உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய நான் தொழும் தெய்வம் கலிவிருத்தம் வேத னாருரை வேதமுங் கீதையும் ஆதி சாஸ்திர மாறும் புராணமும் நீத மான நெரியுரை நூலெலாம் ஓதிக் கொள்வது யான்தொழுந் தெய்வமே. 1 வியாச ருஞ்சுகர் விஞ்சையர் நாரதர் கோசி கன்முதற் கொற்றவர் மற்றவர் பூசை வேள்வி பலதவ மார்க்கமாய் யாசித் தேற்றுதல் யான்தொழுந் தெய்வமே. 2 மதியு டன்கதிர் மருவு முலகெலாம் துதிசெய் யன்பர் துகளறுத் தேபர கதியு மீதெனக் காட்டி யிகசுக நிதியு மீவது நான்தொழுந் தெய்வமே. 3 இன்ப மோங்கி யெழில்பெறுங் காலமும் துன்ப மெய்தித் துயர்படுங் காலமும் என்றும் வேங்கட மென்றுரைப் பார்கண்மேல் அன்பு கொள்வது யான்தொழுந் தெய்வமே. 4 கடலெ னப்பல காளைகள் தன்னுடன் வடக ரைக்கட லென்னும் நதிக்குளே யுடல்வ லுத்தகா ளிங்கன்சி ரசின்மேல் நடனஞ் செய்தது நான்தொழுந் தெய்வமே. 5 பூசை புட்பம் பெருந்தவ மில்லெனின் கேச வன்றுனை யென்றுளங் கெட்டியாய் பேசுந் தோறுமதி பேருரைப் பார்கண்மேல் ஆசை கொள்வது யான்தொழுந் தெய்வமே. 6 விதியு மற்றைய விண்ணவர் போற்றிடுந் துதியை வேண்டித் துலங்கிய வேங்கடம் பதியில் நின்றுப் பதந்தரப் பற்பல நதியு முள்ளது நான்தொழுந் தெய்வமே. 7 ஓடி யோடி யுலகுள மாந்தர்கள் தேடித் தேடிவந் தேதிரு வேங்கடம் கூடி நின்றவர் குறைக ளோதியே நாடிப் போற்றுதல் நான்தொழுந் தெய்வமே. 8 உம்ப ராதிமற் றம்புவி யுள்ளபேர் தெம்பு டன்திரு வேங்கடம் தேடியே கும்பு கூடிக் குறைகளைந் தெய்திட நம்பி போற்றுதல் நான்தொழுந் தெய்வமே. 9 இரங்கம் சேது ராமேசுர மெவ்வுளூர் சிங்க மாய்கடி காசலம் காஞ்சியில் தங்கி யுந்திரு வேங்கடந் தானென எங்கு முள்ளது யான்தொழுந் தெய்வமே. 10 வல்ல வாணர்கள் வானவர் தானவர் சொல்லிப் போற்ற சுருதிகள் வாழ்த்தவும் தில்லை கோவிந்த ராய்திரு வேங்கட எல்லை நின்றது யான்தொழுந் தெய்வமே. 11 காதி பெற்றக் கடுந்தவ யோகிகள் ஆதி யென்று வமர்ந்தருள் வேங்கடம் மீதில் நின்றுயிம் மேதினி கார்க்குமா நீதி யுள்ளது நான்தொழுந் தெய்வமே. 12 பற்கு ணன்முதற் பாண்டவர் மீதிலே துற்கு ணந்தொடுத் தோர்கள் துலைந்திட விற்கு ணத்தொழில் விஜயனுக் கோதிய நற்கு ணத்தது நான்தொழுந் தெய்வமே. 13 பூத லம்முதற் பொன்னுல கந்தமும் பாத லம்வரை பற்பல லோகமும் ஆத ரித்தகி லந்தனில் வேங்கட நாத னானது நான்தொழுந் தெய்வமே. 14 கந்த புட்பக் களபப் பணியுடன் சந்த தஞ்சர ணங்கதி யென்றுமுன் வந்து போற்றி வழிபடுந் தொண்டர்மேல் மிந்தை யற்றது நான்தொழுந் தெய்வமே. 15 மங்க ளந்திகழ் மங்கையர் கூட்டமும் எங்கி னும்சுர கீதமும் வேதமும் அங்க பாகத்தி லேயலர் மேலெனும் நங்கை யுள்ளது நான்தொழுந் தெய்வமே. 16 நான் தொழும் தெய்வம் முற்றிற்று |