சமகால இலக்கியம் |
பழந்தமிழ் இலக்கியம் |
31. யாழ் நழுவியது கபாடபுரத்தின் அரசவையில் அன்று கோலாகல வெள்ளம். இடைச்சங்கப் புலவர்கள் யாவரும் வரிசை வரிசையாகப் புலமைச் செருக்குடனே வீற்றிருந்தார்கள். கிழச்சிங்கம் போல் பெரியபாண்டியர் புலவர்களுக்கு நடுநாயகமாகச் சிகண்டியாசிரியருடன் அமர்ந்திருந்தபடியால் பட்டத்து முறைப்படி அநாகுல பாண்டியன் தனியே கொலுவீற்றிருந்தும்கூட அங்கு எடுப்பாகத் தெரிய முடியாது போயிற்று. பெரியபாண்டியருக்கும் சிகண்டியாசிரியருக்கும் நடுவே அடக்க ஒடுக்கமாகப் பணிவுடன் இளையபாண்டியன் சாரகுமாரனும் அமர்ந்திருந்தான். அவனுடைய கண்கள் கூட்டத்தில் யாரையோ துழாவிக் கொண்டிருந்தன. அப்படி அவன் யாரையோ துழாவித் தேடுவதைப் பெரியபாண்டியரும் சிகண்டியாசிரியரும் அவனறியாமல் கவனித்துத் தங்களுக்குள் ஒருவர் முகத்தை மற்றொருவர் குறிப்பாகப் பார்த்துக் கொண்டார்கள். சிகண்டியார் ஒருவருக்கு மட்டும் அந்த நிலையில் இளையபாண்டியன் மேல் மிகவும் அநுதாபமாக இருந்தது. உள்ளூற மனத்துக்குள்ளேயே அரசகுல தர்மங்களின் கடுமையான நெறி துறைகளை வெறுத்தார் அவர். பிரியமுள்ள இருவருக்கு நடுவே ஏற்றத்தாழ்வு - பெருமை - சிறுமை கற்பிக்கும் இராசகம்பீர வாழ்வின் கொடுமையினால் இளையபாண்டியன் சாரகுமாரன் தன் இருதயத்திலே வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சோகம் ஒன்றைத் தாங்க நேரிடப் போவதை எண்ணி அவர் தவித்தார். பாவம்! இளையபாண்டியனுக்குப் பெரியபாண்டியர் செய்திருக்கும் ஏற்பாடு தெரிந்திருக்க நியாயமில்லை. அரங்கேற்றத்திற்காகக் கூடியிருந்த அவையின் வியூகத்தில் கடைசி வரிசையாக எங்கோ ஒரு மூலையில் பாணர்கள் அமரவும், நிற்கவும் இடம் விடப்பட்டிருந்தது. விழாவில் கண்ணுக்கினியாளும் பாடுவதற்குப் பெரியபாண்டியரின் இசைவைச் சிகண்டியார் சாமர்த்தியமாகப் பெற்றிருப்பார் என்று இளையபாண்டியன் நினைத்திருந்தான். சிகண்டியார் நிலைமையோ இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்தது. பெரியபாண்டியருக்கு அஞ்சவேண்டிய நிலையில் இருந்த அவரே இளையபாண்டியனுக்கு அநுதாபப்பட வேண்டிய நிலையிலும் இருந்தார். முடிநாகனை அருகே கூப்பிட்டு அரங்கேற்று விழாவிற்குக் கண்ணுக்கினியாளும் அவள் பெற்றோரும் வந்திருக்கிறார்களா இல்லையா என்று பார்த்து அறிந்து வரச்சொல்லலாம் என்று இளையபாண்டியன் எண்ணினாலும் அவ்வாறு செய்ய முடியாமலிருந்தது. ஒரு புறம் சிகண்டியாரும் மறுபுறம் பெரியபாண்டியரும் அமர்ந்து அவனைச் சிறை வைத்தது போலிருந்த அந்தச் சூழ்நிலையில் முடிநாகனை அருகே கூப்பிடவும் இயலாததுபோல் தோன்றியது. கண்ணுக்கினியாள் வந்திருக்கிறாளா இல்லையா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமோ கட்டுக்கு அடங்குவதாக இல்லை. வாழ்க்கையின் உயரத்திலிருக்கும் ஒருவன் அதன் கீழிருக்கும் தன்னுடைய அந்தரங்கமான சினேகிதனையோ, சினேகிதியையோ காணுகிற அளவு இறங்கி வரமுடியாமற் போவது போல் கொடுமை வேறொன்றுமில்லை என்று தோன்றியது இளையபாண்டியனுக்கு. புலவர்களின் பாயிரம், சிறப்புப் பாயிரங்களுடன் நூல் அரங்கேற்றம் தொடங்கியது. சிகண்டியாசிரியர் பாண்டியர் தலைநகரையும், பெரியபாண்டியரையும், அநாகுலனையும் புகழ்ந்து பாடியபின், இளையபாண்டியர் சாரகுமாரருக்கு இசைநுணுக்கம் அறிவிப்பதன் பொருட்டு அந்நூல் இயற்றப்படுவதாகவும் தொடங்கி நூற்பாக்களை ஒவ்வொன்றாகக் கூறி விளக்கி அரங்கேற்றலானார் சில பண்வரம்புகளுக்கு ஏற்ப இளையபாண்டியனே அங்கு பாடியும் காண்பித்தான். புலவர் பெருமக்கள் சிகண்டியாசிரியரை நோக்கி ஐய வினாக்களையும், தடை வினாக்களையும் எழுப்பினர். அவற்றுக்கெல்லாம் சிகண்டியார் மறுமொழி கூறினார். இளையபாண்டியன் மனநிம்மதியில்லாமல் அங்கிருந்தான். அவனுடைய கண்கள் கூட்டத்தையே துழாவிக் கொண்டிருந்தன. இறுதியில் ஒருவாறாகத் தன் மனத்துக்கு இனியவளாகிய கண்ணுக்கினியாள் நின்றுகொண்டிருந்த இடத்தையும் அவன் பார்த்துவிட்டான். கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் தங்கியிருந்த பாணர்கள் எல்லோரும் நின்று கொண்டிருந்த ஒரு மூலையில் அவளும் கண் கலங்கி நின்று கொண்டிருப்பதை அவன் கண்டு கொண்டான். அவன் உள்ளம் பதறியது. "இசையிலக்கண நூலின் அரங்கேற்றத்தில் பாணர்களைவிட வேறு யாருக்கு உரிமை இருக்கிறது? அவர்களை எல்லாம் எங்கோ ஒரு கோடியில் இருக்கச் செய்திருப்பது ஏன்?" என்றெல்லாம் அவன் மனத்தில் சந்தேகங்களும் கொதிப்புக்களும் கிளர்ந்தன. ஆயினும் அவற்றைப் பாட்டனாரிடம் கேட்க அஞ்சினான் அவன். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
|