திருவா லியமுதர்வே ணாடர் - திருச்சேதி

பூந்துருத்தி நம்பிகாட நம்பிபுரு டோ த்தநம்பி
ஆந்திருப் பாவருளு மார்வலரும் - ஏந்துபுகழ்

மாயனா மென்ன மணிநிரை தானளித்த
வாயனாம் திருமந்த்ர வாயனும் - பேயுருவத்

தம்மை முதலா வருள்நம்பி யீறாகச்
செம்மை மருவுதிரு தேசிகரும் - நம்மையினி

தாட்கொள்ள வந்தருளு மம்மா னடியாரைத்
தாட்கொள்ள வந்த தனிச்செல்வம் - காட்ட

உலகெலா மென்ற உயர்ந்ததனிப் பாட்டை
உலகெலா முய்யுமா றோதி - அலகில்சீர்த்

தொண்டர் புகழுரைத்துத் துய்யநீ றுய்வித்த
தொண்டை வளநாட்டுத் துங்கவனும் - மண்டிருளின்

பொய்கண்ட வாதப் புறச்சமயம் வீழ்ந்தொழிய
மெய்கண்ட நான விரிகதிரும்- துய்ய பல

பண்ணும் பொருளொடுதேன் பாலுங் கலந்தவென
வண்ணம் பலசொன்ன மாதவனும் - மண்ணிலுயிர்

பந்த மிராமலிங்கு வாழவருட்பா வருள
வந்த விராமலிங்க வள்ளலும் - செந்தமிழைப்

பேசினவர் வாழப் பெருங்கனக மாரியென
வீசி யகமகிழும் வேளாளர் - ஆசில்

திருமேனி தீண்டுவார் செங்குந்தர் சேரர்
அருள்மேனி கொண்ட வரையர் - பொருள்வணிகர்

தாயிற் சிறந்ததொரு சண்முகனுக் கெப்பொழுதும்
கோயிற் பணிசெய் குழாத்தினரும் - தாயின்

கருநாமம் கட்டழியக் காதலோடு கந்தன்
றிருநாம மோவாது செப்பித் - தருவே

அருவே உருவே அருளே அமுதே
குருவா யமரும் குகனே - திருவே

கடலே கதிரே கனலே புனலே
உடலே உயிரே உணர்வே - அடலேறே

தித்திக்கும் செந்தேனே தெய்வச் சுடர்மணியே
எத்திக்கும் போற்று மிறையவனே - முத்திக்கு

வித்தாகி நின்ற விமலா மிளிர்சைவ
சித்தான நாதா சிறுகுமரா - வித்தகா

வென்று பலசொல்லி யேத்தும் புகழோசை
சென்றுலக மெல்லாம் திகழவும் - அன்றேதிர்ந்து

தும்புரு நாரத ரும்பரி யாழிசை
தம்புரு வோடு கலந்துற - வந்தர

துந்துபி வந்து முழங்கவு மெங்கணும்
சங்கிசை நின்று தழங்கிட - இங்கித

சல்லரி கொக்கரை தண்ணூமை வந்தெழ
நல்ல சலஞ்சல மத்தளம் - வல்லெதிர்

பேரி தடாரி பிறங்கு நாகாரிதிண்
கூர்முர சோடு குழலெழ - வாரின்

முருடு பதணம் முழவு பதலை
இரலை திமிலை எதிர - அரன்மகன்

வையா புரிநாடன் வந்தான் வனப்புடைய
செய்யார் திருமேனித் தேவந்தான் - பொய்யாத

பேரருள் வாய்த்த பிரான்வந்தான் பேரமரிற்
சூரிருள் மாய்த்த சுடர்வந்தான் - சீருடைய

புள்ளி மயிலுடையான் வந்தான் பொருவில்சீர்த்
தெள்ளு தமிழ் விரும்பும் சேய்வந்தான் - வள்ளிக்கு

வாய்த்த மணவாளன் வந்தான் -வனசமலர்
பூத்த வதனப் புயல் வந்தான் - தீர்த்தன்

கருதார் குலமழித்த காங்கேயன் வந்தான்
மருதா சலன்வந்தான் வந்தான் - ஒருவரது

பொங்கும் கருணைவிழிப் புண்ணியன் வந்தானென்
றெங்கும் திருச்சின்ன மேத்தெடுப்ப -- பங்காளம்

பைரவி கல்யானி பல்லதி யானந்த
பைரவி மோகனப் பண்பாடி - மெய்மறந்து

பாகமுறு மின்னிசையார் பாடிவரப் பண்டிதர்க
ளாகமங்கள் கூறி யருகுவரத் - தோகையர்கள்

முன்னின்று நர்த்தமிட முத்தமிழால் நாவலர்
கன்னின் றுருகக் கவிபுனைய - மின்னென்ற

பொன்னகர மாதர் புவிமாதர் பூங்கோயில்
நன்னகர மாதர் நாமாதர் - மன்னியெழு

கன்னியரு மேழ்முனிவர் பன்னியரும் கைகுவித்த
சென்னியர்க ளாயங்கு சேவித்துத் - துன்னிவரப்

போர்கொண்ட புன்சமணம் பொய்யாக வந்துதித்த
சீர்கொண்ட பாண்டிமா தேவியரும் -- ஏர்கொண்ட

சொல்லாண்ட தெய்வச் சுருதி யிசைகூட்டிப்
பல்லாண்டு கூறிப் பரவிவர - நல்ல

திருமாதவர் பணியும் சேவற்கொடியோன்
மருதா புரிவீதி வந்தான் -- மருவாரும்

அம்புங் கரும்புவிலு மங்கை தனிலேந்தி
வம்ப மதன்கூட வந்தனனால் - கொம்பனைய

மகளிர் வருகை

மான்கன்றினைக் கண்டு மன்னு முறவாடு
வான்வந்து பொய்க்கின்ற மான்களெனக் - கான்வந்த

வேடன் திருப்புயத்து வெண்ணீற்றைப் பாலென்று
கூடவரு மன்னக் குழாமென்னத் - தேடவரும்

புண்ணியற்கு நாமும் பொருவூர்தி யாவோமென்
றேண்ணிமயிற் கூட்ட மெழுந்ததென - நண்ணியங்கு

நற்குஞ் சரியிடத்து நல்ல நடையெழிலைக்
கற்கப் பிடிகள் கலந்தவெனப் - பொற்புடையோன்

ஆட்கொ ளருணகிரி யாரி னனுபூதி
கேட்குமா வந்த கிளிகளென -- வாட்கொண்ட

திங்கள் நுதல்வியர்ப்பத் தீங்குமுத வாய்விளர்ப்பக்
கொங்கலரும் தண்தார் குழல்சோரப் - பங்கமிலாக்

கொங்கைக் குவடசையக் கூர்விழிகள் போராட
அங்கை வரிவளைக ளார்த்தெடுப்பத் - தங்கும்

தவள முகையருப்பத் தங்கு வடமாடத்
துவளுங் கொடியிடையார் தோன்றிப் - பவளத்தின்

செங்கை பொதிந்த தெருத்திண்ணை பித்திகை
மங்குல் தவழுமணி மண்டபங்கள் - திங்கள்

இலங்கும் திருமுன்றி லேழ்தலத்து மாடம்
துலங்குமணிக் கோபுரத் தும்பர் - விலங்கலெதிர்

மாளிகை மன்றம் மறுகிடம் சாளரம்
சூளிகை தெற்றியெலாம் சூழ்ந்திருந்து -- வாளிகை

ஏந்திவரும் மாரற் கிலக்கானார், ஏரூர்ந்த
வேந்திவரும் தேரும் விளக்கிற்றால் - காந்திவரும்

செங்கனி வாயழகும் தீந்தேன் மொழியழகும்
பங்கயம் போலும் பதத்தழகும் -- துங்கமிகு

சோம னுடையழகும் துய்ய முகத்தழகும்
நாமப் புயத்தழகும் தாளகும் - நாமங்கொள்

நீல மயிலழகும் நீறணிந்த மெய்யழகும்
கோல முறுவல் குளிரழகும் - சாலவும்

தித்திக்கும் கட்டழகும் தெய்வ முகமாறிற்
பத்தித்த பன்னிரண்டு கண்ணழகும் - சித்தன்ற

னங்கங்க ளெல்லாம் அகங்கனிய நோக்கினார்
அங்கங்கே நிற்பா ரலமருவார் - கொங்கார்

குழல்சரிய நிற்பார் குனிவில் நெறிப்பார்
அழன்மெழுகு போல வயர்வார் - எழிலுடைய

வெண்முத்தம் தீய வெதும்புவார் வெம்முலையில்
கண்முத்தம் வீழக் கலுழ்ந்திடுவார் - மண்ணிற்

பரங்குன்ற மாடும் பரமானார் எங்கள்
இருங்குன்ற மாடாரோ வென்பார் - இரங்கநனி

மாலை யளித்திட்ட மால்மருக னெங்கட்கு
மாலை யளியாத வாறேது - மாலையெங்கள்

நாணை யழித்திட்ட நாதனார் மாரனது
நாணை யழியாத ஞாயமென்ன - காணிற்

றனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிதே - யெனப்பகர்ந்து

வீதிக்கு நின்று மெலிகின்ற மின்னாரிற்
பேதைப் பருவத்தாள் பின்னொருத்தி - காதலரி

பேதை

கண்டு தொடராக் கவரிமான் கால்கொண்டு
வண்டு கிளரா வனசமுகை - மொண்டு

வடியாத செந்தேன் மணியார மார்பிற்
படியாத வெள்ளைப் பணிலம் - கடியார்

மருதிற் படராத வல்லி மதனூல்
கருதி(ப்) படியாத கன்னி - சுருதியொடு

வித்தகம் பேசாத மென்கிள்ளை வில்லென்று
சித்தசனுக் காகாச் சிறுகரும்பு - சித்தசனூல்

பன்னுகின்ற வாடவர்க்குக் காமப் பசிதணிக்க
இன்னு முலைவைக்கா விளநங்கை - இன்னாதார்

கைக்கு ளடங்கும் படைபோல் கருக்கொண்டு
செய்க்கு ளடங்கும் சிறுவிதைபோல் - எய்ப்புடையார்

பொய்க்கு ளடங்கும் பொருள்போல் - பொலிவுதரு
மெய்க்கு ளடங்குமிள மென்முலையாள் - கைப்பிடித்தோர்

மெட்டுக் கடங்காத மெல்லியர்போ லெப்பொழுதும்
கட்டுக் கடங்காத கருங்குழலாள் - வெட்டுண்ட

வாழை யடியில் வளருமிள வாழைபோல்
வீழு மெயிற்றிலெழும் வெள்ளெயிற்றாள் - வீழுகின்ற

வஞ்சனமல் லாதுபிற வஞ்சனையொன் றில்லாது
அஞ்சன மெல்லாவுயிர்க்கு மானகணாள் - வஞ்சியர்தம்

கச்சி லெழுமுலையைக் கைப்பாவைக் கட்டுகின்ற
பச்சிளநீ ரென்று பரிந்தழுவாள் - மச்சிலெழும்

வெள்ளிமதியின் விரிநிலவைத் தீம்பாலென்
றள்ளிக் கிளிவா யருத்துவாள் - விள்ளுமொளி

முத்தா லடுஞ்சோற்றை முன்கரத்தி னாலெடுத்துத்
தத்தா யருந்தென்னத் தானளிப்பாள் - முத்தாகும்

ஆடி நிழலோ டமுத மொழிபேசி
ஓடி விளையாடு மொல்லைதனில் - நீடிய

சோதி மணிமுடியான் சொர்ணத் திருத்தேரும்
வீதி கரைபுரள மேவுதலும் -- சூதிவரும்

கண்ணனையா ருஞ்சென்று கைதொழுதா ரன்னவர்தம்
கண்ணனனையா னுஞ்சென்று கைதொழுதான் -- பண்ணுடனே

செங்கடம்பம் பாடித் திருப்பதிகம் செப்பினா
ரிங்கிவளும் ஏதோ இதழசைத்தாள் - தங்குமெழில்

ஆரா வமுத னமரு மயிலுமக்
கூரா ரயிலும் கொடியுமவர் - சீரார்

கனிவா யிதழுங் களிப்புறக் கண்டா
ளினியா ளிவரா ரெனலும் - அனைமாரும்

தெய்வப் பழமறையின் தீங்கொம் பிற்பழுத்த
சைவப் பழமதுகாண் டையனாம் - உவ்வமெனத்

(பழங்கண்ட வையனாம் என்றிருப்பின் பொருட் சிறப்பும் சீர்ச் சிறப்புமுள்ளன)

தித்திக்கும் சொல்லினா னந்தச் செழுங்கனியென்
தத்தைக்கு வாங்கித் தருகென்ன -- முத்திருக்கும்

ஆம்பல வாயணங்குன் னஞ்சுகத்துக் கும்முனக்கு
மாம்பழந் தானல்ல வறியாயோ - நாம் பெறுதற்

கொய்யாப் பதமுடைய தேந்திழா யாவர்க்கும்
கொய்யாப் பழமதுகாண் கோதையே - வையாதே

உள்ள மதன்பா லெனவுரைத்தா ரொண்டொடியார்
கள்ள மதனம்பு காட்டாது - மெள்ளக்

கரந்தா னெகிழக் கரந்தான் கனியா
தரந்தா னமையா தரற்றி - வருந்த

நறையாருந் தொங்க லுறைமார்பன் நாலு
மறையானுந் சென்று மறைந்தான் -- முறையானே

பெதும்பை

ஈரஞ்சு மொன்று மிகவாகப் பொதும்பையாள்
காரஞ்சு மென்ற கருங்குழலாள் - சேர

வுருகவிட்ட பொன்னா லுருவமைத் தின்னும்
மெருகிட்டுக் கொள்ளாத மெய்யாள் - கருகிவரும்

கங்குற் பொழுதிற் கடன்முகட்டி லேயுதிக்கும்
திங்கட் கொழுந்தின் சிறுநுதலாள் - அங்கசனூல்

தாயரும் காணா வகையிற் றனித்திருந்து
பாயிரம் பேணும் பருவத்தாள் - தூயமறை

வல்லோரைக் கேட்டறிந்து மைந்தர்மேற் பாய்வதற்கு
நல்லோரை பார்க்கு நயனத்தாள் -- பல்லணிகள்

வட்டமிடும் காளையர்கள் வண்ணத் திருத்தோண்மேல்
பட்டும் படாதிருப் பார்வையாள் -- விட்டிருக்கும்

வெள்ளித் திரையில் வெளியேறும் கூத்தர்போல்
மெள்ளத் தலைநீட்டு மென்முலையாள் - உள்ளகன்று

கூடி யெழுந்து குவியுமுலைப் பாரத்தால்
வாடித் தளரா மருங்குலாள் - நாடினவர்க்

கீரமிலா நெஞ்ச மிறுகியவா றென்ன
ஆரமுத முறாத வல்குலாள் -- பீரிட்ட

கொங்களிகள் கொள்ளக் குலைப்புறத்தே தள்ளாத
செங்கதலித் தண்டனைய சீர்த்துடையாள்- செம்பஞ்

சணிய சிவபதலா லாடவர்தம் குஞ்சி
பணிய சிவக்காப் பதத்தாள் -- மணியழுத்திப்

பொன்னா லியன்ற புதுமணி மண்டபத்து
மின்னா ருடன்சூழ்ந்து மெல்லநடந் - தன்னாள்

மயிலேறி யன்ன மணியூச லேறி
அயிலேறு கண்ணா ரசைப்ப -வெயிலார்

முகமண் டலமசைய முத்துவியர் வாடச்
செகமண்ட லங்கண்கள் தேட - அகங்கொண்ட

முத்து வடமாட முன்கை வளையாட
கொத்தலருங் கூந்தல் குலைந்தாட - முத்தர்

மனமாட மார னடமாட வஞ்சத்
தனமாடத் தானூச லாடிக் - களஞ்சேர்

மருத வரைமுருகன் மாண்பெல்லாம் கூறக்
கருதிக் கருதி கலந்து - அருள்கனியு

மாறு திருமுகமும் பாடி யமர்ந்தாடு
மாறு படைவீட் டணிபாடி - வீறுகொண்டு

தேவர்க் கருளும் திருச்சேவகம் பாடிச்
சேவற் கொடியின் றிறல்பாடி - மேவும்

அணிமயிலும் செங்கை யயில்வேலும் பாடிப்
பணிகொண்ட பங்கயமும் பாடிப் - பிணிகொண்ட

மாயப் பிறப்பறுத்த வாபாடி மாதரார்
ஆயத் துடனாடு மக்காலை - சேயோன்

குமரகுரு நாதன் குறத்தி மணவாளன்
சமரமுக கெம்பீரன் சாமி - விமலனருள்

சேந்தன் குறிஞ்சிநில வேந்தன் சிலம்பனலர்
காந்த ளணியுங் கடிமார்பன் - சாந்த

முருவா யமைந்த வொருவன் ஒழுகு
முருகார் வதன முதல்வன் - வரவறிந்து

தேர்மீ தொருவன் றிருவீதி போந்தானென்
றோர்மாது வந்தங் குரைத்திடலும் - ஏர்தங்கும்

ஊச லிறங்கி ஒளிறுமணி யாசார
வாசல் கடந்து மறுகுவந்து - தேசுபெறு

மையன் கமலமுக மாறும் அருளொழுகுஞ்
செய்ய திருவடியுஞ் சேவித்து - மெய்யம்

புளகமெழ வாசப் புரிகுழலுஞ் சோரக்
களகளெனக் கண்ணருவி காலக் -- குளறுபடு

சொல்லுடைய ளாகித் தொழுதங்கு சூழ்ந்திருந்த
மெல்லியரை நோக்கி விளம்புவான் - வல்லியரே

கள்ளம் படநின்ற காதற் றிருநோக்கால்
உள்ளம் கவர்ந்த வொருவனுக்கு - மெள்ளவங்குச்

சென்றென் வருத்தமெலாம் சேர வுரைப்பீரா
லென்றங் குரைத்திட் டிரங்கிடலும் - நின்னொருத்தி

முன்னாலு மாலை யுடையான் முழுதுணர்ந்து
சொன்னா லறியாத தொல்லையான் -அன்னமே

தந்தை சிறுமதியும் தான்பெறுமா றில்லாதான்
எந்த விதம்சென்று ரைபேனான் - சந்தென்று

வாடு மிடையானை மார்போடு சேர்த்த்ணைய
ஏடவிழும் பூம்பாய லேற்றினார்- நீடுபுகழ்ச்

செய்யோனு மந்தத் தெருவகன்றான் சீர்குலைந்த
மெய்யோனும் மெய்யானாய் விட்டகன்றான் - துய்ய

மங்கை

மங்கை யெனும்பருவ மாதொருத்தி மாரவேள்
செங்கை சிவக்க வரும் சீருடையாள் - பொங்கும்

சலத்தி லுதித்திட்ட தையலா ரன்றி
னிலத்தி லுவமியிலா நீராள் - தலத்திற்

பொருந்து மருதப் பொருப்புடையா னூர்தி
முருந்துறளு மூர லுடையாள் -- வருந்துமொரு

மாலுதிக்கு மைந்தர் மனங்கவர நஞ்சுமிழ்ந்து
நாலுதிக்குஞ் சுற்று நயனத்தாள் - சாலவெழுங்

காமக் கிறுகிறுப்புக் காமக் கிழங்கென்று
சேமித்த தொக்கும் திருமுலையாள் -ஏமத்

தனைவோரு முந்திவந் தாடு மருதச்
சுனைபோலு முந்திச் சுழியாள் -- முனைவன்

கனைவார் கழல்கள் கனிந்தோது மாந்தர்
வினைபோலு நைந்த விடையாள் - சினயார்ந்த

தேமருவு கற்பகத்திற் செந்தேன் றுளிப்பது போல்
காமரச மூறும் கடிதடத்தாள் - நாம

விடையோ னெரிவிழியால் வெந்து பொடியான
படைமதனைக் கண்ணாற் படைப்பாள் - புடைபரந்த

நோக்கான் மயலளித்து நோக்கா லொருநொடியிற்
போக்குஞ் தொழிலும் புரிந்திடுவாள் - நோக்கினவர்

ஆராத மாலா லழிந்து படாதிருக்க
வாராற் றனத்தை மறைத்தருள்வாள் - சீராக

ஆடிய செல்வ னடியிணைபோல் மாலானார்
தேடி யலையும் திருவடியான் -- வீடங்

குறுபத்த ரும் உவப்ப(ருமுவப்ப)க் கூடலிலே யாட
லறுபத்து நாலு மயர்வாள் - செறிவுடைய

வண்டு பயிலும் மலர்க்கரத்தார் சூழ்ந்துவர
வண்டு பயிலு மலர்ச்சோலை - கண்டு

மகிழும் கருத்துடையாள் வானளவு நின்ற
மகிழும் குருந்தமும் மாவும் - அகிலும்

செருந்தியும் சண்பகமும் செங்கடம்பும் தேக்கும்
நெருங்கு மிடம் பலவு நின்று - திருந்தியதோர்

செய்குன்ற மேறிச் சிலம்பி னெதிர் கூவித்
தையலரோ டாடுஞ் தருணத்துச் - செய்ய

தன்னிரண்டு பாதமலர் தாழ்ந்து பணிவோரைப்
பன்னிரண்டு கண்ணாலும் பார்ப்பான் - கனிவந்த

தேனுக் குவமைசொலும் செஞ்சொல்லி னாள்வள்ளி
கானக் குற மடந்தை(க்) காவலன் - ஊனமிகு

(செட்டி என்பது முருகற்கு இயற்பெயரானது பற்றி நூலாசிரியர் அதை விலக்கினார் என்பது காவிய நயமிக்கது.)

கன்மத் தினையறுத்துக் காலன் பணிகுறையச்
சென்மத் தினையறுக்கும் செவ்வேளான் - வன்மப்

பளகு பவநோய்ப் பரிகாரி பன்னு
மளவிற் கலைதோய வண்ணான் - இளகு

பதஞ்சேரும் பாகின் பணிமொழியாள் வள்ளி
பதம்சேர் பணிசெய்யத் தட்டான் - இதஞ்சேர்

வேதந் தருமுதலி வெற்றிவேற் கைக்கோளன்
ஓது மழகி லொப்பிலியன் - சீதமிகு

கொங்கு வளநாட்டான் கோழிபிடிக் குங்குறவன்
துங்கமிகுந்த துடிப் பறையன் - தங்கமுயர்

வீடுதருஞ்(ந்) தாளினான் மேகமண்ட லங்கடந்து
நீணடுதிருத் தேரில் நெருங்குதலும் - தேடரிய

விண்ணமிர்த மாயினான் மேதினியில் நந்தமக்குக்
கண்ணமிர்த மாகவந்தான் காணென்னப் - பெண்ணமிர்த

மன்னாளுக் கங்கொருத்தி வந்து பணிந்துரைக்க
மின்னார் குழாமதனை விட்டுவிட்டு - முன்னின்ற

தேங்கருணை வாரிதியைத் தெய்வச் சுடர்க் கொழுந்தை
ஓங்கு முலகிற் கொருமுதலை - யாங்கவரும்

கண்டா ளிலையோ கடிமார்புக் காதரவு
கொண்டாள் மயலுங் குடிகொண்டாள் - தண்டாத

சித்தம் பறிகொடுத்தாள் சேருநா ணற்றாள்
மத்தம் பிடித்து மதிகெட்டாள் - அத்தருணம்

தேடியலைந்து தெருவி னிடைக்கண்ட
சேடியர்க ளெல்லாம் திரண்டு - போடிநீ

வேல்சேரு மங்கையரை கண்டோ விரகானாய்
மால்சேரு மங்கையரே வாருமெனக் - காலோடு

சேர்த்துப் பிடித்துச் செழுமுனையிற் கொண்டுய்த்துச்
சீர்த்தமலரமளி சேர்த்தினார் - வேர்த்தயரும்

மெய்குளிரு மாறினிய மென்பனிநீர் மேல்வீசிக்
கையார் குளிரியினாற் காலெழுப்பிச் - செய்தவொரு

குற்றேவ லாலுய்த்த கொம்ப ரனையாளும்
சற்றே தெளிந்து தனையறிந்தாள் - கற்றோருக்

காரா வமுதனையா னண்ட முகடுபடும்
தேரரனு (தேரானு) மற்றொன்றுந் தேரானாய்ச் - சீரார்

தெருவகன்று சென்றான் செறுமலரைத் தூவி
உருவகன்று நின்றானு மோய்ந்தான் -- முருகார்

மடந்தை

மடந்தைப் பருவத்தாள் மாரன் புகழெல்லாம்
அடங்க வரசா ளணங்கு - கடந்தபெரு

முத்தர் மனங்கவரு மோகினிப் பெண்ணாடவர்தம்
சித்தத் தினிக்கின்ற தேன்பாகு - முத்திருக்கும்

நீலக்கடலி னெடுந்திரையி லேதிளைத்த
கோல முகிலின் குணங்கொன்று - சோலைபயில்

காட்டி லுளமலரும் கண்டா ருளமலரும்
கூட்டிச் செருகுகின்ற கூந்தலாள் - நாட்டமுடன்

பொங்கு மொழியாற் புறக்கிட்டுத் திங்கடனைச்
செங்கடலில் வீழ்த்துந் திருமுகத்தாள் - தங்கெழிலால்

மட்டவிசும் பூந்தா மரைமுகையின் வீறடங்கக்
கட்டவிழச் செய்யும் கனநகிலாள் - முட்டப்

பலவருட மானாலும் பஞ்சணையிற் கூடும்
கலவி தனக்கிளையாக் காந்தை - வலமுடைய

சித்தசனுக் கேற்றதொரு சேனா பதியாமென்
றெத்திசையும் போற்று மெழிலுடையாள் - இத்தரையில்

பெண்ணிற் பெருந்தக்க யாவுள்ள வென்றிந்த
மண்ணிற் புகழ வருந்தையல் - அண்ணல்

முருகன் றிருநாமம் முப்போது மோதி
உருகிக் கனியு முளத்தாள் - சரிகை

இழையிட்ட சேலை இடைக்கார்த்து வைரக்
குழையிரண்டு காதிற் குறுத்துக் - கழையனைய

தோளுக்குத் தொய்யி லெழுதிச் சுடராலும்
வாளுக்கு மையும் வரைந்திட்டு - வேளுக்கு

வைத்த பொற் கும்பக ளென்ன வளர்ந்தோங்கு
மொய்த்த தனஞ்சேர முத்தணிந்து - கைத்தலத்தில்

ஆடகப் பொற்கடக மார்த்துத் திருவடிக்குப்
பாடகமும் சீராய்ப் பரிந்திட்டுச் - சூடகச்

செங்கைதனிற் பந்தெடுத்துச் சேடியர் தற்சூழப்
பங்கயமா தென்னப் பதம்பெயர்த்து - துங்கப்

பணிகொண்ட ரத்னப் பதக்கமொளி கால
அணிகுண்ட லங்க ளசையத் - திணிகொண்ட
முத்து வடங்கள் முலைமீ தெழுந்தாட
நத்தப் புலாக்கு நகைவீசத் - தத்து

நடையோ திமங்கண்டு நாணி விளர்ப்ப
விடையோ விரிந்தூச லாடக் - கடைவிழிகள்

சென்று செவியழைப்பச் செங்கை யணிமலர்கள்
கன்றிச் சிவக்கமணிக் கந்துகத்தைத் - தன்றனத்துச்

கொப்பாக விந்த உலகிற் புலவரினிச்
செப்பா திருக்கும் வகை சிந்தித்துத் - தப்பா

தடித்து விளையாடு வாளாக வாங்குத்
தொடிக்கை மகளொருத்தி தோன்றித் - துடுக்குடனே

வீதியிலே என்று விளம்ப விலையாட்டை (விளையாட்டை)ப்
பாதியிலே விட்டுப் பறந்துவந்து - சோதிவரும்

பளிக்குநிலா மண்டபத்திற் பாய்ந்தேறிப் பாங்கில்
ஒளிக்காலும் வேதிகையி னும்பர் - களித்துநின்று

வெள்ளிக் குவட்டில் வியன்மதி யொன்றுற்றதென
மெள்ளத் தலைநீட்டும் வேளையில் - துள்ளியெழும்

வேலின் கடைமணியும் வெற்றிதரு குக்குடமும்
மேலிவர்ந்த மஞ்சை (மஞ்ஞை) விரிசிகையும் - கோலத்

தருவதன மாறும் தவளநிற மார்பும்
தெருவினிடை கண்டுதெரி சித்தாள் -உருகுமனத்

தாசை பெரிதானா ளாதரவு பட்டிடையிற்
றூசை நெகிழவிட்டுச் சோர்வுற்றாள் - மாசுடைய

பந்தங் கழல்வதுபோல் பத்தங்கு கைநெகிழ்ந்தாள்
கந்தங் கரையக் கணிர்சொரிந்தாள் - நொந்தாளைச்

சேடியர்க ளெல்லாம் திரண்டுவந்த மான்களெனக்
கூடி யமளிதற் கொண்டுய்த்து - நாடியினால்

நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
வாய்நாடிச் செய்யா மருத்துவர்போல் - வேய்நாடுந்

தோளியனாள் கொண்ட துயர்க்கேது துட்டமதன்
வாளியின வோரா மடவார்கள் - கேளியராய்

சாந்தம் தெளித்துத் தடவினார் மேனியெலாம்
மாந்தளிரா லொற்றி வருடினார் - ஏந்திழையும்

அல்லும் பகலுமெனை ஆதரித்தீ ரிப்பொழுது
கொல்லும் படிக்கலவோ கூடினீர் - நல்லதொரு

சந்தனத்தைத் தந்தெனக்கிங் கப்பென்றா லெந்தனத்துக்
கிந்தனத்தை யப்புகிறீ ரென்செய்தீர் - அந்தப்

பனிநீர் தெளியென்று பன்னினா லேனக்
கினிநீர் தெளிக்கிறீர் கேளீர் - இனியீர்

அறுசுவை யுண்டி யருத்தி எனக்கு
அறுசுவை யென்றே அறைந்தீர் - நறும்பும்

படுக்கை யிடத்துப் பருக்கை பரப்பி
இடுக்கை யலவோ விழைத்தீர் - விடுக்கவினி

என்றாள் பலரு மிரங்கி மனங்கன்று
நின்றார் பானு நெடுகவழிச் - சென்றான்

அரிவை

அரிவை யெனும் பருவத் தாளொருத்தி யந்தத்
தெரிவை தனக்கிளைய தேவி - விரிமலரோன்

பன்னாட் படைத்துப் படைத்துப் பயின்றிந்தப்
பொன்னாட் படைக்கப் புகுந்திட்டான் - மின்னார்

கொண்டல் தனையொருங்கு கூட்டித் தளையிட்டு
வண்டரற்றும் கூந்தலா வைத்திட்டான் -- விண்டலத்தின்

திங்க ளிளநிலவும் செந்தா மரையெழிலும்
பொங்கு முகமாய்ப் பொருத்தினான் - மங்கைக்கு

மானைப் பிடித்து மருண்டகண் ணாக்கினான்
தேனைக் குழைத்துமொழி சிட்டித்தான் - மானின்

எயிறு முலைபோல் இடையு மிலைபோல்
வயி'று மிலைபோல் வகுத்தான் - செயிர்தீர்ந்த

பங்கயத்தை நல்ல பதமாக்கிப் பாரதனில்
மங்கையர்க்கு நாயகமாய் வைத்திட்டான் - பங்கமிலா

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய்க்கு நல்ல அமுதாகும் - தையல்

வளையாடு மங்கரத்தி மாமருத தீர்த்தம்
விளையாடு வான்விரும்பி மேவி - தளைபாசத்

தின்கட் டவிழ்ப்பதுபோல் தேனாறும் கூந்தலின்
பின்கட் டவிழ்த்துப் பிறகிட்டாள் - முன்தொட்ட

ஆசை யறுப்பதுபோ லாகமெலாம் சூழ்ந்திருந்த
தூசை யவிழ்த்தெடுத்துத் தூரவைத்தாள் - வாசப்

பிணிமுழுதும் போக்குகின்ற பெற்றிமைபோல் பூண்ட
பணிமுழுதும் சேரப் பறித்தாள் - தணிவில்

இருவினைக டம்மை எரித்திடுவாள் போலப்
பருமுலைக ளோடெழுந்து பாய்ந்தாள் -- மருவும்

கருவு தரங்கடந்த காட்சியே மானப்
பொருதிரையி னந்திப் பொலிந்தாள் - மருவும்

கஞ்சங் கலங்கவிரு கட்குவளை சேப்பநறுஞ்
செஞ்சந் தனமார்பின் சேறழிய - எஞ்சலிலாப்

பேரின்பங் கண்ட பெரியோர்போ லாராத
நீரின்பந் தன்னிலே நீந்தினாள் - சீரொன்றும்

ஏலக் குடன்மடவார் எல்லியரோ டுங்கூடிச்
சாலக் குடைந்துகுடைந் தாடினாள்- தூலப்

பிறவிக் கடற்கரையைப் பெற்றவா போல
நறவுச் உனைக்கரையை நண்ணித் - துறவுடையார்

உள்ளம்போல் வெள்ளென்ற வோராடை மேலணிந்து
வெள்ளம்போ லன்பு மிகப்பெருக - வள்ளி

கணவன் திருவடிக்கே காதலாற் பூசை
பணவந்து நின்று பரிந்து -- மணமிகுந்த

பூவைச் சொரிந்த புனலால் முழுக்கிட்டுப்
பாவைப் புகன்று பணிந்தேத்திக் - கோலே

மருத வரையுமிழ்ந்தே மாசில் மணியே
கருதியவ ருள்ளக் கனியே - உருவிற்

பிறவா வரந்தா பிறந்திடிலோ உன்னை
மறவா திருக்க வருள்வாய் - புறவாய்ப்

புழுவாப் பிறக்கினும் புண்ணியா உன்னை
வழுவா திருக்க வருள்வாய் -- நழுவா

இருள்வாய்ச் செலுத்தி இருத்திடினும் உன்றன்
பொருள்சேர் பதமிரண்டும் போற்ற - வருள்வாய்

என்று பலசொல்லி ஈசனடி போற்றி
நின்று கனிகின்ற நேரத்தில் - என்றும்

குறையா வழகுடையான் கோலமணித் தேரும்
முறையாக வந்து முழங்க -மறைநாலும்

தேடும் மருந்தெனக்குத் தேடாமலே வந்து
கூடும் படிக்கருளும் கூட்டியதென் - றோடுகின்ற

தேரிற் படரும் சிவக்கொழுந்தைத் தெண்டனிட்டுச்
சேரில் உனைச்சேர்வே னென்றிறைஞ்சிக் - கூருடைய

வேலோன் திருமார்பில் மேவுமொரு வெண்கடம்ப
மாலை எனத் தழுவ மால்கொண்டாள் - சேல்விழியால்

அள்ளிக் குமரன் அழகைப் பருகியவள்
வெள்ளப் பெருங்காதல் வீழ்ந்திடவும் - துள்ளுமிலை

வேலோன் றிருத்தேரும் மெல்லியகலை விட்டகன்று
மேலோர் தெருவினிடை மேவியதே - மேலோரும்

விடற் கரிய வெழிலுடையா விண்ணவரும்
தேடற் கரிய தெரிவையாள் -- பீடுடைய

மண்டு பெருங்கடலே வார்குழலாய்க் கார்நிறம்
கொண்ட தெனத்தோன்றும் கூந்தலாள் - பண்டு

அடலுடைய தேவர் அதிரக் கடைந்த
கடலி லெழுவிடத்தின் கண்ணாள் - திடத்தி

னமுதமிகும் சொல்லினா ளாடுசதிக் கேற்பத்
திமிதமிடும் தனத்தின் சீராள் - தமிழ்வழங்கு
தேய மெனப்பரந்து திக்குவிச யஞ்செய்து
மாயங் குடிகொண்ட வல்குலாள் - சாயமிடு

பூந்துகில்சுற் றுந்துடையாள் பொற்பூரவே கமழும்
காந்தகிலும் தோய்ந்த தடம்புயத்தாள் - காந்திவரும்

நித்திலத்தால் வைரத்தால் நீலமணியா லிழைத்த
பத்தியொளி ரம்மானைப் பாங்குபெறச் - சித்திரத்தி
னன்னா ரிருந்துவிளை யாடுதற்குத் தன்னுடைய
பொன்னார் கரத்திற் பொருந்தினாள் - மின்னார்கைக்

கொள்ளு மளவிலே கோளென்ற பேர் கொண்டு
மெள்ள விசும்பினிடை மேவியதே - துள்ளும்

நவமான கோள்களொடு நாங்களொரு மூன்று
நவமான கோள்களென நண்ணித் - தவங்கொண்ட

சந்திரராய்ச் சூரியராய்த் தக்க விருநிதிகொண்
டிந்திரராய் வானத் திருந்திடினும் - பந்தமற

வீடு பெறலென்னும் விண்ணுலகி லில்லையென
நீடுதல நோக்கி நெருங்குவபோல் - பீடுடைய

மெல்லியலார் கைத்தலத்து மீண்டும் திரும்பிவர
அல்லிவரும் கூந்த லழகுடையாள் - சொல்லிவரும்

பெம்மா னிருசரணப் பெற்றி யெலாம்பாடி
அம்மானை யாடும் அளவையிலே - அம்மானுக்

கங்குவளை தந்தானு மங்குவளைத் தாரானும்
பொங்கு வளமூர் பொருப்பானும் - தங்குவளை

வேலா யுதத்தானும் மெய்யார் பதத்தானும்
காலா யுதங்கொண்ட கையானும் - மேலாரும்

வானவர்க்கு மீயானு மானவர்க் கீவானும்
தானவர்க்குச் சார்ந்ததுணை யாவானும் - மோனமிகு

புள்ளிமயி லூர்ந்தானும் போதவய லூரானும்
வள்ளிமய லூர வரவானும் - மெள்ளமெள்ள

உள்ளற் கினியானும் ஓதக் கினியானும்
கள்ளற் கினியான் கனியானும் - வள்ளன்மிகு

மீராறு கையானும் ஏறூர்ந் துகைப்பானும்
சாரார்க்குத் தக்கசம னாவானும் - ஏரூர்ந்த

அம்பவள வாயானும் அன்பருக்கு வாய்த்தானும்
கும்ப மதகரிமேற் கொள்வானும் - வெம்பிவரு

தும்பிக்கிளையானும் தும்பிக்கிளையானும்
பம்பிக் கிளைத்துப் படர்வானும் - நம்பினவர்க்

காறுதலை யாவானு மாறுதலை யாவானும்
ஆறுதலை யாவானுக் காசானும் - மாறுபடும்

வம்பற் குடையானு மம்பொற் குடையானும்
தும்பை மலரின் தொடையானும் - நம்பனருள்

வேத சிரந்தொடர விண்ணோர் குலந்தொடரப்
பாதச் சிலம்பி னொலிபடர - ஏதுமிலாச்

சேவற் கொடியாடத் திண்டோ ள் வடமாட
ஏவற் குழாங்க லினிதாடத் - தேவர்க்குச்

சேனாபதியும் திருத்தே ரினிலேறி
வானார் மறுகின் வழிவந்தான் - தேனார்ந்த

கூந்த லுடையான் குறுகிக் கரமிரண்டும்
ஏந்தலுடையா னிறைஞ்சினான் - சார்ந்திட்ட

போதற் கறிவுறுத்த போதற் கருகடைந்து
காதற் கடலிலே கால் வைத்தான் - மோதும்

கரும்புத் தனுவெடுத்துக் கைசிவக்க வேந்தி
அருப்புமல ரங்கசனும் தூர்த்து- வருத்தலுமே

நந்தாத காதலால் நைய விடலழகோ
அந்தோ தகாத தறிந்திலையோ - வந்தா

தரவு செயாவிடிலோ தக்க பழிசாரும்
கரவு செயாதெனைநீ காப்பாய் - இரவுவர

அன்றில் முழங்குவது மம்புலி கொல்லுவதும்
தென்றல் முடுகுவதும் தேராயோ - அன்றியும்

ஐயம் வந்ததென்ற னாகத்திலே நுழைந்து
செய்யுங் கொடுமை தெரியென்பான் - ஐயனே

கந்தாகந் தாவென்று கைதொழுவாள் காதலறச்
சந்தாக தாவென்று சாற்றுவாள் - வெந்துமதன்

நீறா னென்று நினைத்திருந்தே னின்செயலிவ்
வாறானா லெவ்வணநான் வாழ்வேனென் - றாறாகக்

கண்ணீர் விடுத்துக் கரையழிந்தாள் காவலெனும்
பெண்ணீர்மை யெல்லாம் பிரிந்துநின்றாள் - விண்ணிலுயர்

பொற்றே ரிருந்தானும் புக்கா னருகிருந்த
மற்றோர் தெருவினிடை மன்னினான் - பெற்றிமைசேர்

பேரிளம் பெண்

பெண்ணென்ற நாமம் பிறர்க்கில்லைப் பேரிளம்
பெண்ணென்று பேசும் பெருமையதென் - கண்ணென்று

சொல்லித் தருக்கித் திரிவாள் தொலையாத
கல்வி கரைகண்ட காரிகையாள் - மெல்கும்

தலைமகட்கு வெட்கி தளர்ந்த திருவும்
அலைமக ளாயின ளன்றோ - கலைநிறைந்த

நூலைப் படித்து நுனித்து நுகருமின்பப்
பாலைப் பருகிப் பசிதீர்ந்தாள் - மேலுநனி

சிக்குப் படுத்துநறுந் தேனாறுங் கண்ணியின்றிக்
கொக்குப் படுத்ததெனும் கூந்தலாள் - மிக்கவொளிச்

செங்கதிரைக் கண்டதொரு திங்கள் தனைமானப்
பொங்கு முகத்தின் ஒளிகுறைந்தாள் - அங்குழலின்

நூல்போல் மெலிகின்ற நுண்ணிடைக்குப் பாரமென்று
வேல்போல் விழிகளுக்கு மையெழுதாள் - மாலால்

நிலைகுலைந்து கற்பின் னெறியிழந்தோர் போலத்
தலைகுனிந்து நிற்கும் தனத்தாள் - கலைமான்

மருகன் றிருவுருவ மல்லாது மற்றோர்
உருவதனைக் கொள்ளா வுளத்தாள் - முருகன்

மயிலுக்குச் சாய லனைத்தும் வழங்கிக்
குயிற்குக் குரல்கொடுத்து நின்றாள் - இயல்சேர்ந்த

புத்தகமுங் கையளாய் பொற்பலகை மீதிருந்து
சுத்த வயிதீகத் தோற்றமுடன் - வித்தகஞ்சேர்

கந்தர் கலிவெண்பாக் கந்த ரனுபூதி
வந்த கலிதீர வாசித்து - முந்தும்

திருமுறைகள் யாவும் வருகுறைகள் தீர
ஒருமுறையா வோதி உணர்ந்து - பெருகுவளத் (ஒருமுறையா லோதி)

தொல்காப் பியமுதலாச் சொல்லு மிலக்கணத்தின்
பல்காப் பியவளமும் பார்த்திருந் - தொல்காத்

திருவுலா வானவகை சிந்தித்துச் சென்று
கருவுலா வாதவகை கண்டு -பொருவிலா

ஆகமபு ராணவகை யாதியவெ லாமறிந்து
மோக மயலாதி முன்கடிந்து - தாகமெரித்

தூதும் படித்தான வுண்மைநெறி நெங்சுவிடு (தோதும் படித்தான)
தூதும் படித்துத் துயர்விடுத்தாள் - யாதுமொருங்

காய்ந்து வருமளவை ஆங்கொருத்தி யந்திரத்திற்
பாய்ந்து பணிந்துசில பன்னுவாள் - ஏந்திழையே

விண்கொண்ட தேவர் சிறைமீள வென்றிரண்டு
பெண்கொண்ட தெய்வப் பெருமகனார் - கண்கண்ட

தெய்வ மெனச் சொல்லித் தேயமெலாம் போற்றுகின்ற
துய்ய தனிப் பொருளாய்த் தோன்றினான் - வையத்தில்

இன்றா யுளதாகி யாவையுமா யெல்லாமாய்
ஒன்றாய் முளத்தெழுந் தோங்கினான் - நன்றான

வாறு தனியெழுத்து மாறுமுகங் கொண்டு
கூறுகரம் பன்னிரண்டும் கொண்டுநின்றான் - ஆறுபடி

வீட்டுக் கதிபனாய் மேவினான் விண்ணிலங்கு
வீட்டுக் கதிபனாய் வீதிவந்தான் - ஏட்டுச்

சுரைக்காய் கறிக்குதவா தென்றுணர்ந்தும் வெற்றி
உரைக்கேன் கிடந்துள்ள மோய்ந்தீர் - விரைமலர்த்தாள்

நல்லாரும் பொல்லாரும் நானிலத்தி லேயுதித்த
வெல்லாரும் காண வினிதுவந்தான் - நல்லாரும்

காண வருதிரெனக் காரிகையா ளும்மவளைப்
பேணல் பெரிது பெரிதென்று - நாணங்

கழியக் கழிய வழிச்சென்றாள் கண்ணீர்
வழிய வழிய வழுதாள் - பழிசேர்ந்த

பெண்ணாய்ப் பிறந்து பிறந்து பிறரடைய
வொண்ணாத் துயரத் துழன்றிருந்தேன் - அண்ணாஅல்

உன்னிலும் வேறாமென் றுன்ன விடமுண்டோ
என்னிலும் வேறலநீ என்னெனில் - முன்னே

எனைத்துநீ அங்கதுநான் என்றுநீ அன்றுநான்
வினைத்துநீ செய்வதுநான் மேலும் - உனைப்போலக்

காணா தனவெல்லாம் காட்டிக் கழல்காட்டித்
தோணாத வின்பங்கள் துய்ப்பித்தேன் - காணாதோ

ஆதலா லென்றனுக் கப்பனே நின்னடிப்
போதலால் வேறு புகலிடம் -- யாதெனச்

செவ்வா யணங்கு தெரிசித்துச் சித்திரமும்
ஒவ்வா தெனநின் றுளங்கனிந்தாள் - அவ்வேளை

வம்பிட்ட மாலை யுடையானை மன்மதனும்
கும்பிட்டு வேறுகுறிக் கொண்டான் - அம்பொற்றார்

எழுபருவ மாதரு மிவ்வா றொருங்கு
குழுவினரா யங்குக் குலவ --முழுதுலகும்

இன்ப மயமா யிருந்துடன் சூழ்ந்துவர
அன்பத் தமர ரருகுவர -- வன்புற்றுப்

பொருதமருங் கண்ணார் புயத்தமர வந்த
வொருமுருகன் போந்தா னுலா.

மருதவரையுலா முற்றிற்று

மருதா சலமமர்ந்த மால்மருகன் சேவடி
கருதா ரகந்தான் கனிந்து -- முருகா
முருகா வெனக்கூவ முத்தமிழ்ப்பா செய்தான்
இருகா லுறுதுணையா மெற்கு

தந்தைதாம் செய்த தமிழ்ப்பாலைத் தானருந்தி
மைந்தனும் அச்சின் மடியேற்றி-செந்தமி
ழுலகிற் குவந்தளித்தான் உண்டோ உவமை
உலகி லிதற்கு வுரை?

வாழ்க தமிழென்று வாய்பிதற்றி வாழ்வார்கள்
தாழ்க முருகன்றன் தாளென்று - ஆழ்கடலின்
முத்தொன்று வீந்தநன் முத்துப் பெரும்புலவற்
கொத்தாரு முண்டோ உரை?