![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 11 |
19. கலஞ்செய் நீர்க்களம் வலிய எயினன் அப்போதிருந்த சூழ்நிலையில் அவனிடம் விரிவாக உரையாட முடியாமலிருந்தது. யானை, யானையாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்த பூதாகாரமான மல்லர்கள் இருவரை மற்போரிடச் செய்து கண்டு இரசித்துக் கொண்டிருந்தான் எயினர் தலைவன். "இந்தத் தீவில் தனித்து வாழும் எங்களுக்கு உடல் வலிமையைத் தவிர வேறெந்தச் செல்வங்களும் இல்லை. எங்களைச் சுற்றியிருக்கும் கடலுக்கு அப்பாலுள்ள பெரிய பெரிய தேசங்களில் நால்வகைப் படைகளும், வேறு சாதுரியங்களும் உண்டு. எங்களுக்கு அவையொன்றும் கிடையாது" என்று கூறிவிட்டு மற்போரை இரசித்துக் காணுமாறு விருந்தினர்கள் இருவரையும் வேண்டிக் கொண்டான் எயினர் தலைவன். அவனுடைய வேண்டுதலாலும் யாவர் கவனமும் மற்போரையே சார்ந்திருந்ததாலும் அப்போது அதிகம் பேச்சுக் கொடுத்து எயினர் தலைவனுடைய மனத்தை அவர்களால் ஆழம் பார்க்க முடியவில்லை. எயினர்களிடம் கபடு சூதுவாது இல்லையென்றாலும் அவர்கள் முரடர்களாயிருந்தார்கள். அதனால் அவர்களுடைய மனப்போக்குப்படியே போய் அதன் பின்பே எதையும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. "தேச தேசாந்திரங்களையும் கடலிடைத் தீவுகளையும் சுற்றிப் பார்க்கும் எண்ணத்தோடு யாத்திரிகர்களாக வந்திருக்கிறோம்" என்று வந்தவுடனே எயினர் தலைவனிடம் கூறிய கூற்றுக்கு மாறுதலின்றி நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருந்தது. மற்போர் முடிந்த பின்னர் - போரில் வெற்றி பெற்ற எயின மல்லனுக்கு அவர்கள் தலைவன் பரிசளித்தான். அதன்பின் மற்போர் நடந்த இடத்திற்குச் சிறிது தொலைவில் அடர்த்தியான மரக் கூட்டங்களுக்கு மேலே மற்றவற்றை விடச் சற்று விசாலமாகவும், பெரிதாகவும் அமைக்கப்பட்டிருந்த எயினர் தலைவனின் பரணிற்கு அவனோடு அழைக்கப்பட்டுச் சென்றார்கள் முடிநாகனும், சாரகுமாரனும். அரண்மனையைப் போன்று செழுமையாகவும், வளமாகவும், அமைக்கப்பட்டிருந்தது அந்தப் பரண். விருந்துண்ட பின்னர் எயினர் தலைவன் பொதுவான பேச்சுக்களைத் தொடங்கினான். "வைரம் பாய்ந்த இந்தத் தீவின் மரங்களை எல்லாம் பாண்டி நாட்டுக்கு விற்று முத்துக்களைப் பெறுகிறோம் நாங்கள். அந்த மரங்களை அவர்கள் தேர்களாகவும், கப்பல்களாகவும் அறுத்துக் கட்டுகிறார்கள். அதன் மூலம் அவர்களுடைய படைவலிமையும் பெருகுகிறது. தேர்களை அவர்கள் எவ்வளவு கட்டினாலும் - தேர்ப்படையை எவ்வளவு பெரியதாக வளர்த்தாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் எங்களுடைய மரங்களை அறுத்துக் கலங்கள் கட்டுவதை மட்டும் நாங்கள் விரும்பமாட்டோம். தேர்களால் கடல்கடந்து வந்து எங்களோடு போரிட முடியாது. ஆனால் கலங்களைச் செலுத்திக் கடல் கடந்து வந்து எங்களோடு போரிட முடியும். பாண்டிய நாட்டு அரச குடும்பத்தினர் தேர்ப் படையைப் பெருக்குவதற்காகவே மரங்கள் பெற்றுச் செல்வதாகக் கூறுகிறார்கள். ஆனால் பிறர் அறியாத வண்ணம் பொருநை முகத்துவாரத்தில் ஆற்றை ஆழமாக்கிக் கொண்டு பல்வேறு கலங்களை அவர்கள் கட்டி வருவதாக எங்களுக்குத் தெரிகிறது" - என்று எயினர் தலைவன் அவர்கள் இருவர் முகத்தையும் கூர்ந்து நோக்கிக் கொண்டே கூறியபோது, "அப்படி இருக்க நியாயமில்லை ஐயா! பாண்டிய மன்னர்கள் எதைச் செய்தாலும் பிறருக்கு வஞ்சனை புரியமாட்டார்கள்" என முடிநாகன் மறுத்துப் பார்த்தான். "உங்களுடைய தேசத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் நன்றியையும், நம்பிக்கையையும் பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் கூறியதை நான் அப்படியே ஒப்புக் கொண்டுவிட வேண்டுமென்று எதிர்பார்ப்பது தான் தவறு" - என்று தீர்க்கமான குரலில் எயினர் தலைவனிடமிருந்து முடிநாகனுக்கு மறுமொழி கிடைத்தது. இந்த மறுமொழியைச் செவிமடுத்தபின் முடிநாகனால் சிறிதுநேரம் எதுவுமே பேசமுடியவில்லை. சாரகுமாரனோ எயினர் தலைவனுடைய கடுமையான முகத்தையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்து எயினர் தலைவனே மீண்டும் பேசத் தொடங்கினான். "இப்போதெல்லாம் நாங்களும் விழித்துக் கொண்டு விட்டோம். அவர்களைப் போல் பாதுகாப்பு நலன்கள் நிறைந்த விசாலமான பூமியை நாங்கள் ஆளவில்லை. எங்களுடைய சிறிய தீவை நாங்கள் பாதுகாத்துக் கொள்வதற்கு உரிய ஒரே வழி கடல் வழி தான். தேர்களையோ, சகடங்களையோ செய்து நாங்கள் பயனடைய முடியாது. எனவே, 'நாத கம்பீரம்' அருவியாக வீழ்ந்து ஆறாகப் பெருகிக் கடலுள் கலக்கும் இடத்தில் உள்முகமாக வனத்தின் அடர்ந்த பகுதியில் ஆற்றை ஆழப்படுத்தி நாங்களே கப்பல் கட்டும் தளம் ஒன்று அமைத்திருக்கிறோம். அந்தக் கலஞ்செய் நீர்க்களத்தில் இது காறும் சில நல்ல மரக்கலங்களைக் கட்டி முடித்திருக்கிறோம். இந்தத் தீவின் கடற்காவலர்கள் அவற்றை வெள்ளோட்டமாக எடுத்துக் கொண்டு கடலின் பல பகுதிகளுக்குப் போயிருக்கிறார்கள். இனிமேல் இந்தத் தீவில் கிடைக்கும் வைரம் பாய்ந்த நல்ல மரங்கள் எல்லாம் முதலில் எங்கள் கலஞ்செய் நீர்க்களத்தை நாடித்தான் போகும்." "பாராட்டத்தக்க முயற்சி தான் ஐயா! ஆனால் இத்தகைய கலங்களைக் கட்டுவதற்கு அநுபவம் வாய்ந்த வல்லுநர்கள் நிறைய வேண்டியிருப்பார்களே?" என்று பாராட்டுவது போல் எயினர் தலைவனிடம் ஒரு கேள்வியைப் போட்டான் சாரகுமாரன். "அதற்குப் பஞ்சம் ஒன்றுமில்லை! 'கபாடபுரம்' முதலிய கோ நகரங்களிலே தேரும், கலமும் கட்டிமுடித்து வெள்ளோட்டம் விடும் வித்தகர்களாக இருப்பவர்களே இந்தத் தீவிலிருந்து சென்ற வலிமையாளர்கள் தானே?" என்று எயினர் தலைவன் உடனே ஆத்திரத்தோடு எதிர்த்துக் கேட்ட கேள்வியிலேயே சாரகுமாரனுக்கு வேண்டிய செய்தியும் கிடைத்துவிட்டது. சிறிது நேர மௌனத்துக்குப் பின் எயினர் தலைவனிடம் சாரகுமாரன் ஒரு வேண்டுகோள் விடுத்தான். "பொதுவில் நாங்கள் அந்நிய தேசத்து யாத்திரிகர்கள் எவரையும் அங்கு அழைத்துச் செல்வதில்லை. ஆயினும் உங்களிருவருடைய அன்பான வேண்டுகோளிலும் நியாயமிருப்பதாக எனக்குத் தோன்றுகிற காரணத்தால் நான் அதற்கு இணங்குகிறேன். இன்று மாலையிலேயே உங்கள் விருப்பத்தை நிறைவு செய்யப் பார்க்கிறேன். ஆனால் ஒரே ஒரு நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும். கலஞ்செய் நீர்நிலைக் களனுக்குச் செல்கிற வழியைக் கூடிய வரை வேறு தேசத்தார் அறிய விடக்கூடாது என்பது எங்கள் கருத்து. அதனால் செல்லும் வழி முடிய உங்கள் இருவருடைய கண்களையும் மேலாடையினால் கட்டி மறைத்தே அழைத்துச் செல்ல முடியும். தளத்தை அடைந்தவுடனே நீங்கள் சுதந்திரமாகக் கண்களைத் திறந்து பார்க்கலாம். இந்தச் சிறிய கட்டுப்பாட்டை நீங்களும் ஒப்புக் கொண்டு மதிப்பீர்களென நம்புகிறேன்" என்று அந்தத் தீவின் தலைவன் நிபந்தனை கூறியபோது இருவரும் அதற்கு இணங்கினர். மாலையில் அவர்கள் கலங்கட்டும் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புறப்பட்ட சில நாழிகைத் தொலைவு அடர்ந்த புதர்களுக்கு நடுவே நடந்து செல்ல வேண்டியிருந்தது. மூன்று நாழிகைப் பயணமும் முடிந்த பின் அவர்களுடைய கண்களை மூடிக் கட்டியிருந்த மேலாடைகள் அகற்றப்பட்டன. பார்த்தால் எதிரே கோலாகலமான வியக்கத்தக்க காட்சிகள் தென்பட்டன. அடர்ந்த நடுக் காட்டுக்குள் ஆறு ஆழப்படுத்தப்பட்டுக் கட்டிய கலங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. மரங்களை அறுப்போரும் கொல்லருமாகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தனர். ஆண்டுக் கணக்கில் கடலிலேயே மிதந்து கிடந்து திரிந்தாலும் அயராத தளராத கலங்களை அங்கு கண்டார்கள் அவர்கள். கலங்கட்டும் தளத்தை அமைத்திருந்த இடம்தான் தந்திரம் நிறைந்ததாயிருந்தது என்றால் ஏற்பாடுகளும் தந்திரம் நிறைந்தவையாயிருந்தன. காட்டுக்குள் அடர்த்தியினிடையே மறைந்திருந்ததனால் திடீரென்று கடலுக்குள் புகுந்து எதிரிகளைத் தாக்கவும், தாக்கிய வேகத்தில் உள்வாங்கித் திரும்பி மறையவும் ஏற்ற இடத்தில் தளம் அமைந்திருந்தது. இதுபோல் சிறிய தீவின் பாதுகாப்பு அல்லது எதிரிகளைத் தாக்கும் ஏற்பாட்டிற்கு மிகமிகப் பொருத்தமான தளமாக அது இருப்பதை இருவரும் உணர்ந்தனர். வார்த்தைகளை நிறைய தொடுத்து அந்த தளத்தை அதிகமாகப் பாராட்டினால் கூட அந்தப் பாராட்டிலிருக்கும் மிகையான அம்சங்களைக் கண்டு உணர்ந்து வலிய எயினன் சந்தேகிக்கக் கூடுமென்று தயங்கி அளவான வார்த்தைகளில் பாராட்டினார்கள் அவர்கள். கப்பல்கள் யாவும் கபாடபுரத்துக் கலஞ்செய் கோட்டத்தில் படைக்கப் பெறுவனவற்றை விட உறுதியாகவும், உழைக்க வல்லவையாகவும் இங்கு இருப்பதையும் அவர்கள் கண்டார்கள். மீண்டும் கலஞ்செய் நீர்நிலைக் களத்திலிருந்து திரும்பும் போது அவர்களிருவரும் கண் கட்டியே அழைத்து வரப்பட்டார்கள். பரணுக்குத் திரும்பியதும் இரண்டாவது முறையாக மீண்டும், "உங்களைப் போன்ற யாத்திரிகர்கள் ஒரு தீவின் தந்திரமான பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்டு வியப்பது இயல்பை மீறிய காரியமாகவே எனக்குத் தோன்றுகிறது?" என்று சந்தேகம் தொனிக்க வினாவிட்டு அவர்கள் இருவருடைய முகபாவங்களையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். அவனுடைய கழுகுப் பார்வை அவர்களைத் துளைப்பது போலிருந்தது. கபாடபுரம் : கதைமுகம்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
|