http://www.chennailibrary.com





14. எளிமையும் அருமையும்

     அந்த வைகறை வேளையில் புன்னைத் தோட்டத்தின் குளிர்ந்த சூழ்நிலையில் கண்ணுக்கினியாள் ஓர் அழகிய தேவதைபோற் காட்சியளித்தாள். அவளுக்கு இயற்கையாகவே நிரம்பியிருந்த பேரழகு போதாதென்றோ என்னவோ அவனைக் கண்டு நாணிய நாணம் அவள் அழகை இன்னும் சிறிது அலங்காரம் செய்தது. பெண்ணுக்கு அவள் தேடி எடுத்து அணியாமல் தானாகவே அவள் மேல் படர்ந்து அலங்கரிக்கும் அழகு ஒன்று பருவகாலத்தில் வருவதுண்டு. அதுதான் நாணம். அதுதான் பிறக்கும்போது அவளால் தனக்குத்தானே சூட்டப்பட்டுக் கொண்டு வரப்படுகிற பிறவி அணிகலன். பிறந்த பிறகு கற்பிக்கப்படாமல் உயிரோடு ஒட்டிக் கொண்டு வரும் உணர்வுகள் எல்லாவற்றிலுமே அழகு உண்டுதான். அந்த அழகையும் - அவளையும் தொடர்புபடுத்தி அப்போது சிந்தித்தான் சாரகுமாரன். அவனுடைய சிந்தனை அவளை வியக்கும் சொற்களாக வெளிப்பட்டது.

     "எல்லா நாட்களும் பொழுது புலர்ந்தாலும் மிகச் சில நாட்கள் யாரோ மிகச் சிலருக்குப் பாக்கியத்தோடு பொழுதுகள் புலர்கின்றன. என்னுடைய நாள் இன்று பாக்கியத்தோடு விடிந்திருப்பதாக நான் நினைக்கிறேன் பெண்ணே! நான் இப்போது சற்றுமுன் கேட்டதும் அழகு. இதோ என் முன் காண்பதும் அழகு."

     இப்படி அவன் கூறிக்கொண்டே வந்தபோது கடற்புரத்திலிருந்து பலமாக வீசிய காற்றினால் மேலே இருந்த புன்னை மரக்கிளைகள் ஆடி அசைந்ததன் காரணமாகக் கொட்டினாற் போல ஒரு கொத்துப் பூக்கள் கண்ணுக்கினியாள் மேல் உதிர்ந்தன. பூக்கள் வேகமாக உதிர்ந்ததற்கே வருந்தினாற்போல் காற்றைக் கடிந்து கூறியவாறே விலகினாள் அவள்.

     "ஏன் விலகுகிறாய்? மலரை நோக்கி மலர்கள் உதிர்வதுதானே இயல்பு?"

     "ஆகா! கேட்பானேன்? கபாடபுரத்து முத்து வணிகர்களுக்கு எது வருகிறதோ, வரவில்லையோ, நன்றாகப் புகழ வருகிறது. இனிமேல் உங்களை முத்து வணிகரென்று சொல்வது கூடத் தவறு. அன்று முத்து வணிகரென்று சொல்லிக் கொண்டீர்கள். அதற்குப்பின் ஒருநாள் அரண்மனைக் கொலுமண்டபத்தில் பார்த்தேன். பின்னொரு சமயம் தேர்க்கோட்டத்துக் கூட்டத்தில் உலாவில் பெரிய பாண்டியருடைய தேருக்கு அடுத்த அலங்காரத் தேரிலிருந்து இறங்கி வந்தீர்கள். இன்று காலையிலோ - அவையெல்லாம் பொய்யாக இப்போது இப்படிப் பழந்தீவுக் கொலை மறவர்களான அவுணர்களைப் போல் கோலத்தில் வந்து நிற்கிறீர்கள்... நீங்கள் யாரோ ஒரு மாயா விநோத மனிதராயிருக்க வேண்டும்... நீங்கள் உங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்பவை பொய்கள். அந்தப் பொய்கள் உங்களைப் பற்றிய உண்மையைத் தெரிவித்துவிடும் அளவுக்குப் பலவீனமான பொய்களாயிருக்கின்றன."

     "நீ குற்றம் சுமத்துவது போல் பொய்கள் எவற்றையும் நான் கூறவில்லை என்பதை மறுபடியும் வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறேன் பெண்ணே..."

     "அப்படியானால் பொய்க்கும், மெய்க்கும், இலக்கணமோ வேறுபாடோ தாங்கள் தான் இனிமேல் எனக்குச் சொல்ல வேண்டும். உண்மை அல்லாதது பொய்யென்றும் பொய் அல்லாதது உண்மை என்றும்தான் உலகியல் ரீதியாக என் பெற்றோர்களிடமிருந்து நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்."

     "நீ தெரிந்து கொண்டிருப்பது வாதத்திற்குப் பொருந்தலாம்; ஆனால் நியாயத்திற்குப் பொருந்தாது. உண்மையைப் போல் தோன்றும் பொய்களும் உண்டு. பொய்யைப் போல் தோன்றிவிடுகிற உண்மைகளும் உண்டு."

     "இதில் நீங்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் போலிருக்கிறது."

     "நீ எப்படி வைத்துக் கொண்டாலும் அதை நான் மறுக்கத் துணியவில்லை. நான் கூறியதில்தான் என்ன தவறு? இந்தக் கபாடத்தின் விலையுயர்ந்த முத்துக்களை எல்லாம் உலகத்துக்கு அளிப்பவர்கள் நாங்களே அல்லவா?"

     "வணிகரைப் போல் சாதுரியமாகப் பேசுகிறீர்கள். கலைஞரைப் போல் இசையை அதன் நுணுக்கமறிந்து புகழ்கிறீர்கள். அரசரைப் போல் முகக்குறியுடன் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறீர்கள். புலவரைப் போல் சொற்போருக்கு வருகிறீர்கள்...! இதில் எது உண்மையென்றுதான் விளங்கவில்லை?"

     "ஏன்? எல்லாவற்றிலுமே சிறிது சிறிது உண்மையிருக்கலாம்! ஒன்று மட்டும்தான் உண்மையாயிருக்க வேண்டுமென்பது என்ன அவசியம்?"

     "அந்தக் கற்பனைகள் எல்லாம் இனிமேல் என்னிடம் பலிக்காது ஐயா! நீங்கள் யாரென்ற உண்மையை நான் எப்போதோ தெரிந்து கொண்டாகிவிட்டது. என்னென்ன தன்மைகள் பொருந்தியவர் என்ற உண்மைதான் இன்னும் எனக்குத் தெரியவில்லை என்று இப்போது கூறினேன்."



கபாடபுரம் : கதைமுகம்  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/kapadapuram/kapadapuram14.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.