23. கொடுந்தீவுக் கொலைமறவர் அப்போது தாங்கள் கரையிறங்கப் போகும் தீவு - கொடுந்தீவு என்பதையும், அங்கு வாழும் உலகத் தொடர்பில்லாத விநோதமான இனத்தைச் சேர்ந்த கொலை மறவர்கள், தங்களுடைய வழிபடு தெய்வமாகக் கருதும் ஒரு பாறைக்கு நரபலியிடும் வழக்கமுடையவர்கள் என்பதும் இளையபாண்டியன் அறியாதவை அல்ல. கரையோரமாக ஒதுங்கியிருந்த மனிதர்களின் கோரமான கபாலங்களும், குரூரமாகச் சிதறிக்கிடந்த எலும்புகளும் இறங்கியவுடனேயே அச்சம் நிறைந்த வரவேற்பை அளித்தன. பேய்த்தீவு என்றும், பூதத்தீவு என்றும் அந்தத் தீவுக்கு வேறு பெயர்கள் வழங்கி வந்தன. நாகரிகமடைந்த ஏனைய நாடுகளிலும், தீவுகளிலும் வாழ்வோர் அந்தத் தீவுக்கு அளித்த மாற்றுப் பெயர்கள் அவை. பொதுவாக வேறு பகுதிகளிலிருந்து அந்த வழியாகப் பயணம் செய்வோர் கடல் அமைதியாயிருக்கும் பகல் வேளைகளிலேயே கடந்து மேலே சென்றுவிடுவது தான் வழக்கம். "இங்கே இறங்கவோ தீவுக்குள் பிரவேசிக்கவோ வேண்டாம் விடியும்வரை இப்படியே கரையோரமாகத் தங்கியிருந்துவிட்டு விடிந்ததும் இரகசியமாக மேலே பயணத்தைத் தொடர்ந்து விடலாம்" என்றான் முடிநாகன். ஆனால் இளையபாண்டியன் அதற்கு இணங்கவில்லை. கரையோரமாக ஒதுங்கிய கப்பலைக் காற்று மாற்றத்திற்கும், அலைகளின் உயர்வு தாழ்வுக்கும் ஏற்பக் கவனித்துக் கொள்ளும் பொருட்டு ஊழியர்களை மட்டும் கப்பலிலேயே விட்டுவிட்டுத் தானும், முடிநாகனும், தீவுக்குள் போகலாம் என்றே இளையபாண்டியன் முடிவு செய்திருந்தான். "தீவுக்குள் போகலாமா?" என்று இளையபாண்டியன் வினாவியபோது கப்பல் ஊழியர்களுக்குக் கட்டளைகள் இட்டுக் கொண்டிருந்த முடிநாகன், திகைப்போடும் பயத்தோடும் பேச்சை நிறுத்திவிட்டு இளையபாண்டியனின் முகத்தை ஏறிட்டு நோக்கினான். அந்தப் பார்வையில் பீதியும் உயிர்ப் பயமும் தெரிந்தன. "பயப்படாதே முடிநாகா! கடலில் அரக்கனின் வாய்ப் பற்களைப் போல் துருத்திக் கொண்டிருக்கும் இந்தப் பாறைகளை விடக் கொடுந்தீவின் கொலைமறவர்கள் கெட்டவர்களாக இருந்துவிடமாட்டார்கள். எவ்வளவுதான் கொடியவர்களாக இருந்தாலும் மனிதர்களுக்குள்ளே இதயம் என்று ஒன்று இருக்கிறது. பாறைகளுக்குள்ளே அந்த இதயம் நிச்சயமாக இருக்க முடியாது. பாறைகள் கல்லால் ஆகியவை என்பதை நினைவு வைத்துக் கொள்!" என்று காரண காரியத்தோடு சாரகுமாரன் ஆறுதல் கூறிய பின்பே முடிநாகன் தைரியமாக அவனோடு புறப்பட்டான். மனிதர்களின் குருதி பட்டுப் பட்டுச் சிவப்பேறிப் போயின போன்ற அந்தத் தீவின் பாறைகளில் தொற்றித் தொற்றி ஏறித் தட்டுத் தடுமாறிச் செல்ல வேண்டியிருந்தது. தான் பாறைகளில் ஏறும்போது ஓர் இடத்தில் காலடியில் ஏதோ இடறி நொறுங்கிய வேளையில் பீதியோடு கீழே குனிந்து அப்படி இடறி நொறுங்கிய பொருளைத் தூக்கிப் பார்த்த முடிநாகனுக்குக் கைகள் நடுங்கின. அது ஒரு மரித்த மனிதனின் எலும்புக் கூடு. வாயில் சொற்கள் வராமல் பேசத் தடுமாறிய குரலில் 'ஊ ஊ' என்று காற்றாக வெளிப்படும் பீதி நிறைந்த குரலில் இளையபாண்டியனுக்கு அந்த எலும்புக்கூட்டைக் காண்பித்தான் முடிநாகன். அதைக் கண்ட இளையபாண்டியனுக்கும் நெஞ்சம் ஒரு கணம் துணுக்குற்றது என்றாலும் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, "தீவுக்குள் அடியெடுத்து வைக்கும் போதே இப்படித் தெரியக்கூடாதது தெரிந்து கெட்ட சகுனம் ஆகிறதே என்று எண்ணாதே! நிமித்தங்கள் எல்லாம் நம்முடைய மனோபாவனைக்கு ஏற்றாற்போலத்தான் நமக்குத் தோன்றும். நிமித்தங்கள் நல்லவையாயிருந்தால் விளைவுகளும் நல்லவையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதேபோல் நிமித்தங்கள் தீயவையாயிருந்தால் விளைவுகளும் தீயவையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நிமித்தங்கள் யாவும் நமது பாவனையின் பிரதிபிம்பங்களாகவே இருக்கும். கவலைப்படாமல் தயங்காமல் முன்னேறலாம் வா!" என்று முடிநாகனுக்கு இளையபாண்டியன் உறுதி கூறியும் அவனுடைய பயமும் நடுக்கமும் குறையவில்லை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|