26. சிகண்டியாசிரியர் மனக்கிளர்ச்சி சிகண்டியாசிரியரிடம் இசையைப் பற்றிய பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருந்த போதே சாரகுமாரனுக்குக் கண்ணுக்கினியாளின் ஞாபகம் வந்தது. பழந்தீவுப் பயணத்தை எதிர்பாராதவிதமாக மேற்கொள்ள நேர்ந்திருந்ததனால் அவளை நீண்ட நாட்களாகச் சந்திக்க முடியாமற் போய்விட்டது. நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரம் வந்த அந்த இசைக் குடும்பம் இவ்வளவு நாட்கள் அங்கே தங்கியிருக்கிறதோ, அல்லது வேறு ஊர்களுக்குப் பெயர்ந்து போய்விட்டதோ என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. விழாவுக்காக வந்திருந்த பாணர்களும், விறலியர்களும், கூத்தர்களும் தங்கியிருந்த கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்று அவர்கள் இருக்கிறார்களா, புறப்பட்டுவிட்டார்களா என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினான் அவன். என்ன காரணத்தினாலோ சாரகுமாரனுடைய மனத்தில் இசையின் நுணுக்கங்களைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம் இன்றியமையாதவளாக அவளும் நினைவு வந்தாள். அக்கம்பக்கத்துத் தீவுகளையும் நாடுகளையும் வென்று பாண்டியப் பேரரசை வலிமையாக்கும் போர்வீரனாக அவனை எதிர்பார்த்தார் பாட்டனார் வெண்தேர்ச்செழியர். அவன் இதயமோ அவனை உலகறியாமல் உள்ளூறக் கலைவீரனாக இசைவீரனாக வளர்த்துக் கொண்டிருந்தது. இணையற்ற அழகியும், நவீன கலைகளில் பெருவிருப்பமுடையவளும், குரலினிமைமிக்கவளுமாகிய தன் தாய் திலோத்தமையைக் கொண்டு வளர்ந்து விட்டான் அவன். தந்தை அநாகுலனின் போர்வலிமையோ பாட்டனார் வெண்தேர்ச்செழியரின் அரசதந்திரச் சூழ்ச்சிகளோ அவன் இதயத்தோடு ஒட்டவேயில்லை. சிகண்டியாசிரியருக்கு இந்த உண்மை புரிந்த அளவிற்குப் பாட்டனார் வெண்தேர்ச் செழியருக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ வேறு யாரிடமுமே இசைக்கலையைப் பற்றிய தன் ஆர்வங்களையும், அந்தரங்கங்களையும் தெரிவிக்காத அளவு சிகண்டியாசிரியரிடம் மட்டும் தெரிவித்திருந்தான் சாரகுமாரன். இசைக் கலையின் மேல் அந்தரங்கமாக அவனுள் உறங்கிக் கிடந்த காதல் கண்ணுக்கினியாளைச் சந்தித்தபின் விழித்துக் கொண்டுவிட்டது. அவளைப் பார்க்கத் தவித்த போது இசையைப் பாடவும் தவிர்த்தான் அவன். இசையைப் பாடத் தவித்தபோது அவளைப் பார்க்கவும் தவித்தான். இசைக்கும் காதலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். இசையிலே காதல் பிறக்கிறது அல்லது காதலிலே இசை கனிகிறது. மனிதன் இன்னொன்றின் மேல் செலுத்தும் அளவற்ற பிரியத்தின் உருவகம் தான் இசையோ என்னவோ? பழந்தீவுகளில் பயணம் செய்து திரும்பிய மறுநாள் வைகறையில் - முடிநாகனின் துணையும் கூட இல்லாமல் - உலாவச் சென்று வருவது போல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துப் பக்கம் சென்றான் சாரகுமாரன். இருள் பிரியாத வைகறை வேளையில் யாரையோ நிரந்தரமாகப் பிரிந்துவிட்டாற்போல ஓலமிடும் கடல் அலையோசையும், குளிர்ந்த காற்றும் மனத்திற்குள் ஓடும் நினைவின் விரைவிற்கேற்ப விரையும் புரவிப் பயணமும், மிகவும் இரம்மியமாயிருந்தன. அந்த வேளையில் யாருடைய கவனத்தையும் கவராமல் தனிமையாகவும் தன்னிச்சையாகவும் அரண்மனையை விட்டுப் புறப்படுவது கூடச் சுலபமான காரியமாயிருந்தது அவனுக்கு. கடற்கரைக் காற்றில் வெண்பட்டு விரித்தாற் போன்ற மணல் வெளியில் புரவி சென்றபோது சுகமாயிருந்தது. புன்னை மரங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. எப்போதாவது தற்செயலாகக் கீழே உள்ள நீரில் உதிரும் புன்னைக்காய் வாத்தியம் வாசிப்பது போன்றதொரு ஒலியை எழுப்பி ஓய்வதும் செவிக்குச் சுகமானதாயிருந்தது. இன்னும் சிறிது தொலைவு சென்றபின் அதைவிடச் சுகமான நாதம் ஒன்று உயிரின் குரலாகவே காற்றுடன் உலவி வந்து அவன் செவிகளில் எட்டலாயிற்று 'சோகத்தை இப்படியும்கூட இசையினால் பேசமுடியுமா?' என்று இளையபாண்டியனை வியக்கச் செய்யும் குரலாயிருந்தது அது. அந்தக் குரலில் புதிது புதிதாக மெருகேறியிருந்த நுணுக்கங்களையும், அழகுகளையும், நளினங்களையும் இணைத்து எண்ணியபோது அது வேறாகத் தோன்றியதே தவிரக் கூர்ந்து செவிமடுத்தபோது குரல் அவனுக்குப் பழகியதாகவே இருந்தது. அருகில் நெருங்க நெருங்கக் குதிரையிலிருந்து கீழே இறங்கி அந்தக் குரல் வரும் வழியிலே ஓடவேண்டும் போல் அத்தனை ஆர்வமாயிருந்தது அவனுக்கு. அப்படியே செய்தான் அவன். புன்னை மரத்தடியில் அமர்ந்து குனிந்து மணற்பரப்பை நோக்கியவாறு கண்ணுக்கினியாள் தான் பாடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த உலக நினைவே இல்லை போல் தோன்றியது. அருகில் நெருங்கிச் சென்றால் அவளுடைய பாடலை எங்கே நிறுத்திவிடுவாளோ என்ற தயக்கத்தினால் விலகியே நின்றான் இளையபாண்டியன். நெய்தற் பண்ணை இத்தனை உருக்கமாகவும் இசைக்க முடியும் என்பதை இன்றுதான் அவனால் உணர முடிந்தது. மொழியில் இசையும் ஒரு பிரிவு என்பதைவிட இசையே ஒரு தனிமொழி என்று தனித்து பிரித்துச் சிறப்புக் கொடுத்துவிடலாமென்று இப்போது தோன்றியது அவனுக்கு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|