பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

இயற்றிய

தேவை உலா

     தேவை உலா (தேவையுலா) என்னும் நூல் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய நூல். 18 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. தேவை என்பது ஊரின் பெயர். இது இராமேசுவரத்தைக் குறிக்கும். உலா என்னும் சிற்றிலக்கிய வகை நூல்களில் ஒன்று.

காப்பு

ஆதியுலாக் கொண்ட வமலனிரா மேசன்மேற்
சோதியுலாந் தேவையுலாச் சொல்லவே-காதலாம்
தந்தத்தொந் தித்தந்தித் தாவென்றா டுஞ்சிவன்சேய்
தந்தத்தொந் தித்தந்தித் தாள்.

நூல்

நீர்கொண்ட மேக நிறங்கொண்ட மால்கமலப்
போர்கொண்ட கண்மலராற் பூசித்தும்-சீர்கொண் 1

டுப மன் னியுவி னுபதேசம் பெற்றுஞ்
செபமன் னியபூசை செய்தும்-இபமென்ன 2

வந்து பிறந்த மதலையைச் சாம்பனென
இந்துகுலத் தொன்றுபெய ரிட்டழைத்தும்-வெந்துயரை 3

மேன்மாற்றும் வில்வோத கேச்சுர லிங்கத்தை
ஆன்மார்த்த பூசையா வர்ச்சித்தும்-நான்மறையின் 4

வேர்பெற்ற வீதி விடங்கரைப் பாற்கடலின்
மார்பிற் சுமந்து வணங்கியும்- நேர்பெற்ற 5

தொண்டு புரியுந் தொழும்பெல்லா நாணாளுங்
கண்டு புரியுங் கருணையால்-அண்டருல 6

கின்னு நடுங்கு மிராவணனைக் கொன்றபழி
தன்னை யகற்ற றலைக்கீடா-என்னையோர் 7

பல்லா யிரவர் படைத்த மலமாதி
யெல்லா விருளு மினிதகற்றத்- தொல்லைநாட் 8

24 தீர்த்தங்கள்

காலவரையடைந்துங் காலவரையடையாச்
சீலமுடையசக்ர தீர்த்தமும்-கோலவரைப் 9

பேதையொரு பாகன்போற் பேயுட னேயாடும்
வேதாள தீர்த்தமெனு மென்புனலும்-பூதலத்து 10

வாவுந் திடமதிக்கு வந்த மறுத்துடைத்த
பாவ விநாசப் பசுந்தடமும்-ஆவலாற் 11

சீதைதரும் பட்டத்தாற் றேவேந் திரப்பட்டங்
கோதகன்ற தாஞ்சீதா குண்டமும்-நீதிபோய்த் 12

தேயமிழந் தோனிழந்த தேர் பரியெல் லாங்கவந்த
வாயி லுதிப்பித்த மங்கலமும்-நேயத்தால் 13

ஏந்திய நல்லோரை யேகாந்த ராமன்பாற்
சேர்த்து விடுமமுத தீர்த்தமும்-பூத்தமலர் 14

வீட்டிலுறை வேதாவை மிக்கமக வானாகக்
கூட்டி யருள்பிரம குண்டமும்-வாட்டமுறு 15

நொய்யமனத் தன்மசக னூறுமக வானாகச்
செய்யு மனுமகுண்ட தீர்த்தமும்-ஐயமற 16

மானத வாவிவடி வாய்த்தெய்வ யானைதனை
யீனு மகத்தியனா ரேல்வையும்-மேனாளில் 17

மெய்கழுவ வந்த விசயன் றமையனுக்குப்
பொய்கழுவி ராமர்திருப் பொய்கையும்-தெய்வதங்கள் 18

வாழு மொருதேவை வந்து பலதேவர்
தாழு மிலக்குமணர் தண்புனலும்-சூழுலகிற் 19

காந்திவருங் கூட்டைக் கழுவச் சுகமழுக்குத்
தீர்த்து விடுசடா தீர்த்தமுஞ்-சாந்தமலர் 20

கூற்றன் மகனைக் குபேரன் மகனாகத்
தேற்று மிலக்குமி தீர்த்தமும்-நாற்றிசையும் 21

போய்மூளைக்குஞ் சீதைபழி போக்குதற்காத் தண்ணீரிற்
றீமுளைக்கு மக்கினி தீர்த்தமும்-பூமியிலே 22

தங்குமறை யான்றாளுந் தந்துவிசும் பின்மறையான்
செங்கையு நல்குசக்ர தீர்த்தமும்-பங்கயத்தோன் 23

மாலை முடியறுக்க வந்த பிரமகத்திக்
காலை யறுத்தசிவ கங்கையும்-வேலையெனப் 24

பொங்குநீர்க் குள்ளே புழுங்கினோன் வெம்மையொரு
சங்கநீர் தீர்த்தசங்க தீர்த்தமும்-பங்கொருவன் 25

ஒப்பரிய வையத்தி லோடிவந்து முந்நீரைச்
செப்பமுற நீந்தியமுத் தீர்த்தமும்-இப்புவியின் 26

மாமிக்காய் மாமன்போய் மாமனைக் கொன்றபழி
சேமித் திடாக்கோடி தீர்த்தமும்-காமத்தால் 27

ஓசைநீர் தோய்ந்தோற் குருப்பசியின் வேதனைகள்
மோசனமாஞ் சாத்யா முதநீரும்-பேசொருவன் 28

வெண்மை யிரைக்கழுவ மிக்க கருமயிராந்
திண்மை பெறுஞ்சருவ தீர்த்தமும்- வண்மையினாற் 29

றானே யரியையுஞ் சம்புவையும் விண்ணவர்தங்
கோனாகச் செயததனுக் கோடியும்-மாநிலத்தின் 30

மேலான கத்துருவின் வீழ்சலதோ டந்தணிக்கப்
பாலாவி யாகியபா லோடையும் - மேலான 31

நாணுருவா மம்புருவ நங்கை சிலையுருவின்
கோண லொழித்தகவி குண்டமும் - காண 32

அரிதலை தன்னை யயனுடலிற் சேர்க்குஞ்
சரசுவதி காயத்ரி தாமும் - பிரச 33

மொழுகுஞ் சுளைகளா வோங்குபுகழ்த் தேவை
முழுது மொருபழமா முன்னோர் - தொழுதிறைஞ்சுஞ் 34

சேதுப் பலாமரமாச் சேதுப் பலாமரத்தின்
மீதிற் பழுத்த வியன்கனியின் - கோதற்ற 35

வான்பே ரமுதென்றால் வாய்கசக்கத் தித்திக்குந்
தேன்போ னிறைந்த சிவக்கொழுந்து - மான்போர்வாள் 36

மச்சமயில் போற்கண் மலைவளருங் காதலியாம்
பச்சைமயில் வாழ்செம் பவளமலை - நிச்சயமாய்க் 37

காவையு மிந்த்ர புரத்தையுங் கானனமுந்
தேவையு மாகத் திருத்தினோன் - மேவுந் 38

திருக்கந்த மாதனத்திற் சென்றேறு நாடொட்
டிருக்கந்த மாதனமா வேறான் - வெருக்கொள்ளு 39

முங்கார கால வயிரவனா மோங்கார
சங்கார காலனையுந் தாபித்தோன் - பொங்குபெயர்க் 40

காவலுறுஞ் சேதுவந்த மாகாளி யம்மையருட்
காவல் புரியுங் கடிநகரான் - தேவர்கோன் 41

வேதனைசெய் கால்விலங்கை விட்டோட்டு வோன்சேது
மாதவன் கால்விலங்கை மாற்றாதான் - மோதி 42

எறிகடலைத் தாண்ட வெழுந்தவனு மானை
மறிகடலை யென்றெதிரே வைத்தோன் - உறுபுலியாற் 43

கோலு கலிங்கமன்றிக் கொட்டுணையும் பட்டுடான்
வாலுக லிங்க வடிவினான் - மேலா 44

மவனசை யாம லணுவசை யாமை
பவனனு மாருதியும் பார்த்தோன் - அவனையுமை 45

தானாளத் தான்வந் தெமையாள நாமெல்லாம்
வானோரை யாளவந்த வானோரும் - ஏனோரைப் 46

பூதலமீ தாளப் புரியுங் கருணையான்
பாதலமே யாபரணப் பையானோன் - வேதனார் 47

சென்னி தனக்குந் திருக்கை மலர்வீடும்
அன்னமு நல்கு மருளாளன் - சென்னி 48

மதியார்க்குந் தாள்பணியும் மார்க்கண்டே யர்க்கு
முதயாத் தமன மொழித்தோன் - கதிரவற்கும் 49

சண்டைப் படுமிருட்குந் தக்கன் செயுமோம
குண்டத்தின் முன்னுறவு கூட்டினோன் - புண்டரிகக் 50

கண்ணினான் கண்களுக்குக் காட்டாத பொற்பாதங்
கண்ணிலா வந்தகற்குங் காட்டினோன் - கண்ணின் 51

கடைக்கு விடயமன்றிக் கார்முதலை யென்று
விடைக்கு விடைகொடுத்த வேந்தன் - இடைக்குலத்து 52

பூவையர் தாள்பணியப் போகாமல் விண்ணவர்க்குச்
சேவை கொடுத்தருளச் செல்கொடியான் - றாவிலா 53

மாரூப வில்வேண் மலர்தூவக் கண்பார்த்துச்
சாரூபந் தந்தருளுந் தம்பிரான் - வீரப் 54

புலிபோல வாட்டைப் புசிக்குமரா வுக்குஞ்
சலியா நடம்புரிந்த தாணு - வலியாரை 55

மோது மிருமழுவன் முக்கால னாற்கண்ணன்
வேதமைந்த னாறுதலை மேவினோன் - காத 56

லெழுசமைய னெட்டுலகு மொன்பது திக்கும்
பழுதகலின் பத்து நிதியும் - தொழவருள்வோன் 57

தன்புய வெற்பிடத்துந் தாட்டா மரையிடத்து
மென்பணி கொள்ளு மிராமேசன் - அன்பர் 58

திகைத்த வினையுமயன் சென்னியுஞ்சே திக்கு
நகத்தன் வரராம நாதன் - சகற்பதியைப் 59

பூசித் திருநாளு நம்மையென்று போதித்தோன்
மாசித் திருநாள் வருநாளிற் - பாசத்தாற் 60

பொற்பொடி மார்பிற் பொருந்தும் விடைக்கொடியா
நற்கொடி யேறு நலங்கண்டு - சொற்கொடிபோல் 61

வாழும் பருவத வர்த்தினியுந் தானுமுல
கேழும் பரவ வெழுந்தருளி - ஆழியருள் 62

காபாலிக் கென்றுகட்டு வித்த ரகுநாத
பூபாலன் மண்டபத்திற் போந்திருந்து - மாபாரச் 63

செஞ்சடை யன்றித் திருப்புயஞ்சே ராளென்னு
நஞ்சடை வார்த்தைமிக நாணடைய - மஞ்சுதவழ்ந் 64

தேறுகுழற் கங்கையா ளெந்தைபுயஞ் சேர்வதுபோற்
கூறு மபிடேகங் கொண்டருளி - வீறு 65

புரியாடை யோரெட்டும் புல்லாடை யொன்றுங்
கரியாடை யொன்றுங் களைந்து - துரைராசன் 66

தென்னன் விசய ரகுநாத சேதுபதி
கன்ன னருள்பொற் கலைபுனைந்து - பின்னை 67

இறைப்பொழுதுங் கங்கைதனை யீசைகா ணாமன்
மறைப்பதெனப் பொன்மகுடம் வைத்துக் - கறைக்கண்டன் 68

காதி லிருவரிசை காத்திருந்து கேட்பனபோற்
கோதி லரவக் குழைசாத்திச் - சாதலற 69

அண்டர்க்கா வுண்டநஞ்சி லாரமுத மூறுதல்போற்
கண்டத்தின் முத்துவடங் கட்டுறீஇச் - சண்டன்போய் 70

எட்டித் தொடுமுன் னிறுகச் சிவக்கொழுந்தைக்
கட்டிப் பிடித்தோன் கரம்போல - வட்டத் 71

தினமணிக்கே காந்திதருஞ் செம்மல் புயத்தி
லினமணிக் கேயூர மிட்டுக் - கனல்விழியைத் 72

தோண்டும் விரலைத் தொழவந்த சூரியன்போற்
காண்டகுமா ணிக்கக் கடகமிட்டு - வேண்டிவளர் 73

மெய்யாண் முலைத்தழும்பை வேணியாள் காணாமற்
கையாள் பதக்கங் கவினுவித்துப் - பொய்யுலகில் 74

தாயுதர பந்தனத்தைத் தள்ளுந் தனிமுதலுக்
காயுதர பந்தனமு மாங்கமைத்துத் - தேயம் 75

பரித்தாளும் வாணன் பலசதங்கை யிட்ட
திருத்தாளி னூபுரமுஞ் சேர்த்தித் - தரித்த 76

திருமா லொருபாலுந் தேவியொரு பாலும்
இருபாலுங் கைக்கொண்ட தென்னத் - திருமேனி 77

ஆகாய மென்ன வகிலாண்ட மாந்தருவிற்
சேகாய வண்ணந் தெரிப்பதெனப் - பாகாய 78

சானகி செங்கைத் தளிரும் பொறாதுதிரு
மேனி நிறங்கன்றி விட்டதெனக் - கானகத்தின் 79

மண்டிப் பொருவிசயன் மன்னைப் பிடிபிடிக்கக்
கண்டத்தி னஞ்சு கலந்ததெனக் - கொண்டலார் 80

தெள்ளுஞ் சிவத்தியானஞ் செய்போ திரண்டுருவு
முள்ளும் புறமு மொளிர்வதெனக் - கிள்ளைவளர் 81

கையிற் கரும்பணிவாள் காத லெனுநீலப்
பையுட் பொதிந்த பவளமென - ஐயமாத் 82

தூய சிவஞானந் தோன்றா தெவரெவர்க்கு
மாயை நிழலின் மறைந்ததென - நேய 83

மருக்கூந்தன் மங்கைநிறம் வாஞ்சித்தா ரென்னத்
திருச்சாந் திலேபனமுஞ் செய்து - விரைச்சாந்தாற் 84

சந்திரனில் வாழுந் தடந்தா மரைக்கண்ணன்
வந்தெதிர் நிற்கும் வடிவென்ன - முந்தியே 85

விம்பப் பிரதிபிம்ப வேதாந்த நீதியெனப்
பைம்பொனிலைக் கண்ணாடி பார்த்தருளி - வெம்போரில் 86

வானிற் பறக்கு மதின்மூன் றையுமெய்ய
மேனிற்கும் பொன்மேரு வில்லென்ன - வானத்து 87

முந்திய விந்திரவின் மூன்றி லுமைநிறமும்
எந்தைநிற முங்கண் டிரண்டொளிக்க - நிந்தையிலா 88

மற்றொருபொன் வில்லை வளைத்துத் தரித்ததெனப்
பொற்றிரு வாசி பொலிந்தோங்கக் - குற்றமறு 89

சீரா தனமான சிங்கா தனத்திலிருந்
தாரா தனைகொண் டருளியபின் - யாரும் 90

மடங்கலெனு நந்தியான் மாயோ னடக்கு
நெடுங்கடல் போலடங்கி நிற்கச் - சடங்கஞ்சேர் 91

நான்மறையு முத்தமிழு கற்பே ரிரண்டுடையோ
னூன்முறையு முன்னே நுவன்றதற்பின் - மேன்முறையே 92

வாட்டிவிடுஞ் சென்மம் வரும்வழியைத் தாளிட்டுப்
பூட்டிவிடுஞ் சேதுப் புராணமுங் - கேட்டருளி 93

மெய்ந்நூற் றுறையின் விதிவழியே பூசிக்கும்
ஐந்நூற்றுப் பன்னிருவ ராரியரும் - இந்திலத்திற் 94

றேற்றுமலை யத்தனையுஞ் சேதுபந்த மீதுகுடி
யேற்றுலக நாதமுனி யென்போனுங் - கூற்றதிர 95

ஆர்க்குங் கடறூர்த் தழிவி றிருநகரஞ்
சேர்க்கு மிராவாடு தேசிகனும் - நீர்க்கடலில் 96

ஆராமங் கோயில்குள மற்புதமாக் கற்பித்த
மாராம நாத வரமுனியும் - சீராமர் 97

மெய்யம் பலமாக வீற்றிருப்பார்க் கேற்றபணி
செய்யம் பலவாண தேசிகனும் -ஐயன் 98

சிவராச தானியுடன் தேவையையொப் பாக்குந்
தவராம நாதமுனி தானும் - புவனேசற் 99

காதவன்வாழ் கோபுரங்க ளட்டபந்த னாதிகள்செய்
மாதவனாம் வேதவன மாமுனியும் - சீதைபுணர் 100

மேகஞ் சொரிந்ததிலு மிக்காக நித்தமபி
டேகஞ் சொரிந்து தினம்பூசை - ஆகத்தின் 101

மைவார் விழியும் வனமுலையும் பெற்றோர்க்குத்
திவ்யா கமப்படியே செய்விக்கும் - சைவ 102

சிகாமணி யான சிதம்பர நாத
மகாமுனியு மாமெழுவர் வந்து - நகாதிகளைக் 103

கண்ணன் முதலோர் கனசேது வைச்சேரப்
பண்ணுதல்போற் செய்யும் பணிவிடையும் - மண்ணுலகங் 104

காத்தருளுஞ் சேதுபதி கட்டளையைச் சட்டமிட
வாய்த்தசொக்க நாத வரமுனிவன் - கீர்த்தியுடன் 105

நம்பர் திருப்பணிக ணாடோறுஞ் செய்தனவுஞ்
சம்பு திருச்செவியிற் சாத்தியபின் - அம்பொற் 106

றிருவாழி தாங்கலாற் சேரும் வடத்தாற்
பரிவான பீதாம் பரத்தாற் - றிருவென்னு 107

மாது பதியுமவன் மாமகுட மும்பொலுஞ்
சேதுபதி வைத்ததிருத் தேரேறிக் - காதலிதேர் 108

பின்னூரச் சண்டன்றேர் பின்னூர மைந்தர்தேர்
முன்னூர நீரூரு மூதூரில் - என்னிறையோன் 109

ஆதித்தேர் தானு மழகுக்குத் தோற்றிந்தச்
சோதித்தேர் தன்னைச் சுமப்பதென - வீதிக் 110

கெழுந்தருளும் போதி லிமையோர்கள் வெள்ளங்
கொழுந்து படர்ந்துவருங் கூட்டம் - தொழுந்தகைய 111

வள்ளலுடன் முன்வந்த வானரங்க ளோரொரு
வெள்ள மெனக்கலித்து மீண்டதென - ஒள்ளிழையார் 112

அன்று தனிப்போ யான்விழிக்குத் தோற்றமத
னின்று படைக்கூட்ட மிட்டதெனச் - சென்றோடிப் 113

பேதைமையால் வாலி பிதாமிதித்த பூமிதனை
மேதினியோ ரெல்லா மிதித்ததெனக் - காதலுமை 114

ஏடலர் தாரா னிளனுக் கிடுஞ்சாப
மாடவர்க் கெல்லாமுண் டானதென - நீடுசடா 115

தீர்த்த மொருசுகத்தின் சென்மந் துடைத்தமைகேட்
டார்த்தசுக மெல்லா மடைந்ததெனப் - பார்த்திருந்து 116

சானகியை யீன்ற தலத்தைவெல்லப் பூவையரை
யேனை யிடமெல்லா மீன்றதென - மானெல்லாங் 117

கோவங்க மானகா குத்தனை வஞ்சித்த
பாவங் கழுவப் படர்ந்ததெனக் - கோவங்கொள் 118

தென்கடனீ ருண்ணச் செலும்போது சீமூத
மின்களையெல் லாங்கரையில் விட்டதெனத் - தன்கிளைபோற் 119

கொச்சை மயிலெல்லாங் கூட்டமிட்டு வெற்பீன்ற
பச்சை மயிலைவந்து பார்ப்பதென - அச்சுதனார் 120

மூவர் பணிந்த முதற்றலமென் றாங்கவர் தம்
பூவையரெல் லாம்பணியப் போந்ததெனத் - தேவைதனில் 121

பிந்தாது சூழவனப் பேடவர்கைத் தாமரையில்
வந்தாடல் போற்சா மரையாடத் - துந்துபி 122

சல்லரி தக்கை தடாரிமுர சம்பேரி
கல்லவடங் காகளங் கல்லென்னச் - சொல்லரிய 123

வெண்கவிகை யான்மறைந்து விண்ணிறம் வெண்ணிறமாய்
வண்கவிசொ னீலநிற மாறாடக் - கண்களெனும் 124

பொங்கலர் பூத்ததடம் போன்றமட வார்களட்ட
மங்கல மேந்தி மகிழ்வேந்தப் - பங்கயனும் 125

மாலும் பறவைகளில் வந்தேற வாசையிரு
நாலும் புரப்போர் நரர்விலங்கு - மேலேற 126

எட்டிய கோள்க ளெழுபத் தொருகுதிரை
கட்டிய தேர்கள் கடிதேறக் - கிட்டுவினை 127

பாறுமிரு நால்வசுவும் பன்னோ ருருத்திரரு
மேறு விமான மினிதேறச் - சீறயிலை 128

எள்ளு மிருகண் ணெழுமடவார் நான்மூன்று
புள்ளும் விலங்கும் பொலிந்தேறக் - கிள்ளைமொழி 129

நேயத் திருமா னிலமா னிளம்பிடிமான்
காயத் திரிமான் கலைமானும் - தூயோர் 130

எழுவர்நதி மாத ரெழுமுனிவர் மாதர்
வழுவி லெழுவரர மாதர் - பழிதீர் 131

வசுமாத ரெண்மர் மகிதல மாதி
யசமான மாதரோ ரெண்மர் - இசைகதிரோன் 132

கன்னியர் நால்வர் கடவுட் கலாநாதன்
பன்னியர் மூவொன் பதுமாதர் - சென்னியச 133

மானவர் பெற்ற வறுபது மாதருட
னேனையரு மொய்த்தீண்ட வெம்மருங்கும் - மேனாளிற் 134

கோவ மொடுங்கரா வுண்ட குலமைந்தர்
மூவரையும் வாழ்வித்த மூவர்களுந் - தேவருக்கும் 135

பேருலகத் தோர்க்கும் பிரம்படி யுண்டாக்கும்
ஓரிருவர் தாமு முடன்போத - நீரோடப் 136

பண்ணியங் கொள்ளாது பார்முழுதுங் கொண்டாடப்
புண்ணியங் கொள்ளும் புகழாளன் - விண்ணோர் 137

தருத்தேர் விசய ரகுநாதன் றங்கத்
திருத்தேர் வடமுகுர்த்தஞ் செய்யப் - பெருத்த 138

மறுகு கடலாக மன்பதை வெள்ள
முறுகு கரைபுரண்டு மோத - நிறைவயிரக் 139

குழாங்கள்

கன்னிலத்து மின்னுசந்த்ர காந்த மணிநிலத்தும்
பொன்னிலத்தும் வைசயந்திப் பொன்னிலத்தும் - அன்னம் 140

உலாநிலத்து மேனிலத்து மோர்நிலத்து மில்லா
நிலாநிலத்தும் வெள்ளி நிலத்தும் - கலாநிதியும் 141

தாரா தரமுதவுந் தாவில்லா மின்களுவந்
தோரா யிரங்கோடி யுற்றவென - நேரிழையார் 142

காதலுட னேறிடுவார் கைக்கடகந் தம்மையே
பாத கடகமெனப் பார்த்தணிவார் - கீதாதி 143

பாடகத்தின் மீதே பரிந்தணியுங் கண்டசரம்
பாடகத்தின் மீதே பரிந்தணிவார் - நாடி 144

இதங்கொண் மலர்க்கை யிருகை யிடத்தே
சதங்கை தெரியத் தரிப்பார் - விதங்கொண்ட 145

காலாழி கையாழி யாகக் கடிதணிவார்
மாலாழி நீந்த மறுகுவார் - நாலிடமும் 146

மொய்த்திடுவார் மார்பு முறுகு முலைதாங்கி
யெய்த்திடுவார் வேர்வை யிறைத்திடுவார் - தத்தம் 147

இடைகளையுந் தேடுவா ரெல்லோர் மடியும்
உடைகளையுஞ் சோதித் துடைவார் - விடையோன் 148

கனிவாயுந் தம்மிதழுங் கைவிரலாற் கூட்டத்
தனியாமை யாலே தவிப்பார் - இனியிந்தப் 149

பெண்களையு மாண்களையும் பேசுந் திரைக்கரத்தாற்
கண்களைமூ டாதோ கடலென்பார் - எண்கொள்ளும் 150

எம்முடைய கொங்கை யிணைகளுக்கு மீசரே
உம்முடைய வில்லங்க மோயாதோ - எம்ம 151

திரவியமா நாணையழித் தீருமது நாணை
வரையறை யாப்பதுக்கி வைத்தீர் - நிரைவளையார் 152

கைவளையை நீக்கினீர் கண்ணுதலீ ரும்முடைய
பெய்வளையை நீங்கப் பெறுவீரே - ஐயரே 153

கொள்ளை விடமமுதாக் கொண்டீரே நீரெமக்குத்
தெள்ளமுத நஞ்சமெனச் செய்தீரே - துள்ளி 154

விழமதனை வென்றீரே விண்பழுத்த வெள்ளைப்
பழமதனை வெல்லப் படாதோ - முழுமுதலீர் 155

என்றெவ் றிரங்க விளநீ ரையுமுலையு
மொன்றென் றிருக்கு மொருபேதை - என்றும் 156

பேதை

திருமகளார் சிந்தை தெளிய விளைய
மருமகளார் பெற்றெடுத்த வஞ்சி - விரக 157

வசப்படுவோர்க் கெல்லா மதன்கரும்பு போலக்
கசப்பு விளையாக் கரும்பு - பசப்புவிளை 158

தன்போல் விளங்கச் சரக்காமன் றேரிழுத்துத்
துன்ப முறாத சுகப்பிள்ளை - பின்பொற்றை 159

மாவிற் றனித்திருந்து மால்கொண்டோர் பேய்கொள்ளக்
கூவத் தெரியாக் குயிற்பேடு - தாவிப் 160

படியேழு மோடிப் படரச் சிறிதே
கொடியோடுங் காமக் கொழுந்து - துடியோடிப் 161

போரம்பஞ் செய்யும் புகழ்க்காம வேடிருநாட்
காரம்பஞ் செய்யுமங்கு ரார்ப்பணம் - சேருங் 162

களவுங் கொலையுங் கவுரியமுஞ் சூதும்
விளையுந் தமோகுண வித்து - வெளியதிரு 163

நீற்றொளி பொங்குதிரு நீலகண்ட யாழ்ப்பாணர்
எற்றினு மேறாத வின்னிசை - ஆற்றலால் 164

என்முடியென் றெண்ணி யிருப்பினு முன்முடியாப்
பொன்முடிபோற் கூடாத பூமுடியாள் - முன்னோன் 165

தலந்துதிக்கு மப்பருக்குச் சாக்கியர் பாலிற்
கலந்தளித்த நஞ்சனைய கண்ணான் - நிலந்துதிக்கும் 166

பைநாகம் போய்மறைத்த பைம்பொற் சிகரம்போன்
மைநாக நீரின் மறைந்ததுபோற் - கைநாக 167

பங்கன் சடைமுடிமேற் பண்டா யிரமுகத்துக்
கங்கை யொளித்திருந்த காட்சிபோற் - செங்கனியின் 168

சார்பி லொளித்திருந்த தக்ககன்போன் மிக்கமணி
மார்பி லொளித்த வனமுலையாள் - ஊரனுக்குப் 169

பைம்பொன் றிருமுருகன் பூண்டியி லேபறிபோஞ்
செம்பொனெனப் போய்மீண்ட சீறெயிற்றாள் - கொம்பனையாள் 170

செய்யதொரு சித்திரத்திற் றீட்டுஞ் செழுங்கிளியைக்
கையி லழைத்தழைத்துக் கன்றுவாள் - மெய்யுறுகண் 171

ணாடி நிழலுக் கமுதூட்டு வாளதுவுங்
கூடவமு தூட்டக் குனிந்துண்பாள் - நீடுதிரை 172

மட்டித் தெடுத்த மணற்சோற்றைத் தானெடுக்க
எட்டிக் கடலை யிறைத்திடுவாள் - கிட்டிய 173

மாதவிப் பந்தர் மணப்பந்த ராவாவிச்
சீதளச்செந் தாமரையே தீயாகப் - பேதுறாக் 174

கிஞ்சுக பத்திரமே கிட்டுஞ் சிருக்காக
வஞ்சுகங்கண் மந்திரஞ்சொ லந்தணரா - நெஞ்சுகந்த 175

புன்னை யரும்பே பொரியாகப் பூந்தேற
னன்னர்ச் சொரியு நறுநெய்யா - முன்னரிள 176

வண்ட லயர்ந்த மணற்சோறு கள்விருந்தாக்
கொண்ட முரசங் குரைகடலாத் - தண்டலையில் 177

தன்பாவை யான தமனியப் பாவைதனக்
கன்பர் மணஞ்செ யமையத்துத் - தென்பூமி 178

வாழ வருங்கந்த மாதனத்தைப் பொன்மேருத்
தாழவரல் போலுந் தடந்தேர்மேற் - சூழத் 179

தனுக்கோடி நீங்குதனுக் கோடியான் வந்தான்
மனுக்கோடி யேழுடையான் வந்தான் - எனைக்காக்கும் 180

மூவர் முதல்வந்தான் முப்பத்து முக்கோடி
தேவாதி போற்றுஞ் சிவன்வந்தான் - மேலவரும் 181

பாலாழி தூணியாக் கொண்ட பரன்வந்தான்
நீலாழி யில்வாழ் நிதிவந்தான் - மேலோர்கள் 182

நந்தா வரராம நாத னெதிர்வந்தான்
வந்தானென் றூதும் வலம்புரியும் - துந்துபியும் 183

பின்னத் தொனியான பேரிப் பெருந்தொனியுஞ்
சின்னத் தொனியுஞ் செவிதூர்ப்ப-அன்னை 184

எழுவது கண்டெழுந்தா ளேழையர் பின்போய்த்
தொழுவது கண்டு தொழுதாள்-முழுவதும் 185

பாதாதி கேசமெலாம் பாவை தரிசித்து
வேதாதி கேசவனை மேம்பட்டாள்-பேதைமற் 186

றொன்றினையும் வேண்டாம லும்பர்கோ னங்கைமான்
கன்றினை வேண்டிக் கரைந்தழுதாள்-நின்றினையு 187

மன்னே யுமைவிழியென் றம்மானு மம்மானைத்
தன்னேயத் தாலே தரித்தது காண்-பின்னவனும் 188

தேற்றுமிள மான்கன்றைச் சென்னிப் பிறைக்கொழுந்தில்
ஏற்றி விடுவதிலு மிச்சைகாண்-கூற்றுவன்வே 189

ராணி யறுகை யபேட்சித் தவர்சாத்தும்
வேணி யறுகையது மேயுங்காண்-மாணிழையாய் 190

பெம்மா னமரர் பெருமானம் மான்கோமா
னெம்மானம் மானையுனக் கீயுமோ-சும்மாது 191

கண்ணருவி யோடக் கரைந்தழுவ தேனெனுமுன்
விண்ணருவி யொடுந்தேர் வேறகலப்-பெண்ணெதிரே 192

வந்த விசயமதன் வாளியின் வாய்க்குவிருந்
திந்த விசையமையா தென்றகல-வந்த 193

குதம்பை ததும்புங் குழையா ளகன்றாள்
பெதும்பை யொருத்திகிளிப் பிள்ளை-பதங்கண்டு 194

துச்ச மதனன் றொடுக்குங்காற் றோட்சரமுங்
கைச்சரமு மாகாக் கடிமுல்லை - அச்சமற 195

நீளவரு நாளத்தி னேற்று முகந்தோற்றி
நாளை மலரு நளினமலர் - வேளை 196

வெடிக்குமலர் மேற்றாயை விட்டு நடந்து
படிக்கு மடவன்னப் பார்ப்புத் - துடித்தோடித் 197

தாவுமதன் றேர்முன்னே தாய்கூவத் தான்காவிற்
கூவு மதுரக் குயிற்பிள்ளை - பூவுலகிற் 198

செல்லார் திருமறுகற் றிங்களூர் வெவ்விடம்போற்
கொல்லாமன் மீண்டுவிடுங் கூர்விழியாள் - சொல்லும் 199

பெருந்தாளம் வேண்டாத பிள்ளையார்க் கீசன்
றருந்தாளம் போலுந் தனத்தாள் - வருந்தியே 200

பேதமற வாகீசர் பெற்ற சிவபதம்போற்
கோதையர் கூட்டுங் குழலினாள் - சோதிசேர் 201

பொற்கண்ட மான புதியமணி முற்றத்துக்
கற்கண்டு கொண்டு கரைகண்டு - சர்க்கரையாற் 202

பாத்தி பரத்திப் பசுந்தேன் குடங்கொண்டு
வார்த்து வளர்த்தசிறு மாதவிக்குப் - பூத்தறியாத் 203

தன்போ விளங்கரும்பு தன்னையொரு கொள்கொம்பாப்
பொன்போலும் வஞ்சிநடும் போதத்தில் - இன்ப 204

நலஞ்செய்யுங் கங்கை நதிவந்து நித்தம்
வலஞ்செய்யச் செய்யும் வழிபோல் - நிலம்பதிய 205

வண்டில் பதியு மணித்தேரி லெந்தைவரக்
கண்டில் கடந்தாள் கடிதடைந்தாள் - கொண்டல்போய் 206

முன்னம் பணிந்த முளரித் திருப்பதத்தை
மின்னும் பணிந்ததுபோன் மின்பணிந்தாள் - சென்னிமே 207

லாறுபிறை தோற்று மழகு மொருவேளை
நூறுவிழி தோற்று நுதலழகும் - கூறரிய 208

வெண்டிசையுங் கொண்ட விடையழகு மேழுலகுங்
கொண்ட சிலையின் குனிப்பழகும் - கொண்டுவரு 209

மம்புயத்தி லொன்றையொளித் தாயன் றனைவேடன்
றம்பியெனச் செய்த சரணழகும் - கொம்பனையாள் 210

கண்டவளுங் காணா தவளுமாய்ப் பேராசை
கொண்டுங் கொளாதுமெதிர் கும்பிட்டாள் - அண்டர்கோன் 211

வேற்றோர் மறுகடைந்தான் வில்வே டொடைமடக்கித்
தோற்றா னெனும்பேர் துலக்கினான் - சாற்றும் 212

மங்கை

திருப்பிறந்த நாட்பிறந்த தெள்ளமுதத் தாலே
யுருப்பிறந்த மங்கை யொருத்தி - தருப்பிறந்த 213

அண்ட மனையு மகிலமுமஞ் சுங்காள
கண்ட மனைய கருங்குழலாள் - தொண்டருடை 214

அன்பிறை நீங்கா வடியான் முடிமேல்வாழ்
வன்பிறை போல்விளங்கும் வாணுதலான் - என்பிறவிப் 215

பேரூசல் மாற்றும் பிரானோ டுமையாடுஞ்
சீருசல் போலுஞ் செழுங்குழையாள் - ஆருரிற் 216

கோன்கன் றினையாளுங் கோமான் கரத்தேந்து
மான்கன் றனைய வரிவிழியாள் - தான்கன்ற 217

மைபோற் றுங் கண்ணுமையாள் வாட்டந் திருத்துமான்
கைபோற் சிவந்த கனிவாயாள் - வையமெலாம் 218

ஈன்றவரை யீன்றகுறி யீதென்னப் பச்சுடம்பு
தோன்றிய வேய்போலுந் தோளினாள் - ஆன்றபுகழ்ச் 219

சேதுவிலுஞ் செம்பொன் வரையிலுஞ் சேர்கந்த
மா தனங்கள் போலும் வனமுலையாள் - ஓதியபொன் 220

னாடமருங் கங்கை நதிமுடித்தார் கைப்பிடித்த
மாடமரு கம்போன் மருங்குலாள் - நாடு 221

மதிக்கு மகத்தியனார் வாவிவந்த வேழத்
துதிக்கை யனைய துடையாள் - மதுக்கொன்றைப் 222

பைந்தா மரைவணங்கிப் பச்சைமா லர்ச்சித்த
செந்தா மரையனைய சீறடியாள் - முந்தியதோர் 223

தென்னிலங்கை நாபியாச் சேதுவுரோ மாவலியாப்
பொன்னிலங்கு நற்சிகரம் பூண்முலையாத் - தன்னையுணர் 224

மாதவனாம் வேதவன மாமுனிவன் வைப்பித்த
வேதவனத் தண்டலைமென் கூந்தலா - மோதாழிப் 225

பீடுறுகட் டேவையெனும் பெண்கொடியுந் தானுமா
வாடுதல்போற் பொற்பந் தடிக்குங்கால் - நீடாழி 226

திண்கயி லாசமனஞ் செய்வோன் பணிந்தேத்தும்
வண்கயி லாச மனமுவந்தோன் - கண்கள் 227

ககுபங் கடக்குமொரு காதற் கரும்பின்
மிகுபங் கடக்குதிரு மெய்யான் - தகைதீர் 228

பரராம நாதரையும் பாலித் தருள்வோன்
வரராம நாதன் மகிழ்ந்து - சுரர்சூழ 229

ஆதித்த னம்பொற் குடைமேற் குடையாகச்
சோதித்தன் பொற்றேரிற் றோன்றுதலும் - மோதும் 230

பரவையிரச் சின்ன பரிசதிரா தென்ன
வுரவை யிரச்சின்ன மூத - விரைவெழுந்து 231

தென்ன னடையாளஞ் சேருந் திருவிழியா
ளன்ன நடையா ளமலன்றேர் - முன்னின் 232

றொளியன்னங் காணாத வொண்முடியை மற்றோர்
களியன்னங் கண்டதுபோற் கண்டாள் - கிளிதான் 233

திடமான்முன் காணாத் திருவடியை மற்றோர்
மடமா னெதிர்காணு மாபோல் - நடமாடும் 234

பொன்னடியுங் கண்டு புகழ்ந்தா டிருவழகை
முன்னடியி னின்று முகந்துண்டாள் - பின்னை 235

மதனம் படாதோ வரிக்குயிலி னோசை
விதனம் படாதோ விளம்பீர் - முதனம்பி 236

வந்தவளை முன்ன மதுரையினீர் போய்விற்ற
தந்த வளையுமக்குத் தந்தவளை - நொந்தவளை 237

நாணுங் கலையு நலனுங் கலனுமருந்
தூணுங் கவர்ந்தமக் கொண்ணுமோ - வேணுமால் 238

அந்தத் திருவணையி லன்பா விருக்கின்றீ
ரிந்தத் திருவணையி லீனமோ - சிந்தை 239

திகைத்தகன்று போல்வாளைச் சேர்ந்தருளீ ரென்ன
நகைத்தகன்று தேர்மே னடந்தான் - பகைத்திருந்த 240

சேக்கை யகன்ற செழுங்குயின் மீண்டுவரிற்
காக்கையுங் காக்கை கருதுமோ - தாக்குங் 241

கணைமேற் கிடத்தக் கருதுவாள் போற்பூ
வணைமேற் கிடத்தினா ளன்னை - கணையால் 242

மடந்தை

தொடர்ந்துபொருங் காமனுக்குத் தோட்டுணையாய் வந்த
மடந்தை யொருத்திமலர் மங்கை - அடைந்தவருக் 243

கீவினி லைந்தருவா மேகாம் பரநாதர்
மாவினில் வாழும் வரிக்குயில் - மூவா 244

திடைமருதூர் மேயார்க் கினிய நிழலாந்
தடமருதில் வாளுமிழந் தத்தை - பொடியாடிப் 245

பால்வரையா மேனிப் பரமன் வரையான
மால்வரையில் வாழு மடமஞ்ஞை - நால்வரையாள் 246

.கூடற் குருமணிதன் கூட முளைத்தெழுந்த
வாடற் கடம்பி னமர்பூவை - நாடும் 247

இணையிலி தேவை யிராம னடைத்த
வணையில் விளையாடு மன்னம் - பணியவெழில் 248

காட்டுஞ் செருத்தணியிற் காலத் தலர்குவளை
யேட்டி லிருக்கு மிளஞ்சுரும்பு - நாட்டும் 249

மகோததி முத்த மணிப்பவளத் தோடு
சகோதர வாஞ்சை தரித்து - முகோதய 250

மாமதியில் வந்து மணியித ழுக்கருகே
தாமதியா நின்றனைய தந்தத்தாள் - காமனையாள் 251

அத்த னுமையவளுக் காக விரட்டைமுடி
வைத்த தனைய வனமுலையாள் - மத்தகசம் 252

என்னப் படைத்த விளம்பிடி யானைநடை
தன்னைப் பழித்த தனிநடையாள் - துன்னும் 253

அறல்போலுங் கூந்தற் கடர்சோலை நல்குந்
திறைபோன் மலர்கொய்யச் சென்றாள் - நறைகள் 254

துடிபோலு மெல்லிடையாள் சொல்லுக்குத் தோற்றுக்
குடிபோவ தென்னக் குதிக்கப் - பிடிபோல்வார் 255

பின்னின் றிரங்கப் பிணைமலர் கொய்யுங்காற்
பொன்னின்ற வானுலகும் பூவுலகும் - முன்னின் 256

றொளிர்மணித் தேரேறி யும்பர் பெருமான்
கிளர்மணி வீதிவரல் கேட்டாள் - தளரும் 257

இடையென்று மெண்ணா ளிறுக்கியுடுத் தாலு
முடையென்று நில்லாதென் றோராள் - தடையொன்றும் 258

இல்லா தவர்போ லெழுந்தா ளிரண்டிருளும்
வெல்லா தவர்போலு மெய்வடிவும் - சொல்லாத 259

சந்திர சேகரமுந் தானு முமையவளு
மிந்திர சாப மெனுமழகும் - அந்தக் 260

கரும்புயல் வாழ்காள கண்டமுங் கங்கை
விரும்பி வளர்சடில மின்னும் - இரும்புவனி 261

ஆதார மெய்யெல்லா மாகாய மென்பதனைக்
காதா லறிந்தவள்கண் ணாலறிந்தாள் - சோதி 262

இழந்தா ளெழுகடலி னெண்மடங்கு காம
முழந்தாள் சிலநின் றுரைத்தாள் - தழைந்தலர்ந்த 263

குற்றமறு கொன்றைக் குழகன் கடைக்கணித்து
மற்றமறு கொன்றை மருவினான் - பொற்றபொறிக் 264

கோலத்து வண்டுதினங் கூட்டுண்ட பூமாலை
போலத் துவண்டு பொருமினாள் - சோலை 265

வருகாக வன்புள் வளர்த்தகுயில் கூவச்
சருகாக மெய்யுலர்ந்து சாய்ந்தாள் - அருகே 266

மிகுந்த வரைமுலையார் மேவ விழியுட்
புகுந்தவரை யுட்கொண்டு போனாள் - தகுந்தவரைச் 267

அரிவை

சாதக ராக்கியந்தச் சாதகரைத் தான்வளர்த்த
மாதக ராக்க வருமரிவை - தாதுநிறை 268

போது நறைக்கமலப் போதுபங்க முற்றதென்று
சேதுவில் வாழுந் திருமடந்தை - வேதத் 269

திறைவன் மணிநாவை யெச்சிலிது வென்று
மறைபயில் தேவையில்வாழ் வாணி - குறைதோன்ற 270

வாசவன் மேனி வடுப்பட்ட தென்றிரா
மேசுரம் வாழவந்த விந்த்ராணி - மாசிலா 271

அத்தனுக் கோடி யருந்தனுவீந் தோனையகன்
றித்தனுக் கோடிவந்த வின்பரதி - நெய்த்திருண்ட 272

கூந்தற் கருமணலுங் கோவா நகைமுத்துங்
காந்தி மதிமுகமுங் கட்கயலும் - வாய்ந்தகனி 273

மூன்றையும் வென்ற மொழியமுத முங்காட்டித்
தோன்று மலையைத் துலக்குவாள் - தோன்றாத் 274

திறலிக்கு வேளுக்குச் செங்கோல் கொடுப்பாள்
விறலிக்கு நோக்கருளும் வேளை - மறலிக்குக் 275

கண்ணான் மகுடங் கவிக்குங் கனிமொழியைப்
பண்ணார் விறலி பணிந்திருந்தாள் - எண்ணரிய 276

மூவேழ் நரம்பு முறையே குரன்முதலாப்
பாவே ழிசையும் பயில்வித்துப் - பூவை 277

முகநீ றிலங்க முளரியோ னாதி
சுகனீறாத் தெய்வந் தொழுது - மிகவும் 278

இறும்பூ தெனச்சங் கிசையாதி யாகக்
குறும்பூ ழிசையிறுவாய்க் கூட்டிப் - பெறும்பாடல் 279

எண்ணூற் றுறையி னிசைவாணர் கொண்டாடப்
பண்ணூற் றொருமூன்றும் பாடுங்காற் - கண்ணனவன் 280

எய்தறுபத் தாறா யிரந்தெய்வ யாண்டுதவஞ்
செய்து வரம்பெற்ற சீர்பாடி - வையமுடன் 281

கால முழுதழியக் கண்ணுதலைத் தாடேடி
ஞால முழுத நகைபாடி - மாலையாய்த் 282

தோளிற் கிடந்த தொகைபாடிக் கண்மலரைத்
தாளிற் கிடந்த தகைபாடித் - தோளில் 283

உதித்தமை பாடி யொருசூல நாவிற்
பதித்தமை வித்தமையும் பாடித் - துதித்துச் 284

சிறந்தமை பாடிநர சிங்கவெறி பஞ்சாப்
பறந்தமை யெவ்வெவையும் பாடி - அறந்தான் 285

வழுவு மிராவணனை மாய்த்த கொலையைக்
கழுவு மருள்பாடுங் காலைத் - தொழவந்தோர் 286

பாரேழும் வெற்பேழும் பாய்பரியே முஞ்சூழு
நீரேழுங் காரேழு நேரார்ப்பப் - பேராப் 287

பெருகு கனைகடலும் பேரியு மார்ப்ப
வருகுகனை யீன்றோன் வரலும் - கரியபிடிக் 288

கன்று நடந்தருகே காமரரி யைத்தொழல்போற்
சென்று நடந்திருதாள் சேவித்தான் - நின்றிறைவன் 289

காயஞ் சிவந்த கவின்கண் டுருகினாள்
தாயஞ் சிவந்தருகே தாங்கினாள் - மாயன்றன் 290

சின்ன மகன்றான் றிருந்திழைமுன் றோன்றினான்
முன்ன மகன்றான் முழுமுதலோன் - பின்னொருத்தி 291

தெரிவை

பேர்திகழ் பேரிளம் பெண்ணையெல்லா மாடவருக்
கூர்திக ளாக்குமொ ருதெரிவை - பேரிருட்கும் 292

நாடிய திங்களுக்கு நல்லறிவு வந்துறவு
கூடிய தன்ன குளிர்முகத் தாள் - நீடாழி 293

பண்டு பிரிந்த பவளமு முத்துமெதிர்
கண்டுகலந் தன்ன கனிவாயாள் - பண்டைமக 294

மேருவு மந்தரமும் வெண்கயிலை போலீசன்
சேரு மிடமாய்ச் சிறந்திருக்கப் - பாரில் 295

நிவந்தமுனை யூசியொன்றி னின்றிரண்டு வெற்புந்
தவஞ்செய் தனைய தனத்தாள் - சிவந்தவிரற் 296

பத்துப் பவழங் களையும் பழமென்று
கொத்து கிளிபோலுங் கூருகிராள் - எத்திசையும் 297

கால னடத்துங் கருமேதி யின்கொம்பு
போல் நெரித்த புருவத்தாள் - ஆலவட்டம் 298

கொப்பாக வேள்பிடித்துக் கொண்டாடும் பொன்னூச
லொப்பாக நின்றாடு மொண்குழையாள் - மெய்ப்பாகுஞ் 299

செய்குன்றின் மேலிருந்த சேடியர் தற்சூழ
மொய்குன்றம் வென்ற முகிண்முலைக்கும் - பெய்கின்ற 300

மஞ்சைப் பொருத மலர்க்குழற்கு மால்கொண்டார்
நெஞ்சைப் பொருத்திரு நெற்றிக்குங் - கஞ்சந் 301

தகுமான நீங்கவென்ற தாளுக்கு மன்று
வெகுமானஞ் செய்யும் விதம்போல் - நகையாய்த் 302

.துலங்காரஞ் சீதேவி சுட்டிசிலம் பாதி
யலங்காரஞ் செய்யு மளவில் - இலங்கிய 303

கூவிரியால் விண்விரியக் கூரா ழிகள்பதிந்து
பாவிரி சேடன் படம்விரியத் - தேவருல 304

கச்சாணி யந்தே ரணிகுடைக்கு மப்பாலே
கைச்சா ணிருசாணே காணுமென - முச்சகமுங் 305

கோத்த மகமேருக் கூண்டனைய தேர்மீதில்
வாய்த்தமக தேவன் வரல்கேட்டாள் - பூத்த 306

கமலங் கதிரோனைக் கண்டலரு மன்றே
அமலன் வரல்கேட் டலர்ந்தாள் - உமைபாகன் 307

புந்தியில் வாழப் புறந்தேடு மாந்தரைப்போல்
வந்தீயர் சூழு மறுகடைந்தாள் - சந்தித்தாள் 308

சங்கங் கடைந்தணியுந் தாழ்குழைப் பெம்மானை
அங்கங் கடைந்தா ரயனிற்ப - வெங்கஞ்சன் 309

காட்டு மலரைவென்ற கண்ணன் கரமலர்
சூட்டு மலரைத் தொழுதிரந்தாள் - ஏட்டையுறும் 310

அன்ன மறியாம லாகமெலா மென்பானீர்
பின்னைமால் வேதனையும் பெற்றீரே - முன்னியபே 311

ராசை யுடையீரே யண்டருக்குத் தோற்றீரே
மாசு மதியைவெல்ல மாட்டீரே - யீசரே 312

தென்றலோ வம்ம திருமேனி தீண்டிவிடு
மென்றலோ வெம்பணியெ லாமணிந்தீர் - வென்றி 313

மதனை யெரித்தீரே மாதிடஞ்சேர் காம
மதனை யெரித்திடவொண் ணாதோ - விதனஞ்சேர் 314

கொள்ளை விடமாங் குழலோசைக் காவேய்க்குப்
பிள்ளை புகுந்து பிழைத்தீரே - வெள்ளை 315

அயில்வாயி லுங்கொடிதென் றல்லவோ கூவுங்
குயில்வாய் தனைநெரித்தீர் கூறீர் - கயல்பாய்ந் 316

திமைக்குங் கடலேழி லேகாந்த ராமன்
அமைக்குங் கடல்பார்த் தமர்ந்தீர் - உமைக்கொம் 317

பிசையு மொருபா லிராதுவிடை யேறீ
ரசையுமணி யோசைக்கா வன்றோ - திசைதோறு 318

மாலைப் பொழுதடரும் வந்திப் பொழுதென்றே
காலைப் பொழுதையொரு கண்வைத்தீர் - ஞாலத்தில் 319

நும்ம விரக நுமக்கிவ்வா றாமாகி
லெம்ம விரகமெமை யென்செய்யா - திம்மெனவந் 320

தாளீர் புயத்தி லணையீர் படுந்துயரங்
கேளீ ரெனநெருங்கிக் கிட்டுதலும் - வேள்போருந் 321

தேராமல் மாலையருள் செய்யாமற் றேரானுந்
தாரானு நானென்றே தானகன்றான் - ஊரறிய 322

அன்றுந் தனித்தா ளிலம்புகுந்தா ளவ்வாறே
யின்றுந் தனித்தா ளிலம்புகுந்தாள் - நன்றென்று 323

பேரிளம்பெண்

கைத்தகாய் தின்று கனியை முனிவார்தம்
பித்தகல வந்துதித்த பேரிளம்பெண் - பொய்த்த 324

வலரை விரும்பா தரும்பை விரும்புஞ்
சிலரை மயறீர்க்குந் தெய்வம் - கலைமதியை 325

விண்கூடு பாம்பருந்தி வெண்பிறையைத் தீண்டாமை
கண்கூடாத் தன்மேன்மை காட்டுவாள் - பண்கூட 326

மூவரும் பாடு முதுதமி ழின்பத்தால்
மேவருந் தண்பருவ மேம்படுவாள் - காவிரிவாய்ச் 327

சென்று திருவானைக் காவிற் சிவனைமதக்
குன்று வணங்கக் குனிந்ததோ - நின்றநிலை 328

விட்டுத் திசைக்களிற்றை வெல்லவென்று காஞ்சிபுர
மட்டு மொருபயணம் வந்ததோ - இட்டிடைதான் 329

என்று முறியா திருக்கத் தலைகீழா
நின்று தவஞ்செய்யு நீர்மையோ - வொன்றோடொன் 330

றெய்யா வழக்கிட் டெதிரே மறிப்பிருந்து
பொய்யா நடுநிலையிற் போவதோ - கையாற் 331

றகைந்த வடிக்கனத்தைத் தத்த முகங்கள்
பருந்தெடுத்துக் கொண்ட படியோ - மிகுந்துவரும் 332

தொண்டருக்கா மூர்க்கர் துணிந்தாடுஞ் சூதுகள்போய்ப்
பண்டு வயிற்றிற் படுப்பதோ - விண்டு 333

புகழ்ந்திடம் போதுநின்ற போர்மா ருசிபோல்
முகங்கவிழ்ந்த கொம்மை முலையாள் - மகிழ்ந்துவரும் 334

வேட்டுணை யாடவரை வென்று சயங்கொள்ளத்
தோட்டுணை தேடுந் துணைக்குழையாள் - நாட்டுறையும் 335

மாந்தரையுந் தேவரையும் வாளமர் செய்வதற்குக்
கூந்தலரண் போய்ப்பார்க்குங் கூர்விழியாள் - வாய்ந்த 336

பளிக்கு நிலத்தும் பதித்திடுகண் ணாடி
விளைக்கு மொளிப்பசும்பொன் வீட்டும் - ஒளித்தொளித்துப் 337

பூவைய ரன்பு பொருந்தவிளை யாடுங்கால்
தேவை யரன்பவனி செப்பினார் - பாவை 338

பழுதாதல் கூறாத பண்டை மறைபோ
லெழுதாத வேற்கண் ணிணையும் - எழுபிறவி 339

வேலை யகன்று விடுஞ்சைவர் போன்றுதிரு
மாலை யகன்ற மலர்க்குழலும் - சீலமுறும் 340

முன்னவரை வெல்லு முனைப்படைவேள் போற்கரும்பு
தன்னை வரையாத் தனதடமும் - மன்னினாள் 341

என்ன விருக ணெழுதாண் மலர்முடியாள்
கன்ன லெழுதாள் கடிதெழுந்தாள் - அன்னங்கள் 342

பின்பதறி வானைவிட்டுப் பேர்ந்தோடச் சென்றாளுள்
ளன்பதறி வானை யடிபணிந்தாள் - வன்பிலங்கை 343

ஏற்றமுறு வேந்து மிருவர் முயலகருங்
கூற்றமு மஞ்சுங் குரைகழலும் - தோற்றுபுலி 344

தான்முக னஞ்சு தளரும் திருவரையு
நான்முக னஞ்சு நகநுனியும் - கூன்முதுகுக் 345

கச்சபமும் வெள்ளைக் கருமாவும் பச்சைநிற
மச்சமு மச்சமுறு மார்பிடமும் - உச்சமுறும் 346

முப்புர மஞ்சு முறுவலுங் காமவே
ளப்புர மஞ்சு மணிநுதலு - மொப்புரையா 347

மோகப் பணியு முதிர்பணியும் பாரிருளு
மாசுத் திருளு மடர்விழியும் - லோகம் 348

முடிச்சிட்ட நாளின் முகுந்தனயன் சென்னி
முடிச்சிட்ட மாலைமுடியுந் - துடிச்சிட்ட 349

விண்ணவ ரஞ்சுமந்த வெண்பொடிப் பூச்சுமன்ப
ரெண்ண வரஞ்சுமந்த வின்னருளுங் - கண்ணாரக் 350

காண்டோறுங் காண்டோறுங் காயங் களிப்பெய்திப்
பூண்டோறும் பூண்டோறும் பூட்டவிழ்ந்தாள் - ஆண்டவரே 351

மாற னடித்த மதுரையிலே யஞ்சாமல்
மாற னடித்த மதம்பாரீர் - நீறணியும் 352

வெட்ட வெளியாரா மேனியா ரோரிடையன்
வெட்ட வெளியாராய் விட்டாரோ - முட்டவருள் 353

தங்கலா லேறு தணவார்க்குச் சாக்கியனார்
தங்கலா லேறு சகித்ததோ - இங்கிவர்க்குக் 354

கண்ணிடந் தப்புமெனக் காலா லுதைத்தொருவன்
கண்ணிடந் தப்புவதுங் காதலோ - பெண்ணமுதம் 355

அங்கிதஞ் செய்ததுபோ லங்கைவளை யால்முலையா
லங்கிதஞ் செய்த தடுக்குமோ - இங்கிதந்தான் 356

என்னென் றுளைந்தா ளிறைவர் திருமேனி
பொன்னென்றல் பூவென்றல் பொய்யென்றாள் - பின்னொன்றுங் 357

கூறத் தரமன் றெனக்குழைந்தாள் கொன்றையின்மே
லாறத் தரமன்றென் னாசையென்றாள் - மாறற்ற 358

அம்புயத்தாள் போல்வா ளருளுமழ குங்கண்டு
செம்புயத்தாள் மாலை சிறிதளித்து - நம்பெருமான் 359

பாரிறைவ னும்பர் பதியிறைவன் றென்றேவை
யூரிறைவன் போந்தா னுலா. 360

வாழி

சேது நகர்வாழி தீர்த்தங்கள் வாழிகந்த
மாதனம் வாழிபர மன்வாழி - காதலித்தாய்
வாழி சிவசமயம் வாழிதலத் தார்வாழி
வாழிமனு வேந்தன் வளம்.

தேவையுலா முற்றிற்று

இராமநாதர் திருவடித் தாமரைகள் துணை