சிறுமணவூர் முனிசாமி முதலியார்

இயற்றிய

திருமலை தெரிசனப்பத்து

உன்னருளாள் வினைநீங்கப் பெற்றிருந்தும்
     ஊழ்வினையால் வழியொன்றுங் காணாமற்றான்
பன்னாளா யனேகதலந் தேடியோடி
     பலனொன் றுங்காணாமல் பதைந்துநொந்து
என்னாளும் அவுஷதங்கள் தின்றுகெட்ட
     என்மனதைத் திரும்பிமலை யேறச்செய்தாய்
பொன்னான கெருடன்மிசை யுந்தன்சேர்வை
     பார்த்ததென்ன புண்ணியமோ பவந்தீர்ந்தேனே. 1

உலகமதில் பலநதியுந் தீர்த்தமெல்லாம்
     ஓடோடி யுள்ளபிணி தீராதாலே
பலபலவா மெண்ணத்தால் மனதுநொந்து
     பத்தியமும் அவுஷதமும் தின்றுகெட்டேன்
நிலையறியா வென்மனதைத் திருப்பித்தந்து
     நீயலவோ திருமலைமே லேறச்செய்தாய்
கலகலெனக் கெருடன்மிசை யுந்தன்சேர்வை
     கண்டதென்ன புண்ணியமோ கலிதீர்ந்தேனே. 2

ஊழ்வினையோ தற்பிறப்பி லென்செய்தேனோ
     உத்தமர்கள் சாபத்தா லுடல்நொந்தேனோ
ஆழ்கடல்சூ ழுலகமெலாம் சுற்றிச்சுற்றி
     அங்கத்தின் பிணிதீரா தலைந்துகெட்டேன்
பாழ்மனதை யொருநிலையாய் திருப்பிநீதான்
     பாரமலை வந்துதொழப் பண்ணிவைத்தாய்
தாழ்வில்லாக் கெருடன்மிசை யுந்தன்சேர்வை
     தந்ததென்ன புண்ணியமோ கதிமீண்டேனே. 3

எட்டுதிசை யெங்கணுமே சுகத்தைவேண்டி
     யெத்தனைநாள் திரிந்தாலும் என்னகண்டேன்
முட்டமுட்ட வுடற்பிணிதா னதிகமாகி
     முக்காலும் அவுடதமே தின்றுகெட்டேன்
துட்டமன மாமதனைத் திருப்பிநீதான்
     திருமலைமேல் வந்துதொழுந் திறமைசெய்தாய்
வட்டமிடுங் கெருடன்மிசை யுந்தன்சேர்வை
     வாய்த்ததென்ன புண்ணியமோ வழிபெற்றேனே. 4

ஆராலுந் தீராத பிணியீதென்று
     அறியாம லூழ்வினையா லனேகநாளாய்
தேராத பண்டிதரும் தேசாதேசம்
     தினந்தோறு மோடோடி திரிந்துக்கெட்டேன்
கூராத யென்மனதைக் குவித்துநீதான்
     கோவிந்தா திருமலைமேல் கூட்டி வந்தாய்
சீரான கெருடன்மிசை யுந்தன்சேர்வை
     செய்ததென்ன புண்ணியமோ சீர்பெற்றேனே. 5

அங்கமதில் புண்புரைக ளதிகமாகி
     யகற்றவழி காணாம லறிவுகெட்டு
சிங்கத்தைக் கண்டகெஜம் போலேநொந்து
     சீமையெலா மோடோடி சலித்துவிட்டேன்
பங்கமுரும் யென்மனதைத் திருப்பிநீ தான்
     பாரமலை வந்துதொழப் பண்ணிவைத்தாய்
தங்கநிர கெருடன்மிசை யுந்தன்சேர்வை
     தந்ததென்ன புண்ணியமோ தயைபெற்றேனே. 6

நலிபிடித்த நாள்முதலாய் பட்டபாட்டை
     நானுரைக்கப் பொழுதுண்டோ நாட்டின்மீது
புலியெதிர்த்த கன்றதுபோல் பயந்துவாடி
     பொன்னான வுடம்பெல்லாம் புண்ணாய்நொந்தேன்
கலிபிடித்த யென்மனதைத் திருப்பிநீதான்
     கருணையுடன் திருமலையைக் காணச்செய்தாய்
வலிமிகுந்த கெருடன்மிசை யுந்தன்சேர்வை
     வாய்த்ததென்ன புண்ணியமோ வருள்பெற்றேனே. 7

அறந்தழைக்கு முலகமதி லென்னைப்போலே
     ஆகாத பிணியடைந்தோ ராருங்காணேன்
உறங்குலைந்து வுளங்குலைந்து வுரிசைக்கெட்டு
     ஓய்ந்துவிட்ட பம்பரம்போ லொடுங்கிவிட்டேன்
திறந்தெரியா வென்மனதைத் திருப்பிநீதான்
     திருமலைமேல் வந்துதொழுந் திறமைசெய்தாய்
பறந்துவர்ங் கெருடன்மிசை யுந்தன்சேர்வை
     பார்த்ததென்ன புண்ணியமோ பசிதீர்ந்தேனே. 8

மாதரென்று துடர்வினையும் ஊழுங்கூடி
     மாகொடிய வினைக்கீடாய் மயங்கிக்கெட்டு
ஆதவனார் முன்கிடந்த மலரைப்போலே
     அங்கமெலாம் வதங்கிமிக வயர்ந்துபோனேன்
போதமிலா வென்மனதைத் திருப்பிநீதான்
     பொன்மலைமேல் வந்துதொழும் பெருமைசெய்தாய்
சீதமொழி கெருடன்மிசை யுந்தன்சேர்வை
     செய்ததென்ன புண்ணியமோ சீர்பெற்றேனே. 9

குவலயத்தி லென்போலே கொடியபாவி
     கோடியிலே யொருவரையுங் குறிக்கப்போமோ
திவலையெரி நடுக்கடலில் துரும்பைப்போலே
     திசையறிய மாட்டாமல் திகிலடைந்தேன்
சவலமுரு மென்மனதைத் திருப்பிநீதான்
     சந்தையுடன் திருமலையைச் சாரச்செய்தாய்
தவளநிற கெருடன்மிசை யுந்தன்சேர்வை
     தந்ததென்ன புண்ணியமோ தவம்பெற்றேனே. 10

மைவிழியார் தன்னுடனே வினையுங்கூடி
     மயக்கமெனுஞ் சுழற்காற்றில் பஞ்சைப்போல
கைதவங்க ளில்லாமல் பொருளைத்தேடி
     கடினபிணிக் காளாகிக் கலங்கிநின்றேன்
உய்யும்வழி யீதென்று திருப்பிநீதான்
     வுயர்மலைமேல் வந்துதொழ வுதவிசெய்தாய்
பொய்யறியா கெருடன்மிசை யுந்தன்சேர்வை
     பூர்த்ததென்ன புண்ணியமோ பிணிதீர்ந்தேனே. 11

திருமலை தெரிசனப்பத்து முற்றுப்பெற்றது