திருமால் வெண்பா - Thirumal Venba - வைஷ்ணவ நூல்கள் - Vaishnava Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com


ராகவாசாரியர்

இயற்றிய

திருமால் வெண்பா

திருமகள் துதி

செந்தா மரையுறையுஞ் சேயிழையை மூவுலகும்
தந்தா தரிக்கும் தனிமுதலை - நந்தாது
மாயன் மறுமார்பின் மன்னுமணி விளக்கை
ஆயு மனமே யடை.

காப்பு

திருமாறன் வெண்பாவைச் செப்புதற்கு நெஞ்சே
வருமாறன் றான்மலரை வாழ்த்து.

நூல்

தாமரையாள் மேவுந் தடமார்பா! தண்டமிழால்
மாமறையைச் செய்த மகிழ்மாறன் - நாமருவப்
போற்றிப் புகழ்ந்துரைக்கும் புண்ணியா! வென்னிடரை
மாற்றிப் பணிந்தருள வா. 1

காதலித்த நற்பொருளுங் கைகூட்டும் வெவ்வினையின்
தீதவித்து நற்கதியிற் சேர்க்குமால் - மாதவத்தர்
நச்சிப் புகழ்ந்தேத்தி நாண்மலரை யிட்டிறைஞ்சும்
அச்சுதன் றன்பொன் னடி. 2

உலகத் திருணீக்கி யுத்தமரைத் தன்பால்
நிலவ வருள்புரிந்து நிற்றல் - நலமிகுந்த
பூவிந்தை மேவிப் பொலிமார்பன் பொன்னாடைக்
கோவிந்தன் கொண்ட குணம். 3

வண்குமுத வாயார் வனப்பில் மிகவாழ்ந்து
பண்கனிந்த வாய்மொழியைப் பாராது - வண்செவியே
வாசவனும் நான்முகனும் வார்சடைய னுங்காணாக்
கேசவன்றன் மெய்ச்சரிதங் கேள். 4

தொழுவார் துயரொழித்துத் தொல்லறிவை யாக்கி
வழுவாது வீடளிக்க வற்றாம் - மழுவாளும்
அஞ்சக் கரத்தா னலரா னறியாத
அஞ்சக் கரத்தா னடி. 5

கண்டக்கா லுள்ளங் கரையாதோ காதலித்த
தொண்டர்க் கருளுந் துணையானைப் - பண்டை
யருமறையுங் காணாத வப்பனை யொப்பில்
தருமனையென் னெஞ்சத்துட் டந்து. 6

புகழ்கின்ற நான்மறையும் புத்தேளிர் தாமும்
இகல் வென்ற மாமுனிவர் யாரும் - அகன் மதியால்
தேடுகின்ற பாதச் செழும்பொருளே யின்றெனது
கோடுகின்ற நெஞ்சகத்தைக் கொள். 7

நறவார் துளவணியு நாரா யணனை
மறவா திருக்கின் மனனே - பிறவாத
பேரின்ப நன்னிலையைப் பெற்றாய்நீ யற்றிடுவாய்
பாரின்பப் பாழ்வலையின் பற்று. 8

வழுத்துவார் நன்மனத்து வாழும் பரமன்
எழுத்தினால் காண யியையான் - சுழுத்திதன்னில்
சாக்கிரத்தை யுற்றோர் தனிக்காண்ப ரல்லாதா
ராக்கிரகத் தாலறியா ராங்கு. 9

மைதிகழு மேனி மணிவண்ணன் மாறொழிக்கும்
கைதிகழு மாழிக் கருங்கொண்டல் - பொய்திகழும்
சிந்தை யுடையேனைச் சேவடிக்கே சேர்த்தருளும்
எந்தத் துயர்வருமா லின்று. 10

சொல்லரிய நான்மறையுஞ் சோர்ந்துணர மாட்டாது
மெல்லத் திரும்பி மெலிந்தே - எல்லைக்
கடங்காப் பெருவெளியா யன்ப ரகத்தே
யொடுங்காது நின்றவொன்றை யுற்று. 11

சங்கந் தனிக்கரத்துச் சாரு நெடுமாலே!
மங்கை யுறையு மணிமார்பா! - துங்கவிடைச்
செஞ்சடையான் போற்றுந் திருவடியாய் வெந்துயரம்
நெஞ்சடையா வண்ணம் நினை. 12

கேசவனை நாரணனைக் கேளா ரொடுங்கிடமுன்
வாசவனைக் காத்த வலியோனைப் - பாச
வினையொழிய நன்மனமே வேண்டுதியேல் ஞாலத்
துனையொப்பா ருண்டோ வுரை. 13

சூளா மணியாய்த் தொடரு மகத்திருளைக்
கேளா தொழித்துக் கிளரறிவால் - மீளாப்
பதமளிக்கும் பண்பினதாம் பாற்கடலில் மேவி
இதமளிப்பான் றாளி னிணை. 14

நீலநிறக் காலன் நிமிர்பாச மென்செய்யும்?
மேலைவினை யென் செய்யும்? மெய்யுணரின் - கோலத்
திருவருவ மென்னெஞ்சிற் றீகழுங்கா லன்றைக்
கொருதுயரும் யானடையே னுற்று. 15

சுரும்புறையு மென்கூந்தற் றோகா யிவட்குக்
கரும்பிறையால் நேர்ந்த கவலை - இரும்பவ்வம்
முன்கடைந்தான் முன்மொழிந்து மொய்துளவத்தார் வேண்டல்
உன்கடமை யன்றோ வுரை. 16

மறையறியா வொன்றை மலரான றியான்
பிறையணியும் பெம்மானோ பேசான் - நறையொழுகுங்
கற்பகத்துப் பொன்னுலகோர் காணார்முன் கண்டதே
வெற்புநிகர் வேழம் விரைந்து. 17

நெய்தற் கரியானை நீள்கமலை நாயகனை
எய்தற் கரியானை யெம்மானைத் - துய்ய
அறிவாளர் போற்று மமலனையே நெஞ்சத்
துறவாள னாக வுணர். 18

ஏதக் கடனீங்க வெந்தா யுனதடியாம்
போதத்தை நல்கப் புரிவாயோ - சீதச்
செழுந்தா மரைவிரும்பு சேயிழையாள் மார்பா!
தொழுந்தா மரையடியாய்! சொல். 19

பித்த மயக்கிற் பிணிப்புண் டுழல்வேனைச்
சித்தந் தெளியுந் திறமடையப் - பத்தி
நிலையு மடியார்க்கு நீடுயரம் போக்கும்
அலையுட் கிடந்தா யருள். 20

வம்பணிந்த கூந்தன் மடவார் படுவலையுள்
நம்பிக் கிடந்துழலும் நாணிலிக்கும் - உம்பர்
அடையா நிலைபெற் றடைய வருமோ
படியேழு முண்டாய் பகர். 21

நறவார் துளவணிந்த நாரணன்றன் பாதம்
மறவாது நெஞ்சே வழுத்தின் - பிறவாத
மெய்ப்பதவி யெய்தும் விறற்காலன் வெம்பாசம
எய்ப்பதனுள் வாரா திசைந்து. 22

சொல்லற் கரிதாஞ் சுகப்பொருளைத் தீவினையோர்
புல்லற் கரிய புகழ்ப்பொருளை - மல்லற்
றொடைமாறன் போற்றுந் துணையிலியை நெஞ்சத்
திடர்மாற மென்கிளியே யேத்து. 23

ஆலத் திலையி லறிதுயில்கொ ளம்மானை
ஞாலத்தை முன்னளந்த நாயகனைச் - சீலத்து
நன்முனிவ ரேத்து நறுங்கமலை கேள்வனையே
கன்மனமே யேத்தக் கருது. 24

சங்க முறலாற் றளிர்க்கொடியுந் தோன்றுதலால்
பொங்கு மணியும் பொலிந்திடலால் - செங்கண்
நெடுமாலே நின்னை நிகர்க்குமா லாழி
வடுமாற்ற மன்று வழக்கு. 25

எங்கள் பெருமானை யேந்திழையாள் நாயகனை
அங்கங் கரிய வழகானைப் - பொங்கும்
சுடராழிக் கையானைத் தொல்லமரர் கோனை
இடராழி நீங்க விறைஞ்சு. 26

அன்னந் துறந்தா ளணிதுறந்தா ளந்தளிர்க்கை
வன்னங் குலவு வளைதுறந்தாள் - இன்னும்
உயிர்துறக்கு முன்னே யுதவாயோ வாயர்
தயிரிறக்கும் வாயுடையாய் தந்து. 27

கரமொன்றி லாழி கரமொன்றிற் சங்கம்
உரமொன்றில் மாமணிதா னொன்றும் - சிரமொன்றில்
தாரொன்று மாமுடியே தாமரையு முந்திதனில்
காரொன்று மேனியன்பாற் காண். 28
பொங்கெரியி னின்று புலனைந்துந் தாமடக்கிப்
பங்கமிலா நற்றவங்கள் பாரித்தும் - எங்கும்
கரந்துறையுங் கார்முகிலைக் காணாதார் காணார்
நிரந்தரமா நல்லின்பம் நேர்ந்து. 29

நந்தமரு முன்கை நறுநுதலாள் மார்பிருக்க
அந்தமிலா வன்பா லழுங்கினேன் - வந்தென்
அருகிருக்குந் தோழீ யவன்மார் பணைந்து
பருகிடநீ செய்வாய் பரிந்து. 30

நறுந்துளவஞ் சூடி நறுநுதலாள் நெஞ்சம்
வெறுந்துகளாச் செய்தல் விறலோ? - உறுங்கவலை
நீக்கி யடியாரை நெஞ்ச மிகமகிழ
வாக்குந் தனிப்பொருளே யன்று. 31

நின்னைப் பிரிந்து நிலையிலா விவ்வுலகில்
துன்னும் வினையிற் சுழல்வேனைப் - பொன்னிற்
பொலிகின்ற வாழிப் பொருபடையோ யென்றன்
வலிதுன்று வெந்நோயை வாட்டு. 32

செம்பொருளை யென்மனத்துச் சேர வருளுங்கொல்
வெம்பிறவி சேர வெருட்டுங்கொல் - உம்பர்க்
கமுதளிக்க முன்னொருகா லாரணங்காய்த் தோன்றி
எமதகத்து நிற்கு மிறை. 33

பகருங்கால் மாயன் பதமன்றி நாளும்
புகலும் பிறிதுண்டோ போக - இகல்கடந்த
ஆயன் மணிவண்ணன் அன்ப ரகத்துறையும்
நேயனைநீ நெஞ்சே நினை. 34

நினைக்கும் விழுந்தரற்றும் நின்மலா வென்னும்
எனைக்காக்க வாராயோ வென்னும் - வினைக்கு
விழுமருந்தே யென்றன் விளங்கிழையா ளுய்யத்
தொழுதலல்லா லென்செய்வேன் சொல். 35

அறையு மறையு மருநூலும் யாவும்
கறையுண் மனத்தர் கருதார் - குறைவில்லா
நற்குணத்தி னார்க்கே நலந்தருமால் நல்விளக்கு
எக்குணமோ கண்ணிலற்கு மிங்கு. 36

இங்கொன் றறியா வெளியேன் மடநெஞ்சம்
தங்கும் வினையுள் தளராது - பங்கயக்கண்
மாயா வுனதடியை வாழ்த்திக் கரைசேர
ஓயா தருளா யுவந்து. 37

பன்னிருவர் பாடும் பெருமான் பதமலரைத்
துன்ன ஒருநாள் துணியாயோ - கன்னல்
சிலைவளைக்கும் சேயிழையார் செய்ய வுருவாம்
வலையலைக்கும் நெஞ்சே வழுத்து. 38

பவளக் கொடிதாங்கிப் பன்மணியு மேந்திக்
குவளைக் கருநிறமுங் கொண்டு - தவளத்
திருமுறுவல் வில்வீசுந் தெய்வக் கடலென்
மருவிதய மேவு மகிழ்ந்து. 39

நீலத் திருமேனி நெஞ்சங் கவர்ந்திடுமக்
கோலத்தை யென்னென்று கூறுவேன் - ஞாலத்துப்
பொங்கோத நீரிற் பொலிதா மரையன்ன
மங்காத வாய்கண்கை வாய்ந்து. 40

வாழ்த்துவார் வார்கழலை வண்முடியின் மீதணியப்
பாழ்த்த பெரும்பிறவி பாறிடுமால் - வீழ்த்த
நறைகமழு மென்றுளவ நாரணனா மெங்கள்
இறையடியை யெப்பொழுது மேற்று. 41

ஏறுகந்த செஞ்சடையான் ஏற்ற நறுமலரான்
கூறுகந்த செங்கண்ணா! கோவிந்தா! - மாறொருவ
ரில்லா வுரத்தானே யின்புறவே நின்னடியைப்
புல்லா நினைத்தேமைப் போற்று. 42

பூமகளும் நாமகளும் போற்றிப் பொறியரவின்
மாமகரப் பாற்கடலின் மன்னியவெங் - கோமகன்றன்
பொன்னடியை நன்மனமே போற்றிப் புகழ்ந்திடுவாய்
வெந்நரகஞ் சேரா விரைந்து. 43

விரைந்து தொழில்கேட்பர் விண்ணுலகி னுள்ளார்
கரைந்த மனத்தினராய்க் காரின் - புரைந்த
திருமேனி மாயன் றிருவடியை நெஞ்சிற்
றருமேலோர்க் கிவ்வுலகிற் றாழ்ந்து. 44

தாழுங் குழல் மடவார் தம்வலையிற் சிக்காது
வாழு மடநெஞ்சே வாழ்த்துவாய் - ஊழின்
களங்கறுத்தான் கஞ்சத்தான் காணவறி யாத
களங்கறுத்த மேனியனைக் கண்டு. 45

கண்டுந் தெளியாது காசினியீர் காழ்பிறவி
மண்டும் வினையுண் மயங்குவீர் - தண்டுளவன்
பேரோத நீங்காப் பெருந்துயரம் நீங்குமால்
காரோத வண்ணன் கழல். 46

அருட்கடலா யாயிருரா யன்பனா யென்னுள்
மருட்கை தனையொழித்த மாயன் - திருக்கழலைப்
பற்றார் நெடுங்காலன் பாசக் கடுவலையு
ளுற்றார் பிழையா ருழன்று. 47

தெய்வந்தா னெங்குந் திகழ்ந்துளதா லென்றுரைத்துப்
பொய்வந் தனையும் புரியாமல் - ஐயோ
நெடுநரகில் வீழாது நெஞ்சேநீ மாயன்
கடிமலர்சேர் பொன்னடியைக் காண். 48

எல்லாப் பொருள்கடொறு மெங்கு நிறைந்துறையும்
மல்லார் தடந்தோள் மணிக்குன்றைக் - கல்லார்
இருவினையு ளாழ்ந்திட் டிடருறுவர் நெஞ்சே
கருதரிய நாரணனைக் காண். 49

ஆனந்த மாகி யறிவாகி நின்றெங்குந்
தானந்த மில்லாத் தனியுருவாய் - மோனந்
தனையடைந்தா ருண்டருளுந் தண்ணமிர்தாம் நெஞ்சின்
மனையடைந்த செங்கணெடு மால். 50

பற்றற் றொளிரும் பரம்பொருளைப் பாருலகிற்
கற்று மறியாக் கயவர்காள்! - சற்றே
நினைந்துய்ம்மின் நீண்மறையின் சார மிதுவே
புனைந்துரையு மன்று பொருள். 51

இருளா மயக்கொழிய வெஞ்ஞான்று நெஞ்சின்
மருளா வகைநிரம்பு மாயன் - அருளாம்
பொழியமுத முண்ணுமா போற்றுவேற் குண்டோ?
பழவினையின் பற்றகலாப் பண்பு. 52

இன்பம் பெருகு மெழினலமுந் தான்பெருகும்
துன்பம் குறையுந் துணிவுண்டாம் - அன்பான்
மனமொழிக ளுக்கெட்டா மாய னடியைத்
தினநினைவார்க் கிவ்வுலகிற் றேர்ந்து. 53

பைந்துளவத் தாமன் பதம்பணிய வெவ்வினைகள்
நைந்து மனமே நலமுறுவாய் - செந்துவர்வாய்
மாதரார் வெவ்வலையின் மன்னி மயங்காது
போதராய் நெஞ்சே புகுந்து. 54

கைவிளங்கு மாழிக் கருமுகிலை நெஞ்சத்து
மெய்விளங்க வேத்த விரையாதார் - நெய்விளக்கு
சூலத்தான் வெம்பகட்டிற் றோன்றுங்கா லென்செய்வார்
ஆலத் திலையா னரண். 55

செங்கமல வாண்முகமுஞ் செய்யதிருக் கண்ணும்
பைங்குமுத வாயும் பகர்செவியும் - மங்கை
உறைகின்ற பொன்மார்பு மோங்கென் மனத்தே
நிறைகின்ற வேறென் நினைப்பு. 56

நெஞ்சத்து ணிற்கு நிமல னடியிணையை
வஞ்சத் திருக்கவிழ வாழ்த்துங்கால் - கஞ்சத்துப்
பெண்ணருளு முண்டாம் பெரும்பிறவி நீங்குமால்
நண்ணரிய முத்தியுமாம் நாடு. 57

நெஞ்சங் கடந்த நிமலா விருவினையின்
வஞ்சங் கடக்க வழியருளாய் - நஞ்சக்
கறைக்கண்டன் றுன்பொழித்த கார்முகிலே! வண்டார்
நறைக்கண்டத் தண்டுளவோய் நன்கு. 58

நாடுங்கா னன்னெஞ்சம் நாரணனைத் தானாடும்
பாடுங்கா லன்னான் பதம்பாடும் - நீடுபுகழ்த்
தெய்வத் திருக்கழலைச் சென்னி புனைந்திடுமால்
உய்யத் தடையோ வுரை. 59

இன்ப மயமா யிருப்பதே யல்லாமல்
துன்பமய மாயிருக்கத் தோன்றுமோ - அன்பன்
தனதடியை நன்மலரால் தாழ்ந்திறைஞ்ச நாளும்
வினைகழல வெம்பிறவி விட்டு. 60

பாதம் பணிந்த பயனென்கொல் பங்கயத்து
நாதன் வணங்குகின்ற நாரணா - வேதந்
தொழுகின்ற பாதத் துணையா யடியேற்
கழுகின்ற நோயழியா தால். 61

நெஞ்சங் கலங்கி நிறையழிந்து நிற்கின்றாள்
தஞ்ச மிவட்குண்டோ சாற்றுவாய் - கஞ்சத்
திருக்கையாய் கண்ணாய் திருமார்பா நெஞ்சத்
திருக்கையாய் காண வினி. 62

நாண்மலர்சேர் பொய்கைக்கண் ணால்வாய் மதகரிமுன்
கோண்முதலை கௌவக் குலைகுலைந்து - நீண்மறையின்
மாமுதலே யென்றழைப்ப மற்றொன்றும் நோக்காமல்
ஆமுறையாற் காத்தா னரண். 63

புருவச் சிலையும் பொழியமுதச் சொல்லும்
உருவக் கருநிறமு மோங்கிப் - பருவத்
தெழுந்ததோர் மாமுகிலே யென்மனத்து வெம்மை
விழுந்ததே யென்னோ? வியப்பு. 64

வஞ்சப் புலனடக்கி வள்ளா லுனதடியென்
நெஞ்சத் திருத்த நினையாயோ - கஞ்சக்
கருவிழியாள் கல்லுதிக்கக் கண்டாய் கவலும்
இருவினையி லாழு மெனக்கு. 65

கோசிகன்றன் வேள்வி குறையறமுன் காத்துகந்
தேசிகனை நெஞ்சத்துத் தேராது - பாச
மனைமக்கள் வாழ்வுகந்து மாநரகஞ் சேரும்
வினைமருவும் வெய்யேனை வேண்டு. 66

இன்றென் னிடர்தீர வெம்மா னிரங்குதியால்
கன்றும் வினையிற் கலங்காது - துன்றும்
செழுங்கொன்றைச் செஞ்சடையான் செல்ல லொழித்தாய்
அழுங்கும் வினையேனை யாள். 67

வாள்விழியார் மாய வலையில் வருந்தாதுன்
றாள்வழியே நெஞ்சந் தனித்தொழுக - நீள்விழியால்
பாராயோ ஐயா பரமா பெருமானே!
தீராயோ வென்கவலை தேர்ந்து. 68

கங்கை யுறையுங் கழலானைச் செஞ்சடைமேல்
மங்கை யுறையு மழுவானைத் - துங்க
விடையானை முன்னம் விடைதொலைத்த வாழிப்
படையானை நெஞ்சே பகர். 69

பண்ணுறுஞ் செவ்வாய்ப் பசுங்குழவி மெல்லுருவம்
கண்ணாரக் கண்டு களியேனோ! - புண்ணாறும்
பொய்யைச் சுமந்து புலைநரகில் வீழாமல்
உய்யும் வழியை யுணர்ந்து. 70

கண்டுங் கருமக் கடலுட் கவிழ்ந்துழன்று
மண்டும் பிணியின் மயங்காது - திண்டிறல்சேர்
வேதச் சிரங்காணா மெய்ப்பொருளி னற்றுளவப்
பாதத் துணைமனமே பற்று. 71

பற்றற் றொளிரும் பரம்பொருளை யல்லாது
மற்றொன் றறியா மனத்தினர்காண் - எற்றும்
பவத்திரையை நீக்கிப் பணிந்தோரைக் காக்குந்
தவத்தினரா நெஞ்சே தரி. 72

இன்றென் னிடரொழிக்க வெம்மா னெழின்மார்வந்
துன்று நறுந்தார் துருவுமினே - மன்றற்
கொடிசே ரிடையீர் குளிர்முத்துஞ் சந்தும்
கடியாவே யென்றுயரைக் கண்டு. 73

நாகத் தணையில் நலங்கிளர வின்றுயில்கொள்
மேகத் துருவை விறலோனைக் - காகத்
தொருநயனம் போக்கு முரவோனை நெஞ்சே
யிருநயனங் காண வியை. 74

தாக்கு துயரந் தவிர்த்துச் சுகவருளைத்
தேக்கு பரமன் திருவடியை - நீக்கமற
நெஞ்சே நினைகுதியே னின்மலமா மென்னிலையை
எஞ்சா தடைவே னியைந்து. 75

ஐம்புலனிற் செல்லு மறிவை யொழித்துதறிச்
செம்பொருளிற் சேர்க்குந் திறங்கேட்கின் - அம்பரமாம்
போக்குவர வற்றிருக்கும் பூரணத்தை யெஞ்ஞான்றும்
நீக்கமற நெஞ்சே நினை. 76

மதவா ரணங்கொன்ற மாதவனை யென்கண்
உதவாது வேறெதனை யோர்வீர் - இதமார்ந்த
மென்மொழியீ ரென்றன் மிகுவே தனைதீரப்
பன்மொழியா லுண்டோ பயன். 77

செங்கமலச் செல்வி செறிந்தினிது வீற்றிருக்கும்
பொங்குமணி மார்பப் புனிதன்பால் - சங்கையறச்
சென்றுரைமின் செங்காற் சிறையனமே! வல்வினையேன்
கன்று துயரங் கரைந்து. 78

திரைத்துக் கரைபொரூஉந் தெண்டிரையே! மாயன்
வரைத்தடந்தோள் சேர வழியென் - உரைத்தும்
உணர்வரிய மெஞ்ஞான வுத்தமனை நின்பால்
நிணமுலவு நேமியனை நேர்ந்து. 79

உணர்வரிதாய் நெஞ்சத் துறுவதா யென்றும்
புணர்வரிதாய் நின்ற பொருடான் - குணங்குறிசேர்
புல்லறிவு கொண்டு புகலற் கெளிதேயோ
சொல்லரிய நெஞ்சேநீ சொல். 80

தாமரையைக் கண்டு தருக்கிச் செருப்புரியும்
காமருவு கண்ணுங் கனியிதழும் - மாமறைகள்
தேடுந் திருவடியும் தெய்வத் திருமார்பும்,
நீடுறையு மென்னெஞ்சி னேர்ந்து. 81

எந்தக் கரந்தா னெழிற்கமலை மெய்தழுவும்
அந்தக் கரத்தா லணைத்தருள்வாய் - சந்தம்
அமருநெடுங் கூந்த லாயிழையா ளுய்ய
இமிர்சங்க மேந்தினா யின்று. 82

இன்றென் மடமா னிருவிழிகள் நின்னுருவம்
குன்றாது காணின் குளிருமால் - அன்றேல்
பிறைமதிக்குங் காமன் பெருமலர்க்கு மாற்ற
நிறையிவட்கு முண்டோ நிலை. 83

கருத்தவிழக் கார்முகிலின் கங்கைக் கழலைத்
திருத்தமுற வேத்தத் தெரியின் - வருத்தமுறு
வெம்பவநோய் நீங்கும் வியன்பதமு மெய்தலுறும்
கம்பமுறு நெஞ்சகமே காண். 84

வண்டுறங்குங் கோதை மடமானைத் திண்மார்பிற்
கொண்டு விளங்குங் குணக்குன்றைக் - கண்டு
தொழுதா ளுனைநினைந்து துன்புற்றா ளென்மின்
எழுதா வுருவுடையீ ரின்று. 85

பைஞ்சிறைய மென்கிளியே பங்கயக்கண் மாயன்பால்
நஞ்சனைய வாட்க ணறுநுதலாள் - கஞ்சமலர்க்
கண்டுயிலா ளன்னங் கருதா ளெனமொழிந்து
வண்டுளவத் தாரினைநீ வாங்கு. 86

பெரும்பிறவி நீங்கிப் பிரிவிலா னந்த
அரும்பதவி யெய்த வவாவின் - சுரும்பு
மருவார் துளவணிந்த மாயன் பதத்தை
ஒருவாது நெஞ்சே யுரை. 87

மந்திரமும் வேண்டேன் மருந்தறியேன் மாணிக்கச்
செந்திருவி னாயகன்றன் சேவடியைச் - சிந்தித்துத்
தோத்திரிக்கப் பெற்றேன் துயரங்க ளென்செய்யும்
நாத்திரிக்கே னன்னெஞ்சே நான். 88

தந்தால் பிழைத்திடுவாள் தாராக்கால் நீபிழைப்பாய்
செந்தா மரையாள் செறிமார்பா! - அந்தோ
மலர்க்கணைக்கும் மாமதிக்கும் வார்கடற்கு மேங்கும்
கொலைக்கண்ணாட் குன்றார் கொடு. 89

முன்னிகழ்ந்த நற்குறியால் மொய்குழலாள் வெண்மணன்மேல்
பொன்னெகிழ மேனி புலம்பெய்த - இன்னருளால்
நேரா தவளை நெருங்கா திருந்தனையே!
காராயா! வென்னோ? கருத்து. 90

கடிசேர் துழாய்முடியன் காமருபூங் கோதைத்
துடிசே ரிடையாள் துணைவன் - அடிசேர்ந்து
போற்றும் புகழுடைய புண்ணியரைத் தன்னுலகில்
ஏற்று மிறைவனைநீ யேத்து. 91

அமுதிற் பிறந்த வணியிழையாள் கோனைக்
குமுதத் திருமொழியீர் கொண்டு - நமதிந்தக்
காரிகையின் துன்பக் கடலைக் கடத்துவிரேல்
நேரிழையு முய்வாள் நினைந்து. 92

காண்டற் கரியானைக் கண்டக்கா னீங்கானை
வேண்டற் கெளியானை வேண்டினரின் - தாண்டற்கு
மேவானைத் தம்முள்ள மேவினர்க்கு நல்லமிர்த
மாவானை நெஞ்சே யடை. 93

தண்டுளவ நீண்முடியுந் தாமரையாள் சேர்மார்பும்
புண்டரிக வாள்விழியும் புன்முறுவல் - கொண்டிலகு
செவ்வாய் மலருஞ் செறிபுருவ வில்லிணையும்
எவ்வா றினிமறப்பேன் யான். 94

வண்டுளவந் தங்கு மணிமுடியான் வாண்மதிபோல்
விண்டு விளங்கும் வியன்வளையான் - தொண்டர்
துயரொழிக்கு நேமியினான் தொல்வினையைப் போக்கும்
மயலொழிக்க வென்மனத்து வந்து. 95

சிற்றவையின் சீற்றச் செருக்காற் சினங்கொண்டு
பெற்றவனை நோக்காப் பெருவனத்தை - யுற்றோர்
அருந்தவத்தைச் செய்த அழகனைமுன் காத்த
வருந்துவரை மன்னனை நீ வாழ்த்து. 96

நெஞ்சக் கொடுமை நெகிழப் புறம்புறையும்
வஞ்சக் கொடுவினைகள் வாட்டமுறக் - கஞ்சத்
திருவுந்தி மேவும் திருத்தன்றா ணாளு
மருவு மனனே மகிழ்ந்து. 97

ஆர்கலியை முன்கடைந்த வச்சுதா வம்புலிசேர்
வார்சடையன் காணாத வள்ளலே - கார்புரையும்
வண்ணத்தாய் வந்தென் மனம்புகுந்தாய் அன்பரகத்
தெண்ணத்தாய் என்னை யருள். 98

ஏனத் துருக்கொண்ட வெம்மானைக் கண்டுசொலா
மீனத் தடங்கண்ணாள் மெய்தளர்ந்தாள் - கூனற்
பிறைதொழலும் வேண்டாள் பிணைமலரும் வேண்டாள்
குறையவன்மால் தோழிநீ கூறு. 99

பால னுரையின் பயனறிய மாட்டாது
சாலக் கனன்றவனைச் சாதிக்கக் - கோலும்
கொடியானை மாய்த்துக் குழவியை முன்காத்த
நெடியானை நன்மனமே நேடு. 100

எப்பொருளுந் தந்தருளு மேந்திழையாள் நின்மார்பிற்
றப்பறவே நிற்கத் தரித்திரன்போல் - ஒப்பற்ற
மாவலிபால் செல்லும் வகையென்கொல் மாயவனே!
மூவடிமண் ணீயிரக்க முன். 101

வைய மளந்தானை வார்கடலின் மேயானைத்
துய்ய வரவிற் றுயில்வானைச் - செய்ய
மலருகந்த மானை மணந்தானை யன்பர்
நலமுகந்த நாதனையே நாடு. 102

பூசுரரை வாட்டும் புவிவேந்தர் மாமுடிகள்
ஆசற முன்வீழ அவதரித்து - வீசும்
மழுவாயுதங் கொண்ட மாயவனே யன்றோ
தொழுவார் துயர்க்குத் துணை. 103

சங்கற்ப மற்றுத் தனியே சிறிதிருக்க
எங்கட் கருள விரங்காயோ - செங்கைச்
சிலைவளைத்த சேவகனே சேயிழைக்கா முன்ன
மலைவளைத்த வாரமுதே யன்று. 104

கழல்கொண்டு முன்னங் கடுங்கானஞ் சென்ற
நிழல்மணி வண்ணா நினையே - தழல்வண்ணன்
போற்றிப் புகழுரைப்பப் பொல்லா விரவொழித்தா
யாற்ற வடியேற் கருள். 105

இன்பம் பயக்கு மிருணீங்கு நம்மனத்துத்
துன்பந் தனையொழித்துத் தூய்தாக்கும் - வன்பரல்சேர்
கானந் தனைக்கடந்து காரரக்கர் போரழித்த
வானந்தா னந்த னடி. 106

தந்தை யுயிர்துறக்கத் தாய்மார் தளர்ந்தலற
நைந்து நகர நனிவருந்த - எந்தாய்முன்
மைப்படியு மேனி வருந்த நெடுங்கானம்
எப்படிநீ சென்றா யியம்பு. 107

செம்பொற் சிலைதரித்துச் சேயிழையும் பின்தொடரத்
தம்பிக் கரசளித்துத் தாயின்சொல் - நம்பிமுன்
வெங்கானஞ் சென்ற விறலோன் பதமன்றி
எங்காம் புகன்மனமே யின்று. 108

பைம்பொன் முடிதுறந்து பாரிழந்து தேவியொடும்
வம்பு மலரடிகள் வாட்டமுற - நம்பா
கடுங்கானஞ் சென்ற கதையை நினைத்தால்
ஒடுங்காதோ வென்னெஞ்ச மோய்ந்து. 109

வனங்கடந்து வானவர்க்கா வாளரக்கர் மாய்த்த
கனங்கொண்ட மாமேனிக் கண்ணே! - முனங்கொண்ட
தீவினையேன் றுன்பம் சிதறக் கடைக்கணிப்பின்
மேவிடுவ லின்பம் விரைந்து. 110

வைய மிரங்க வனத்து நடையுகந்த
ஐய னடியை யடைந்தக்கால் - துய்ய
துரியநிலை மேவத் துணையாகு முய்ய
வரிய வழியா மது. 111

தம்பி மொழிதவிர்த்துத் தாரத்தின் மென்மொழியை
நம்பி வனத்தி னனியுழன்று - வெம்பிக்
கொடுந்துன்ப மேவிக் குவலயத்தைக் காத்த
அடுஞ்சிலையா யென்னி யளி. 112

நங்கைக் கிடரொழித்து நன்முனிவர் வெந்துயரைப்
பங்கப் பட வொழிக்கும் பண்பினதாம் - தங்குபுகழ்
வண்ணங் கரியன் வளையாழி யங்கையன்
தண்ணந் துளவன் சரண். 113

நின்னடியிற் சேர்ந்த நிமல விபீடணற்குப்
பொன்முடியைச் சூட்டும் புரவலனே! - என்னுடைய
வல்வினையைப் போக்கும் வகையறியா யென்கொலிது
சொல்லரியாய்! காரணத்தைச் சொல்? 114

வேறு

நெடியானே நின்னை நினைந்துருகி நிற்குங்
கொடியாளை யென்னோ குலைத்தாய் - படிமேல்
துடிநேரிடை யாட்குத் துன்பமுன் செய்தாய்
அடிசார்ந்து வாழ்த லரிது. 115

வாரார்ந்த கொங்கை மடவா ளுவந்துறையும்
தாரார்ந்த மார்பன் றனிமுதலான் - போராரும்
தேரார்ந்த வாளரக்கன் றேயச் சரந்தொட்ட
காரார்ந்த மேனியனைக் காண். 116

வனகரிக்கு முன்னின்றான் வானவர்கள் போற்றுந்
தினகரனை முன்மறைத்த தேவன் - நினையின்
கனகனுரங் கீண்ட கையுகிரா னம்மான்
அனக னடியே யரண். 117

வேறு

விடந்தாங்கு வாளரவின் மேவிக் கிடக்கும்
கடந்தாழு மால்களிற்றைக் கண்டு - மடந்தாங்கு
நன்னெஞ்சே சேரற்கு நாடாது நாரியர்பா
லின்னஞ்செல் கின்றனையே யேன்? 118

காரரக்கர் சேனை களத்தவியக் கார்முகத்து
வார்கணைகள் தொட்ட வரைமார்பா - நேர்முகமாச்
சீறிவரு மிவ்விருளைக் கண்டு சிலைநுதலா
ளூறடையா வண்ண முரை. 119

தின்று கொழுத்துத் திரியுஞ் சிறியோர்பால்
சென்று மடநெஞ்சே சேராதே - குன்றின்
முழையுறைந்த வானரத்தை மொய்ம்புடனே காத்த
மழைமுகிலை நன்னெஞ்சே வாழ்த்து. 120

நாடு துறந்து நகர்துறந்து வானவர்க்காக்
காடு புகுந்த கருங்களிற்றை - வீடுபுகல்
வேதங்கள் காணா விழுப்பொருளை நாடுவேற்
கேதங்க ளுண்டோ வினி. 121

செந்திருவி னாயகனைத் தேவர் பெருமானை
மைந்துடைய வில்லை வளைத்தானை - நொந்து
தனையடைந்த தொண்டர் தமையளிக்கு மின்பக்
கனவுருவை நெஞ்சே கருது. 122

மானருகில் நிற்க மறித்துமொரு மானுக்கா
வேனோ வுழன்றா யிறைவனே? - வானமுகில்
மாமழைதா னிற்க மதியாது கானனீர்
போமது போல் நெஞ்சிற் புரிந்து. 123

நெஞ்சங் கனன்று நிமிர்வில்லின் மொய்கணைக
ளஞ்சத் தொடுத்த வரக்கனைமுன் - கஞ்சப்
பிரமன் கணையால் பிரிந்துடலம் வீழ்த்தும்
பரமன் பதமெனக்குப் பற்று. 124

பைம்பொன் முடிசிதறப் பாய்பரியுஞ் சாய்ந்துவிழச்
செம்பொற் சிலைமுறியத் தேரொழிய - வும்பர்
மனமகிழ ராவணனை வாளமருள் வீழ்த்த
கனமுகிலை நெஞ்சே கருது. 125

வம்பவிழுங் கூந்தன் மடமா னுடனாக
வெம்புநெடுங் கான்புகுந்த வேழத்தை - நம்பிக்
கருத்திருந்து கின்றேன் கடுவினைக ளென்னைக்
கருந்திருத்த மாட்டா கறுத்து. 126

மான்பிடித்துத் தாவென்ற மாணிழையின் சொல்விரும்பிக்
கான்பிடித்துச் சென்றோர் கடுங்கணையால் - வான்பிடிக்க
மாரீ சனைக்கொன்ற வள்ளலே யென்மனத்து
ளோரீச னாவா னுவந்து. 127

கும்பமுனி தந்த கொடுமரத்தாற் கோளரக்க
ரும்ப ரடைய வொழித்தருளிச் - செம்பொன்
முடிகவித்து வீடணற்கு மொய்குழலை மீட்ட
வடிகளென் னெஞ்சத் தரண். 128

செங்கட் சிலைதரித்துச் சேண்விளங்கு மாமுகில்போல்
கங்கைக் கழனோவக் கானகத்து - மங்கைக்
கிடரொழிக்கச் சென்ற வியல்பை நினைந்தால்
தொடருமொ வெம்பிறவி சொல். 129

அன்ன மறியா ளணிமலருந் தானணியாள்
கன்னல் மொழியாள் கதியென்னே - முன்ன
மொரு கொடிக்கா வாழி யுயரணையைச் செய்தாய்
வருகொடிக்கு நல்காய் வரம். 130

சிறந்த பெரும்புகழ்சேர் தேவர்க்கா நீச
ரிறந்துபட நூறி யிலங்கை - யறந்திகழும்
வீடணற்குத் தந்த விறலோனே யென்னெஞ்சத்
தீடணைக ணீங்க விரங்கு. 131

முயன்றும் பயனறியேன் மொய்வினையை நீக்க
அயன்றன் விதியறிவா ராரோ? - வயந்தங்கு
நின்மாயை வல்லபத்தை நீக்க வெனக்காமோ
பொன்மானைக் கொன்றாய் புகல். 132

உவந்து மடநல்லா ளுன்புயத்தை மேவச்
சிவந்த விழிகொண்டு செற்றாய் - பவந்தன்னை
நீக்கு நெடியானே நின்னையுமென் னேரிழையாள்
காக்க நினைத்தல் கடன். 133

கடஞ்சென்று கானோவக் கார்முகிலே நங்கை
யிடஞ்சென்று மென்கனிக ளேன்று - தடம்புயத்து
வாலி வலியழித்த வன்றிறலே யென்மனத்தைக்
கோலி யெழுந்த குணம். 134

வெய்ய வனங்கடந்து வேத முதல்வன்சொற்
செய்ய விலங்கையினிற் சென்றருளித் - துய்ய
விளங்கிழையைக் கண்டு விதமுரைத்த தூதை
யுளங்குளிர நெஞ்சே வுரை. 135

என்றின் குலத்துதித்த எம்மா னிலங்கருவிக்
குன்றின் பதிவிருந்த கொற்றவனைத் - துன்று
மருங்கலைசேர் மாருதியா லன்புருக நட்டாய்
நெருங்கென் மனத்துறைய நேர். 136

மங்கைக் கிடர்கடிந்த மாய னடிக்கமலம்
தங்கத் தரியாத் தலையெதற்காம் - செங்கைச்
சிலைதரித்து வெங்கானஞ் சென்றரக்கர் மாளக்
குலவுபுகழ் மேவக் குறித்து. 137

சார்ந்துவந்து நல்லுருவந் தாய்போலத் தாங்கிக்
கூர்ந்த நடுவிரவிற் கோறற்கா - வாய்ந்த
கடுவிடத்தைப் பூசிக் கனதனத்தைத் தந்தாள்
மடிவடையச் செய்தானை வாழ்த்து. 138

உழல்மனமே யுத்தமனை யுன்னித் தொழுது
விழன்பிறவி நீக்க விரைவாய் - குழலூதி
ஆநிரையை மேய்த்த வடலாழி யண்ணலே
தீநிரய நீக்குந் தெளி. 139

ஓரா துழல்நெஞ்சே யுத்தமனை யெக்காலும்
நேராக நின்று நினைகுவாய் - சீராயன்
தன்னடியைப் போற்றுந் தகையினார்க் கன்றோத
னின்னுலகை யாக்கு மியைந்து. 140

பாழிப் பெரும்புயத்துப் பாண்டவர்க்கா வன்றமரி
லாழிப் படையெடுத்த வம்மானைத் - தாழிக்கு
வீடருளுந் தாளானை வெந்நரகஞ் சேராது
நீடருள நெஞ்சே நினை. 141

நெஞ்சி னிருணீங்கி நேயம் பெறநின்பொற்
கஞ்சத் திருவடியைக் காட்டுதற்குத் - துஞ்சும்
மழலைச் சிறுகுழவி மாமறையோற் கீந்த
குழலைத் தருவாயாய் கூறு. 142

சங்காழி யங்கைத் தனிமுதலே சார்ந்தவர்க்கு
மங்காத வின்ப மகிழ்ந்தீவாய் - பொங்காத
பாண்டவர்க்கு வாழ்வளித்த பைந்துளவ மாமுடியாய்
யீண்டெமக்கு நல்கா யியைந்து. 143

நெஞ்சிற் கறைகொண்ட நீசர்தங் கூட்டத்துக்
கொஞ்சிக் குலவிநீ கூடாதே - பஞ்சவர்க்குப்
பாரளித்த வையன் பதமலரை யெஞ்ஞான்றும்
நேரகத்து நிற்க நினை. 144

கஞ்சத் துறையுங் கனங்குழையா டன்னொடுமென்
நெஞ்சத் துறைய நெடுமாலே - வஞ்சச்
சகடுதைத்த தாண்மலரோய் தண்டுளவத் தாரோய்
பகடொழித்த பண்பாளா பார். 145

நினைப்பில்லா மாக்க ணினையகிலே னெஞ்சிற்
றினைப்பொழுது நீக்கேன் சிறியேன் - பனைத்தாள்
மதகரிக்கு முன்னின்ற மாயவனை யெங்க
ளிதகரனை யெப்பொழுது மேன்று. 146

அடியாற் படியளக்கு மாயிழைக்கா முன்னம்
விடையே ழடர்த்தருளும் வேய்த்தோள் - மடமானைத்
தண்டுளவ மார்பிற் றரிக்குங் கழனினைக்கும்
தொண்டர்தமை நீக்குந் துயர். 147

இனியுண்டோ நன்னெஞ்சே யெம்பெருமா னம்மைத்
துனிநீக்கிக் காக்குந் துணைவன் - கனவிளவின்
காயுதிர்த்துப் பேயின் கடுவிடத்தை யுண்டருளும்
சேயுதிக்கச் சென்மம் செறிந்து. 148

எந்தா யுனதடியை யேத்தித் தொழுவேனை
நந்தா தளிக்க நயவாயோ - பைந்தா
ரருச்சுனற்குத் தேரூர்ந்த வம்மானே நாகத்
தருச்செறியுங் கைத்தலத்தாய் தந்து. 149

தாட்கமலம் நெஞ்சிற் றரிக்கத் தமியேனை
யாட்கொள்ள வாராயோ வண்ணலே - பூட்கைப்
பொருமதத்து வேழத்தைப் போர்விசயன் றன்னால்
செருவொழித்த சேவகனே செப்பு. 150

பெய்வளையார் மாயப் பிணக்கிற பிணிப்புற்றே
யுய்வகையை யோரா துழல்நெஞ்சே - மைவண்ணத்
தாயர் கொழுந்தை யருமறையி னுட்பொருளைத்
தூய வமுதைத் தொழு. 151

பாதம் சிவப்பப் பழுதற்ற பாண்டவர்க்கா
வேத மறியா விழிப்பொருளே - தூதனாய்ச்
சென்ற திறத்தைச் சிறிது நினைத்தக்கால்
குன்றாதோ வெவ்வினையின் கோள். 152

தேர்த்தட்டின் முன்னின்று செம்பொருளை நீயுரைக்கப்
பார்த்தன் தெளிந்த பயனென்கொல் - பேர்த்தவனும்
பிள்ளை யுயிர்துறக்கப் பேதை கலங்குவதேன்
உள்ளற் கரியா யுரை. 153

வஞ்சினமுங் குன்ற வளையாழி கைக்கொண்டு
வெஞ்சினத்தால் வீடுமனை வீட்டுவான் - கஞ்சத்
திருவடிகள் நோவத் திருத்தேர் துறந்த
கருமணியை யென் கண்ணே காண். 154

பாம்பணையின் மேவிப் படுகடலுட் கண்டுயிலும்
தேம்புணர்ந்த தண்டுளவத் தேவர்பிரான் - வாம்பரிமாத்
தேர்நின்று பார்த்தன் தெளியத் தெரிந்துரைத்த
நேர்பொருளை நெஞ்சகமே நேடு. 155

அளியுறையு மென்கூந்த லாய்ச்சியர்முன் வெண்ணெய்க்
கிளிவரமுன் கூத்துகந்த வெந்தாய் - நளினமலர்
வாள்விழியா ளென்றன் மடமான் றுயரொழித்து
நீள்விழியால் காக்க நினை. 156

பின்னை திறத்துப் பெருவிடையேழ் செற்றுகந்த
மன்னை மறந்தக்கால் வாராதோ - கன்மப்
பெரும்பிறவி வீழ்ந்து பிணிபட் டுழலும்
நெருங்குதுயர் நெஞ்ச நிறைந்து. 157

பண்ணுலவு மென்மொழியும் பயங்கயத்து நீள்விழியும்
மண்ணுலவு வாயும் மணிவயிறும் - கண்ணிலவ
வாராயோ மாமுகிலே மாமறையோன் றுன்பொழித்த
காராயோ என்நின் கருத்து. 158

பிணிப்புண் டுரலிற் பிறழும் பெருமானை
மணிக்கொண்டல் மேனி மணியைத் - தணிப்புண்ட
நெஞ்சத்து மேவ நினைந்தக்கால் நீங்காதோ
வஞ்சக் கடுநோய் வறண்டு. 159

சுரிசங்கங் கைக்கொண்டு தொல்லரசர் மாளப்
பரிசுமந்த தேரேறிப் பார்த்தன் - வரிசிலையான்
வானுலகை மேவும் வகைபணித்த மாயன்றன்
தேனுலவு தாமரைத்தாள் சேர். 160

ஆயர் கலங்க வருங்கன் மழைதடுத்த
தூய வமுதைத் துரியத்தைத் - தீய
மனமுடையோர் காணா மணியை நினையின்
வினையொழிவை நெஞ்சே விரை. 161

விளவின் கனியுகுத்து வேய்புரையு மென்றோ
ளிளமயிலை யொக்கு மெழிலா - ருளமுருக
மென்றுகிலை முன்கவர்ந்த வேதப் பெரும்பொருளே
வன்றுயரை வாட்டு மருந்து. 162

சேராத கஞ்சன் றிறல்விளங்கு மென்குஞ்சி
யீரா வழித்தவனை யெம்மானைத் - தீராத
மெய்யன்பு கொண்டு விரைந்து வணங்குதியேல்
பொய்யொழியும் நெஞ்சே புகல். 163

பேச்சுக் கடங்காப் பெரும்புகழான் பெய்வளையா
ரேச்சுக்குகந்த வெளியன் காண் - நீச்சுக்
கடங்காத மாமடுவி லாரழனா கத்தின்
படங்காண வாடும் பரன். 164

அறியாத வாண னரும்புயங்கள் வீழக்
குறியாக வாழிதனைக் கொண்டான் - வெறியாரும்
தண்டுளவ மின்றித் தளிரியலு முய்யுமோ
வண்டுறையு மென்குழலீர் வாய்ந்து. 165

நெஞ்சந் துடிக்க நிலைதளரு மேந்திழையைக்
கஞ்சத் திருக்கரத்தால் காவாயோ - வஞ்ச
விளவுருவங் கொண்ட விறலோனை மாய்த்த
களவுருவா! வென்னோ? கருத்து. 166

நெஞ்ச மறியா நிமலப் பெரும்பதவி
எஞ்சா தடைய வினிவிரும்பின் - நெஞ்சே
உறிமருவும் வெண்ணெயினை யுண்டுகந்த வாயன்
வெறிமலர்ச்செஞ் சேவடியை வேண்டு. 167

கேள்விக் கரைகடந்த கேடில் விழுப்பொருளைக்
கோள்விக் கினமொழிக்கும் கோவலனை - வேள்விக்கு
நாயகனை நான்மறைகள் நாடுந் தனிமுதலைத்
தூயகமே நிற்கத் துணி. 168

பேசாத பேச்செல்லாம் பேசும் சிசுபாலன்
காசார் மணிமுடியைக் காசினியில் - கூசாது
வீழப் படைதொட்ட வேதியனை யேத்தாது
வாழப் படுமோ வழுத்து. 169

கொங்குறையு மென்கூந்தற் கோவியர்தம் வார்துகிலைப்
பங்கமுறக் கொண்டகன்ற பான்மையனே! - நங்கையிவள்
செங்கை வளையுந் திகழ்கின்ற வாழியையு
மங்ஙனநீ கொள்ள லழகு. 170

சேயிழையை மார்பிற் செறித்தானைச் செங்கரத்துப்
பாயொளிசே ராழி பரித்தானைத் - தாயுருவின்
வெங்கட் கடும்பேய் விடமுண்ட வித்தகனைக்
கங்கைக் கழலானைக் காண். 171

ஆயர் நெடுங்கயிற்றி னாப்புண்டு மாவுரலில்
தூய கரிபோலத் தோற்றுமால் - சேயுருவில்
நீற்றை யணிந்தானும் நீண்மலரின் மேலானும்
போற்றிப் புனைந்த பொருள். 172

படநாகப் பாயலான் பைந்துழாய் மாயன்
விடநாக வெங்கொடியோன் வீடக் - கடனாத்
தனஞ்சயற்குத் தேரூர்ந்த தாமோதரன் காண்
மனஞ்சயிக்க வல்ல மருந்து. 173

மருந்தின் பொருட்டா மணியாழி முன்னம்
திருந்தக் கடைந்த திறலோன் - விருந்தாக
வில்விதுரன் புன்குடிலில் மேவு மெளியன்காண்
வல்விரையு மென்மனத்து வந்து. 174

பண்தங்கு மின்சொற் பவளத் திருச்செவ்வாய்
மண்தங்கக் கண்டு மதிமயங்கப் - பெண்கொடிக்கு
நீளுலகந் தன்வாயிற் காட்டு நிமலோன்றன்
தாளுலவு மென்மனத்துத் தான். 175

வந்தெதிர்ந்த மல்லர் வலியழித்து வன்மருப்புச்
சிந்துரத்தை வானிற் செலுத்தினான் - சந்தக்
கழல்பணிந்து வாழ்த்திக் கருத்தில் நிறுத்த
அழல்வினையு நீங்கு மயர்ந்து. 176

உறிகமழும் வெண்ணெ யுவந்துண்ட வாயன்
வெறிமலர்த்தாள் மேவ விரைமின் - நெறியறியாக்
கன்மக் கடலிற் கவிழ்ந்துழலும் மாந்தர்காள்
சன்மக் கழிவுறுவீர் சார்ந்து. 177

நீலத் திருவுருவங் கொண்டு நிறைநெஞ்சில்
கோலத் துடனே குளிர்ந்திருக்க - மேலைக்
கொடுவினைநோய் நீங்கிக் குளிர வுடல
மடுகளிற்றா யம்மா னருள். 178

வஞ்சச் சகடுதைத்த வள்ளா லுனதடியென்
நெஞ்சத் திருத்த நினையாயோ - கஞ்சத்
திருப்புகந்த மான்சே ரெழின் மார்பா வென்னைக்
கருப்புகுதா வண்ணங் கணித்து. 179

நக்க னறியான் நளினத்தான் தானறியான்
புக்குழலு நெஞ்சர் புகலுவரோ - தொக்கமலர்
வம்பணியு மென்குழலார் வைத்ததயி ருண்டருளும்
செம்பவள வாயான் திறம். 180

மல்லர் மடிய மதமா மருப்பொடிய
வில்விழவு செய்த விறல்மாமன் - தொல்லைமுடி
போய்வீழ முன்னம் பொருதானை வெவ்வினையின்
நோய்நீங்க நெஞ்சே நுவல். 181

புன்முறுவல் கொண்டு பொருகயற்க ணாய்ச்சியரை
வின் மருவுங் கையால் விழைந்தணைந்தாய் - அன்மருவுங்
கூந்தன் மடமானைக் கூடுதற்கு மெல்லணையாப்
பாந்தண் மிசைக்கிடந்தாய் பார். 182

ஆயர் மகளி ரருந்துகிலை முன்கவர்ந்த
தூயன் மலரடியைத் துன்னாது - மாய
மடவார் வலையுள் மயங்கிக் கிடக்கும்
விடரின் பிறப்பன்றோ வீண். 183

பாந்தட் கொடியானைப் பாரதத்து முன்கொன்று
காந்தட் டிருக்கரத்துக் காரிகைக்குக் - கூந்தல்
முடித்தருளும் ஞான முதலே யடியேற்
கடித்துணையை நல்க வருள். 184

சொல்லற கரியானைத் தோமில் குணத்தானை
மல்லர்க் கரியான மாமணியைப் - புல்லற்குப்
போதுமோ சொல்லீர் புனையுழையீ ரல்லாக்கால்
சாதுமோ சொல்லீர் தளர்ந்து. 185

கொங்கைக் குவடு குழையத் தழீஇக்கொண்
டங்கங் குளிர வணையேனோ? - துங்க
விடையானும் நான்முகனும் மேவரிய மாயன்
நெடுமேனி யின்பம் நிறைந்து. 186

மனத்துறையு மாலை மதியாது தீயோ
ரினத்துறைய நெஞ்சே யெழாதே - தனத்துறையும்
மாவிடத்தை யுண்டு மருதிடைபோய் நின்றானை
நாவிடத்து நிற்க நவில். 187

செய்ய திருவடியென் சென்னிக் கணியேனே
லுய்ய வழிபிறிது முண்டுகொலோ - பைய
விடவரவ மேனடித்த வேத முதல்வ
னிடமுறைய வென்மனத்து ளின்று. 188

குடையா மலையெடுத்துக் கோநிரையைக் காத்த
வடலாயா! வுன்னை யடைந்தேன் - தடையாரு
மைம்புலனைச் செற்றிட் டறிவை யுனதடிக்கே
யின்புறநீ நிற்க விரங்கு. 189

ஆய ரிளங்கொழுந்தை யம்மானை யச்சுதனைத்
தூயர் மனத்துறையுந் தோன்றலை - மாயப்
பிறப்பொழிக்கும் பெம்மானைப் பேராழி யானை
மறப்பொழிய நெஞ்சே வழுத்து. 190

பைந்துளவத் தாரானைப் பாவையர்தம் மெய்தோயும்
மந்தரநேர் திண்புயத்து மாயோனைச் - செந்திருவின்
நாயகனை நான்மறையி னற்கனியை வெம்பிறவித்
தீயகல நெஞ்சகமே தேர். 191

வெய்ய படையொழித்து வேண்டாதார் மாண்டொழியத்
துய்ய வளைமுழக்குந் தூயோனே - நையும்
துடியிடையாள் சோர்வகற்றித் தொல்லருளாற் காக்கத்
தடையுண்டோ சொல்லாய்நீ சற்று. 192

தீர்த்தம் பலமூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
சீர்த்த மதியீர் சிறப்பில்லை - பார்த்தனுக்குக்
குற்றேவல் செய்து குருகுலத்தோர் வானேறப்
பொற்றேரி னின்றான் புகல். 193

விடையேழும் வென்ற விறலோய்! விளங்கு
குடையாகக் குன்றொன்றைக் கொண்டாய்! - கொடை
மாவலிபால் மூவடியா மண்ணுலகை முன்னளந்த
சேவடியென் சென்னிமிசைச் சேர். 194

அண்டர் துயர்நீக்கு மன்பரகத் தேநிற்கும்
பண்டகலி சாபம் பறிக்குமால் - கொண்டல்போல்
தெண்டிரையிற் கண்வளருந் தேவர்பிரான் செங்கமலத்
தண்டுளவத் திண்கழலே தான். 195

தண்டுளவத் தானைத் தனித்து வனங்கடந்த
புண்டரிக பாதப் புரவலனை - வண்டுவரை
மன்னவனைத் தன்னடியார் மாமனத்து ளார்வத்தாற்
சொன்னபடி செய்தவனைச் சொல். 196

கோலத் திருவுருவங் கொண்டு குரைகடல்சூழ்
ஞாலத்தை முன்னொருகால் நல்கினையே! - யேலக்
கருங்குழலாள் மெய்யணைந்து காவாயோ வேயி
னிருங்குழலா யெந்தா யியம்பு. 197

கழலாற் படியளந்த காகுத்தா! வேயின்
குழலாற் குளிர் நிரையைக் கொண்டா - யழலாரும்
வேற்கண்ணாள் வெந்துயரம் வீட்டாயோ பாம்பணையிற்
பாற்கடலிற் பள்ளிகொள்வாய் பார். 198

நாரா யணனே நமவென் றுனையடைந்தே
னாராயி னற்கதிநீ யாதலினாற் - றீராத
என்வினைதா னீங்க வெழிற்கமல மெல்லடியென்
சென்னிமிசை வைப்பாய் சிறந்து. 199

பொற்குன்றின் மீது பொலியும் கருமுகில்போல்
நற்கருடன் மேல்விளங்கும் நாரணா - யெற்கு
னெழிலுருவங் காண விரங்காயோ யெய்க்கும்
பொழுதினிலென் முன்னே புரிந்து. 200

திருமால் வெண்பா முற்றிற்று




புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247