பெரியாழ்வார்

அருளிய

திருமொழி

... தொடர்ச்சி - 4 ...

நான்காம் பத்து

முதல் திருமொழி - கதிராயிரம்
(ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

328
கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன்
எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய்
உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர். 1

329
நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம்
ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
காந்தள்முகிழ்விரல்சீதைக்காகிக் கடுஞ்சிலைசென்றிறுக்க
வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர். 2

330
கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழிய
சிலையால்மராமரமெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல்
தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப
அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர். 3

331
தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட
மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன்
ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும்
வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர். 4

332
நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல்
வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு
தேரேற்றி சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர். 5

333
பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க
வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல்
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை
எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர். 6

334
வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன்
உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று
கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர். 7

335
நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே
நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன்
ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்பச் சயத்திரதன்தலையை
பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர். 8

336
மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம்
திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல்
எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து
வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர். 9

337
கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து
புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை
திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்
பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. 10

இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
(திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு)
கலிநிலைத்துறை

338
அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை
குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை
சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர்
சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. 1

339
வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை
பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை
எல்லாவிடத்திலும் எங்கும்பரந்துபல்லாண்டொலி
செல்லாநிற்கும்சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே. 2

340
தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரை
தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை
அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே. 3

341
ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம்
கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை
வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி
தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. 4

342
ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன்
ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை
கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன்
திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே. 5

343
ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை
சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை
ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும்
சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 6

344
மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல்
முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை
கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன்
தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 7

345
குறுகாதமன்னரைக் கூடுகலக்கி வெங்கானிடைச்
சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி
சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே. 8

346
சிந்தப்புடைத்துச் செங்குருதிகொண்டு பூதங்கள்
அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை
இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான்
சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே. 9

347
எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார்
விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை
பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவாய்த்
தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே. 10

348
மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை
கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை
விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல்
கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே. 11

மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
(திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு)
கலிநிலைத்துறை

349
உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற
உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை
பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு
விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. 1

350
கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும்
வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை
நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை
செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே. 2

351
மன்னுநரகன்தன்னைச் சூழ்போகிவளைத்தெறிந்து
கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்தகடல்வண்ணன்மலை
புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று
பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே. 3

352
மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த
காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை
கோவலர்கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப்
பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே. 4

353
பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை
அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை
குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை
நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. 5

354
பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம்
ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை
பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக
தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே. 6

355
கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள்
இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை
கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம்
இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே. 7

356
எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த
அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று
திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே. 8

357
கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து
மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை
ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று
ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே. 9

358
ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக
ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை
ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும்
ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. 10

359
மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை
நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை
மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில்
மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே. 11

நான்காம் திருமொழி - நாவகாரியம்
(முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

360
நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார்
தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்
மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத அப்
பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ. 1

361
குற்றமின்றிக்குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனுகூலராய்
செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்
பெற்றதாயர்வயிற்றினைப் பெருநோய்செய்வான்பிறந்தார்களே. 2

362
வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி நிழலெழும்
திண்ணைசூழ் திருக்கோட்டியூர்த் திருமாலவன்திருநாமங்கள்
எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய்
உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே. 3

363
உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள்
நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர்
நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர்
பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ. 4

364
ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய்
தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர்
நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை
பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே. 5

365
பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால்
ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய
பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே. 6

366
குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து
திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர்
கருந்தடமுகில்வண்ணனைக் கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள்
இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ. 7

367
நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும்
தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள்
விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே. 8

368
கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்
செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால்
எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே. 9

369
காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு
தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
கேசவா, புருடோத்தமா, கிளர்சோதியாய், குறளா, என்று
பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே. 10

370
சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும்
கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்
ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே. 11

ஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
(பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கீதோபதேசம் செய்தல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

371
ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி
அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி
வாசவார்குழலாளென்றுமயங்கி
மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே
கேசவா, புருடோத்தமா, என்றும்
கேழலாகியகேடிலீ, என்றும்
பேசுவாரவர்எய்தும்பெருமை
பேசுவான்புகில்நம்பரமன்றே. 1

372
சீயினால்செறிந்தேறியபுண்மேல்
செற்றலேறிக்குழம்பிருந்து எங்கும்
ஈயினால்அரிப்புண்டுமயங்கி
எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம்
வாயினால்நமோநாரணாவென்று
மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி
போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும்
பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே. 2

373
சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில்
சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து
ஆர்வினவிலும்வாய்திறவாதே
அந்தகாலம்அடைவதன்முன்னம்
மார்வமென்பதோர்கோயிலமைத்து
மாதவனென்னும்தெய்வத்தைநட்டி
ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே. 3

374
மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து
மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி
காலுங்கையும்விதிர்விதிர்த்தேறிக்
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
மூலமாகியஒற்றையெழுத்தை
மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி
வேலைவண்ணனைமேவுதிராகில்
விண்ணகத்தினில்மேவலுமாமே. 4

375
மடிவழிவந்துநீர்புலன்சோர
வாயிலட்டியகஞ்சியும்மீண்டே
கடைவழிவாரக்கண்டமடைப்பக்
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
தொடைவழிஉம்மைநாய்கள்கவரா
சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார்
இடைவழியில்நீர்கூறையும்இழவீர்
இருடீகேசனென்றேத்தவல்லீரே. 5

376
அங்கம்விட்டவையைந்துமகற்றி
ஆவிமூக்கினில்சோதித்தபின்னை
சங்கம்விட்டவர்கையைமறித்துப்
பையவேதலைசாய்ப்பதன்முன்னம்
வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை
மதுசூதனனைமார்பில்
தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமம்
சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே. 6

377
தென்னவன்தமர்செப்பமிலாதார்
சேவதக்குவார்போலப்புகுந்து
பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றிப்
பின்முன்னாகஇழுப்பதன்முன்னம்
இன்னவன்இனையானென்றுசொல்லி
எண்ணிஉள்ளத்திருளறநோக்கி
மன்னவன்மதுசூதனென்பார்
வானகத்துமன்றாடிகள்தாமே. 7

378
கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து
குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து
பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு
நரிப்படைக்குஒருபாகுடம்போலே
கோடிமூடியெடுப்பதன்முன்னம்
கௌத்துவமுடைக்கோவிந்தனோடு
கூடியாடியஉள்ளத்தரானால்
குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே. 8

379
வாயொருபக்கம்வாங்கிவலிப்ப
வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற
தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம்
தாரமும்ஒருபக்கம்அலற்ற
தீஓருபக்கம்சேர்வதன்முன்னம்
செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற
மாய் ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே. 9

380
செத்துப்போவதோர்போதுநினைந்து
செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல்
பத்தராயிறந்தார்பெறும்பேற்றைப்
பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன்
சித்தம்நன்கொருங்கித்திருமாலைச்
செய்தமாலைஇவைபத்தும்வல்லார்
சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல்
சென்றசிந்தைபெறுவர்தாமே. 10

ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
(பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்)
கலித்துறை

381
காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்
ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள்.
கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ
நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 1

382
அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால்
மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள்.
செங்கணெடுமால். சிரீதரா. என்றுஅழைத்தக்கால்
நங்கைகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 2

383
உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்து
எச்சம்பொலிந்தீர்காள். எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்?
பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே
நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 3

384
மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை
மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை
வானுடைமாதவா. கோவிந்தா. என்றுஅழைத்தக்கால்
நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 4

385
மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை
மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை
குலமுடைக்கோவிந்தா. கோவிந்தா. என்றுவழைத்தக்கால்
நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 5

386
நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு
கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்கதே
சாடிறப்பாய்ந்ததலைவா. தாமோதரா. என்று
நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 6

387
மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு
எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள்.
கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே
நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 7

388
நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்
நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம்
செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்
நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 8

389
ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள்
மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு
கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ
நாத்தகுநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 9

390
சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய
வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த
ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர்
பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. 10

ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
(தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

391
தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய்
எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட எம்புருடோ த்தமனிருக்கை
கங்கைகங்கையென்றவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும்
கங்கையின்கரைமேல்கைதொழநின்ற கண்டமென்னும்கடிநகரே. 1

392
சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச் சந்திரன்வெங்கதிர்அஞ்ச
மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின் மால்புருடோ த்தமன்வாழ்வு
நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும் நாரணன்பாதத்துழாயும்
கலந்திழிபுனலால்புகர்படுகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 2

393
அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்கு
எதிர்முகவசுரர்தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை
சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில்தங்கி
கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 3

394
இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனை
நமபுரம்நணுகநாந்தகம்விசிறும் நம்புருடோ த்தமன்நகர்தான்
இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும் இருகரைஉலகிரைத்தாட
கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 4

395
உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும்
மழுவொடுவாளும்படைக்கலமுடைய மால்புருடோ த்தமன்வாழ்வு
எழுமையும்கூடிஈண்டியபாவம் இறைப்பொழுதளவினில்எல்லாம்
கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 5

396
தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டு
மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை மால்புருடோ த்தமன்வாழ்வு
அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர் அவபிரதம்குடைந்தாட
கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 6

397
விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடி
மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த மால்புருடோ த்தமன்வாழ்வு
அற்புதமுடையஅயிராவதமதமும் அவரிளம்படியரொண்சாந்தும்
கற்பகமலரும்கலந்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 7

398
திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய்
அரசினையவியஅரசினையருளும் அரிபுருடோ த்தமனமர்வு
நிரைநிரையாகநெடியனயூபம் நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை கண்டமென்னும்கடிநகரே. 8

399
வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி
இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை
தடவரையதிரத்தரணிவிண்டிடியத் தலைப்பற்றிக்கரைமரம்சாடி
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 9

400
மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய எம்புருடோ த்தமனிருக்கை
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி மூன்றினில்மூன்றுருவானான்
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 10

401
பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல்
வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன் விட்டுசித்தன்விருப்புற்று
தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை தங்கியநாவுடையார்க்கு
கங்கையில்திருமால்கழலிணைக்கீழே குளித்திருந்தகணக்காமே. 11

எட்டாம் திருமொழி - மாதவத்தோன்
(திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை -1)
தரவு கொச்சகக்கலிப்பா

402
மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை
ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர்
தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும்
போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. 1

403
பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும்
இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர்
மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார்
சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே. 2

404
மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார்
உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர்
திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை
பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே. 3

405
கூந்தொழுத்தைசிதகுரைப்பக் கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு
ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய
கான்தொடுத்தநெறிபோகிக் கண்டகரைக்களைந்தானூர்
தேந்தொடுத்தமலர்ச்சோலைத் திருவரங்கமென்பதுவே. 4

406
பெருவரங்களவைபற்றிப் பிழகுடையஇராவணனை
உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர்
குருவரும்பக்கோங்கலரக் குயில்கூவும்குளிர்பொழில்சூழ்
திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே. 5

407
கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமே
ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர்
தாழைமடலூடுரிஞ்சித் தவளவண்ணப்பொடியணிந்து
யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே. 6

408
கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய
பிழக்குடையஅசுரர்களைப் பிணம்படுத்தபெருமானூர்
தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே. 7

409
வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய்
எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர்
எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி
மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே. 8

410
குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல்
நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர்
குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி
மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே. 9

411
பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை
செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல்
திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு
இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. 10

ஒன்பதாம் திருமொழி - மரவடியை
(திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை - 2)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

412
மரவடியைத்தம்பிக்குவான்பணையம்
வைத்துப்போய்வானோர்வாழ
செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து
உலகாண்டதிருமால்கோயில்
திருவடிதன்திருவுருவும்
திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று
உருவுடையமலர்நீலம்
காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே. 1

413
தன்னடியார்திறத்தகத்துத்
தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல்
என்னடியார்அதுசெய்யார்
செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும்
மன்னுடையவிபீடணற்கா
மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த
என்னுடையதிருவரங்கற்கன்றியும்
மற்றொருவர்க்குஆளாவரே? 2

414
கருளுடையபொழில்மருதும்
கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும்
உருளுடையசகடரையும்மல்லரையும்
உடையவிட்டுஓசைகேட்டான்
இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு
ஏற்றிவைத்துஏணிவாங்கி
அருள்கொடுத்திட்டுஅடியவரை
ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே. 3

415
பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்ய
துவரையென்னும்
அதில்நாயகராகிவீற்றிருந்த
மணவாளர்மன்னுகோயில்
புதுநாண்மலர்க்கமலம்
எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான்
பொதுநாயகம்பாவித்து
இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே. 4

416
ஆமையாய்க்கங்கையாய்
ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய்
நான்முகனாய்நான்மறையாய்
வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான்
சேமமுடைநாரதனார்
சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில்
பூமருவிப்புள்ளினங்கள்
புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே. 5

417
மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து
அவர்களையேமன்னராக்கி
உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட
உயிராளன்உறையும்கோயில்
பத்தர்களும்பகவர்களும்
பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும்
சித்தர்களும்தொழுதிறைஞ்சத்
திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே. 6

418
குறட்பிரமசாரியாய்
மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி
இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை
கொடுத்துகந்தஎம்மான்கோயில்
எறிப்புடையமணிவரைமேல்
இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய்
சிறப்புடையபணங்கள்மிசைச்
செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே. 7

419
உரம்பற்றிஇரணியனை
உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி
சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க
வாயலரத்தெழித்தான்கோயில்
உரம்பெற்றமலர்க்கமலம்
உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட
வரம்புற்றகதிர்ச்செந்நெல்
தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே. 8

420
தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய்
அரியாய்க்குறளாய்
மூவுருவினிராமனாய்க்
கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில்
சேவலொடுபெடையன்னம்
செங்கமலமலரேறிஊசலாடி
பூவணைமேல்துதைந்தெழு
செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே. 9

421
செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்
செருச்செய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன் மறையாளன்ஓடாதபடையாளன்
விழுக்கையாளன்
இரவாளன்பகலாளன்என்னையாளன்
ஏழுலகப்பெரும்புரவாளன்
திருவாளன்இனிதாகத்
திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே. 10

422
கைந்நாகத்திடர்கடிந்த
கனலாழிப்படையுடையான்கருதும்கோயில்
தென்னாடும்வடநாடும்தொழநின்ற
திருவரங்கம்திருப்பதியின்மேல்
மெய்ந்நாவன்மெய்யடியான்
விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார்
எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ்
இணைபிரியாதிருப்பர்தாமே. 11

பத்தாம் திருமொழி - துப்புடையாரை
(அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

423
துப்புடையாரைஅடைவதெல்லாம்
சோர்விடத்துத்துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
ஆனைக்குநீஅருள்செய்தமையால்
எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன்
அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. 1

424
சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்
சங்கொடுசக்கரமேந்தினானே.
நாமடித்துஎன்னைஅனேகதண்டம்
செய்வதாநிற்பர்நமன்தமர்கள்
போமிடத்துஉன்திறத்துஎத்தனையும்
புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை
ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. 2

425
எல்லையில்வாசல்குறுகச்சென்றால்
எற்றிநமன்தமர்பற்றும்போது
நில்லுமினென்னும்உபாயமில்லை
நேமியும்சங்கமும்ஏந்தினானே.
சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம்
சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. 3

426
ஒற்றைவிடையனும்நான்முகனும்
உன்னையறியாப்பெருமையோனே.
முற்றஉலகெல்லாம்நீயேயாகி
மூன்றெழுத்தாயமுதல்வனேயா.
அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி
அஞ்சநமன்தமர்பற்றலுற்ற
அற்றைக்கு, நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. 4

427
பையரவினணைப் பாற்கடலுள்
பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி.
உய்யஉலகுபடைக்கவேண்டி
உந்தியில்தோற்றினாய்நான்முகனை
வையமனிசரைப்பொய்யென்றெண்ணிக்
காலனையும்உடனேபடைத்தாய்
ஐய. இனிஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. 5

428
தண்ணெனவில்லைநமன்தமர்கள்
சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர்
மண்ணொடுநீரும்எரியும்காலும்
மற்றும்ஆகாசமுமாகிநின்றாய்.
எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம்
எண்ணினேன், என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அண்ணலே. நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. 6

429
செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற
தேவர்கள்நாயகனே, எம்மானே,
எஞ்சலிலென்னுடையின்னமுதே,
ஏழுலகுமுடையாய். என்னப்பா,
வஞ்சவுருவின்நமன்தமர்கள்
வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது
அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. 7

430
நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்
நமன்தமர்பற்றிநலிந்திட்டு இந்த
ஊனேபுகேயென்றுமோதும்போது
அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன்
வானேய்வானவர்தங்களீசா,
மதுரைப்பிறந்தமாமாயனே, என்
ஆனாய். நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. 8

431
குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா,
கோநிரைமேய்த்தவனே, எம்மானே,
அன்றுமுதல் இன்றறுதியா
ஆதியஞ்சோதிமறந்தறியேன்
நன்றும்கொடியநமன்தமர்கள்
நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது
அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. 9

432
மாயவனைமதுசூதனனை
மாதவனைமறையோர்களேத்தும்
ஆயர்களேற்றினைஅச்சுதனை
அரங்கத்தரவணைப்பள்ளியானை
வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
தூயமனத்தனராகிவல்லார்
தூமணிவண்ணனுக்காளர்தாமே. 10


நாலாயிர திவ்விய பிரபந்தம் : அட்டவணை 1 2 3 4 5 6 7 8 9