உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய திருப்பதி ஏழுமலை வெண்பா திருப்பதி ஏழுமலை வெண்பா என்னும் இந்நூல் சிறுமணவூர் முனிசாமி முதலியாரால் இயற்றப்பட்டு, சென்னை சூளையில் இருந்த அவரது சிவகாமிவிலாச அச்சுக்கூடத்தில் 1908ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இந்நூலின் முகப்பில் கீழ்க்கண்ட இரு கட்டளைக் கலித்துறை பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் எந்நூலைச் சார்ந்தது என்பது தெரியவில்லை. கட்டளைக் கலித்துறை
சங்குண்டு சக்கரத் தானுண்டு பாதத் தாமரை முன் தங்கென்று காட்டுந் தடங்கையுண் டன்புந் தயவுமுண்டு இங்கென்று மங்கென்று முழலாமல் வேங்கடத் தையன்முன்னே பங்குண் டெனக்கண்டு பணிவார்க் கெலாமுண்டு பாக்கியமே. பூவிற் றிருத்துளாய் தீர்த்தமுண் டள்ளிப் புசிப்பதற்கு நாவிற் றுதிக்க அஷ்டாட் சரமுண்டு நனவெழுந்தால் சேவிற்க திருமலை மேலே நாராயணன் சேவையுண்டு கோவிந்த நாமந் துணையுண்டு நெஞ்சே நமக்கே துங்குறைவிலையே. இந்நூலில் காப்புப் பாடலாக ஒரு வெண்பா பாடலும், நூலைச் சார்ந்த பாடல்களாக 111 பாடல்களும் அமைந்துள்ளன. நூலின் முதல் 68 பாடல்கள் ‘யேழு மலையே’ என முடிந்துள்ளன. நேரிசை வெண்பா பொருப்பா மனேகமலை பூமியெலாத் தோற்றிடினுந் திருப்பதியைப் போலாமோ தேடுங்கால் - விருப்பமுடன் புண்ணியத்தைச் செய்திருந்தாற் போய்மனமே நீதொழுது பண்ணவினை போக்கிகொளப் பார். நூல் பூவிற் பெரியமலை பொன்னுலகோர் தேடுமலை பாவிற் கிளகிப் பழுக்குமலை - மேவிய சீர் நீதித் தழைக்குமலை நிலவுலக மத்தனைக்கும் ஆதிமலை யேழு மலையே. 1 திருமா துலாவுமலை தேவர்குழாஞ் சூழுமலை பெருமான் கிருபைப் பெருக்குமலை - தருமஞ் செழிக்குமலை யன்பர் செய்தவினை யெல்லா மொழிக்குமலை யேழு மலையே. 2 சொல்லற் கரியமலை சுரர்முனிவர் தேவர்முதற் பல்லுயிர்க ளெல்லாம் பணியுமலை - எல்லை யெங்கும்பிர காசமலை யெல்லாஞ்செய் வானோர்கள் தங்குமலை யேழு மலையே. 3 பூத்தமலர் வாசம் பொருந்துமலை வானோர்கள் காத்திருந்து நித்தங் கருதுமலை - கீர்த்தி பரந்தமலை யன்பர் பழவினையைப் போக்கச் சிறந்தமலை யேழு மலையே. 4 தொண்ட ரகத்திற் றுளுக்குமலை தூய்மையிலா வண்டர்க் கிடுக்கண் வளர்க்குமலை - பண்டாம் யுகந்தோ ரிருந்தமலை யூழ்வினையை மாற்றத் தகுந்தமலை யேழு மலையே. 5 கோகனக மாது குலாவுமலை கோடியிலா ஆகமங்க ளெல்லா மளக்குமலை - யோக சித்த ரிருக்குமலை செல்வமலை சித்தஜனை பெற்றமலை யேழு மலையே. 6 உள்ள வுலகெல்லா மோரடியாக் கண்டமலை வெள்ளை மனத்தில் விளக்குமலை - கள்ளமிலா ஞானமலை மோனமலை ஞானத் தபோதனருக் கானமலை யேழு மலையே. 7 காண்டற் கரியமலை கௌரவரார் காய்ந்த பாண்டவருக் கெல்லாம் பலித்தமலை - நீண்ட உலகை யளந்தமலை யூடுருவி யெங்கு மிலகுமலை யேழு மலையே. 8 செல்வ மளிக்குமலை சேணுலகங் காட்டுமலை நல்லவருக் கெல்லாமே நல்குமலை - பொல்லா மூர்க்கர் செருக்கை முறிக்குமலை யபயங் கார்க்குமலை யேழு மலையே. 9 இட்டார்க் கிரங்குமலை யேதேது கேட்டாலுங் கிட்டே நெருக்குங் கிருபைமலை - துட்டர் குலத்தைப் பிரிந்தமலை கோவிந்தா வென்பாரைக் கலந்தமலை யேழு மலையே. 10 வாழைக் கமுகு வளர்ந்தமலை ஞானக் கோழைப் படாமுனிவர் கூடுமலை - ஊழை யதற்றுமலை யன்ப ரகத்துமலை சர்வ சுதத்துமலை யேழு மலையே. 11 பூவனங்க ளெங்கும் பூர்க்குமலை பூமலிந்த காவனங்கள் சுற்றுங் கனிந்தமலை - தாவி யருவி கலந்தமலை யன்பரகத்தறிவி லிருந்தமலை யேழு மலையே. 12 குன்ற மெடுத்தமலை கோதண்டந் தாங்குமலை அன்றரக்கர் கூட்ட மழித்தமலை - நின்று வணங்குவார் தன்குலத்தை வாழ்த்துமலை மேலோர்க் கிணங்குமலை யேழு மலையே, 13 கஞ்சமலர் வாவிமலை காரிருண்ட சோலைமலை கொஞ்சுங் கிளிமயிலுங் கூவுமலை - மிஞ்சும் கீதவொலி நாதங் கேட்குமலை சர்வஜெக நாதமலை யேழு மலையே. 14 தப்பை முழங்குமலை தாதர்குழாஞ் சூழுமலை யெப்போதுங் கற்பூர மேந்துமலை - கப்பணங்கள் சரஞ்சரமாய் வந்து செலுத்துமலை மாந்தர் நிறைந்தமலை யேழு மலையே. 15 இரும்பென்ன நெஞ்ச மிளகாத வஞ்சகரைக் கரும்பாய் நசுக்கிக் கசக்குமலை - பெரும்பால் அன்பாகக் கோயிலைவிட் டகலா மலையார்க்கு மின்பமலை யேழு மலையே. 16 துளசி மணக்குமலை தூய்மனத்தா ரேறுமலை களஞ்சியத்தி லேநிதியங் கட்டுமலை - யுளந்தான் நொந்தார் முகத்தை நோக்குமலை செல்வந் தந்தமலை யேழு மலையே. 17 கோவிந்தா வென்றபெருங் கோட்டம் ஜொலிக்குமலை தாவிப் பணிந்தடியார் தங்குமலை - மேவி என்னேரஞ் சூடமிலகுமலை யேனையோர்க் கன்னைமலை யேழு மலையே. 18 கோபந் தணிந்து குளிர்ந்தமலை சர்வ சாபவினை யாவுஞ் சதைக்குமலை - பாப மெல்லா மகற்றுமலை யெல்லாச் சுகமளிக்க வல்லமலை யேழு மலையே. 19 குங்குமமுங் களபக் குழம்பும் மிகத்திமிர்ந்த மங்கையர்கள் வாசம் மணக்குமலை - யெங்கும் கேசவா மாதவா கோவிந்தா வென்றிறைஞ்சி பேசுமலை யேழு மலையே. 20 நாற்றிசையி லுள்ளோரும் நாடித் தினந்தொடர்ந்து போற்றிப் பொருள்பணிதி போடுமலை கீர்த்தி சிறந்தமலை தொண்டர்களாற் செய்தபிழை யெல்லா மறந்தமலை யேழு மலையே. 21 எட்டெழுத்தா யஞ்செழுத்தா யிருமூன்று ஆறெழுத்தாய் துட்டர் வணங்குபல தோற்றமுமாய் - மட்டில் ஏகப் பொருளா யெழுந்தமலை யட்டாங்க யோகமலை யேழு மலையே. 22 காலைக் கதிரோனுங் கங்குலிலே சந்திரனும் வேலைக் குளித்துவலஞ் செய்யுமலை - மேலாம் உம்பர் முனிவோ ருயர்மா தவத்தரெலாம் நம்புமலை யேழு மலையே. 23 அன்பர்களை வாவென் றழைக்குமலை யன்புடையா ரின்புற்ற தெல்லா மீயுமலை - துன்பந் துடைக்குமலை வானோர் துதிக்குமலை வேதியனைப் படைக்குமலை யேழு மலையே. 24 நித்த மொருக்கால் நினைப்பார் நினைப்பிலெழும் சித்தியென்ப தெல்லாஞ் செறிக்குமலை - அத்தி மூலமென்ற போதே முளைத்தமலை மூர்க்கர்குல காலமலை யேழு மலையே. 25 கூறுமொழிக் கெல்லாங் கோவிந்தா வென்றிறைஞ்சிப் பேரைக் குறித்தெவரும் பேசுமலை - சீருடைய அன்ன முகந்தோனும் ஆடுமயிற் சேவகனும் மன்னுமலை யேழு மலையே. 26 புவிராஜர் முப்போதும் போற்றுமலை பொய்யறியா தவராஜ ரெப்போதுந் தங்குமலை - கவிராஜர் பாடுமலை பாட்டில் பதித்தவர மெல்லாங் கூடுமலை யேழு மலையே. 27 திக்குவே றில்லையெனத் திருவடியிற் சார்ந்தாரை யக்கரையாய் வாவென் றழைக்குமலை - மிக்க கருணை மலிந்தமலை கருதும்போ தேயுதவுந் தருணமலை யேழு மலையே. 28 ஊழ்வினையோ ரானாலு மோடிப் பணிந்தக்காற் றாழ்வெல்லாம் நீக்கித் தணிக்குமலை - வாழ்வென்ற அகத்துச் சுகபோக மியாவுங் கொடுக்குமதி மகத்துமலை யேழு மலையே. 29 மாடேறும் பிஞ்ஞகனும் மயிலேறும் பெருமாளும் ஏடேறும் வாணிக் கினியானும் - வீடேறு முத்தரொடு சித்தர்களும் மூவிரண்டு லோகமெலாம் நத்துமலை யேழு மலையே. 30 ஜெனகாதி மாமுனிவோர் சேருமலை வானுலகத் தினமாதி யெல்லா மிருக்குமலை - மனுநீதி யோங்குமலை யுள்ளன்பா லோங்குமடி யார்குடும்பந் தாங்குமலை யேழு மலையே. 31 பொன்மகளை மார்பினிடம் பூண்டமலை யன்பர்கடம் மின்பப் படிக்கெல்லா மீயுமலை - தொன்மறையும் சொல்லுமலை வேதச் சோதிமலை யாயிரத்தெட் டெல்லைமலை யேழு மலையே. 32 சீதமலர் நாற்றஞ் செழித்தமலை யன்பருக்குப் பாதமலர் வீடாய்ப் பலித்தமலை - மாதவர்கள் சூழ்ந்தமலை மீனினமுஞ் சூரியனுஞ் சந்திரனுந் தாழ்ந்தமலை யேழு மலையே. 33 பூமகளுஞ் சண்முகத்தைப் பூத்தவளும் வேதனுடை நாமகளுஞ் சூழ்ந்து நயந்தமலை - தாமமணி இந்திரனோ டட்டத் திசையாரும் வந்துதொழ முந்துமலை யேழு மலையே. 34 செம்மான் றருமகளைச் சேர்ந்தசிவ சண்முகனுக் கம்மானாய்த் தோன்றியவா னந்தமலை - பெம்மான் மோகப் பசுங்கொடிக்கு மூத்தமலை யட்டசுக போகமலை யேழு மலையே. 35 அஞ்ஞான மாமிருளை யகலத் துரத்திபர மெஞ்ஞான வீட்டின்ப மீயுமலை - எஞ்ஞான்றும் பன்னுமடி யார்மிடியைப் பற்றறவே நீக்குபசும் பொன்னுமலை யேழு மலையே. 36 தொல்லைப் பிறவிதுயர் தூற்றுமலை துரியநிலத் தெல்லைச் சுகமடியார்க் கீயுமலை - பல்லுயிருங் கார்க்குமலை பக்திநெறி காப்பார் மனம்போலப் பார்க்குமலை யேழு மலையே. 37 ஆறாத புண்புரைக ளாற்றுமருந் தானமலை தீராத் துயரனைத்துந் தீர்க்குமலை - மாறாத பொன்னுலக வாழ்விற் பொருத்துமலை பொன்னுலகோர் பன்னுமலை யேழு மலையே. 38 ஈரமிலா நெஞ்சத்தாற் கிடுக்கண் ணியற்றுமலை ஓரஞ்சொல் வார்குடும்ப மொழிக்குமலை - ஆரமலர் சாற்றித் தொழுவார் சஞ்சலங்க ளப்போதே மாற்றுமலை யேழு மலையே. 39 அறமென்ப தில்லா வழுக்கடைந்த கள்வர்கடம் முறமெல்லாம் போக்கி யொடுக்குமலை - மறவாமல் சிந்திப்பார் நோக்கமெலாஞ் சீரோங்கச் செய்யுமதி விந்தைமலை யேழு மலையே. 40 பார்மீது வாழ்ந்துபிறர் பசியறியார் செல்வாக்கை நீர்மே லெழுத்ததுபோல் நீற்றுமலை - யார்மீதும் நீங்காக் கருணைமலை நீடுலக மண்டாண்ட விந்தைமலை யேழு மலையே. 41 அண்டமெலா முந்தியிலே ஆவென்று காட்டுமலை பண்டையுக மெத்தனையோ பார்த்தமலை - தொண்டர் உள்ளமெனுங் கோயிலின்கண் ணோங்குமலை வைகுண்ட வள்ளல்மலை யேழு மலையே. 42 மெய்த்தவஞ்சேர் ஞானியெலா மேவுமலை மெய்யுடனே கைத்தவங்க ளில்லாரைக் கடியுமலை - எத்தலமும் கொண்டாடிப் போற்றுமலை கோவிந்தா வென்றேத்து மண்டர்மலை யேழு மலையே. 43 ஆதிசிவ னால்வரம்பெற் றகிலம் மிகநெரித்த காதகரை யெல்லாங் கண்டித்தமலை - சோதனையில் பத்தருக்கு முன்னிருந்து பாதுகாத் தாண்டபர முத்திமலை யேழு மலையே. 44 அடியேன் றுயர்படுமா வாபத்துக் காலமெலாங் கொடியபிணி நீக்கிக் கொடுத்தமலை - படியிலிப்போ கொத்தடிமை கொண்டென் குடும்பத்தைக் கார்க்கமனம் வைத்தமலை யேழு மலையே. 45 வேண்டித் தொழவறியா விளையாட்டுக் காலமெல்லாம் ஆண்டதுணைத் தாதா வானமலை - தூண்டும் குருவாகி யென்னறிவிற் குடியாகி நல்லறிவைத் தருகுமலை யேழு மலையே. 46 மிடியைத் துலைத்துநிதி மென்மே லளித்தடியார்க் கடிமைப் புரியவருள் செய்தமலை - கொடிய ஊழ்வினையால் வந்தபிணி யொட்டுத் துடைத்தென்னை வாழ்த்துமலை யேழு மலையே. 47 தஞ்சந் தஞ்சமெனத் தாள்பூட்டி வந்தவரை யஞ்சலஞ்ச லென்றா தரிக்குமலை - கொஞ்ச நேரத்தி லேமனனோய் நீக்கியே காத்தருளும் பாரமலை யேழு மலையே. 48 அரிவோம் நமோநா ராயணா வென்பாருக் குரியவர மெல்லாங் கொழிக்குமலை - பிரியமுடன் யென்றுமஷ்ட லட்சுமியு மீஸ்வரியுஞ் சரஸ்வதியும் நின்றமலை யேழு மலையே. 49 என்னா லுரைப்பதினி யென்னறிவே னுள்ளதெலா முன்னா லறியா தொன்றுளதோ - பன்னாளும் காத்ததுபோ லின்னுமெனைக் காத்தருள வென்கனவிற் பூர்த்தமலை யேழு மலையே. 50 மாசி யிறங்குமலை மழைக்கால்க ளோடுமலை தேசிகனார் மகிமை தெரியுமலை - வாசமலர் மணக்குமலை யுண்டிதுகை மலைமலையாய் வந்தாலுங் கணக்குமலை யேழு மலையே. 51 சொன்னத் துகையிலொரு செம்பு குறைந்தாலுங் கன்னத்தி லேயடித்து கட்டவைக்கும் - அன்னவரை திருப்ப நடத்துமலை தஞ்சமென்ற பேர்மேல் விருப்பமலை யேழு மலையே. 52 கட்டுந் துகையிலொரு காசு குறைந்தாலும் வட்டியுட னேதிரும்ப வாங்குமலை - எட்டுத் திசையாரை யெல்லாந் திரளா யழைக்குமதி வசியமலை யேழு மலையே. 53 பொன்வயிர பூஷணத்தைப் போடுவதாய் மலைக்குவந்த பின்னால் துகைகொடுத்த பேய்மனதை - முன்னால் உழைத்தபிணி யெல்லா முண்டாக்கி யட்சணமே யழைத்தமலை யேழு மலையே. 54 மன்னரொடு மந்திரிமார் மகத்தாதி யானாலுஞ் சொன்னபடி வாங்குஞ் சூட்சமலை - எந்நேரம் தங்கங் குவியுமலை தஞ்சமென்றார் மேலாசை பொங்குமலை யேழு மலையே. 55 நாமந் துலங்குமலை நாற்றிசையுங் கோவிந்த நேமம் பெரியோர் நிறைந்தமலை - க்ஷேமம் ஈயுமலை யடியா ரிடுக்கமெலாந் தீரவருட் செய்யுமலை யேழு மலையே. 56 சங்கீத மேளஞ் சதாகோட்டஞ் செய்யுமலை யெங்குங்கோ விந்தமய மெய்துமலை - மங்கையர்கள் திரளா யுலாவுமலை தெய்வ மகத்துவமே நிறைந்தமலை யேழு மலையே. 57 வடக்குமலை யென்று வழங்குமலை தென்கீழ்க் குடதிசையோ ரெல்லாருங் கூடுமலை - யடக்கமதில் இருந்தாரை யெல்லா மிழுக்குமலை நோய்க்கு மருந்துமலை யேழு மலையே. 58 நிஜமா யிராப்போலே நெடுங்கதிரைத் தான் மறைத்து விஜயனுக்கு வெற்றி விளைத்தமலை - புஜபலத்தை நம்பி யெளியோர்மேல் நாப்புழுக்குந் துட்டருக்கு வம்புமலை யேழு மலையே. 59 முத்திக்கு வித்தாய் முளைத்தமலை மூவுலகும் பத்திபுரி வோர்க்குப் பலிக்குமலை - சித்தியெலாம் மெய்யாய் விளங்குமலை மெய்யறியாப் பொய்யருக்கு பொய்யுமலை யேழு மலையே. 60 எட்டெழுத்தாய் லோகமெலா மெங்கும் நிறைந்தமலை துட்டருக்குத் தோற்றாத் தூரமலை - இட்டமுள அன்ப ருளத்தி லமர்ந்தமலை யன்புடையார்க் கின்பமலை யேழு மலையே. 61 அவ்வவ் வுலகோ ராசாரம் போல் குறிப்பு வெவ்வே றுருவாய் விரிந்தமலை - எவ்வுயிரும் தானாய் விளங்குமலை தாய்க்கும் பெரியதா யானமலை யேழு மலையே. 62 வேலை வளைந்தமலை விரிகதிரும் சந்திரனைச் சோலையிலே காட்டுஞ் சொகுசுமலை - ஆலிலைமேல் சற்றே துயின்றளவில் சர்வவுல கத்தனையும் பெற்றமலை யேழு மலையே. 63 மீனினங்க ளாமிருபத் தேழும் நவக்கிரகந் தானுங் குலவித் தழுவுமலை - வானுலகிற் றேடரிய தேவர்களும் தெய்வசபை மாதர்விளை யாடுமலை யேழு மலையே. 64 தெய்வ மிருக்குமலை தெய்வீக மோங்குமலை மெய்தவஞ்சேர் புங்கவர்கண் மேவுமலை - கைதவத்தை பூண்டார்கள் சூழுமலை பூதலத்தி லேழைகுடி யாண்டமலை யேழு மலையே. 65 எழுநிலமு மேழு மலையாய் வளர்ந்தமலை பழுதருபொன் னாடாய்ப் படர்ந்தமலை - தழும்பேற துதித்தார் மனத்தகத்திற் றேற்றுமலை யான்றோர் மதித்தமலை யேழு மலையே. 66 வேதக் கொடிமுடியாய் விளங்குமலை வேதத்தின் பாதமுத லுலகாய்ப் படர்ந்தமலை - சீதமலர் பூணுமலை யன்பர்கள்செய் பூசைப் பலனளவே காணுமலை யேழு மலையே. 67 பச்சைமலை பச்சைப் பவளமலை பல்லுலகும் மொய்ச்சமலை லக்ஷ்மீ மோகமலை - யச்சமெலாம் தீர்க்குமலை தீவினையைத் தினகரனார் முன்பனிபோல் பேர்க்குமலை யேழு மலையே. 68 நீங்கா வுடற்பிணியை நீக்கவழி காணாமல் வேங்கடவா யுன்னடியை வேண்டினேன் - பாங்குபெற முற்போ தெனைக்காத்த முறைபோல் மனமிரங்கித் தற்போதும் நீகருணை தா. 69 நாசியின் மேல் வந்தபிணி நாசப் படுத்தியுனைப் பேசுமடி யார்புகழைப் பேசவருள் - தேசிகனே என்போல மானிடர்முன் னேகமன மஞ்சுகிறே னுன்பாதம் நம்பியு மீதுண்டோ. 70 பண்டிதரார்க் கற்றதெலாம்பார்த்துப் பார்த்தென்பிணியை கண்டிக்க வாகாமல் கைவிட்டார் - எண்டிசையும் தாவித் தொழும்பெரிய தாதாவே நீயிரங்கிப் பாவியெனை யாதரிக்கப் பார். 71 முக்காலு முன்னடியை மெய்யாக நம்பினவ னெக்கால முமறக்கே னுண்மையிது - தற்காலம் அஞ்சும் படிக்கென்னை யாட்டுகிற வூழ்வினையைத் துஞ்சும் படிச்செய் துணை. 72 ஊழ்வினையைத் தாங்காம லுள்ளுருகி நோவதிலும் பாழ்கிணற்றில் வீழ்ந்தாலும் பண்பென்றே - தாழ்வடைந்த என்முகத்தைப் பாராம லெங்ஙனமோ நீயிருந்தா லுன்னைவிடப் பின்னா ருரை. 73 எள்ளுக்கு ளெண்ணையைப்போ லெங்கும் நிறைந்துளதாய் தெள்ளுமறை யெல்லாந் திடமுரைக்க - உள்ளமதில் என்னேர முன்றா ளிறைஞ்சுமெனைக் காராட்டாற் பின்னாரோ தெய்வமினிப் பேசு. 74 காணுமிட மெல்லாமுன் காப்பென்றே பிரகலாதன் தூணு மிடத்துந் துதிக்குங்கால் - ஆணவஞ்சேர் இரணியனைத் தீர்த்ததுபோ லென்பிணியை மாற்றிதரத் தருணமிது தற்காத் தருள். 75 பழையவடி யாரிருந்த பக்திவயி ராக்கியம்போல் தொழவறியா வேழைமுறை தள்ளாதே - நிழலறியா புழுப்போல் துடித்துனது பொன்னடிக்குத் தஞ்சமென்றே னழுக்கறவே செய்வா யருள். 76 உள்ளமுட னேயெனது வூழ்வினையும் நீயறிவாய் கள்ளனே யானாலுங் கடனுனக்கே - எள்ளளவு உன்கருணை யென்மே லுதிக்குமே யாமாகில் பொன்னாகு மென்னுடைய பொந்தி. 77 வயர்நிறைந்தாற் பானை வாய்மூடா னென்றசரீர் தயவற் றளித்த தழகாமோ - நயமலிந்த குணமுடையா தொண்டர் குலமுழுதுங் காக்கும் மனமுடையாய் கேளென் மனு. 78 மனுவென்ப தென்னுடைய மாபிணியைத் தீர்த்துத் தினமுன் றிருவடியைத் தொழுதேத்த - அனவரதம் புத்தி யெனக்களிப்பாய் புகழ்மலிந்த வேங்கடவா மற்றதைவேண் டாதென் மதி. 79 அன்ன மளித்தா யகமளித்தா யாடைபணி பொன்னும் புகழு மிகவளித்தாய் - என்னுடம்பில் பிணியளித்தால் - மற்றதெலாம் பாவிப்ப தெங்கேநீ துணையிருந்து என்னேய் துலை. 80 செல்வ மகளைத் திருமார்பி லேதரித்து வல்ல புகழ்படைத்த வேங்கடவா - தொல்லையினால் நொந்துவந்து உன்னடியை நோக்கிச் சரணமென்றால் எந்தவினை நிற்கும் எதிர். 81 புண்ணும் புரையுடனே பேய்பிடித்த நெஞ்சுக்கு கண்ணுந் திரையாமா கலியுகத்தி - லென்பிழைப்பு சொன்னால் நகையாகும் சுவாமிதிரு வேங்கடவா என்னென் றுரைப்பே னிது. 82 தொண்டை முதுகு துடைநாசி மேல்விரணங் கொண்டு மெலியுங் குறையெதுவோ - கண்டறிந்து காத்தருள வேணுமையா கடவுளே - வேங்கடவா யார்க்குரைப்பேன் சொல்வா யறி. 83 அரியுஞ் சிவனு மகிலபுவ னம்படைக்கும் பெரியவிதி யும்முருகப் பெம்மானும் - பிரிவாகும் அறுசமய தேவதையு மாயிரத்தெட் டண்டமெலாம் நிறைந்ததுநீ தானே ஹரி. 84 பொய்வழியாற் சேகரித்த பொருளின்வினி யோகமெலாம் மெய்வழியிற் சேர்க்காமல் மெய்குலைந்தேன் - உய்யும்வழி காட்டிக் கொடுப்பதுஉன் கடமைதிரு வேங்கடவா நாட்டினில் வேறேது நதி. 85 உன்னைப் பணிந்தார்க்கு வூழேது தாழ்வேது பின்னை கிரகப் பிரட்டேது - பன்னலமும் கூடுமென்றே கீதையெலாங் கூவுதலால் வேங்கடவா தேடினே னென்மதியைத் தேற்று. 86 கள்ளக் கலிமதியால் காலமெலாம் நாயடியேன் உள்ளத்தை யுன்பா லொடுக்காமற் - பள்ளத்தில் வீழ்ந்தகஜம் போலே விம்முகிறேன் வேங்கடவா தாழ்வகல நீகருணை தா. 87 ஆசைப் பெருக்கா லறிவுகெட்டு நின்புகழைப் பேசாத தாலல்லோ பாழானேன் - தேசத்தார் முன்செல்ல வென்றால் மெலியுதையோ வேங்கடவா என்செய்வே னென்னோ யெடு. 88 உலகபோ கத்திற் குரித்தான காலமதில் தலைவிதிதா நிப்படியுந் தானுண்டோ - நிலமனைத்தும் பாதத்தி னாலளந்த பாரமலை வேங்கடவா சோதித்து நீதா சுகம். 89 பாழும் பிரமனவன் படித்தபடிப் பென்னாவோ ஊழை யொருக்காலே யூட்டுவனா - ஆழிதுயில் கொண்டப்போ துந்திவழி கோகனத்தில் வந்தவனை தண்டித் தெனைக்காத் தருள். 90 உன்மகிமை கேட்க வுளநடுங்கு தாகையினால் யின்னுமுனை மறக்க வெண்ணுவனோ - மன்னர்முதல் அஞ்சிப் பணியுமெந்த னாண்டவனே வேங்கடவா கொஞ்சங் கருணை கொடு. 91 பூவி லயனைப் பெற்றெடுத்த தாதாநீ பாவியென் றென்னைப்பா ராட்டாதே - தேவியொடு சொற்பனத்தில் வந்த சொந்தம்போற் சோதித்து அற்பவினை தீர்த்தா தரி. 92 என்கொடுமை யத்தனையு மெழுதப் பொழுதுண்டோ உன்னடிமை யென்றே யுரைப்பதலால் - பின்னொன்றும் பேசவறி யேனுலகிற் பெரியமலை வேங்கடவா தாசரைப்போ லென்னையுமே தற்கார். 93 தற்கார்க்க வேணுமென்று தஞ்ச மபயமென்று முக்கால் வலமாகி முன்னின்றேன் - மிக்காக என்னபிழை செய்தாலு மெல்லாம் பொறுத்தருளி ஜென்மவினை தீரவருட் செய். 94 ஆணதிலும் பெண்ணதிலு மடியேனைப் போல்கொடியோர் காணவரி தென்றேநீ கண்டாலும் - வீணாக தள்ளாதே யென்னபயந் தங்கமலை வேங்கடவா கொள்ளாதே யென்மீது கோபம். 95 உந்தனுக்குக் கோப முண்டானா லுன்னெதிரே வந்து தணிக்கவழி யார்க்காகும் - சந்ததமும் சேய்பிழைக ளெத்தனைதான் செய்தாலு மீன்றெடுத்த தாய்பொறுக்க வல்லோ தகும். 96 இத்தனைநாள் நினைக்கவிலை யென்றெண்ணி யுன்மனதில் வைத்து வருமம் வளர்த்தாதே - மெத்தவுநான் நொந்தேன் மெலிந்தே னோக்கிவந்தேன் கோவிந்தா சந்ததமு முன்றாள் சரண். 97 கோவிந்த நாமம் கோருமடி யாருக்குப் பாவந் துலையும் பதங்கிடைக்கும் - ஆவலெலாம் கைக்கூடும் பிணியகலும் காளையிளந் தேகம்போல் மெய்க்கூடும் மெய்யா மிது. 98 அலமேலு மங்கைக்கு ஆசைமண வாளா உலகமிரண் டேழுக்கு மொருதகப்பா - நிலமதனில் என்குறைக ளெல்லா மிணையடியி லொப்புவித்தேன் பன்னலமுங் கூடவருட் பண். 99 குற்றங் குறைபலவாக் கோடிபிழை செய்தாலும் முற்றும் பொறுத்து முகங்கொடுத்து - சற்றேநீ கருணை பொழிந்தென் கருமப் பிணிநீக்கி பொருளும் புகழும் பொழி. 100 ஆண்டுக் கொருக்கா லடியேன் திருமலையை வேண்டித் தொழவரமும் வேண்டுமெனக் - காண்டவனே செய்தொழிலும் சீவனமும் சீராய் செழித்துதினம் கைதவமு மோங்கிவரக் கார். 101 துளபமணி மார்பா துவாரகையில் வாழ்முகுந்தா களபமுலை யலர்மேற் கண்ணாளா - வளமலிந்த வடக்குமலை கோவிந்தா வடிமைநெடு நாட்பட்ட யிடுக்கமெடுத் தே யெரி. 102 வாத வலியும் வளர்மெகப் புண்புரையும் சீத விரணத்தின் சங்கடமும் - ஆதவனை கண்டபனி போலே கடிகையிலே மாற்றியுந்தன் தொண்டாந் தொழிலெனக்குத் தா. 103 வைப்பா சூனியமா வல்லதுமுன் னூழ்வினையா இப்பிறப்பி லேதேனுஞ் செய்தேனா - எப்போதான் துலையுமிது வேங்கடவா தூரரியக் கூடலையே யலையுகின்ற வேழைநெஞ்சை யாற்று. 104 பெற்ற அப்பா பெரியப்பா என்விதிக்கு மற்றாரைப் போயடுத்து மல்லிடுவேன் - கற்றதெல்லாம் சொல்லி யபயமிட்டுச் சூழ்ந்தேனே யுன்மனது கல்லா யிருந்தாலுங் கரை. 105 உண்டு உடுத்தி யுலகத்தாற் போற்சுகத்தை கண்டு களிக்காமற் காலமெலாம் - பண்டைவினை பட்டு மெலியவா பெற்றெடுத்தாய் வேங்கடவா கெட்டதெலாம் போதுமினிக் கார். 106 முன்னால் முறைபேசி முகமறைந்த தட்சணமே பின்னால் கெடுநினைக்கும் பேயர்களை - யுன்னுடைய சக்கரத்தி னாற்சிதைத்து சத்துருவைப் பாழாக்கி துக்கமறச் செய்வாய் துணை. 107 வஞ்ச நெஞ்சத் தீயரெலாம் வந்துவந்து என்பிழைப்பை கொஞ்சமுள வறிந்து கொண்டவுடன் - அஞ்சாமல் மோசக் கருத்தால் முறைபிறழும் பாவிகளை நாசப் படுத்தமுயல் நாதா. 108 தேடவைத்தாய் நின்னடியைத் தேடுந் திறமைதந்து பாடவைத்தா யுள்ளந் தனிற்பதிந்து - ஆடலெலாம் தீரவைத்தாய் பிணிமுதலாய் தீர்த்து சகலசுகம் சேரவைத்தா யுன்றன் செயல். 109 ஆத்திரத்தி னாலே யடியே னுரைத்ததெலாம் தோத்திரமாய்க் கொண்டு துணைபுரிந்து - பாத்திரமாய் என்பிணியெல் லாங்களைந்து ஏழைகுடி காப்பாற்ற லுன்கடமை யீதொன்றே யுண்மை. 110 அறிவில்லாச் சேயுரைத்த ஆசைவெண்பா நூற்றிபத்தும் பொருளல்ல வானாலும் பூண்டருளித் - தெருளுடைய முத்த ருரைத்தபழ மெய்த்துதிபோ லாதரித்து பத்தியெனக் குதயம் பண். 111 ஏழுமலை வெண்பா முற்றுப்பெற்றது ஸ்ரீ வேங்கடேஸ்வரசாமி பாதமே துணை ***** ஸ்ரீ லக்ஷ்மீசமேதனுக்கு நமஸ்காரம் கலிவிருத்தம் அச்சுதா ஹரிகேசவ மாதவா பச்சை மின்கொடிப் பார்வதிமுன்னவா இச்சைமூன்றதி னாற்பிணி கொண்டவென் லச்சைதீர்த்தருள் லக்ஷ்மீ சமேதனே. அலமேலுமங்காசமேத மங்களம் |