உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நாராயண தீக்ஷிதர் இயற்றிய தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை காப்பு நம்மாழ்வார் கட்டளைக்கலித்துறை அடியேங்க டுன்ப மகல்வதற் காவந்த நான்மறையின் முடியே பரவுங் குழைக்காதர் மீது முதுதமிழாற் படியேழு மோங்கிய பாமாலை யீரைம் பதுமளிப்பான் கடியே றிலஞ்சித் தொடைஞான முத்திரைக் கைத்தலனே. 1 பெரிய திருவடிகள் பொன்சிறை நீக்கி விரித்தே பறக்கின்ற புள்ளரசே என்சிறை நீக்குவித் தாயில்லை யேயிக லாடரவ வன்சிறை நீக்கினை வானவர்க் காக மகிழ்விநதை தன்சிறை நீக்கினை யாரா வமுதமுந் தந்தனையே. 2 நூல் கன்றுக் கிரங்கிய கற்றாவைப் போலக் கருணையுடன் என்றைக் கிரங்குவ ரோவறி யேனெழு பாருமுய்யக் குன்றைக் கவிகை யெனத்தரித் தோர்குழைக் காதரைநாம் சென்றெப் பொழுது தொழுவதும் பாவங்க டீர்வதுமே. 1 எப்போது நின்னை நினைப்போமங் கேவந் தெதிர்முகமாய் அப்போது நீயும்வந் தஞ்சலென் பாயடி யாருளத்தில் மெய்ப்போத ஞான விளக்கே கராங்கௌவ வீரிட்டந்தக் கைப்போத கஞ்சொன்ன மாலேதென் பேரையிற் காகுத்தனே. 2 நூற்றெண் மருக்கிடர் வந்தாலு மவ்விடர் நோயகற்றி மாற்றும் பரஞ்சுடர் நீயல்ல வோதமிழ் வாணர்தினம் போற்றுஞ் சுருதிப் பொருளே மதுரம் பொழிந்துநறை ஊற்றுந் துளவப் புயத்தாய்தென் பேரையி லுத்தமனே. 3 உத்தம னைத்தமிழ்ப் பேரையம் மானையன் புற்றவர்க்கு நித்த மனத்தந் தவிர்க்குஞ்செஞ் சோதியை நீண்டசுடர் அத்த மனம்பட வாழிதொட் டானை யனுதினமும் தத்த மனத்து ணினைப்பார்க் கொருதுயர் தானிலையே. 4 எந்தெந்த வேளை யினுமலங் காம லிருசரணம் தந்தந்த கார வினைதவிர்ப் பாயிந்தத் தாமதமென் உன்றன் றிருவடிக் காளான வெங்கட் குவகைநல்காய் கொந்துந்து தாமப் புயனே மகரக் குழைக்கொண்டலே. 5 பூரண சந்த்ர முகமுங்கத் தூரியும் பொற்புயமும் ஆரணந் தேடுநின் பாதாம் புயமு மபயமென்றே வாரணங் காத்த கரபுண்ட ரீகமும் வந்துதொழாக் காரண மேதென் றறியேன்றென் பேரரையிற் காகுத்தனே. 6 அன்னையல் லாமன் மகவுக்கு வேறில்லை யாதுலர்க்குப் பொன்னையல் லாமற் புகல்வே றிலையிப் புலைதவிர்க்க நின்னையல் லாமன்மற் றாரையுங் காண்கில னீதியுடன் நன்னயஞ் சேருந் தமிழ்ப்பேரை வாழ்கின்ற நாரணனே. 7 பொல்லாத வஞ்சனை வாராமற் போக்கினை போக்கினதும் அல்லாம லெங்கட் கபயமென் றாயடி யேங்கள்வினை எல்லா மகற்றிநின் சந்நிதிக் கேவர ரட்சிகண்டாய் நல்லார் தொழுந்தென் றிருப்பேரை வாழ்கின்ற நாரணனே. 8 வஞ்சம் புணர்ந்த கொடுவினை யாவையு மாற்றியெங்கள் நெஞ்சங் கலங்கி யழியாமற் காத்தரு ணின்னையெந்நாள் கொஞ்சுங் குழந்தையுங் கூடத் தொழுவது கோவியர்பால் துஞ்சுந் தயிருண்ட மாலேதென் பேரையிற் றூயவனே. 9 காவா யெனப்பல தேவரை வாழ்த்திக் கவலையுடன் நாவா யுலர்ந்ததல் லாற்பய னேதெம்மை நாடிவந்த தாவா வினையைத் தவிர்ப்பா யினியுன் சரணங்கண்டாய் தேவா தியர்தொழுந் தேவேதென் பேரையிற் சீதரனே. 10 பித்தனைப் போன்மன மேங்காம லிந்தப் பிணியகல எத்தனை நாட்செல்லு மோவறி யேனிசை தேர்குருகை முத்தனைப் போற்று மகிழ்மாறன் கூறு முகுந்தமலர்க் கொத்தலர் பேரைக் கதிபா மகரக் குழைக்கொண்டலே. 11 அடியா ரிடத்தில் வினைகள்வந் தாலு மவையகற்றி நொடியாகத் தீர்ப்பது நீயல வோமின் னுடங்குவஞ்சிக் கொடியா ரிடைச்சியர் மத்தா லடிக்கக் குழைந்துநின்ற வடிவா கருணைக் கடலேதென் பேரையின் மாதவனே. 12 ஆயிரங் கோடி வினைகள்வந் தாலு மவையகற்றி நீயிரங் காவிடின் மற்றாரு மில்லை நிறைந்ததமிழ்ப் பாயிர மாறன் கவிகேட் டுருகும் பரமவிசை வேயிரங் குங்கனி வாயா தென்பேரையில் வித்தகனே. 13 அவலப் படாப்பழி வாராமற் காத்தடி யேங்கண்மனம் கவலைப் படாமற் கடாட்சிகண் டாய்கற்ற நாவலரும் நுவலப் படாவரை மத்தாக நாட்டி நுடங்குதிரைத் திவலைக் கடலைக் கடைந்தாய்தென் பேரையிற் சீதரனே. 14 உனையா தரிக்கு மடியேங்கண் முன்செய்த வூழ்வினையால் நினையாமல் வந்த நெடுந்துயர் தீர்த்தரு ணேமிசங்கம் புனையா ரணப்பொரு ளேபல காலன்பு பூண்டவர்பால் அனையா கியகுழைக் காதா வினியு னடைக்கலமே. 15 நெஞ்சினு நீயென் னினைவினு நீநெடும் பூதமெனும் அஞ்சினு நீகலை யாறினு நீயறி வோடிருகண் துஞ்சினு நீயன்றி வேறறி யேனித் துயர்தவிர்ப்பாய் மஞ்சினு மேனி யழகா கருணை வரோதயனே. 16 வண்ணங் கரியன் கனிவாய் முகுந்தன் மலர்ப்பதமும் கண்ணுங் கரமுங் கமலமொப் பான்கஞ்ச மாமயிலை நண்ணுங் கருணைத் திருப்பேரை மாதவ னாமஞ்சொன்னால் எண்ணுங் கவலையுந் துன்பமுந் தீரு மெமக்கினியே. 17 நிலையாக் கயத்துட் படிந்தவர் போலெங்க ணெஞ்சழிந்து மலையாம லித்துயர் மாற்றுகண் டாய்மலர்ச் சேவடியாற் சிலையா ரணங்கி னுருவாக்குந் தெய்வ சிகாமணியே அலையாழி சூழுந் தமிழ்ப்பேரை வாழச்சு தானந்தனே. 18 எண்ணாத வெண்ணி யிடைந்திடைந் தேங்கி யிருந்துமனம் புண்ணாய் மெலிந்து புலம்பாம னீயிப் புலைதவிர்ப்பாய் பண்ணார் மதுரத் தமிழ்ப்பா வலரும் பழமறையும் விண்ணாட ருந்தொழு மெந்தாய்தென் பேரையில் வித்தகனே. 19 இழைக்குங் கொடிய வினையா வையுமாற்றி யெங்களுயிர் பிழைக்கும் படிக்கருள் செய்தனை யேசுவை பெற்றபசுங் கழைக்கண்டு செஞ்சொல் வசுதேவி கண்டிரு கண்களிக்கும் மழைக்கொண்ட லேயண்டர் வாழ்வேதென்பேரை மணிவண்ணனே. 20 திங்களொன் றாகச் சிறையிருந் தோமிச் சிறையகற்றி எங்கடம் பாலிரங் காததென் னோவிசை நான்மறையின் சங்கமுங் கீதத் தமிழ்ப்பாட லுஞ்சத்த சாகரம்போற் பொங்குதென் பேரைப் புனிதா கருணைப் புராதனனே. 21 இன்றாகு நாளைக்கு ணன்றாகு மென்றிங் கிருப்பதல்லால் ஒன்றா கிலும்வழி காண்கில மேயுன் னுதவியுண்டேல் பொன்றாம னாங்கள் பிழைப்போங் கருணை புரிந்தளிப்பாய் அன்றா ரணந்தொழ நின்றாய்தென் பேரைக் கதிபதியே. 22 வள்வார் முரசதிர் கோமான் வடமலை யப்பன்முன்னே விள்வாரு மில்லை யினியெங்கள் காரியம் வெண்டயிர்பாற் கள்வா வருட்கடைக் கண்பார் கருணைக் களிறழைத்த புள்வாக னாவன்பர் வாழ்வேதென் பேரைப் புராதனனே. 23 பறவைக் கரசனைக் கண்டோடும் பாம்பெனப் பாதகமாம் உறவைக் கரங்கொண் டொழிப்பதென் றோபவத் தூடழுந்தித் துறவைக் கருது மவர்க்கருள் பேரையிற் றூயவமா சறவைத்த செம்பொற் றுகிலுடை யாயச்சு தானந்தனே. 24 வீயாம னாங்கண் மெலியாம லிந்த வினையகற்றி நாயா கியவெங்க ளைக்காத் தருணவ நீதமுண்ட வாயா வொருபத்து மாதஞ் சுமந்து வருந்திப்பெற்ற தாயா கியகுழைக் காதாதென் பேரைத் தயாநிதியே. 25 கண்டோ மிலைமுனங் கேட்டோ மிலையவன் கைப்பொருளால் உண்டோ மிலையிவ் வினைவரக் காரண மொன்றுளதோ தண்டோடு சக்கரஞ் சங்கேந்து மும்பர் தலைவநெடு விண்டோய் பொழிற்றடஞ் சூழ்பேரை வந்தருள் வித்தகனே. 26 நாவையண் ணாந்தசைத் துன்றிருநாம நவிலமற்றோர் தேவையெண் ணோமித் துயர்தீர்த் திடாத திருவுளமென் கோவைவண் ணாகமுடிமே லொருபதங் குந்திநின்ற பூவைவண் ணாவிண் ணவர்போற்றும் பேரைப் புராதனனே. 27 ஒருநாளு நின்னை வணங்காதி ரோங்கண் ணுறங்கினுநின் திருநாம மன்றிமற் றொன்றறி யோமிந்தத் தீங்ககற்றாய் பொருநா கணையொன்றி வேரோடு மைம்மலை போற்பொலிந்த கருநாயி றேயன்பர் கண்ணேதென் பேரையிற் காகுத்தனே. 28 உரகதங் கொண்ட கொடியோனை நீக்கி யுறுதுணையாய்ப் பரகதி யாகவந் தஞ்சலென் பாய்பவ ளக்கதிர்பூங் குரகத மாமுகம் போற்கவி பேரைக் குழக செம்பொன் மரகத மேனி யழகா கருணை வரோதயனே. 29 சிந்தா குலந்தவிர்த் தெங்களை யூரிற் றிரும்பவழைத் துன்றா மரைச்சர ணந்தொழ வேயரு ளும்பர்தொழும் எந்தாய் பொருநைத் துறைவா வரிவண் டிசைபயிற்றும் கொந்தார் துளவப் புயத்தாய் மகரக் குழைக்கொண்டலே. 30 உய்வண்ண மெங்கட் குதவியஞ் சேலென்று றுதுணையாய் எவ்வண்ண மித்துய ரந்தவிர்ப் பாய்கதி ரீன்றுபுனற் செய்வண்ணப் பண்ணை வளமே செறிந்ததென் பேரைவளர் மைவண்ண மேனி யழகா கருணை வரோதயனே. 31 பலகா லிருந்து மெலிந்தூச லாடும் பழவினையை விலகா திருந்த திருவுள மேதுகொல் விண்ணவர்க்கா உலகா ளிலங்கையர் கோமா னுயிர்க்கும்வண் டோதரிக்கும் குலகால னாகிய கோவே மகரக் குழைக்கொண்டலே. 32 அடங்காத் தனம்புதைத் தார்போன் மெலிந்தடி யேங்களிந்த மடங்காத் திருந்து சலியாம லித்துயர் மாற்றுகண்டாய் தடங்காத் திகழுந் தமிழ்ப்பேரை வாழுந் தயாபரபொற் குடங்காத்து வெண்டயிருண்டாய் மகரக் குழைக்கொண்டலே. 33 பங்கே ருகத்தை யிரவி புரந்திடும் பான்மையைப்போற் செங்கேழ்க் குமுதத்தைத் திங்கள் புரக்குஞ் செயலினைப்போற் கொங்கே கமழு மிருசர ணாம்புயங் கொண்டுதினம் எங்கே யிருந்துங் குழைக்காத ரெம்மை யிரட்சிப்பரே. 34 எங்களை யுந்தொண்ட ரென்றே யிரங்கி யினியெங்கள்பா வங்களை யும்படிக் கேயருள் வாய்கனி வாயமுதம் பொங்களை யுண்டு தெவிட்டியன் பாற்பரி பூரணமாம் திங்களை வென்ற முகத்தாய்தென் பேரையிற் சீதரனே. 35 விடனட வாது கருமஞ்செய் தானை விலக்கினியெம் முடலடு மாதுயர் தீர்த்தெமை யாண்டரு ளுண்மையிது திடனட மாத ருடனே பதாம்புயஞ் சேப்பநின்று குடநட மாடு முகுந்தா மகரக் குழைக்கொண்டலே. 36 இரவும் பகலு மெலியாம வெங்கட் கிரங்கியுனைப் பரவும் படிக்கிவ் வினைதீர்த் தருணெடும் பாரதப்போர் விரவுங் கொடுந்துயர் நூற்றுவர் மாள விசயனுக்கா அரவுந்து தேர்முன மூர்ந்தாய்தென் பேரையி லச்சுதனே. 37 பாற்கொண்ட நீரன்னம் வேறாக்கு முன்னைப் பரவுமெங்கள் மேற்கொண்ட வல்வினை வேறாக்க நீயன்றி வேறுமுண்டோ சூற்கொண்ட செந்நெல் வயற்பேரை யந்தணர் சூழ்ந்துதொழும் கார்க்கொண்ட லேகுழைக்காதா கருணைக் கருங்கடலே. 38 அறிவு மறமுந் தரும்பல பூதமு மாரணத்தின் பிறிவும் பிறிதொரு தெய்வமு நீயிப் பெருவினையாற் செறியுந் தமியர் துயர்தீர்த் திடாததென் றெண்டிரைநீர் எறியும் பொருநைத் துறைவாதென் பேரைக் கிறையவனே. 39 நெருங்கடர் தீவினை நீக்கியுன்னாம நினைப்பதற்குத் தருங்கட னெங்களைக் காப்பதன் றோதளர்ந் தேமெலிந்த மருங்கட வீங்கும் படாமுலைப் பூமட மான்றழுவும் கருங்கட லேகுழைக் காதாதென் பேரையிற் காகுத்தனே. 40 செழுந்தா மரையிலைத் தண்ணீ ரெனநின்று தீவினையால் அழுந்தாம னாங்கண் மலங்காமற் காத்தரு ளாரணத்தின் கொழுந்தாதி மூலமென் றேதௌிந் தோதிய கொண்டல்வண்ணா கழுந்தார் சிலைக்கை யரசேதென் பேரையிற் காகுத்தனே. 41 பெய்யுங் கனமழை கண்டபைங் கூழெனப் பேருதவி செய்யுங் கடவுளர் வேறிலை காணிந்தத் தீங்ககற்றி உய்யும் படிக்கெங் களைக்காத் தருணற வூற்றிருந்து கொய்யுந் துளவப் புயத்தாய் மகரக் குழைக்கொண்டலே. 42 பஞ்சின்மென் சீறடிப் பாண்டவர் பாவை பதைபதையா தஞ்சலென் றேயன் றவண்மானங் காத்தனை யப்படியிவ் வஞ்சகந் தன்னையும் தீர்த்தருள் வாய்கர வால்வருந்தும் குஞ்சரங் காத்த முகிலே மகரக் குழைக்கொண்டலே. 43 மறுகாம னாங்கண் மனஞ்சலி யாமலிவ் வஞ்சகர்வந் திறுகாம லெங்களைக் காத்தருள் வாய்துண ரீன்றமணம் பெறுகாவில் வாசச் செழுந்தேற லுண்டிளம் பேட்டுவரி அறுகால் வரிவண் டிசைபாடும் பேரையி லச்சுதனே. 44 காக்குங் தொழிலுனக் கல்லாது வேறு கடவுளரை நாக்கொண்டு சொல்லத் தகுவதன் றேநணு காதுவினை நீக்கும் படிக்கருட் கண்பார்த் திரட்சி நிறைந்தபுனல் தேக்கும் பொழிற்றென் றிருப்பேரை வாழும் செழுஞ்சுடரே. 45 கண்ணுக் கிடுக்கண் வரும்போ திமைவந்து காப்பதுபோல் எண்ணுக்கு ணீங்கு துயர்தவிர்த் தேயெங்க ளுக்கருள்வாய் விண்ணுக்கு ளோங்கும் பொழிற்குரு கூரன் விரித்ததமிழ்ப் பண்ணுக் கிரங்கும் பரமாதென் பேரைப் பழம்பொருளே. 46 சத்துரு வைத்தள்ளி யெங்களைக் காத்துத் தயவுபுரிந் தித்துரு வத்தையு மாற்றுகண்டா யிலங் காபுரியோன் பத்துரு வங்கொண்ட சென்னிக டோறும் பதித்தமுடிக் கொத்துரு வக்கணை தொட்டாய் மகரக் குழைக்கொண்டலே. 47 இரும்பான கன்னெஞ்ச வஞ்சக னார்க்கு மிடர்விளைப்போன் திரும்பாம னீக்கி யெமைக்காத் தருணறை தேங்குமுகை அரும்பாரு மென்மல ராராமந் தோறு மமுதம்பொழி கரும்பாருஞ் செந்நெல் வயற்பேரை வாழ்கரு ணாநிதியே. 48 முன்னிற் புரிந்த பெருவினை யான்முற்று மேமலங்கி இன்னற் படாம லெமைக்காத் தருளிறை தீர்த்தருள்பூங் கன்னற் றடமுங் கமுகா டவியுங் கதிர்ப்பவளச் செந்நெற் பழனமுஞ் சூழ்பேரைத் தெய்வ சிகாமணியே. 49 தீதாம் பரத்தர்செய் தீவினை யாவையுந் தீர்த்தளிக்கும் மாதாம் பரத்துவ னீயல்ல வோமறை யோர்பரவும் வேதாம் பரத்தி னடுவே யரவின் விழிதுயின்ற பீதாம் பரத்தெம் பெருமான்றென் பேரையிற் பேரொளியே. 50 ஆலமென் னோருருக் கொண்டானை நீக்கி யகற்றவிது காலமன் றோவெங் களைக்காத் தருளக் கடனிலையோ ஞாலமென் றோகையும் பூமாது மேவிய நாததும்பி மூலமென் றோதிய மாலே நிகரின் முகில்வண்ணனே. 51 மெய்கொண்ட பொய்யென வித்துயர் மாற்றி விலக்கமுற்றும் கைகண்ட தெய்வ முனையன்றி வேறிலை கான்றவிடப் பைகொண்ட நாக முடிமேற் சரணம் பதித்துநடம் செய்கண் டகர்குல காலாதென் பேரையிற் சீதரனே. 52 முத்தித் தபோதனர்க் குங்கலை வேத முதல்வருக்கும் சித்தித்த நின்பதஞ் சேவிப்ப தென்றுகொ றேவகிமுன் தத்தித்த தித்தி யெனநடித் தேயிடைத் தாயர்முனம் மத்தித்த வெண்ணெய்க் குகந்தாய்தென் பேரை மணிவண்ணனே. 53 நிம்ப வளக்கனி போற்கசப் பாகிய நீசனுளம் வெம்ப வளத்த வினையணு காமல் விலக்கிவிடாய் கும்ப வளத்தயி ருங்குடப் பாலும் குனித்தருந்தும் செம்ப வளத்தெம் பெருமான்றென் பேரையிற் சீதரனே. 54 ஊழ்வே தனைசெய்ய வாராதுன் னாம முரைத்தவர்க்குத் தாழ்வேது மில்லை மிகுநன்மை யேவரும் சஞ்சரிகம் சூழ்வேரி தங்கும் துழாய்ப்புய லேயெங்கள் துன்பகற்றும் வாழ்வே மரகத வண்ணாதென் பேரையின் மாதவனே. 55 முன்னம் பழகி யறியோ மவனை முகமறியோம் இன்னம் பழவினை வாராமற் காத்தரு ளேற்றசெங்கால் அன்னம் பழன வயறோறுந் துஞ்சு மடர்ந்தபசும் தென்னம் பழஞ்சொரி யுந்திருப் பேரையிற் சீதரனே. 56 ஆக நகைக்கும் படிதிரி வோன்கடந் தப்புறமாய்ப் போக நகத்திற் புகுந்தோட வேயருள் போர்க்களத்தில் மாக நகப்பெயர் கொண்டானை மார்வம் வகிர்ந்தசெழும் கோக நகச்செங்கை யானே மகரக் குழைக்கொண்டலே. 57 பொய்யா னிறைந்த கொடியவெம் பாதகன் பொய்யும்வம்பும் செய்யாம லெங்களைக் காத்தருள் வாய்செழுந் தாரரசர் மொய்யாக வந்தனிற் பாண்டவர்க் காக முழங்குசங்கக் கையா கருமுகில் மொய்யாதென் பேரையிற் காகுத்தனே. 58 இகலிட மான புலையனை மாற்றினி யெங்களுக்கோர் புகலிட நீயன்றி வேறுமுண் டோபுகல் கற்பமெலாம் பகலிடமான சதுமுகத் தேவொடு பண்டொருநாள் அகலிட முண்ட பிரானேதென் பேரைக் கதிபதியே. 59 கையக நெல்லிக் கனிபோ லெமைத்தினங் காத்தளிக்கும் துய்யகண் ணன்செழுங் காயா மலர்வண்ணன் சுக்கிரனார் செய்யகண் ணைத்துரும் பாலே கிளறிச் சிறுகுறளாய் வையக மன்றளந் தான்றமிழ்ப் பேரையின் மாதவனே. 60 கலகக் கொடிய புலையனெம் பாற்செய்த காரியத்தை விலகக் கடனுனக் கல்லாது வேறிலை வேலைசுற்றும் உலகத் தனிமுத லென்றறி யாம லுபாயம் செய்த அலகைத் துணைமுலை யுண்டாய்தென் பேரையி லச்சுதனே. 61 கைச்சக டைத்தொழில் கொண்டே திரியுங் கபடன் செய்த இச்சக டத்தையு மாற்றி விடாயிடை மாதருறி வைச்ச கடத்தயி ருண்டே தவழ்ந்தன்று வஞ்சன்விட்ட பொய்ச்சக டத்தை யுதைத்தாய்தென் பேரையிற் புண்ணியனே. 62 புண்ணிய நந்தகு மாராமுன் னாட்செய்த புன்மையினார் பண்ணிய நந்தம் வினைதவிர்ப் பாய்பல காலுமுளம் கண்ணி யனந்தன் முடிமே னடிக்கும் கருணைமுகில் எண்ணி யனந்த மறைதேடும் பேரைக் கிறையவனே. 63 இறையவ னெம்பெரு மானெடு மாலெறி நீர்ப்பொருநைத் துறையவ னேழை யடியார் சகாயன் சுடரிரவி மறைய வனந்திகழ் நேமிதொட் டானென் மனக்கருத்தில் உறைய வனஞ்சுடும் தீப்போலப் பாதகக மோடிடுமே. 64 அக்கணஞ் சாதெந்த வேளையென் றாலு மளித்தனைநீ இக்கணஞ் சால வருந்துமெம் பாலிரங் காததென்னோ மைக்கணஞ் சாயன் மடமாதுக் காக வளர்மிதிலை முக்கணன் சாப மிறுத்தாய்தென் பேரை முகில்வண்ணனே. 65 ஆடகச் சேவடி யாலெம தாவி யளித்தனைகார்க் கோடகப் பாவிகள் வாராமற் காத்தனை கோசலநன் னாடகத் தோர்சிலை தாங்கிவெங் கூற்றை நகைக்குமந்தத் தாடகைக் கோர்கணை தொட்டாய்தென் பேரைத் தயாநிதியே. 66 பரனே பராபர னேபதி யேபதி கொண்டசரா சரனே நெடும்பர தத்துவ னேசமர் வேட்டெழுந்த கரனே முதற்பதி னாலாயி ரங்கண் டகரைவெல்லும் உரனே நிகர் முகில் வண்ணாவிந் நாள்வந் துதவினையே. 67 காலிக் கொருவரை யேந்தினை நெஞ்சங் கலங்குமெங்கள் மேலிக் கொடுவினை வாராமற் காத்தனை மேன்மைதரும் பாலுக் கினிய மொழியாளைத் தேடிப் பகையையெண்ணா வாலிக் கொருகணை தொட்டாய்தென் பேரை மணிவண்ணனே. 68 அராமரி யாதை யறியாத வஞ்ச னதட்டவெமைப் பொராமர ணாதிகள் வாராமற் காத்தனை பூதலத்தில் இராமா வெனும்படிக் கேநீ யொருகணை யேவிநெடு மராமர மேழுந் துளைத்தாய்தென் பேரையின் மாதவனே. 69 மாதவ னேகரு ணாகர னேயென் மனவிருட்கோர் ஆதவ னேகரு மாணிக்க மேமல ராசனத்திற் போதவனேக மெனவே பரவிப் புகழ்ந் தகுழைக் காத வநேகம் பிழைசெய்த வெங்களைக் காத்தருளே. 70 அதிபாவஞ் செய்து பிறந்தாலு மப்பொழு தஞ்சலென்னல் விதிபார மன்றுனக் கெங்களைக் காப்பது வேரிமடற் பொதிபாளை மீறி நெடுவாளை யாளைப் பொருதுவரால் குதிபாய் பொருநைக் கதிபா மகரக் குழைக்கொண்டலே. 71 மகரக் குழையு முககாந்தி யும்மணி மார்பமும் பொற் சிகரக் குழையும் புயபூ தரமுநற் சேவடியும் பகரக் குழையுந் திருநாம முந்நெடும் பாதகநோய் தகரக் குழையும் படியுரை யீருயிர் தாங்குதற்கே. 72 ஓருரு வாயிரண் டாய்மூவ ராகி யுபநிடதப் பேருரு நான்கைம் புலனா யறுசுவைப் பேதமதாய்ப் பாருரு வேழெட் டெழுத்தாய்ப் பகரும் பிரணவமாய்க் காருரு வாங்குழைக் காதருண் டேயெமைக் காப்பதற்கே. 73 இடைந்தோ ரிருப்பிட மில்லாத வஞ்சக னேங்கிமனம் உடைந்தோட நோக்கி யெமைக்காத் தனையுயர் வீடணனொந் தடைந்தே னெனவன் றரசளித் தாயறு காற்சுரும்பர் குடைந்தோகை கூரு மலர்ப்பொழிற் பேரையிற் கோவிந்தனே. 74 கோவிந்த னாயர் குலத்துதித் தோன்செழுங் கொவ்வைச் செவ்வாய் மாவிந்தை நாயகன் பூமாது கேள்வன் பொன் வானவர்தம் காவிந்த நானிலத் தாக்கிய பின்னை கணவன் பொற்றாள் மேவிந்த நாளெண்ணு நெஞ்சேதென் பேரை விமலனையே. 75 விண்டலத் தாபத ரும்மிமை யோருநல் வேதியரும் பண்டலத் தால்வருந் தாதவர்க் காகப் பகைதவிர்த்தாய் மண்டலத் தாதவன் போற்கதிர் வீசு மணிமகர குண்டலத் தாய்தண் டமிழ்ப்பேரை யெங்கள் குலதெய்வமே. 76 புராதனன் மாயன் புருடோத் தமன்பரி பூரணன்வெவ் விராதனை மாய வதை செய்த காரணன் விண்ணவர்கோன் சராதன மாய மெனவே யிறுத்தவன் றன்றுணையாம் கிராதனை மாலுமி கொண்டான்றென் பேரையிற் கேசவனே. 77 வலையுற் றினம்பிரி யுங்கலை போல மறுகிமனம் அலைவுற்று நைந்து மெலியாமற் காத்தனை யம்புவிக்கே நிலையுற்ற தெண்டிரை முந்நீரைச் சீறு நெடும்பகழிச் சிலையுற்ற செங்கை முகிலேதென் பேரையிற் சீதரனே. 78 சீதர னேமது சூதன னேசிலை யேந்துபுய பூதர னேபுல வோரமு தேபுவி தாங்கியகா கோதர னேயன்றொ ராலிலை மேற்பள்ளி கொண்டருள்தா மோதர னேகுல நாதா நிகரின் முகில்வண்ணனே. 79 சேரீர் செனன மெடுத்தவந் நாண்முதற் றீங்கு செய்வ தோரீர் சடைப்பட் டுழலுந்தொண் டீர்நற வூற்றிதழித் தாரீச னார்க்கு மிரவொழித் தேயொரு சாயகத்தால் மாரீச னைவென்ற மால்குழைக் காதர் மலரடிக்கே. 80 புங்கவ னெம்பெரு மானெடி யோன்புடை தோள்புனையும் சங்கவ னம்பெரு மாநிலம் போற்றுந் தயா பரன்மா துங்க வனந்திரி யுஞ்சூர்ப் பணகை துணைமுலைகள் வெங்க வனத்தி லறுத்தான்றென் பேரையில் வித்தகனே. 81 வித்தக னேமிப் பிரான்றிரு மாறிரி விக்கிரமன் பத்தர்க ணெஞ்சுறை யும்பர மானந்தன் பண்டொருநாள் மத்தக மாமலைக் கோடொடித் தான்முகில் வண்ணனென்றே கத்தக மேயிக மேபெற லாநற் கதியென்பதே. 82 கூசுங்கண் டீர்முன் வரக்கொடுங் கூற்றுங் குளிர்ந்தமணம் வீசுங்கண் டீர்நறுந் தண்ணந் துழாய்விதி யால்விளைந்த மாசுங்கண் டீர்வினை யும்மருண் டோடு மகிழ்ந்தொருகாற் பேசுங்கண் டீர்தண் டமிழ்ப்பேரை வானப் பிரானெனவே. 83 அன்பர்க் கருள்வ துனக்கே தொழிலடி யேங்களிந்தத் துன்பப் படாமற் றுணைசெய்வ தென்றுகொல் சூட்டுமணி இன்பப் பஃறலைப் பாம்பணை யிற்கண் ணிணை துயிலும் என்பற்ப நாப முகுந்தாதென் பேரைக் கிறையவனே. 84 முராரி கராவை முனிந்தான் றயாபர மூர்த்திமுக்கட் புராரி கபால மொழித்தான் சதுமறை போற்றநின்றான் பராரித யத்தி லிரானன்ப ரேத்தும் படியிருப்பான் சுராரி களைப்பட வென்றாறென் பேரையிற் றூயவனே. 85 வேலிக்கு ணின்று விளைபயிர் போல விரும்புமெங்கள் பாலிக் கொடுந்துயர் தீர்த்தளித் தாய்பகை வென்றபுய வாலிக்கும் வேலைக்கு மானுக்கு மாய மயன்மகடன் தாலிக்குங் கூற்றுவ னானாய்தென் பேரைத் தயாநிதியே. 86 பாரதி நாவி லுறைவோனுந் தேவர் பலருமன்பு கூரதி காந்தி மலர்ச்சே வடியினை கூறுமைவர் சாரதி பேரை வளர்சக்ர பாணி சரணமென்றே மாருதிக் கீந்த திருநாம நாளும் வழுத்துவனே. 87 பேராழி வையக மெல்லா மனுமுறை பேதலியா தோராழி யோச்சி யரசளித் தேபின் னுறுவர்பதம் கூராழி யேந்துந் தமிழ்ப்பேரை வாழ்குல நாதனெழிற் காராழி நீர்வண்ணன் பேரா யிரத்தொன்று கற்றவரே. 88 சிகரந் திகழுநின் கோபுர வாசலிற் சேவிக்கநாம் பகருந் தவமுனம் பெற்றில மோமடப் பாவையர்தம் தகரந் தடவு மளகா டவியிற் றவழ்ந்திளங்கால் மகரந்த மொண்டிறைக் குந்திருப் பேரையின் மாதவனே. 89 மந்தர மாமலை மத்தாக வேலை மதித்தனைகா மந்தர மீது புரியாம னூற்றுவர் மாயவைவர் மந்தர ஞால மரசாள வைத்தனை வான்பகைமுன் மந்தர சூழ்ச்சியின் வென்றாய்தென் பேரையின் மாதவனே. 90 வாமன னூற்றெண்மர் போற்றும் பிரான்மல ராள்கணவன் பூமனை நாபியிற் பூத்தோ னடங்கப் புவியிடந்தோன் காமனைத் தந்த திருப்பேரை வாழ்கரு ணாநிதிதன் நாமனைச் சிந்தையில் வைத்திலர் வீழ்வர் நரகத்திலே. 91 அருங்கொடிக் கோர்கொழு கொம்பென வெம்மை யளிப்பதுஞ்செய் திருங்கொடி யோனையு மாற்றிவிட் டாயிறு மாந்துவிம்மி மருங்கொடித் தோங்கு முலைச்சா னகியை வருத்தஞ்செய்த கருங்கொடிக் கோர்கணை தொட்டாய்தென் பேரையிற் காகுத்தனே. 92 அரந்தரும் வேல்விழி யாரனு ராக மகற்றியுயர் வரந்தர வல்லவன் வானப் பிரானெங்கள் வல்வினையைத் துரந்தர னாகவந் தஞ்சலென் றோன்றன் றுணைமலர்த்தாள் 93 நிரந்தரம் போற்று மவரே புரந்தரர் நிச்சயமே. காண்டா வனமெரித் தான்றரித் தானென் கருத்திலன்பு பூண்டா னெழின்மணிப் பூணா னறிவற்ற புன்மையரை வேண்டா னடியவர் வேண்டநின் றான்விரி நீர்ப்புடவி கீண்டான் றமியனை யாண்டான்றென் பேரையிற் கேசவனே. 94 கேசவன் பேரை வளர்வாசு தேவன்கை கேசிசொல்லால் நேச வனம்புகுந் தோர்மானை வீட்டி நிசாசரரை வாசவன் செய்த தவத்தாற் றொலைத் தருண் மாதவன் பேர் பேச வனந்த லிலும்வரு மோபெரும் பேதைமையே. 95 கழகா ரணத்தின் பயனறி யாத கபடனெம்மைப் பழகாத வஞ்சனை நீக்குவித் தாயிடைப் பாவையர் தம் குழகா வழுதி வளநாட கோவர்த் தனமெடுத்த அழகா மகரக் குழையாய்தென் பேரையி லச்சுதனே. 96 அச்சுதன் பேரை யபிராமன் செஞ்சொ லசோதக்கன்பாம் மெய்ச்சுத னெங்களை யாட்கொண்ட மாயன் விசயனுக்கா அச்சுத நந்தைக் குறித்தா னரவிந்த லோசனன்முன் நச்சு தனஞ்சுவைத் துண்டானென் பார்க்கு நரகில்லையே. 97 இல்லைப் பதியென் றிருந்துழல் வீரௌி யேங்கள் சற்றும் தொல்லைப் படாதருள் பேரையெம் மான்பதத் தூளிகொடு கல்லைப்பெண் ணாக்குங் கருணா கரன்முன்பு கஞ்சன்விட்ட மல்லைப் பொருதவ னென்றோதத் துன்பம் வராதுமக்கே. 98 வாரா யணுவெனு நெஞ்சேயஞ் சேல்வஞ் சகமகலும் கூரா யணிந்தவன் சேவடிக் கேயன்பு கூர்ந்துமறை பாரா யணம்பயி னூற்றெண்மர் நாளும் பரிந்துதொழும் நாரா யணன்றிருப் பேரையெம் மான்றனை நண்ணுதற்கே. 99 பதமும் பதச்சுவை யுங்கவிப் பாகமும் பாகச்செஞ்சொல் விதமும் விதிவிலக் கில்லா விடினும் வியந்தருளற் புதமென் றளிரிளந் தேமாவும் பூகப் பொழிலுமழைக் கிதமென் பசுந்தென்றல் வீசுந்தென் பேரைக் கிறையவனே. 100 வாழ்த்து பார்வாழி நூற்றெண்ப பதிவாழி மாறன் பனுவலியற் சீர்வாழி நூற்றெண்மர் நீடூழி வாழியிச் செந்தமிழ்நூல் ஏர்வாழி மன்ன ரினிதூழி வாழியெந் நாளுமழைக் கார்வாழி பேரைக் குழைக்காதர் வாழியிக் காசினிக்கே. தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை முற்றிற்று |