உலா நூல்கள்

     தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் உலா என்பது ஒன்றாகும். பாட்டில் இடம்பெறும் தலைவன் வீதி உலா வருவதைச் சிறப்பித்துப் பாடுவதாகும். இதனை உலாப்புறம் எனவும் வழங்குவர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நால்வகைப் பாடல் வகையில் கலிவெண்பாவால் இயற்றப் பெறும்.

     தலைவன் வீதி உலா வருகையில், அவ்வீதியிலுள்ள பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழுவகைப் பருவப் பெண்களும் தலைவனைக் கண்டு காமுறுவதாகப் பாடப் பெறுவதாகும். தலைவன் பெயர் கூறப்படுவதாலும், அவனைக் கண்டு மகளிர் காமுற்றதாக உரைப்பதாலும் இது புறப்பொருளைச் சார்ந்த பெண்பாற் கைக்கிளைத் திணையுள் அடங்கும். கைக்கிளை என்பது ஒருதலைக் காமம் ஆதலின் இது பாடாண் திணைக்கு உரியதாகும்.

     அரசர், வள்ளல், வழிபடும் தெய்வம், தம் ஆசிரியர் மீது உலாக்கள் பாடப்பெறும். பாட்டுடைத் தலைவன் பெருமை, நீராடுதல், ஊர்திகளில் செல்லுதல்,உடன் வருவோர், மகளிர் கூட்டம் காத்திருத்தல், காமுறுதல் ஆகியன உலாவின் முதற்பகுதியாகவும், அதன்பின் ஏழுவகைப் பருவ மங்கையரின் இயல்புகள், அழகுபடுத்தல், விளையாடுதல், தலைவரைக் காணுதல், காமுறுதல் என்பன இரண்டாம் பகுதியாகவும் கூறப்பெறும்.

புகழ் பெற்ற உலா நூல்கள்